ஜோசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜோசியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 11 மார்ச், 2010

ஜோசியம் உண்மையா, பொய்யா?



கோள்களின் நிலைக்கும் ஒருவனுடைய வாழ்க்கைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், அந்த தொடர்பை கணித்து தனிமனிதனின் வாழ்க்கையின் எதிர்காலத்தைச் சொல்ல ஒரு நல்ல ஜோதிடனால் முடியும் என்றும் முந்தைய பதிவில் பார்த்தோம்.


ஜோதிடத்தில் உண்மையாகவே இவ்வாறு சொல்ல முடியுமா, இல்லை இது ஒரு பொய்யான சாஸ்திரமா? இந்த விவாதம் காலங்காலமாக நடக்கிறது. ஜோதிடம் பொய் என்று எந்தவித குழப்பமும் இல்லாமல் நம்புகிறவர்கள் இந்தப்பதிவை மேற்கொண்டு படிக்க வேண்டிய அவசியம் இல்லை. சும்மா இந்த ஆள் என்ன சொல்கிறான் என்று பார்ப்பதற்காக படிப்பதைப்பற்றி எனக்கு ஆட்சேபணை இல்லை.




ஜோதிடம் ஒரு விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட ஒரு சைன்ஸ், அதனால் எனக்கு எவ்வளவோ நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன், நான் அதை முழுவதுமாக நம்புகிறேன், என்பவர்களும் இந்தப்பதிவை படிக்கவேண்டாம். ஏனென்றால் படித்தால், என்னைப்பற்றி தோன்றும் தாறுமாறான எண்ணங்கள், உங்களுக்கோ எனக்கோ நன்மை பயக்காது.


இந்தப்பதிவு, ஜோசியம் உண்மையாக இருக்குமோ, எவ்வளவு தூரம் நம்பலாம், எவ்வளவு பலிக்கும் அல்லது இது முற்றிலும் ஏமாற்றுக்காரர்களின் பணம் பறிக்கும் தந்திரமோ என்ற மனக்குழப்பத்தில் இருப்பவர்களுக்காகவே.


இப்படி மனக்குழப்பத்தில் இருப்பவர்களை நம்பித்தான் எல்லா அரைகுறை ஜோசியர்களும் தொழில் நடத்துகிறார்கள். பூரணமாக ஜோசியத்தில் நம்பிக்கை வைத்திருப்பவன் ஜோசியத்தை பூரணமாகக் கற்றவனைத்தெரிந்து வைத்திருப்பான். அவன் அவர்களிடம் போய்விடுவான். அந்த ஜோசியர்களும் அரைகுறை நம்பிக்கை வைத்திருப்பவர்களுக்கு ஜோசியம் பார்க்க மாட்டார்கள்.


மனக்குழப்பம் உள்ளவனை இந்த அரைவேக்காட்டு ஜோசியர்கள் பார்த்தவுடனே அடையாளம் கண்டு கொள்வார்கள். அவர்கள் முழிக்கும் முழி, காட்டும் தயக்கம், கூட வந்திருக்கும் ஆட்களின் பேச்சுக்கள் இவைகளை வைத்து, ஆஹா, இன்று நம் வலையில் நல்ல பட்சி மாட்டிட்டதையா என்று சந்தோஷப்பட்டு, தடபுடலாக வரவேற்பு கொடுப்பார்கள்.


முதலில் இவர்களுக்கு ஜோசியத்தில் உண்டான ஐயத்தைப்போக்க வேண்டும். அதில் இந்த ஜோசியர்கள் கை தேர்ந்தவர்கள். என்ன சொல்வார்கள் என்றால் -


"பாருங்க, லோகத்திலே ஜோசியத்தையே படிக்காமல் பொய்யாக ஜோசியம் சொல்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள். என்னைக்கூட நீங்கள் அப்படி நினைத்தால் நான் உங்களைத் தவறாக நினைக்கமாட்டேன், ஏனென்றால் இன்றைக்கு உலக்ம அப்படித்தான் இருக்கிறது. அன்றைக்குப் பாருங்கள் ......... (வந்திருப்பவர்களின் ஊருக்குப்பக்கத்து ஊர் பெரியதனக்காரர் - அவர் இவரிடம் ஜோசியம் பார்க்கவே வந்திருக்க மாட்டார், ஆனால் அவர் பெயரை இந்த ஜோசியர் எப்படியோ தெரிந்து வைத்திருப்பார்) எங்கெங்கேயோ போய் ஜோசியம் பார்த்து, பல்லாயிரம் ரூபாய்கள் செலவு செய்து பரிகாரங்கள், பூஜைகள் செய்து, பல கோயில்கள் போய் சாமி தரிசனம் எல்லாம் செய்தும் பலன் ஒன்றும் தெரியாமல் சோர்ந்து போய்,யாரோ சொல்லி, கடைசியாக என்னிடம் வந்தார்.அவருக்கு நான் சொன்ன ஜோசியத்தினால்தான் அவர் இன்றைக்கு ஓஹோன்னு இருக்கிறார். நீங்கள் அவரிடம் போய் என்னைப்பற்றி கேளுங்கள், அவருக்கு என்னுடைய ஜோசியத்தைப்பற்றி தெரியும்."


இவ்வாறு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுவார். வந்தவர்கள் இவருடைய பேச்சில் மயங்கி ஆஹா, நாம் மிகச்சிறந்த ஒரு ஜோசியரிடம் வந்திருக்கிறோம் என்று நம்பி, அவரிடம் தங்கள் பிரச்சினைகள் பற்றி தேவைக்கு மேல் சொல்லி தங்கள் குடுமியை அவரிடம் கொடுத்து விடுவார்கள்.




பிறகு என்ன வழக்கம்போல் ஜாதகத்தைப்பார்த்து, ராகு கேதுவைப்பார்க்கிறான், கேது சனியைப்பார்க்கிறான், சனி உன்னைப்பார்க்கிறான், நீ என்னைப்பார்க்கிறாய், நான் உன் பர்ஸைப்பார்க்கிறேன், என்று அவனை பைத்தியம் பிடிக்குமளவிற்கு குழப்பி, அவன் பர்ஸை கணிசமாக இளைக்க வைத்து அனுப்பிவிடுவான். இவனும் ஆஹா, ஜோசியர் கெட்டிக்காரர் என்று பேசிக்கொண்டு ஊரில் போய் எல்லாரிடமும் தான் ஜோசியம் பார்த்த பிரலாபத்தைப் பீத்திக்கொள்வான்.


இன்னும் ஒரே பதிவு, ஜோசியத்தை முடித்துக் (விடுகிறேன்) கொள்கிறேன்.

திங்கள், 8 மார்ச், 2010

கோள்களும் மனிதனின் வாழ்க்கையும்.



கேள்வி: அன்பு அண்ணா, வாழ்வு முன்னே நிர்ணயிக்கப்பட்டதா ?

பதில்:- இரண்டாம் பாகம்.

மனிதனின் வாழ்க்கை கோள்களின் நிலையைப்பொருத்து அமையும் என்று பார்த்தோமல்லவா. அப்படியானால் ஒருவனின் முழு எதிர்காலத்தையும் ஜோசியர்கள் முழுவதுமாக கணித்து சொல்லமுடியாதா? முக்காலத்தையும் துல்லியமாக கணித்து எங்களால் சொல்ல முடியும் என்றுதான் பெரும்பாலான ஜோசியர்கள் சொல்லிக்கொள்கிறார்கள்.


அப்படி ஜோசியர்கள் சொல்வது மறுக்க முடியாத உண்மையாக இருந்தால், இந்த உலகில் உள்ள அனைவரும் தங்களுடைய எல்லாக்காரியங்களையும் ஜோசியர்களைக் கலந்தாலோசிக்காமல் செய்யமாட்டார்கள் அல்லவா? ஆனால் தற்போது நடைமுறையில் என்ன நடக்கிறது என்று பார்த்தால்,

1. எல்லோரும் ஜோசியரிடம் போவதில்லை.

2. அப்படி ஜோசியரிடம் போனவர்களின் அனுபவமும் ஜோசியர்களின் வாக்கு முழுவதும் நடந்ததாக கூறவில்லை.


இந்த நிலைக்கு ஜோசியர்கள் பல சமாதானங்கள் கூறுவார்கள். ஜோசியம் நம்புபவர்களுக்குத்தான் பலிக்கும், அவருடைய ஜாதகம் தவறு, அந்த ஜோசியன் அரைகுறையாக படித்தவன் இப்படியெல்லாம் கூறி மக்களை குழப்புவார்கள்.


பொதுவாகவே ஜோசியர்கள் எல்லோரும் நல்ல மனோதத்துவ வல்லுநர்களாக இருப்பார்கள். வந்த ஆட்களின் சில நிமிடப்பேச்சிலேயே அவர்கள் எதற்காக வந்திருக்கிறார்கள், எந்த மாதிரியான பலன்களை எதிர்பார்க்கிறார்கள் என்பதை யூகித்து விடுவார்கள். அதற்குத்தகுந்த மாதிரியான டெக்னிகல் வார்த்தைகளை உபயாகப்படுத்தி வந்தவர்களை ஒருமாதிரியாக பிரெய்ன்வாஷ் பண்ணி முடிந்தமட்டும் வசூல் செய்துவிட்டு அனுப்பி வடுவார்.


அவர் சொன்னமாதிரி நடந்தால் ஜோசியர் கெட்டிக்காரர் என்ற பெயர் வந்துவிடும். இப்படி நாலு பேர் சொன்னால் அந்த ஜோசியருக்கு இன்னும் பத்து வருஷத்துக்கு தொழில் கவலை விட்டது.


ஆனால் ஜோசியர் சொன்னமாதிரி கோள்களின் நிலையைப்பொருத்து மனிதனின் வாழ்வு அமைந்துவிடும் என்றால் மனிதன் எந்த முயற்சியையும் எடுக்காமலேயே அவன வாழ்க்கை நடக்க வேண்டுமல்லவா? ஆனால் அப்படி நடப்பதில்லையே? அதற்கு என்ன காரணம்?


இங்குதான் நம் ஆன்மீகம் காரணம் காட்டுகிறது. என்னதான் ஒருவனுடைய கிரக பலன்கள் சாதகமாக இருந்தாலும், ஒவ்வொருவனுக்கும் கர்மவினை என்று ஒன்று இருக்கிறது, அது கிரகபலனை மாற்றக்கூடிய சக்தி படைத்தது, இந்த இரண்டும் ஒரே மாதிரியான பலனைக் கொடுக்கக்கூடிய நிலை இருந்தால்தான் ஜோசியர் சொன்னது முழுவதுமாக நடக்கும். இரண்டும் வெவ்வேறு பலன்களைக்கொடுக்கும் நிலையில் இருந்தால், எது அதிக சக்தியுடன் இருக்கிறதோ, அந்தப் பலன்தான் நடக்கும். இது ஆன்மீகவாதிகளின் விளக்கம். கர்மவினையைப்பற்றி தெரிந்து கொள்ள பகவத்கீதையைப் படிக்கவும்.


அப்படியானால் நம் முயற்சி எதற்கு என்ற கேள்வி எழும். வாழும் மனிதன் ஒவ்வொருவனும் வாழ்வதற்கான முயற்சிகளை செய்துதான் ஆகவேண்டும். அந்த முயற்சிக்குத்தகுந்த பலன்களை நம் கர்ம வினைகளும் கோள்களின் இருப்பும் நமக்குத்தருகின்றன. முயற்சி செய்யாவிடில் மனிதன் அழிந்து விடுவான்.

இன்னும் வரும்..