புதன், 8 ஏப்ரல், 2015

எங்க வீட்டுப் பிரளயம்

                                  Image result for catastrophe
உலகத்தில் ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒரு யுகப் பிரளயம் நடக்கும் என்று கேள்விப் பட்டிருக்கிறோம். ஆனால் ஒருவரும் பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும். ஒன்றல்ல, இரண்டல்ல, வருடத்திற்கு மூன்று பிரளயங்களை நான் சந்திக்கிறேன்.

தமிழ் வருடப் பிறப்பு, ஆயுத பூஜை, பொங்கல் ஆகிய மூன்று சமயங்களிலும் என் வீட்டுக்காரிக்கு ஒரு வேகம் வந்து விடும். வீட்டை அப்படியே தலைகீழாகக் கவிழ்த்து எல்லா சாமான்களையும் கழுவித் துடைத்து திரும்பவும் அதனதன் இடத்தில் வைக்காவிட்டால் அவள் தலையே வெடித்து விடும்.

இதற்காக அவள் ஒரு படையே வைத்திருக்கிறாள்.அந்தப் படையைத் திரட்டி வேலை கொடுத்து கண் கொத்திப் பாம்பாக கூடவே இருந்து அந்த வேலைகளை முடித்து வாங்கும் திறமை இருக்கிறதே, அது ஒரு தேசப் படைத் தலைவருக்குக் கூட வராது.

பலசரக்கு சாமான்கள், அரிசி, பருப்பு, லொட்டு லொசுக்கு என்று அத்தனையையும் எடுத்து வெளியில் வெய்யிலில் காயவைத்து, அவைகள் இருந்த பாத்திரங்கள், பாட்டில்கள், டப்பாக்கள் இத்தியாதிகளைக் கழுவி அவைகளையும் வெய்யிலில் காய வைத்து, பிறகு பழைய பிரகாரம் அவைகளை அந்தந்த ஏனங்களில் போட்டு அந்தந்த இடங்களில் வைக்கவேண்டும்.

பீரோவில் இருக்கும் துணிகளை எல்லாம் எடுத்து வெளியில் காற்றாடக் காயப் போட்டு, பீரோவின் ஒவ்வொரு தட்டிற்கும் புது நியூஸ் பேப்பர்களை மடித்துப் போட்டு, துணிகளை அடுக்கி வைக்க வேண்டும். கட்டிலில் இருக்கும் மெத்தைகளைத் தூக்கி வெய்யிலில் போட்டுக் காய வைக்கவேண்டும்.

இப்படியாக வீட்டைத் துடைத்து வைக்க ஏறக்குறைய ஒரு பத்து நாள் போல ஆகிவிடும். இந்த வேலைகளில் அவ்வப்போது எனக்கும் பங்கு வரும். அதை செய்யாவிட்டால் அர்ச்சனை ஆரம்பமாகிவிடும். நான் அதற்குப் பயந்து கொண்டு சொன்ன வேலைகளை உடனுக்குடன் முடித்து விடுவேன்.

இதுவெல்லாம் பரவாயில்லை. எனக்கு என்று சில ஏரியாக்கள் இருக்கிறதல்லவா? என் டேபிள், கம்ப்யூட்டர், புஸ்தக அலமாரிகள், இவைகளையும் சுத்தப்படுத்தச் சொல்லி பத்து நாட்களுக்கு முன்பிருந்தே நச்சரிப்பு ஆரம்பித்து விடும். இந்த சுத்தப்டுத்தலைக்கூடச் செய்து விடலாம். ஆனால் அதை அவள் கண் முன்னால் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் சும்மா பொய் சொல்லுகிறேன் என்பாள். ஆகவே அவள் கண் முன்பாகவே எல்லாவற்றையும் வெளியில் எடுத்து வைத்து, பேப்பர் மாற்றி பின்பு பழையபடி அடுக்குவேன்.

அப்படி நான் சுத்தம் செய்த என் ஏரியாக்களை நீங்களும் பாருங்கள்.

என் டேபிள்.

டேபிளுக்கு மேல் உள்ள ரேக்குகள்.என் புத்தக அலமாரிகள்
அதற்கு கீழ் உள்ள ரேக்குகள்


அதற்கு கீழ் உள்ள கம்ப்யூட்டர் ஏரியா
அதற்கும் கீழே உள்ள சிபியூ ஏரியா

ஷோகேஸ்

போட்டோக்கள் அனைத்தும் என்மனைவிக்குத் தெரியாமல் காலை 4 மணிக்கு என் புது டேப்பில் எடுக்கப்பட்டவை.

இது போக இன்னும் சோபா செட்டுகளில் இருக்கும் குஷன்களின் உறைகளை கழற்றி, அவை துவைத்து வந்த பின் அவைகளை திரும்பவும் மாட்டும் வேலை பாக்கி இருக்கிறது. என் நல்ல காலம் அவைகளை துவைக்க வேறு ஆள் வைத்திருக்கிறாள். இது ஒரு பெரிய கண்டம்.

இவைகள் எல்லாம் முடிந்து வருடப் பிறப்பு வருவதற்குள் என் முதுகெலும்பு கணிசமாகத் தேய்ந்து விடும். வருடப் பிறப்பு அமர்க்களத்தைப் பற்றி தனியாக ஒரு பதிவு போடுகிறேன்.

என் நிலையைக் கண்டு ஆறுதல் கூறுவீர்க்ள என்ற நம்பிக்கையில் இந்தப் பதிவைப் போட்டிருக்கிறேன்.

29 கருத்துகள்:

 1. அறை சுத்தமாக நன்றாகத்தான் இருக்கிறது ஐயா இந்த போட்டோவை காலை 4 மணிக்குதான் எடுக்கனுமோ ?
  தமிழ் மணம் 2

  பதிலளிநீக்கு
 2. "வீட்டுக்கு வீடு அலமாரி"......ச்ச்சே "வாசப்படி" .....

  பதிலளிநீக்கு
 3. கீதா : அறைகள் பளிச்! அருமையாக வைத்திருக்கின்றீர்கள்! ஐயா! கற்பூரம் அடித்துச் சத்தியம் செய்கிறேன் நீங்கள் நல்ல கணவர்! மனைவி சொன்னவுடன் எள்ளுனா எண்ணையாக, காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு இந்த வயதிலும்..ஆஹா ஆஹா...ஆன எங்க வீட்டுப் பிரளயம் தலை கீழ ஐயா...நான் சுத்தம் செய்வேன்....அடுத்த நிமிடம் என் கணவர் தலைகீழாக்கி விடுவார். ஆனால் நான் வாய் மூச். திறந்தா நான் தான் மாட்டிக்குவேன்.....என்னைக் கேக்காம யாரு சுத்தம் செய்யச் சொன்னா என்று....இங்கு காமாட்சி மீனாட்சி ஆட்சி எல்லாம் இல்லை....சமையலறை மட்டுமே என் வசம். அதுவும் கூட சில சமயம்... நான் அவரது வாயில் மாட்டிக் கொள்வேன்.....கமென்ட்ஸ் சென்சார்ட்.....

  துளசி: அட ஐயா உங்களுக்குமா?!!! எல்லா ஆம்பிள்ளைங்களுக்கும் இப்படித்தானோ? அறைகள் எல்லாம் நல்லா சுத்தமா வைச்சுருக்கீங்களே. சூப்பர் போங்க...தப்பிச்சுட்டீங்க! க்ரேட் கிடைச்சுச்சா ஐயா....

  பதிலளிநீக்கு
 4. நிச்சயமாக உங்கள் இடம் சுத்தமாக இருக்கிறது!
  வீட்டம்மாவிடம் சொல்லுங்கள் உங்கள் இடம் சுத்தமாக இருக்கிறது! என்று!

  இப்படிக்கு அன்புள்ள,
  வாந்தி பேதி வருண்

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் செய்யாவிட்டால் உங்கள் மனைவிதான் தனியே முழு வேலையும் செய்ய வேண்டும். அது பிரளயத்தின் உச்சக்கட்டமாக இருக்கும் என்று நம்புகின்றேன்🔥🔥

  பதிலளிநீக்கு
 6. சுத்தம்.

  சுத்தம் சோறு போடும் என்ற பழமொழிக்கு அர்த்தம் தெரிந்தது இன்று.

  இப்படி வீட்டுக்கு ஒரு ஆள் தேவைதான்.

  பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. சுத்தம் சோறு போடும் என்பார்கள். :)

  எல்லாமே படு சுத்தமாகக் காட்சியளிக்கின்றன. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

  ஆனால் இதையெல்லாம் செய்து முடிக்க தாங்கள் இந்தத்தள்ளாத வயதில் எவ்வளவு சிரமப்பட்டிருப்பீர்கள் என்று நினைக்கும் போதே எனக்கு என் கண்களில் கண்ணீரே வந்துவிட்டது.

  //என் முதுகெலும்பு கணிசமாகத் தேய்ந்து விடும். //

  பாவம் சார், நீங்க !

  இதற்கும் [அதாவது உங்கள் ஏரியாவை சுத்தப்படுத்துவதற்கும்] ஆட்களை நியமிக்கச்சொல்லி, தங்கள் மேலிடத்திடம், ஓர் கோரிக்கையாவது தாங்கள் வைக்கலாமே ஐயா.

  //எங்க வீட்டுப் பிரளயம்//

  மிகச்சரியான தலைப்புதான்.

  எங்க வீட்டில் இப்படியெல்லாம் ஒரு நாளும் நடக்கவே நடக்காது. நானாகப் பார்த்து ஏதேனும் ஆங்காங்கே எப்போதாவது சுத்தப்படுத்தினால் மட்டுமே உண்டு. அதுவும் யாரையும் என் உதவிக்கு நான் அழைக்கவே கூடாது. அவர்களெல்லாம் தூங்கும் போது, அவர்கள் தூக்கத்தைக் கலைக்காத வகையில், சர்வ ஜாக்கிரதையாக சப்தம் ஏதும் போடாமல், இந்த சுத்தப்படுத்தும் காரியங்களை நான் மேற்கொள்ள வேண்டியிருக்கும். :)

  பதிலளிநீக்கு
 8. என் வீட்டில் அவர்களெல்லாம் தூங்கும் போது, அவர்கள் தூக்கத்தைக் கலைக்காத வகையில், சர்வ ஜாக்கிரதையாக சப்தம் ஏதும் போடாமல், இந்த சுத்தப்படுத்தும் காரியங்களை நான் மேற்கொள்ளாது போனால் மட்டுமே, என் வீட்டில் பிரளயம் ஏற்பட சான்ஸ் உண்டு. :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா அவர்களின் பார்யாள் ஒரு பெண் ஹிட்லர். நான் சொல்வதை செய்யாவிட்டால் பிரளயம்தான் என்று சொல்லாமல் சொல்லி வேலையை செய்ய வைத்துவிடுவார் போலிருக்கிறது.
   உங்கள் மனைவி ஒரு சைலண்ட் கில்லர் வகை போலிருக்கிறது.
   அவருக்கு தொந்திரவு இல்லாமல் நீங்கள் வேலை செய்து முடித்து விடுவீர்கள். இதில் யார் மேல் என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
  2. உங்களுக்காவது பரவாயில்லை. வருசத்துக்கு மூணு பிரளயம்தான்.
   எங்கள் வீட்டில் தினமும் மண்டகப்படிதான். OCD to the core. தினமும் சுத்தம் சுத்தம். துடைத்ததையே மீண்டும் மீண்டும் துடைத்து வைக்க வேண்டும். வேலை இல்லையென்றால் கொஞ்சம் ஓய்வெடு என்று சொன்னால் எனக்கு பிடித்தது சனி. "வீடு என்றால் வேலை இல்லாமல் இருக்குமா? உங்களை மாதிரி நியூஸ் பேப்பர் படித்து விட்டால் போதுமா? வீட்டில் எதெது எங்கெங்கு இருக்கும்னாவது உங்களுக்கு தெரியுமா? " என்று சொல்லிவிட்டு வீட்டையே தலை கீழாக மாற்றிவிட்டு பின்னர் எதை எங்கே வைத்தோம் என்று தேட வேண்டியதுதான். எனக்கு இப்போது பழக்கமாகி விட்டது.

   காயத்ரி மணாளன்

   நீக்கு
 9. ஐயன்மீர்...

  உங்கள் புகைப்படங்களில் நான் பார்த்து ரசித்தவை:
  1. தினத்தந்தி (எனக்கும் பிடித்த நாளிதழ்)
  2. தொலைபேசிக்கு ஒரு துண்டு (குல்லா?)
  3. கிருஷ்ணா ஸ்வீட் டப்பா
  4. விடியோ கேசட்டுகள்.
  தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....

  அன்புடன்
  சங்கர நாராயணன் .தி
  கோவை/ஆம்ஸ்டர்டாம்

  பதிலளிநீக்கு
 10. பிரளயம் நடந்ததுபோல் தெரியவில்லையே. மிகவும் அமைதியாக அழகாக உள்ளனவே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பிரளயத்திற்குப்பின் அமைதிதானே.
   அய்யாவின் அறை அமைதிதான், அழகுதான் என்று ஒத்துக்கொண்டால் கண்டிப்பாக பிரளயம் நடந்திருக்கும் என்பது சரிதானே.

   சேலம் குரு

   நீக்கு
 11. கொடுத்து வைத்தவர் ஐயா நீங்கள்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 12. ஐயா

  இதுவும் (அடிக்கடி சுத்தம் செய்வது) ஒரு வியாதிதான். OCD என்று பெயர். இதைப்பற்றி நீங்கள் ஒரு பதிவு எழுதியதாக ஞாபகம். உங்களுடைய OCD கணினியை நிறைய உபயோகிப்பது மற்றும் தேவை இல்லா பொருட்கள் வாங்கிக் குவிப்பது. OCD உள்ளவர்கள் அசுத்தத்தைப் பார்த்தால் மிகவும் அருவருப்பு அடைவார்கள். இதற்க்கு மருந்து தேவை இல்லை. ஆனால் கொஞ்சம் சகிப்பு தேவை.

  OCD : Obsessive Compulsive Disorder.

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. mental இன் ஒரு வகைக்கு இது நாகரிகமாக சொல்லப்படும் பெயரோ என்று சந்தேகப்படும் அளவுக்கு தங்கள் உடலையும் மனத்தையும் மட்டுமல்ல சுற்றியிருப்பவர்களின் உடலையும் மனத்தையும் வருத்தி எடுத்து விடுவார்கள். சுத்தம் செய்த பிறகு (ஆனால் அனாவஸ்யதுக்கு சுத்தம்) முகத்தில் தெரியும் திருப்தி இருக்கிறதே அது பரவாயில்லை என்று நினைப்பதற்குள் OCD காரர்கள் தனது அடுத்த வேலையை ஆரம்பித்து விடுவார்கள். தினமும் அனுபவித்து கொண்டிருக்கிறேனே

   துளசி மைந்தன்

   நீக்கு
 13. ஐயையோ, என்னென்னமோ சொல்லி பயமுறுத்தறீங்களே?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதெல்லாம் அந்த காலத்தில் இருந்து இருக்கும் ஒரு வகை மனோ வியாதிதான். இன்று அதற்கு வகை பிரித்து ஒவ்வொரு புது பெயர் வைத்து மருந்து கொடுக்கிறார்கள். ஆனால் OCD க்கு மன ரீதியிலான ஆலோசனைகள்தான் ஒத்து வரும். மற்றபடி "இவர்கள் இப்படித்தான் " என்று சகித்துக்கொண்டு போய்விட்டால் அவர்கள் மாதிரி நல்லவர்கள் இல்லை. என்ன கொஞ்சம் கூட ஓய்வெடுக்க மாட்டார்கள். விடாமல் ஏதானும் ஒன்றை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்து கொண்டே இருப்பதால் அவர்கள் உடல் சிறிதே ஒத்துழைக்க வேண்டும்.

   சேலம் குரு

   நீக்கு
 14. ஐயா

  ஒரு சின்ன சந்தேகம். computer இல் வேலை செய்யும்போது Dettol எதற்கு?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது டெட்டால் பாட்டில் இல்லீங்க. தைல பாட்டில். அது சில பின்னூட்டங்களைப் படிச்சா வர்ற தலைவலிக்காக. (உங்க பின்னூட்டத்தைச் சொல்றதா நெனச்சுக்காதீங்க - இதுதான் ஜாடை போடற டெக்னிக். இதைப் பற்றி கூடிய சீக்கிரம் ஒரு பதிவு போடறேன் பாருங்க)

   நீக்கு
 15. புயலுக்கு பின் அமைதிதானே. பிரளயம் வந்தது நல்லதுதான் இல்லாவிடில் உங்கள் அறை இது போல் இருக்குமா? உங்களது அறை Ship shape இல் இருக்கிறது என சொல்லலாம். வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 16. உங்கள் இல்லத்தரசியாரை நேரில் சந்தித்து கை குலுக்க வேண்டும் போல இருக்கிறது! படு சுத்தமாக அவைத்திருக்கும் உங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்!

  பதிலளிநீக்கு
 17. //ஆனால் நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னால் நீங்கள் நம்பித்தானாக வேண்டும்//

  நாங்கள் நம்புகிறோம் அய்யா. ஏனென்றால் கல்யாணம் ஆனா பிறகு அனைத்து கணவன்மார்களும் இதை பார்த்துத்தானே ஆக வேண்டும்.
  இல்லையென்றால் பிரளயம் மஹா பிரளயம் ஆகிவிடும். அதை சமாளிப்பது மிக மிக கடினம்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 18. //இந்த வேலைகளில் அவ்வப்போது எனக்கும் பங்கு வரும். அதை செய்யாவிட்டால் அர்ச்சனை ஆரம்பமாகிவிடும்.//

  இப்போது தெரிகிறதா யார் வீட்டுக்கு முக்கியம் என்று? கோவிலில் சாமிக்குத்தானே அர்ச்சனை நடக்கும். வீட்டில் நமக்கு அர்ச்சனை என்றால் நாம் முக்கியமானவர்கள் என்றுதானே அர்த்தம். ஹூம் இப்படியெல்லாம் சொல்லித்தான் "நம் வீட்டில் நாம் முக்கியம்" நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியாதாய் இருக்கிறது.

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 19. புகைப்படங்கள் எல்லாம் மிக அருமை.
  இவ்வளவு சுத்தமாக வைத்திருக்க உதவும் உங்கள் இல்லாளை பற்றி இப்படி சொல்கிறீர்களே. ஒரு மாதம் அவர்கள் இல்லையென்றால்தான் உங்களுக்கு அவர்கள் அருமை புரியும்.

  திருச்சி தாரு

  பதிலளிநீக்கு