வெள்ளி, 8 ஜூலை, 2011

நாய் பெற்ற தங்கப் பழம்

கனவில் கிடைத்த புதையல்

திருவனந்தபுரம் பத்மனாபஸ்வாமி கோவிலில் ஐந்து லட்சம் கோடி மதிப்புள்ள தங்கப்புதையல் கிடைத்துள்ளதாகப் பத்திரிக்கைச் செய்திகள் தெரிவிக்கின்றன. சாதாரண மக்களின் கற்பனைக்கு இது எவ்வளவு செல்வம் என்ற மதிப்பு மனதில் பதியாது. ஏதோ பெரிய செல்வம் என்ற அளவில்தான் உணரக்கூடும்.

இவ்வளவு பெரிய செல்வத்தை அரச குடும்பத்தினர் எவ்வாறு அடைந்தார்கள் என்பது சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடிக்க வேண்டிய விஷயம். “சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” என்கிற பழமொழிக்கேற்ப சிவனே என்று படுத்துக்கிடந்த பத்மனாபஸ்வாமியை சந்திக்கு இழுத்தாகி விட்டது. இந்திய அரசுக்கும், சுப்ரீம் கோர்ட்டுக்கும், திருவாங்கூர் அரச சந்ததியினருக்கும் பிடித்தது “ஏழரைநாட்டுச்சனி”. பூதம் புதையலைக் காப்பாற்றிய மாதிரி இனி அரசு இந்தப் புதையலைக் கட்டிக்காக்க வேண்டும்.

இதை வைத்துக்கொண்டு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. இது முழுவதும் மக்களின் உழைப்புதான். அன்றைய ராஜா வசூலித்து இப்படி சேமித்து வைத்திருக்கிறார். ஆனாலும் இதை ஒன்றும் செய்ய முடியாது. நம் நாட்டுச் சட்டதிட்டங்கள் அப்படி. இன்றைய ராஜாக்கள் ஸ்விஸ் வங்கியில் வைத்திருக்கிறார்கள். இரண்டும் ஒன்றுதான். நாய் பெற்ற தங்கப்பழம்.

கேரள மக்கள் பேச்சுப் பிரியர்கள். வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு அவல் கிடைத்த மாதிரி இந்த சப்ஜெக்ட் இன்னும் பல தலைமுறைகளுக்கு காணும். மொத்தத்தில் கனவில் காணும் புதையலுக்கும் இதற்கும் ஒன்றும் வித்தியாசமில்லை. இரண்டும் யாருக்கும் பயன்படப் போவதில்லை. http://www.youtube.com/watch?v=w27OvzzNAUE&NR=1&feature=fvwp