செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

பேங்க் கணக்குகள் - பாகம் 2


ஆகக்கூடி பேங்க்கில் கணக்கு ஆரம்பித்து விட்டீர்கள். ஆகவே நீங்கள் அந்த பேங்க்கின் மிகுந்த மரியாதைக்குரிய கஸ்டமர். நீங்கள் போகும்போதெல்லாம் அந்த பேங்க்கின் மேனேஜர் எழுந்து வந்து உங்களை வரவேற்பார் என்ற கற்பனையெல்லாம் வைத்துக் கொள்ளாதீர்கள. "கஸ்டமர் டே" என்று ஒரு நாள் இருக்கிறது. அன்று மட்டும் உங்களுக்கு மிட்டாய் கொடுத்து வரவேற்பார்கள். மற்ற நாட்களில் நீங்களே ராஜா, நீங்களே சேவகன்.

பேங்கில் முதல் முதலாக நுழையும்போது கொஞ்சம் பிரமிப்பாக இருக்கும். எதற்கு எங்கே போகவேண்டும் என்ற விவரம் புரியாது. கொஞ்ச நாளில் சரியாகிவிடும்.

முதல் வேலையான உங்கள் கணக்கில் பணம் கட்டுதல் எப்படி என்று பார்ப்போம்:. பணம் கட்டினால்தான் பின்னால் தேவைப்படும்போது எடுக்க முடியும். பணம் கட்டாமலேயேயும் பணம் எடுக்கலாம். அது ஒரு தனிக்கலை. அதை பின்னால் சொல்கிறேன்.

உங்கள் கணக்கில் பணம் கட்ட ஒரு "பணம் செலுத்துப் படிவம்" (செலான் = chalan) உபயோகப்படுத்த வேண்டும். இதை சரியாக பூர்த்தி செய்வதே ஒரு கலை. இந்தப் படிவம் ஏறக்குறைய எல்லா பேங்குகளிலும் கொசகொசவென்றே இருக்கும். வேண்டுமென்றே இப்படி வைத்திருக்கிறார்களோ என்று எனக்கு அடிக்கடி தோன்றுவதுண்டு.

எழுத்துக்கள் மங்கலாகவும் மிகச்சிறியதாகவும் இருக்கும். இந்த மாதிரி அச்சடிப்பதற்கென்றே தனி அச்சகங்கள் இருக்கும் என்பது என் சந்தேகம். ஓரிரு முறை உபயோகப் படுத்தின பிறகு தெளிவு பிறக்கும். கணக்கு ஆரம்பிக்கும்போதே சில படிவங்களை வாங்கிக்கொண்டு போய் வீட்டில் நேரம் இருக்கும்போது பயிற்சி எடுத்துக்கொண்டீர்களானால் சுலபமாக இருக்கும்.

இதில் இரண்டு பகுதிகள் உண்டு. ஒரு பகுதி பெரிதாகவும் இன்னொரு பகுதி சிறியதாகவும் இருக்கும். சிறிய பகுதி உங்களுக்குக் கொடுப்பதற்காக. இதை கவுன்டர்பாயில் - counterfoil  என்பார்கள்.

இந்தப் படிவங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும். சில சமயம் நமது தேசீய மொழியான இந்தியிலும் இருக்கும். எங்க ஊர் மாதிரி கேரளாவிற்குப் பக்கத்தில் உள்ள ஊரானால் மலையாளத்திலும் இருக்கும். கேரளப் பெண்கள் அழகானவர்கள் என்று பாரதியார் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். எனக்கு நேரடி அனுபவம் இல்லை. ஆனால் மலையாள எழுத்துக்கள் ஜிலேபி மாதிரி இருக்கும்.

ஆனால் நான் ஒரு போதும் தமிழில் அச்சடிக்கப்பட்ட படிவங்களைப் பார்த்த தில்லை. ஆனால் நாம் இதில் தமிழிலும் எழுதலாம். ஒப்புக்கொள்வார்கள். இந்தப் படிவத்தை வீட்டிலேயே பூர்த்தி செய்து எடுத்து வருவது நல்லது. இதில் எழுத வேண்டிய முக்கியமான விவரங்கள்.

1. தேதி

2.உங்கள் கணக்கின் எண் - இது மிகவும் முக்கியம். தவறாக எழுதிவிட்டால் உங்கள் பணம் கோவிந்தாதான்.

3. உங்கள் பெயர் - இதில் தவறு நேரும் வாய்ப்பு குறைவு.

4. எவ்வளவு பணம் கட்டப்போகிறீர்கள் என்ற விவரம். எண்ணிலும் எழுத்தாலும்.

5. நீங்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் (அது எப்படியிருக்கும்?) கட்டினால் உங்கள் பேன் கார்டு (தலையிலிருக்கும் பேன் அல்ல - PAN கார்டு) எண்ணைக் குறிப்பிடவேண்டும்.

6. நீங்கள் கட்டும் பணத்தின் விவரங்கள். அதாவது பத்து ரூபாயில் எவ்வளவு, நூறு ரூபாயில் எவ்வளவு, ஐந்நூறில் எவ்வளவு, இப்படியான விவரங்கள். ஒவ்வொன்றிலும் எவ்வளவு எண்ணிக்கை, அதன் மொத்த மதிப்பு எவ்வளவு என்பதை எல்லாம் விலாவாரியாக குறிக்கவேண்டும். அதற்கென்றே ஒரு தனி இடம் கட்டம் போட்டு அச்சடித்திருப்பார்கள். கடைசியில் மொத்த தொகை எவ்வளவு என்று குறிப்பிடவேண்டும்.

8. பேங்கிற்கு பணம் கட்டப் போகும்போது ரூபாய் நோட்டுகளை ஒழுங்காக அடுக்கிக் கொண்டு போகவேண்டும். ஒவ்வொரு வகைக்கும் தனித்தனியாக ரப்பர் பேண்ட் போட்டு ஒரு ஒழுங்கில் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் அந்தக் கணக்கர் உங்களைத் திட்டுவார். இந்த திட்டு ஒவ்வொரு ஊருக்கும் வேறுபடும். "சாவு கிராக்கி" என்பது எல்லா ஊருக்கும் பொது.

7. உங்கள் கையெழுத்து.

8. உங்கள் போன் நெம்பர்.

9. சில படிவங்களில் பேங்க் கிளையின் பெயரை காலியாக விட்டிருப்பார்கள். அதில் அந்தக்கிளையின் பெயரை எழுதுவது உத்தமம்.

இதையெல்லாம் பால் பாயின்ட் பேனாவாலோ அல்லது இங்க் பேனாவினாலோ எழுத வேண்டும். பென்சிலால் எழுதக்கூடாது. கருப்பு அல்லது நீலக் கலர் பேனாதான் உபயோகப் படுத்தவேண்டும்.  சிகப்புதான் எனக்குப் பிடித்த கலர் என்று அதிலெல்லாம் எழுதக்கூடாது. அந்த மாதிரி கலர்களில் எழுதுவதற்கு பேங்க் அதிகாரிகள் மட்டுமே காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.

இதையெல்லாம் சரியாக செய்து பேங்கிற்குப் போனால் அங்கு கூட்டம் அலைமோதும். அதைக் கட்டுப்படுத்த இப்போது டோகன் சிஸ்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். அந்த டோகனை எடுத்துக்கொண்டு காத்திருக்கவேண்டும். இந்த டோகனைக் கொடுப்பதற்கென்றே ஒரு மிஷின் இருக்கிறது. அதை வழக்கமாக யாருக்கும் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்திருப்பார்கள். இதை நீங்கள் விசாரித்து அறிந்து கொள்ளவேண்டும்.

டோகன் எடுத்துக்கொண்டு ஒரு மூலையில் உட்கார்ந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டீர்களானால் உங்கள் முறை வந்துவிடும். உங்கள் முறை வந்து விட்டதா என்று காண்பிப்பதற்கு ஒரு எலெக்ட்ரானிக் அறிவிப்புப் பலகை இருக்கும். அதில் டோகன் நெம்பர், கவுன்டர் நெம்பர் காண்பிக்கும். அந்தக் கவுன்டருக்குப் போய் உங்கள் டோகன், செலுத்துப் படிவம், பணம் எல்லாவற்றையும் கொடுத்தீர்களானால் அவைகளை வாங்கி சரி பார்த்து செலானில் சீல் குத்தி ஒரு கிறுக்கல் கையெழுத்துப் போட்டு கவுன்டர்ஃபாயிலை உங்களுக்கு கொடுப்பார்கள்.

அவ்வளவுதான். ஆஹா, நீங்கள் ஒரு வெற்றி வீரர்!

மற்ற வேலைகளை அடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

36 கருத்துகள்:

  1. ஃபோன் நம்பர் எழுத வேண்டுமா என்ன? மற்றபடி, நல்லவேளை மற்ற விவரங்கள் எனக்கும் அறிந்தவையாய் இருக்கின்றன.

    பதிலளிநீக்கு
  2. Dr, பழனி கந்தசுவாமி ஐயா,

    நீங்கள் எழுதியது நூற்றுக்கு நூறு உண்மை. ஆனால், வெளி நாட்டு வங்கிகளில் (இந்தியாவில் உள்ள) இந்த மாதிரி இல்லை. ஐசிஐசிஐ வங்கியும் பரவாயில்லை. ஆனால் பாரத ஸ்டேட் வங்கியில் நிலைமை நீங்கள் சொன்ன மாதிரியே இருக்கிறது.
    மிக நகைச்சுவையாக எழுதி இருக்கிறீர்கள்.

    அன்புடன்,
    சங்கர நாராயணன். தியாகராஜன்
    ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து.

    பதிலளிநீக்கு
  3. மெல்லிய நகைச்சுவை உங்களுக்கு எளிதாக கை வருகிறது! எங்கள் ஊர் SBI கிளையை நினைத்தாலே பயமாக இருக்கிறது! எப்ப பாத்தாலும் ஊரே அங்க கூடியிருக்கற மாதிரி இருக்கிறது. ஒவ்வொருத்தரையும், எதுக்குப்பா பாங்குக்கு வந்திருக்க? உண்மையாவே ஏதாவது வேலை இருக்கிறதா.. இல்ல வேடிக்கை பாக்க வந்தியா? என கேட்கணும் போல இருக்கும். ஒரு நாள் இல்லை ஒரு நாள்.. கண்டிப்பாக கேட்கப் போகிறேன்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாவம் அவர்கள். தயவு செய்து கேட்டு விடாதீர்கள்.
      வேறு வழியே இல்லாமல்தான் அவர்கள் ஸ்டேட் பேங்க் வருகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஓய்வூதியம் பெறுபவர்களாக இருப்பார்கள் அல்லது சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்களாக இருப்பார்கள. நம்மை போல அவர்களும் வங்கியின் சேவையை நம்பித்தான் இருக்கிறார்கள்.
      இதற்கு ஒரே வழி வங்கிகள் தமது செயல் முறையை மாற்றிக்கொள்ள வேண்டியதுதான். தேச தந்தை காந்தி சொன்ன "customer is God. Not because of us, he is existing, but because of him, we are there" (இந்த அர்த்தத்தில்தான் வரும்) வார்த்தைகள் அறிவிப்புப்பலகையில் மட்டுமே காட்சி அளிக்கிறது. இது என்று practice செய்யப்படுகிறதோ அன்று தானாக வழிமுறைகள் மாறும். இத்தனை மனித நேரம் வீணடிக்கப்படுகிறதே என்ற எண்ணம் வங்கி தலைமைக்கு ஏற்பாட்டால், அதை உணர்ந்தால் தானாக புதிய வழிமுறைகள் பிறக்கும். அது வரை வங்கி ஊழியர்கள் எசமானர்கள் நாம் அவர்கள் தயவில் இருக்கிறோம் என்ற மனப்பான்மை மாறாது.

      சேலம் குரு

      நீக்கு
  4. ‘’பணம் கட்டாமலேயேயும் பணம் எடுக்கலாம். அது ஒரு தனிக்கலை. அதை பின்னால் சொல்கிறேன்.’’

    அதை முதலில் சொல்லுங்கள் ஐயா. பலருக்கு உதவியாய் இருக்கும்!

    “இந்தப் படிவங்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருக்கும்.”

    பாரத ஸ்டேட் வங்கியில் தமிழிலும் அச்சிட்டிருப்பார்கள்.


    “அந்த மாதிரி கலர்களில் எழுதுவதற்கு பேங்க் அதிகாரிகள் மட்டுமே காப்புரிமை பெற்றிருக்கிறார்கள்.”

    .நீங்கள் எந்த வங்கியைக் குறிப்பிடுகிறீர்கள் எனத்தெரியவில்லை.
    அப்படி ஒன்றும் எந்த வங்கியிலும் சிகப்பு வண்ணத்தில் எழுத யாருக்கும் காப்புரிமை இல்லை. வாடிக்கையாளர்கள் எந்த வண்ணத்திலும் செலுத்துச்சீட்டில்(Challan) எழுதலாம். எனக்குத் தெரிந்து தமிழ்நாடு அரசில், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலர் (Gazetted Officer) மட்டுமே பச்சை வண்ணத்தில் கையொப்பம் இடலாம் என்பார்கள். வங்கிகளில் அந்த மாதிரி சட்ட திட்டங்கள் இல்லை அய்யா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்டங்கள் இதற்கென்று தனியாக இல்லை என்து உண்மை. எல்லோரும் நீல மையில் எழுதியிருக்கும்போது பாஸ் பண்ணுபவர் தனியான கலரில் எழுதினால் சட்டென்று தெரியும். அவ்வளவுதான். கெஜட்டெட் ஆபீசர்கள் பச்சை இங்கில் கையெழுத்துப் போடுவதும் இதே காரணத்தினால்தான். எனக்குத் தெரிந்து கெஜட்டெட் ஆபீசர் பச்சை இங்கில் கையெழுத்துப் போடலாம் என்று எந்தச் சட்டமும் இல்லை.

      நீக்கு
  5. இங்கு SBI-யில் காலையில் 10 மணிக்கு சினிமா தியேட்டரை விட கூட்டம் அதிகமாக இருக்கும்... அடடே... முதல் டோக்கன் வாங்கி விட்டோமே என்றால், உங்களை கூப்பிடுவதற்கு 10:30 மணிக்கு மேல் ஆகும்... தாமதமாக வந்து உட்கார்ந்து, பெட்டியில் உள்ள பணத்தை எண்ணி முடிப்பதற்குள், கணினிக்கு உயிர் வந்து விட்டால் நம் புண்ணியம்...!

    பதிலளிநீக்கு
  6. பல வருடங்கள் கவுண்டரின் உள் பக்கம் வேலை செய்தேன்.
    ஆனால் வெளிப்பக்க நிகழ்வுகளை காமெடியாக நீங்கள் எழுதிய விதம் பிடித்தது.

    பதிலளிநீக்கு
  7. நடை முறையில் இருக்கும் செய்திகள் . பல இடங்களில் பல அனுபவங்கள்.இண்டெர்னெட் பாங்கிங் செய்ய கைபேசி எண்கள் தேவை என்று சொல்கிறார்கள். ATM -ல் பணம் எடுக்க அச்சமாக இருக்கிறது .இரண்டு முறை கள்ள நோட்டுக்கள் வந்து நஷ்டப் பட்டேன். வசதிக்காக இருப்பது foolproof ஆக இருக்க வேண்டாமா. ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. A swallow does not make a summer. No Bank knowingly loads fake notes in ATM bins. At times the fakes closely match genuine notes or escapes the attention of the cashier by oversight. When one gets hit uunfortunately, he can lodge a formal complaint, but the procedural rigours associated usually dissuades him from seeking such formal remedy. This happens in all walks of life. If you receive a fake note from the cash counter, but discover it after leaving the counter, the experience would be similar. Same is the case when the currency you received from other sources turns out to be fake. This is not the fault of ATM system. No one burns the house afraid of rat menace.

      நீக்கு
    2. வசதிகள் எல்லாம் ஒரு விலை கொடுத்தால்தான் வரும் என்பது உண்மைதான். ஆனால் அப்படி கொடுக்கும் விலைக்கு fool proof சிஸ்டத்தை எதிர்பார்ப்பது தப்பில்லையே.
      ceaser's wife should be beyond doubt இல்லையா.
      எனவே வங்கிகள் ஏடிஎம் மில் பணம் போடும்போது சிறிது எக்ஸ்ட்ரா ஜாக்கிரதையாக இருக்கலாமே என்ற எண்ணத்தில்தான் திரு GMB அவர்களால் எழுதப்பட்டிருக்குமே தவிர ஏடிஎம் முறையே தவறு என்ற அர்த்தத்தில் இருந்திருக்காது என்பது எனது கருத்து

      இது நமது கவுண்டர் அய்யா அவர்களுக்கு

      எதெற்கெடுத்தாலும் அயல் நாட்டையே நாம் உதாரணம் காட்டுகிறோமே. இங்கு சலவை தொழிலாளி எதோ தப்பாக சொல்லிவிட்டார் என்பதற்காக தன மனைவி சீதையையே தீக்குளிக்க சொன்ன ராமனின் உதாரணம் எடுக்காமல் சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும் என்றுதான் எழுதத்தோன்றுகிறது. இது ஏன் என்று அய்யா வர்கள் தனக்கே உரித்தான நகைச்சுவையோடு விளக்கினால் நன்றாக இருக்கும்

      சேலம் குரு

      நீக்கு
  8. Over crowd in SBI , Because, Pensioners and self help group

    பதிலளிநீக்கு
  9. ;))))) தங்களின் இயல்பான இந்த நகைச்சுவை எழுத்து எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ;)))))

    பதிலளிநீக்கு
  10. //சில சமயம் நமது தேசீய மொழியான இந்தியிலும் இருக்கும். //

    இந்தியாவிற்கு தேசிய மொழி என்று எதுவும் கிடையாது. இந்தி 'ஆட்சி மொழி' என்றே அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான்
      ஹிந்தி ஆட்சி மொழி
      அது தவிர இன்னும் ஒரு 14 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட மொழிகளாக ரூபாய் நோட்டில் காணலாம். தமிழ் அதில் 13வது மொழியாக இருக்கிறது.
      தேசிய மொழியோ, ஆட்சி மொழியோ, அங்கீகரிக்கப்பட்ட மொழியோ வங்கிகளை பொறுத்த வரை வாடிக்கையாளர்களாகிய நமது மொழி வெறும் ஊமை மொழியாகவே இருக்கிறது

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
    2. In currency notes the languages are listed in alphabetic order and hence Tamil comes near the end of listing.It is not any reflection of disregard for Tamil Language
      Tamil chalans are in use in a number of public sector banks in TN. Chalans in vernacular (side by side with English/Hindi) are printed by all Public Sector banks.
      While vernacular usage is fine, when numerical notations are made in vernacular, it leads to operational hardships. To facilitate national (if not universal) usage, numbers should not be written in vernacular.
      Many user friendly measures are pursuant to feedback from customers. It is an unfortunate presumption that service providers invariably display customer apathy

      நீக்கு
  11. கஸ்டமர் டே என்றுதான் பெயர்.
    ஆனால் தினமும் கஷ்டமர் டே என்பது போலதான் நடைமுறையில் இருக்கும்.
    நாம் ஏதோ அவர்கள் பணத்தை எடுப்பது போல நம்மை நடத்துவார்கள்.
    என் நண்பன் ஒருவன் வங்கிகளெல்லாம் 'organised looters, appointed by the govt to loot the people' என்று சொல்லுவான். சில சமயம் அது உண்மையோ என்று தோன்றும்

    சேலம் குரு பிரியா

    பதிலளிநீக்கு
  12. வங்கியில் பணம் செலுத்த கற்றுக்கொடுத்ததற்கு நன்றிகள்..!

    பதிலளிநீக்கு
  13. //நீங்கள் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் (அது எப்படியிருக்கும்?) //

    இது நம்மை மாதிரி சாதாரண மக்களுக்கும் தெரியாது. நிதி அமைச்சர் சிதம்பரம் போன்ற அரசியல்வாதிகளுக்கும் தெரியாது.
    முன்னவருக்கு பார்த்திருக்க வாய்ப்பு இல்லை.
    பின்னவருக்கு இதெல்லாம் ஜுஜுபி அமௌண்ட்.
    சொந்த தொழில் செய்பவர்களும் அரசு உயர் அதிகாரிகளும் மட்டுமே அவ்வப்போது பார்க்கக்கூடிய தொகை.

    அதனால் நீங்கள் அது எப்படியிருக்கும்? என்ட்ரி கேட்டது நியாயம்தான்

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  14. //இல்லாவிட்டால் அந்தக் கணக்கர் உங்களைத் திட்டுவார். //

    அவர்கள் வேலையே அதுதான் என்பதை மறந்து விடுவதால்தான் இந்த மாதிரி திட்டுக்கள். நாமும் சுற்றுபுறத்தில் உள்ளவர்கள் நம்மை இளக்காரமாக பார்ப்பதை தவிர்க்க அசடு வழிய சிரித்துக்கொண்டே அவர் சொல்வதை எல்லாம் கேட்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு முறை திருப்பி எகிறிப்பாருங்கள். பின்னர் உங்களுக்கு கிடைக்கும் மரியாதையே வேறு. ஆனால் அதன் பிறகு நீங்கள் உங்கள் பரிமாற்றங்களில் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். திரும்ப திட்ட வாய்ப்புக்காக அடிபட்ட விலங்கு போல காத்துகொண்டிருப்பார்கள்

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
  15. //அதை வழக்கமாக யாருக்கும் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்திருப்பார்கள்.//

    நூற்றுக்கு நூறு உண்மை. நன்கு அனுபவித்துத்தான் எழுதுகிறீர்கள்.
    படிக்கும் போதே வங்கியில் அதை தேடி நாம் அலைந்தது நம் கண் முன்னே வருகிறது. ரசித்து சிரித்தேன்

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  16. //இந்த டோகனைக் கொடுப்பதற்கென்றே ஒரு மிஷின் இருக்கிறது. அதை வழக்கமாக யாருக்கும் சீக்கிரம் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வைத்திருப்பார்கள். இதை நீங்கள் விசாரித்து அறிந்து கொள்ளவேண்டும்.//

    முக்கால்வாசி வங்கிகளில் இந்த டோக்கன் மெசின் வேலை செய்வதில்லையே. டோக்கன் நம்பரையும் எலெக்ட்ரானிக் அறிவிப்புப் பலகையில் வரும் நம்பரையும் பார்த்து விட்டு இரண்டுக்கும் அதிக வித்தியாசம் இருந்தால் வெளி வேலை ஏதாவது இருந்தால் பார்த்து விட்டு வந்து கொஞ்ச நேரம் கழித்து கொண்டிருந்தோம். அதிலும் மண்ணை போடுகிற மாதிரி இரண்டுமே வலை செய்யாது. அனாவசியத்துக்கு கூட்டம்.
    என்ன செய்வது. சிவனே என்று நீங்கள் சொன்ன மாதிரி தூங்க வேண்டியதுதான்.

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
  17. //கவுன்டர்ஃபாயிலை உங்களுக்கு கொடுப்பார்கள்.//

    நீங்கள் கவுண்டர் எனவே கவுன்டர்ஃபாயிலை தந்தார்கள்.
    நான் செட்டியார் ஆயிற்றே எனக்கு செட்டியார்ஃபாயிலை தருவார்களோ

    திருச்சி அஞ்சு

    பதிலளிநீக்கு
  18. //அதில் டோகன் நெம்பர், கவுன்டர் நெம்பர் காண்பிக்கும். //

    முன்பாவது பரவாயில்லை. பணம் கட்ட ஒரு கவுன்டர், எடுக்க ஒரு கவுன்டர், செக் புக் வாங்கவும் பாஸ்புக் என்ட்ரிக்கும் ஒரு கவுன்டர் என்றிருந்தது. இப்போது 'எனி டைம் கவுன்டர்' என்று சொல்லி எல்லா கவுண்டர்களையும் எல்லா வேலைக்கும் செய்தவுடன் பாதி நேரம் பாதி கவுண்டர்களில் ஆள் இருக்க மாட்டார்கள். பாஸ் புக் என்ட்ரிக்கு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டியதை இருக்கிறது.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பு போல் இல்லாமல் இப்போது ஏடிஎம் வந்து விட்டது. வங்கிகள் அனைத்துமே கணினிமயமாகப்பட்டுவிட்டது. இருந்தும் கூட்டம் குறையவில்லை என்றால் புரியவே இல்லையே. முன்பு முதல் வாரத்தில் போனால்தான் அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும். மற்ற நாட்களில் 10 நிமிடம்தான். இப்போதோ மாதத்தின் எந்த நாள் போனாலும் 1/2 முதல்3/4 மணி வரை நேரம் ஆகி விடுகிறது. கூட்டம் அதிகமானதற்கு கணினிமயம் ஒரு வழி. ஆனால் அது காத்திருக்கும் நேரத்தை குறைக்காத போது - அதிகம்தான் ஆக்கியிருக்கிறது - கணினிமயம் தவறான goal நோக்கி செலுத்தப்பட்டு விட்டதோ என்று என்ன தோன்றுகிறது.
      வங்கி அலுவலர்களுக்கு கணினிமயம் ஒரு வரபிரசாதம்தன சந்தேகமில்லை. அன்று மாலை டே புக் சரி செய்வது என்ற எளிய வேலையிலிருந்து காலாண்டு தணிக்கை போன்ற கடின வேலை வரை சுலபமாக்கி உள்ளது. ஆனால் வாடிக்கையாளர்களுக்கு?
      பாஸ் புக் என்ட்ரிக்கும் ஒரு மணி நேரம்.
      ஏடிஎம் மில் கள்ள நோட்டு,
      டிரான்சாக்சன் நம்பர் அதிகமானால் பணம்
      செக் புக் அனுப்புவதற்கு தபால் கட்டணம்
      என பல பல
      ஆனாலும் ஒரு 10% வாடிக்கையாளர்களுக்கு இன்டர்நெட் வசதி உள்ளவர்களுக்கு கரன்ட் பில், போன் பில் கட்டவும், பண பரிமாற்றத்துக்கும் இருந்த இடத்தில் இருந்த படி செய்யலாம்

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
  19. //கேரளப் பெண்கள் அழகானவர்கள் என்று பாரதியார் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். எனக்கு நேரடி அனுபவம் இல்லை.//

    பாரதியார் சொனது இருக்கட்டும். கேரளாவுக்கு பக்கத்து ஊர் என்கிறீர்கள். எனக்கு நேரடி அனுபவம் இல்லை என்கிறீர்கள். பதிவிடும் போது பார்யாள் பக்கத்தில் இருந்தார்களோ?

    திருச்சி காயத்ரி மணாளன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு உண்மை புரிந்து விட்டது.
      நமது கவுண்டரின் கவுண்டச்சி கேரளா இல்லை

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  20. இவ்வளவு தொந்திரவும் நமது பணத்தை பத்திரமாக ஒரு இடத்தில் வைக்க நாம் செய்ய வேண்டியுள்ளது. அந்த காலத்தில் பாட்டியின் இடுப்பிலிருந்த சுருக்குப்பை ஒன்று செய்த வேலையை இப்படி செய்ய வேண்டியதாய் இருக்கிறது. என்ன செய்வது பத்திரமாக இருக்கவும் ஒரு பிசாத்து 4% வட்டி பெறவும் இவ்வளவு அல்லல்கள்.

    திருச்சி காயத்ரி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாட்டியின் சுருக்குப்பை பேரன்களுக்கும் பேத்திகளுக்கும் பயன்பட்டது. நமது பணம் பிசினஸ்காரர்களுக்கும் அரசியல் வாதிகளின் சித்து விளையாட்டுகளுக்கும் பயன்படுகிறது. நமக்கு 4% வட்டி. வீடு லோனுக்கு 10%-14% வரை வட்டி.
      அனாலும் ஒன்று. பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடும் நிதி நிறுவனங்களுக்கிடையே வங்கிகள் பரவாயில்லை.

      திருச்சி தாரு

      நீக்கு
  21. //உங்கள் கணக்கின் எண் - இது மிகவும் முக்கியம். தவறாக எழுதிவிட்டால் உங்கள் பணம் கோவிந்தாதான்//

    முற்றிலும் உண்மைதான்.
    எனக்கு இந்த மாதிரி ஒரு தடவை நடந்திருக்கிறது.
    20 வருடங்களுக்கு முன்பு, கம்ப்யூட்டர் எல்லாம் வங்கிகளில் செயல் படுத்தப்படாத போது.
    நண்பன் ஒருவனுக்கு கொடுத்திருந்த கடனை பேசாமல் கையில் வாங்கியிருக்கலாம். மீண்டும் ஒரு முறை வங்கிக்கு நடக்க வேண்டியிருக்குமே என்ற எண்ணத்தில் அக்கௌன்ட் நம்பரை கொடுத்து நீயே போட்டு விடு என்றேன். படிவம் எழுதும் போது நபரை தப்பாக எழுதி விட்டான். அவன் அக்கௌண்டில் போட்டு விட்டேன் என்கிறான். எனது அக்கௌண்டில் ஏறவில்லை. நேராக வங்கிக்கு சென்று மேலாளரை பார்த்து விஷயத்தை சொல்லி அவர் பிரியா மனசு பண்ணி ஒரு வார டிரான்சாக்சன்களை எல்லாம் பார்த்து இந்த படிவத்தை எடுத்து அந்த தப்பான அக்கௌன்ட் நம்பர் நபரையும் அழைத்து நாங்கள் மூவரும் மேலாளர் அறையில் அமர்ந்து பேசி கடைசியாக பிரச்னையை தீர்த்தோம். அந்த மேலாளருக்கு ஒரு பெரிய நன்றியை காணிக்கையாக்கிவிட்டு வெளியே வந்தோம்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தகைய வங்கி மேலாளருக்கு நன்றி மட்டுமா சொன்னீர்கள்.
      வீட்டுக்கு வரவழைத்து ஒரு விருந்து வைத்திருக்க வேண்டும் அல்லது குறைந்த பட்சம் ஒரு ஓட்டலுக்கு அழைத்துக்கொண்டுபோய் ஒரு டிபன் வங்கி கொடுத்திருக்க வேண்டும்.
      உதவி செய்யாமலிருந்தால் திட்டியிருப்போம் உதவி புரிந்தவருக்கு இந்த மாதிரி ஒரு நன்றியையாவது காட்டியிருக்க வேண்டாமா?

      திருச்சி காயத்ரி மணாளன்

      நீக்கு
    2. வங்கி மேலாளரின் தலையாய கடமையே தனது வங்கியின் வாடிக்கையாளர்களின் இத்தகைய குறைகளை களைவதுதான்.
      தவறு வாடிக்கையாளர் மேல் இருந்தபோதிலும் (கணக்கு எண்ணை தவறாக எழுதியது) மேலாளரிடம் இந்த நிகழ்வைப்பற்றிய செய்தி சென்றவுடன் அவர் தனது கடமைப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் செய்திருக்கிறார். இது இன்றைய நிலைமைப்படி - எந்த அரசு அலுவலர் தனது கடமையை செய்கிறார். சுத்தலில் விட்டு அலைய விட்டு காசு பார்த்து விட்டுத்தானே செய்கிறார். - ஒரு அசாதாரமான செயலாக இருக்கலாம். ஆனால் அவருக்கு ஒரு விருந்து கொடுத்து அவரது மனநிலையையும் மாற்றி விடாதீர்கள். நேர்மையாக காரியம் செய்து கொண்டிருக்கும் அவருக்கு இந்த மாதிரி லஞ்சம் வாங்கும் (சிறியதாகவே இருந்தாலும்) மன நிலையை உருவாகிவிடாதீர்கள்.
      இப்போது நாம் நமது கடமையை செய்தோம் என்று அவர் மனதில் ஒரு நிறைவு. ஒரு நல்ல உயர் அதிகாரியை பார்த்தோம் என்று உங்கள் மனதில் ஒரு சந்தோசம்.
      இப்படியே இருக்கட்டும்.
      காசு கொடுத்து விட்டால் - விருந்து வீட்டிலோ அல்லது ஓட்டலிலோ - பின்னர் அவர் தடந்து ஒவ்வொரு செயலுக்கும் இப்படி எதிர்பார்க்க ஆரம்பிப்பார் இல்லையென்றால் செயலை தாமதப்படுத்துவார். உங்களுக்கோ அவர் செய்ததுக்குத்துத்தான் பதில் செய்து விட்டோமே. கொடுத்த காசுக்குக்குத்தானே வேலை பார்த்தார். என்ற எண்ணம்.
      ஒரு நல்ல சமுதாயம் உருவாக நீங்கள் ஒரு காரணமாக இருங்கள். தயவு செய்து காசு கொடுத்து அதை கெடுத்து விடாதீர்கள்.
      கொஞ்சம் கொஞ்சமாக அப்படிப்பட்ட ஒரு நல்ல சமுதாயம் உருவாகட்டும்

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  22. SBI நவீன படுத்தப்பட்ட வங்களில் நிலை மாறி இருக்கிறது.வார நாட்களில் டோக்கேன் எடுக்க வேண்டிய நிலை இல்லை. சனிக்கிழமை நிச்சயம் டோக்கேன் எடுத்து கொண்டு மற்ற வேலையை பார்த்து விட்டு திரும்பவும் சரியாக இருக்கும் . மற்ற வங்கி சில ஆரம்ப கட்டத்தில் தான் இருக்கிறது.

    பதிலளிநீக்கு