கனவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 8 ஆகஸ்ட், 2016

ஆசை இருக்கு காதல் பண்ண, அதிர்ஷ்டம் இருக்கு ஆடு மேய்க்க

இந்தப் பதிவிற்கும் சுவாதி-ராம்குமார் நிகழ்விற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்து கொள்கிறேன்.

பொதுவாக பலரும் தங்கள் வாழ்க்கையை இன்ன மாதிரி அமைத்துக் கொள்ளவேண்டும் என்று ஒரு கனவு வைத்திருப்பார்கள். பெரிய வேலை, பெரிய வீடு, அழகான மனைவி, பெரிய கார் என்று இப்படி ஆசை வைத்திருப்பார்கள். இப்படி ஆசை வைப்பதில் தவறில்லை. ஆனால் அவைகளை அடைய தேவையான உழைப்பைத் தருவதற்கு அவர்கள் முன் வருவதில்லை.

முதலில் படிப்பு. படிக்கும்போது படிப்பில் கவனம் வைத்து நல்ல மார்க்குகள் வாங்கி மேல் படிப்புகள் படித்து தன்னை ஒரு நல்ல உத்தியோகத்திற்கு தயார் செய்து கொள்ளவேண்டும். அப்படி படிக்கும் காலத்தில் ஆணாகட்டும், பெண்ணாகட்டும், காதலில் ஈடுபட்டால் அவர்கள் வாழ்க்கை சின்னாபின்னமாகி விடும் என்பதை உணர்வதில்லை.

ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ என்னென்ன தேவை என்று கூடப் பிரியாத வயதில் காதலில் ஈடுபடுகிறவர்கள் புத்தியில்லாதவர்கள். அப்படி ஈடுபடும் பலரும் சராசரிக் குடும்பத்தில் அல்லது ஏழ்மைக் குடும்பத்தில் இருந்து வருகிறார்கள். இப்படி நடைபெறும் காதல் கல்யாணங்கள் நூற்றுக்கு தொண்ணூறு சதம் தோற்றுப் போகின்றன.

வீட்டில் ஆடு மேய்ப்பவனுக்கு காதல் என்ன வேண்டிக்கிடக்கிறது. இப்படிக் காதல் செய்பவர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் பல பேர். காதல் புனிதமானதாம். ஆஹா, புனிதம் என்று சொல்லிக்கொண்டு இருந்தால் வயிறு நிறைந்து விடுமா?

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நல்ல படிப்பு, நல்ல வேலை என்று ஏற்பாடு செய்து அவர்களை முன்னேற்றுவதை விடுத்து, அவர்கள் தலைவர்கள் சொல்லிக்கொடுக்கும் பாடம் என்னவென்றால் நீ மேல் ஜாதியில் ஒரு பெண்ணைப் பார்த்து கல்யாணம் செய்து கொள், சீக்கிரம் முன்னேறலாம் என்று சொல்லிக்  கொடுக்கிறார்கள்.

இந்த மேல் ஜாதிப் பையன்கள் ஒருவரும் இப்படி தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்களை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. பெண்கள் மட்டும் ஏன் இப்படி புத்தி கெட்டுப்போய் அலைகிறார்கள் என்பது புரியவில்லை? ஜாதிகள் மறைவது என்பது இந்தியாவில் சாத்தியமில்லை.

உண்மை கசக்கும். பொய்தான் இனிக்கும். எனக்குப் பொய் பேசத் தெரியவில்லை என்பது ஒரு குறையே.  ஜாதி சமரசம் பேசுபவர்கள் இந்தப் பதிவைப் படிக்கவேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அப்படிப் படித்து விட்டு என்மீது ஆங்காரம் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை.

புதன், 27 பிப்ரவரி, 2013

1.தேவலோகத்தில் ஒரு புரட்சி


நான் நேற்றிரவு ஒரு கனா கண்டேன். அந்தக் கனவில் மும்மூர்த்திகளும் தோன்றி, மகனே, உன்னால் ஒரு பெரிய காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு நீ தயாரா என்று கேட்டார்கள். ஆஹா, மும்மூர்த்திகளும் கேட்கும்போது மறுத்தால் நன்றாக இருக்காது என்று, சரி என்று சொன்னேன்.

அப்போது அவர்கள் சொன்னதின் சுருக்கம்:

முமூ (மும்மூர்த்திகள்) - மகனே, இந்திர லோகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். அங்கே தற்போது இந்திரன் என்று ஒரு கையாலாகாத ராஜா ஆண்டு கொண்டிருக்கிறான். அவன் சரியான ஒரு சோம்பேறி. எப்போதும் டான்ஸ் பார்த்துக்கொண்டு நாட்டின் நலனைக் கவனிப்பதில்லை. தேவர்கள் எல்லோரும் சோர்ந்திருக்கிறார்கள். நீதான் அந்த நாட்டை சீர்திருத்தவேண்டும்.

நான் - ஐயன்மீர், எனக்கு வயதாகி விட்டது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. என்னால் எப்படி இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும்?

முமூ (மும்மூர்த்திகள்) - தேவலோகத்திற்கு வந்து ஒரு "புல்" பாட்டில் சோமபானம் அருந்தி ஒரு மணி நேரம் ஊர்வசியின் நாட்டியம் பார்த்தால் உன் சோர்வெல்லாம் பறந்து போய்விடும்.

நான் - ஊர்வசி இப்போ அங்கதான் இருக்காங்களா?

முமூ - மகனே, அது சினிமா ஊர்வசி இல்லை, நிஜ ஊர்வசி. நீ முதலில் புறப்படு. காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.

நான் - அது சரி, அங்கே நான் என்ன சீர்திருத்தம் வேண்டுமானாலும் செய்யலாமா?

முமூ - நீ என்ன செய்தாலும் யாரும் உன்னை ஒன்றும் கேட்க மாட்டார்கள். கேட்கக்கூடாது என்று உத்திரவு போட்டிருக்கிறோம். தவிர, உனக்கு சர்வ சக்தியும், சர்வக்ஞானமும் சர்வ பராக்கிரமும் கொடுத்திருக்கிறோம். நீ கிழித்த கோட்டை ஒருவரும் தாண்ட மாட்டார்கள்.   உனக்கு 100 ஆண்டுகள் டைம் கொடுத்திருக்கிறோம். அதற்குள் நீ எப்படியாவது தேவலோகத்தை சுறுசுறுப்பாக்கிவிடவேண்டும்.

நான் - அப்படியே செய்கிறேன். எனக்குத் துணையாக பூலோகத்திலிருந்து இரண்டு பேர் வேண்டுமே?

முமூ - எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். சீக்கிரம் புறப்பட்டால் போதும்.

நான் உள்ளூர் பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூட்டிக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன்.

அவர்களுடைய புஷ்பக விமானத்தில் ஏறிச்சென்றோம். அந்த புஷ்பக விமானம் அரதப் பழசு. லொடலொடவென்று சத்தம். உட்காருவதற்கு மரப் பெஞ்சுகள். ஏர் ஹோஸ்டஸ் ஒருவரும் இல்லை. சரி. நாம் பதவி ஏற்றதும் முதலில் நம்முடைய உபயோகத்திற்காக சவுதி மன்னர் டிசைன் செய்திருக்கும் விமானம் போல் ஒன்று வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எல்லோரும் தேவலோகம் போய்ச் சேர்ந்தோம்.  அங்கு இறங்கியதும்தான் கவனித்தேன். எங்களை வரவேற்க ஒரு ஈ, எறும்பு கூட விமான நிலையத்திற்கு வரவில்லை. மும்மூர்த்திகளிடம் என்ன, நம்மை வரவேற்க ஒருவரையும் காணவில்லையே என்றேன். அதற்கு விஷ்ணு, நாட்டின் நிலை எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது பார்த்தாயா, இதையெல்லாம் சீர்திருத்தத்தான் உன்னை வரவழைத்திருக்கிறோம் என்றார்.
ஒரே வருடத்தில் பாருங்கள். நான் என்னவெல்லாம் மாற்றிக்காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு இந்திர சபைக்குச் சென்றோம். அங்கு இந்திரன் ரம்பை ஊர்வசியின் நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டு நாங்கள் வந்ததையே கவனிக்கவில்லை. பிரம்மா அவனருகில் சென்று அவனைத் தொட்டபிறகுதான் அவன் நாங்கள் வந்ததை அறிந்து எங்களை வரவேற்றான்.

நாட்டியம் பார்க்கத் தடை ஏற்பட்ட வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது. மும்மூர்த்திகளும் அவனைப் பார்த்து இதோ இங்கு வந்திருக்கும் மானிடன்தான் இனிமேல் இந்த தேவலோகத்திற்கு அரசன். நீ இனி ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்றார்கள். இந்திரனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

அதெப்படி மூன்று மாத நோட்டீஸ் கொடுக்காமல் என் பதவியைப் பறிக்கலாம் என்றான். மும்மூர்த்திகள் அதற்குப் பதிலாக உனக்கு மூன்று மாத சம்பளம் இதோ, வாங்கிக்கொண்டு உடனடியாக இடத்தைக் காலி செய் என்றார்கள். அவன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நான் தேவர்களைச் சேர்த்துக்கொண்டு ஸ்ட்ரைக் செய்வேன் என்றான். மும்மூர்த்திகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

என்னைப் பார்த்தார்கள். அவர்கள் எனக்கு சர்வ சுதந்திரமும் சர்வ வல்லமையும் கொடுத்திருந்த படியால், நான் அவர்களைப் பார்த்து நீங்கள் கவலைப்படவேண்டாம், இனிமேல் நான் கவனித்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்று சொல்லி அவர்களை வழியனுப்பினேன்.


தொடரும்...

திங்கள், 9 ஜூலை, 2012

நான் செய்த புரட்சிகள்


முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.



மறுநாள் மீட்டிங்க்குக்கு பிரதம மந்திரி தவிர ஏறக்குறைய மற்ற எல்லா மந்திரிகளும் ஆஜர். செக்ரடரிகள் எல்லோரும் வந்திருந்தார்கள். நம்ம பெர்சனல் செக்ரடரியையும் ஸ்டெனோவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.

எல்லோரையும் பார்த்து என் சொற்பொழிவை ஆரம்பித்தேன்.

நீங்கள் எல்லோரும்தான் இந்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறவர்கள். இந்திய நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. இப்படியெல்லாம் சொல்லி உங்களை நான் ஏமாற்றப்போவதில்லை. நீங்கள் செய்த சேவைகளினால் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று வெளிநாட்டில் கேட்டால்தான் தெரியும். இனியும் அதே நீலை நீடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை.

நான் வகுக்கும் திட்டங்களை நீங்கள் எல்லோரும் முழு மனதுடன் ஒத்துக் கொண்டு செயல் புரிய வேண்டும். அதற்கு விருப்பமில்லாதவர்கள் யாராவது இருந்தால் கைகளைத் தூக்குங்கள் என்றேன்.

யாரும் இதை எதிர்பார்க்காததினால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே கோச்சிங்க் கிளாஸ் நடத்தினால்தான் அவர்களுக்கு ஏதாவது பேசத் தெரியும். பிரதம மந்திரி வேறு இல்லையா? அவர் இருந்தால் எல்லாவற்றையும் அவர் கவனித்துக்கொள்வார். நாம் பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருக்கலாம். இந்த ஆளுக்கு ஓட்டுப்போட்டு ஜனாதிபதி ஆக்கினது தவறோ என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒருவரும் கை தூக்கவில்லை.

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். உங்களில் யாருடைய பதவிக்கும் ஆபத்தில்லை என்றேன். இதைக்கேட்டவுடன்தான் எல்லோருடைய முகத்திலும் கொஞ்சம் பிரகாசம் தெரிந்தது.

கவனமாகக் கேளுங்கள். நம் இந்திய நாட்டை மற்ற நாட்டவர்கள் கேவலமாகப் பேசுவதற்கு முக்கிய காரணம் நம் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தங்கள் காலைக் கடன்களை நிறைவேற்றும் முறைதான். இதை மாற்றினாலே நம் நாடு வல்லரசாகும் பாதையில் அடி எடுத்து வைத்துவிட்டது என்று அர்த்தம்.

நமது மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் உடனே தங்கள் தொகுதிக்கு சென்று மக்களுக்கு விழிப்பு உண்டாக்கவேண்டும். உங்களுக்கு மூன்று நாள் அவகாசம் தருகிறேன். நான்காம் நாள் காலையிலிருந்து யாரும் வெட்டவெளியில் காலைக்கடன்களை கழிக்கக்கூடாது. அப்படி யாராவது செய்தால் அவர்களை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் சகாரா பாலைவனத்தில் விடப்படுவார்கள். இந்த வேலையை நம் முப்படைத் தளபதிகளிடம் விடுகிறேன்.

இதற்கான எழுத்து மூலமான உத்திரவுகள் இன்று மாலைக்குள் எல்லோருக்கும் வந்து சேரும். உத்திரவுகளை உடனடியாக நிறைவேற்றத் தவறினால் அதற்கு காரணமானவர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்படுவார்கள். அடுத்த கூட்டம் நாளை இதே நேரத்தில் நடைபெறும். நாளைக் கூட்டத்தில் "லஞ்ச ஒழிப்பு வாரியம்" அன்னா ஹஸாரே தலைமையில் தொடங்கவிருக்கிறேன். மேலும் பல திட்டங்களை அறிவிப்பேன். இந்தக் கூட்டம் முடிந்தது என்று சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டேன்.