''To live is to change " என்று இங்கிலீஸ்காரன் சொல்லிவைத்துப் போனான். இது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொன்மொழி. கல், மண், மரம் இவைகள்தான் மாறாமல் இருக்கும். அவை உயிரற்றவை. உயிருள்ள எதுவானாலும் மாறிக்கொண்டுதான் இருக்கும், இருக்கவேண்டும்.
சில வருடங்களுக்கு முன் ஒரு சோனி கேமரா வாங்கி உபயோகித்து வந்தேன். அது 14.2 MP + 4 x zoom திறன் கொண்டது. வாங்கி ஐந்தாறு வருடங்கள் ஆகிவிட்டன. நன்றாகத்தான் படம் எடுத்துக் கொண்டு இருந்தது. ஆனாலும் என் விதி சதி செய்தது. சமீபத்தில் ஒரு விளம்பரத்தில் இதே மாதிரியான கேமரா 20.1 MP + 5 x zoom திறனுடன் கிடைப்பதாக அறிவித்திருந்தார்கள். அப்புறம் என்ன, உள்ளங்கையில் அரிப்பு ஆரம்பித்து விட்டது.
நான் வழக்கமாக இந்த மாதிரி சாமான்கள் வாங்கும் கடைக்குப் போனேன். சோனி கேமரா 20.1 mp யில் வேண்டும் என்று கேட்டேன். அவன் ஒரு மாடலைக் காட்டி இது 7000 ரூபாய் விலை என்றான். நான் சிறு வயது முதல் வறுமைக்கோட்டிற்கு சற்று அருகில்தான் வசித்து வந்தேன். ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய்
இவைகளின் மதிப்பை நான் நன்கு அறிவேன். அவைகளைக் கையாள்வது எனக்கு சுலபமாக இருந்தது.
ஆனால் இந்த மாதிரி 7000 ரூபாய் சமாச்சாரம் எல்லாம் என் சிந்தனையின் வரம்பிற்கு அப்பாற்பட்ட விஷயம். அதனால் அந்த கேமரா அவ்வளவு விலை பெறுமா, அது நமக்குத் தேவையா என்றெல்லாம் யோசிக்க என் மூளை வேலை செய்யவில்லை. அதனால் உடனே அதை வாங்கிவிட்டேன்.
இப்போது என் கவலை இந்த பழைய கேமராவை என்ன பண்ணுவது என்பதுதான். இரண்டு கேமராக்களை வைத்திருந்தால் சக்களத்திச் சண்டை வந்து விடும். ஆகவே பழைய கேமராவை யாருக்காவது அன்பளிப்பாகக் கொடுத்து விடலாம் என்று முடிவு செய்து எனக்குத் தெரிந்த ஒருவரின் குழந்தைக்குக் கொடுத்து விட்டேன்.
இந்த விவகாரத்தில் நான் செய்த ஒரு தவறு என்னவென்றால், இந்த சமாச்சாரத்தை என் வீட்டுக்காரியிடம் சொல்லி விட்டேன். அவள் சும்மா இருப்பாளா? என் இரு மகள்களிடமும் சொல்லி விட்டாள். அவ்வளவுதான் எல்லோரும் என்னை பிலுபிலுவென்று பிடித்துக்கொண்டார்கள். அந்தக் கேமராவை எனக்குக் கொடுத்திருக்கக் கூடாதா என்று ஒவ்வொரு மகளும் கேட்க ஆரம்பித்தாள்.
நான் இருதலைக் கொள்ளி எறும்பு ஆனேன். அப்புறம் இன்னொரு சங்கதியும் சேர்ந்து கொண்டது. நான் புதிதாக வாங்கிய கேமராவில் உள்ள லென்ஸ் "சோனி லென்ஸ் ஆக இருந்தது. கேமரா வாங்கும்போது நான் இதைக் கவனிக்கவில்லை. நான் அன்பளிப்பு கொடுத்த கேமராவில் carl-zeiss லென்ஸ் இருந்தது. carl-zeiss லென்ஸ்தான் உலகப் பிரசித்தி பெற்ற லென்ஸ். எனக்கு மனதில் ஒரு ஏக்கம் வந்து விட்டது. அடடா, ஏமாந்து விட்டோமே என்ற எண்ணம் வந்து விட்டது.
உடனே ஏதாவது செய்தாக வேண்டுமே? அமேசானைச் சரண்டைந்தேன். அவன் ஆஹா, ஒரு இளிச்சவாயன் சிக்கினான் என்று சந்தோஷப்பட்டு, பலவிதமான கேமரா சரக்குகளை என் முன் கடை பரப்பினான். அந்த உபசாரத்தில் நான் மயங்கிப்போனேன். ஒரு கேமரா carl-zeiss லென்சுடன் இருந்தது. சரி, இதை வாங்கிக்கொள்கிறேன் என்றேன். அவன் உடனே என்னென்னமோ செய்தான். நானும் சாமி மாடு மாதிரி தலையை ஆட்டினேன்.
என் பேங்க் கணக்கில் இருந்து எட்டாயிரம் ரூபாய் அவன் கணக்கிற்குப் போனது. கேமரா வருகிறது, வந்து மொண்டே இருக்கிறது என்று ஈமெயில் செய்திகள் மணிக்கொரு தரம் வந்தன. நானும் வாயில் ஈ போவது தெரியாமல் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன். கடைசியில் ஒரு நாள் கேமரா பார்சல் வந்தே விட்டது.
அதை வாங்கி புதுப்பெண்டாட்டியைக் கொண்டாடும் நாசூக்கில் பிரித்தேன். கேமராவைப் பார்த்ததும் ஒரு பெரிய அதிர்ச்சி.........
தொடரும்.