திங்கள், 6 ஜனவரி, 2014

தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது எப்படி?


இஸ்ரேல் நாடு இருக்குமிடம் அறிவீர்கள். அங்கிருந்து தென்கிழக்கில் 5 மணி நேரப் பயணத்தில் பம்பாய் (மும்பை என்று சொல்லவேண்டுமோ?) வந்துவிடும். ஆனால் அரபு நாடுகளின் மீது பறக்கவேண்டும்.

இஸ்ரேல்காரங்களுக்கும் அரேபியர்களுக்கும் ஜன்மாந்திரப் பந்தம். ஒரே இனமாக இருந்து பிறகு பிரிந்தவர்கள்தானே. அரேபியர்கள் தங்கள் நாடுகள் மீது இஸ்ரேலிலிருந்து புறப்படும் எந்த விமானம் பறந்தாலும் அதை சுட்டுத்தள்ளுவோம் என்று சொல்லிவிட்டார்கள். அதேபோல் அரபு நாடுகளிலிருந்து புறப்படும் எந்த விமானமும் இஸ்ரேல் மீது பறந்தால் அது சுட்டுத்தள்ளப்படும். இது இஸ்ரேல், அரபு நாடுகள் மற்றும்  எல்லா இதர நாடுகளும் பரஸ்பரம் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு சர்வதேச ஒப்பந்தம். நல்ல நட்பின் அடையாளம் கண்காணாமல் இருப்பதே.

இஸ்ரேலுக்கும் அரபு நாடுகளுக்கும் அவ்வளவு நட்பு. ஆகவே இஸ்ரேலிலிருந்து பம்பாய் வரவேண்டுமானால் வடமேற்கே 7 மணி நேரம் பயணித்து ஐரோப்பாவில் ஏதாவது ஒரு ஊருக்குப் போகவேண்டும். அங்கிருந்து கிழக்கு-தென்கிழக்காக ஒரு 9 மணி நேரம் பயணித்து பம்பாய் வரவேண்டும். கீழேயுள்ள படத்தைப் பார்க்கவும்.


தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது என்பது இதுதான். என்னுடைய டூரை இப்படித்தான் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நான் இஸ்ரேலை விட்டுப் புறப்படும் தினத்தன்று காலையில் எழுந்து குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு என் சாமான்களையெல்லாம் மூட்டை கட்டினேன். காலை 9 மணிக்கு டாக்சி வருவதாக ஏற்பாடு. நான் என் லக்கேஜ்களை ஓட்டல் லாபியில் கொண்டு வந்து வைத்துவிட்டு காத்திருந்தேன்.

டாக்சி சரியான நேரத்திற்கு வந்தது. அரை மணி நேரத்தில் ஏர்போர்ட் வந்து சேர்ந்தேன். லக்கேஜகளை ஒரு டிராலியில் ஏற்றிக்கொண்டு உள்ளே சென்றேன். உள்ளே ஏகப்பட்ட போலீஸ் பெண் போலீஸ்கள்தான் அதிகம். அதில் ஒருத்தி என்னப் பிடித்துக்கொண்டாள்.

பத்து நிமிடங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டாள். அவள் கேட்ட முக்கியமான கேள்விகளும் என் பதில்களும் கீழே.

1. கேள்வி:  இஸ்ரேலுக்கு எதற்காக வந்தீர்கள்?

    பதில்:       நான் ஒரு விவசாய விஞ்ஞானி. இங்குள்ள சொட்டு நீர்ப்                                              பாசனத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வந்தேன்.

2. கே:  இங்கு எத்தனை நாள் இருந்தீர்கள்?

    ப:     மூன்று நாள்

3.  கே:  இந்த லக்கேஜ்களை எல்லாம் யார் பேக் செய்தார்கள்?

       ப:  நான்தான் பேக் செய்தேன்.

4.   கே: பேக் செய்த பின் எங்காவது போனீர்களா?

        ப:  எங்கும் போகவில்லை.

5.   கே:  இந்த பேக்கேஜுகள் உங்கள் பார்வையிலேயே இருந்ததா?

        ப:  ஆமாம்.

6.    கே. யாராவது உங்களிடம் ஏதாவது பாக்கெட் கொடுத்தார்களா?

        ப:  இல்லை.


"சரி, இங்கேயே இருங்கள்"  என்று சொல்லிவிட்டு, கொஞ்ச தூரத்தில் இருந்த இன்னொரு போலீஸகாரியைக் கூப்பிட்டு அவர்கள் பாஷையில் என்னமோ சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

இந்த இரண்டாவது போலீஸ்காரியும் முதல் போலீஸ்காரி கேட்ட அத்தனை கேள்விகளையும் அதே வரிசையில் கேட்டாள். நானும் அதே பதில்களை அதே வரிசையில் சொன்னேன்.

சரி. நீங்கள் செக்இன் செய்யப் போகலாம் என்று விடை கொடுத்தாள். போன உயிர் திரும்ப வந்த மாதிரி இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அந்த ஊரில் வைரம் பட்டை தீட்டி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். சட்ட பூர்வமாக ஏற்றுமதி செய்தால் நிறைய வரி கட்டவேண்டும். அதனால் இந்த மாதிரி டூர் வரும் ஆட்களிடம் சிறிய பாக்கெட்டுகளில் வைரக்கற்களை கொடுத்தனுப்பினால் வரியை ஏய்க்கலாம்.

நான் ஓட்டலில் இருக்கும்போது ஒரு ஆள் என்னைப் பற்றி விசாரித்தான். நான் ஒரு அரசு ஊழியன் என்று தெரிந்த தும் போய்விட்டான். அவன் இந்த விஷயத்திற்கு நான் தோதுப்படுவேனா என்றுதான் நோட்டம் பார்த்திருக்கவேண்டும்.

எப்படியோ சிக்கல் இல்லாமல் நான் பிளேன் ஏறி யூரிச் என்னும் ஊருக்கு 7 மணி நேரம் பிரயாணம் செய்து வந்து சேர்ந்தேன். பம்பாய் செல்லும் விமானத்திற்காக அரை நாள் காத்திருந்து  பிறகு அதில் ஏறி 9 மணி நேரம் பிரயாணம் செய்து பம்பாய் வந்து சேர்ந்தேன். அங்கிருந்து லோகல் விமானம் பிடித்து இரண்டு மணி நேரத்தில் ஊர் வந்து சேர்ந்தேன். ஏறக்குறைய இஸ்ரேலிலிருந்து ஊருக்கு வர ஒன்றரை நாள் ஆகியது.

வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு ரசம் சாதம் சாப்பிட்டு விட்டு இரண்டு நாள் தூங்கினேன். இப்படியாக என்னுடைய இஸ்ரேல் டூர் முடிந்தது.20 கருத்துகள்:

 1. //அதில் ஒருத்தி என்னைப் பிடித்துக்கொண்டாள்.//

  ;))))) ஆஹா, என்னவோ ஏதோ என சுவாரஸ்யமாக படிக்க நிமிர்ந்து உட்கார்ந்தேன். பிறகு பிடித்தவள் விட்டுவிட்டாளே ! சப்பென்று ஆகிவிட்டது.

  //ஏறக்குறைய இஸ்ரேலிலிருந்து ஊருக்கு வர ஒன்றரை நாள் ஆகியது. வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு ரசம் சாதம் சாப்பிட்டு விட்டு இரண்டு நாள் தூங்கினேன். இப்படியாக என்னுடைய இஸ்ரேல் டூர் முடிந்தது.//

  சந்தோஷம்.

  பதிலளிநீக்கு
 2. சுலபமாக முடியவேண்டிய பயணத்தை அவர்கள் விரோதத்தில் உங்களைச் சுற்ற வைத்திருக்கிறார்கள்!

  பதிலளிநீக்கு
 3. // வீட்டிற்கு வந்ததும் குளித்து விட்டு ரசம் சாதம் சாப்பிட்டு விட்டு இரண்டு நாள் தூங்கினேன்.//
  என்னதான் வெளி நாட்டிற்கு சென்றாலும் நம் ஊர் ரசம் சாப்பிட்டால்தான் தூக்கம் வரும் என்பதை முத்தாய்ப்பாக சொல்லி பயணக் கட்டுரையை நிறைவு செய்திருக்கிறீர்கள். பணம், நேரம் செலவழிக்காமல் விசா வாங்காமல் இஸ்ரேல் அழைத்து சென்றதற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 4. இஸ்ரேல் பயணம் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
 5. தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது என்பது இதுதான்.

  வித்தியாசமான பயணம் ..!

  பதிலளிநீக்கு
 6. அய்யா அவர்களின் "குருவி" அனுபவம் கேட்கலாம் என்றிருந்தோம். "ஐயோ வாடா போச்சே" என்றாகி விட்டது.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வாரம் பழனி போகிறேன். சிட்டுக்குருவி லேகியம் அங்குதான் பிரசித்தம். உங்களுக்கு எத்தனை பாட்டில் வேண்டும், சொல்லுங்கள் வாங்கி வருகிறேன்.

   நீக்கு
 7. நல்ல வேளை தப்பித்தீர்கள். பட்டை தீட்டப்பட்ட வைரம் உங்களிடம் மாட்டி இருந்திருந்தால் அவர்கள் உங்களை பட்டை தீட்டி இருந்திருப்பார்கள். ஏதோ உங்கள் பர்யால் செய்த புண்ணியம் விசாரித்தவன் அரசு பணியாளர் என்பதால் திரும்பிவிட்டான். நீங்களும் தப்பித்தீர்கள்

  திருச்சி காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 8. நெடு நாள் முன்பு செய்த பயணத்தை வெகு சுவாரசியமாக எழுதினீர்கள்.வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. நீண்ட நாள் சந்தேகத்தைத் தீர்த்து வைப்பீர்கள் என்று பார்த்தேன்.

  பதிலளிநீக்கு
 10. உங்களிடம் நோட்டம் விட முடியுமா என்ன...? ரசத்துடன் - இனிதே பயணம்...

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 11. தலையைச் சுற்றி மூக்கைத் தொட்ட கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. //போன உயிர் திரும்ப வந்த மாதிரி இருந்தது. பின்னால்தான் தெரிந்தது. அந்த ஊரில் வைரம் பட்டை தீட்டி வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள். சட்ட பூர்வமாக ஏற்றுமதி செய்தால் நறைய வரி கட்டவேண்டும். //

  எப்படியோ ஒருவழியாக வைரத்தை கொண்டுவந்தீர்களல்லவா?


  பதிலளிநீக்கு
 13. இதுதான் கல்லுளிமங்கன் என்பது. இஸ்ரேல் சென்று வந்தவுடனேயே தங்கள் பார்யாள் மூக்கிலும் கழுத்திலும் வைர நகைகள் ஜொலித்ததை மறைத்து விட்டீர்களே. ஆனாலும் இரண்டு போலிஸ்காரிகளிடம் தைரியமாக பொய் சொல்லி வைரத்தை கடத்தியதை பாராட்டித்தான் ஆக வேண்டும். கடைசி வரை, இத்தனை நாட்கள் கழித்துக்கூட, எங்களிடம் கூட அதை சொல்லாததால்தான் உங்களுக்கு கல்லுளி மங்கன் என்ற பட்டம்.

  (நான் பயந்த பயம் எனக்குத்தான் தெரியும் என்கிறீர்களா? அதவும் சரிதான்)

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
 14. அழகுபட பயண அனுபவத்தை சொல்லியிருக்கிறீர்கள். "அதில் ஒருத்தி என்னைப் பிடித்துவிட்டாள்" என்று சொல்லி, மேலும் படிக்கத் தூண்டிய விதம் அருமை. ஒவ்வொரு வார்த்தையும் விடாமல் படிக்குமளவிற்கு எழுத்து நடை இருந்தது.. எல்லாம் தங்களின் அனுபவத்தைப்போலவே சுவையாக இருந்தது...வாழ்த்துக்கள் ஐயா..தங்களது ஒவ்வொரு பயண அனுபவத்தையும் இப்படி சுவைபட எழுதி பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

  நன்றி

  பதிலளிநீக்கு
 15. தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவது என்பது இதுதான்.:) சுவாரஸ்யமான பயணம்.

  பதிலளிநீக்கு
 16. எனக்குப் பயணம் முடிஞ்சு வீட்டுக்குள்ளே வந்ததும் ஃபில்டரில் காஃபிப்பொடியை நிரப்பணும்.

  அப்புறம் பருப்பு & சாதம் குக்கரில் வைக்கணும்.

  பருப்பு சாதம் சாப்பிட்டதும் ஒரு அருமையான காஃபி.

  அப்பதான் போய்க்கொண்டு இருக்கும் உயிரை மீண்டும் தக்கவச்சுக்க முடியும்:--)))))

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் ஐயா.

  கோபால் நலமே. எல்லாம் உங்களைப்போனற பெரியவர்கள் ஆசீர்வாதம் & கடவுளின் அருள்.

  பதிலளிநீக்கு