புதன், 13 மார்ச், 2013

6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.

(இந்தத் தொடர் முற்றிலும் கற்பனையே. சம்பவங்களும், சம்பவங்களில் வரும் அனைத்து நபர்களும் கற்பனையே.)

மறுநாள் எழுந்தவுடன் மந்த்ராலோசனை சபை கூடியது. சபை என்றால் நான், பொது மற்றும் செக்கு மட்டும்தான்.

பொது= நான் நேற்று சொன்ன மேட்டரைப் பற்றி சிந்தித்தீர்களா என்றான். பொது, அவசரப்படாமல் நாம் காய்களை நகர்த்தவேண்டும், அவசரப்பட்டால் மும்மூர்த்திகள் நம்மைக் காலி பண்ணிவிடுவார்கள். நான் ஒரு திட்டம் வைத்திருக்கிறேன். கேளுங்கள்.

முதலில் நம் தேவலோகத்திற்கு இந்தியாவில் ஒரு தூதரகம் நிர்மாணிக்கவேண்டும். அது சட்டபூர்வமானதாக இருக்கவேண்டும். ஒரு ஐயாயிரம் ஏக்கரில் அந்த தூதரகம் கட்டப்படவேண்டும். சுற்றிலும் உயரமான மதிற்சுவர்களும், நல்ல பாதுகாப்பான வாயிற்கதவுகளும் அமைக்கவேண்டும். இந்திய ஜனாதிபதியையும் தேவேந்திரனையும் சேர்த்து அதற்கு திறப்பு விழா நடத்துவோம்.

இந்தியாவில் இதற்கு முன்பு இப்படியொரு விழா நடக்கவில்லை என்கிற மாதிரி அந்த விழா இருக்கவேண்டும். பொது, நீ முதலில் சென்று இதற்கான சட்டபூர்வமான அனுமதிகளைப் பெற்று வா. செலவைப்பற்றிக் கவலைப்படாதே. எவ்வளவு செலவு ஆனாலும் எப்படியோ காரியத்தை முடித்து வா என்றேன்.

நம் தேவலோக பேங்கில் இப்போது இந்திய கரன்சி இருக்காது. ஆகவே நீ 24 கேரட் தங்க பார்களாக கொண்டுபோய் அங்கே மாற்றிக்கொள். சீக்கிரம் புறப்படு என்றேன்.

அவன் ஒரு ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றான். நான் மயனைக் கூப்பிட்டு நம் தேவலோகத்திற்கு நல்ல நான்கு சக்கர வாகனங்களும் விமானங்களும் வேண்டுமே. சீக்கிரம் நாம் பூலோகத்திற்கு விமான சர்வீஸ் ஆரம்பிக்கவேண்டும்.

நீங்கள் பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று அங்குள்ள ஏர்பஸ் கம்பெனியில் ஒரு ஆயிரம் ஏர்பஸ் 380 ரக விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு உடனடியாக அனுப்பச்சொல்லுங்கள். விமானம் ஓட்ட நம் ஆட்களுக்குப் பயிற்சி கொடுக்க நல்ல பயிற்சியாளர்களை ஒரு வருட கான்ட்ராக்டில் கூட்டி வாருங்கள். இந்தியாவில் "கிங்பிஷர்" என்ற ஏரோப்பிளேன் கம்பெனி போண்டியாகிவிட்டதால் அதன் ஆட்கள் எல்லோரும் வேலையில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் மொத்தமாக நம் ஏரோப்பிளேன் கம்பெனிக்கு கூட்டி வந்துவிடுங்கள்.


அப்படியே பக்கத்திலுள்ள ஜெர்மனி நாட்டிற்குப் போய் பிஎம்டபிள்யூ வகைக் கார்கள் ஓரு லட்சம் கார்களுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு வாருங்கள். இரண்டு கம்பெனிக்கும் கேஷ் தங்கமாக கொடுத்துவிடுங்கள். நீங்கள் ஒரு ஹெலிகாப்டரில் உடனடியாகப் புறப்படுங்கள் என்று உத்திரவு போட்டேன்.


குபேரனைக் கூப்பிட்டு, இதோ பாரும், குபேரா, நாம் அடுத்த நாடுகளுடன் வியாபாரம் செய்ய தங்கத்தையே நம்பியிருக்கக்கூடாது. பூலோகத்தில் புழங்கும் சில நாடுகளின் நோட்டுக்கள் நம்மிடம் இருக்கவேண்டும். அமெரிக்க டாலர்,  ஐரோப்பிய யூரோ, இந்த இரண்டும் இப்போதைக்குப் போதும். நீங்கள் போய் இந்த இரண்டு நாடுகளின் பேங்குகளுடன் பேசி, அவர்களுக்குப் போதுமான தங்கத்தைக் கொடுத்து அந்த கரன்சிகளை வாங்கி வாருங்கள்.

அத்துடன் ஸ்விஸ் வங்கிக்குப் போய் இந்தியர்கள் அங்கு கருப்புப் பணமாக வைத்திருக்கும் அனைத்து ரூபாய்களையும் வாங்கி வந்து விடுங்கள். அவர்கள் சட்டம், விட்டம் என்று பேசுவார்கள். அதைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்களை அப்படியே நிற்கப் பண்ணிவிட்டு இந்திய ரூபாய்கள் அனைத்தையும் கொண்டு வந்து விடுங்கள், என்றேன்.

அரை மணி நேரத்தில் குபேரன் வந்து விட்டான். பிரபோ, ஸ்விஸ் நாட்டுக்கு இன்னொரு முறை நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கூட்டிக்கொண்டு போகவேண்டுமென்றான். ஏன் என்று கேட்டதற்கு, இந்திய ரூபாய்கள் அனைத்தையும் நான் போன ஹெலிகாப்டரில் ஏற்ற முடியவில்லை, அதனால்  நம் அனைத்து ஹெலிகாப்டர்களையும் கொண்டு போனால்தான் சரியாக இருக்கும் என்றான். அப்படியே போய்விட்டு வா என்றேன். போய்விட்டு  அரை மணி நேரத்தில் வந்து விட்டான். ஸ்விஸ் பேங்கில் எத்தனை இந்திய ரூபாய் இருந்தது என்றேன். அவன் சுமார் ஐம்பதாயிரம் லட்சம் கோடி ரூபாய் இருக்கும் என்றான். சரி, எல்லாவற்றையும் லாக்கரில் வையுங்கள் என்றேன்.


அடுத்து சில நிமிடங்களில் மயன் வந்து விட்டான். பிரபோ, நீங்கள் சொன்னபடி ஏர் பஸ்களும், கார்களும் வந்து விட்டன, அவைகளை எங்கே நிறுத்துவது என்றான். தேவலோகத்துக்கு வெளியே இதற்குப் போதுமான ஷெட்கள் கட்டி அங்கே நிறுத்துங்கள் என்றேன். அடுத்த அரை மணி நேரத்தில் அந்த வேலையை முடித்து விட்டு மயன் வந்து விட்டான்.

மயன், இந்த ஏர்பஸ்களையும் கார்களையும் ஓட்டுவதற்கு வேண்டிய ஆட்களை சித்திரகுப்தனிடம் சொல்லி வாங்கிக்கொள். அவர்களைப் பழக்கத் தேவையானவர்களை பூலோகத்திலுருந்து டெபுடேஷனில் வரவழைத்துக்கொள். பிரஹஸ்பதி சும்மாதானே இருக்கிறார். அவரை இந்த ஓட்டுநர் பயிற்சியைப் பார்த்துக்கொள்ளட்டும். பிறகு அவரே இந்த வாகனங்களுக்கெல்லாம் பொறுப்பாக இருந்து கொண்டு அவைகளை நிர்வகிக்கட்டும்.

மாலை ஆகிவிட்டது. எங்கே இந்தியாவிற்குப் போன பொதுவைக் காணோமே என்று நினைத்தபோது அவன் வந்து விட்டான். அவன் வாயெல்லாம் பல். தலைவா, வெற்றி, வெற்றி என்று கூவிக்கொண்டே வந்தான்.

அவனை உட்காரவைத்து ஆசுவாசப்படுத்திய பிறகு, விவரங்கள் கேட்டேன். எல்லாம் நான் எதிர் பார்த்தபடியேதான் நடந்திருக்கிறது. இவன் நேராக பிரதம மந்திரியின் ஆபீசுக்குப் போயிருக்கிறான். அங்கு இவனுக்குத் தெரிந்த ஒரு எம்.பி. இருந்திருக்கிறார். அவர் கொஞ்சம் பெரிய புள்ளி. இவன் விவரம் சொன்னவுடனே, இருவரும் நேராக பிரதம மந்திரியின் ரூமுக்குப் போயிருக்கிறார்கள். விவரம் சொன்னவுடன், அவர் எல்லாம் பேசிவிட்டீர்களா என்று கேட்டிருக்கிறார். பேசிவிட்டேன், நீங்கள் ஒரு பிகர் சென்னால்போதும் என்றார். உடனே அவர் போனில் அவருடைய செக்ரட்டரியைக் கூப்பிட்டு இவர்கள் மேட்டரை முடித்துக் கொடுத்து விடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.

அந்த செக்ரட்டரி ரூமுக்குப் போனவுடன் ஐட்டம் எங்கே என்று கேட்டிருக்கிறார். எம்.பி. எவ்வளவு என்று கேட்க அவர் பத்தாயிரம் (கோடி) என்று சொல்லியிருக்கிறார். அவர் பொதுவைப் பார்க்க, பொது இதோ என்று பத்து சூட்கேசைக் கொடுத்திருக்கிறார். அடுத்த அரை மணி நேரத்தில் தேவலோக தூதரகத்திற்காக தமிழ்நாட்டில் ஐந்தாயிரம் ஏக்கர் நிலமும் அதற்குண்டான நடைமுறை உத்திரவுகளும் கையெழுத்தாகிவிட்டன. நம்முடைய தூதரகத்திற்கு தனிப்பட்ட முறையில் Special Diplomatic Immunity கொடுத்திருக்கிறார்கள். இந்திய ஜனாதிபதியும், பிரதம மந்திரியையும் தவிர்த்து வேறு யாரும் நம் தூதரக நடவடிக்கைகளில் தலையிடமுடியாது. தவிர, தேவலோகத்தில் இந்தியாவிற்கும் ஒரு தூதரகம் வைக்கவேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்போதுதான் இரு வழிப் போக்குவரத்திற்கு ஏதுவாக இருக்கும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்கள். அப்படியா, அதுவும் நியாயம்தான், அப்படியே செய்து விடுவோம் என்றேன்.

நிலம் தமிழ்நாட்டில் எங்கே கொடுத்திருக்கிறார்கள் என்றேன். நீலகிரி மலை அடிவாரத்தில் பவானி ஆற்றை அடுத்து கொடுத்திருக்கிறார்கள் என்றார். தமிழ்நாட்டில் யாராவது இதற்கு ஏதேனும் சங்கடங்கள் கொடுப்பார்களோ என்றேன். என் நண்பர் எம்.பி. இதை அங்கேயே சுட்டிக் காட்டினார்.  நாங்கள் நேராக தமிழ்நாடு சென்று அங்கிருந்து ஏதும் தடங்கல்கள் வராதபடி ஏற்பாடு பண்ணிவிட்டோம் என்றார்.

பிறகு ஏன் நீ வருவதற்கு  இவ்வளவு லேட் என்றேன். அது இந்த ஆர்டரை எல்லாம் காப்பி எடுக்க ஜீராக்ஸ் மிஷினுக்கு கரன்ட் இல்லை. கரன்ட் வந்தவுடன் காப்பி எடுத்துக்கொண்டு வர நேரம் ஆகிவிட்டது என்றார்.

நல்ல வேலை செய்தீர். இப்போது எல்லோரும் ஓய்வெடுப்போம். மற்ற வேலைகளை நாளை பார்ப்போம் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனோம்.

திங்கள், 11 மார்ச், 2013

5. தேவலோகத்தில் பேங்க் உதயம்.

மறு நாள் விடிந்ததும் நாரதர் பேப்பரும் கையுமாக வந்தார். அவர் வாயெல்லாம் பல்.

மந்திரி பிரபோ, தேவலோகம்  முழுவதும் நேற்று இரவு எங்கும்  ஒரே ஆட்டபாட்டம்தான். தேவர்களின் உற்சாகம் கரை புரண்டோடுகிறது, என்றார். நல்லது, கேட்க சந்தோஷமாக இருக்கிறது. இதற்காகத்தானே மும்மூர்த்திகள் என்னை இங்கு வரச்சொன்னார்கள். இன்னும் பல மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறேன், பார்த்துக்கொண்டிருங்கள் என்றேன். நாரதர் சரி என்றார்.

அப்புறம் நாரதரே, மகாபாரதத்தில் யுத்தம் ஆரம்பிக்கு முன்பாக தருமர் இங்கு யாரிடமோ கடன் வாங்க வந்தாராமே, அது யார் என்றேன். அதுங்களா, இங்கே குபேரன் என்று ஒருவன் அம்பாரம் அம்பாரமாக வைரம், வைடூர்யம், தங்கம், வெள்ளி, பிளாட்டினம் ஆகியவைகளை வைத்துக்கொண்டு இருக்கிறான், என்றார். அவனைக்கூப்பிடுங்கள் என்றேன்.

சிறிது நேரத்தில் அவன் வந்தான். வந்து மந்திரி பிரபோ வணக்கம், என்றான். வாரும் குபேரா, நீ அந்த இலங்கை ராவணனின் தம்பியல்லவோ என்றேன். அவன் கொஞ்சம் அசந்து விட்டான். பிரபுவிற்கு என்னுடைய குலம் கோத்திரம் எல்லாம் அத்துபடி போலிருக்கிறது என்றான். நான் எல்லாம் அறிவேன், இப்படி உட்கார் என்றேன்.

நீ வைத்திருக்கும் செல்வங்களையெல்லாம் என்ன செய்கிறாய் என்றேன். ஒன்றும் செய்வதில்லை என்றான். அப்படியா, அப்படி செல்வ லக்ஷ்மியை சும்மா வைத்திருக்கலாமோ, அது அபச்சாரமல்லவா? நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அப்படியே செய்யலாம் என்றான்.

அப்படியானால் இங்கு ஒரு தேவலோக பேங்க் ஆரம்பிக்கலாம், மயனைக்கூப்பிடுங்கள் என்றேன். மயன் வந்தான். மயா. இங்கு ஒரு பேங்க் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறோம். அதற்கு தேவ்லோக் பேங்க் என்று பெயர். ஸ்விட்சர்லாந்து என்று ஒரு நாடு பூலோகத்தில் இருக்கிறது. அங்குதான் உலகின் மிகப்பெரிய பேங்க் இருக்கிறது. நீயும் குபேரனும் அங்கு போய் அந்த பேங்க்கின் கட்டிடங்கள், பணம் வைக்கும் அறைகள் மற்றும் அதன் நடைமுறைகளைத் தெரிந்து வாருங்கள் என்றேன்.

ஒரு மணி நேரத்தில் திரும்பி வந்து விட்டார்கள். எல்லாம் பார்த்து விட்டோம் என்றார்கள். மயனே, அந்த மாதிரி இங்கு இன்னும் அலங்காரமாகவும், குபேரனின் செல்வங்கள் அனைத்தும் வைக்கும்படியாகவும் ஒரு பேங்க் கட்டுங்கள் என்றேன். உடனே தயாராகிவிட்டது.


குபேரா, இந்த பேங்கிற்கு நான் பிரசிடென்ட், நீதான் தலைமைக் கேஷியர், பொதுவும் செக்கும் டைரக்டர்கள். உனக்கு உதவிக்கு வேண்டிய ஆட்களை யமனிடமிருந்து வாங்கிக்கொள். இன்று மாலை திறப்பு விழா வைத்துக்கொள்ளலாம். இந்திரனுக்கு சமீபத்தில் ஒரு வேலையும் கொடுக்கவில்லை. அவனை வைத்து திறப்பு விழா நடத்துவோம். மும்மூர்த்திகளையும் விழாவிற்கு அழைத்துவிடுங்கள் என்றேன்.

மாலை நான்கு மணிக்கு "தேவலோக் பேங்க்" ஐ இந்திரன் ரிப்பன் வெட்டி திறந்தார். பேங்கிற்குள் இருக்கும் வசதிகளைப் பார்த்து மும்மூர்த்திகளும் அசந்து போய் விட்டனர். எல்லோரும் என்னை வாழ்த்த எனக்கு மிகவும் கூச்சமாகப் போய்விட்டது.


பிறகு விருந்துபசாரம் அரம்பித்தது. மேனகை, திலோத்தமை நடனத்துடன் ஆரம்பித்தோம். நளனும் பீமனும் தங்கள் திறமைகளை எல்லாம் காட்டி பலவித உணவு ஐட்டங்களை தயாரித்திருந்தார்கள். எல்லோரும் நன்றாக சாப்பிட்டுவிட்டு அவரவர் இருப்பிடம் போய்ச் சேர்ந்தார்கள்.

நாங்களும் தூங்கச்சென்றோம்.

அடுத்த பதிவு - 6. பூலோகத்தில் தேவலோக தூதரகம்.

ஞாயிறு, 10 மார்ச், 2013

பாலியல் வன்முறைக்கு தூக்கு தண்டனை கூடாது

கொஞ்ச நாளாக என்னுடைய கற்பனை ஜெட் வேகத்தில் வேலை செய்கிறது. அதனுடைய தாக்கம்தான் இந்தப் பதிவு.


சமீப காலமாக பாலியல் வன்முறைகள் பெருகிக்கொண்டு இருக்கின்றன. காரணம் என்னவென்று கண்டுபிடிக்க முடியவில்லை. சமூக ஆர்வலர்களும் பெண்ணியல் முன்னேற்றவாதிகளும் இதைப் பற்றிய ஆராய்ச்சிகள் செய்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

இது ஒரு புறம் இருக்க, இந்த பாலியல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை கொடுக்கவேண்டும் என்று பலரும் சொல்லிக்கொண்டு வருகின்றனர். அது தவறு. என்னுடைய கருத்து என்னவென்றால் அப்படி தூக்குத் தண்டனை கொடுத்தால், அது எப்படி அந்த குறிப்பிட்ட பெண் அனுபவித்த வேதனைக்கு ஈடாகும்?

சமீபத்தில் நான் தேவலோகம் போயிருந்தபோது அப்படியே யமனையும் ஒரு வேலையாகப் பார்க்கப் போயிருந்தேன். அவனுடன் பேசிக் கொண்டிருந்தபோது சார், நரகத்தைப் பார்க்கறீர்களா என்று கேட்டான். சரி, இவ்வளவு தூரம் வந்து விட்டு அதைப் பாக்கி வைப்பானேன் என்று போனேன்.

அங்கு பலவிதமான தண்டனைகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அவைகளில் எனக்குப் பிடித்த இரண்டு தண்டனைகளைப் பற்றி மட்டும் சொல்லுகிறேன்.

எண்ணைக் கொப்பறை:

பெரிய பெரிய கொப்பறைகளில் நிறைய எண்ணை ஊற்றி கொதிக்கவைத்துக்கொண்டு இருக்கிறார்கள். திடீரென்று ஒருவனை நான்கு ஆட்கள் தூக்கிக்கொண்டு வந்து அதற்குள் அவனைப் போடுகிறார்கள். அந்த ஆள் படும் பாட்டை எழுத்தால் விவரிக்கமுடியாது. கொஞ்ச நேரத்தில் அவன் வெந்து போகிறான். அவனை. தப்பு, அந்தக் கரிக்கட்டையை வெளியில் எடுக்கிறார்கள். அவனுக்குப் பழைய உடம்பு வந்து விடுகிறது. மறுபடியும் அவனை அந்தக் கொப்பறையில் போடுகிறார்கள்.

இப்படியே அவனை நாள் முழுவதும் செய்கிறார்கள்.

அடுத்தபடியாக நான் பார்த்தது.

தோலுரித்து உப்புக் கண்டம் போடுவது:

தண்டனைக்குரிய ஆளை கைகால்களைக் கட்டி ஒரு மேஜை மேல் படுக்கவைக்கிறார்கள். நல்ல எக்ஸ்பர்ட் அறுவை மன்னர்கள் அவனுடைய தோலை மட்டும் உரித்து விடுகிறார்கள். பிறகு நல்ல நைஸ் உப்பை அவன் உடல் மேல் தடவுகிறார்கள். அப்படியே மேஜையுடன் தூக்கிக்கொண்டு போய் நல்ல வெயிலில் வைத்து விடுகிறார்கள். மாலை வரைக்கும் அவன் அப்படியே கிடக்கிறான். அவன் போட்ட சப்தம் பூலோகம் வரை கூட கேட்டிருக்கும்.

மாலையில் அவனை அவிழ்த்து விட்டால் பழையபடி ஆகிவிடுகிறான். மறுநாளும் இதே மாதிரி செய்வார்களாம்.

நான் பார்த்த வரையில் இந்த இரண்டு தண்டனைகளும் என் மனதிற்குப் பிடித்தன.

என்னுடைய கருத்து. ஏன் இந்த தண்டனைகளை நம் பாலியல் குற்றவாளிகளுக்கு கொடுக்கக் கூடாது?

சனி, 9 மார்ச், 2013

ஒரு விளம்பரம்

விளம்பரம்

ஒரு புதிய விமான சர்வீஸ்


தமிழ்நாட்டிலிருந்து தேவலோகத்திலுள்ள இந்திரபுரிக்கு விமான சர்வீஸ் தொடங்கவுள்ளோம்.  கட்டணம் ஒரு கோடி ரூபாய் மட்டுமே. போக விருப்பமுள்ளவர்கள் முன் பதிவு செய்துகொள்ளவும்.

எமது புது விமான சர்வீசுக்கு அனுபவமுள்ள பைலட்டுகள், கோ-பைலட்டுகள், விமான பணிப்பெண்கள், மற்றும் கிரவுண்ட் ஸ்டாப் தேவைப்படுகிறார்கள். வேலைக்கு அணுகவும். நின்று போன விமான சர்வீஸ்களிலிருந்து வருபவர்கள் முறையான டிஸ்சார்ஜ் சர்டிபிகேட்டுடன் வரவும்.



டிஸ்கி: இது ஒரு கற்பனை விளம்பரம். உண்மை என்று ஏமாந்து போனால் கம்பெனி பொறுப்பேற்காது.

வெள்ளி, 8 மார்ச், 2013

4. புரட்சிகரமான மாற்றங்கள்


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

இளைப்பாறிவிட்டு எல்லோரும் ஆபீசில் கூடினோம். சித்திரகுப்தன் எல்லா தேவர்களையும் குடியிருப்பில் இருத்திவிட்டு எல்லோருக்கும் அடையாள அட்டை கொடுத்தாயிற்று என்றான். நல்லது உட்கார் என்று சொல்லிவிட்டு மந்திராலோசனையை ஆரம்பித்தேன்.

பகல்-இரவு தோற்றுவித்தல் - நாரதரிடம் கேட்டேன். இங்கு ஏன் எப்பொழுதும் பகலாகவே இருக்கிறது. இரவு ஏன் இல்லை?

அவர் சொன்னார், பல கோடி காலமாக இப்படியேதான் இருக்கிறது. யாரும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை என்றார்.

நான் இதை எப்படி மாற்றுவது? பூலோகம் மாதிரி 12 மணி நேரம் பகலாகவும் 12 மணி நேரம் இரவாகவும் மாற்றவேண்டுமே என்றேன்.

நாரதர் அதற்கென்ன, அப்படியே செய்து விடலாம். நான் சூரியனைக் கூப்பிடுகிறேன். நீங்கள் ஒரு வார்த்தை சொல்லிவிடுங்கள் என்றார்.

சூரியன் வந்தார். நாரதர் அவரிடம் விஷயத்தைச் சொன்னார். சூரியன் இந்திரனிடம் கேட்கவேண்டுமே என்றார். நாரதர் சொன்னார், சூரியரே, இப்போது இங்கு இவர்தான் சகல காரிய அதிகாரஸ்தர். இந்திரன் வேலைகளையெல்லாம் இவர்தான் பார்க்கிறார், ஆகையால் நீ இவருடைய ஆணையை ஏற்றுக்கொள்ளலாம் என்றார். சூரியனும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

தேவர்களை தூங்குவித்தல் - நாரதரே, இந்தத் தேவர்களை இரவில் தூங்க வைக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன். பிரபோ, அவர்கள் கண் இமைப்பதில்லையாதலால் அவர்கள் தூங்க முடியவில்லை என்றார்.

அப்படியா, சங்கதி, இந்த நொடி முதல் எல்லாத் தேவர்களுக்கும் இமைகள் இமைக்கட்டும். அப்படியே அவர்கள் பேய் மாதிரி மிதக்காமல் அவரவர்கள் கால்களினால் நடக்கட்டும் என்றேன். இந்த விஷயங்களை விவரமாக தேவதந்தியில் போட்டு விடுங்கள் என்றேன்.

தேவலோகத்தில் நடைமுறை பாஷை - இனிமேல் தேவலோகத்தில் தமிழ்தான் நடைமுறை பாஷையாக இருக்கும். அனைத்து அரசாங்க நடவடிக்கைகளும் தமிழிலேயே நடக்கும். திருவள்ளுவர், தொல்காப்பியர், பரிமேலழகர் ஆகியோர் உடனடியாக அனைத்து தேவர்களுக்கும் தமிழ் கற்றுக் கொடுக்கவேண்டும்.

தேவர்களுக்கு பசி தாகம் உண்டாக்குதல் - நாரதரே, நீங்கள் எல்லாம் உணவின் ருசியை அறியாமலிருப்பதால்தான் உங்களுக்கு வாழ்க்கையில் சுவாரஸ்யமில்லை. ஆகையால் நாளை காலையிலிருந்து உங்கள் அனைவருக்கும் பசி, தாகம் உண்டாகட்டும். அவர்கள் தாங்களாகவே சமையல் செய்யக் கற்றுக்கொள்ளும் வரை காமதேனு அவர்களுக்கு உணவு சப்ளை செய்யட்டும்.

நளன், பீமன் இருவரும் இங்குதானே இருக்கிறார்கள் என்றேன். நாரதர் அவர்களை உடனே வரவழைத்தார். என்ன, நள பீமர்களே, நலமா? என்றேன். அவர்கள் என்ன ஊருங்க இது, ஒரு வேலை வெட்டி இல்லை, சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை, மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்றார்கள்.

உங்கள் கஷ்டங்கள் எல்லாம் இன்றோடு தீர்ந்து விட்டன. இனி தேவர்களுக்கு பசி, தாகம் உண்டாகும். அவர்களுக்கு சமையல் கலையை நீங்கள் இருவரும் கற்றுக்கொடுக்கவேண்டும். உடனே ஆரம்பியுங்கள் என்றேன். அவர்களை மிகுந்த சந்தோஷத்துடன் போய்விட்டார்கள்.

கற்பகதருவைக் கூப்பிட்டு அனைத்து தேவர்களுக்கும் ஒரு வருடத்திற்கான அரிசி, பருப்பு, எண்ணை வகையறாக்களை உடனே சப்ளை செய்யவும் என்றேன். அதுவும் சரி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டது.

நாரதரே, ஒரு வருடத்திற்கான உணவு ஏற்பாடுகளைச் செய்தாய் விட்டது. அடுத்த வருடத்திலிருந்து தேவர்கள் அவர்களுக்கு வேண்டிய உணவுப்பொருட்களை அவர்களே உற்பத்தி செய்து கொள்ளவேண்டும். அதற்கான வழிமுறைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கவேண்டுமே, எப்படி என்று கேட்டேன்.

இது கொஞ்சம் கடினமான வேலை, பிரபோ. தேவர்கள் இதுநாள் வரை உடம்பை வருத்தி எந்த வேலையையும் செய்து பழகியவர்களல்ல. தவிர, அவர்கள் ஆளும் வர்க்கமாகவே இருந்து விட்டதால் அவர்கள் விவசாய வேலை செய்ய பிரயோஜனப்பட மாட்டார்கள். நமது சித்திரகுப்தனைக் கேட்டால் இந்த வேலைக்குத் தகுந்த ஆட்களை அடையாளம் காட்டுவார் என்றார்.

சித்திரகுப்தா, இதற்கு என்ன வழி என்றேன். பிரபோ, இதற்கு நல்ல வழி இருக்கிறது. யமலோகத்தில் பலர் அவர்கள் தண்டனை காலம் முடிந்து சும்மா இருக்கிறார்கள். அவர்கள் எந்த கடின வேலையையும் செய்து பழகியவர்கள். அவர்களை தேவலோகத்தில் விவசாயம் செய்ய கூப்பிட்டுக்கொள்ளலாம் என்றான். அப்படியே ஆகட்டும் என்றேன்.

இப்டியாக தேவர்களின் இருப்பிடம், உணவு ஏற்பாடுகள் முடிந்தன.

தேவலோகத்தில் மின்சாரம், சமையல் எரிவாயு, குடிதண்ணீர் ஆகி வசதிகளை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி மயனுக்கு உத்திரவு போட்டேன். அவனும் அதை செய்து முடித்தான்.

எல்லோரையும் அவரவர்கள் இருப்பிடத்திற்கு அனுப்பிவிட்டு, நாங்கள் மூவரும் விடுதிக்குத் திரும்பினோம். அப்போது பொது, தலைவா, நாம் இப்படித் தேவர்களுக்கே பாடுபட்டுக் கொண்டிருந்தால், நம் பிள்ளை குட்டிகளின் கதி என்ன ஆவது? என்றான். நல்ல சமயத்தில் ஞாபகப்படுத்தினாய், நானும் இதைப் பற்றித்தான் யோசித்துக் கொண்டிருந்தேன். எனக்கு ஒரு யோசனை இருக்கிறது.

அதாவது இங்கு ஏகப்பட்ட இடம் காலியாக இருக்கிறது. இந்தத் தேவர்களோ ஒரே எண்ணிக்கையில் இருக்கிறார்கள். அதனால் இந்த உபரியாக இருக்கும் இடத்தையெல்லாம் பிளாட் போட்டு விற்கலாமா என்று ஒரு ஐடியா மனதில் இருக்கிறது. நீங்கள் இரண்டு பேரும் இரவு யோசித்து காலையில் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள் என்று சொல்லிவிட்டு தூங்கப்போனேன்.

புதன், 6 மார்ச், 2013

மருந்து சாப்பிடுவது எப்படி?


பெயரில்லா4 மார்ச், 2013 4:36 PM
எனக்கு ஒரு சந்தேகம். ஆங்கில மருத்துவம் படித்த டாக்டர்களால் ஏற்பட்டது. மருந்து எழுதிகொடுக்கும்போது சா.பி. / சா. மு. என்று சரியாக சொல்ல மாட்டேன் என்கிறார்கள். கேள்வி கேட்க பயந்து கொண்டு மருந்து கடையில் கேட்க வேண்டியதாய் இருக்கிறது. அது எந்த அளவு சரியாக இருக்கும் என்று ஒரு பயத்திலேயே சாப்பிட வேண்டியிருக்கிறது. சா.பி. மாத்திரையை ஆகாரம் சாப்பிடுமுன் சாப்பிட்டாலோ சா. மு. மாத்திரையை ஆகாரம் சாப்பிட்ட பின் சாப்பிட்டாலோ பலன் இல்லை என்கிறார்கள்.

ஆராய்ச்சி டாக்டரான நீங்கள் இதற்கு ஒரு வழி சொல்ல முடியுமா? மருந்தி பெயரை வைத்தோ அல்லது அதன் மூலக்கூறுகளை வைத்தோ சா.பி. / சா. மு என்று கண்டு பிடிக்க முடியுமா? அதை உங்களுக்கே உரித்தான கொங்கு தமிழில் நகைச்சுவையுடன் சொன்னால் நாங்கள் உங்களை PhD டாக்டர் என்ற நிலையில் இருந்து MBBSடாக்டர் என்ற நிலைக்கு உயர்த்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளோம். எனவே நடுவில் கொஞ்சம் நேரம் கிடைக்கும்போது இதைப்பற்றியும் பதியுங்களேன் ஐயா

மருந்து சாப்பிடுவது என்ன பெரிய இந்திரஜால வித்தையா? மருந்தை வாயில் ஊற்றினால் வயிற்றுக்குப்போகிறது, இதற்கு ஒரு பதிவா? என்று கேட்பவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு.

பெயரில்லாவின் பின்னூட்டத்தில் மருந்து சாப்பிடுவது சாப்பாட்டிற்கு முன்பா அல்லது பின்பா என்பதைப்பற்றி ஒரு விளக்கம் கேட்டிருக்கிறார்.

இதைப் பற்றிய ஒரு நகைச்சுவைக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஒருவர் தன்னுடைய வெய்ட்டைக் குறைக்க டாக்டரிடம் போனார். அவர் இனிமேல் நீங்கள் இரவில் ஒரு டம்ளர் பாலும் ஒரு பழமும் மட்டும் சாப்பிடுங்கள் என்றார். இவர், டாக்டர், இதை சாப்பாட்டுக்கு முந்தி சாப்பிடவா அல்லது சாப்பாட்டிற்குப் பிந்தியா? என்று கேட்டார். டாக்டர் என்ன சொல்ல முடியும் என்பதை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்.

நோயாளிகள் டாக்டரைப் பார்க்கப்போகும்போது அவர்களுக்குப் பதட்டம், டாக்டருக்கோ நேரமின்மை. இதனால் பல சமயங்களில் மருந்து சாப்பிடும் முறை பற்றிய விவரங்களைப் பற்றி தெளிவாக டாக்டரிடம் கேட்க முடிவதில்லை. மருந்துக் கடைகளில் உள்ள பார்மசிஸ்ட்டுக்கு இந்த விவரங்கள் ஓரளவு தெரியும். ஆனால் மருந்துக் கடைகளில் பார்மசிஸ்ட் பெயருக்குத்தான் உண்டே தவிர, அவர் பெரும்பாலும் இருக்கமாட்டார்.

இந்த நிலையில் என்ன செய்வது? நோயாளியும் ஓரளவு விழிப்புடன் இருந்தால்தான் இன்றைய உலகில் வாழமுடியும்.

ஏன் சில மருந்துகளை சாப்பாட்டுக்கு முன்பு சாப்பிடவேண்டும், ஏன் சில மருத்துகளை சாப்பாட்டுடனோ அல்லது சாப்பிட்ட பிறகோ சாப்பிடவேண்டும்?

உங்களுக்கு வயிற்று வலி என்று வைத்துக்கொள்வோம். இது வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதினால் வருவது. சாப்பட்டவுடன் வலி அதிகமாகிறது. அப்போது இந்த அமிலத்தைச் சமன்படுத்தக் கொடுக்கும் மருந்தை சாப்பாட்டிற்கு அரை மணி முன்பு சாப்பிடவேண்டும். அப்போதுதான் வயிற்றிலுள்ள அதிகப்படியான அமிலம் சமன்படுத்தப்பட்டு நீங்கள் சாப்பிடும்போது வலி இருக்காது. இந்த மருந்தை சாப்பிட்டபின் சாப்பிட்டால் பலன் இருக்காது.

அதேபோல் சர்க்கரைக்காக சாப்பிடும் மாத்திரைகளை சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்னால் சாப்பிடவேண்டும். அப்போதுதான் அந்த மருந்து இன்சலினை அதிகமாக சுரக்கவைத்து நீங்கள் சாப்பிட்டவுடன் உண்டாகும் சர்க்கரையை சமன்படுத்த உதவும். ஆனால் இன்சுலின் ஊசி போடுபவர்கள் சாப்பிட்ட பின்புதான் போடவேண்டும். இன்சுலின் உடனடியாக வேலை செய்யக்கூடியது. இரத்தத்தில் அதிகப்படியாக உள்ள சர்க்கரையை சமன்படுத்த இது உதவும். இரத்தத்தில் அதிகப்படியான சர்க்கரை இல்லாத சமயத்தில் இந்த ஊசியைப் போட்டால் சரக்கரையின் அளவு ரத்தத்தில் குறைந்து மயக்கம் வரக்கூடும்.

சில மருந்துகள் வயிற்றில் எரிச்சலை உண்டு பண்ணும். பெரும்பாலான வலி நிவாரணிகள் இந்த வகையைச் சேர்ந்தவை. அவைகளை வயிற்றில் உணவு இருக்கும்போதுதான் சாப்பிடவேண்டும். அப்போதுதான் வயிற்றெரிச்சல் உண்டாகாது. ( அடுத்தவன் நன்றாக வாழ்வதைப் பார்த்து வரும் வயிற்றெரிச்சல் வேறு. அது எப்போதும் இருந்து கொண்டேதான்  இருக்கும்.அதை மாற்ற மருந்து இல்லை)

பொதுவாக மருந்துகளை சாப்பிட்டபிறகு எடுத்துக்கொண்டால் அவை இரத்த்துடன் சேர்ந்து கொள்ளும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலான மருந்துகள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். ஆகவே டாக்டர்கள் உணவிற்கு முன்னால் சாப்பிடுங்கள் என்று ஸ்பெஷலாகச் சொல்லாத வரை அவைகளை சாப்பாட்டிற்குப் பின் சாப்பிடுவதுதான் நல்லது.

நீண்ட நாள் தொடர்ந்து சாப்பிடவேண்டிய மருந்துகளை ஒரு முறைக்கு இருமுறை டாக்டரிட்ம் எப்போது, எப்படி சாப்பிடவேண்டும் என்று கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும். சில மாத்திரைகளை வாயில் நன்றாக மென்று சாப்பிடவேண்டும். அவைகளை அப்படியே விழுங்கினால் பலன் இருக்காது.

அனைத்து மருந்துகளுடனும் மருந்துக் கம்பெனியின் அச்சடித்த குறிப்பு ஒன்று இருக்கும். அதில் மருந்தின் தன்மை, எப்படி சாப்பிடவேண்டும், பக்க விளைவுகள் ஏதாகிலும் உண்டா என்கிற விபரங்கள் இருக்கும். அந்தக் குறிப்பை நன்கு படித்து அதன்படி மருந்தைச் சாப்பிடவேண்டும்.

சில ஒவ்வாமை நோய்களுக்கு கொடுக்கப்படும் மருந்துகள் லேசானது முதல் நல்ல தூக்கம் வரை உண்டு பண்ணக்கூடியவை. அவைகளைப் பொதுவாக இரவில்தான் சாப்பிடச் சொல்லுவார்கள். இருந்தாலும் மறுநாள் பகலிலும் அதன் தாக்கம் இருக்கும். அப்படிப்பட்ட மருந்துகளைச் சாப்பிடுபவர்கள் வாகனம் ஓட்டவோ, கனரக இயந்தரங்களில் வேலை செய்வதோ கூடாது. விபத்துகள் நேரிடலாம்.

எந்த மருந்தானாலும் டாக்டர்கள் குறிப்பிடும் நாட்களுக்குச் சாப்பிடவேண்டும். நோயின் அறிகுறிகள் ஓரளவு மறைந்தவுடனேயே மருந்தை நிறுத்தி விடுவதுதான் நம்மில் பெரும்பாலானோரின் பழக்கம். மருந்து வாங்கும்போதே, டாக்டர் பத்து நாளைக்கு எழுதியிருந்தால், இரண்டு நாளைக்குக் கொடுங்கள் என்று வாங்குபவர்கள் அநேகம்.

டாக்டர் சொல்லும் நாட்களுக்கு மருந்து சாப்பிடவேண்டும். அப்போதுதான் அந்த நோய் முழுவதுமாகக் குணமாகும். ஆனால் சில டாக்டர்கள் தாங்களாகவே மருந்துக்கடை வைத்துக்கொண்டு அதன் முலம் காசு பார்ப்பதும் உண்டு. அத்தகைய டாக்டர்களிடம் போகாமல் இருப்பது உத்தமம்.

மருந்து சாப்படும்போது, இந்த மருந்து நம் நோயைக் குணப்படுத்தும் என்ற நம்புக்கையுடன் சாப்பிடவேண்டும். என்னமோ டாக்டர் கொடுத்திருக்கார், அல்லது மகன் வாங்கிக் கொடுத்திருக்கான், என்று கடனுக்காகச் சிப்பிட்டால் வியாதி குணமாக காலம் செல்லும்.

மருந்துகள் சாப்பிடவேண்டிய சூழ்நிலை வராமல் காத்துக்கொள்வது உத்தமம்.

திங்கள், 4 மார்ச், 2013

3. தேவலோக நகர்வலம்


காலையில் எழுந்தவுடன் காப்பியைத் தேடினேன். யாரையும் காணோம். காப்பி எப்படி குடிப்பது என்று தெரியவில்லை. பொதுவைக்கூப்பிட்டு விசாரித்தேன். அவரும் அதற்காகத்தான் அலைந்து கொண்டிருந்தார். செக்கும் வந்து சேர்ந்தார்.

அப்போது என் ஞானதிருஷ்டியில் பார்த்தபோது தேவலோகத்தில் ஒரு பயலும் காப்பி குடிப்பதில்லை என்று தெரியவந்தது. காலையில் டிபனும் சாப்பிடமாட்டார்களாம். சரி என்று காமதேனுவை வரச்சொன்னேன். அது வந்து "பிரபோ, என்ன வேண்டும்?" என்று கேட்டது.

இதோ பார் காமதேனு, இன்னும் கொஞ்ச நாளைக்கு நீ இங்கேயே இருந்து எங்களுக்குத் தேவையானதை எல்லாம் சப்ளை செய். அப்புறம் வேறு ஏற்பாடு செய்யலாம். இப்போது எங்களுக்கு மூன்று காப்பி. நல்லா ஸ்ட்ராங்கா கொண்டு வா" என்றோம். உடனே காப்பி வந்தது. அருமையாக இருந்தது. காலை உணவிற்கு என்ன வேண்டும் என்று கேட்டது. ஆளுக்கு இரண்டு இட்லி, ஒரு உளுந்து வடை, ஒரு நெய் ரோஸ்ட், ஒரு காப்பி, அவ்வளவுதான் என்று சொல்லிவிட்டு, காலைக்கடன்களை முடித்து, குளித்து விட்டு வந்தோம்.

இன்றைக்கு என்ன செய்தி, பார்க்கலாம் என்று பார்த்தால் ஒரு நியூஸ் பேப்பரையும் காணோம். அப்போது நாரதர் வந்தார். அவரை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏதும் இல்லை. கையில் தம்புரா, வாயில் நாராயண நாமம். வாருங்கள் நாரதரே, சௌக்கியம்தானே என்று கேட்டேன். நான் சௌக்கியம், இந்திரன்தான் கொஞ்சம் சோர்ந்திருக்கிறான். மும்மூர்த்திகளுக்கு அவன் பேரில் அவ்வளவு நல்ல அபிப்பிராயம் இல்லை போலிருக்கிறது. அதுதான் உங்களை பூலோகத்திலிருந்து வரவழைத்திருக்கிறார்கள். உங்களுக்கு நான் என்ன சேவை செய்யவேண்டும், என்றார்.

இந்த ஆளிடம் நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும், இவனுக்கு தேவைக்கு மேல் விஷயம் தெரிந்திருக்கிறது என்று முடிவு செய்து, நாரதரே, உங்களுக்கு ஒரு விசேஷப் பதவி கொடுக்கிறேன். அதாவது நீங்கள்தான் இனி தேவலோகப் பிரசுரகர்த்தர். அதாவது முதலில் இங்கு ஒரு செய்தித்தாள் ஆரம்பித்து அதில் தேவலோகத்தில் நடப்பவைகள் எல்லாம் பிரசுரிக்கவேண்டும். நீங்கள் எங்கள் புது ஆபீசிலேயே ஒரு ரூமில் இருந்து கொள்ளலாம் என்று சொன்னேன்.

அவர் ஒத்துக்கொண்டார். பத்திரிகைக்கு பெயர் வைத்தோம். "தேவ தந்தி"
நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு வருவதற்குள் நீங்கள் ஆபீஸ் சென்று அங்கு மயன் இருப்பார். பத்திரிக்கை முதல் பிரதியை அச்சடித்து விநியோகியுங்கள் என்றேன். எத்தனை காப்பி அடிப்பது என்றார். இங்கு இருப்பது முப்பத்திமுக்கோடி நபர்கள். ஆளுக்கு ஒன்று. உபரியாக ஒரு பத்தாயிரம் காப்பிகள். அவ்வளவுதான் என்றேன். நாரதர் போய்விட்டார்.

நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸ் போனோம். அன்றைய தேவதந்தி டேபிள்மேல் இருந்தது. அதில் நாங்கள் மூவரும் தேவலோகம் வந்து பதவி ஏற்றது, இந்திரனின் வருத்தம், நாங்கள் புது ஆபீசில் குடியேறியது, அன்று நகர்வலம் செல்வது ஆகிய விவரங்கள் அனைத்தும் விலாவாரியாக கொடுக்கப்பட்டிருந்தன.

மயனைக்கூப்பிட்டு நகர்வலம் போகலாமா என்றேன். அவர் சரி என்றார். நாங்கள் மூவர், மயன், நாரதர் ஆகக்கூடி ஐந்து பேர். ஆபீசை விட்டு வெளியில் வந்தோம். வெளியில் எந்த வாகனமும் காணவில்லை. மயனிடம் என்ன, வாகனம் எதுவுமில்லையா? என்றேன். மந்திரி, தேவலோகத்தில் வாகனங்கள் இல்லை. தேவேந்திரனிடம் மட்டும்தான் ஒரு லொடலொட புஷ்பக விமானம் இருக்கிறது. தவிர அவரிடம் ஒரு யானை இருக்கிறது. அதை வேண்டுமானால் வரச்சொல்லட்டுமா என்றான்.

மயன், யானையெல்லாம் சரிப்படாது. புஷ்பக விமானத்தில் பூலோகத்திலிருந்து வந்த உடம்பு வலியே இன்னும் சரியாகவில்லை. பூலோகத்தில் இத்தாலி என்னும் ஊரில் புதிதாக புஷ்பக விமானங்கள் "ஹெலிகாப்டர்" என்னும் பெயரில் விற்கிறார்கள். அந்த விமானங்களுக்கான ஆர்டரை இந்தியா கேன்சல் செய்து விட்டபடியால் அவை ரெடியாக இருக்கும். ஒரு அரை டஜன் வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றேன். கூடவே அதை ஓட்டுவதற்கு ஆறு பைலட்டுகளையும் ஆறு மாத டெபுடேஷனில் கூட்டிக்கொண்டு வாருங்கள் என்றேன்.

மயன் ஆனாலும் படு சுறுசுறுப்பு. அடுத்த சில நிமிடங்களில் ஆறு ஸ்பெஷல் விஐபி ஹெலிகாப்டர்கள் பைலட்டுகளுடன் தயாராக நின்றன. இன்று நாம் எல்லோரும் ஒரு ஹெலிகாப்டரிலேயே போகலாம் என்று சொல்லி எல்லோரும் புறப்பட்டோம்.

எங்கு பார்த்தாலும் தேவர்கள். ஆண்கள் தலையில் தங்க கிரீடம் வைத்துக் கொண்டு கழுத்திலும் கைகளிலும் பல தங்க ஆபரணங்களை அணிந்து கொண்டிருந்தார்கள். ஜிகுஜிகு துணிகளில் பஞ்சகச்சமும், மேலாடைகளும் அணிந்திருந்தார்கள். பெண்கள் தலையில் கிரீடமில்லை. அவர்கள் கழுத்து. கை, கால் இடுப்பு, தலை என்று எல்லா இடங்களிலும் தங்க நகைகளை அணிந்திருந்தார்கள். பொது - நாலு பேரை நம் ஊருக்கு கடத்திக்கொண்டு போனால் நாலு தலைமுறைக்கு வேண்டிய சொத்தை அந்த நகைகளினால் சம்பாதித்து விடலாம் போலிருக்கிறதே, தலைவா, என்றார். சும்மா இரும் பொது என்று சொல்லிவிட்டு, அந்த தேவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தேன்.

தேவர்கள் ஆண்-பெண் ஜோடி ஜோடியாக ஆங்காங்கே மிதந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பாதம் நிலத்தில் பதியவில்லை. அவர்கள் கண்களும் இமைக்கவில்லை. நாரதரே, நாம் கீழே இறங்கி அவர்களுடன் கொஞ்சம் பேசலாமா என்று கேட்டேன். அவர் பேஷாப் பேசலாமே என்றார். ஹெலிகாப்டரை கீழே இறக்கினோம்.

நாரதர் போய் நாலைந்து ஜோடி தேவர்களைக் கூட்டிவந்தார். நெருக்கத்தில் பார்க்கும்போதுதான் மேலும் பல விஷயங்கள் தெரிய வந்தன. இந்தப் பயல்களின் கால்கள் தரையிலிருந்து ஒரு ஜாண் மேலேயே இருந்தன. எல்லோருடைய மூஞ்சிகளும் ஜப்பான்காரன் மூஞ்சி மாதிரி ஒரே மாதிரியாக இருந்தன. ஒரு ஆளைக் கூப்பிட்டு உன் பெயரென்ன என்று கேட்டேன். அவன் விழித்தான்.

நாரதரிடம் இவன் பெயர் என்னவென்று கேட்டுச் சொல்லுங்கள் என்றேன். நாரதர் இவர்களுக்கெல்லாம் பெயர் இல்லை என்றார். என்ன, இவன்களுக்குப் பெயர் இல்லையா, அப்புறம் எப்படி ஒவ்வொருத்தனையும் கூப்பிடுவீர்கள் என்று கேட்டேன். அவர்களை எதற்குக் கூப்பிடவேண்டும்?அவர்கள் பாட்டுக்கு இருக்கிறார்கள். அவர்களைக் கூப்பிட்டு என்ன செய்யப் போகிறோம்? என்று என்னைத் திருப்பிக் கேட்டார்.

நாரதரே, எங்கள் பூலோகத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பெயர் உண்டு. அவர்கள் அந்தப் பெயரினால்தான் அடையாளம் காணப்படுகிறார்கள், அப்படி இங்கே இவர்களுக்குப் பெயர் வைக்கவில்லையா? என்றேன். இல்லை என்றார். சரிதான், நம் ஊரில் தெருவில் திரியும் ஆடுமாடுகளுக்கெல்லாம் பெயரா வைத்திருக்கிறோம், அது மாதிரி போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் இந்த மாதிரி இருந்தால் நம் திட்டங்களுக்குச் சரிப்படாதே, என்ன செய்யலாம் என்று யோசித்தபோது சித்திரகுப்தன் ஞாபகம் வந்தது.

அவனை அழைத்தேன். உடனே வந்து "வணக்கம் மந்திரி பிரபோ" என்றான். அன்றைய பத்திரிக்கையைப் படித்திருக்கிறான். சித்திரகுப்தா, இதென்ன இங்குள்ளவர்களுக்கெல்லாம் பெயரே கிடையாதாமே, ஏன் என்றேன். பிரபோ, அதற்கு அவசியமே ஏற்படவில்லை என்றான். நான் "அதற்கு அவசியம் இப்போது வந்து விட்டது. இவர்களுக்கெல்லாம் பெயர் கொடு" என்றேன். பிரபோ, அவ்வளவு பெயர்களையும் உடனே கண்டுபிடிப்பது சிரமம். நடைமுறைச் சிக்கலும் வந்து விடும். ஆகவே ஒவ்வொருவருக்கும் நெம்பர் கொடுத்துவிடலாமென்றான்.

சரி, அப்படியே செய்துவிடு. ஒவ்வொருவருக்கும் ஒரு அடையாள அட்டை தயார் செய்து, அதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிருக்கவேண்டும் என்று சொல்லிவிடு என்றேன். நெம்பர் கொடுப்பதற்கு முன் சில வேலைகள் இருக்கின்றன. இங்கேயே இரு என்று சொல்லிவிட்டு மயனைக் கூப்பிட்டேன்.

மயன், இவர்களை ஒரு ஒழுங்கில் குடியமர்த்தவேண்டும். இப்போது இவர்கள் எங்கே குடியிருக்கிறார்கள் என்றேன். அப்படியென்றால்.... என்று மயன் இழுத்தார். இவர்கள் இப்படியே உலாத்திக்கொண்டு இருப்பார்கள், இவர்களுக்கு வீடு வாசல் என்று ஒன்றும் கிடையாது என்றார். என்னடா, நம் பூலோக தெரு நாய்கள் கதி மாதிரி இருக்கிறதே என்று நினைத்தேன்.

அப்படியானால் நான் சொல்வதைக் கவனமாகக் கேளும். செக்கு, நீயும் இதைக் கேட்டுக்கொள். நீதான் இனிமேல் இந்த குடியமர்ப்புகளை பரிபாலனம் செய்யவேண்டும். இந்த முப்பத்து முக்கோடி தேவர்களையும் பிரித்து குடியமர்த்தவேண்டும். இந்த தேவலோகத்தை முப்பத்திமூன்று மாநிலங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு தலைநகரம். ஒவ்வொரு மாநிலத்தையும் பத்துப் பத்து மாவட்டங்களாகப் பிரியுங்கள். ஒவ்வொரு மாவட்டத்திலும் பத்துப் பத்து வட்டங்கள் இருக்கட்டும். ஒவ்வொரு வட்டத்திற்கும் 70 கிராமங்கள்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கோடி தேவர்கள். மாநிலத் தலைநகரில் பத்து லட்சம் தேவர்கள் இருக்கட்டும். மாவட்டத் தலைநகரில் ஒரு லட்சம் தேவர்கள். வட்டத் தலைநகரில் பத்தாயிரம் தேவர்கள். மீதி 70 லட்சம் பேர் இருப்பார்கள். அவர்கள் மொத்தம் உள்ள 7000 கிராமங்களில் ஆயிரம் ஆயிரம் பேராக இருக்கட்டும். கிராமங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் ஆளுக்குப் பத்து ஹெக்டேர் (25 ஏக்கர்) நிலம் இருக்கட்டும். அதில் கிணறு, மோட்டார் பம்ப்செட் வசதியும் இருக்கட்டும்.

எல்லோருக்கும் குடியிருக்க வீடுகள் தயாராகட்டும். ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு ஜோடி தங்கட்டும். ஆக மொத்தம் 16 கோடி 50 லட்சம் வீடுகள் இப்போதைக்குப் போதும். ஜனத்தொகை பெருகும்போது அவர்களுக்கு, பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஒவ்வொரு வீட்டிற்கும் தண்ணீர், மின்சாரம், பாதளச்சாக்கடை இணைப்பு ஆகியவைகளைக் கொடுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கட்டில், மெத்தை, மாடுலர் கிச்சன், டிவி, டெலிபோன் ஆகியவை இருக்கட்டும். அவைகளுக்கு உடனடியாக உபயோகம் இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் தேவைப்படும்.

மாநிலத் தலைநகரங்கள், மாவட்டத்தலைநகரங்கள், வட்டத்தலைநகரங்கள் ஆகியவற்றில் அந்தந்த இடங்களுக்குத் தகுந்த மாதிரி அலுவலங்கள் கட்டுங்கள். அவை சகல வசதிகளும் பொருந்தியதாக இருக்கட்டும். இது தவிர ஒவ்வொரு நகரத்திற்கு அருகாமையிலும், கூடவே பத்துப் பத்து சேடலைட் நகரங்கள் அமைக்க தேவையான காலி இடம் வைத்திருங்கள்.

அனைத்து மாநிலத்தலைநகர்களும் ஆறு வழிப்பாதை மூலம் இணையுங்கள். மாவட்டங்களுக்கு இடையே நான்கு வழிப்பாதைகள். வட்டங்களுக்கு இடையேயும் கிராமங்களுக்கு இடையேயும் இரு வழிப்பாதைகள் தயாராகட்டும்.

மயன் இந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான். சித்திரகுப்தனிடம் இந்த தேவர்களை இந்தக் குடியிருப்புகளில் குடியமர்த்துங்கள். அப்புறம் அவர்களுக்கு நெம்பர் கொடுப்பது எளிது. ஒவ்வொரு  ஆளுக்கும் பனிரெண்டு இலக்கத்தில் எண்கள் கொடுங்கள். முதல் இரண்டு எண்கள் மாநிலத்தைக் குறிக்கட்டும். அடுத்த இரண்டு எண்கள் மாவட்டத்தையும் அதற்கடுத்த இரண்டு எண்கள் வட்டத்தையும் குறிக்கட்டும். மீதி ஆறு எண்கள் அவர்களின் அடையாள எண்ணாக வரிசைக் கிரமமாகக் கொடுங்கள் என்றேன். சித்திரகுப்தன் சரி என்று சொல்லிவிட்டு அந்த வேலையைக் கவனிக்கப் போய்விட்டான்.

அப்புறம் ஒரு ஜோடியைக்கூப்பிட்டு மற்ற விஷயங்களை விசாரித்தோம். அந்த விசாரணையில் தெரிய வந்தது அவர்களை பேசுவது தேவபாஷை அதாவது வடமொழி. அவர்களுக்கு பசி தாகம் கிடையாது. அங்கு எப்போதும் பகல்தான். அவர்கள் தூங்குவது இல்லை. அவர்களுக்கு எந்த தேவையும் இல்லை. அவ்வப்போது கொஞ்சம் சோம்பானம் மட்டும் அருந்துவார்கள். அது இந்திரன் மாளிகையில் பீப்பாய் பீப்பாயாக வைத்திருக்கிறது. அந்தப் பீப்பாய்கள் தீரத்தீர, காமதேனு அவைகளை நிரப்பி வைத்து விடும்.

ஏறக்குறைய பூலோகத்தில் தெருவில் திரிந்து கொண்டிருக்கும் ஆடு மாடுகள் போல் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். சரி, இவைகளை ஒவ்வொன்றாக கவனிப்போம் என்று முடிவு செய்தேன்.

காலையில் சாப்பிட்ட டிபன் ஜீரணமாகிவிட்டிருந்தது. நாரதரிடம் என்ன, மதிய உண்வு சாப்பிடலாமா என்று கேட்டேன். அது என்ன மதிய உணவு? அதை எதற்கு சாப்பிடவேண்டும்? என்றார். வாருங்கள், காட்டுகிறேன் என்று சொல்லி, அவரையும் அழைத்துக் கொண்டு எங்கள் இருப்பிடம் சென்றோம். காமதேனு காத்துக் கொண்டு இருந்தது.

அதனிடம் டில்லி அசோகா ஹோட்டலில் மதிய உணவிற்கு என்னென்ன செய்திருக்கிறார்களோ, அதில் எல்லாவற்றிலும் எங்களுக்குத் தேவையான அளவு கொண்டுவா என்று சொல்லிவிட்டு, கைகால்கள் கழுவிவிட்டு டைனிங்ஹால் வந்தோம். சாப்பாடு தயாராக இருந்தது. நாங்கள் நால்வரும் (நாரதர் உட்பட) உட்கார்ந்தோம். இதுதான் மதிய உணவா என்று நாரதர் கேட்டார். ஆமாம் நாரதரே, இங்கே நீங்கள் எல்லாம் மதிய உணவு சாப்பிட மாட்டீர்களா என்று கேட்டேன். அவர் சொன்னார், தேவலோகத்தில் பசி, தாகம் கிடையாதாகையால் இதற்கெல்லாம் அவசியமில்லை என்றார்.


சரி, நாங்கள் சாப்பிடுவதைப் பாரும் என்று சொல்லிவிட்டு நாங்கள் மூவரும் திவ்யமாக சாப்பிட்டோம். பிறகு நாரதரை இருக்கச்சொல்லிவிட்டு நாங்கள் இளைப்பாறச் சென்றோம்.

தொடரும்...

வெள்ளி, 1 மார்ச், 2013

2. இந்திரனுடன் ஒரு ஒப்பந்தம்.


அரண்டு போன இந்திரனைத் தனியாகக் கூட்டிக்கொண்டு போனேன். இங்க பாரு, இந்திரா. கவலைப்படாதே, உனக்கு என்ன வேண்டுமோ அதைச்சொல்லு, நான் ஏற்பாடு செய்கிறேன் என்றேன். அப்போதுதான் அவன் கொஞ்சம் தெம்பானான்.

இந்திரன் சொன்னான். இதப்பாருங்க புது ராஜா, நான் இந்த "சேர்ல" உக்காந்து பல கோடி வருஷம் ஆச்சு. இந்த ரம்பை, ஊர்வசி நாட்டியம், சோமபானம், இந்திராணியுடன் சல்லாபம் இப்படி எல்லாம் பழகிப்போச்சு. இது எல்லாம் இல்லாத வாழ்க்கையை என்னால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை.

சில பேர் இந்த "சேருக்கு" ஆசைப்பட்டு என்னென்னமோ யாகம் எல்லாம் செஞ்சாங்க. அவங்களையெல்லாம் சாம, பேத, தான, தண்ட உபாயங்களினால் ஒழிச்சுக் கட்டி விட்டேன். இப்ப இந்த மும்மூர்த்திகளும் சேர்ந்து எனக்கு ஆப்பு வைக்கிறாங்களே, இது நியாயமா என்று அழுதான்.

நான் யோசிச்சேன். நமக்கும் இந்த ஊரு புதுசு, பழைய ஆள் ஒருத்தன் நம்ம பக்கம் இருந்தா, நாம தைரியமா இருக்கலாம் என்று யோசனை செய்து இந்திரனிடம் கூறினேன்.

இந்திரா, பயப்படாதே. உன்னுடைய பதவிக்கு எந்த ஆபத்தும் இல்லை. நீ எப்போதும்போல் டான்ஸ் பார்த்துக்கொண்டு இந்திராணியுடன் சந்தோஷமாக இருக்கலாம். உனக்கு என்ன வேண்டுமோ சொல்லு, அதை நான் செய்து தருகிறேன். நீ செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். நான் என்ன செய்தாலும் அவைகளை நீ கண்டு கொள்ளாதே என்றேன்.

இந்திரன் மிகவும் சந்தோஷப்பட்டு, நீதான் என் கண்கண்ட தெய்வம். எனக்கு இந்த "சேரும்" பழைய வாழ்க்கையும் இருந்தால் போதும், நீ என்ன செய்தாலும் நான் கண்டுகொள்ள மாட்டேன், என்ன, எனக்கு அவ்வப்போது கொஞ்சம் "சபலம்" வரும், அப்போது மட்டும் நீ கவனித்துக் கொண்டால் போதும் என்றான்.

அதற்கென்ன, அப்படியே செய்தால் போகிறது என்று சொல்லிவிட்டு, இனி நீதான் இங்கு ராஜா, நான் வெறும் மந்திரிதான், என்னை மந்திரி என்று கூப்பிட்டால் போதும் என்று சொல்லி விட்டு அடுத்து என் வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். முதல் எதிர்ப்பை வெற்றிகரமாகச் சமாளித்த கர்வம் என் முகத்தில் தெரிந்தது. அதை கர்சீப்பினால் அழுந்தத் துடைத்தேன். ஆரம்பத்திலேயே இந்த கர்வம் வந்தால் காரியங்கள் கெட்டுப்போகும் அல்லவா?

அடுத்து, நான் கூட்டிக்கொண்டு வந்திருந்த பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூப்பிட்டேன். இதுவரை நடந்தவைகளை அவர்கள் மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள், இப்போதுதான் வாயைத் திறந்தார்கள். பஞ்சாயத்துத் தலைவர் சென்னார் - "தலைவரே, அருமையான டீல், இனி நமக்கு இங்கு யாரும் எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள், உங்களை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை, ஒரு பாராட்டு விழா ஏற்பாடு பண்ணட்டுமா" என்றார்.

நாம ஒருத்தருக்கொருவர் பாராட்டுவது இப்போது வேண்டாம், நிறைய வேலைகள் இருக்கின்றன, வேலையைத் துவங்குவோம் என்று சொல்லிவிட்டு, இனிமேல் பஞ்சாயத்து தலைவர் பெயர் "பொது உறவுச் செயலாளர்" சுருக்கமாக "பொது". ரெவின்யூ இன்பெக்டர் என் "ஸ்பெஷல் செக்ரடரியாக" (சுருக்கமாக "செக்கு") இருப்பார்.

முதலில் நமக்கு நல்லதாக ஒரு ஆபீஸ் வேண்டுமே என்றேன். அங்கு திரிந்து கொண்டிருந்த ஒரு தேவனைக் கூப்பிட்டு இந்த ஊரில் நல்ல பில்டிங்க் கான்ட்ராக்டர்கள் யார் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவன் திருதிருவென விழித்தான். மறுபடியும் அதே கேள்வியைக் கேட்டேன். மறுபடியும் அப்படியே விழித்தான். நமது "பொது" வைக்கூப்பிட்டு இதைப் பாருங்க, பொது, நம்ம ஆபீஸ் கட்ட ஒரு நல்ல கான்ட்ராக்டர் வேணுமே, இந்த ஊர்ல யார் இருக்காங்கன்னு இவங்கிட்ட விசாரிச்சு சொல்லுங்க, என்றேன்.

அவர் அவனை நைசாக அந்தப் பக்கமாகத் தள்ளிக்கொண்டு போய் பேசினார். கொஞ்ச நேரம் கழித்து இருவரும் வந்தனர். அந்த தேவன் வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டே வந்தான். "பொது" சொன்னார். நம்ம பாஷை முதலில் இவனுக்குப் புரியலைங்க. அப்புறம் நான் புரிய வச்சேனுங்க. இங்க "மயன்" அப்படீன்னு ஒரு கான்ட்ராக்டர் இருக்காராம். ஊர்ல என்ன வேலைன்னாலும் அவர்தான் செய்வாராம். இந்த ஆள் அவரோட செக்ரட்டரியாம். நாம சொன்னா அவரைக் கூப்பிட்டுக் கொண்டு வருவாராம். இந்த சேவைக்காக நாம் இவரைக் கவனித்துக் கொள்ளவேண்டுமாம்.

என்னடா இது, இந்த ஊர் நம்ம ஊரை விட மோசமாக இருக்கும் போல இருக்குதே, சரி அதை அப்புறம் பார்ப்போம் என்று நினைத்துக்கொண்டு அந்த தேவனிடம் மயனை கூட்டிக்கொண்டு வரும்படி சொன்னேன். கொஞ்ச நேரத்தில் மயன் வந்தான். அவனைப் பார்த்ததும் நான் கொஞ்சம் ஆடிப்போய்விட்டேன்.

தலையில் வைரக் கிரீடம், கழுத்தில் ஏறக்குறைய ஒரு கிலோ தங்க நகைகள், தங்க வாள், பத்துவிரல்களிலும் தங்க மோதிரங்கள், இப்படி ஒரு நடமாடும் நகைக் கடை மாதிரி தெரிந்தான். சரி இருக்கட்டும், இவனை இன்று சரி செய்து விடலாம் என்று நினைத்துக்கொண்டு அவனிடம் பேச ஆரம்பித்தேன்.

நான் - நீர்தான் இந்த ஊரில் கான்டராக்டராமே.

மயன் - என்னை தேவலோக சிற்பி என்பார்கள். நீ யார்?

நான் - நான்தான் இந்த ஊருக்கு இப்போது ராஜா. என்னை மந்திரி என்று கூப்பிடவேண்டும். முதலில் என்னை மரியாதையுடன் அழைத்துப் பழகும்.

மயன் - என்னை உட்காரச் சொல்லக்கூட உனக்குத் தெரியவில்லையே.

நான் - அப்படியா, உட்கார்.

மயன் - எங்கே உட்காருவது?

நான் - தரையில்தான்.

மயன் - என்னை என்னவென்று நினைத்தாய், மானிடப் பயலே

என்று சொல்லிக்கொண்டு என் மேல் பாய்ந்தான். அவனைக் கையசைத்து அப்படியே நிற்கவைத்தேன். அவனைப் பார்த்து "இது என்ன டிரஸ், ஜிகிஜிகு வென்று டிராமாக்காரன் போல் டிரஸ். முதலில் இதை மாற்றி காக்கி அரைச்சட்டையும் காக்கி அரை டிராயரும் போட்டுக்கொண்டு வா" என்றேன். அவனுக்கு பயங்கர கோபம் வந்தது. என்னை கடிப்பவன்போல் பாய்வதற்கு எத்தனித்தான்.

இனியும் சும்மா இருக்கக்கூடாது என்று அவனுடைய ஆடை ஆபரணங்களைக் களைந்து வெறும் உள்ளாடையுடன் அவன் கைகளைக் கட்டி நிற்கவைத்தேன். அட, மடக்கான்ட்ராக்டரே, இனி நான்தான் உங்களுக்கு எஜமான், என் பேச்சைத்தான் நீ இனிமேல் கேட்கவேண்டும். மறுத்தால் உன்னை நரகத்திற்கு அனுப்பிவிடுவேன் என்றேன். அவனுக்கு இப்போதுதான் நிலைமையின் தீவிரம் புரிய ஆரம்பித்தது.

மந்திரி ஐயா, என்னை மன்னியுங்கள், உங்கள் பிரபல்யம் தெரியாமல் தப்பு செய்துவிட்டேன். இனி நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன் என்று காலில் விழுந்தான். சரி என்று சொல்லிவிட்டு, இத பார், மயன், நாங்கள் மூன்று பேர் வந்திருக்கிறோம், எங்களுக்கு ஆபீஸ் நல்ல முறையில் கட்டிக்கொடுக்கவேண்டும். அதில் இன்னும் பல டிபார்ட்மென்ட்டுகளை இருத்த கூடுதல் இடம் வேண்டும்.  கூடவே, நாங்கள் தங்குவதற்கான் வசதிகளையும் கட்டவேண்டும். எப்போது ரெடியாகும் என்றேன். அவன் நீங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது நேரம் இளைப்பாருங்கள், அதற்குள் முடித்து விடுகிறேன் என்றான்.

நாங்கள் இந்திரன் அரண்மனையில் சிறிது இளைப்பாறி விட்டு வந்தால் நிஜமாகவே எங்கள் ஆபீஸ் ரெடியாக இருந்தது. மயனைப் பாராட்டினேன். மயனே, நீ கெட்டிக்காரன், உனக்கு நிறைய வேலை இருக்கிறது. உன் பரிவாரங்களுடன் இந்த ஆபீசுக்கே வந்து விடு என்றேன். அவனும் சரியென்றான்.

எங்களுக்கு பிரயாணக் களைப்பு அதிகமாக இருந்ததால் தூங்கப் போனோம். மயன் நிஜமாகவே 5 ஸ்டார் வசதிகளுடன் எங்கள் இருப்பிடத்தை தயார் செய்திருந்தான். நன்றாகத் தூங்கி எழுந்தோம். முகம், கைகால்களை கழுவிக்கொண்டு டீ சாப்பிட்டு விட்டு ஆபீஸ் போனோம். 

சும்மா சொல்லப்படாது. மயன் உண்மையிலேயே படு கெட்டிக்காரன். ஆபீசை வெகு ஜோராக கட்டியிருந்தான். என்னுடைய ரூம் சகல வசதிகளுடன் இருந்தது. மயன் வெராண்டாவில் கையைக்கட்டிக் கொண்டு தயாராக நின்று கொண்டிருந்தான். காக்கி அரை டிராயரும் காக்கி அரைச்சட்டையும் போட்டிருந்தான். பரிதாபமாக இருந்தது. அவனையும் நம்ம பொது மற்றும் செக்கை ரூமுக்கு கூப்பிட்டேன்.

முதல் மந்திராலோசனை கூட்டம் துவங்கியது.

இங்க பாருங்க மயன் (இனி இவருக்கு கொஞ்சம் மரியாதை கொடுப்போம் என்று முடிவு செய்தேன்), இனி உங்கள் பதவி "சீப் இன்ஜியர்". இனிமேல் நீங்கள் கோட், சூட் போட்டுக்கொண்டு ஆபீஸ் வரலாம். உங்கள் கீழ் பணிபுரியும் ஆட்கள் இந்த காக்கி யூனிபார்ம் போட்டுக் கொள்ளட்டும். நாளை காலை நாம் எல்லோரும் இந்த தேவலோகத்தை ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு, பிறகு என்னென்ன செய்யலாம் என்று முடிவு செய்யலாம்.

அப்போது மயன் சொன்னார்- மந்திரி சார், நாம் நகர் வலம் போகும்போது நாரதர் இருந்தால் நன்றாக இருக்கும். அவருக்குத்தான் நாட்டு நிலவரம் நன்றாகத் தெரியும் என்றார். அப்படியே ஆகட்டும், காலையில் வரச்சொல்லி செய்தி அனுப்பி விடுங்கள் என்று சொல்லிவிட்டு எங்கள் இருப்பிடத்திற்கு சென்றோம்.

சரி தூங்கலாம் என்று பார்த்தால் எங்கும் வெளிச்சமாகவே இருக்கிறது. இருட்டே ஆகவில்லை. சூரியன் மறையவே இல்லை. சரி இதை தூங்கி எழுந்து கவனிக்கலாம் என்று முகத்தை போர்வையால் நன்கு மூடிக்கொண்டு தூங்கினேன்.  

புதன், 27 பிப்ரவரி, 2013

1.தேவலோகத்தில் ஒரு புரட்சி


நான் நேற்றிரவு ஒரு கனா கண்டேன். அந்தக் கனவில் மும்மூர்த்திகளும் தோன்றி, மகனே, உன்னால் ஒரு பெரிய காரியம் ஆகவேண்டியிருக்கிறது. அதற்கு நீ தயாரா என்று கேட்டார்கள். ஆஹா, மும்மூர்த்திகளும் கேட்கும்போது மறுத்தால் நன்றாக இருக்காது என்று, சரி என்று சொன்னேன்.

அப்போது அவர்கள் சொன்னதின் சுருக்கம்:

முமூ (மும்மூர்த்திகள்) - மகனே, இந்திர லோகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பாய். அங்கே தற்போது இந்திரன் என்று ஒரு கையாலாகாத ராஜா ஆண்டு கொண்டிருக்கிறான். அவன் சரியான ஒரு சோம்பேறி. எப்போதும் டான்ஸ் பார்த்துக்கொண்டு நாட்டின் நலனைக் கவனிப்பதில்லை. தேவர்கள் எல்லோரும் சோர்ந்திருக்கிறார்கள். நீதான் அந்த நாட்டை சீர்திருத்தவேண்டும்.

நான் - ஐயன்மீர், எனக்கு வயதாகி விட்டது. உடல் ஒத்துழைக்க மறுக்கிறது. என்னால் எப்படி இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ள முடியும்?

முமூ (மும்மூர்த்திகள்) - தேவலோகத்திற்கு வந்து ஒரு "புல்" பாட்டில் சோமபானம் அருந்தி ஒரு மணி நேரம் ஊர்வசியின் நாட்டியம் பார்த்தால் உன் சோர்வெல்லாம் பறந்து போய்விடும்.

நான் - ஊர்வசி இப்போ அங்கதான் இருக்காங்களா?

முமூ - மகனே, அது சினிமா ஊர்வசி இல்லை, நிஜ ஊர்வசி. நீ முதலில் புறப்படு. காலம் கழிந்து கொண்டே இருக்கிறது.

நான் - அது சரி, அங்கே நான் என்ன சீர்திருத்தம் வேண்டுமானாலும் செய்யலாமா?

முமூ - நீ என்ன செய்தாலும் யாரும் உன்னை ஒன்றும் கேட்க மாட்டார்கள். கேட்கக்கூடாது என்று உத்திரவு போட்டிருக்கிறோம். தவிர, உனக்கு சர்வ சக்தியும், சர்வக்ஞானமும் சர்வ பராக்கிரமும் கொடுத்திருக்கிறோம். நீ கிழித்த கோட்டை ஒருவரும் தாண்ட மாட்டார்கள்.   உனக்கு 100 ஆண்டுகள் டைம் கொடுத்திருக்கிறோம். அதற்குள் நீ எப்படியாவது தேவலோகத்தை சுறுசுறுப்பாக்கிவிடவேண்டும்.

நான் - அப்படியே செய்கிறேன். எனக்குத் துணையாக பூலோகத்திலிருந்து இரண்டு பேர் வேண்டுமே?

முமூ - எத்தனை பேரை வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். சீக்கிரம் புறப்பட்டால் போதும்.

நான் உள்ளூர் பஞ்சாயத்து தலைவரையும் ரெவின்யூ இன்ஸ்பெக்டரையும் கூட்டிக்கொண்டு அவர்களுடன் புறப்பட்டேன்.

அவர்களுடைய புஷ்பக விமானத்தில் ஏறிச்சென்றோம். அந்த புஷ்பக விமானம் அரதப் பழசு. லொடலொடவென்று சத்தம். உட்காருவதற்கு மரப் பெஞ்சுகள். ஏர் ஹோஸ்டஸ் ஒருவரும் இல்லை. சரி. நாம் பதவி ஏற்றதும் முதலில் நம்முடைய உபயோகத்திற்காக சவுதி மன்னர் டிசைன் செய்திருக்கும் விமானம் போல் ஒன்று வாங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எல்லோரும் தேவலோகம் போய்ச் சேர்ந்தோம்.  அங்கு இறங்கியதும்தான் கவனித்தேன். எங்களை வரவேற்க ஒரு ஈ, எறும்பு கூட விமான நிலையத்திற்கு வரவில்லை. மும்மூர்த்திகளிடம் என்ன, நம்மை வரவேற்க ஒருவரையும் காணவில்லையே என்றேன். அதற்கு விஷ்ணு, நாட்டின் நிலை எவ்வளவு சீர்கெட்டுக் கிடக்கிறது பார்த்தாயா, இதையெல்லாம் சீர்திருத்தத்தான் உன்னை வரவழைத்திருக்கிறோம் என்றார்.
ஒரே வருடத்தில் பாருங்கள். நான் என்னவெல்லாம் மாற்றிக்காட்டுகிறேன் என்று சொல்லிவிட்டு இந்திர சபைக்குச் சென்றோம். அங்கு இந்திரன் ரம்பை ஊர்வசியின் நாட்டியத்தைப் பார்த்துக் கொண்டு நாங்கள் வந்ததையே கவனிக்கவில்லை. பிரம்மா அவனருகில் சென்று அவனைத் தொட்டபிறகுதான் அவன் நாங்கள் வந்ததை அறிந்து எங்களை வரவேற்றான்.

நாட்டியம் பார்க்கத் தடை ஏற்பட்ட வருத்தம் அவன் முகத்தில் தெரிந்தது. மும்மூர்த்திகளும் அவனைப் பார்த்து இதோ இங்கு வந்திருக்கும் மானிடன்தான் இனிமேல் இந்த தேவலோகத்திற்கு அரசன். நீ இனி ஓய்வெடுத்துக்கொள்ளலாம் என்றார்கள். இந்திரனுக்குத் தூக்கி வாரிப்போட்டது.

அதெப்படி மூன்று மாத நோட்டீஸ் கொடுக்காமல் என் பதவியைப் பறிக்கலாம் என்றான். மும்மூர்த்திகள் அதற்குப் பதிலாக உனக்கு மூன்று மாத சம்பளம் இதோ, வாங்கிக்கொண்டு உடனடியாக இடத்தைக் காலி செய் என்றார்கள். அவன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. நான் தேவர்களைச் சேர்த்துக்கொண்டு ஸ்ட்ரைக் செய்வேன் என்றான். மும்மூர்த்திகளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

என்னைப் பார்த்தார்கள். அவர்கள் எனக்கு சர்வ சுதந்திரமும் சர்வ வல்லமையும் கொடுத்திருந்த படியால், நான் அவர்களைப் பார்த்து நீங்கள் கவலைப்படவேண்டாம், இனிமேல் நான் கவனித்துக் கொள்கிறேன், நீங்கள் உங்கள் ஊர்களுக்குப் போகலாம் என்று சொல்லி அவர்களை வழியனுப்பினேன்.


தொடரும்...

திங்கள், 25 பிப்ரவரி, 2013

கும்ப மேளாவும் உயிரிழப்பும்


மனித நேயம் என்று ஒன்று இருக்கிறது என்று எங்கேயோ படித்த ஞாபகம். அதன் விஸ்வரூப அரங்கேற்றம் அலகாபாத் ரயில் நிலையத்தில் சமீபத்தில் அரங்கேறியது.

இந்திய மக்களின் (இல்லை, மாக்களின்) தேசீய கலாசாரம் என்னவென்றால் கூட்டம் கூடுவது. அரசியல் கூட்டமானாலும் சரி, ஆன்மீகக் கூட்டமானாலும் சரி, லட்சக்கணக்கில் கூடுவது . கூட்டம் கூட்டுபவர்களுக்கு கூட்டத்திற்கு ஆட்களைச் சேர்த்துவதுதான் முக்கிய நோக்கமே தவிர, இத்தை பேர் கூடிகிறார்களே, அவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்வோமென்ற சாதாரண பொதுப் புத்தி கூடக் கிடையாது.

விபத்துகள் நடந்து உயிர்ச்சேதம் ஆன பின்பு ஒருவருக்கொருவர் பழி சுமத்துவார்களே தவிர முன்னேற்பாடுகளை ஒருவரும் செய்ய மாட்டார்கள். கும்பமேளா சமயத்தில் லட்சக்கணக்கானவர்கள் ரயில்வே ஸ்டேஷனை நாடுவார்கள் என்பது பாமரனுக்கு கூட விளங்கும். ரயில்வேயின் உயர் அதிகாரிகள் கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் இருந்து, நடப்பவைகளை கவனித்து முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும்.

இதைச் செய்யாமல் அசம்பாவிதம் நடந்த பிறகு நொண்டிச் சமாதானங்கள் சொல்வது நமது அரசு அதிகாரிகளின் வாடிக்கையாகப் போய்விட்டது.

மக்களுக்கும் சரி, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுமை என்ற குணங்கள் அடியோடு அற்றுப் போய்விட்டன. இது சமூகச் சீரழிவின் அடையாளம். இதை மாற்ற இறைவன்தான் நேரில் வரவேண்டும். அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால், தனக்குப் பதிலாக யமதர்மனை அனுப்புகிறான்.

வெள்ளி, 22 பிப்ரவரி, 2013

வெள்ளரிக்காய் , தக்காளி , சேலட் – எப்படி செய்வது? தெரியுமா?



நண்பர் முகமது அலி, முட்டைப் பொரியல் செய்வது பற்றிப் பதிவு போட்டிருந்தார். அவர் மட்டும்தான் சமையல் பதிவு போடுவதா? நாமும் ஏன் போடக்கூடாது என்று சிந்தித்ததின் விளைவுதான் இந்தப் பதிவு.

முதலில் சேலட் என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளுங்கள். இது ஒரு ஆங்கில நாட்டு பேஷன். நம் நாட்டில் சமையல் செய்ய சோம்பல்படும் இல்லத்தரசிகளுக்கான ஒரு வரப்பிரசாதமாய் இறக்குமதி செய்யப்பட்ட சமையல் முறை.

இதைச் சமையல் என்று சொல்வதே ஒரு “நகைமுரண்”. நகைமுரண் அப்படீன்னா என்னன்னு கேக்கறீங்களா? இதுவும் ஆங்கில நாட்டு இறக்குமதியே. அங்கே “comedy of error” என்று தீங்கு விளைவிக்காத, சிரிப்பு வரவழைக்கும் தவறுகளைக் குறிப்பிடுவார்கள். நமது அருமை தமிழ் ஆர்வலர்கள் இதைத் தமிழ்ப்படுத்தியது ஒரு நகைமுரண்.

சேலட் செய்வதற்கு சமையலறை வேண்டியதில்லை. ஒரு கத்தியும் ஒரு பேசினும் மட்டும் போதும். வெள்ளரிக்காய் சேலட் செய்யத்தேவையான பொருட்கள்.

  1.   வெள்ளரிக்காய்         – 2
  2.   ஆப்பிள் தக்காளி        - 4
  3.   பச்சை மிளகாய்         - 4
  4.   பெரிய வெங்காயம்     - 2
  5.   டேபிள் சால்ட்          - தேவையான அளவு
  6.   மிளகுத்தூள்            - தேவையான அளவு
  7.   ஆலிவ் ஆயில்          - ஒரு டேபிள்ஸ்பூன்

8. ரெடி மேட் பிளாஸ்திரிகள் - தேவையான நெம்பர்கள் (கையில் காயம் ஆகும்போது உபயோகிக்க)
   

செய்முறை:
1, 2, 3 ஐட்டங்களை தண்ணீரில் நன்றாகக் கழுவிக்கொள்ளுங்கள். இயற்கை ஆர்வலர்கள் இந்த ஸ்டெப்பை விட்டுவிடவும்.
பெரிய வெங்காயத்தை தோலுரிக்கவும். (தவறான பொருள் கொள்ளவேண்டாம்)

இந்த நான்கு ஐட்டங்களையும் பொடிப்பொடியாக நறுக்கி பேசினில் போடவும். தேவையான அளவு டேபிள் சால்ட்டையும் மிளகுத்தூளையும் சேர்த்து கலக்கவும். ஆலிவ் ஆயிலை மேலே ஊற்றிப் பரிமாறவும். உடனே சாப்பிடவேண்டும். இல்லாவிட்டால் நீர் கோர்த்து ருசி போய்விடும்.

இந்த ஆலிவ் ஆயிலை எதற்கு ஊற்றவேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் யூட்யூப்பில் எல்லா ரெசிபிக்களிலும் போட்டிருக்கிறார்கள். அதனால் நானும் போட்டேன். ஆலிவ் ஆயிலுக்கான வியாபார உத்தியாக இருக்கலாம். ஆலிவ் ஆயில் மிகவும் சலீசு. கிலோ ஆயிரம் ரூபாய் மட்டுமே.

இந்த சேலடை சாப்பிடுவதால் உண்டாகும் பயன்கள்.

1. நீண்ட ஆயுள்.
2.  பிரமசாரிகளுக்கு சீக்கிரம் கல்யாணம் நடக்கும்.
3.  கல்யாணமானவர்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்கும்.
4.  குழந்தைகள் பெற்றோர்கள் சொன்னபடி கேட்பார்கள்.
5.  மொத்தத்தில் நீங்கள் பூலோக சொர்க்கத்தில் வாழ்வீர்கள்.

செய்து சாப்பிட்டுப் பார்த்துவிட்டுப் பின்னூட்டத்தில் உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கவும்.

புதன், 20 பிப்ரவரி, 2013

கோடிகளில் புரள ஆசைப்படுங்கள்


இதற்குத் தேவை “மார்க்கெட்டிங்க்” அதாவது பேச்சுத்திறமை. உங்களுக்கு அது இருந்தால் போதும். உலகமே உங்கள் காலடியில் விழுந்து கிடக்கும். அது இல்லாவிடில் நல்ல மூளை வேண்டும். பேச்சுத்திறமையை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம்.

முதலில் ஒரு தொழில் திட்டம் தயாரிக்கவேண்டும். இதற்கு நல்ல கன்சல்டென்ட்ஸ் இருக்கிறார்கள். அவர்களிடம் உங்கள் ஐடியாவை ஒரு கோடு போட்டுக் காட்டினீர்களென்றால், அவர்கள் நல்ல பக்கா ரோடு போட்டு விடுவார்கள்.

அடுத்து ஆரம்ப மூலதனம். உலகமயமாக்கல் – இந்த தாரக மந்திரத்தை அறியாதவர்கள் இன்று யாரும் இந்தியாவில் இல்லை. இதனால் பட்டி தொட்டிகளில் இருப்பவர்களெல்லாம் இன்று கோடிகளில் புரள்கிறார்கள். நாமும் அப்படி புரளவேண்டாமா? மேலே படியுங்கள்.

உங்கள் திட்டத்தை நல்ல விளம்பரக் கம்பெனி மூலம் விளம்பரப் படுத்துங்கள். நீங்கள் அடையப்போகும் லாபத்தை மூலதனம் போடுபவர்களுக்கு பிரித்துக்கொடுப்பதாக சொல்லுங்கள். அவர்கள் போட்ட மூலதனம் ஒரு வருடத்தில் மூன்று பங்காக வளரும் என்று சொல்லுங்கள். உங்கள் கற்பனைக்கு வானமே எல்லை.

உங்கள் ஊரில் நல்ல லொகாலிடியில் ஒரு ஆபீஸ் திறந்து கொள்ளுங்கள். நல்ல பெர்சனாலிடி உள்ள நாலு இளம் பெண்களை ஆபீஸ் வேலைக்கு அமர்த்துங்கள். நீங்கள்தான் MD. உங்கள் ரூம் மிகவும் அட்டகாசமாக இருக்கவேண்டும். முதலில் சூடு பிடிக்க கொஞ்ச நாளாகும்.

நல்ல களப்பணியாளர்களாக பத்து பேரை வேலைக்கு அமர்த்துங்கள். அவர்கள் ஊர் ஊராகப்போய் உங்கள் கம்பெனியில் முதலீடு செய்து கோடீஸவரர் ஆனவர்களைப் பற்றி பிரசாரம் செய்யவேண்டும்.
நாளாக நாளாக உங்கள் கம்பெனிக்கு முதலீடு செய்ய ஆட்கள் வருவார்கள். அப்படி வருபவர்களில் ஊருக்கு ஒருவராகத் தேர்ந்தெடுத்து கோவா அல்லது அந்தமானுக்கு டூர் கூட்டிக்கொண்டு போங்கள். மற்றவர்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களுக்கு கூப்பிட்டு விருந்து வையுங்கள்.

அப்புறம் பாருங்கள். வரும் பணத்தை வாங்கி எண்ணக்கூட முடியாத அளவிற்குப் பணம் வரும். அப்போது ஒரு நல்ல ஆடிட்டரைப் பிடித்து அந்தப் பணத்தையெல்லாம் பினாமி பெயர்களில் முதலீடு செய்து விடுங்கள். அப்படியே ஒரு நல்ல வக்கீலையும் பிடித்து வைத்துக்கொள்ளுங்கள்.

இனிமேல் நீங்கள் செய்யவேண்டியதுதான் மிகவும் கடினமான வேலை. இப்படி பணம் கொட்டிக் கொண்டிருக்கும்போதே கம்பெனியை மூடிவிடவேண்டும். பணம் மரத்தில் காய்ப்பது போல் கொட்டிக்கொண்டிருக்கும்போது அதை வேண்டாம் என்று சொல்வது மெத்தக் கடினம். ஆனால் இங்கேதான் பலரும் தவறு செய்திருக்கிறார்கள்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. கம்பெனியை அப்படியே அம்போவென்று விட்டு விட்டு நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் தலைமறைவாகி விடவேண்டும். அவ்வளவுதான் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிட்டீர்கள். பிறகு என்ன, ராஜபோகம்தான்.

வாழ்த்துக்கள்.

திங்கள், 18 பிப்ரவரி, 2013

என்னைக் கொள்ளையடியுங்கள் - அழைப்பு விடுக்கும் ஜனங்கள்


என்னைக் கொள்ளையடியுங்கள் என்று சொன்னால் கொள்ளையடிப்பவனுக்கு கசக்குமா என்ன? இதை அன்றாடம் நம் சூப்பர் மார்க்கெட்டுகளும் பலசரக்குக் கடைக்காரர்களும் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு டிவிக்காரர்களும் கூட்டு சேர்ந்து கொள்ளையடிக்கிறார்கள்.

நமது அன்றாட உணவுப் பழக்கங்களில் நமக்கு வேண்டிய அனைத்துச் சத்துக்களும் கிடைக்கின்றன. மக்கள் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொண்டால் வீட்டில் யாருக்கும் எந்த சத்துக் குறைவும் வராது. ஆனாலும் இன்றைய தாய்மார்கள் தங்கள் மேலேயே நம்பிக்கை இல்லாமல் டிவி விளம்பரங்கள் மேல்தான் நம்பிக்கை வைக்கிறார்கள்.

அவர்களுக்கு வீட்டு வேலை முடிந்த பிறகு பொழுது போக்க டிவி யை விட்டால் வேறு வழியில்லை. டிவிக் காரனுக்கும் விளம்பரங்களில்தான் வருமானம். அதற்காகத்தான் சீரியல்கள். சீரியல் பார்க்கும் பெண்களைக் குறிவைத்தே அனைத்து விளம்பரங்களும் காட்டப் படுகின்றன. விளம்பரங்களில் சொல்லப்படும் அனைத்து தகவல்களையும் அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு செயல்படும் குடும்பத்தலைவிகள் அநேகம்.

உதாரணத்திற்கு குழந்தைகளுக்கான உணவு வகைகளில் "பெடியாஷ்யூர்" என்று ஒரு பொருள் விளம்பரப்படுத்தப்படுகிறது. குழந்தைகள் இந்த உணவைச் சாப்பிடாவிட்டால் அவர்கள் வளர மாட்டார்கள், அவர்களின் மூளை வளராது, வாழ்க்கையில் அவர்கள் தோற்று விடுவார்கள் என்றெல்லாம் விளம்பரத்தில் சொல்லுவார்கள். இதைக் கேட்கும் தாய்மார்கள், தங்கள் குழந்தை எல்லாவற்றிலும் முதலாவதாக வரவேண்டும், அதற்கு இதைக் கொடுத்தால்தான் நடக்கும் என்று நம்புகிறார்கள்.

இதன் விலை யானை விலை. ஆனாலும் அதை வாங்கிக் கொடுக்கிறார்கள். இத்தகைய உணவுகளைச் சாப்பிடும் குழந்தைகள் அனைத்தும் வெகு புஷ்டியாக, அதாவது அதிக குண்டாக வளர்கின்றன. இத்தகைய குழந்தைகளுக்கு "கிளாக்சோ பேபி" என்றே அந்தக் காலத்தில் பெயர். இந்த உணவுகளில் தேவைக்கு அதிகமான மாவுச்சத்துக்கள் இருப்பதே இந்தக் குழந்தைகள் கொழு கொழுவென்று ஆவதற்குக் காரணம்.

டிவியில் ஒரு விளம்பரத்தை பத்து செகன்ட் காட்டுவதற்கு என்ன கட்டணம் தெரியுமா? 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. அனைத்து மொழிகளிலும் அனைத்து முக்கிய சேனல்களிலும் தினம் பலமுறை இந்த விளம்பரங்கள் காட்டப்படுகின்றன. அப்படியானால் தினசரி என்ன செலவாகும், மாதத்திற்கு எவ்வளவு, வருடத்திற்கு எவ்வளவு என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நிறுவனமும் வருடத்திற்கு பல கோடி ரூபாய்கள் விளம்பரத்திற்காக செலவு செய்கிறார்கள்.

இதற்கு மேல் அந்தப் பொருளின் தயாரிப்புச் செலவு இருக்கிறது. அதை மார்க்கெட்டுக்கு அனுப்ப செலவு இருக்கிறது. இத்தனையையும் செய்த பிறகு அந்தக் கம்பெனிக்கு லாபமும் வரவேண்டும். அப்படியானால் உற்பத்தி செலவுக்கு மேல் எத்தனை அதிகம் விலை வைக்கவேண்டும்? யோசித்துப் பாருங்கள்.

என்னுடைய அனுமானம், இந்த மாதிரி பொருள்களில் விற்பனை விலையில் கால் பங்குதான் உற்பத்திச் செலவு இருக்கும் என்று நினைக்கிறேன். இப்படி கொள்ளையடிக்கும் பொருட்களை நாம் வாங்குகிறோம். இப்படிப்பட்ட உணவுகளை நாமே வீட்டில் தயாரித்துக் கொண்டால் ஆரோக்கியத்துடன் பணவிரயமும் தவிர்க்கப்படும்.

மக்களே, சிந்தியுங்கள்.