ஞாயிறு, 17 ஜனவரி, 2016

என் ஆசிரியரைக் கண்டேன் - பாகம் 2

(வாசலைத் திறந்தவுடனேயே திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் என்னை அடையாளம் கண்டு கொண்டு அன்புடன் என் பெயரைச்சொல்லி வரவேற்றார். நான் கண் கலங்கிப்போனேன். இவ்வளவு வருடங்கள் கழித்தும் என்னை நினைவு வைத்திருக்கிறாரே என்ற ஆனந்தம் என் கண்ணில் நீரை வரவழைத்தது.)

திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் ஒரு தாவரவியல் பேராசிரியர், அவர் படிப்புக்கு ஏற்றாற்போல் பலவிதமான செடிகளும் மரங்களும் அவர் வீட்டைச்சுற்றி இருந்தன. அவர் வீடு ஏறக்குறைய ஒரு ஏக்கர் நிலத்தில் இருக்கிறது. அதில் ஒரு பகுதியில் அவர் தந்தையார் கட்டின வீடு இருக்கிறது. அதற்கும் 100 ஆண்டு வயது இருக்கும். மீதி உள்ள இடங்களில் எல்லாம் செடி, கொடி, மரங்கள் இருக்கின்றன.

நான் அவரைப் பார்த்த ஆனந்தத்தில் அந்த செடி கொடிகளை போட்டோ எடுக்கத் தவறி விட்டேன். அவர் இந்த செடிகளின் பேரில் மிகுந்த பாசம் வைத்திருக்கிறார். அவருடைய மருமகன் டாக்டர் அகஸ்டின் செல்வசீலன் என்னுடைய மாணவர். என்னுடன் ஒரே பிரிவில் பணியாற்றியவர். அவரும் அப்போது அங்கு வந்திருந்தார். என் பயணத்திட்டத்தை இப்படி ஒத்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தோம்.

நாங்கள் மூவரும் அவருடைய தோட்டத்தைச் சுற்றிப்பார்த்தோம், ஒவ்வொரு இடத்திலும் உள்ள செடிமொடிகளைப் பற்றிய விவரங்களைக் கூறிக்கொண்டே வந்தார். மழை நீர் சேகரிப்பிற்கான தொட்டியையும் காண்பித்தார். அங்கு ஒரு விசாலமான பகுதியை மைதானமாக விட்டிருந்தார். வருடத்திற்கொரு முறை அங்கு ஒரு விழா நடக்கும் என்று திரு அகஸ்டின் கூறினார்.

பின்பு நாங்க்ள திரும்பி வந்து தேனீர் அருந்தினோம். பின்பு திரு. டாக்டர் டேனியல் சுந்தரராஜ் தான் செய்து வரும் ஆன்மீகப் பணிகளைப் பற்றிப் பேசினார். வாரம் ஒரு முறை அந்த ஊரில் உள்ள சீனியர் சிடிசன்களை வரவழைத்து அவர்களுக்கான நற்போதனைகள் செய்கிறார்.

வாரத்தில் ஒரு நாள் சிறுவர்களுக்கு அன்னதானமும் நற்போதனைகளும் செய்கிறார். வாரத்தில் மற்றொரு நாள் அந்த ஊரில் உள்ள வயதான பெண்மணிகளை வீட்டிற்கு வரவழைத்து வேதம் ஓதுகிறார்கள். இந்த காரியங்களுக்கெல்லாம் அவருடைய மருமகள் உறுதுணையாய் இருக்கிறார்கள். நான் சென்றிருந்த அன்று கூட இவ்வாறான கூட்டம் ஒன்று நடந்தது.

இது போக மற்ற சமயங்களில் மத சம்பந்தமான புத்தகங்கள் எழுதி வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். அப்படி வெளியான புத்தகங்களைக் காண்பித்தார். எனக்கும் ஒரு புத்தகத்தில் வாழ்த்துக்கூறி கையெழுத்துப் போட்டு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நான் அவருடைய நினைவாகப் பொக்கிஷம் போல் பாதுகாப்பேன். 


இதையெல்லாம் பார்த்து நான் என் அன்றாட வாழ்க்கையை நினைத்து வெட்கிப்போனேன். உண்பதுவும் உறங்குவதுவும் தவிர நான் ஒன்றும் செய்யவதில்லை என்று நினைக்கும்போது மனம் குற்ற உணர்வால் வேதனையுற்றது. என்ன செய்வது? நான் ஒரு சோம்பேறியாக வளர்ந்து விட்டேன்.

பிறகு, திரு. அகஸ்டின் அவர்களுடன் ஊரைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டோம். அந்த ஊரின் முக்கியமான சர்ச்சைப் பார்த்தோம்.

நூறு ஆண்டுகளுக்கும் பழமையான நாசரெத்தின் தபால் நிலையத்தைப் பார்த்தோம்.


பிறகு நாசரெத்தின் பேருந்து நிலையம் பார்த்தோம்.

பின்பு வீட்டிற்கு வந்ததும் மதிய உணவு தயாராக இருந்தது. அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டோம். திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்களும் அவர்களுடைய இரு மகள்களும் நன்கு உபசரித்தார்கள். என்ன, ஒரு குறை என்றால் என்னால் அதிகம் சாப்பிட முடியவில்லை. 



சாப்பிட்டபின் சற்று ஓய்வெடுக்க மாடியில் உள்ள ஒரு கட்டிலை திரு. அகஸ்டின் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தார். உண்ட களைப்பு நீங்க, சுமார் ஒரு மணி நேரம் தூங்கினேன். மாலை இரண்டரை மணிக்கு விழிப்பு வந்தது. அங்குள்ள பாத்ரூமில் முகம் கைகால் கழுவிக்கோண்டு வந்தவுடன் சூடாக ஒரு தேனீர் கொடுத்தார்கள். அது தூக்கக் கலக்கத்தை விரட்டியடித்தது.

பிறகு கீழே இறங்கி வந்தேன். திரு.டாக்டர் டேனியல் சுந்தரராஜ் அவர்கள் அந்த ஊரிலுள்ள வயதான பெண்மணிகளை அழைத்து கூட்டம் நடத்திக்கொண்டு இருந்தார். அவரை அதிகம் தொந்திரவு செய்யாமல் விடை பெற்றுக்கொண்டு ரயில் நிலையம் வந்தோம். மூன்றேகாலுக்கு திருநெல்வேலி செல்லும் ரயில் வந்தது. அதில் ஏறி நாலேகாலுக்கு திருநெல்வேலி வந்து சேர்ந்தேன்.


திருநெல்வேலி போய்வந்தேன் என்றால் தெரிந்தவர்கள் கேட்கும் அடுத்த கேள்வி, இருட்டுக்கடை அல்வா வாங்கினீர்களா என்பதுதான். அதனால் ரயில் நிலையத்திலிருந்து டவுன் பஸ் நிலையம் போய் அங்கிருந்து நெல்லையப்பர் கோவில் சென்றேன். அந்தக் கோவில் வாசலுக்கு எதிரில்தான் இருட்டுக்கடை இருக்கிறது.

நான் போய்ச் சேர்ந்த நேரம் நாலேமுக்கால். அப்போதே சுமார் நூறு பேர் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். கடைக்கு எந்த விதமான விளம்பரங்களோ, போர்டோ இருக்கவில்லை. கருப்பான சரப் பலகைகள் மட்டும் போட்டு அடைத்திருந்தார்கள். கடை ஐந்து மணிக்குத் திறந்தார்கள். கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அல்வா வாங்கினார்கள். என்னால் முண்டியடிக்க முடியாததால் அரை மணி நேரம் பொறுமையாக காத்திருந்து ஆறு அரை கிலோ அல்வாப் பொட்டலங்கள் வாங்கினேன்.

வியாபாரம் சுறுசுறுப்பாகவும் கச்சிதமாகவும் நடக்கிறது. பிறகு வந்த வழியே திரும்பி ஓட்டல் அறைக்கு ஆறு மணிக்கு வந்து சேர்ந்தேன். எட்டரை மணிவரை ஓய்வெடுத்தபின் அறையைக் காலி செய்து விட்டு ரயில் நிலையம் வந்து சேர்ந்தேன். இரவு 9.45 க்கு கோவை செல்லும் ரயில் வந்தது. அதில் ஏறி என்னுடைய இடத்தில் படுத்துக்கொண்டேன். நீண்ட நாளைய ஆசை நிறைவேறிய திருப்தியில் நன்றாக தூங்கிப்போனேன்.


மறுநாள் காலை 7.45 க்கு கோவை வந்து சேர்ந்தேன். என் உறவுப் பெண் ஒன்றுக்காக கார் வந்திருந்தது. அதில் என்னை வீட்டில் கொண்டு வந்து விட்டார்கள்.

13 கருத்துகள்:

  1. அருமையான சந்திப்பு .அல்வாவில் பாதி எனக்கு தாருங்கள் ஐயா[[[[[[[[[[[[[[[[

    பதிலளிநீக்கு
  2. உங்களது சந்திப்பைப் பகிர்ந்த விதம் நன்றாக இருந்தது. தாங்கள் அவர் மீது கொண்டிருந்த அன்பும் மரியாதையும் அளவிடற்கரியன என்பதை பதிவு உணர்த்தியது. நன்றி.

    பதிலளிநீக்கு
  3. I felt that I met Dr Daniel Sundararaj at Nazereth...so nicely explained every activity in a very nice Tamil...hats off...I am always your fan to read ur blog...who will not like your blog? best wishes Dr Kandaswamy...

    பதிலளிநீக்கு
  4. வாழ்வில் மறக்க முடியாத சிறப்பான சந்திப்பு ஐயா...

    பதிலளிநீக்கு
  5. என்றென்றும் நினவில் நிற்கும் சந்திப்பு.எண்ணஎண்ண தித்திப்பு உங்கள் ஏனம் ஈடேரியமைக்கு வாழ்த்துகள் ஐயா

    பதிலளிநீக்கு
  6. ஐயா
    நிச்சயமாக நீங்கள் எங்களுக்கு அல்வா கொடுக்கவில்லை. பின்னே யாருக்குத்தான் கொடுத்தீர்கள்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  7. உங்கள் ஆசிரியருடன், உங்கள் மாணவருடனான சந்திப்பு... இது வாய்க்குமா? அருமை.

    பதிலளிநீக்கு
  8. திருநெல்வேலி அல்வா போன்ற அருமையான சந்திப்பு. பகிர்வுக்கு நன்றிகள்.

    அல்வாவுடன் மல்லிகைப்பூவும் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அப்புறம் என்ன ஆச்சு? ...... என்று ஓர் பதிவு போடுவீர்கள் என ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். :)

    பதிலளிநீக்கு
  9. அருமையான நிகழ்வுதான் ஐயா இதுதான் குருபக்தி என்பார்களோ வாழ்த்துகள்
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான சந்திப்பை பகிர்ந்தமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  11. என்னாங்கோ நீங்க? ஆசிரியரைக் கண்டேன்னு சொல்லிட்டு நீங்க காணாமல் போயிட்டீங்க. ஆசிரியர் கையில் வைத்திருந்த தடியால் உங்களை அடித்த மாதிரி தெரியிவில்லையே. பின்னே ஏன் ஒளிஞ்சுட்டீங்க.
    சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு