வியாழன், 13 ஆகஸ்ட், 2015

என் அப்பா எனக்குக் கொடுத்த தண்டனை


                                                           Image result for நன்னூல்
நான் சிறுவனாக இருந்தபோது தவறுகள் செய்தால் என் அப்பா எனக்கு கொடுக்கும் தண்டனை என்ன தெரியுமா? எங்களை வீட்டில் தேவாரம் திருவாசகம் முதலான புத்தகங்கள் இருந்தன. அவற்றில் நன்னூல் என்று ஒரு பத்தகமும் உண்டு. அது என்ன, அதன் முக்கியத்துவம் என்ன என்ற விவரங்கள் எல்லாம் அறியாத காலம் அது. அதை எடுத்து ஆரம்பத்திலிருந்து 25 வரிகள் படித்து ஒப்புவிக்கவேண்டும் என்று சொல்லிவிடுவார்.

அந்த வரிகள் வருமாறு.

சிறப்புப் பாயிரம்

மலர் தலை உலகின் மல்கு இருள் அகல
இலகு ஒளி பரப்பி யாவை உம் விளக்கும்
பரிதி இன் ஒரு தான் ஆகி முதல் ஈறு
ஒப்பு அளவு ஆசை முனிவு இகந்து உயர்ந்த
அற்புத மூர்த்தி தன் அலர்தரு தன்மையின்
(5)
மன இருள் இரிய மாண் பொருள் முழுவது உம்
முனிவு அற அருளிய மூ அறு மொழி உள் உம்
குண கடல் குமரி குடகம் வேங்கடம்
எனும் நான்கு எல்லையின் இரும் தமிழ் கடல் உள்
அரும் பொருள் ஐந்து ஐ உம் யாவர் உம் உணர
(10)
தொகை வகை விரியின் தருக என துன்னார்
இகல் அற நூறி இரு நிலம் முழுவது உம்
தனது என கோலி தன் மத வாரணம்
திசை தொறு உம் நிறுவிய திறல் உறு தொல் சீர்
கரும் கழல் வெண் குடை கார் நிகர் வண் கை
(15)
திருந்திய செங்கோல் சீயகங்கன்
அரும் கலை விநோதன் அமரா பரணன்
மொழிந்தனன் ஆக முன்னோர் நூலின்
வழி ஏ நன்னூல் பெயரின் வகுத்தனன்
பொன் மதில் சனகை சன்மதி முனி அருள்
(20)
பன்ன அரும் சிறப்பின் பவணந்தி
என்னும் நாமத்து இரும் தவத்தோன் ஏ 

இதில் கொஞ்சம் சந்தி பிரித்து எழுதியிருக்கிறது. நான் படித்த புத்தகத்தில் இவ்வாறு சந்தி பிரிக்கப்படவில்லை. அந்தத் தமிழைப் படிப்பதே கடினம். பிறகு எவ்வாறு அதை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது? வீட்டின் ஒரு மூலையில் சப்பணம் இட்டு உட்கார்ந்து கொண்டு இந்த நன்னூலைப் படிக்கவேண்டும். இவ்வாறு அடிக்கடி சப்பணமிட்டு உட்கார்ந்து பழகியதால் இன்றும் கூட நான் சப்பணமிட்டு ஒரு மணி நேரம் வரை உட்காருவேன்.

இப்படி ஒரு மணி நேரம் கழிந்த பிறகு என் அப்பா இதைப்பற்றி அப்புறம் கேட்க மாட்டார். நானும் எழுந்திருந்து மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவேன். இவ்வாறு நன்னூல் எனக்கு அறிமுகமாயிற்று. பிற்காலத்தில் நான் கல்லூரி சென்ற பிறகு இந்த நூலை எப்போதாவது புரட்டுவேன்.

அதில் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும், மாணவன் எப்படி இருக்கவேண்டும், பாடம் கேட்பது எப்படி என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. கல்லூரிப்படிப்பு முடிந்து நான ஆசிரியனான பிறகு இதையெல்லாம் மீண்டும் படித்து வகுப்பில் மாணவர்களுக்கும் சொல்லுவேன்.

இந்த நூல்கள் எப்படி என் வீட்டில் இருந்தன என்பதை பிற்காலத்தில் என் பாட்டியிடமிருந்து தெரிந்து கொண்டேன். அந்தக் கதைகளில் என்னைப் பற்றிய ஒரு முக்கியமான குறிப்பு இருக்கிறது. அதை கடைசியில் சொல்லுகிறேன்.

என் தகப்பனாருடன் பிறந்த ஒரு மூத்த சகோதரர் இருந்திருக்கிறார். அவருக்கு தமிழ் ஆர்வம் மிகுதி. ஒரு தமிழ்ப்புலவரிடம் பாடம் கற்றிருக்கிறார். அப்போது வாங்கிய புத்தகங்கள்தாம் அவை. அந்தப் புத்தகங்கள் எல்லாம் திருநெல்வேலி சைவ சிந்தாந்த சபையினரால் பிரசுரிக்கப்படவை. அவைகளின் விலை ரூ.1-2-0 அல்லதி ரூ. 1-7-6 என்று போட்டிருக்கும். இந்த விலைகளின் அர்த்தம் இந்தக்கால இளைஞர்களுக்கு விளங்காது. ரூபாய், அணா, பைசா இருந்த காலம் அது. நான் கல்லூரிப் படிப்பு முடித்து வேலைக்குப் போகும் வரை இந்த நாணயமுறைதான் அமுலில் இருந்தது.

அந்தப் பெரியப்பாவிற்கு உடல் நலம் சரியில்லாததால், தான் கல்யாணம் செய்து கொள்ளாமல், தன் தம்பிக்கு (அதாவது என் அப்பாவிற்கு) கல்யாணம் செய்து வைத்தார். நான் பிறந்து ஓராண்டு வரைக்கும் உயிருடன் இருந்தார். அவர் என் பிறந்த தேதி, நட்சத்திரம், அங்க லட்சணங்கள் இவற்றைப் பார்த்து இவன் நன்றாகப் படித்து நல்ல உத்தியாகம் பார்த்து நன்றாக இருப்பான் என்று சொல்லியிருக்கிறார். அவருடைய ஆரூடப்படி நான் இப்போது நன்றாக இருக்கிறேன்.

நன்னூலை நான் எவ்வாறு என் வகுப்புகளில் பயன் படுத்தினேன் என்று அடுத்த பதிவில் சொல்கிறேன்.

9 கருத்துகள்:

 1. இது தண்டனை இல்லையே பரிசுதானே...
  தமிழ் மணம் 1

  பதிலளிநீக்கு
 2. நன்னூல் படிக்கச்சொல்லி தண்டணை! சுவையான தண்டணைதான்! பகிர்வுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 3. அதனால்தான் இவ்வளவு நல்லவராக இருக்கிறீர்கள் போல் இருக்கிறது

  பதிலளிநீக்கு
 4. ஆகா
  இதுவா தண்டனை
  அருமையான வாழ்வியல் வழிகாட்டுதல் என்றே
  எண்ணுகின்றேன்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 5. இது நல்ல தண்டனையாக இருக்கிறதே! நன்னூலை தாங்கள் எவ்வாறு வகுப்புகளில் பயன்படுத்தினீர்கள் என அறிய காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. ஆகா..! என்ன அழகான தண்டனை. பிள்ளைகளை நெறிப்படுத்தும் இந்த முறை இப்போது எங்கே?

  நன்னூலும் நாலடியாரும் படித்தவன் நெறி பிறழ்வானா? எத்தகைய ஒரு அமைதியான சமூகம் நமக்கு கிடைத்திருக்கும்..!

  இப்போதோ பிள்ளைகள் 25000 உரூபாய்க்கு ஸ்மார்ட் போன் வாங்கிக் கொடுத்தால்தான் ஆயிற்றென்று அடம் பிடிக்கின்றன. அது கிடைக்க வில்லையென்றால் நீயெல்லாம் ஒரு அப்பனா? என்று வாய் கூசாமல் கேட்கின்றன. பிள்ளை கம்ப்யூட்டர் பற்றி கற்றுக் கொள்வான் என்ற நினைப்பில் வாங்கிக் கொடுத்தால் பிஞ்சு வயதிலேயே அதில் போர்னோ கேம் விளையாடுகிறான்.

  இந்தச் சமூகம் பெற்றோர்களின் அனுமதியுடனேயே ஒரு பெர்வர்ட்டான சமூகமாகி விட்டதோவென எனக்குத் தோண்றுகிறது.

  நீங்கள் சொல்லியதுதான் கலாச்சாரம். வெறும் தமிழல்ல கலாச்சாரம். எந்த நூல்களை படிக்க வேண்டும் எந்த நூல்களை போற்றவேண்டும் என்று தெரிந்தால் மட்டுமே ஒரு சமூகம் நல்ல சமூகமாக இருக்கும்.

  அருமையான தேவையான நல்ல பதிவு.
  God Bless You

  பதிலளிநீக்கு
 7. இது தண்டனை அல்ல. சிறு வயதிலேயே நன்னூலை படிக்க ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது.

  பதிலளிநீக்கு
 8. நன்னூல் படிக்கச் சொல்லி தண்டனை.... நல்ல வாய்ப்பு கொடுத்திருக்கிறாரே!

  பதிலளிநீக்கு