செவ்வாய், 3 மே, 2016

கந்தனின் கோடைகால கொண்டாட்டம்.


''To live is to change "  என்று இங்கிலீஸ்காரன் சொல்லிவைத்துப் போனான். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொன்மொழி. கல், மண், மரம் இவைகள்தான் மாறாமல் இருக்கும். அவை உயிரற்றவை. உயிருள்ள எதுவானாலும் மாறிக்கொண்டுதான் இருக்கும், இருக்கவேண்டும்.

சில வருடங்களுக்கு முன் ஒரு சோனி கேமரா வாங்கி உபயோகித்து வந்தேன். அது 14.2 MP + 4 x zoom  திறன் கொண்டது. வாங்கி ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. நன்றாகத்தான் படம் எடுத்துக் கொண்டு இருந்தது. ஆனாலும் என் விதி சதி செய்தது. சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் இதே மாதிரியான கேமரா 20.1 MP + 5 x zoom திறனுடன் கிடைப்பதாக அறிவித்திருந்தார்கள். அப்புறம் என்ன, உள்ளங்கையில் அரிப்பு ஆரம்பித்து விட்டது.

நான் வழக்கமாக இந்த மாதிரி சாமான்கள் வாங்கும் கடைக்குப் போனேன். சோனி கேமரா 20.1 mp யில் வேண்டும் என்று கேட்டேன். அவன் ஒரு மாடலைக் காட்டி இது 7000 ரூபாய் விலை என்றான். நான் சிறு வயது முதல் வறுமைக்கோட்டிற்கு சற்று அருகில்தான் வசித்து வந்தேன். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய்
இவைகளின் மதிப்பை நான் நன்கு அறிவேன். அவைகளைக் கையாள்வது எனக்கு சுலபமாக இருந்தது.

ஆனால் இந்த மாதிரி 7000 ரூபாய் சமாச்சாரம் எல்லாம் என் சிந்தனையின் வரம்பிற்கு அப்பாற்பட்ட விஷயம். அதனால் அந்த கேமரா அவ்வளவு விலை பெறுமா, அது நமக்குத் தேவையா என்றெல்லாம் யோசிக்க என் மூளை வேலை செய்யவில்லை. அதனால் உடனே அதை வாங்கிவிட்டேன்.

இப்போது என் கவலை இந்த பழைய கேமராவை என்ன பண்ணுவது என்பதுதான். இரண்டு கேமராக்களை வைத்திருந்தால் சக்களத்திச் சண்டை வந்து விடும். ஆகவே பழைய கேமராவை யாருக்காவது அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து எனக்குத் தெரிந்த ஒருவரின் குழந்தைக்குக் கொடுத்து விட்டேன்.

இந்த விவகாரத்தில் நான் செய்த ஒரு தவறு என்னவென்றால், இந்த சமாச்சாரத்தை என் வீட்டுக்காரியிடம் சொல்லி விட்டேன். அவள் சும்மா இருப்பாளா? என் இரு மகள்களிடமும் சொல்லி விட்டாள். அவ்வளவுதான் எல்லோரும் என்னை பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்கள். அந்தக் கேமராவை எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா என்று ஒவ்வொரு மகளும் கேட்க ஆரம்பித்தாள்.

நான் இருதலைக் கொள்ளி எறும்பு ஆனேன். அப்புறம் இன்னொரு சங்கதியும் சேர்ந்து கொண்டது. நான் புதிதாக வாங்கிய கேமராவில் உள்ள லென்ஸ் "சோனி லென்ஸ் ஆக இருந்தது. கேமரா வாங்கும்போது நான் இதைக் கவனிக்கவில்லை. நான் அன்பளிப்பு கொடுத்த கேமராவில் carl-zeiss லென்ஸ் இருந்தது. carl-zeiss லென்ஸ்தான் உலகப் பிரசித்தி பெற்ற லென்ஸ். எனக்கு மனதில் ஒரு ஏக்கம் வந்து விட்டது. அடடா, ஏமாந்து விட்டோமே என்ற எண்ணம் வந்து விட்டது.

                                 Image result for sony dsc w 830
உடனே ஏதாவது செய்தாக வேண்டுமே? அமேசானைச் சரண்டைந்தேன். அவன் ஆஹா, ஒரு இளிச்சவாயன் சிக்கினான் என்று சந்தோஷப்பட்டு, பலவிதமான கேமரா சரக்குகளை என் முன் கடை பரப்பினான். அந்த உபசாரத்தில் நான் மயங்கிப்போனேன். ஒரு கேமரா carl-zeiss லென்சுடன் இருந்தது. சரி, இதை வாங்கிக்கொள்கிறேன் என்றேன். அவன் உடனே என்னென்னமோ செய்தான். நானும் சாமி மாடு மாதிரி தலையை ஆட்டினேன்.

என் பேங்க் கணக்கில் இருந்து எட்டாயிரம் ரூபாய் அவன் கணக்கிற்குப் போனது. கேமரா வருகிறது, வந்து மொண்டே இருக்கிறது என்று ஈமெயில் செய்திகள் மணிக்கொரு தரம் வந்தன. நானும் வாயில் ஈ போவது தெரியாமல் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன். கடைசியில் ஒரு நாள் கேமரா பார்சல் வந்தே விட்டது.

அதை வாங்கி புதுப்பெண்டாட்டியைக் கொண்டாடும் நாசூக்கில் பிரித்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி.........

தொடரும்.

11 கருத்துகள்:

 1. //அதை வாங்கி புதுப்பெண்டாட்டியைக் கொண்டாடும் நாசூக்கில் பிரித்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி.........//

  ஏன்????? அதில் புதுப்பெண்டாட்டிக்கு பதிலாக பழைய பெண்டாட்டியே இருந்து பயம் காட்டி அதிர்ச்சி கொடுத்தாளா? அறிய ஆவலுடன் ..... தொடரட்டும்.

  பதிலளிநீக்கு
 2. ஐயா

  முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்கு போர்வை கொடுத்த பேகன், இவர்களைப் போல நீங்களும் வள்ளல் ஆகி விட்டீர்கள். கொடுப்பது தவறல்ல. ஆனால் நம் தவறுகளையும் சேர்த்துக் கொடுக்கக் கூடாது.

  எந்த ஒரு மின்சாதனத்தையும் கொடுப்பதற்கு முன் அதில் உள்ள memory யை அழித்து விட்டு அல்லது வேறு புதிய memory card போட்டுக் கொடுங்கள். ஏன் எனில் தெரிந்தோ தெரியாமலோ நாம் நம்முடைய முழு விவரங்கள் மற்றும் வேண்டாத படங்கள் போன்றவற்றை சேமித்து இருப்போம். அது மற்றவர்களுக்கு தெரியவேண்டிய அவசியமில்லை. அதே போன்று பழைய கணினி போன்றவற்றைக் கொடுக்கும்போது system files தவிர மற்ற partition களை format செய்து கொடுப்பது அவசியம்.( காஞ்சிபுரம் தேவனாதனை நினவு இருக்கிறதா.)

  நீங்கள் இடும் பதிவுகளில் இருந்து நானே உங்களைப் பற்றிய பல விவரங்கள் தெரிந்து கொண்டுள்ளேன். google காரனுக்கு என்னை விடவும் தெரியும்.

  இளமையில் வறுமை அனுபவித்தவர்கள் ஓரளவு கூடுதல் பணப்புழக்கம் வந்தவுடன் இளமையில் அனுபவிக்காததை இப்போதாவது அனுபவிப்போம் என்ற வகையில் சில செலவுகள் செய்வது உண்மை. அதுவும் OCD உள்ளவர்கள் மலிவு என்றவுடன் தேவையா என்பதை ஆலோசிக்காமல் செலவு செய்வார்கள்.
  பொருளை வாங்கி தானம் செய்யுமுன் தானம் பெறுபவரின் விருப்பத்தை அறிந்து அதற்கேற்ப பொருள் வாங்கி தானம் செய்வது நல்லது. (முல்லைக்கு தேர் அவசியமில்லை.ஒரு மரக்கொம்பு போதும். மயிலுக்கு போர்வை அவசியமில்லை. பாதுகாப்பான இடத்தில் விட்டால் போதும்).

  பதிவு தொடர்வது போன்று பின்னூட்டமும் தொடரும்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 3. அடடா... அது என்ன அதிர்ச்சி.... தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. செம்ம அதிர்ச்சியா இருக்கு .

  ஆனா (வீட்டு ஜனங்க ( பொண்ணு பையன் மனைவி உறவினர் உட்பட )பதிவைப் படிச்சாங்கன்னாக்க ஏமாந்துட்டு இதுக்கு ஒண்ணும் கொறச்சலில்ல என்பாங்க .அவககிட்டே இருந்து பதிவை மறைச்சிடுங்க ) இந்த சஸ்பென்சு அது இது எல்லாம் வாசகர்கள் தான் மெச்சுவார்கள் .

  பதிலளிநீக்கு
 5. ஆஹா உள்ளே என்ன இருந்ததோ தெரியவில்லையே...
  தமிழ் மணம் 3

  பதிலளிநீக்கு
 6. ஜேகே22384
  /
  இளமையில் வறுமை அனுபவித்தவர்கள் ஓரளவு கூடுதல் பணப்புழக்கம் வந்தவுடன் இளமையில் அனுபவிக்காததை இப்போதாவது அனுபவிப்போம் என்ற வகையில் சில செலவுகள் செய்வது உண்மை. அதுவும் OCD உள்ளவர்கள் மலிவு என்றவுடன் தேவையா என்பதை ஆலோசிக்காமல் செலவு செய்வார்கள்./ உடன் படுகிறேன்

  பதிலளிநீக்கு
 7. அந்த அதிர்ச்சிக்கு காரணம் அறிய காத்திருக்கிறேன்!

  பதிலளிநீக்கு
 8. வணக்கம் அப்பா நலமா?கேமரா மீது இத்தனை பிரியம் வைக்க முடியுமா?ஏன் அதிர்ச்சி?காத்திருக்கின்றேன்..

  பதிலளிநீக்கு
 9. புதுக்கேமரா ஒன்றுக்கு இரண்டாய் வாங்கி இருக்கிறீர்கள்! உங்கள் சுவாரஸ்யமான பதிவுகள் சில தகவல்களையும் தருவது சிறப்பு! நன்றி!

  பதிலளிநீக்கு