செவ்வாய், 2 ஜூன், 2015

தீண்டாமையை வளர்ப்பது யார்?

                                 Image result for dalit colony
இந்தப் பொருளில் எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பதைப் போன்றது. கருத்துகளையும் வார்த்தைகளையும் பல முறை யோசித்து எழுத வேண்டும். இல்லாவிட்டால் கத்தி கழுத்தின் மேல் விழும். இதற்கு முன்னால் பல முறை என் கழுத்தின் மேல் கத்தி விழுந்திருக்கிறது. சாதாரணக் காயத்துடன் போய்விட்டது. அந்தக் காயங்கள் ஆறிவிட்டபடியால் இப்போது மீண்டும் கழுத்தை நீட்டுகிறேன். எத்தனை பட்டாலும் இந்த ஆளுக்கு புத்தி வர மாட்டேங்குதே என்று ஆதங்கப் படுபவர்களுக்கு ஒரு இனிமையான செய்தி. இந்த டாபிக்கில் இதுதான் என் கடைசிப் பதிவு. இனிமேல் இந்த டாபிக்கில் எழுத மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.

சமீபத்தில் சென்னை ஐஐடியில் ஏற்பட்டுள்ள ஒரு நிகழ்வைப் பற்றி ஏறக்குறைய அனைத்து முன்னணிப் பதிவர்களும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு விட்டார்கள். இந்த நிலையில் முன்னணி முதல் வரிசைப் பதிவரான நான் (சுயப் பிரதாபத்தை பொறுத்தருளவும்) என் கருத்துகளை இங்கு பதிவு செய்யாவிடில் எதிர்காலம் என்னை மன்னிக்காது. அது காரணம் பற்றியே இந்தப் பதிவு போடுகிறேன்.

தீண்டாமையைத் தோற்றுவித்தவர்கள் யார்? அதை மறையாமல் வளர்த்துக் கொண்டிருப்பவர் யார்? இவைகள் முக்கியமான கேள்விகள். இங்கு நான் என் அனுபவங்களின் மூலமாகத் தெரிந்து கொண்டவைகளை மட்டுமே பதிகிறேன். அவை என் சொந்தக் கருத்துகள். இந்தக் கருத்துகள் மேலும் சிந்தனையைத் தூண்டினால் மகிழ்ச்சி. என்னை இகழ்தலும் ஒரு வகை சிந்தனைத் தூண்டுதல் என்றே கருதுகிறேன்.

தீண்டாமை எப்படித் தோன்றியது என்று ஆதார பூர்வமாகத் தகவல்கள் இல்லை. ஆனால் இந்தியாவில் இந்த பாகுபாடு பல நூற்றாண்டுகளாக இருக்கிறது என்று தெரிகிறது. இந்த மாதிரி சாதி பாகுபாடுகளைப்பற்றிக் கூறும்போது பிராமணர்களைச் சுட்டிக்காட்டுவதுதான் வழக்கம். அவர்கள்தான் மனுதர்ம சாஸ்திரப்படி நான்கு வர்ணங்களை வகைப்படுத்தினார்கள் என்றும் இதற்கு அப்பால் பஞ்சமர்கள் என்று ஒரு சாராரை வகைப் படுத்தினார்கள் என்றும் கூறுகிறார்கள்.

பிராமணர்கள் நான்காவது வகுப்பாகிய சூத்திரர்களையும் சுமார் 100 வருடங்களுக்கு முன்பு வரை, ஏறக்குறைய பஞ்சமர்கள் மாதிரித்தான் வைத்திருந்தார்கள் என்பது பலருக்கு மறந்து போய் இருக்கலாம். ஈ.வே.ரா. என்னும் பெரியார் பிராமணீயத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியிருக்கவில்லை என்றால் இன்றும் அதே நிலைமை தொடர்ந்திருக்கும். (என் பிராமண நண்பர்கள், நான் இந்த மாதிரி சில கருத்துகளைக் கூறுவதற்கு என்னை மன்னிக்கவேண்டும்). இந்தப் பதிவு சில பொது சமூகப் பிரச்சினைகளை சுட்டிக்காட்டுவதற்கான பதிவு. இதில் தனிப்பட்ட உறவுகள் பாதிக்கப்படக்கூடாது.

பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று யார் எப்பொழுது வகைப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆனால் காலங்காலமாக அவர்களை இவ்வாறு மற்ற வர்ணத்தவர் ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். சாஸ்திரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால் பிராமணர்கள் பிரம்மாவின் தலையிலிருந்து உற்பத்தியானார்கள். க்ஷத்திரியர்கள் பிரம்மாவின் மார்பிலிருந்தும் வைசியர்கள் பிரம்மாவின் தொடையிலிருந்தும் சூத்திரர்கள் பிரம்மாவின் பாதத்திலிருந்தும் உற்பத்தியானார்கள்  என்று கூறப்படுகிறது.

இன்று  மனுதர்மத்தை ஆதரிப்பவர்கள் இதை மாற்றிச் சொல்லுகிறார்கள். வர்ணாசிரமப் பாகுபாடுகள் அவரவர்கள் செய்யும் தொழிலை வைத்துத்தான் ஏற்படுத்தப் பட்டது. வேதம் ஓதுகிறவர்கள் பிராமணன் என்று அழைக்கப்பட்டான். யுத்தம் செய்கிறவன் க்ஷத்திரியன் எனப்பட்டான். வியாபாரம் செய்கிறவன் வைசியன் எனப்பட்டான். விவசாயம், மற்ற உற்பத்தித் தொழில்களைச் செய்தவர்கள் சூத்திரர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். ஆனால் இந்த மனுதர்ம சாஸ்திரப்படி பஞ்சமர்கள் என்று சொல்லப்படும் ஐந்தாவது வர்ணத்தவர் எப்படி உற்பத்தியானார்கள், அவர்களின் தொழில் என்ன, என்று சொல்லப்படவில்லை.

பிறப்பினால் யாருடைய வர்ணமும் நிர்ணயிக்கப்படவில்லை என்று சொல்கிறார்கள். ஏதோ ஒரு காலகட்டத்தில் இந்த நிலைமை மாறி, ஒருவனுடைய வர்ணம் அவனுடைய பிறப்பினால் நிர்ணயிக்கப்பட்டது. இந்த மாற்றத்திற்கு யார் காரணம் என்று சொல்ல முடியாது என்கிறார்கள்.

இன்று இந்த ஐந்து வர்ணங்கிடையே பல சாதிகள் உருவாகி உள்ளன. அவை எவ்வாறு உருவாகின என்றும் தெரியவில்லை. ஆனால் இந்த வர்ண, சாதி வேறுபாடுகள் இந்து மதத்தினரிடையே மிக ஆழமாக வேறூன்றி இருக்கிறது. அது போக, பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று மற்ற நான்கு வர்ணத்தாரும் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் சூத்திரர்களும் ஒரு காலத்தில் தீண்டத்தகாதவர்களாகத்தான் பிராமணர்களால் நடத்தப்பட்டார்கள் என்பதை சூத்திரர்கள் மறந்து விட்டு அவர்களும் பஞ்சமர்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொல்வதுதான்.

ஆக மொத்தம் தீண்டாமையை உண்டு பண்ணி அதை வளர்ப்பது இந்த நான்கு வர்ணத்தைச் சேர்ந்தவர்கள்தான். அவர்கள் மனம் மாறி தீண்டாமையை ஒழிப்பார்கள் என்பது வெறும் கனவேயாகும். தீண்டாதவர்களின் பிரச்சினையைப் பற்றி எழுதலாம் என்றுதான் இந்தப் பதிவை ஆரம்பித்தேன். ஆனால் என் சிந்தனை என்னை வேறு ஒரு பாதையில் இழுத்துச் சென்று விட்டது. இன்றைய ஐஐடியின் பிரச்சினை தீண்டாமையின் ஒரு அங்கமே என்று கூறி என் பதிவை முடிக்கிறேன்.

35 கருத்துகள்:


 1. உண்டாக்கி வைத்தவர்கள் ஒதுங்கிப் போனார்கள்
  இப்போது அதைக் கட்டிக் காப்பவர்கள் எல்லாம்
  இடைத் தட்டில் இருப்பவர்களே
  எனெனில் அதைக் கட்டிக் காப்பதில்
  அரசியல் லாபம் இருக்கிறது

  நான் கண்ட வரையில் அனைத்து
  ஜாதி அமைப்பினரும் பொதுகூட்டத்தில்
  தங்கள் ஜாதியில் முன்னோர்கள்
  எத்தனை உயர்ந்தவர்களாய் இருந்தார்கள்
  என வீராவேசமாகப் பேசிவிட்டு
  (உண்மையில் ஒவ்வொரு ஜாதிக்கும்
  ஒவ்வொரு மன்னரோ ஒரு பெர்சனாலிடியோ
  இருந்தார்கள் என்பது நிஜமானாலும் )
  செயற்குழுவில் எங்கள் ஜாதியை
  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில்
  இணைக்கவேண்டும் எனத் தீர்மானம்
  போடுபவர்களாகவே இருக்கிறார்கள்
  என்பதுதான் நிஜம்

  பதிலளிநீக்கு
 2. ஆரம்பிக்கவே இல்லை, கட்டுரை முடிந்து விட்டது!

  :))))

  பதிலளிநீக்கு
 3. எந்த ஒரு மாற்றமும் தலைமையில் இருப்பவர்களிடமிருந்து ஆரம்பித்தால்தான் மாற்றம் ஏற்படும். ஆனால் சாதி ஒழிய வேண்டும் என்று மேல்மட்டத்தில் இருப்பவர்கள் நினைக்கவில்லை. அப்படி அவர்கள் நினைத்திருந்தால் சாதி ஒழிந்திருக்கக் கூடும். தங்களுக்கென்றே சங்கேத மொழி என்று ஏகப்பட்ட ஜபர்தஸ்து. என்னுடைய சீனியர் டெல்லியில் பட்டமேற்படிப்பை முடிக்கவிடாமல் துரத்தியடிக்கப்பட்டது என்னால் மறக்கமுடியாது. இது 1986-ல் நிகழ்ந்தது.

  பதிலளிநீக்கு
 4. முழுமையாக எழுதி முடித்து இருக்கலாமே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆரம்பிக்க நினைத்தது ஒன்று, ஆனால் எழுதியது வேறொன்று. முழுமையாக எழுத பயமாக இருந்தது, இருக்கிறது. ஏனெனில் இது மிக மிக மோசமான சப்ஜெக்ட்.

   நீக்கு
 5. இப்படியெல்லாம் வர்ணங்கள் இருக்கிறதா...? அப்படி என்றால் அவைகளே அனைத்திற்கும் காரணம்...!

  பதிலளிநீக்கு
 6. பார்ப்பணன் அல்லாத இந்துக்கள் சூத்திரன்.

  சூத்திரன் என்றால் யார்?


  சாமி கும்புட போற ”சூத்திரர்களை” பார்ப்பனர்கள் எப்படி நடத்துறாங்க. அவர்கள் பேர்ல அர்ச்சனை பண்ணும்போது ”ஏக மாதா பகு பிதா சற்சூத்திராய நமஹா”ன்னு சொல்கிறார்களே.

  அதுக்கு என்ன அர்த்தம்.”ஒரு தாய்க்கும் பல தகப்பனுக்கும் பிறந்த இந்த சூத்திரனின் வணக்கம்”.

  இந்து மதத்திற்கும், வருணாசிரமத்திற்கும் ஆதாரமான மனுதர்ம சாஸ்திரம், எட்டாம் அத்தியாயம் 415, 417 -வது சுலோகங்களில்

  சூத்திரன் என்றால் தேவடியாள் மகன் என்றும், வைப்பாட்டி மகன் என்றும் எழுதியிருப்பதோடு

  இவர்கள் வசமுள்ள பொருள்களை பலாத்காரமாகவும் பார்ப்பனர் எடுத்துக் கொள்ளலாம் என்றும், நமது பின் சந்ததிகளையும் கட்டுப்படுத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

  நீங்கள் ஒரு "இந்து" என்றால் இதுதான் இதை ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும்
  --------------------

  நான் ஒரு இந்துன்னு ஒத்துக்கிட்டேன்னா நான் சூத்திரன்னு ஒத்துக்கத் தானே வேணும்!

  அது மாத்திரமல்ல, மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை ஒத்துக்கிட்டா,

  கடவுளை ஒத்துக்கிட்டா கடவுள் சொன்னார் என்பதற்கெல்லாம் நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

  சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதற்கு நாம் கட்டுப்பட்டுத்தானே ஆகணும்!

  யாரடா சொன்னா, உன்னைத் தேவடியா மகன்னு, சூத்திரன்னு சொன்னா?

  கிருஷ்ணன் சொன்னான்! எங்கடா சொன்னான்? கீதையிலே சொன்னான்!


  கிருஷ்ணனையும் கீதையையும் செருப்பால் அடிக்கத் துணியாமல் போனால் நீ சூத்திரன் தானே! பயந்தீன்னா நீ சூத்திரனாக இருந்துக்கோ! - நூல்: --"சிந்தனையும் பகுத்தறிவும்" பக்கம் 8-11

  *************

  மனுவின் அத்தியாயம் 1 இல் முப்பத்தியோராம் சுலோகம் சொல்கிறது,

  "ப்ரஹ்மாவாகப்பட்டவர், உலக விருத்தியின் பொருட்டு தன்னுடைய முகம், புஜம், தொடை, கால் இவைகளில் இருந்து, பிராமணன், க்ஷத்ரியன், வைசியன், சூத்திரன் இவர்களைக் கிரமமாக உண்டு பண்ணினார்".

  மனுவின் பதினோராம் அத்தியாயம், எண்பத்து நான்காம் ஸ்லோகம் சொல்கிறது,

  “பிராமணன் மட்டுமே பிறவிச்சிறப்பாளன், தேவரும் மதிக்கத்தக்கவன், மனிதரின் பிறப்பால் உயர்ந்தவன், தேவமந்திரமே அவன் உயர்வுக்கு மூல காரணம், எனவே அவனது முடிவுப்படி நடக்க வேண்டும்".

  மனுவின், ஏழாம் அத்தியாயம், முப்பதியேழாம் ஸ்லோகம் சொல்கிறது,

  “அரசர்கள் பிராமணர் அறிவுரைகளைக் கேட்பது நன்று, அதுவே ஆக்கம் தரும், அவர்களின் முடிவிற்குப் புறம்பாய் நீதி வழங்கிய அரசர்கள் அழிந்தனர்”

  மனு அத்: - 9, ஸ்லோகம் - 317 சொல்கிறது:

  “வைதீகமாயிருந்தாலும், லோவ்கீகமாயிருந்தாலும், அக்னி எப்படி மேலான தெய்வமாய் இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியை இருந்தாலும், மூடனாய் இருந்தாலும், அவனே மேலான தெய்வம், அனைவரும் அவனை வணங்க வேண்டும்”

  மனு : அத் : 2 ஸ்லோகம் : 135 சொல்கிறது:

  “பத்து வயதுள்ள பிராமணனையும், நூறு வயதுள்ள க்ஷத்ரியனையும், தகப்பன் பிள்ளையாக அறிய வேண்டியது, பிராமணன் தகப்பன் மரியாதையையும், க்ஷத்ரியன் புத்திர மரியாதையையும் வகிக்க வேண்டியது".

  அத்: 10 ஸ்லோகம் 73 சொல்கிறது:

  "பிராமணனுக்குரிய தொழிலைச் செய்தாலும், சூத்திரன் ஒருக்காலமும் பிராமண ஜாதியாக மாட்டான், சூத்திரன் செய்கிற தொழிலைச் செய்ய நேரிட்டாலும் பிராமணன் சூத்திரனாக மாட்டான், ஏனென்றால் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் ஜாதி உயர்ந்தது அல்லவா? இப்படியே இந்த விஷயங்களை ப்ரஹ்மா நிச்சயம் செய்திருக்கிறார்”

  அத்: 10 ஸ்லோகம் : 125 சொல்கிறது:

  "பின்னும் மீதமான அன்னம், பழைய வஸ்திரம், நொய் அரிசி முதலிய சாரமில்லாத தானியம், பழைய பாத்திரம், எச்சில் உணவு இவற்றை சூத்திரனுக்குக் கொடுத்துப் புசிக்கச் செய்ய வேண்டும்”.

  மனு தனது அத்தியாயம் 12, ஸ்லோகம் 4 இல் இவ்வாறு சொல்கிறார்:

  "வேதத்தைக் கற்க முனையும் சூத்திரனின் காதில் ஈயத்தையும், அரக்கையும் காய்ச்சி ஊற்ற வேண்டும், மீறிப் படிப்பானேயானால், அவனது நாக்கைத் துண்டிக்க வேண்டும், வேதத்தை முழுமையாக ஒரு சூத்திரன் படித்து அறிவானேயானால் அவனைக் கண்டதுண்டமாக வெட்டிக் கூறு போடவேண்டும்".
  .

  பதிலளிநீக்கு
 7. கம்பரின் கடவுள்பக்தி சொட்டுவதா கம்பராமாயணம் பாரீர், என்று காட்டுமுகத்தான், பிழிந்து தரப்பட்டதுதான் “கம்பரசம்!”. தெய்வ காவியமாகப் போற்றப்படக் கூடிய நூல் கம்ப இராமாயணம். ஆனால் இது அத்தகையப் போற்றுதலுக்கெல்லாம் தகுதியான நூலா எனப் பார்த்தால் நிச்சயம் இல்லை என்றே தோன்றுகிறது.

  இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.

  ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.

  இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.

  இங்கே >>>கம்பரசம். கம்பராமாயணம் கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? <<< சொடுக்கி படியுங்கள்.

  பதிலளிநீக்கு
 8. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் ஜாதியைப் பற்றி – குறிப்பாக தீண்டாமை மற்றும் எஸ்சி பற்றி – பேச வரும் போதெல்லாம், எதையோ வெளிப்படையாக சொல்ல வருகிறீர்கள்; ஆனாலும் நாட்டு நடப்பு காரணமாக அப்படியே பாதியிலேயே முழுங்கி விடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. தமிழ் இளங்கோ அவர்களுக்கு,
   என் மனதில் தீண்டாமை இன்னும் ஒட்டிக்கொண்டு இருக்கிறதே. அதை நான் எவ்வாறு வெளியில் சொல்வேன்?

   நீக்கு
 9. ’தலித்துகளும் பிராமணர்களும்’ என்ற நூலை எழுதிய கே.சி. லட்சுமி நாராயணன் அவர்கள் மூத்த பத்திரிகையாளர். அவர் சொல்லும் கருத்து இது.

  ” எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் தீண்டாமையைப் பேணிப் பின்பற்றினார்கள்; அவர்களில் பிராமணர்களும் இருந்தார்கள். தமிழகத்தில் தீண்டாமையை ஒரு கொள்கையாகப் பிராமணர்கள் மட்டுமே பின்பற்றினார்கள் என்றும், இதர சாதிகளைச் சேர்ந்த எவரும் பின்பற்றவில்லை என்றும் கூறுவது சரியன்று “ –

  (நூலின் பக்கம் 5 )

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஐயா ! நீங்கள் சொல்லுவது சரியே! ஆனால், முதலில் தமிழன் அவர்கள் சொல்லியிருப்பது போல் மனு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டது அனைத்தும் அப்படியே. பிராமணர்கள்தான் முதலில் சாதியைக் கொண்டுவந்தவர்கள். அதன் பின் தான் மற்ற சாதியினரும் தங்களை உயர்வானவர்கள் என்று சொல்லிக் கொண்டு மற்றவர்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொல்ல ஆரம்பித்து இப்போது அது ஒரு ஹயரார்க்கி போல் ஆகிவிட்டது. உதாரணமாக, எஃப்சி என்பவர்கள் அதற்கு அடுத்தால் போ உள்ள பிசிக் காரார்களை தாழ்வாகக் கருதுதல். பிசி காரார்கள் எம்பிசி காரர்களைத் தாழ்வாகக் கருதுதல், எம்பிசி காரார்கள் எஸ் சி, பின்னர் எஸ் சி எஸ் டி காரார்களை என்று ஆகிவிட்டது. நாங்களே நேரில் கண்டுள்ளோம் இதனை. சமீப காலத்தில் வேண்டுமானால் பிராமணர்களும் இருந்தார்கள் எனக் கொள்ளலாம். ஆனால் ஆதி காலத்தில் அவர்கள் தான், அவர்கள் மட்டுமே மேலில் இருந்தார்கள்....அவர்களின் வரவால் தான் இந்த ஏற்றத் தாழ்வுகள் தொடங்கியது.

   நீக்கு
 10. சாதி ஒழிப்பு என்பது வெறும் ஏட்டளவிலும் பேச்சளவிலுமே இருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. சாதிகளின் பெருமை பற்றி பேசுவது 50 -60 களில் குறைந்து, ஏன் இல்லாமலே இருந்தது. ஆனால் இப்போது அது திரும்பவும் ஆரம்பமாகத் தொடங்கியுள்ளது வேதனையான ஒன்று. ஊர் கூடி தேர் இழுத்தால்தான் தேர் நகர்வது போல, அனைத்து பிரிவினரும் சாதியை புறந்தள்ளினால்தான் இதற்கு விடிவு காலம் ஏற்படும். ஏற்படுமா?

  பதிலளிநீக்கு
 11. கழுத்தை நீட்டுகிறமாதிரி நீட்டி இழுத்துக் கொண்டு விட்டீர். என் இருபது வயதுகளில் இல்லாத சாதிச் சங்கங்கள் இப்போது பல்கிப் பெருகி விட்டது , பலருக்கும் சாதியைப் பேணுவதில்தான் லாபம் என்று தெரிகிறது

  பதிலளிநீக்கு
 12. அய்யா,
  தற்போதைய நிலைமை வேறு. யாரும் தீண்டாமையை போற்றுவதில்லை, பின்பற்றுவதும் இல்லை. எங்கோ சில இடங்களில் எட்டா மூலையில் நடப்பது உண்டு. அது இரு சாரரின் அறியாமை காரணமாக. மற்ற இடங்களில் அப்படி யாரும் செய்வதில்லை.
  சொல்லப்போனால் ஓட்டலில் சமைப்பவர் யாரென்று தெரிந்து கொள்ளாமலே எல்லோரும் சாப்பிட்டு வெளியேறுகின்றனர். இப்போது எல்லோருக்கும் ஓட்டம், வாழ்க்கையில் முன்னேற்றம் தான் முக்கியம். இட ஒதுக்கீடு வந்தபின்னர் யாரும் அதை எதிர்த்துப் போராடவில்லை. அதை விட அழகான வழியில் தங்களை முன்னேற்றிக் கொண்டு இட ஒதுக்கீட்டை அனுமதிக்கும் ஒட்டு மொத்த அரசு இயந்திரத்தையே ஒதுக்கிவிட்டார்கள். இளைஞர்களுக்கு முன்னேற்றம் முக்கியம். அவனவன் தன்னை முன்னேற்றிக் கொண்டு எங்கோ போய்விட்டனர்.
  வெறும் அரசியல் வாதிகள்தான் இதனை ஊதிப் பெருக்கிக் கொண்டிருக்கின்றனர். அதை அறியாத பாமரர்கள் இடஒதுக்கீடும் அரசியல் கட்சிகளும்தான் தங்களது மோட்சத்திற்கு வழி வகுக்கும் என நம்பி மோசம் போய்க்கோண்டிருக்கின்றனர். தங்களை முன்னேற்ற அவர்களோ அவர்களது மேல் கரிசனம் கொண்டவர்களோ எந்த முயற்சியும் செய்வதில்லை. ஏனேனில் இந்தப் பாகுபாடு இருந்தால்தான் அவர்கள் பிழைப்பை நடத்தமுடியும்.

  இடஒதுக்கீடும் பெற்றார்களே தவிர இப்போது அரசுப் பணிகளில் outsourcing நுழைந்து விட்டது. அழகாக recruitment ஐ யும் கழட்டி விட்டுவிட்டார்கள். இதையும் திராவிடக் கட்சிகள்தான் செய்தார்கள்.

  இப்போது இவை அத்தனையும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. எனவேதான் துணிந்து communal force என தன்னை வெளிக்காட்டிக் கொண்ட கட்சிக்கே அது developmet ஐ தன் அஜென்டாவில் வைத்து நின்றதால் முழு ஆதரவு இளைஞர்களிடையே கிடைத்திருக்கிறது.

  கட்சியும் அதன் கொள்கையும் தன்னை முன்னேற்றும் என்று ஒருவன் காத்திருந்தானானால் அவனால் கட்சியைத்தான் முன்னேற்ற முடியுமே தவிர தன் சுய முன்னேற்றத்தை அவன் அடைய முடியாது. முன்னேறாத ஒருவன் பிற்படுத்தப் பட்டவனே..

  இந்தக் காலத்தில் பணம் இல்லாதவன் எல்லோரும் (தீ) அண்டத் தகாதவர்களாய்த்தான் இருக்கிறார்கள். இது கண்கூடு.

  பதிலளிநீக்கு
 13. அழகாக நீங்கள் பேச ஆரம்பிப்பது போல ஆரம்பித்து மற்றவர்களை பேசவைத்து விட்டீர்கள்.

  இதுவும் ஒரு டெக்னிக்கோ?

  ஒரு நகைச்சுவைக்காக சொன்னேன். நீங்கள் பேச ஆரம்பித்து பேசி முடியவில்லையென்றாலும் சொல்லவேண்டியதை தெளிவாய்ச் சென்று சேர்க்கும்படிதான் உங்கள் பதிவு இருக்கிறது. தலைப்பே எல்லாவற்றையும் சொல்லிவிட்டதே..!

  வாழ்த்துக்கள்.

  GOD BLESS YOU

  பதிலளிநீக்கு
 14. //இதற்கு முன்னால் பல முறை என் கழுத்தின் மேல் கத்தி விழுந்திருக்கிறது. சாதாரணக் காயத்துடன் போய்விட்டது. அந்தக் காயங்கள் ஆறிவிட்டபடியால் இப்போது மீண்டும் கழுத்தை நீட்டுகிறேன்.//

  அடடா, கழுத்து ஜாக்கிரதை சார்.

  பதிலளிநீக்கு
 15. பாதை மாறிப் போகும்போது ஊரும் வந்து சேராது.

  பதிலளிநீக்கு
 16. ஐயா! என்ன ஐயா இதை நீங்கள் தைரியமாக எழுதி இருக்கலாமே! உங்களைப் போன்ற அனுபவம் இதை எழுதி நாங்களும் பெற்றுக் கொண்டோம். நாங்கள் எங்கள் வலைத்தளத்தில் பல முறை எழுதியாகிவிட்டது. வர்ணாசிரம தர்மமே தேவை இல்லாத ஒன்று அது தொழில் ரீதியாக இருந்தாலும் சரி, பண்டைய படி இருந்தாலும் சரி....கல்வி கற்பதற்கோ, தொழில் செய்வதற்கோ எதற்கு இந்தப் பிரிவுகள் யார் வேண்டுமானாலும் கற்கலாம் தொழில் செய்யலாம்...

  ஏன் நீங்கள் முடிக்காமல் விட்டீர்கள் ஐயா?! சொல்ல வந்ததைச் சொல்லி இருக்கலாமே! பின்னூட்டங்கள் நீங்கள் சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டனவோ?!!

  பதிலளிநீக்கு
 17. சாஸ்திரங்களில் சொல்லப்படுவது என்னவென்றால் பிராமணர்கள் பிரம்மாவின் தலையிலிருந்து உற்பத்தியானார்கள். க்ஷத்திரியர்கள் பிரம்மாவின் மார்பிலிருந்தும் வைசியர்கள் பிரம்மாவின் தொடையிலிருந்தும் சூத்திரர்கள் பிரம்மாவின் பாதத்திலிருந்தும் உற்பத்தியானார்கள் என்று கூறப்படுகிறது.//

  மிக மிக மட்டமான ஒரு கருத்து....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கந்தசாமி சார் முழுமையாக எழுதாததே நல்லது. சாதி என்ற சப்ஜக்ட் எத்தனை எதிர்வினைகளைக் கொண்டுவருகிறது. நிற்க,

   'ப்ராம்மனோஸ்ய முகமாசி பாகூரா ஜன்யக்ருதக ஊரூததஸ்ய யத்வைஸ்யஹ பத்ப்யாகும் ஷூத்ரோ அஜாயத' என்பது புருஷஸூக்தத்தின் ஒரு பகுதி.

   இதுவெல்லாம் நேரடியாகப் புரிந்துகொள்ளக்கூடிய நேர் அர்த்தம் தரும் வார்த்தைகளல்ல என்பது என்னுடைய எண்ணம். அதனால் இந்தக் கருத்தால் மனக்காயம் அடையத் தேவையில்லை.

   கந்தசாமி சார் கட்டுரையைக் கால் குறையாக (அரைகூட அவர் வரவில்லை) எழுதினதே உணர்வுகளைத் தூண்டும். ஏனென்றால், சாதி இல்லை என்று எண்ணுபவனும், சொல்பவனும்கூட, சாதியைத் தன் உதிரத்தில் வைத்துள்ளான். அதனால்தான், மேல்சாதி என்று எண்ணும் சாதியில் பெண் எடுப்பதைக் கண்டிக்காத தமிழன், கீழ்சாதி என்று எண்ணுவதில் பெண் எடுப்பதைக் குற்றமாகக் கருதுகிறான். (vice versa).

   When our city grows into real Metro politan (and our villages grow to that level in few centuries), this thinking will die. மும்பையிலோ அல்லது தில்லியிலோ சாதீயக் கண்ணோட்டம் அவ்வளவு இருக்காது, இல்லை என்று 'நினைக்கிறேன்.

   'குலத்தளவே ஆகுமாம் குணம்' என்பது பார்ப்பனர்கள் சொன்னதல்ல. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று சொன்னது ஆரியர்கள் அல்ல.

   நீக்கு
 18. //...அவர்கள்தான் மனுதர்ம சாஸ்திரப்படி நான்கு வர்ணங்களை வகைப்படுத்தினார்கள் ...//

  இது சரியில்லை. மனு என்ற பிராமணரின் காலம் இந்திய வரலாற்றின் இடைக்காலம். நால்வகை வருணப்பாகுபாடு (அதாவது வருணாஷிரதர்மம்) ஆதிகாலத்திலேயே கீதையில் சொல்லப்பட்டது. கீதை கிருஷ்ணரால் அருளப்பட்டது. அவர்தான் // நானே மனிதர்களை நால்வகை வருணங்களாகப்பிரித்தேன். அதில் பிராமணர் என் தலையிலிருந்தும், ஷத்திரியர் என் தோள்களிலிருந்தும் வைசியர் என் வயிற்றுப்பாகத்திலிருந்தும், சூத்திரர் என் தொடைகளிலிருந்தும் உருவாக்கினேன் என்றார். பஞ்சமர் என்போர் ஐந்தாவது என்ற பொருளைத்தரும். அவர்களைப்பற்றி கிருஸ்ணர் ஒன்றும் சொல்ல்வில்லை என்பதிலிருந்து அவர்கள் இந்த வருணாஷிரதர்மத்துக்குள் வரவில்லை. சமூகம் இத்தர்மத்தை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது. எனவே இச்சமூகத்துக்குள் வராதவர் சண்டாளர்கள் என வடமொழியில் அழைக்கப்பட்டு மக்கள் வாழும் இடத்துக்கு வெளியிலே வைக்கப்ப்ட்டு அவர்களைக்காண்பதே தீட்டு என்னும்படி ஆக்கப்பட்டார்.

  மனு இதைத்தான் விரிவுபடுத்தி, பலபல தண்டனைகளை சண்டாளர்களுக்கு வழங்கினார் அதாவது அவர்கள் சமூகத்துக்குள் வந்து மற்றவருக்கு இடைஞ்சல்கள் பண்ணீனால். பிராமணர்களை மென்மேலும் உயர்த்த மற்றவருக்குத் தண்டனைகள் வழங்கினார். குறிப்பாக, சூத்திரர்களுக்கு. எனவே, மனு இல்லாததைச்செய்யவில்லை; சொன்னதையே விரிவுபடுத்தினார்.

  வருணப்பாகுபாடுகள் செய்யும் தொழிலை வைத்துதான் என்பது, முட்டையிலிருந்து கோழி வந்ததா; கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற கோனன்ரம் போலத்தான். ஒன்றிலிருந்து மற்றொன்று வந்தது என்பது மட்டும் உண்மை. முதலில் ஒன்று எனறவொன்று இல்லாதிருந்தால், மற்றொன்று என்ற்வொன்று வராமலிருந்திருக்கும்.

  ஆக, அனைத்துக்கும் கீதையில் அவ்வரிகளே காரணம்.

  இன்று தீண்டாமை இல்லையென்றும் தான் பார்க்கவில்லையென்றும் இங்கெழுதும் வெட்டிப்பேச்சு என்பவர் இருநாளைக்கு முன் போட்ட பதிவே ஒரு தீண்டாமைச்செயலைப் பற்றித்தான் என்று எப்படி அவர் மறைக்கப்பார்க்கிறாரிங்கே. அவர் பதிவில் சொல்கிறார்: பம்பாயில் ஒரு ஐயர் பெண் தன் மகனுக்கு வரன் தேடும் விளம்பரத்தில் எஸ்ஸி/எஸ்டி தவிர்க்க என்று போடுகிறார். எல்லாரும் புனிதர்கள்; இவர்கள் மட்டும் தீண்டத்தகாதவர்கள் என்று இன்றும் இருக்கிறதை எப்படி அவர் மறைக்கப்பார்க்கிறார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் பதிவைச் சரியாகப் புரிந்து கொள்ளாமைக்கு நான் பலியாவதா?

   நான் சொன்னது வேறு நீங்கள் இங்கு காட்டியிருப்பது வேறு..நல்ல அரசியல் செய்திருக்கிறீர்கள்.

   நான் மனத் தேர்வுகளைப் பற்றித்தான் எனது பதிவில் பேசியிருக்கிறேனே ஒழிய அய்யா பேசியது போல் தீண்டாமையைப் பற்றி பேசவில்லை.

   சுட்டி தருகிறேன். மறுபடி நிதானமாய்ப் படித்துப் பாரும்.

   http://vettipaechchu.blogspot.com/2015/05/scst-please-excuse.html

   நீக்கு
 19. தமிழகத்தில் தீண்டாமை வெளிப்படையாக அனுசரிக்கப்படவில்லை. அதற்காக, மக்கள் மனமாறிவிட்டார்கள் என்று பொருளன்று; சட்டங்கள் தண்டிக்குமென்பதால் ஏன் வம்பு என்று போய்விடுகிறார்கள். சட்டத்தைக்கண்டு அஞ்சாதவர் தீண்டாமையை விடவில்லை எனபது பெரியகுளத்தில், ஒரு மாரியம்மன் கோயிலில் பூஜாரியாக இருந்த தலித்தை மிரட்டி அவனைத்தற்கொலை செய்யச்சொன்ன சம்பவம் ஒரு சாட்சி. அச்சம்பவத்தில் ஓ பி யிந்தம்பியும் உண்டு என்ற பேச்சால் ஜெயலலிதா அவரை உடனடியாக பெரியகுளம் நகராட்சி தலைவர் பதவியிலிருந்து விலக்கினார். இருவாரங்களுக்கு முன் நடந்தது.

  தீண்டாமை இல்லாததற்கு இன்னொரு காரணம் தலித்துக்கள் எதிர்க்கத் தொடங்கியதால். அக்காலத்தில் தீண்டாமையை அவர்கள் எதிர்க்கமுடியவில்லை. இக்காலத்தில் செய்யப்போய், கொடியங்குளம், முதுகுளத்தூர் கல்வரங்கள், விழுப்புரம் கலவரங்கள் கீழ்வெண்மணி எரிப்பு நஎன்று போகின்றன‌. இக்கலவரங்களுக்கு அடிப்படை சட்டங்களுக்குப்ப்யப்படாமல் தீண்டாமையைப்பிரயோகிக்க அதைத் தலித்துக்கள் எதிர்த்தலே காரணம். இங்கே தீண்டாமை இல்லையென்று பின்னூட்டமிட்ட‌ வெட்டிப்பேச்சு என்பவர் சற்று உலாவரவேண்டும். இன்று அரசுப்பதவியைத்தவிர வேறெந்த பதவியிலும் தலித்துக்கள் சேர்க்கப்படுவதில்லை. அவர்கள் மீண்டும் தங்கள் துப்புரவுத்தொழிலுக்கும் மற்ற ஏவல் தொழில்களுக்கும்போவதையே சமூகம் விரும்புகிறது. அரசு கட்டாயப்படுத்தினாலொழிய அவர்களைத்தனியார் வேலைக்கெடுக்க மாட்டார்கள். அப்படிக்கட்டாயப்படுத்தினால்...இங்கும் இடஒதுக்கீடா இவர்களுக்கு என்று கேலி பேசுவார்களில்லையா? தனியாருக்கு இலாபம் முக்கியம்; சமூக சேவையன்று.

  கேரளத்தில் தீண்டாமையில்லை இன்று. காரணம் மக்களின் கம்யூனிச சிந்தனையே. ஆனால் அக்காலத்தில் தமிழ்ப்பார்ப்ப்னரைவிட நம்பூதிரிப்பார்ப்பனர்கள் கடுமையாக இருந்தார்கள். (பாரதியாரின் மலையாளம்-1; மலையாளம்-2 என்று இருகட்டுரைகளைப்படிக்கவும்) பெரியாரைவிட தீவிர எதிர்ப்பாளர்கள் (நாராயணகுரு) நம்பூதிரிகளை ஒரு வகைப்படுத்த அவர்கள் அடங்கினார்கள். வடமாநிலங்களில் இன்றும் தீண்டாமை கனஜோராகப் போய்க்கொண்டிருக்கிறது. முதல்வர் மாஜியின் மேலே அது ஏவப்படுகிறதென்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மாஜி வந்துபோன இடத்தை சுத்திகரணம் பரிகாரம் பண்ணுகிறார்கள்.

  பாதுகாக்கும் சட்டங்கள் இல்லாவிட்டால், அரசு இட ஒதுக்கீடு இல்லாவிட்டால், அனைத்து தலித்துக்களும் தங்கள் பரம்பரை தொழில்களுக்கே போக வேண்டும். அது தீண்டாமையில் கொண்டுதான் முடியும். மக்கள் ஓபனாக எந்தவொரு இரக்கமுமில்லாமல் அவர்களை விலங்குக்களாக நடாத்தத்தொடங்குவார்கள்: ஆதிகாலத்தில் அப்படித்தான் நடந்தது.

  பதிலளிநீக்கு
 20. ஜாதிப்பிரச்னைகள் தான் எப்போதுமே ஒழிக்க‌ முடியாத பிரச்சினை! தீண்டாமையை விட இது தான் மிகவும் முக்கியமான பிரச்சினை. தீண்டாமை இப்போது பெரும்பாலான இடங்களில் ஒழிந்து விட்டது என்று கூட சொல்லலாம்.
  என் மாமனாருக்கும் மாமியாருக்கும் பெரியார் தான் திருமணம் செய்வித்தார். அவர்களை ஒட்டியே என் கணவர் உள்பட அனைத்துப்பிள்ளைகளும் பெரியாரின் பல கொள்கைகளை பின்பற்றி வாழ்ந்து வருகிறார்கள். சமையல் செய்து முடிக்கும்போது, வேலை செய்யும் பெண் வேலையை முடித்துக் கிளம்பி விட்டால் அவ்ளை உட்கார வைத்து சுடச்சுட முதல் சாப்பாடு அவளுக்குப்போடுவோம்.

  எல்லாவற்றிற்கும் கொஞ்சம் மனசு வேண்டும், அவ்வளவு தான்!

  பதிலளிநீக்கு
 21. ஐயா...

  "எல்லாச் சாதிகளைச் சேர்ந்தவர்களும் தீண்டாமையைப் பேணிப் பின்பற்றினார்கள்; அவர்களில் பிராமணர்களும் இருந்தார்கள். தமிழகத்தில் தீண்டாமையை ஒரு கொள்கையாகப் பிராமணர்கள் மட்டுமே பின்பற்றினார்கள் என்றும், இதர சாதிகளைச் சேர்ந்த எவரும் பின்பற்றவில்லை என்றும் கூறுவது சரியன்று “

  உண்மை. தீண்டாமையை கிராமத்தில் ஊதி ஊதி வளர்த்தது மற்ற BC/MBC ஜாதிக்காரர்கள் தாம். அவர்கள் தெருக்களில் கீழ்ஜாதி என ஒதுக்கப்பட்டோர் செருப்பு போட்டு நடக்கவோ, மேலே துண்டு போட்டு நடக்கவோ கூடாது. இவ்வளவு ஏன், அவர்கள் வீட்டின் பின்புற வழியாகத்தான் ஏதேனும் வேலை இருத்தாலும் அனுமதிக்கப்படுவர். மனு நீதியோ, பிராமணர்களின் சதியோ, அல்லது மற்ற ஜாதிக்காரர்களின் ஆதிக்கமோ, 2000 ஆண்டுகளாக கஷ்டப்படும் நம்மைப்போன்ற அந்த மனிதர்களுக்கு என்ன தான் சலுகைகள் கொடுத்தாலும் ஈடாகாது. ஆனால், ஊழலில் திளைக்கும் அரசியல்வாதிகள் அந்தப் பாவப்பட்ட மனிதர்களுக்கான சலுகைகளையும் விட்டு வைக்கவில்லை. SC/ST மாணவர்களுக்கான விடுதியின் நிலைமையைப் பார்த்தால் தெரியும்.

  கடைசியாக ஒன்று மட்டும் நிச்சயம்: அனைத்து வர்ண (ஜால) மனிதர்களும் அந்த ஒரு குறிப்பிட்ட "வர்ண" மக்களுக்கு செய்த அநீதி மனிதத்தன்மை அற்றது. அவர்களில் ஒருவரான நான் அதற்கு வெட்கப்படுகிறேன்.

  அன்புடன்,
  சங்கர நாராயணன். தி

  பதிலளிநீக்கு
 22. அமெரிக்கக் கண்டத்தை ஐரோப்பியர்கள் கைப்பற்றி அங்குள்ள மண்ணின் மைந்தர்களான செவ்விந்தியர்களை வெற்றிக் கொண்டு ஆட்சி அமைத்தது போல.அமெரிக்கக் கண்டத்தில் ஐரோப்பியர்கள் வந்த பின் தம் மதம், மொழி, பண்பாட்டை அனைவர் மீதும் திணித்தனர். இதனால் பெருமளவிலான செவ்விந்திய மக்கள் தம் மொழிகளை, மதங்களை எல்லாம் மறந்து ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழிகளைப் பழகிக் கொண்டனர். இந்நிலையில் ஐரோப்பியர்களில் பணக்காரர்கள், வசதியானவர்கள் ஆட்சியாளர்களாக, அதிகாரிகளாக, மதக்குருக்களாக, வணிகர்களாக இருந்து கொண்டனர். ஐரோப்பியர்களில் ஏழைகள், திருடர்கள், கூலித் தொழிலாளிகள் செவ்விந்தியர்களோடு கலந்து மெசிட்டோ என்ற கலப்பினம் ஒன்றை உருவாக்கினார்கள். ஐரோப்பியர்களோடு கலப்படையாமல் கிராமப் புறங்களில் பலர் வாழ்ந்தனர். சுத்தமான வெள்ளையின ஐரோப்பியர்கள் மேலடுக்கில் வைக்கப்பட்டனர். கலப்புடைய வெள்ளையினத்தவர் அடுத்த அடுக்கில் வந்தனர். கலப்பே இல்லாத செவ்விந்தியர் புறக்கணிக்கப்பட்டு காடுகளில், மலைகளில், கிராமங்களில் வாழ்ந்தனர்.

  ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவை இரான், ஆப்கானிஸ்தான், கஜகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், அர்மீனியா, ஜோர்ஜியா உள்ளடங்கிய மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து வந்த ஆர்யர்கள் வட இந்தியாவை கைப்பற்றி அங்கிருந்த ஆதிவாசிகளை தோற்கடித்து ஆட்சி செய்யத் தொடங்கினர். இவர்களில் பார்ப்பனர் ( மதகுருமார் ), ஷத்திரியர் ( அரசர்கள், படைவீரர்கள் ), வைஷியர் ( வணிகர், தொழிலாளிகள் ) என்போராக சமூகத்தை பிரித்தனர். ஆதிவாசிகளை கொத்தடிமைகளாக கைப்பற்றி வேலை வாங்கினார்கள். காலப் போக்கில் ஆதிவாசிகளோடு வந்தேறிய ஆர்யர்களில் சிலர் கலப்புற்றனர். இதனால் உருவாகிய கலப்பினத்திற்கு உபானயனம் செய்ய மறுத்தனர் ஆர்யர்கள். அவர்களே சூத்திரர்கள் ( கள்ள உறவில் பிறந்தவர் ) என்ற பொருளில் ஒதுக்கப்பட்டனர். இந்த சூத்திரர்களே வேளாண்மை, கால்நடை வளர்த்தல் என பதினெட்டு வகை தொழில்களையும் செய்தனர்.

  இந்த நான்கு வருண மக்களைச் சேராமல் ஆதிவாசிகள் சிலர் காடுகள், மலைகள், கிராமங்கள் எனப் பல பகுதிகளில் வாழ்ந்தனர். இவர்களை அவர்ண மக்களாக கருதினார்கள் ஆர்யர்கள். ஒருக் காலத்தில் ஜாதிக் கொடுமைகளை கண்டித்து சூத்திரர்களில் இருந்து சிரமணர் என்ற பிரிவு உருவாகி போராடியது. இந்த சிரமணத்தில் இருந்து ஜைனம், பௌத்தம் முதலிய மதங்கள் உருவாகின. இவர்கள் ஜாதிகளை அழித்து அனைவரும் பொது என்ற கொள்கையோடு வெற்றியும் கண்டார்கள். வட இந்தியா முழுவதும் ஜைனம், பௌத்தம் பரவியது. இக்காலக் கட்டத்தில் ஜாதிகள் மறைந்து எல்லா மக்களும் ஒருவரோடு ஒருவர் திருமணம் செய்து கொண்டு கலப்புற்றனர். கிட்டத்த கிமு 600 முதல் கிபி 100 வரை இது தொடர்ந்தது.

  ஆனால் தமது ஆதிக்கம் கைநழுவிப் போகின்றதே என எண்ணிய பார்ப்பனர்கள், ஜைன, பௌத்த மடங்களில் சேர்ந்து அந்த மதங்களை பல பிரிவுகளாக்கி ஒருக் கட்டத்தில் அதை முற்றாக அழித்தனர். அத்தோடு நிற்காமல் இந்த மதப் பிரிவுகளில் இருந்த பல பழக்க வழக்கங்கள், தத்துவங்கள் ஆகியவற்றை திருடி ஏற்கனவே தாம் கொண்ட நான்கு வேதங்களுக்கு விளக்கவுரை என்ற பெயரில் உபநிடதங்கள் போன்றவைகளை உருவாக்கினார்கள். ஜைன, பௌத்த மதம் உருவாக்கிய ஜாதக் கதைகளை திருடி இதிகாசங்கள், பதினெட்டு புராணங்கள் என மாற்றினார்கள்.

  பதிலளிநீக்கு
 23. இந்நிலையில் குப்தர்களது ஆட்சி தோன்றியது. பார்ப்பன மதம் எழுச்சி கொண்டது. ஜைன, பௌத்த மதங்கள் தென்னிந்தியாவுக்கும், இலங்கை, சீனா எனப் பரவி அங்கே போயின. வட இந்தியாவில் ஜைன, பௌத்தம் வீழ்த்தப்பட்டு. மீண்டும் மக்கள் நான்கு வருணங்களாக பிரிக்கப்பட்டனர். இம்முறை இதற்கு சட்ட வடிவம் வழங்கப்பட்டது. மனுஸ்மிருதி என்ற நூலாக அதனை எழுதி குப்தர்கள் இந்தியா முழுவதும் பரப்பினார்கள். மனுஸ்மிருதி அத்தோடு நிற்காமல் ஆதிவாசி சமூகங்களை தீண்டத்தகாதோர் என்றாக்கியது. ஏனெனில் அவர்கள் பலரும் பௌத்த, ஜைன, ஆதிவாசி மதங்களைப் பின்பற்றினார்கள். அதன் பின்னரே ஜாதி வலுத்து வலுத்து கடந்த நூற்றாண்டு வரை அதே கட்டுக்கோப்பில் தொடர்ந்தது.

  சென்ற நூற்றாண்டில் ஐரோப்பியர் வருகை, உலகளாவிய கல்வி, இடதுசாரி, சோசலிச, திராவிட என பல இயக்கங்களின் எழுச்சியால் பல தலைவர்கள் போராடத் தொடங்கினார்கள். காந்தி, பூலே, அம்பேத்கர், பெரியார் எனப் பலரும் ஜாதிக்கு எதிராக போராடியதன் விளைவாக. ஓரளவு அதன் வடிவம் மாற்றம் கண்டுள்ளது. ஆனாலும் இந்திய மக்கள் பெரும்பாலானோர் பார்ப்பன மதமான இந்து மதத்தை பின்பற்றுவதால் ஜாதியும், தீண்டாமையும் முற்றாக ஒழிக்கப்பட இயலாமல் இருக்கின்றது.

  அதாவது ஆன்மிகம், பண்பாடு என்ற வடிவில் ஜாதியமும், தீண்டாமையும் கலந்து கட்டி வழங்கப்பட்டு வருவதால் அதனை ஒழிக்கவோ அழிக்கவோ இயலாமல் இருக்கின்றது. வெட்ட வெட்ட வளருவது போல ஒரு இடத்தில் வெட்டினால் மறு இடத்தில் வேறொரு வடிவத்தில் வருகின்றது. இதை ஒழிக்க அனைவரும் ஜாதி மாறி தொடர்ந்து ஒரு மூன்று தலைமுறைக்கு கலியாணங்கள் செய்து வர வேண்டும். கிமு 600 முதல் கிபி 100 வரையிலான பௌத்த ஜைன மதக் காலங்களில் இது நிகழ்ந்தது. அவ்வாறு தொடர்ந்து சில நூறாண்டுகள் நிகழ்ந்தால் ஜாதியம் ஒழியும்.

  பதிலளிநீக்கு
 24. தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. பதிவின் ஆரம்ப வரிகள் தற்கால நிலையை தெளிவாக்கிவிட்டது. இதற்கு முடிவு காணமுடியாது. நமக்குத் தேவை கழுத்து.

  பதிலளிநீக்கு
 25. பல காரசாரமான கருத்துகள் பதிவாகியுள்ளன. யார் மறுத்தாலும் இன்றும் இந்தியா முழுவதும் தீண்டாமை அனுசரிக்கப்பட்டுத்தான் வருகிறது. இல்லையென்று மறுத்தாலும் உண்மை அதுவே.

  எங்கள் வீட்டில் தீண்டாதவர் ஒருவரை வீட்டுக்குள் நடமாட அனுமதித்திருக்கிறோம். அதனால் மட்டுமே நான் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை என்று சொல்ல முடியாது.

  அவர்கள் சமைத்த உணவை மேல் ஜாதியினர் சாப்பிடுவதில்லை. அவர்கள் வீட்டுக்குள் போவதில்லை. அவர்களை சமமாக நடத்துவதில்லை. அவர்களை மற்ற சாதியினர் வசிக்கும் பகுதிகளில் வசிக்க விடுவதில்லை. அவர்கள் சொந்தமாக நிலம் வாங்க முடிவதில்லை. இன்றும் அவர்கள் தங்களுக்கென்று உண்டான சேரிகளில்தான் வசிக்க முடிகிறது. அவர்களால் தொழில் வியாபாரங்களில் ஈடுபட முடிவதில்லை.பள்ளிகளில், அலுவலகங்களில், பஸ்களில், ரயில்களில், மற்றும் பல பொது இடங்களில் அவர்களை வித்தியாசமாகத்தான் நடத்துகிறார்கள்.

  இது கொடுமைதான். ஆனால் இதில் இரு சாராருக்கும் பங்கு உண்டு.
  தலித்துகள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைகளை முழுமையாகப் பயன்படுத்தி தங்கள் பொருளாதார நிலையை, தங்கள் பழக்க வழக்கங்களை மேம்படுத்தினால் ஒழிய அவர்களுக்கு விடிவு ஏற்படுமா என்பது சந்தேகமே.
  தலித் சமூகத்திலிருந்து மேலுக்கு வரும் ஒரு சிலர் தாங்கள் அந்த சமூகத்திலிருந்தே விலகிக்கொண்டுள்ளார்கள். ஏன் அவர்கள் இந்த சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு பாடுபடக்கூடாது என்று தெரியவில்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "தலித் சமூகத்திலிருந்து மேலுக்கு வரும் ஒரு சிலர் தாங்கள் அந்த சமூகத்திலிருந்தே விலகிக்கொண்டுள்ளார்கள். ஏன் அவர்கள் இந்த சமூகத்தினரின் முன்னேற்றத்திற்கு பாடுபடக்கூடாது என்று தெரியவில்லை?"

   இது மிகவும் கவனிக்கத்தக்க ஒரு கருத்து. ஒரு தலித் தனக்கான இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொண்டு முன்னேறுகிறான். அதற்கப்புறம் தனது சமூகத்தை விட்டு ஒரு முன்னேறிய சமூகத்தின் பெண்/ஆண் அய் மணம் செய்துகொண்டு புரட்சி செய்தேன் என்கிறான். அவனது சமூகத்தைப் பற்றி அவன் கவலைப்படுவதாய்த் தெரியவில்லை. கேட்டால் காதல் என்று முரசு கொட்டுகிறார்கள். காதல் முன்னேறிய சமூக மக்களைச் சார்ந்தே இவர்களுக்கு வருவதால்தான் அந்தக் காதலைப்பற்றியே சந்தேகம் வருகிறது.

   இங்கு உண்மையான காதலும் இல்லை. சமூகத்தை முன்னேற்ற வேண்டும் என்ற பொது சிந்தனையும் இல்லை.

   இதை எங்கே போய் சொல்வது. இப்போது இதைச் சொன்னதற்கே நான் சாதி மறுப்பு மணத்திற்கு எதிரி என்றோ அல்லது சாதிகளை போற்றிப்பாதுகாக்கும் பிற்போக்குவாதிஎன்றோ ஒரு பட்டம் கிடைக்கும்.

   சுயமாய் சிந்திப்பவர் எவரும் கிடையாது. அவ்வளவுதான்.

   நீக்கு
 26. அன்புடையீர்! வணக்கம்!
  அன்பின் அய்யா திரு. G.M. பாலசுப்பிரமனியன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.
  இணைப்பு: http://blogintamil.blogspot.fr/

  நன்றி!
  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com
  FRANCE

  பதிலளிநீக்கு
 27. வலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா உங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களது தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.
  http://drbjambulingam.blogspot.com/
  http://ponnibuddha.blogspot.com/

  பதிலளிநீக்கு