ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

கல்லூரிகளும் உயர் கல்வியும்

                                         Image result for பட்டமளிப்பு விழா
உயர்கல்வி எனப்படுவது இளங்கலைப் பட்டப்படிப்பு முடிந்த பிறகு மேற்கொள்ளும் கல்வி ஆகும். முதுகலைப் பட்டப்படிப்பு, முனைவர் பட்டப்படிப்பு ஆகிய இரண்டும் இதில் அடங்கும். இளங்கலைப் பட்டப்படிப்புக்கு மேல் 6 மாதம், மூன்று மாதம் ஆகிய குறுகிய காலங்களில் சில படிப்புகள் நடத்தப்பட்டு, அதற்கான பட்டயம் கொடுக்கப்படும். இது ஆங்கிலத்தில் சர்டிபிகேட் கோர்ஸ்கள் என்று அறியப்படும்.

இந்த உயர்கல்விப் படிப்புகளில் முக்கியமானது ஏதாவது ஒரு ஆராய்ச்சியை திட்டமிட்டு நடத்தி அதற்கான கட்டுரையை சமர்ப்பிக்கவேண்டும். வெறும் புத்தகப்படிப்பு மட்டும் அந்தத் துறையின் முழு அறிவையும் கொடுக்காது, தானே ஒரு ஆராய்ச்சித் திட்டத்தை வகுத்து அதை நடத்தி அனுபவம் பெற்றால்தான் அந்தத் துறையில் பல நுணுக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன் வளரும் என்ற நோக்கில் ஏற்பட்ட ஒரு முறை.

குமுதம் என்ற வாரப் பத்திரிகையில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு நகைச்சுவைத் துணுக்கு போட்டிருந்தார்கள். எல்லாவற்றையும் பற்றி கொஞ்சம் கொஞ்சம் தெரிந்து வைத்திருப்பவன் இளங்கலைப் பட்டதாரி. கொஞ்சம் விஷயங்களைப் பற்றி நிறையத் தெரிந்து வைத்திருப்பவன் முதுகலைப் பட்டதாரி. ஒன்றுமில்லாததைப்பற்றி எல்லாம் தெரிந்து வத்திருப்பவன் முனைவர் பட்டதாரி. இவ்வாறு ஒரு நகைச்சுவைத் துணுக்கு போட்டிருந்தார்கள்.

இந்த நகைச்சுவை ஒரு புறமிருக்க, முனைவர் பட்டம் வாங்க என்னென்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம். அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் மாணவனாகச் சேரவேண்டும். இப்படி சேர்க்கும் மாணவர்களின் எண்ணிக்கை வரையரைக்குட்பட்டது. அங்கு அனுபவப்பட்ட முனைவர் பட்டத்திற்கான வழிகாட்டுதலுக்கு எவ்வளவு ஆசிரியர்கள் இருக்கிறார்களோ, அதற்குத் தகுந்த மாதிரிதான் மாணவர்களைச் சேர்க்க முடியும்.

மாணவர்களைச் சேர்த்த பிறகு அந்த மாணவர் ஒரு ஆசிரியரின் கீழ் தன் முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சியைத் துவங்குவார். முனைவர் பட்டத்திற்கு ஒரு நல்ல ஆரய்ச்சிப் பொருள் தேவைப்படும். இதை அந்த மாணவர் ஆசிரியர் வழிகாட்டுதலின்படி தேர்ந்தெடுப்பார். பிறகு அந்தப்பொருள் பற்றி என்னென்ன ஆராய்ச்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று ஒரு திட்டம் வகுப்பார்கள். அந்த திட்டத்தின்படி ஆராய்ச்சிகள் செய்து அதனுடைய முடிவுகளை பல விதத்தில் ஆராய்ந்து ஒரு ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். இதை "தீசிஸ்" என்பார்கள்.

இந்த ஆய்வு அறிக்கை இரண்டு அல்லது மூன்று வல்லுநர்களுக்கு அனுப்பி அவர்களின் கருத்துகளை வாங்குவார்கள். இந்த அறிக்கை முனைவர் பட்டம் வழங்குவதற்கு ஏற்றதுதானா என்று அந்த வல்லுநர்கள் சொல்லவேண்டும். பிறகு அந்த மாணவனை ஒரு வல்லுநர் முன்பு நேர்முகத்தேர்வுக்கு உட்படுத்தப்படுவான். அதிலும் அவன் தகுதியானவனாக மதிப்பிடப்பட்டால் அவனுக்கு முனைவர் பட்டம் வழங்கப்படும்.

இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் உண்மையானதாக இருக்கவேண்டும். தன் கற்பனையில் உதிக்கும் முடிவுகளை ஒருவன் முனைவர் பட்டத்திற்கு சமர்ப்பிக்க முடியாது. இப்படித்தான் நான் முனைவர் பட்டம் வாங்கினேன். என் முனைவர் பட்டத்திற்கான "தீசிஸ்" அமெரிக்காவிலுள்ள மூன்று நிபுணர்களுக்கு அனுப்பப்பட்டு அங்கீகாரம் பெற்றது. நான் வழிகாட்டிய சில மாணவர்களும் இவ்வாறுதான் முனைவர் பட்டம் வாங்கினார்கள்.

ஆகவே ஒருவர் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார் என்றால் கல்வி வட்டாரத்தில் அவருக்கு ஒரு நல்ல மதிப்பு உண்டு.

ஆனால் இன்று நடக்கும் நடைமுறைகளைப் பார்த்தால் கண்ணில் நீர் வரும். ஒவ்வொரு ஊரிலும் கல்லூரிகளுக்குப் பக்கத்தில் இங்கு "தீசிஸ்" தயார் செய்து கொடுக்கப்படும் என்று பல போர்டுகளைப் பார்க்கலாம். அந்தந்த கல்லூரிகளுக்குப் பொருத்தமான ஆராய்ச்சிக் கட்டுரைகளை இங்கு தயார் செய்து கொடுக்கிறார்கள். மாணவர்கள் சொந்தமாக ஆராய்ச்சி செய்யவேண்டியதில்லை.

மாணவர்கள் பணம் மட்டும் கொடுத்தால் போதும். இந்த கடைக்காரர்களே ஒரு பொருத்தமான பொருளில் ஆராய்ச்சிக் கட்டுரையை முழுமையான வடிவில் கொடுத்து விடுவார்கள். அந்த மாணவர்களின் வழிகாட்டி ஆசிரியர்களும் இதைக் கண்டு கொள்ளமாட்டார்கள். இந்த முறை மாணவர்களுக்கும் வசதி, ஆசிரியர்களுக்கும் வசதி. புதிதாக ஆரம்பிக்கும் பல கல்லூரிகளில் அடிப்படை வசதிகள் ஒன்றும் இருக்காது. அங்கு எப்படி ஆராய்ச்சி செய்து ஆராய்ச்சிக்கட்டுரை சமர்ப்பிக்க முடியும்?

புதுக்கல்லூரிகளில் ஆரம்பித்த இந்த நோய் பழைய கல்லூரிகளையும் பிடித்துவிட்டது. இதில் சில பல்கலைக் கழகங்களில் வருமானத்தைப் பெருக்குவதற்காக மாணவர்கள் எங்கு வேண்டுமானாலும் ஆராய்ச்சி செய்து கொள்ளலாம். யாரை வேண்டுமானாலும் வழிகாட்டியாக வைத்துக்கொள்ளலாம் என்று விதிகள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

யாராவது முனைவர் பட்டம் வைத்திருப்பவர்களிடம் ஒரு கையெழுத்து வாங்கினால் போதுமானது. சில வருடங்கள் முன்பு என் நண்பர் சிபாரிசின் பேரில் ஒரு மாணவர் இந்த மாதிரி கையெழுத்து வேண்டும் என்று வந்திருந்தார். என்ன ஆராய்ச்சி செய்திருக்கிறாய் என்று கேட்டால் ஒன்றும் சொல்லத் தெரியவில்லை. ஒரு சிடியைக் கொண்டு வந்திருந்தார். இதில் எல்லாம் இருக்கறது என்றார்.

அந்த சிடியை வாங்கி கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்தேன். அது வேறு மாகாணத்திலுள்ள ஏதோ  ஒரு கல்லூரியில் சமர்ப்பிக்கப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரை. இதை அப்படியே என் பெயர் போட்டு என் ட்யூட்டோரியல் இன்ஸ்டிட்யூட்டில் டைப் அடித்துக் கொடுத்து விடுவார்கள். அந்த சர்டிபிகேட்டில் நீங்கள் ஒரு கையெழுத்து மட்டும் போட்டால் போதும் என்றார். நான் தம்பி. அது எனக்கு சரிப்படாது, நீ வேறு யாரையாவது பார்த்துக்கொள் என்று அனுப்பி விட்டேன்.

வட இந்தியாவில் பல இடங்களில் பல்கலைக் கழக பட்டங்களை விற்கிறார்கள் என்று கேள்விப் படுகிறேன். அது உண்மையாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. நம் நாட்டின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. 

22 கருத்துகள்:

 1. அது என்ன வட இந்தியாவில்? தென் இந்தியாவிலும் தானாமே!

  பதிலளிநீக்கு
 2. உண்மையிலேயே வேதனை தரும் செய்தி ஐயா
  என்னசெய்வது நமது நாட்டில் கல்வியைக் கூட காசு கொடுத்துத்தானே
  வாங்க வேண்டியிருக்கிறது
  தம +1

  பதிலளிநீக்கு
 3. சோம்பலும் திறமின்மையும் வியாபாரிகளை உருவாக்கி விடுகின்றன . இஞ்சினீரிங் கல்லூரிகளில் இறுதி ஆண்டு ப்ராஜெக்டகளின் நிலையும் இவ்வாறுதான் உள்ளது.

  பதிலளிநீக்கு
 4. தீசிஸ் எனப்படுகின்ற ஆய்வேடு தயாரிப்பது தற்போது வணிக நோக்கில் மிக வேகமாக வளர்ந்துகொண்டிருக்கிறது. தாங்கள் சொல்வது போல ஒரு ஊரைப்பற்றியோ, கோயிலைப் பற்றியோ, திட்டத்தைப் பற்றியோ எழுதச்சொன்னால் பெயரை மற்றும் ஆங்காங்கு மாற்றி புள்ளி விவரங்களையும், செய்திகளையும் ஆங்காங்கே டச் அப் செய்து அப்படியே கொடுத்துவிடுகிறார்கள். அண்மையில் ஒரு கோயிலைப் பற்றிய ஆய்வேட்டினைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. அக்கோயிலின் அம்மன் சன்னதி இடிபாடுற்ற நிலையில் இருப்பதாகவும் கோயில் குளம் விரைவில் பராமரிக்கப்படவேண்டிய நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அண்மையில்தான் நான் அந்தக் கோயிலுக்குச் சென்றிருந்தேன். குடமுழுக்கு ஆகி மிகவும் அருமையாக கோயில் காணப்பட்டது.உரிய ஆய்வாளரிடம் அதுபற்றிக் கேட்டபோது, அக்கோயிலைப் பற்றி வேறொரு பல்கலைக்கழகத்தில் (15 ஆண்டுகளுக்கு முன்பாக) மேற்கொள்ளப்பட்ட ஆய்வினை அப்படியே தட்டச்சு செய்து கொடுத்திருக்கிறார் அந்த ஆய்வாளர். இதில் வேதனை என்னவெனில் ஆய்வாளரோ ஆய்வின் வழிகாட்டியோ அக்கோயிலுக்கு இந்த ஆய்வுக்காக ஒரு முறைகூட செல்லவில்லை என்பதே.

  பதிலளிநீக்கு
 5. முனைவர் பட்டம் இன்று
  படும்பாட்டை தெளிவாகப் புரியவைக்கும் கட்டுரை
  என் நண்பர்கள் பலர் முனைவர்கள் என்பதால்
  தங்கள் ஆதங்கத்தை மிகச் சரியாகப் புரிந்து
  கொள்ள முடிந்தது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. அனைத்தும் பணமே என்றாகி விட்ட பின்... ம்... வேதனை தான் ஐயா...

  பதிலளிநீக்கு
 7. தாங்கள் சொல்வது உண்மைதான். இனி வருங்காலத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் தாங்கள் பட்டம் பெற்ற ஆண்டையும் தங்களது பட்டத்திற்குப் பின்னால் போட்டுக்கொள்ளவேண்டிய நிலை வந்துவிடும். இல்லாவிடில் எல்லா முனைவர்களையும் ஒன்று போலவே நினைத்துவிடும் அபாயம் உண்டு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னுடைய முதுகலைப் பட்டத்திற்கு சமர்ப்பித்த ஆய்வுக்கட்டுரையிலும் முனைவர் பட்டத்திற்கு சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையிலும் உள்ள ஆய்வு முடிவுகள் அனைத்தையும் நானே பரிசோதித்து கண்டு பிடித்தவை. இன்றும் அந்த சோதனைகளை செய்தால் அதே முடிவுகள் வரும் என்று என்னால் சவாலாகச் சொல்ல முடியும்.

   ஆனால் இன்று வரும் பட்டதாரிகள் அவ்வாறு சொல்ல இயலாது.

   அவ்வளவு ஏன்? சமீபத்தில் பெண்கள் சர்வகலாசாலை ஒன்றின் துணைவேந்தர் வெளியிட்டுள்ள ஒரு புத்தகம் இன்னொரு புத்தகத்தின் அப்பட்டமான காப்பி என்று குற்றம் சாட்டப்பட்டதே.

   இப்படி திருடுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல சொல் ஒன்று வைத்திருக்கிறார்கள். இந்த சொல் சாதாரண புழக்கத்தில் இல்லை. உயர் கல்வி வட்டாரங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. Plagiarism என்பதுதான் அந்தச் சொல்.

   நீக்கு
  2. Plagiarism என்பதை தமிழில் கருத்துத் திருட்டு என சொல்வார்கள்

   நீக்கு
 8. In USA every student has to give in writing they will NOT do plagiarism; if they are found cheating they will be summarily expelled from college.
  Rajan

  பதிலளிநீக்கு
 9. முனைவர் பட்டம் வாங்க நீங்கள் பட்ட கஷ்டம், உழைப்பை நன்றாகவே சொன்னீர்கள். இப்போது எல்லாமே “ பேக்கேஜ் “ முறையாகப் போய்விட்டது. இவ்வளவு கஷ்டப்பட்டு வாங்கும் ”முனைவர்” என்ற ” டாக்டர் “ பட்டத்தை நமது அரசியல்வாதிகள் ரொம்பவும் எளிதாக வாங்கி விடுகின்றனர்.

  பதிலளிநீக்கு
 10. பட்டப் படிப்பு படித்தவர்தான் முனைவராகலாமா.?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முனைவர் என்பது ஒரு முதுகலைப் பட்டம். B.Sc., M.Sc., Ph.D. இவைகளை ஒன்றன்பின் ஒன்றாகத்தான் வாங்கமுடியும். இது சாதாரண மனிதர்களுக்கான விதி. அரசியல் வியாதிகள், மன்னிக்கவும், அரசியல்வாதிகள் வாங்கும் டாக்டர் பட்டங்கள் கௌரவ டாக்டர் பட்டங்கள் என்று சொல்லப்படும். இதற்கு விதிகள் ஒன்றும் கிடையாது.

   பல்கலைக் கழகங்கள் பல காரணங்களுக்காக பலருக்கு கௌரவ டாக்டர் பட்டங்கள் கொடுக்கின்றன. அதை வாங்குபவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் முனைவர் என்ற பட்டத்தைப் போட்டுக்கொள்கிறார்கள். ஆனால் அப்படி அவர்கள் போட்டுக்கொள்ளக்கூடாது. ஆனால் நம் ஊரில்தான் எதற்கும் வரைமுறை கிடையாதே.

   நீக்கு
 11. பணம் இருந்தால் படிப்பை வாங்கி விடலாம்.. ஆனால் அறிவை வாங்க முடியாதே ஐயா...! பதிவு வெகு சிறப்பு... வாழ்த்துகள்....!

  என்னுடைய வலைப்பூவில் வைரஸ் பாதிப்பால் முக்கியமான கோப்புகள் அழிந்துவிடாமல் இருக்க செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  பதிலளிநீக்கு
 12. கல்வியே விற்பனைப் பொருளாகி விட்ட பின் . முனைவர் பட்டம் மட்டும் விதிவிலகா என்ன!

  பதிலளிநீக்கு
 13. ஒன்றும் இல்லாததைப் பற்றி எல்லாம் தெரிந்தவர் முனைவர். ஆம் ஒன்றும் இல்லாத மண்ணைப் பற்றி எல்லாம் தெரிந்தவர் நீங்கள்.

  பதிலளிநீக்கு
 14. நம் கல்வி முறையை நினைத்தால் வேதனையாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 15. வியாபார உலகத்தில் இப்ப பட்டங்களும் விற்பனைக்கு வந்துவிட்டது.

  பதிலளிநீக்கு