திங்கள், 14 அக்டோபர், 2013

வயசான காலத்தில் வந்த சோதனை.


சோதனை என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு. நடைமுறை வாழ்க்கையில் சோதனை என்றால் கஷ்டம் என்று பொருள். இளம் வயதில் வரும் சில எதிர்பாராத நிகழ்வுகளை சோதனை என்று சொல்வதில்லை. அவைகளை அன்றாட நிகழ்வுகள் என்ற வகையில் சேர்த்து விடுவோம். அப்படிப்பட்ட நிகழ்வுகள் பல ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் அன்றாடம் வந்து போகும். அத்தகைய நிகழ்வுகளைச் சமாளிக்க பெரிய முயற்சிகள் ஒன்றும் தேவையிருக்காது.

இத்தகைய நிகழ்வுகள் எந்த வயசிலும் வரலாம், வரும். ஆனால் இளம் வயதில் அவைகளை தூசிபோல் தட்டி விட்டு விட்டு நம் வேலையைப் பார்ப்போம். ஆனால் அதே நிகழ்வுகள் வயதான காலத்தில் வரும்போது அது சோதனையாக மாறுகிறது. அதை சமாளிக்க பெரும்பாடு படவேண்டியிருக்கிறது.

உதாரணத்திற்கு ஒன்று. நேற்று என் ஒன்றுவிட்ட தம்பியின் நேர்  சகலை தன் பெண்ணுடைய கல்யாணத்திற்கு அழைப்பு கொடுத்துவிட்டார். இதுதான் சோதனையின் ஆரம்பம். இதில் ரூம் போட்டு யோசிக்கவேண்டிய பல பிரச்சினைகள் இருக்கின்றன.

முதல் பிரச்சினை, கல்யாணத்திற்குப் போவதா, வேண்டாமா என்பது. மணப்பெண்ணின் பெற்றோரை என் தம்பி வீட்டு விசேஷங்களில் பார்த்ததைத் தவிர, அவர்கள் வீட்டிற்கு நான் போனதில்லை, என் வீட்டிற்கு அவர்கள் வந்ததில்லை. இந்தக் கணக்குப் பிரகாரம் நான் இந்தக் கல்யாணத்திற்குப் போக வேண்டியதில்லை.

ஆனால் என் ஒன்று விட்ட தம்பியும் தம்பி மனைவியும் கூட வந்து அழைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். ஆகவே என் தம்பிக்காக இந்த கல்யாணத்திற்குப் போகவேண்டும். போகாவிட்டால் தம்பிக்கு மன வருத்தம் ஏற்படும். அது என் வாழ்க்கைக்கு நல்லதல்ல. ஆகவே கல்யாணத்திற்குப் போவது என்று முடிவு செய்தோம். (அதாவது நானும் என் வாழ்க்கைத்துணையும் - இப்பவெல்லாம் எதையும் தனியாக முடிவு செய்வது கிடையாது. ஏனென்றால் அப்படி தனியாக எடுத்த முடிவுகள் எல்லாம் அப்பீலில் தோற்றுப்போய் விடுகின்றன)

அடுத்த பிரச்சினை ஒருவர் மட்டும் போனால் போதுமா அல்லது இருவரும் (தம்பதி சமேதராக) போகவேண்டுமா என்பது. எங்க ஊர் வழக்கப் பிரகாரம் கல்யாணப் பெண் அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர் இருவரும் தம்பதி சமேதராக வந்து கூப்பிட்டால் நாங்கள் இருவரும் தம்பதி சமேதராகப் போகவேண்டும். ஆம்பிளை மட்டும் வந்து கூப்பிட்டிருந்தால் ஆம்பிளை மட்டும் போகவேண்டும். பொம்பிளை மட்டும் வந்து கூப்பிட்டிருந்தால் பொம்பிளை மட்டும் போகவேண்டும். பத்திரிக்கை தபாலில் வந்திருந்தால் தபாலில் வாழ்த்து அனுப்பினால் போதுமானது.

இதுதான் நான் கடைப்பிடிக்கும் கொள்கை. இந்தக் கல்யாணத்திற்கு மணப்பெண்ணின் தாயார் மட்டும்தான் அழைப்பிற்கு வந்திருந்தாள். இதன் பிரகாரம் என் மனைவி மட்டும் கல்யாணத்திற்குப் போனால் போதும். ஆனால் கூடவே என் தம்பியும் தம்பி மனைவியும் வந்து கூப்பிட்டிருக்கிறார்கள். ஆகவே இந்த சூழ் நிலையில் இருவரும் போவதுதான் மரியாதை. ஆகவே இருவரும் போவது என்று முடிவு செய்தோம்.

அடுத்ததாக மாலை ரிசப்ஷனுக்குப் போவதா அல்லது காலை முகூர்த்தத்திற்குப் போவதா என்பது. கல்யாண மண்டபம் கொஞ்சம் தூரத்தில் உள்ளது. மாலை ரிசப்ஷனுக்குப் போனால் திரும்பும்போது இருட்டிவிடும் இருட்டில் கார் ஓட்டுவது சிரமம். சரி காலையில் முகூர்த்தத்திற்குப் போகலாம் என்றால், எல்லா முக்கிய உறவினர்களும் மாலையே வந்து விட்டுப் போய்விடுவார்கள். அவர்களைப் பார்க்க முடியாது. கல்யாணத்திற்குப் போவதே இதற்குத்தானே. உறவினர்களைப் பார்த்து நாட்டு நடப்பு (கசமுசாக்கள்) தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்து விடும் அல்லவா.

அதனால் கஷ்டமாக இருந்தாலும் ரிசப்ஷனுக்கே போய்விடலாம் என்று முடிவு எடுத்தோம். ஏன் ஒரு டிரைவர் வைத்துக் கொள்ளக்கூடாதா என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. இந்தக் காலத்தில் 500 ரூபாய்க்கு குறைந்து ஒரு டிரைவரும் வரமாட்டேன் என்கிறான், இந்தா இருக்கும் (20 கி.மீ) மண்டபத்திற்கு போய் வர 500 ரூபாயா. பணம் என்ன மரத்திலா காய்க்கிறது, எல்லாம் நீங்கள் ஓட்டினால் போதும், மெதுவா போய்ட்டு மெதுவா வந்தாப் போதும், அவனுக்கு எதற்கு 500 ரூபாய், இது என் ஊட்டுக்காரம்மா வாதம்,

சரி. முய் வைக்கவேண்டுமா, வேண்டாமா? அடுத்த பிரச்சினை. அவர்கள் நம் வீட்டு விசேஷங்கள் எதுக்கும் ஒரு முய்யும் வைக்கவில்லை. ஆகவே நாமும் சும்மா போய்வந்தால் போதும். இது ஊட்டுக்காரம்மாவின் பைனல் ஆர்டர் நோ அப்பீல்.

சரி, அங்க போய் பந்தியில் சாப்பிடலாமா இல்லை பஃபே யில் சாப்பிடலாமா? இப்பொழுதெல்லாம் பஃபேயில்தான் கூட்டம் அதிகம். தேவையானதை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். நாலு பேரிடம் கிசுகிசு சேகரிக்கலாம். இப்படி பஃபேயில் பல சௌகரியங்கள் உள்ளன. ஆகவே பஃபேயில் சாப்பிடலாம் என்று உத்திரவாகியது.

எத்தனை மணிக்குத் திரும்பலாம்? இது ஒரு கடைசிப் பிரச்சினை. எனக்கு இரவு 9 மணிக்குத் தூங்க வேண்டும். அம்மாவிற்கு பேச ஆள் கிடைத்து விட்டால் நேரம் காலம் கிடையாது. இந்த இரண்டையும் எப்படி சரிக்கட்டுவது? அம்மா கட்சிதான் ஜெயிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.

இப்படியாக வயதான காலத்தில் ஒரு கல்யாணத்திற்குப் போய்வருவது என்பது ஒரு இமாலயப் பிரச்சினையாக இருக்கிறது. அநேகமாக வயதானவர்கள் அனைவருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.  

29 கருத்துகள்:

  1. உங்களுக்கு அழைப்பு வைக்க மூன்று பேர் வந்து இருக்கிறார்கள் 2 பெண்கள் ஒரு ஆண். உங்கள் கொள்கைப்படி மூன்று பேர் போய் ஆக வேண்டும். அதனால் நீங்கள் கல்யாணத்திற்கு போவதென்றால் இன்னொரு பெண் வேண்டுமே??? இப்ப என் மண்டை உடைகிறது நீங்கள் எப்படி போகப் போகிறிர்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என் தம்பியையும் அவன் மனைவியையும் இரண்டு பேர் ஆனாலும் ஒரு ஆளாகத்தான் கணக்கில் கொள்ளவேண்டும். ஏனெனில் அவர்கள் மணப்பெண்ணுக்கு பெரியம்மா பெரியப்பாதானே?

      நீக்கு
  2. // ஏனென்றால் அப்படி தனியாக எடுத்த முடிவுகள் எல்லாம் அப்பீலில் தோற்றுப்போய் விடுகின்றன //

    இது ரொம்ப சிம்பிள் சார். எத செய்யணுன்னு நினைக்கிறீங்களோ அதுக்கு எதிர்மாறா செய்யணுன்னு சொல்லிடுங்க. ஆனா பேக் பயர் ஆனா நீங்கதான் சமாளிக்கணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி விஷப் பரீட்சை எல்லாம் செய்ய உடலிலும் உள்ளத்திலும் வலு இல்லைங்க.

      நீக்கு
  3. ஆரம்பகாலத்தில் ஆட்டிப் படைத்த அய்யாவின் ராஜ்ஜியம், வயதான கடைசி காலத்தில் அம்மாவின் ராஜ்ஜியமாக மாறும்போது எதுவும் செய்ய முடியாமல் போய்விடுகிறது.

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கையில் ஒவ்வொரு விசயத்திலும் எவ்வளவு பிரச்சினை பாருங்கள்

    பதிலளிநீக்கு
  5. திண்டுக்கல் லியோனியை கூப்ப்ட்டுதான் தீர்ப்பு சொல்லணும் ஹா ஹா ஹா ஹா...

    பதிலளிநீக்கு
  6. ஆஹா
    எழுதும் திறனிருந்தால்
    எதையும் சுவார்ஸ்யப்படுத்தி
    எழுதிவிட முடியும் என்பதற்கு
    இப்பதிவே சாட்சி
    மிகவும் ரசித்துப் படித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  7. //அம்மா கட்சிதான் ஜெயிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே//

    எல்லா நேரத்திலும் அல்ல என நினைக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  8. எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வு இல்லை போல...

    பதிலளிநீக்கு
  9. இந்த மாதிரி இன்னும் என்னென்ன பிரச்சினைகள் வருகின்றன என்பதை அவ்வப்போதே எழுதிவிடுங்கள். எனக்கும் வயதாகிக்கொண்டே போகிறது. உதவியாக இருக்கும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை

    பதிலளிநீக்கு
  10. ஒரு திருமண விழாவுக்கு சென்று வர இவ்வளவு முன்னேற்பாடுகளா ??
    :))

    பதிலளிநீக்கு
  11. இருவரும் தம்பதி சமேதராக வந்து கூப்பிட்டால் நாங்கள் இருவரும் தம்பதி சமேதராகப் போகவேண்டும். ஆம்பிளை மட்டும் வந்து கூப்பிட்டிருந்தால் ஆம்பிளை மட்டும் போகவேண்டும். பொம்பிளை மட்டும் வந்து கூப்பிட்டிருந்தால் பொம்பிளை மட்டும் போகவேண்டும். பத்திரிக்கை தபாலில் வந்திருந்தால் தபாலில் வாழ்த்து அனுப்பினால் போதுமானது.

    இதுதான் நான் கடைப்பிடிக்கும் கொள்கை. //

    நீங்க மட்டுமில்ல பெரும்பாலும் குடும்பங்களிலும் இதுதான் நடைமுறை. அன்றாடம் நடைபெறும் விஷயங்களைக் கூட சுவாரஸ்யமான பதிவாக மாற்றும் உங்களுடை நடை அருமை.

    பதிலளிநீக்கு
  12. // ஏனென்றால் அப்படி தனியாக எடுத்த முடிவுகள் எல்லாம் அப்பீலில் தோற்றுப்போய் விடுகின்றன //
    இப்படி தோற்க காரணம் ...இந்த ஆயுதம் தானா ?க்ளிக் பண்ணி பார்த்து சொல்லுங்க அய்யா >>>http://jokkaali.blogspot.com/2013/10/blog-post_14.html
    த.ம 7

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்த ஆயுதம் எல்லாம் கல்யாணமான புதுசிலதான். இப்ப எல்லாம் பார்வையிலேயே பணிஞ்சு போறமில்ல.

      நீக்கு
  13. வருத்தப்படும் வயதானவர்கள் சங்கம் ஒன்று ஆரம்பித்து இருந்திருந்தால். சங்கத்தில் இப்படிபட்ட பிரச்சனைக்கு உடனடி தீர்வு கிடைத்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  14. பாருங்கய்யா... நாம செலவு பண்ணிப் போயி மொய் எழுதிட்டு வர எம்புட்டு யோசிக்க வேண்டியிருக்கு...

    ஹா... ஹா... நகைச்சுவையாய் சொன்னாலும் உண்மையை உரக்கச் சொல்கிறது உங்கள் பகிர்வு. வாழ்த்துக்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  15. பரவாயில்லையே. உங்க வூட்டு அம்மா இந்த இங்கிருக்கும் 20 கி.மீ. தொலைவுக்கு உங்களைக் காரோட்ட அனுமதிக்கிறாங்களே. அதுவும் மாலை நேரத்தில்....!

    பதிலளிநீக்கு
  16. மானுட வேஷங்களை அழகாக காட்டும் கல்யானஅழைப்பு போகலாம் .........

    பதிலளிநீக்கு
  17. சோதனை மேல் சோதனைதான். தீபாவளிக்கு முதல் நாளும் தீபாவளியன்றும் கோவைக்குச்செல்ல வேண்டியது உள்ளது. அதுபோல 13, 14.11.2013 கீழ் திருப்பதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. பயணங்களே எங்களுக்கு இப்போதெல்லாம் சுத்தமாகப் பிடிப்பது இல்லை.
    இரண்டு இடங்களுக்கும் தலா 1000 ரூபாய் வீதம் அனுப்பி வைத்துவிட்டு பேசாமல் இருந்து விடலாமா என யோசித்து வருகிறேன்.

    தங்கள் எண்ணங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளீர்கள்/ பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திருச்சியில் இருந்து கோவைக்கு ரயில் இருக்கிறது. அதில் அதிக சிரமமில்லாமல் வரலாம். இங்கு உங்கள் சௌகரியங்கள் அனைத்தையும் நான் கவனித்துக்கொள்கிறேன். அவசியம் வரவும்.

      நீக்கு
    2. பழனி. கந்தசாமி புதன், 16 அக்டோபர், 2013 5:06:00 AM IST

      //திருச்சியில் இருந்து கோவைக்கு ரயில் இருக்கிறது. அதில் அதிக சிரமமில்லாமல் வரலாம். இங்கு உங்கள் சௌகரியங்கள் அனைத்தையும் நான் கவனித்துக் கொள்கிறேன். அவசியம் வரவும்.//

      தங்களின் மின்னல் வேக உடனடி அழைப்பு என் மனதை நெகிழச்செய்து விட்டது.

      இங்கு மட்டுமல்லாது தனியாக மெயில் கொடுத்து அன்புடன் அழைத்துள்ளது மட்டில்லா மகிழ்ச்சி அளிக்கிறது..

      பிராப்தம் இருந்தால் சந்திப்போம், ஐயா.

      மற்ற விஷயங்களை விபரமாக, தங்கள் மெயிலுக்கு பதிலாக எழுதியுள்ளேன் ஐயா.

      அன்புடன் + நன்றியுடன் VGK

      நீக்கு
  18. Respected Sir,

    You may like to go through the following Link in which your name is also appearing against Sl.No. 39

    http://gopu1949.blogspot.in/2013/10/65-3-4.html

    vgk

    பதிலளிநீக்கு