வெள்ளி, 29 ஏப்ரல், 2016

நான் கேமரா வாங்கின கதை

                                            Image result for box camera images

நான் சிறுவனாக இருந்தபோது கேமரா என்றாலே ஒரு ஆச்சரியம். அதில் பிலிம் சுருளைப் போட்டு படம் எடுத்து அந்த பிலிம் சுருளை இருட்டறையில் என்னமோ செய்து நெடிவ் பிலிம் என்று ஒன்றைக் காண்பிப்பார்கள். இன்றைய எக்ஸ்-ரே மாதிரி இருக்கும். தலைமுடி எல்லாம் வெள்ளையாக இருக்கும்.

அதை திரும்பவும் இருட்டறைக்குள் கொண்டுபோய் பிரின்ட் போடுகிறேன் என்று சொல்லி அப்புறம் அதைக் காயவைத்துக் காட்டுவார்கள். அப்போது ஆட்களின் முகம் ஓரளவு தெளிவாகத் தெரியும். எல்லாம் கருப்பு வெள்ளைப் போட்டோக்கள்தான்.

இந்த பிலிம் வாங்குவது, கேமரா வாங்குவது, போட்டோ எடுப்பது. பிலிமைக் கழுவி பிரின்ட் போடுவது என்று இந்த செயல்கள் மிகுந்த சள்ளை பிடித்தவை மட்டுமல்ல, மிகுந்த பொருட்செலவும் ஏற்படுத்தக்கூடியவை. ஆகவே கேமராக்களும் போட்டோ எடுப்பதும் வசதி படைத்தவர்களின் செயல்களாகவே இருந்தன.

                              Image result for box camera images

பல விழாக்களின் போது குரூப் போட்டோ எடுப்பார்கள். அதற்கு ஒரு நல்ல போட்டோகிராபரிடம் முன்பே சொல்லி வைக்கவேண்டும். விழாவில் பங்கு கொள்பவர்கள். இவர்கள் வரும்போதே பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வருவார்கள். இவர்கள் கேமராவைக் கொண்டுவருவதற்கு ஒரு தனி வாகனம் வேண்டும். சொன்ன நேரத்திற்குச் சரியாக அரை மணி நேரம் கழித்து வருவார்கள்.

வந்தவுடனேயே காலில் வெந்நித் தண்ணியைக் கொட்டிக் கொண்டவர்கள் மாதிரி பறப்பார்கள். எல்லோரும் சீக்கிரம் வரிசையாக நில்லுங்கள். நான் இன்னொரு இடத்திற்குப் போகவேண்டும் என்று பாவலா காட்டுவார்கள். எல்லோரும் நின்ற பிறகு ஒவ்வொருவரையும் அவர்கள் நின்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவார்கள். நீங்கள் உயரம், ஆகவே சென்டருக்குப் போங்கள், நீங்கள் குட்டை, முன்னுக்கு வாருங்கள், இப்படி சொல்லி எல்லோரையும் இடம் மாற்றி நிற்க வைப்பார்கள்.

இதற்குள் அவருடைய அசிஸ்டென்ட், கேமராவை அதன் ஸ்டேண்டில் மாட்டி வைத்திருப்பான். அந்த கேமரா ஏறக்குறைய ஒரு டிரங்க் பாக்ஸ் சைசில் இருக்கும். இந்தக் கேமராமேன் அந்தக் கேமராவை ஒரு கருப்புத்துணியால் மூடிக்கொண்டு தன் தலையை அதற்குள் விட்டுக்கொண்டு ஏதேதோ செய்வார். பிறகு பிலிமை அதற்குள் வைப்பார். அந்த பிலிம் ஒரு மரப்பெட்டிக்குள் இருக்கும். அதை அந்த கருப்புத்துணிக்குள் கொண்டு போய் கேமராவில் மாட்டுவார். பிறகு அதிலிருந்து மந்திரவாதி மாதிரி ஒரு பலகையை வெளியில் இழுப்பார்.

இந்த வேலைகள் எல்லாம் கருப்புத்துணிக்குள்ளேயே நடக்கும். பிறகு கேமரா பக்கத்தில் வந்து நின்றுகொண்டு எல்லோரையும் ஒரு பார்வை பார்ப்பார். அப்புறமும் ஆட்களை கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து நிறுத்துவார். அப்புறம் எல்லோரையும் நேராக கேமராவைப் பார்க்கச்சொல்லுவார். கண்களைச் சிமிட்டாதீர்கள் என்பார் அப்புறம் ஸ்மைல் பிளீஸ் என்று சொல்லிவிட்டு கேமரா லென்ஸை மூடியிருக்கும் மூடியை ஒரு ஸ்டைலாக எடுத்து விட்டு ஒரு செகன்ட்டில் மூடி விடுவார்.

இவ்வளவுதான் படம் எடுத்தாயிற்று. ரிசல்ட் தெரிய இரண்டு நாளாகும். எங்களுக்கு வழக்கமாக போட்டோ எடுக்கும் போட்டோகிராபர் இரண்டு படம் எடுப்பதாகச் சொல்லுவார். ஆனால் ஒருபடம்தான் எடுப்பார். முதலில் எடுக்கும் படத்தில் பிலிம் இருக்காது. இப்படி எங்களை ஏமாற்றிக்கொண்டு வந்தவர் ஒரு சமயம் இரண்டு தடவையும் பிலிம் போடாமல் படம் எடுத்து விட்டார். அப்புறம் இன்னொரு நாள் திரும்பவும் போட்டோ எடுத்தோம்.

இதற்குப் பிறகு கைக்கு அடக்கமான பாக்ஸ் கேமராக்கள் வந்தன.


இவைகளிலும் பிலிம் போடவேண்டும். ஒரு பிலிம் ரோலில் இருந்து 12 முதல் 16 படங்கள் வரை எடுக்கலாம். ஆனால் இதைக் கையாள்வதற்கு கொஞ்சம் அனுபவம் தேவை. தவிர இவைகளில் ஃபிளேஷ் இல்லாததால் வெளிச்சம் குறைவான இடங்களில் படம் எடுக்க முடியாது. படம் எடுத்த பிறகு பிலிம் ரோலை ஜாக்கிரதையாக வெளியில எடுத்து போட்டோ ஸ்டுடியோவில் கொடுத்தால் அதைக் கழுவி பிரின்ட் போட்டு போட்டோக்களைக் கொடுப்பார்கள். 

போட்டோ எடுத்தவுடன் பிலிம் ரோலை வெளியில் எடுத்து பிரித்துப் பார்த்து எங்கே என் படத்தைக் காணோமே என்று கேட்ட மகா புத்திசாலிகள் எல்லாம் அந்தக் காலத்தில் உண்டு. 

இந்த வேலைகள் எல்லாம் செலவு வைக்கும் வேலைகள். பணக்காரர்களுக்கு மட்டுமே கட்டுப்படியாகும். சாதாரண ஜனங்கள் கேமராவைத் தொட்டுக் கூடப் பார்க்கமுடியாது.

பிறகு சினிமா வேகமாக வளர்ந்தபோது அதற்குத் தேவையான 35 மிமீ பிலிம்களும் அதிகமாக உற்பத்தியாயின. அவைகளை ஏன் தனிப்பட்ட நபர்களின் உபயோகத்திற்கும் பயன்படுத்தக்கூடாது என்று யாரோ ஒரு மகானுபாவனுக்குத் தோன்றி, 35 மிமீ கேமராக்கள் வந்தன. அவை மிகவும் பிரபலமடைந்தன. அந்த பிலிம் ரோலை டெவலப் செய்து பிரின்ட் போட ஆட்டோமேடிக் மிஷின்கள் வெளியாட்டிலிருந்து இறக்குமதியாகி, சக்கைப் போடு போட்டன.

பிறகு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் வளர்ந்தவுடன் டிஜிடல் கேமராக்கள் வந்தன. இவைகளில் பிலிம் போடவேண்டிய செலவு இல்லை. ஆகவே இவை சீக்கிரத்தில் பிரபலமானது. தொழில் நுட்பம் வளர வளர இவைகளில் புதுப்புது நூதன உத்திகள் புகுத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான வகை கேமராக்கள் உள்ளன. ஒவ்வொன்றும் மற்றதை விட நான்தான் உசத்தி என்று போட்டி போட்டுக்கொண்டு விளம்பரங்கள் கொடுக்கின்றன.

பிறகு செல்போனில் கேமராவைப் புகுத்தினார்கள். இப்போது கேமரா ஏறக்குறைய வெற்றிலைபாக்கு போடுவது போல் ஆகிவிட்டது. இருந்தாலும் போட்டோவிற்கு இன்னும் மவுசு இருக்கிறது. விடியாவிற்கு இன்னும் அதிக மதிப்பு இருக்கிறது. ஒவ்வொரு கல்யாணத்திற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து போட்டோ மற்றும் விடியோ எடுக்கிறார்கள்.

இப்படி உலகம் போய்க்கொண்டிருக்கையில் நான் மட்டும் தனித்தீவாக செயல்பட முடியுமா? ஆகவே நானும் ஒரு கேமரா வாங்கினேன். ஊள்ளூர் கேமராக்கள் என் போன்ற பெரிய மனுசனுக்கு பொருந்தாதாகையால் அமேசான் போய் அதாங்க அமேசான் இன்டர்நெட் கடைக்குப் போய் ஒரு டப்பா கேமரா வாங்கினேன். ஏனென்றால் அங்கு பல லட்சம் ரூபாய் விலையில் கூட கேமராக்கள் இருக்கின்றன.

நான் ஏதோ ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை என்கிற மாதிரி சில ஆயிரம் ரூபாய்களில் ஒரு கேமரா வாங்கினேன்.
                         
                               Image result for sony DSC w830 camera
இந்தக் கேமராவில் இன்னும் சீரியசாகப் படங்கள் எடுக்கவில்லை. சீக்கிரமே எடுத்து பதிவில் போடுகிறேன்.

16 கருத்துகள்:

  1. ஐயா !
    இந்த சோனியாலேயே நல்ல படங்கள் எடுக்கலாம். கையுக்கடக்கமானது.
    கலக்குங்கள்!

    பதிலளிநீக்கு
  2. அவர் கண்களைச் சிமிட்டாதீர்கள் என்று சொல்லும் போதுதான் நமக்கு நொடிக்கு இருபது முறை இமைக்கத் தோன்றும்.

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கதையைப் பார்த்தால் இந்த வருசம் நம்ம வீட்டு கொலுவுக்கு 'தீம்' கிடைச்சுருச்சு :-)

    பதிலளிநீக்கு
  4. புது காமிரா
    புதுப் படம்
    எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் ஐயா

    பதிலளிநீக்கு
  5. the story of camera is very interesting...we all know it...but the way you have described it is wonderful...liked it...

    பதிலளிநீக்கு
  6. இந்த காமெராவில் பனோரமா விடியோ நன்றாக வரும். எடுத்து 40 இன்ச் tvயில் போடக்கூடிய அளவு துல்லியம். பக்கத்தில் மருதமலை சென்று மேலிருந்து ஒரு பனோரமா ஷாட் வீடியோ எடுத்துப் பாருங்கள்.

    கொஞ்சம் போடோக்ராபிக்கு உரித்தான சொற்களான Framing, shot selection, continuous shot, long, middle, closeup shots, panning, zooming போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள். உபயோகப்படும்.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியே போனால் அப்புறம் சினிமாவுக்கோ அல்லது டிவி சீரியலுக்கோ கேமராமேன் ஆகிவிடலாங்களா?

      நீக்கு
    2. அப்படி இல்லை. பதிவு எழுதுவதால் என்ன கிடைக்கிறது.ஒரு சந்தோசம். நாம எழுதியதை நாலு பேர் பார்க்கிறான். நல்லா இருக்கு என்று சொல்றான் என்ற சந்தோசம்.அதே போல டெக்னிக் எல்லாம் தெரிஞ்சு போட்டோ எடுத்தால் நமக்கு ஏற்படும் ஒரு மகிழ்ச்சி. அவ்வளவு தான்.

      --
      Jayakumar

      நீக்கு
  7. அந்தக்காலத்திலிருந்து இந்தக்காலம்வரை கேமரா புராணத்தை மிகவும் அழகாக வர்ணித்துச்சொல்லியுள்ளீர்கள். ரஸித்துப்படித்தேன். நல்ல நகைச்சுவை + உண்மையோ உண்மை.

    பதிலளிநீக்கு
  8. //இவர்கள் கேமராவைக் கொண்டுவருவதற்கு ஒரு தனி வாகனம் வேண்டும். சொன்ன நேரத்திற்குச் சரியாக அரை மணி நேரம் கழித்து வருவார்கள்.

    வந்தவுடனேயே காலில் வெந்நித் தண்ணியைக் கொட்டிக் கொண்டவர்கள் மாதிரி பறப்பார்கள். எல்லோரும் சீக்கிரம் வரிசையாக நில்லுங்கள். நான் இன்னொரு இடத்திற்குப் போகவேண்டும் என்று பாவலா காட்டுவார்கள். எல்லோரும் நின்ற பிறகு ஒவ்வொருவரையும் அவர்கள் நின்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுவார்கள். நீங்கள் உயரம், ஆகவே சென்டருக்குப் போங்கள், நீங்கள் குட்டை, முன்னுக்கு வாருங்கள், இப்படி சொல்லி எல்லோரையும் இடம் மாற்றி நிற்க வைப்பார்கள்.

    இதற்குள் அவருடைய அசிஸ்டென்ட், கேமராவை அதன் ஸ்டேண்டில் மாட்டி வைத்திருப்பான். அந்த கேமரா ஏறக்குறைய ஒரு டிரங்க் பாக்ஸ் சைசில் இருக்கும். இந்தக் கேமராமேன் அந்தக் கேமராவை ஒரு கருப்புத்துணியால் மூடிக்கொண்டு தன் தலையை அதற்குள் விட்டுக்கொண்டு ஏதேதோ செய்வார். பிறகு பிலிமை அதற்குள் வைப்பார். அந்த பிலிம் ஒரு மரப்பெட்டிக்குள் இருக்கும். அதை அந்த கருப்புத்துணிக்குள் கொண்டு போய் கேமராவில் மாட்டுவார். பிறகு அதிலிருந்து மந்திரவாதி மாதிரி ஒரு பலகையை வெளியில் இழுப்பார்.//

    Very Good Narration Sir. I appreciate your good talent of writing & memory power :)
    சிரித்தேன் .... நன்கு ரஸித்தேன்

    பதிலளிநீக்கு
  9. கேமரா வாங்கியதுக்கு வாழ்த்துக்கள்.

    அதற்கான கதை அருமை...

    பதிலளிநீக்கு
  10. கேமராவில் படமெடுத்தலை Costly hobby என்பார்கள். நானும் ஒரு போட்டோகிராபி ஆர்வலன்தான். உங்கள் பதிவை அப்படியே வரிக்கு வரி ரசித்தேன்.

    இந்த மாதிரியான பழைய சமாச்சாரங்களை எல்லாம், சுவையாக, அப்படியே அந்தக்கால கிண்டல் உணர்வுடன் சொல்வதற்கு, இன்றைய தமிழ் வலையுலகில் உங்களை விட்டால் வேறு யாரும் கிடையாது.

    பதிலளிநீக்கு


  11. அந்த காலத்தில் புகைப்படம் எடுத்தால் ஆயுள் குறைந்துவிடும் என்று புகைப்படம் எடுத்துக் கொள்ளமாட்டார்களாம். ஆனால் இன்றோ புகைப்படம் அதுவும் கைபேசியில் Selfie எடுத்துக்கொள்ளாவிட்டால் ஜென்மசாபல்யம் ஈடேறாகாது என நினைக்கும் காலத்தில் புகைப்படக் கருவி வாங்கியிருப்பது அறிந்து மகிழ்ச்சி. விரைவில் கோவையை சுற்றியுள்ள இடங்களை தங்களின் காமிரா கண் வழியே காண விழி மேல் விழி வைத்து காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  12. சோனி கமராவில் பொதுவாக கலர் நன்றாக இருக்கும்
    அசத்துங்கள்

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் எடுக்கும் புகைப்படங்களைக் காணக் காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு