சனி, 16 நவம்பர், 2013

முதுமையின் அவலங்கள்


என்னுடைய கடந்த 

"வயது வந்தவர்களுக்கு மட்டும்"


என்ற  பதிவிற்கு வந்த ஒரு பின்னூட்டம்.

ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்றே நினைக்கிறேன் என்கிறீர்களே. உங்களுக்கே இது சரியாகப்படுகிறதா?

காலையில் நாளிதழை திறந்தவுடன் விபத்துக்களை பார்க்கிறோம். நமக்கு சம்பந்தமில்லாதவர்கள் அந்த விபத்தில் சம்பந்தப்பட்டிருக்கும்போது எளிதாக மனதில் எந்த ஒரு கணமும் இல்லாமல் அடுத்த செய்திக்கு போய்விடுகிறோம். ஆனால் அதே விபத்தில் நமக்கு சம்பந்தப்பட்டிருப்பவர்கள் இருந்திருந்தால் - அடிபட்டவர்கள் மட்டும் அல்ல, விபத்துக்கு காரணமானவர்களே ஆனாலும் சரி - மனது கிடந்து துடிக்கிறதே. உடனே ஓடிபோய் உதவி செய்ய மனது அலை பாய்கிறதே. நீங்கள் ரொம்ப எளிதாக ஒரு வயதிற்கு மேல் மருத்துவத்தை தவிர்ப்பது நல்லது என்கிறீர்கள். உங்கள் உறவினர்களை நினைத்து பரிதாபபடுகிறேன்

திருச்சி காயத்ரி மணாளன்

-----------------------------------------------------------------------

உங்களுக்கே இது நியாயமாய்ப் படுகிறதா?
நல்ல கேள்வி. சரியாக பாய்ன்டைப் பிடித்து விட்டீர்கள்.
அதாவது நான் ஒரு மனிதப் பண்புகள் இல்லாதவன் என்கிற மாதிரி ஒரு உருவத்தை உருவகப்படுத்தியுள்ளீர்கள். நான் அதை மறுக்கவில்லை. உயர்ந்த பண்புகள் ஒருவனுக்கு இருப்பது மிகவும் போற்றத்தக்கது.  அப்படிப்பட்ட நல்ல பண்புகளில் வயதானவர்களை அவர்கள் முகம் கோணாமல் பராமரிப்பது என்பது மிக மிக உன்னதமான பண்பு என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். ஆனால் அந்தப் பண்புகள் மனதளவில் மட்டும் இருந்தால் போதுமா? அதை செயலில் காட்டினால்தானே பலன்.

எனக்கும் இந்தக் கொள்கை மிகவும் பிடித்திருக்கிறது. எனக்கு கடவுள் சர்வ வல்லமையும் மற்ற வசதிகளையும் அளவில்லாமல் கொடுத்திருந்தால் நானும் இந்த கொள்கைகளை தடையில்லாமல் என் உறவினர்கள் அனைவருக்கும் நிறைவேற்றத் தயார்தான். என்ன, அதற்குண்டான ஆட்களைப் போட்டுவிட்டு அவர்களுக்குண்டான கூலியை தாராளமாகக் கொடுத்தால் வேலை நடந்துவிடும்.

உங்கள் நேரடி அனுபவத்தைப் பற்றி கேள்விகள் கேட்பது தேவையில்லை.  என்  குடும்பம் சம்பந்தப்பட்ட அனுபவங்களையும் இங்கு குறிப்பிடுவது தற்பெருமை பேசுவது போல் ஆகிவிடும் என்பதால் அதைத் தவிர்க்கிறேன். என் பக்கத்து வாதங்களை மட்டும்  முன் வைக்கிறேன்.

வயதானவர்களின் முதல் ஆதங்கம் அவர்களின் உடல் மாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாதது. "நான் பத்து வருடங்களுக்கு முன்னால் எவ்வளவு தெம்பாக இருந்தேன். இப்பொழுது என்னால் அப்படி இருக்க முடியவில்லையே.  இப்பொழுது மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். என்னை முன்பு போல தெம்பானவனாக மாற்ற ஏன்முடியாது?"  

அவர்களைப் பராமரித்துக் கொள்பவர்களை ப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். "நீங்கள் ஏன் அப்படிப்பட்ட மருத்துவரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய் வைத்தியம் செய்யக்கூடாது?"

இதுதான் பெரும்பாலான வயதானவர்களின் ஆதங்கம்.

முதுமையின் தாக்கங்களை மாற்றக்கூடிய வைத்தியம் இருந்தால் பணம் படைத்தவர்கள் ஒருவரும் இறக்கவே மாட்டார்கள். முதுமையின் மாற்றங்களுக்கு தற்காலிக சாந்தி செய்யலாமே தவிர அவைகளை முற்றிலும் நிரந்தரமாக மாற்ற முடியாது என்பதை அனைவரும் அறிவார்கள். இந்த மாற்றம் தற்காலிகமானது.

முதல் தடவை வயதான ஒருவருக்கு இந்த மாதிரி வைத்தியம் செய்தால் சில நாட்களுக்கு தெம்பாக இருப்பார். கொஞ்ச நாட்கள் போன பிறகு பழையபடி சோர்வு வரும். திரும்பவும் வைத்தியம் செய்ய ஆசைப் படுவார். வைத்தியம் செய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். திரும்பவும் தெம்பாக உணருவார். கொஞ்ச நாட்கள் கழித்து மறுபடியும் வைத்தியம் செய்யவேண்டி வரும். இந்த இடைவெளி குறைந்து கொண்டே போய் கடைசியில் எந்த வைத்தியமும் பலனளிக்காத நிலை ஏற்படும்.

அப்போது டாக்டர்கள் "இனி இவருக்கு வைத்தியம் செய்து பலனில்லை. அவரை வீட்டோடு வைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லி விடுவார்கள். சொந்தக்கார்ர்களும்  "நாங்கள் எங்களால் முடிந்தவரை வைத்தியம் செய்தோம், இனி ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் சொல்லி விட்டார்கள்" என்று வருபவர்களிடம் சாதாரணமாகவோ அல்லது பெருமையாகவோ சொல்லிக்கொள்ளலாம்.

அந்த நிலையில் அந்த வயதானவரின் நிலையை யோசித்துப் பாருங்கள். உடலில் தெம்பு இல்லை. உடல் உபாதைகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. எந்த மருந்தும் நிவாரணம் கொடுக்க மாட்டேனென்கிறது. பார்த்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச ஆளில்லை. மரண வாதனை அவர்களை வாட்டுகிறது.

இந்த நிலையில் யார் என்ன  செய்து அவர் வேதனையைக் குறைக்க முடியும்? இப்படி வேதனைப் படாமல் தூக்கத்திலேயே இறந்து போகிறவர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்க்ள. ஆனால் பெரும்பாலானவர்கள் இந்த மரண வாதனையை அனுபவித்து விட்டுத்தான் இறக்கிறார்கள்.

இந்த மாதிரி ஒருவருக்கு வைத்தியம் பார்க்க ஆள் வசதியும் பணவசதியும் வேண்டும். அப்படி இருந்தாலும் தொடர்ந்து வைத்தியம் பார்க்க மன வலிமை வேண்டும். இப்படி எத்தனை குடும்பங்களில் செய்ய முடியும்?

நான் சமீபத்தில் பார்த்த ஒரு குடும்பத்தில், குடும்பத்தலைவன் இறந்து விட்டார். அந்தக் குடும்பத்தலைவி இரண்டு மகன்களையும் வயதான தன்னுடைய தாய் தந்தையரையும் வைத்து காப்பாற்றிக்கொண்டு இருக்கிறாள். ஓரளவு வசதி இருக்கிறது. மகன்கள் இப்போதுதான் வாழ்க்கையில் வேரூன்ற ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு மகனுக்கு சமீபத்தில் கல்யாணம் ஆயிற்று.

தந்தைக்கு நடக்க முடியாது. பாத் ரூமில் உட்கார்ந்தால் எழுந்திருக்க முடிவதில்லை. அவருடைய மனைவிக்கும் வயதாகி விட்டது. அவரைத் தூக்கும் சக்தி இல்லை. அவர்கள் இருப்பதோ ஒரு அபார்ட்மென்டில் ஐந்தாவது மாடியில். அவரை டாக்டரிடம் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றால் இரண்டு வலுவான ஆட்கள் வேண்டும். ஆம்புலன்ஸ் வேண்டும். இந்த மகளும் உடன் செல்லவேண்டும். இதற்கெல்லாம் நேரம் வேண்டும்.

அந்தப் பெண் என்ன செய்வாள்? இந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவு தயார் செய்வாளா? அப்பாவின் வைத்தியத்திற்கு கூடப் போவாளா? அப்படி வைத்தியம் செய்து இவரால் என்ன செய்ய முடியும்? உதவிக்கு அடிக்கடி வர இன்றைய உங்கில் யாரால் முடியும்?

இந்த நிலையில் அவருக்கு நான் சொன்ன யோசனை -" இந்தக் கஷ்டங்களை நீங்க்ள பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எதிர்பார்ப்புகளை வளர்த்து பலனில்லை. நடக்க முடியாதவைகளுக்கு ஆசைப்படாதீர்கள். உங்கள் மகளுக்கு வீணாக உபத்திரம் தராதீர்கள்" என்று யோசனை சொன்னேன். 

இது நியாயமானதா இல்லையா என்று நீங்களே சொல்லுங்கள். மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரியும். தர்மம் உதுதான் என்று வரையறுத்து கூறமுடியாது. சூழ்நலைகளுக்கு ஏற்ப தர்மம் மாற்படும் என்று தர்மத்திற்கே உதாரணமாக சொல்லப்படும் தர்மரே பல இடங்களில் கூறியிருக்கிறார்.

36 கருத்துகள்:

 1. ///இந்தக் கஷ்டங்களை நீங்க்ள பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எதிர்பார்ப்புகளை வளர்த்து பலனில்லை. நடக்க முடியாதவைகளுக்கு ஆசைப்படாதீர்கள். உங்கள் மகளுக்கு வீணாக உபத்திரம் தராதீர்கள்///


  மிக சரியான ஆலோசனை.. உங்கள் கருத்தோடு நான் முழுமையாக ஒத்துப் போகிறேன்

  பதிலளிநீக்கு
 2. கேட்பதற்கும் படிப்பதற்கும் நன்றாக இருக்கின்றது.ஆனால் நமக்கு என்று வரும்பொழுது நடைமுறையில் இவையெல்லாம் சாத்தியமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சாத்தியப்படுத்திக் கொண்டால் அனைவருக்கும் நல்லது. முடியாவிட்டால் வரும் துன்பங்களை அனுபவிக்கத்தான் வேண்டும். அவரவர் விதிப்பிரகாரம் நடக்கும்.

   நீக்கு
 3. அந்த காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்தபோது வயதானவர்களை யார் கவனித்துக்கொள்வது என்ற பிரச்சினையே எழுந்ததில்லை. மேலும் அப்போது சராசரி ஆயுட்காலம் 60 க்குள் இருந்ததால் தீர்க்கமுடியாத வியாதி வந்து மரண வேதனை அனுபவித்து இறக்கும் கால கட்டம் வரவில்லை. எனவே இப்போது இருக்கின்ற சூழ்நிலையை அனுசரித்து ‘ஊரோடு ஒத்து வாழ்’ என்ற நிலைப்பாட்டைத் தான் எடுக்கவேண்டும். நீங்கள் சொல்வது சரியே!

  பதிலளிநீக்கு
 4. முதுமையை ஏற்றுக் கொள்வதே நல்லது, வாழும் தென்புள்ள வரை வாழலாம், இயலாத காலங்களில் மற்றவருக்கு பாரமாய் இருக்காமல் போக வேண்டும், ஆனால் குரூர இயற்கை சாகவும் பயத்தைக் கொடுத்து, வாழவும் தெம்பைப் பறித்து, வாழ வைக்க வேண்டிய சமூக கலாச்சாரத்தையும் கொடுத்து கொடுமை செய்கின்றது. சிந்திக்கத் தூண்டும் பதிவு ஐயா, நாம் ஒவ்வொருவரும் முதுமையை மரணத்தை தழுவியே ஆக வேண்டும், அதை மகிழ்வோடும் கொண்டாட்டத்தோடும் தழுவிக் கொள்வதே சிறப்பு.

  பதிலளிநீக்கு
 5. நல்ல ஆலோசனை தான்... எதுவும் கசந்து போகும்...!

  பதிலளிநீக்கு
 6. பயமுறுத்தும் விஷயத்தில் மரணத்தை விட முதுமையும் அதன் இயலாமைக்கே முதல் இடம்.அவரவருக்கு அதிர்ஷ்டம் இருந்தால் கஷ்டப் படாமல் போய் சேர்வார்கள்

  பதிலளிநீக்கு
 7. எனக்குத் தோன்றுவது... சும்மா விட்டு விடாமல்

  1) வீட்டுக்கு வந்து மருத்துவம் பார்க்கும் மருத்துவரை அழைக்கலாம். கொஞ்சம் கூட காசு!

  2) மலஜலம் கழிக்க கம்மோட் வைத்துக் கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நடைமுறையில் இதுதான் சாத்தியம். இரண்டு வழிகளுக்கும் பொருளாதார நிலை அனுமதிக்கவேண்டும். வீடு சௌகரியமாக இருக்கவேண்டும். கூட இருக்கும் உறவினர்களுக்கு பொறுமை வேண்டும். சம்பந்தப்பட்டவருக்கும் அதிக பொறுமை வேண்டும்.

   நீக்கு
 8. தர்மம் சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபடும் என்றால் அது எவ்வாறு தர்மமாகும் ?
  ஏனெனில் பலரின் சூழ்நிலை வேறு பட்டே உள்ளது. ஆக பல தர்மம் இருக்க முடியுமா?
  பசி உள்ளது என்பதற்கு சில செயல்களை செய்ய சமுகம் அனுமதிக்குமா.
  அதனாலே , ராஜபக்சே , அவன் செய்த செயல்களை நியாய படுத்துகிறான்.
  ஆனாலும் , யோசித்து பார்த்தால் தர்மம் என்பதை வரையறுத்து சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஒரு சிக்கலான தத்துவம். அடுத்த மனிதனைக் கொல்லக்கூடாது. இது தரமம் மட்டுமல்ல, சட்டமும் கூட. ஆனால் தன்னைக் கொல்ல வரும் ஒருவனை தற்காப்பிற்காக கொல்லலாம் அல்லவா? இப்படி பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த விவாதத்திற்கு முடிவே இல்லை.

   அதனால்தான் கீழ் கோர்ட்டு, மேல் கோர்ட்டு, அப்பீல் கோர்ட்டு, இறுதிக்கோர்ட்டு என்று பல படிகள் வைத்திருக்கிறார்கள். எல்லாக் கோர்ட்டுகளுக்கும் சட்டம் ஒன்றேதான். ஆனால் அவைகளை அமுல்படுத்துவதில் வித்தியாசப்படுகிறார்கள்.

   நீக்கு
 9. -" இந்தக் கஷ்டங்களை நீங்க்ள பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எதிர்பார்ப்புகளை வளர்த்து பலனில்லை. நடக்க முடியாதவைகளுக்கு ஆசைப்படாதீர்கள். உங்கள் மகளுக்கு வீணாக உபத்திரம் தராதீர்கள்" என்று யோசனை சொன்னேன். //

  அவரவர்க்கு வந்தால்தான் தலைவலியும் திருகுவலியும். யோசனை சொல்வது மிகவும் எளிது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கு வருகிறது என்று வைத்துக்கொள்வோம். பார்க்க ஆளில்லை. என்ன செய்ய முடியும்? ஏதாவது யோசனை இருந்தால் சொல்லுங்கள். பலருக்கு உபயோகமாக இருக்கும்.

   நீக்கு
 10. இது ஒரு பெரிய பின்னூட்டமாக இருப்பதால் 3 பகுதிகளாக பின்னூட்டமிடுகிறேன்
  பகுதி-1
  அய்யா அவர்களே எனது பின்னூட்டத்தினால் உங்களை கோபப்படுத்தியிருந்தால்தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள். எனது நோக்கம் கண்டிப்பாக அதுவல்ல என்பது எனது மற்ற பின்னூட்டங்களை பார்த்தாலே புரிந்திருக்கும்.
  உயர்ந்த பண்புகள் இருப்பது ஒருவருக்கு எவ்வளவு அவசியமோ அதே அளவு அத்தகைய பண்புகளை நசுக்கப்படாமல், காயப்படுத்தப்படாமல் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கப்படவேண்டியது அவசியமில்லையா? என் போன்றோர் எல்லாம் உங்களை மாதிரி மூத்த அனுபவமிக்க பெரியோர்களை முன்மாதிரியாக கொண்டுள்ளோம். இத்தகைய உயர்ந்த பண்புகளுக்கு பங்கம் ஏற்படும்போது அதை எப்படி சமாளிக்கலாம் என்பது போன்ற அறிவுரைகள்தான் எங்களுக்கு வேண்டும். கண்டிப்பாக நம்மால் எல்லாம் முடியாதுதான். ஆனால் முயற்சிக்கலாமே என்பதுதான் என் எண்ணம். AIM AT THE MOON ATLEAST YOU CAN REACH YOUR GRANDMA'S NOSE என்று ஒரு பழமொழி உண்டு. அறிவுரைகளை பொறுத்த வரை இப்படித்தான். நூறு சொன்னால் ஒன்றை பின்பற்றுவார்கள். நாமே இப்படிப்பட்ட அறிவுரைகளை கூறினால் முதல் நிலையிலேயே நமது இளைய தலைமுறையினர் இதை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள். அதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம் என்றுதான் இதை சொன்னேன்.

  இது என்னுடைய அனுபவமோ அல்லது அய்யா அவர்களது அனுபவமோ பற்றியது அல்ல. இதை படித்து பார்க்கும் பலரும் உங்கள் மேலுள்ள மரியாதை, உங்கள் அனுபவத்தின் மேலுள்ள நம்பிக்கை இவற்றை உத்தேசித்து அப்படியே பின்பற்றுபவர்கள்தான் (நான் உள்பட). நான் எனது இன்னொரு பின்னூட்டத்திலும் வயோதிகர்களுக்கு (ஓய்வூதியம் அற்ற வயோதிகர்களுக்கு)
  "முதுமை வந்த காலத்தில் வாழ்க்கை முறையை எவ்வாறு மாற்றி அமைத்து எப்படி தனது சொந்தங்களோடு, நண்பர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டு உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வது என்பது பற்றி வகுப்புகள் எடுப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும்." என்றுதானே பின்னூட்டமிட்டிருந்தேன். கொஞ்ச நஞ்சமிருக்கும் குடும்ப உறவுகளையும் உதறித்தள்ளிவிட நமது பதிவுகள் காரணமாகிவிடக்கூடாது என்ற ஆதங்கத்தில் எழுதப்பட்ட பின்னூட்டந்தான் அது. மற்ற படி அது யாரையும் குற்றம் சொல்லவோ தப்பு கண்டுபிடிக்கவோ எழுதப்பட்டது அல்ல. அத்தகைய வெளிப்பாடு அந்த வார்த்தைகளில் இருந்திருந்தால்
  முழு தவறும் என் மீதுதான். இனிமேல் ஜாக்கிரதையாக வார்த்தைகளை உபயோகிக்கிறேன்
  திருச்சி காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதில் என்ன வருத்தம் இருக்கிறது? ஒன்றும் இல்லை. நடைமுறை வாழ்க்கையின் அவலங்களை எல்லோருக்கும் தெரிவிக்கவே எழுதினேன்.

   நீக்கு
 11. பகுதி-2

  எப்படி வைத்தியம் செய்தால் சற்று குணம் கிடைக்கிறதோ அதே மாதிரி வயதாக வயதாக வயோதிகர்களின் நோய் எதிர்ப்புதிறனும் குறையும் தானே அதை அவர்களுக்கு புரிய வைத்தால் போதும்.
  நமது மகனோ மகளோ நாமை நன்கு பார்த்துகொள்கிறார்கள் எனற எண்ணம் வந்து விட்டால் போதும் பிறகு வயோதிகர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்களும் அவர்கள் பெற்றோருக்கு இத்தகைய கடமையை - அதவும் மருத்துவம் இந்த அளவு வளராததற்கு முன்பு - பார்த்தவர்கள்தானே.

  மேலும் டாக்டர்கள் கடவுள்கள் அல்ல. எத்தனையோ கைவிடப்பட்ட நோயாளிகள் கடவுள் அருளால் பிழைத்திருக்கிறார்களே. அப்படிப்பட்ட நிலைமையில் இருக்கும் முதியவர்களை கை விட்டு விட கூடாது அல்லவா.
  நம்மால் முடிந்த வரை முயற்சி செய்தோம் என்கிற மனோநிலை சொந்தகாரர்களுக்கு எவ்வளவு பெரிய நிம்மதியை கொடுக்கும்.
  பண வசதி இல்லாதவர்கள் வேறு வழியில்லை மனது முன்பாகவே ஒத்துக்கொண்டுவிடும் பணம் இருப்பவர்கள் முயற்சி செய்யலாமல்லவா. பணத்தோடு மனமும் சேரவேண்டுமல்லவா. அப்படி மனத்தை சேர்க்க வைப்பதற்கான பின்னோட்டம்தானே இதுவன்றி யாரையும் புண்படுத்தும் நோக்கில் கண்டிப்பாக எழுதப்படவில்லை.
  //அந்த நிலையில் அந்த வயதானவரின் நிலையை யோசித்துப் பாருங்கள். உடலில் தெம்பு இல்லை. உடல் உபாதைகளை சகித்துக்கொள்ள முடியவில்லை. எந்த மருந்தும் நிவாரணம் கொடுக்க மாட்டேனென்கிறது. பார்த்துக்கொள்பவர்கள் அனைவருக்கும் சலிப்பு ஏற்பட்டு விட்டது. ஆறுதலாக இரண்டு வார்த்தைகள் பேச ஆளில்லை. மரண வாதனை அவர்களை வாட்டுகிறது.//

  இத்தகைய நிலை ஏற்படும்போது வயதானவர்களுக்கு ஒருவித மனபக்குவம் ஏற்பட்டுசிடவேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுக்கு எப்படி தனது சொந்தங்களோடு, நண்பர்களோடு அட்ஜஸ்ட் செய்துகொண்டு உடல் ஆரோக்கியத்தோடு வாழ்வது என்பது பற்றி வகுப்புகள் எடுப்பது மிக மிக அவசியமான ஒன்றாகும். இதைத்தானே நானும் சொல்லி இருந்தேன்.
  திருச்சி காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 12. பகுதி-3

  //இந்த மாதிரி ஒருவருக்கு வைத்தியம் பார்க்க ஆள் வசதியும் பணவசதியும் வேண்டும். அப்படி இருந்தாலும் தொடர்ந்து வைத்தியம் பார்க்க மன வலிமை வேண்டும். //

  கண்டிப்பாக. பண வசதி இருப்பவர்கள் மன வலிமை இல்லாமல் போய் விடகூடாது. கடைசி முடிய முயற்சி செய்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடுக்கப்பட்ட வார்த்தைகள்தான் அந்த பின்னூட்டம். ஒரு வயதுக்கு மேல் வைத்தியம் வேண்டாம் என்ற எண்ணம் அத்தகைய பணம் படைத்தோரிடம் வந்து விடகூடாது என்பதுதான் முக்கியம். அதற்கு நமது பதிவுகளோ பின்னூட்டங்களோ வழி வகுத்து விடக்கூடாது அல்லவா?
  அத்தகைய நிலையில் அந்த வயதானவர் காது பட "நான் கூட ஒரு பதிவில் பார்த்தேன். இந்த வயதில் எதற்கு வைத்தியம் என்று சொல்லி காரணம் கொடுத்திருந்தார்கள். சரியாகத்தான் படுகிறது" என்று சொல்லி வைத்தியத்தை நிறுத்திவிட்டால் அந்த வயதானவர் மனது என்ன பாடுபடும்?

  நீங்கள் சொன்ன அந்த உதாரணம் மனத்தை நெகிழ வைக்கிறது.
  இந்த பதிவை படிக்கும் பணம் படைத்தவர்கள் அந்த குடும்பத்துக்கு உதவலாமே. இந்த பின்னூட்டத்தின் மூலம் நான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்.
  அந்த குடும்பத்திற்கு நீங்கள் சொல்லிய ஆலோசனை முற்றிலும் பொருத்தமானதே. இந்த மாதிரி மனமிருந்தும் பணமில்லாத குடும்பங்களில் அந்த வயதானோருக்கு இத்தகைய புத்திமதி தேவைதான். ஆனால் இத்தகைய புத்திமதியை பணமிருக்கும் ஆட்களிடம் மனமில்லாமல் போய்விடக்கூடாதே. அப்படி மனம் இல்லாமல் போகக்கூடிய வாய்ப்பை எள்ளளவும் உருவாக்கி விடகூடாதே என்ற எண்ணத்தில் எழுதப்பட்டதுதான் இந்த பின்னூட்டமே ஒழிய சத்தியமாக யாரையும் புண்படுத்தும் எண்ணத்தில் அல்ல. நான் நினைத்த தர்மம் இதுதான் .


  திருச்சி காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 13. இளைஞர்களும் கொஞ்சம் கருணை
  கொள்ள வேண்டும்
  முதியவர்களும் மனமாற்றம் கொள்ளப்
  பயிலவேண்டும்
  தற்காலச் சூழலில் அதிகரித்துவரும் பிரச்சனை
  ஆழமான அலசலுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. எதார்த்தம் குறித்து பேசினால் பெரும்பாலோனருக்கு கசக்கவே செய்யும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மை என்றுமே கசப்பானதுதான். இனிப்பாகப் பேச நான் பழகவில்லை என்பது ஒரு கசப்பான உண்மை.

   நீக்கு
 15. வயதாக ஆக, மனிதனுக்குச் சுயநலம் அதிகரித்துவிடுகிறது. பணம் பொருள் இவற்றை விடவும் தன்னைச் சுற்றியுள்ளவர்களின் கவனிப்பு தன ஒருவனுக்கு மட்டுமே கிட்டவேண்டும் என்ற சுயநலம். எனவே, அந்தச் சுயனலத்தேவையை அவரது மக்கள் பூர்த்தி செய்துவிட்டால், அவரால் தன மருத்துவத் தேவைகளைக்கூட ஒத்திப்போட முடியும். (2) அதேபோல், வயதாகும்போது ஞானம் வரவேண்டும். அப்படி வந்தவர்கள், "எனக்கு மருத்துவம் பார்த்து என்ன ஆகப்போகிறது? அந்தப் பணத்தை குழந்தையின் கல்யாணத்திற்கோ, படிப்புக்கோ வைத்துக்கொள்" என்று சொல்வதை நாம் நிறைய பார்த்திருக்கிறோமே! (3) கந்தசாமி அவர்கள் சொல்வது ஏழைகளுக்கு மட்டுமே; வசதியானவர்களுக்கு அல்ல. அவர்கள் தங்கள் வசதிப்படி செய்துகொள்வதில் யாருக்கும் ஆட்சேபமில்லை.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஐயா.

  உங்களின் இந்த இடுகையைப் பார்க்காமலேயே நானும்
  கிட்டதட்ட இதே பிரட்சனையைக் குறித்தே இடுகை இட்டு இருக்கிறேன்.
  உங்களின் இந்த இடுகையைப் படித்திருந்தால் எனக்கு சரியான விளக்கம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.

  உங்களின் கருத்தில் இருக்கும் உண்மை கசப்பானது தான் என்றாலும் அது தான் வாழ்வின் உன்னத நிலை. புரிந்துக்கொண்டேன்.
  நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 17. //இப்பொழுது மருத்துவத்தில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்திருப்பதாகச் சொல்லுகிறார்கள். என்னை முன்பு போல தெம்பானவனாக மாற்ற ஏன்முடியாது?"
  . "நீங்கள் ஏன் அப்படிப்பட்ட மருத்துவரிடம் என்னைக் கூட்டிக்கொண்டு போய் வைத்தியம் செய்யக்கூடாது?"//
  100% உண்மையான வரிகள் அய்யா. எனது மாமனார் இதேமன நிலையில் இருந்து இறந்தார்.

  பதிலளிநீக்கு
 18. ஐயா!
  பதிவும், பின்னூட்டங்களும் என் முதுமை பற்றிய அச்சத்தை தருவதாகவே இருக்கிறது.
  தலைவிதியை மாற்றமுடியுமா? எதிர்பார்ப்பில்லாமல் வாழப் பழகுவதே ஒரே வழி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யோகன்-பாரிஸ், யூனிவர்சல் பிரேயர் பற்றித் தெரியும் அல்லவா?

   "இறைவனே, என்னால் மாற்றக்கூடியவைகளை மாற்றும் மனோவலிமையையும் மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், இந்த இரண்டையும் பகுத்தறியக் கூடிய விவேகத்தையும் எனக்குக்கொடு."

   இதை நன்கு உணர்ந்து கொண்டு வாழ்ந்தால் இறைவன் நமக்கு நல்வழி காட்டுவான் என்று நான் நம்புகிறேன்.

   எதிர்காலத்தில் நடக்கப்போகும் நிகழ்வுகளுக்கு நாம் நம்மைத் தயார் படுத்திக்கொண்டால் அவைகளின் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். மிகவும் கடினமான நிலைக்கு நம் மனதைத் தயார் நிலையில் வைத்திருந்தால் எல்லா சோதனைகளையும் எதிர் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

   இந்தப் பதிவில் சொல்லியிருப்பது அனைத்தையும் நான் கடைப்பிடிப்பேனா என்று என்னால் யூகிக்க முடியவில்லை. இருந்தாலும் கடைப்பிடிக்க விரும்புகிறேன்.

   நீக்கு
 19. //இந்தக் கஷ்டங்களை நீங்க்ள பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எதிர்பார்ப்புகளை வளர்த்து பலனில்லை. நடக்க முடியாதவைகளுக்கு ஆசைப்படாதீர்கள். உங்கள் மகளுக்கு வீணாக உபத்திரம் தராதீர்கள்//

  பூனைக்கு யாராவது மணி கட்டியாகவேண்டும். இளையவர்கள் இப்படி அவர்களிடம் கூறியிருந்தால் எப்படியிருந்திருக்கும்? தாங்கள் கூறியதைப்பற்றி சிந்தித்தார்களென்றால் அதில் உண்மையிருப்பதை உணர்ந்திருப்பார்கள். அனைவரையும் திருப்தி செய்ய முயற்சிப்பது வீணான செயல். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பவர்களிடம் ஒத்துப்போகவேண்டும், அல்லது ஒதுங்கிப்போகவேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்குதான் அரசு தனது ப்ரசென்சை காட்ட வேண்டும்.
   பணமிருப்பவர்கள் பாடு பரவாயில்லை. சமாளித்துகொள்வார்கள்.
   பணமில்லாதவர்களுக்குத்தான் இந்த மாதிரி தொல்லையே.
   அரசு இந்த நூறு நாள் வேலை மாதிரி முதியோர் இல்லங்கள் ஆங்காங்கே திறக்க, நல்லபடி நிர்வகிக்க முயலவேண்டும். அதற்காக இப்போது கல்வி வரி, உயர்கல்வி வரி போன்றவை வசூலிப்பது போன்று முதியோர் நிர்வகிப்பு வரி என்று புதிதாக ஒரு வரி வசூலிக்கலாம். ஆனால் இந்த கல்வி & உயர்கல்வி வரிகள் வசூலிக்கிறார்களே தவிர அதை கல்விக்கு உபயோகப்படுத்துகிறார்களா என்பது மில்லியன் டாலர் கேள்வி. இந்த முதியோர் வரியும் வசூலித்து விட்டு அதையும் ஸ்வாஹா செய்துவிட்டால் தொந்திரவுதான்.

   திருச்சி தாரு

   நீக்கு
 20. எதுவாக இருந்தாலும் நேரம், காலம், சூழ்நிலை, அந்த நேரத்தில் மனதின் நிலை – என்பதற்கு ஏற்ப செயல்பாடு அமையும். இருந்தாலும் கொடையும் தயையும் பிறவிக் குணம் என்று அவ்வையார் சொன்னதை மறுக்க முடியாது. எப்பேர்பட்ட சூழ்நிலையிலும், தன்னை வருத்தினாலும் உதவியே ஆக வேண்டும் என்பது தியாக உணர்வு.

  பதிலளிநீக்கு
 21. /இறைவனே, என்னால் மாற்றக்கூடியவைகளை மாற்றும் மனோவலிமையையும் மாற்ற முடியாதவைகளை அப்படியே ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், இந்த இரண்டையும் பகுத்தறியக் கூடிய விவேகத்தையும் எனக்குக்கொடு."/ ஒரு பதிவின் செய்தியையும். பின்னூட்டங்களுக்குப் பதில் தரும்படியாகவும் கூறியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 22. ///இந்தக் கஷ்டங்களை நீங்க்ள பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும். எதிர்பார்ப்புகளை வளர்த்து பலனில்லை. நடக்க முடியாதவைகளுக்கு ஆசைப்படாதீர்கள். உங்கள் மகளுக்கு வீணாக உபத்திரம் தராதீர்கள்///
  முற்ற முழுக்க உண்மை அய்யா. சொல்ல கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆனால் நிதர்சனமான உண்மை இதுதான்.
  அவர் பிழைத்திருந்து அதனால் அவர் மகளுக்கு அதாவது உபயோகமிருந்தால் (அவர் இல்லையென்றால் அவரது பென்சன் பணம் நின்று போய்விடும் அல்லது அவரது பிசிகல் ப்ரசென்ஸ் வீட்டுக்கு தேவை) கண்டிப்பாக கடைசி முடிய மருத்துவ சிகிச்சை முயற்சிக்க வேண்டியதுதான்.
  இருக்க வேண்டுமே என்பதற்காக அனைவருக்கும் தொந்திரவு கொடுத்துக்கொண்டு இருந்தால் சற்றே கடினம்தான். அவர்களுக்கு மனோரீதியிலான புத்திமதிகள் கண்டிப்பாக கொடுக்கப்படவேண்டும்

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 23. 1. மகனோ மகளோ ஒரு நாள் , ஒரு வாரம், ஒரு மாதம் பார்க்கலாம் பார்க்கமுடியும் .
  அதற்க்கு பிறகு அவர்கள் வேலை அவர்கள் குடும்பம் பார்க்க வேண்டாமா.? நேராக சொல்லமுடியாமல் அவர்கள் சங்கட படுவதுதான் உண்மை.
  நாமே அந்த வயதில் என்னசெய்திருப்போம் என்று உணரவேண்டும்.
  2.பணம் இருந்தால் பார்க்கலாம் என்பதும் , என்னமாதிரி சலித்துக்கொண்டு செய்வார்கள் .
  வீட்டில் சாதாரண வேலை செய்பவர்கள் கூடுதலாக ஒரு வேலை செய்ய சொன்னால் எப்படி செய்வார்கள் எனபது எல்லோருக்கம் தெரியும்.ஆகையால் அதுவும் கொஞ்ச நாட்கள் மட்டும்.
  3.என்னுடைய கருத்து வயதானவர்கள் ஒரு நிலைக்கு பிறகு வலியைவும் நோயையும் பொறுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்க முயலவேண்டும் .
  எனக்கு வயது 72.

  பதிலளிநீக்கு

 24. என்ன ஆயிற்று அய்யா அவர்களுக்கு ?
  கடைசி மூன்று இடுகைகளிலும் முதியவர்கள் படங்கள்?
  வேண்டாம் அய்யா
  நீங்கள் மனதளவில் இளைஞராகவே இருங்கள்
  எங்களை போன்றோருக்கு உங்கள் பதிவுகள் இன்னும் நீண்ட காலம் வேண்டும்
  நமக்கு வயதாகிவிட்டது என்ற எண்ணமே உங்களுக்கு வேண்டாம்.

  சேலம் குருப்ரியா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் மனதளவில் இளமையாகத்தான் இருக்க விரும்புகிறேன். இந்த பாழாய்ப் போன உடம்புதான் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. நான் கிழக்கே போக விரும்பினால் என் கால்கள் மேற்கே போகின்றன. இன்னும் பல, பதிவில் எழுத முடியாத தொந்திரவுகள் எல்லாம் செய்கின்றன. இருந்தாலும் உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற என்னால் முடிந்த அளவு முயற்சிக்கிறேன். என் இன்றைய பதிவைப் பார்க்கவும்.

   நீக்கு