வியாழன், 4 ஏப்ரல், 2019

ஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்?

கொஞ்ச நாளா பதிவுலகப் பக்கம் வரவில்லை. கொஞ்ச நாள் என்ன? ரொம்ப நாள் ஆச்சு. சரி, இப்ப என்ன திடீரென்று இந்தப் பக்கம் என்று சிலர் கேட்கக்கூடும். அதற்காக முன்னெச்சரிக்கையாக இதோ பதில்.

எனக்கு அதிகார பூர்வ வயசு 85. ஜாதக பூர்வமாக வயசு 84. இது எப்படி நேர்ந்தது என்பதை வேறொரு பதிவில் விளக்கமாக எழுதுகிறேன். இப்ப விஷயத்திற்கு வருவோம். இப்பூவுலகில் பிறந்த ஒவ்வொருவனும் ஒரு நாள் இறந்தே ஆகவேண்டும் என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த விதி எனக்குப் பொருந்தாது என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.

சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் நானும் இந்த விதிக்குள்தான் வருவேன் போலத் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. உடலில் சிலபல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நெஞ்சில் லேசாக வலி தோன்றியது. என் டாக்டர் பெண்ணிடம் கூறினேன். அவள் உடனடியாக என்னை ஒரு ஆஸ்பத்திரிக்கு கூட்டிக்கொண்டு போய் அங்குள்ள இருதய நோய் நிபுணரிடம் விட்டாள்.


அவர் வழக்கமாகச் செய்யும் ECG, Echo Cardiogram எல்லாம் செய்து விட்டு, ஒரு  Angiogram செய்து பார்த்துடலாமே என்றார். என் பெண் அப்படியே செய்யுங்கள் என்று கூறி விட்டாள்.

இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு தடவை இப்படி ஒரு சூழ்நிலையில் ஏன்ஜியோ செய்கிறேன் என்று டாக்டர் சொன்னபோது நான் சொன்னேன். இப்படி முதலில் ஏன்ஜியோ செய்கிறேன் என்பீர்கள், அப்புறம் இரண்டு அடைப்பு இருக்கிறது, ஒரு சின்ன (?) ஆபரேஷன் செய்தால் சரியாகி விடும் என்பீர்கள். எனக்கு இந்த வித்தை எல்லாம் வேண்டாம், ஏதாவது மருந்து மாத்திரை கொடுத்து அனுப்புங்கள் என்று கறாராகச் சொல்லி மருந்துகள் வாங்கி வந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

எல்லாம் சரியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனால் யார் கண்ணோ பட்டு லேசாக நெஞ்சில் அவ்வப்போது வலி வர ஆரம்பித்தது. எனக்கும் வயதாகி விட்டபடியால், சரி உடல்நிலை எப்படியிருக்கிறது, இன்னும் எவ்வளவு நாள் உயிரோடு இருப்போம் என்று தெரிந்து கொள்ளலாம் என்ற ஆசை வந்தது. அதனால்தான் என் பெண்ணிடம் கூறி இப்படி இந்த டாக்டரிடம் செல்ல வேண்டியதாகப் போயிற்று.

சரி, அதையும் பார்த்து விடுங்கள் என்றேன். ஒரு இரண்டு மணி நேரம் என்னென்னமோ செய்து ஒரு வழியாக ஏன்ஜியோ செய்து முடித்தார்கள். என்னைக் கொண்டு போய் தனியாகப் படுக்க வைத்தார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஒரு ரூம் கொடுத்து இன்று இரவு இங்குதான் தங்க வேண்டும் என்றார்கள். பேய்க்கு வாழ்க்கைப் பட்டு விட்டுப் புளிய மரத்திற்குப் பயப்பட முடியுமா? எல்லாவற்றிற்கும் தலையாட்டினேன்.

மறுநாள் காலையில் என் பெண்ணும் வந்த பிறகு டாக்டர் அறையில் ஏன்ஜியோ ரிசல்டைப் பரிசீலித்தோம், இருதயத்திலுள்ள முக்கிய மூன்று இரத்தக் குழாய்களில் இரண்டில் 90 சத அடைப்பு இருக்கிறது. மீதி ஒரு ரத்தக்குழாயினாலும் புதிதாக உண்டான subsidiary ரத்தக்குழாய்களினாலும் இருதயம் ஓரளவு வேலை செய்து கொண்டிருக்கிறது. இதுதான் இப்போதைய நிலை என்று டாக்டர் சொன்னார்.

இந்த நிலையில் என்ன செய்யலாம் என்று மகள் கேட்டாள். ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யலாம், ஆனால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கிறது என்றார். அப்படி சர்ஜரி செய்தால் எவ்வளவு முன்னேற்றம் இருக்கும் என்று கேட்டதற்கு அவர் சுமார் 10 % முன்னேற்றம் இருக்கும் என்றார்.

இவைகளைக் கேட்டுக் கொண்டிருந்த நான் சொன்னேன். டாக்டர், எனக்கு 84 வயது ஆகிவிட்டது, இந்த ஆபரேஷனில் ரிஸ்க் அதிகம் என்று நீங்களே சொல்லுகிறீர்கள், தவிர ஆபரேஷனுக்குப் பிறகு வரும் முன்னேற்றமும் கணிசமாக இல்லை. இந்த நிலையில் இந்த ஆபரேஷனைத் தவிர்த்து மருந்து மாத்திரைகளினால் நான் சிரமப்படாத அளவிற்கு என்னைத் தயார் செய்தால் போதும், நானும் அதிகமாக அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக இருந்து விடுகிறேனே என்று சொன்னேன்.

டாக்டர் அதற்கு ஒப்புதல் கொடுத்து விட்டார். உங்கள் நிலையில் நீங்கள் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது என்று ஒரு சர்டிபிகேட்டும் கொடுத்து விட்டார். ஆகவே மக்களே, டாக்டர்கள் சொல்லுகிறார்களே என்று எந்த ஆபரேஷனுக்கும் சம்மதித்து விடாதீர்கள். அந்த ஆபரேஷன் உங்களுக்கு அவசியம்தானா, அதனால் உங்கள் உடல்நிலை மேம்படுமா என்பதையெல்லாம் தீர யோசித்து அப்புறம் முடிவு எடுங்கள்.

மருந்து மாத்திரைகள் சாப்பிட்டதில் எனக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது உடல்நிலையில் எந்த பின்னடைவும் இல்லை.

42 கருத்துகள்:


  1. உங்கள் முடிவு சரியான முடிவாகவே எனக்கு தோன்ருகிறது... இன்னும் பல ஆண்டுகள் வாழ பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங்கள் ஐயா.
    தங்களது யோசனை பிறருக்கு பயனாகும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, கில்லர்ஜி. எங்க என்னை மறந்திட்டீங்களோன்னு நினைத்துக்கொண்டு இருந்தேன். மறக்கவில்லை என்று இப்போது தெரிந்தது. மிகவும் சந்தோஷம். பேரப்பிள்ளைகள் வந்தாயிற்றா?

      நீக்கு
  3. கந்தசாமி சார்... உங்களுக்கு டாக்டர் பெண் இருப்பதால் இரண்டாவது ஒபினியனும் கிடைத்துவிடுகிறது, டாக்டர்களும் பயமுறுத்துவதில்லை.

    நான் பொதுவா நினைக்கிறது..... கடவுள்(இயற்கை) கொடுத்த மிஷினை மனிதன் கைவைக்கும்போது இன்னும் பிரச்சனைகளையே அது உருவாக்க வாய்ப்பாயிடும்னு

    பதிலளிநீக்கு
  4. இதுல இன்னொரு விஷய்ம் சொல்ல நினைக்கறேன். பப்ளிஷ் பண்ணலைனா பரவாயில்லை.

    தமிழ் இளங்கோ சாருக்கும் இதே மாதிரி ஒபினியன் சொன்னாங்களாம். 3 1/2 லட்ச ரூபாய் செலவழித்து ஆபரேஷன் பண்ணிக்கொள்ளும்படி. அவர்கிட்ட போன டிசம்பர்ல பேசினபோது இதைச் சொன்னார். தமிழ் இளங்ஓ சார், ஆபரேஷன் பண்ணிக்க வேண்டாம்னு தீர்மானித்துவிட்டார். ஆனால் அவர் மனதளவுல பாதிக்கப்பட்டாரா இல்லை உடலளவுல பாதிக்கப்பட்டாரான்னு தெரியலை. டிசம்பர்லயே அவரால எங்கயும் அலைய முடியலை. மாடி ஏற முடியலை. பிஸிக்கலா அவர் கஷ்டப்பட்டார்னு பிறகு நான் புரிந்துகொண்டேன்.

    நான் நினைப்பது, ஒரு ஏஜ்ஜுக்கு மேல, தேவையில்லாத, உத்தரவாதம் இல்லாத ஆபரேஷன் செய்யவேண்டாம், மருந்து மாத்திரையிலேயே சரிபண்ணிக்கலாம் என்று நீங்க நினைப்பது மிகவும் சரின்னு.

    பதிலளிநீக்கு
  5. உங்களுக்கு வயசாயிடுச்சா.....வயசானா..இப்படியான நல்ல யோசனை எல்லாம் வராதே...!!! ஐயா.. பயமறுத்தாதிங்க..அய்யா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யார் சொன்னது எனக்கு வயசாயிடுச்சுன்னு? 84 வயசெல்லாம் ஒரு வயசா? ஏதோ 100 வயசு ஆயிடுச்சுன்னா வயசாயிடுச்சுன்னு சொல்லலாம். ஆனா அப்பவும் நான் சொல்ல மாட்டேன்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. நன்றி, நாகராஜ். உங்கள் பெண் கல்யாணத்தைப் பார்க்காமல் நான் போக மாட்டேன்.

      நீக்கு
    2. கந்தசாமி சார்... உங்களை அந்தக் கல்யாணத்தில்தான் சந்திக்க முடியுமா? அதற்கு முன்னால் எந்தப் பதிவர் வீட்டில் விழா வருதுன்னு நமக்குச் சொன்னால் நல்லது

      நீக்கு
    3. வைகோ சாரிடம் சொல்லி ஏற்பாடு செய்தால் ஆச்சு.

      நீக்கு
    4. நெல்லைத்தமிழன் ஸ்வாமீ, நீர் ஒரு முரட்டு INNOVA AC CAR போகவர பேசி எடுத்துக்கொண்டு, இங்கு என் வீட்டுக்கு வந்து சேரவும்.

      வரும்போது அதில் டிக்கி நிறைய குண்டா திரட்டுப்பால் நிறைய டப்பாக்கள் இருக்கட்டும்.

      அதுபோல மெல்லிசாக சீவி வறுக்கப்பட்ட நேந்திரங்காய் சிப்ஸும் நிறைய பாக்கெட்டுகள் இருக்கட்டும்.

      ரஸ்தாளி வாழைப்பழங்கள் + கமலாரஞ்சு பழங்கள் ஒரு கூடை நிறைய தனியாக இருக்கட்டும்.

      ஃப்ளாஸ்க் டைப் எவர்சில்வர் ட்ரம்மில், சூடான சுவையான காஃபி (Sugar less) ஆக, பேப்பர் கப் களுடன் இருக்கட்டும்.

      தனித்தனியே ஒவ்வொரு எவர்சில்வர் தூக்குகளில் புளியோதரை + தயிர் சாதம்* (*பால் விட்டு பிசையணும் - அப்போதுதான் புளிக்காமல் ஜோராக இருக்கும்), மாவடு ஊறுகாய் + அரிசி அப்பளம், சேவை வடாம்,

      ஜவ்வரசி வடாம் போன்றவை தனியாக நமுத்துப்போகாமல் கொண்டுவந்து விடவும்.

      நல்ல ஒஸத்தியான தீர்த்தம் மிக முக்கியம். மறந்துவிட வேண்டாம். நிறையவே கொண்டு வரவும்.

      அந்த முரட்டு வண்டியில், மேற்படி சரக்குகளுடன் டிரைவரைத் தவிர, நானும் நீரும் மட்டும்தான் இருக்கணும். வேறு யாரையும் அழைத்து வர வேண்டாம்.

      இவையெல்லாம் போகவர நம் பயணத்திற்கும் பயன்படும். பெரியவர் முனைவர் கந்தசாமி ஐயா அவர்களுக்குக் கொடுக்கவும் பயன்படும்.

      வயதில் மிக மூத்த பதிவரான அவரை நேரில் அவர் வீட்டுக்குச் சென்று தரிஸித்துவிட்டு வருவதுதான் மரியாதையாக இருக்கும் என்பதால் உமக்கு இத்தனை விஷயங்களையும் புட்டுப்புட்டு எடுத்துச் சொல்லியுள்ளேன்.

      இதற்கெல்லாம் சில லக்ஷங்கள் பணம் செலவாகுமே என யோசிக்காதீங்கோ. திருச்சி வழியாக சென்னை to கோவை ஒரு நாள் பயணம், கோவையில் ஒரேயொரு நாள் ஹால்ட். நம்மைக்கண்டதும் பேரெழுச்சி ஏற்பட்டு பெரியவர் முனைவர், நம்மை கோவை அன்னபூர்ணாவுக்கு அழைத்துச் சென்று ஆனந்தப்ப-டு-த்-தி விடுவார். மறுநாள் திருச்சி வழியாக கோவை to சென்னை. மொத்தம் மூன்றே நாட்கள் ஜாலியாக பயணம்.

      பணம் இன்று வரும் நாளை போகும். நட்பும் உறவும் எப்போதும் நீடிக்க வேண்டும். அதுதான் மிக முக்கியமாகும்.

      ’எதைக் கொண்டு வந்தோம். எதைக் கொண்டு போகப்போகிறோம்.’ அதனால் எதையும் யோசிக்காமல் ஓரிரு லக்ஷங்களை நம் லக்ஷியம் நிறைவேறும் பொருட்டு ஒதுக்கி எடுத்துக்கொண்டு, அதற்கான ஏற்பாடுகளை உடனடியாகச் செய்துவிட்டு எனக்குத் தகவல் கொடுக்கவும்.

      >>>>>

      நீக்கு
    5. முதியவர் முனைவர் ஐயா, மும்முறை என் இல்லம் தேடி ஓடி வந்துள்ளார்.

      http://gopu1949.blogspot.com/2014/04/blog-post.html

      http://gopu1949.blogspot.com/2015/10/2015-via.html

      http://gopu1949.blogspot.com/2017/03/15032017.html

      நான் ஒருமுறையாவது அவரை அவர் இல்லத்தில் சந்திக்கணும். அவரின் உள்ளத்தில் நிரந்தரமாக குடியேறணும். அது உம்மால் தான் நடக்கப்போவதாக நேற்று கனவு கண்டேன்.

      என் கனவு பலிக்குமா? என்பதெல்லாம் பெருமாளாகிய உம் செயலில் மட்டுமே அடங்கியுள்ளது. உம்முடைய சாதகமாக பதிலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். தங்கள் ஸித்தம் என் பாக்யம் !

      அன்புடன் கோபு

      நீக்கு
    6. நெல்லைத் தமிழன் எந்த ஊரில் இருக்கிறார்?

      நீங்கள் கோவைக்கு வரமுடியாவிட்டால் ஒரு நாளைக் குறித்தால் நான் அங்கு வந்து விடுகிறேன். ஒரு நல்ல ஓட்டலில் நம் சந்திப்பைக் கொண்டாடுவோம்.

      நீக்கு
    7. //நெல்லைத் தமிழன் எந்த ஊரில் இருக்கிறார்?//

      பல வெளிநாடுகளிலெல்லாம் சுற்றிவிட்டு, தற்சமயம் சென்னைக்குத் திரும்பி அங்கேயே செட்டில் ஆகி விட்டவர். ஓரளவு பசையுள்ள ஆசாமி மட்டுமல்லாமல், நன்கு செலவழிக்க தாராளமான மனம் உள்ள ஆசாமியும்கூட. எனக்கு உங்கள் மீது கொள்ளைப்பிரியம் போல அவருக்கு என் மீது கொள்ளைப் பிரியம் உள்ளது. மஹா கெட்டிக்காரர். நல்லவர். வல்லவர். சமையல் உள்பட அனைத்தும் அறிந்தவர். புத்திசாலி.

      இதோ எங்கள் சந்திப்புக்கான பதிவினைப் பாருங்கோ: http://gopu1949.blogspot.com/2018/11/blog-post.html

      //நீங்கள் கோவைக்கு வரமுடியாவிட்டால் ஒரு நாளைக் குறித்தால் நான் அங்கு வந்து விடுகிறேன். ஒரு நல்ல ஓட்டலில் நம் சந்திப்பைக் கொண்டாடுவோம்.//

      ஆஹா ..... தங்களது தன்னம்பிக்கைக்குத் தலை வணங்குகிறேன். இருப்பினும் அதுபோல ரிஸ்க் எடுக்க வேண்டாம். ஆஞ்சநேயர் போன்ற நல்ல பலசாலியான நெல்லைத்தமிழன் என்கிற முரளி அவர்களே என்னை முரட்டு இன்னோவா ஏ.ஸி. காரில் அழைத்துக் கொண்டு, கோவைக்கு வந்து விடுவார். ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      அன்புடன் கோபு

      நீக்கு
    8. //டிக்கி நிறைய குண்டா திரட்டுப்பால்// - ஆசையே துன்பத்திற்குக் காரணம்.

      //டிரைவரைத் தவிர, நானும் நீரும் மட்டும்தான் இருக்கணும்.// - இரண்டுபேருக்கு ஒரு இனோவா என்றால் படிக்கறவங்க, நாம ரெண்டுபேரும் பகோடா காதர் ரேஞ்சுக்கு என்று நினைத்துக்கொள்வார்கள்.

      //வயதில் மிக மூத்த பதிவரான அவரை நேரில் அவர் வீட்டுக்குச் சென்று தரிஸித்துவிட்டு வருவதுதான் // - உண்மை. அதிலும் சரஸ்வதி கடாட்சம் பொருந்திய அவரைக் காண்பதே தரிசிப்பதுபோல்தான்.

      //சில லக்ஷங்கள் பணம் செலவாகுமே என யோசிக்காதீங்கோ// - உங்களுக்கென்ன சொல்லிடுவீங்க... நான் இனிமேல்தானே என் கடமைகள்லாம் நிறைவேற்றணும். எனக்கென்ன, ஒரு துரியோதனன் இருக்கிறானா, ராஜ்ஜியத்தையும் கொடுத்து, நினைத்தபடியெல்லாம் செலவழித்து 'நீ பேர்வாங்கிக்கொள்' என்று கர்ணனைச் சொன்னதுபோல் சொல்வதற்கு?

      //பணம் இன்று வரும் நாளை போகும்.// - அது சரி... நாளை போவதற்குப் பதில், இன்றைக்கே அந்தப் பணத்தைப் போகச் சொல்லுகிறீரே அது நியாயமா? ஹாஹா

      நீக்கு
    9. நீங்கல் உங்கள் இடுகைகளின் விவரம் தரவே வேண்டாம். மனதில் பசுமையாக நினைவில் இருக்கு (மூன்றாவது முறை நீங்கள் சந்தித்தபோது சால்வை போர்த்தாததும் எனக்கு நினைவில் இருக்கு).

      கோபு சார்... நீங்கள் முனைவர் கந்தசாமி சாரை அன்புடன் சந்திக்க நினைக்கிறீர்களா இல்லை, A1 Brand சிப்ஸ், முறுக்கு, வறுவல்கள், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பா ஆகியவற்றிர்க்கு அடிபோடுகிறீர்களா என்று தெரியவில்லை.

      நீக்கு
    10. //ஓரளவு பசையுள்ள ஆசாமி மட்டுமல்லாமல், நன்கு செலவழிக்க தாராளமான மனம் உள்ள ஆசாமியும்கூட. // - இது ஏதோ வஞ்சப் புகழ்ச்சி மாதிரி இருக்கே... இப்படீல்லாம் எழுதினா, நான் திருச்சிக்கு வரும்போது, நாந்தான் உங்களை ராமா கஃபேக்கும் மதுரா உணவகத்துக்கும் கூட்டிக்கிட்டுப் போவேன்னு நினைக்கறீங்களா? நான் நெல்லைக்காரன். வரும்போது சில்லறைகள் மட்டும்தான் எடுத்துவருவேன். ஹாஹா.

      நீக்கு
    11. மீண்டும் நீங்களும் முனைவர் கந்தசாமி சாரும், மற்ற பதிவர்களும் சந்திக்கும் வாய்ப்பு அமையட்டும். கந்தசாமி சாரின் மகள் அவருக்கு 30 கிலோமீட்டர் சுற்றளவுக்குமேல் கார் உபயோகப்படுத்தக் கூடாது என்று சொல்லியிராவிட்டால், அவர் திருச்சிக்கே காரில் வந்துவிடுவார். மனதில் அவர் இளைஞர்.

      நீக்கு
    12. 30 கிலோ மீட்டர் பவுண்டரி, நான் தனியாக கார் ஓட்டும்போதுதான். டிரைவரை வைத்துக்கொண்டு போக இந்த ரெஸ்ட்ரிக்ஷன் எல்லாம் இல்லை.

      உங்களுக்கு சவுகரியப்படும் நாள் எதுவாக இருந்தாலும் நான் திருச்சி வந்து விடுகிறேன். திருச்சி செலவுகள் முழுவதும் அடியேன் உபயம்.

      இல்லை, நீங்கள் கோவை வந்தால் நான்கு நாள் இருக்கும்படியாக வாருங்கள். ஊட்டி, மருதமலை. பேரூர், இப்படி பல இடங்கள் இருக்கின்றன. எல்லா இடங்களுக்கும் கூட்டிக்கொண்டு போய்க் காண்பிப்பது என் பாக்கியம்.

      நீக்கு
    13. என்னசார் வைகோவை இப்படி ஏ 1 சிப்ஸ்ஸுக்கும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்பாக்குக்கும் ஏங்குகிறவர் மாதிரி சொல்லிட்டீங்க. அவர் பார்க்காத சிப்ஸ்ஸுகளா, மைசூர்பாக்குகளா?

      நீக்கு
    14. கந்தசாமி சார்... இன்றைக்குத்தான் இந்தப் பதில்களைப் பார்க்க நேர்ந்தது.

      //மைசூர்பாக்குக்கும் ஏங்குகிறவர் மாதிரி சொல்லிட்டீங்க.//

      கோபு சார் மீது எனக்கு நிரம்ப அன்பும் மரியாதையும் உண்டு. அவரை அன்பாக கலாய்த்தேன்.

      அப்போ அப்போ இடுகைகள் தொடர்ந்து எழுதுங்க சார்.. உங்களை மாதிரி அனுபவசாலிகள்தாம் எங்களுக்கு உத்வேகம் தருபவர்கள்.

      நீக்கு
  7. நீங்கள் நல்ல மன உறுதி உள்ளவர் என்பது என் நம்பிக்கை. நூறைக் கடந்து நிச்சயமாக வாழ்வீர்கள். வாழ்த்துகள்.

    நல்ல வெய்யிலில் 20 நிமிடம் முதல் முப்பது நிமிடம்வரை உடம்பைக் காய விடலாம். அந்த நேரம் முழுவதும் சீராக[யோகா அது இதுன்னு சிரமப்படாம] மூச்சை இழுத்து விட வேண்டும்.

    இப்படித் தொடர்ந்து செய்வதால், கெட்ட கொழுப்பு கரைய வாய்ப்பிருக்கிறது. மூச்சை இழுதுவிடுவதன் மூலம், ரத்தத்தில் பிராணவாயு நன்கு கலந்து ரத்தம் சுத்தமடையும். அடைப்பு குறையாவிட்டாலும் நிச்சயம் அதிகம் ஆகாது.

    நான் படித்தும் கேட்டும் அறிந்தது இது.

    மகள் மருத்துவர். நீங்களும் நல்ல படிப்பாளி. யோசியுங்கள்.

    சரியென்று தோன்றினால் தவறாமல் இந்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்யுங்கள்.

    மீண்டும், இன்னும் மிகப் பல ஆண்டுகள் நலமுடன் நீங்கள் வாழ என் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  8. அன்புள்ள ஐயா,

    தங்களின் தன்னம்பிக்கைக்குத் தலை வணங்குகிறேன். தங்களுக்கு எதுவும் ஆகாது. தைர்யமாக இருங்கோ. தங்கள் மகளே மருத்துவராக இருப்பதால் அவரின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொண்டு, மருந்து மாத்திரைகளை வேளா வேளைக்குத் தவறாமல் சாப்பிட்டு வாருங்கள். தேவைப்பட்டால் மீண்டும் சிறிது இடைவெளியில் ஆஸ்பத்தரிக்குச் சென்று, மீண்டும் டெஸ்ட்கள் செய்துகொள்ளுங்கள்.

    தாங்கள் பல்லாண்டு ஆரோக்யமாக வாழ நானும் பிரார்த்தித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் கோபு

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. Gopalakrishnan Vai.
      11:59 AM (1 hour ago)
      to me


      Translate message
      Turn off for: Tamil
      [மன அலைகள்] ஒருவனுக்கு வயதானால் என்ன ஆகும்? ஐப் பற்றிய புதிய கருத்துரை.


      டியர் சார், நமஸ்காரம்.

      தங்கள் பதிவுக்கு நான் கொடுத்திருந்த பின்னூட்டம் என்ன ஆச்சு? இதுவரை வெளியிடப்படவில்லை. SPAM இல் உள்ளதா எனச் செக் பண்ணுங்கோ, ப்ளீஸ்.

      அன்புடன் கோபு





      DrPKandaswamyPhD
      12:50 PM (12 minutes ago)
      to Gopalakrishnan

      பதிவுகள் போட்டு ரொம்ப நாள் ஆகி விட்டதல்லவா? கொஞ்சம் தலை கால்
      புரியவில்லை. மன்னிச்சுங்கோ. தேடிப்பிடிச்சு போட்டுடறேன்.
      அன்புள்ள,
      ப.கந்தசாமி

      எப்படி? உங்க பின்னூட்டம் எப்படியோ “குப்பைக் கூடைக்குப்” போய்விட்டது. விடுவேனா? தேடிப்பிடித்து போட்டுவிட்டேன்.
      :ங்கள் அன்பிற்கு நன்றி.இன்னும் திருச்சியில் எவ்வளவோ வேலைகள் பாக்கி இருக்கின்றன. அதையெல்லாம் பார்க்காமல் போவேனா?

      நீக்கு
  9. Sir!

    You might want to take "one Aspirin a day" besides other cholesterol reducing statin drugs. Your "doctor-daughter" may have suggested this already. Aspirin can help you thinning your blood. Some people are allergic to Aspirin- you might want to make sure you are not allergic. The biggest cure for any disease is being just "optimistic" and thinking that "we are healthy". Just forget about the blockage and do the routine you have been doing for all these years, you will live for another 100 years, Sir. Take care!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் யோசனைகளை எல்லாம் உள்ளடக்கித்தான் மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள்.

      நீக்கு
  10. மறுபடி உங்களை இங்கு பார்ப்பதில் மகிழ்ச்சி. உடல் நலம் பார்த்துக்கொள்ளுங்கள். அறுவை சிகிச்சை வேண்டாம் என்பது எல்லோருக்கும் பொருந்தும் என்று சொல்லமுடியாதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக் கருத்து 80 வயதைத் தாண்டியவர்களுக்குத்தான் பொருந்தும்.

      நீக்கு
  11. கவனமாக இருங்கள். உடம்பு ஒத்துழைத்தால் அவ்வப்போது எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்ன உடல் சார்? நம்ம உடல் நம்ம சொன்னபடி கேக்கலைன்னா அப்புறம் அதை வச்சுட்டு என்ன பண்றது?

      நீக்கு
  12. நலமுடன் இருங்க கந்தசாமி சார்.... தொடர்ந்து எழுதுங்க. உங்களை உற்சாகப்படுத்த நாங்கள் இருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  13. உங்களின் மன தைரியம் என்றும் உங்களை காக்கும் ஐயா...

    பதிலளிநீக்கு
  14. ஐயா

    போவது நிசசயம் என்றாலும் போவதைத் தள்ளிப்போடுவது மனித இயல்பு. அவரவர் உடம்பைப் பற்றி தீர்மானிப்பது அவரவர் உரிமை. என்றாலும் மற்றவர்களுடைய ஆலோசனைகளையும் கவனத்தில் கொள்வது நல்லது. பைப்பாஸ் செய்யாவிடினும் ஸ்டென்ட் வைத்துக்கொள்ளலாம். 2 அல்லது 3 நாட்கள் மருத்துவ மனையில் இருந்தால் போதும். ஆலோசியுங்கள்.

    Jayakumar
    ​பி கு.
    இவ்வருட வருமானவரி சட்ட மாற்றங்களை விவரித்து ஒரு கட்டுரை எழுதலாமே.


    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா, ஏன்ஜியோகிராம் எடுப்பதற்குள்ளேயே டாக்டர்கள் திணறிப்போய்விட்டார்கள். அதுதான் அனைத்து ரத்தக்குழாய்களிலும் கொழுப்பு படிந்திருக்கிறதே. ஏன்ஜியோ ட்யூபை ஒரு ரத்தக்குழாயில் ஏற்றப்பார்த்து அது முடியாமல் இன்னொரு ரத்தக்குழாயில் ஏத்தி ஒரு வழியாக டெஸ்ட்டை முடித்தார்கள். ஸ்டென்ட் வைப்பது எல்லாம் முடியாத ஒன்று. ஓபன் ஹார்ட் சர்ஜரி இன்றைய டாக்டர்களுக்கு எளிது. ஆனால் எனக்கு ஓபன்ஹார்ட் சர்ஜரி செய்தால் அநேகமாக அதுவே என் வாழ்வின் இறுதிக்கட்டமாக இருக்கும்.

      வருமான வரி சட்ட மாற்றங்களைப் புரிந்து கொள்வது ஓன்றும் பெரிய ஆர்யவித்தை இல்லை. அநேகமாக எல்லோரும் இதற்குள் ஆராய்ச்சி பண்ணித் தெரிந்திருப்பார்கள்.

      நீக்கு
  15. சார், உங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.
    இன்று தான் நான் ஒரு பாட்டியை பற்றி படித்தேன். 92 வயதில் ஓட ஆரம்பித்தது 102 வயதில் கோல்ட் மெடல் வாங்கியிருக்கிறார்.
    அதே மாதிரி நீங்களும் சாதனை பண்ணனும்.

    சாப்பிட்டவுடன் (அல்லது சாப்பிட முன்) தண்ணீர் குடிக்கலாமா அல்லது கூடாதா? உங்களுடைய பழக்கம் என்ன என்று சொல்ல முடியுமா?

    - Alien

    பதிலளிநீக்கு
  16. Wish You a speedy recovery and long life.Have been missing your blogs for a long time. Please Take care.

    பதிலளிநீக்கு
  17. நீங்கள் நலமுடன் வாழ என் பிரார்த்தனைகள்.

    என் மாமா 35 வயதில் முதல் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். அடுத்த 15 வருடங்களில் மறுபடியும் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இப்போதும் வெறொரு இரத்தக்குழாயில் பிரச்சினை இருக்கிறது. இப்போதும் 74 வயதிலும் காலையில் உடல் பயிற்சிகள், பிறகு உணவுக்கட்டுப்பாடு என்று மகிழ்வுடன் வாழ்கிறார்.
    என் அம்மா இன்று தன் நூறாவது வயதிலும் மகிழ்வுடன் இருக்கிறார்கள். எங்கள் மருத்துவ ஆலோசனைகளை ஏற்பதில்லை. தனக்குத்தோன்றினால் மட்டுமே மருத்துவரிடம் செல்வது என்றிருக்கிறார்கள்.

    இவர்களைப்போல் நீங்களும் மனத்துணிவு உள்ளவர்கள். நிச்சயம் நோயை புறம் தள்ளி வெல்வீர்கள்!!

    பதிலளிநீக்கு