வெள்ளி, 25 செப்டம்பர், 2015

சுற்றுச்சூழல் சீர்கேட்டால் பாதிக்கப்படும் நீர் வளங்கள்.

“வலைப்பதிவர் திருவிழா-2015-புதுக்கோட்டை“
“தமிழ்நாடு அரசு – தமிழ் இணையக் கல்விக் கழகம்“
...இணைந்து நடத்தும்...
உலகளாவிய மின்தமிழ் இலக்கியப் போட்டிகள்!

வகை-(2) சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பற்றிய கட்டுரைப்போட்டிக்கான கட்டுரை.

ஆசிரியர்: பழனி. கந்தசாமி

இயற்கை வளங்கள் நமக்கு இயற்கையால் அளிக்கப்பட்ட செல்வங்கள். இதை நாம் உபயோகித்துக் கொள்ளலாமே தவிர அதை அழிக்க நமக்கு எந்த உரிமையும் இல்லை. நாம் பெற்ற அனைத்து இயற்கை செல்வங்களையும் நமக்கு அடுத்த தலைமுறையினருக்கு அப்படியே கொடுப்பதற்கு கடமைப் பட்டிருக்கிறோம்.

ஆனால் பெரும்பாலான சமயங்களில் நாம் அவ்வாறு செய்யத் தவறி விடுகிறோம். இது ஒரு பெரும் குற்றம். இப்படி இயற்கை வளங்களை அடுத்த தலைமுறையினருக்கு கொடுக்கத் தவறுவதால் எதிர்காலத்தில் மனித இனமே அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.

நமது நாடு விவசாய நாடு. விவசாயத்திற்கு ஆதாரம் நீர். நீரின்றி இவ்வுலகம் இல்லை என்று வள்ளுவர் கூறிப் போனார். ஆனால் இந்த நீர் வளங்களை நாம் எவ்வளவு மோசமாகக் கையாள்கிறோம் என்று பாருங்கள்.

நாம் பெற்ற இயற்கை வளங்களில் மிக முக்கியமானது நீர் வளம். இந்த நீர்வளத்திற்கு ஆதாரம் மழையே. ஆனால் இந்த மழையின் அளவைக் குறைக்க நாம் செய்யும் செயல்களைப் பற்றி யாராவது சிந்திக்கிறோமா? மலையிலுள்ள காடுகள்தான் மழைக்கு மிக முக்கியமாகத் தேவை. மழை பெய்வதற்கும் பெய்த மழை நீரை சேமித்து வைத்து அதை ஆற்று நீராக்கி கொடுப்பதுவும் இந்த மலைக்காடுகள்தான்.

ஆனால் இன்று இந்த மலைக்காடுகளை அழித்து மரங்களை தொழிற்சாலைகளுக்கும் வீடுகளுக்கும் உபயோகப்படுத்தி மழையின் அளவைக் குறைத்து விட்டோம். இப்போது பெய்யும் மழையும் காடுகளில் சேமித்து வைக்கப்படாமல் ஒரேயடியாக சமவெளிகளில் வெள்ளமாகப் பாய்ந்து வீணாவதோடு நிற்காமல் பல சேதங்களையும் ஏற்படுத்துகிறது.

தவிர, இருக்கும் ஆறுகளையும் நாம் சரி வரப் பராமரிக்கிறோமா என்றால் அதுவும் இல்லை. மக்கள் தொகை அதிகரிப்பினால் நகரங்கள் பெரிதாகி விட்டன. அங்கிருந்து வெளியாகும் கழிவுப்பொருட்களும் அதிகரித்து விட்டன. இவைகளுடன் கூட பல தொழிற்சாலைக் கழிவுகளும் ஆற்றில் கலக்கின்றன. இந்த கழிவுகளை எல்லாம் நல்ல முறையில் மேலாண்மை செய்யாமல் ஆறு, குளங்களில் விட்டு விடுகிறோம். கங்கை ஆற்றை சுத்தப்படுத்துவதற்கு எத்தனை ஆயிரம் கோடி பணம் செவழித்தும் எதிர்பார்க்கும் பலன் கிட்டுவதில்லை.

இதற்கு பல நகரங்களின் ஆட்சியாளர்களும் பொறுப்பாவார்கள். நாம் இயற்கை நமக்கு அளித்த வளத்தைப் பாழாக்குகிறோமே என்ற உணர்வு அற்றுப்போய் நகர கழிவுகளை ஆறுகளில் கலக்க விடுகிறார்கள்.
ஆற்று நீரை அசுத்தப்படுத்த முற்படும் ஒவ்வொருவரும் தேசத்துரோகிகள் ஆவார்கள். நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக்கொள்கிறோம் அல்லவா? பொதுச் சொத்து என்றால் மட்டும் ஏன் இந்த மாதிரி உணர்வுகள் வரவில்லை. இந்தக் கலாச்சாரம் வளராதவரை நாட்டை முன்னேற்றுவது கடினம் அல்லவா? இது மக்களின் அறியாமையா அல்லது கலாச்சாரமா என்று தெரியவில்லை. எதுவாயினும் ஓர் விழிப்புணர்வு ஏற்படுத்துவது சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கடமை.

அடுத்த நீர் நிலை ஆதாரம் ஏரி, குளங்கள் ஆகியவை. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலத்தில் அந்த உபரி நீரைச் சேமித்து வைத்து மனிதனின் அன்றாடத் தேவைகளுக்கும் விவசாயத்திற்கும் பயன்படுத்த நம் முன்னோர்கள் கண்டு பிடித்த அருமையான திட்டம். இந்த திட்டம் பல நூற்றாண்டு காலம் பயனுள்ளதாக செயல்பட்டு வந்தது. ஆனால் நாட்டின் ஜனத்தொகை பெருகப் பெருக மக்களின் இருப்பிடத்தேவை பெருகிக்கொண்டு வந்தது. வாழ்க்கையின் அடித்தள மக்களுக்கு இந்த ஏரி, குளங்களின் கரைகள் வசதியாகப் போயின.

ஏரி குளங்களின் கரைகளில் குடிசைகள் போட்டுக் குடியிருப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இவர்களினால் உண்டாக்கப்படும் கழிவுகள் அந்த ஏரி குளங்களின் நீரில்தான் கலக்கின்றன. ஆடுமாடுகள் மற்றும் மனிதர்கள் உபயோகப்படுத்தி வந்த நிலை மாறி இந்த நீர்கள் கழிவு நீராக மாறி, சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கிறது.

இது தவிர இத்தகைய ஆக்கிரமிப்பு செய்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குளத்திற்குள்ளேயே சென்று விடுகிறார்கள். மழைக் காலத்தில் குளத்திற்கு நீர் வரும்போது இவர்கள் குடிசைக்குள்ளும் நீர் வந்து விடும். அதைத் தவிர்ப்பதற்காக இவர்கள் செய்யும் காரியங்கள் சொல்லத்தகாத அக்கிரமம் ஆகும். குளத்தின் கரைகளையே உடைத்து நீர் வெளியேறும்படி செய்து விடுகிறார்கள். இதைப்போல் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவர்கள் வேறு யாரும் கிடையாது.

அடுத்ததாக நிலத்தடி நீர். இது நிலத்தின் கீழ் பல அடி ஆழத்தில் இருப்பதால் இதை அதிகமாக மாசு பண்ண முடிவதில்லை. ஆனால் இதை பேராசைப்பட்டு உறிஞ்சியே தீர்த்து விட்டோம். சில நூறு அடிகளுக்குள் கிடைத்துக் கொண்டிருந்த நிலத்தடி நீர் இன்று ஆயிரம் அடிகளுக்கு கீழ் போய்விட்டது.

நிலத்தடி நீர் வங்கி கணக்கு மாதிரி. நாம் எவ்வளவு பணம் போட்டிருக்கிறோமோ அவ்வளவு பணம்தான் எடுக்க முடியும். நிலத்தடி நீரும் அப்படித்தான். மழை நீர் எவ்வளவு மண்ணிற்கு கீழ் போய் சேமிப்பாகிதோ அந்த அளவுதான் எடுக்க வேண்டும். ஆனால் மனிதனின் பேராசைக்கு அளவே இல்லை. எவ்வளவு உறிஞ்ச முடியுமோ அவ்வளவு உறிஞ்சி விட்டான்.

பல இடங்களில் இப்போது நிலத்தடி நீரே இல்லை என்ற அளவிற்குப் போய்விட்டது. இதில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்படவேண்டும். நிலத்தின் அடியில் இருக்கும் நீர் தனி மனிதனின் உரிமையல்ல. அது சமூகத்தின் சொத்து. தன மனிதன் தனது அதிக பலத்தால் எல்லோருக்கும் பொதுவான நிலத்தடி நீரை தான் மட்டும் உறிஞ்சி விடுகிறான். இது ஏறக்குறைய அடுத்தவன் வீட்டில் கன்னம் போட்டு திருடுவதற்கு ஒப்பாகும்.

இந்த உணர்வு ஒருவருக்கும் ஏற்படுவது இல்லை என்பது மிகவும் வருந்தத்தக்க நிலை ஆகும். பொதுச் சொத்து என்றால் அது யாருக்கும் சொந்தமல்ல. அதை எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம் என்கிற உணர்வு மக்களிடையே இருந்து மறைந்தால்தான் ஒரு நாடு முன்னேறும். பொது சொத்து என்பது நம்முடையது. நாம் கட்டும் பல்வேறு வகையான வரிகளால் வாங்கப்பட்டது. அதைக் காப்பாற்றுவது நம் கடமை என்று உணர்வு ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படவேண்டும்

இம்மாதிரியான கடமை உணர்வை ஒவ்வொருவரிடத்திலும் தோற்றுவிப்பதுதான் இன்றுள்ள தலையாய பணி. இதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்று ஆராய்ந்து சரியான திட்டங்கள் தீட்ட வேண்டும்.
இம்மாதிரி செயல்களை அரசின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சகமும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் முன் வந்து நடத்தவேண்டும். அதற்கான செயல் திட்டங்களை அரசே முன் நின்று விவாதங்கள் நடத்தி முடிவு செய்யலாம்.

நமது பள்ளிகளில் இத்தகைய சுற்றுச் சூழல் பிரச்சினைகளைப் பற்றியும் அவைகளைத் தடுப்பது பற்றியும் விரிவான பாடங்கள் சொல்லிக் கொடுக்க வேண்டும். தவிர நகராட்சி அமைப்புகள், தொழிற்சாலை நிர்வாகிகள் ஆகியோருக்கும் இந்த சுற்றுச் சூழல் பிரச்சினைகளை கையாள்வது எப்படி என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.

நம் சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை முதலில் தனி மனிதன் உணரவேண்டும். பிறகு அத்தகையவர்களை குழுவாகச் சேர்த்து சரியானபடி வழி நடத்தவேண்டும். இது சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு தேவையான பயிற்சிகள் கொடுத்து வழி காட்டவேண்டும்.

இது மக்களின் நல வாழ்விற்கு மிகவும் அவசியமான ஒரு செயல் திட்டமாகும். மனித இனத்தின் எதிர்காலம் இந்த சுற்றுச்சூழல் பாதுகாப்பில்தான் இணைந்திருக்கிறது. இதை அனைவரும் உணர்ந்து தங்கள் கடமையை சரியாக நிறைவேற்றினால்தான் இந்த திட்டம் முழுமையாக வெற்றி பெறும்.

உறுதி மொழிகள்:

(1) இந்தப் படைப்பு எனது சொந்தப் படைப்பே என்று உறுதி கூறுகிறேன். 

(2) இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது” என்றும் உறுதிமொழி கூறுகிறேன்.

(3) இந்தப் படைப்பு இதற்கு முன் வெளியான படைப்பல்ல. இப்போட்டியின் முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும் வெளிவராது என்றும் உறுதி கூறுகிறேன். .12 கருத்துகள்:

 1. போட்டியில் கலந்து கொள்ளும் உங்கள் ஆர்வம் வியக்க வைக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகள் ஸார்.

  பதிலளிநீக்கு
 2. பொருள் பொதிந்த கட்டுரையை தந்திருக்கிறீர்கள். போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. அருமையான கருத்துக்கள் கொண்ட அழகான கட்டுரை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ஐயா.

  பதிலளிநீக்கு
 4. அருமையான கருத்துரையை முன் வைத்த கட்டுரை ஐயா வெற்றி பெற எமது மனமார்ந்த வாழ்த்துகள்
  தமிழ் மணம் 6

  பதிலளிநீக்கு
 5. நல்ல கட்டுரை.

  போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
  வான்இன்று அமையாது ஒழுக்கு -- தமிழ்மறை..
  மாசுகளால் பாதிக்கப்படும் நீர் நிலைகளைக் காக்க வேண்டிய அவசியத்தை வலியுறும் நல்ல பதிவு. வெற்றிபெற வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. சிறப்பாக அமைந்துள்ளது கட்டுரை. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 8. விழிப்புணர்வை ஏற்படுத்தும் அருமையான கட்டுரை
  வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 9. அருமையான கட்டுரை! இதை விட கருத்தாழமுள்ள கட்டுரையை எவராலும் எழுத் முடியாது. அரசிடம் சொல்லி ஆவன செய்வோம். முதல் பரிசு உங்களுக்கே.

  பதிலளிநீக்கு