திங்கள், 4 ஜனவரி, 2016

80 வயதிலும் இளமை !

                                         Image result for tnau campus
நான் விவசாயக் கல்லூரியில் சேர்ந்து படித்து பட்டம் பெற்ற வருடம் 1956. ஜூன் மாதம் பரீட்சைகள் முடிந்தன. ஜூலை மாதம் முடிவுகள் வந்தன. முடிவுகள் தெரிந்த பதினைந்து நாளில் கவர்ன்மென்ட் வேலைக்கான உத்திரவு வந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் வேலைக்கு சேர்ந்தேன். விவசாந ஆராய்ச்சிப் பண்ணையில் ஆய்வு உதவியாளன் என்னும் உத்தியோகம்.

என்ன பெரிய உத்தியோகம்? நான் முதல் மாதம் வாங்கிய சம்பளத்தைச் சொன்னால் என் பேரன் என்னை கேவலமாகப் பார்க்கிறான். ரூ.100 சம்பளம். ரூ. 24 பஞ்சப்படி. மொத்தம் 124 ரூபாய்.

அப்போது கோவையில் நூற்பாலைகளில் பணி புரிந்தவர்கள் மாதம் 150 ரூபாய் சம்பளம் பெற்றார்கள். வருடத்தில் ஆறு மாத போனஸ். இத்தனைக்கும் அவர்களில் பெரும்பாலானோர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள். நான் 16 வருடம் படித்து பட்டம் வாங்கி, அவர்களைவிட குறைவான சம்பளம் வாங்குவது கேவலமாகப் பட்டது. பேசாமல் அந்த வேலைக்கே போய்விடலாமா என்று கூட ஒரு கட்டத்தில் யோசித்தேன்.

எப்படியோ விதி வசத்தால் அதே கவர்ன்மென்ட் உத்தியாகத்தில் தொடர்ந்து இருந்து படிப்படியாக உயர்வுகள் பெற்று ஒரு பேராசிரியராகப் பதவி ஓய்வு பெற்றேன். இன்று கணிசமான ஓய்வூதியம் பெற்றுக்கொண்டு பதிவுலகில் குப்பை கொட்டிக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது நான் சொல்ல வந்த விஷயம் வேறு. நான் விவசாயப் பட்டப்படிப்பில் சேர்ந்த போது, என் வகுப்பில் மொத்தம் 96 பேர் சேர்ந்தோம். மூன்று வருடங்கள் கழித்து 82 பேர் படிப்பு முடிந்து வெளியில் வந்தோம். இதில் சுமார் 45 பேர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மற்றவர்கள் கேரளா, கர்னாடகத்தைச் சேர்ந்தவர்கள். அப்போது அந்த இரு மாநிலங்களிலும் விவசாயக்கல்லூரிகள் இல்லை.

இந்த 86 பேர்களும் பல வேலைகளில் பணி புரிந்து ஓய்வு பெற்றிருந்தனர். ஓரிருவர் மட்டும் சொந்தத் தொழிலில் இருந்தார்கள். இப்படி இருக்கையில் கடந்த 2006 ம் ஆண்டு, எங்களில் ஒருவருக்கு நாம் வகுப்புத்தோழர்கள் எல்லாம் ஒன்று கூடி அளவளாவினால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் வந்தது. அவர் நான் உட்பட சில நண்பர்களைக் கலந்து ஆலோசித்தார். நாங்களும் இந்தக் கருத்துக்கு ஒப்புதல் தரவே, அவர் சந்திப்பிற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். பெருமுயற்சிக்குப் பின் ஏறக்குறைய 60 நபர்களைத் தேடிக்கண்டு பிடித்து விட்டார்.

மீதி நபர்கள் மேல் லோகத்தில் சௌக்கியமாக இருக்கிறார்கள் என்று தெரிந்தது. இந்த 60 பேருக்கும் செய்தி அனுப்பி, விழா ஏற்பாடு செய்து 2006 ம் ஆண்டில் "பொன் விழா" கொண்டாடினோம். 50 பேர்கள் தங்கள் குடும்பத்துடன் வந்திருந்தார்கள்.இந்த வருடம், அதாவது 2016 ம் வருடம் நாங்கள் பட்டம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஆகவே இந்த ஆண்டில் வைர விழா கொண்டாடலாம் என்று முடிவு செய்தோம். சென்னை நண்பர் எங்கள் வகுப்புத் தோழர்களின் கணக்கை எடுத்தார். பொன் விழாவின்போது இருந்தவர்களில் இன்னும் 20 பேர் காணவில்லை. சரி இருக்கும் 40 பேரை வைத்து விழா எடுப்போம் என்றால் அதில் பாதிப்பேர் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

எப்படியோ ஒரு 20 பேரைத் தேத்தியிருக்கிறோம். விழா வருகிற பெப்ரவரி மாதம் 27 ம் தேதி கோயமுத்தூர் விவசாயப் பல்கலை வளாகத்தில் நடைபெறுகிறது. ஏறக்குறைய எல்லோருக்கும் 80 வயதிற்கு மேல் ஆகிறது. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று பார்க்கும் ஆவல் வளர்கிறது.

விழா முடிந்தவுடன் விபரமான கட்டுரை வெளியாகும்.

14 கருத்துகள்:

 1. அப்போதைய 100 ரூபாய் இன்றைக்கு பல்லாயிரத்துக்கு சமம்ப்பா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை. அன்று தங்கம் பவுன் 40 ரூபாய். அன்று என் சம்பளத்தில் 3 பவுன் வாங்கலாம். இதில் என்ன விசித்திரம் என்றால் இன்று நான் வாங்கும் பென்ஷனுக்கும் 3 பவுன் தங்கம்தான் வாங்க முடியும். எவ்வளவு பதவி உயர்வு பெற்று என்ன பயன்? எப்பொழுதும் இதே மாதிரி 3 பவுன் சம்பளத்தில்தான் இருந்தேன். நான் பணி ஓய்வு பெற்றபோது நான் இருந்த என் ரேங்கில் இப்போழுது சர்வீசில் இருப்பவர்கள் 6 பவுன் சம்பளம் பெறுகிறார்கள்.

   நீக்கு
 2. எங்கள் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்களின் ஆலும்னி மீட் ஃபெப்ருவரி 28 மற்றும் 29 தேதிகளில் பெங்களூரில் நடக்க இருக்கிறது 200 க்கும் அதிகமான முதியவர்கள் குடும்பத்துடன் பங்கு கொள்ள இருக்கிறார்கள். மீட் முடிந்தவுடன் நிகழ்ச்சி நிரல்களை நானும் பகிர்வேன்

  பதிலளிநீக்கு
 3. நல்லதொரு நிகழ்வுகள் ஐயா இந்த வருடமும் சிறப்புடன் நடைபெறும் என்று எதிர் பார்க்கிறேன் பதிவுகளைக் காண...
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 4. அந்தக் காலத்திலும் அது நல்ல சம்பளம்தான்! அதே நேரத்தில் என் அப்பா 90 ரூபாய் சம்பளம் வாங்கினார்!!

  பதிலளிநீக்கு
 5. சந்திப்பு சிறக்க எனது வாழ்த்துகள். சில வருடங்களுக்கு முன்னர் எங்கள் கல்லூரி நண்பர்கள் சிலர் ஒன்று கூடினோம் - சென்னை நீலாங்கரையில். மறக்க முடியாத நினைவுகள்....... சந்தித்த பிறகு அது பற்றியும் எழுதுங்கள்.....

  பதிலளிநீக்கு
 6. தங்கள் வகுப்புத்தோழர்களோடு கொண்டாட (சந்திக்க) இருக்கின்ற வைர விழாவிற்கு எனது வாழ்த்துக்கள்! தங்களின் சந்திப்பு பற்றிய விரிவான பதிவை எதிர் நோக்கி இருக்கிறேன். 1966 ஆம் ஆண்டு வேளாண் பட்டப் படிப்பை முடித்த நானும் எனது வகுப்புத்தோழர்களும் இந்த ஆண்டு தஞ்சையில் பொன் விழாவை கொண்டாட இருக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 7. 80 வயதிலும் இளமை என்று சொல்லும்போதே நீங்கள் விழுந்த விக்கெட்டுகளைப் பற்றியும் சொல்லியிருக்கிறீர்கள். எழுதிச் செல்லும் விதியில் கைகள் எழுதி எழுதி மேற் செல்லும் என்றாலும், ஒவ்வொரு இழப்பும் துயரம்தான். சந்திப்பு சிறப்பாக இருக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 8. ஆண்டு தொடக்கத்தில் அருமையான பதிவு. இதன் தொடர்ச்சியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன். எனது உளங்கனிந்த புத்தாண்டு – 2016 நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 9. வாழ்த்துக்கள் ஐயா இத்தனை ஆண்டுகள் கழித்தும் இவ்வளவு பேர் தொடர்பில் இருப்பதும் சந்தித்து மகிழ்வதும் அபூர்வமானது. தொடரட்டும் உங்கள் சந்திப்புகள் நூறாண்டு தாண்டியும்

  பதிலளிநீக்கு
 10. ஆஹா, 80 ஐத்தாண்டிய 20 பேர்கள் பேரெழுச்சியுடன் ஓரிடத்தில் கூடுவது என்பது மிகப்பெரிய விஷயம்தான்.

  ஆளுக்கு ஒரு கைத்தடி + ப்ளாஸ்கில் சுக்கு வெந்நீர் + கம்பளிப் போர்வை + மஃப்ளர் எனக் கொடுக்கணும் போல எனக்குள் ஓர் எழுச்சி ஏற்படுகிறது.

  இது தொடர்பான அடுத்த பதிவினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

  பதிலளிநீக்கு