சனி, 13 நவம்பர், 2010

ஹரித்துவாரும் ரிஷிகேசமும்-பாகம் 1

முன் தொடர்ச்சி: மாலை ஐந்து மணி சுமாருக்கு ஹரித்துவார் வந்து சேர்ந்தோம். ஒரு லாட்ஜ் பிடித்து தங்கினோம்.”

இப்படி போன பதிவில் முடித்திருந்தேன். ஆனால் இதன் பின்னணியில் ஒரு இரண்டாயிரம் ரூபாயைப் பறிகொடுத்த சோகக்கதை ஒன்று இருக்கிறது.

கோவையிலிருந்து டில்லிவரையில் விமானப்பயணம். அங்கிருந்து ஹரித்துவார் வரை ரயில் பயணம். ஹரித்துவார் வந்து இறங்கியதும் நாங்கள் புக் செய்திருந்த டூரிஸ்ட் டாக்சிக்காரர் அன்றே கேதார்நாத்திற்கு புறப்படவேண்டுமென்று சொல்லியிருந்தார். ஆகவே காலைக்கடன்களை முடித்துவிட்டுப் புறப்படுவதற்காக, ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் இருக்கும் ஐயப்பன் கோவில் ரூமுக்குச் சென்று 2 மணி நேரத்துக்கு ரூம் எடுத்து குளித்து தயாரானோம். ஐயப்பன் கோவில் வாசலில் சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் ஒரு தள்ளுவண்டியில் இட்லிக்கடை நடத்துகிறார். அந்தக்கடையில் ஆளுக்கு நாலு இட்லி வாங்கி சாப்பிட்டோம். எங்கள் டாக்சிக்கு போன் செய்தோம். டாக்சி வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்போது ஒரு யோசனை தோன்றியது. கேதார்நாத், பத்ரிநாத் பார்த்துவிட்டு வந்ததும் ஹரித்துவாரில் 4 நாட்கள் தங்குவதாக புரோக்ராம். அதனால் ஒரு லாட்ஜில் ரூமுக்கு சொல்லிவிட்டுப்போனால் சௌகரியமாக இருக்குமே என்ற முன்னெச்செரிக்கை உணர்வு வந்தது. அதனால் பக்கத்தில் பார்ப்பதற்கு நன்றாக இருந்த ஒரு லாட்ஜில் நாங்கள் திரும்பி வரும் நாளைக்கு இரண்டு ரூம் வேண்டுமென்று பேசி இரண்டாயிரம் ரூபாய் அட்வான்ஸாகக் கொடுத்தோம். அப்புறம் டாக்சி வந்தது. அதில் ஏறி கேதார்நாத், பத்ரிநாத் போய் வந்ததை விரிவாகப் பார்த்தோம்.

திரும்பி வந்ததும் நேராக நாங்கள் ரிசர்வ் செய்திருந்த லாட்ஜுக்குப் போய் எங்களுக்குக் கொடுத்த ரூமில் தங்கினோம். அப்போது மாலை மணி நான்கு. ரூமுக்குள் போனதுமே ஒரு மாதிரியான வாடை எங்கள் மூக்கைத் தாக்கியது. படுக்கை, தலையணைகளை வெகு நாட்கள் வெயிலில் போடாமல் வைத்திருந்தால் வருமே அந்த வாடை. ஒருவரும் பெட்டிகளைத் திறக்கவில்லை. என்ன செய்வதென்று புரியாமல் ஒரு சில நிமிடங்கள் யோசித்தேன். பிறகு இந்த ரூம்களில் தங்கமுடியாது என்ற முடிவுக்கு வந்தேன். உடனே சம்பந்தியைக் கூட்டிக்கொண்டு மெயின் ரோடுக்குச் சென்று சர்வே செய்தேன். ஒரு லாட்ஜ் கொஞ்சம் நன்றாக இருந்தது. அங்கு சென்று விசாரித்ததில் ரூம்கள் இருக்கிறதென்று சொன்னார்கள். உடனே இரண்டு ரூம்கள் அட்வான்ஸ் கொடுத்து புக் செய்தோம்.


பழய லாட்ஜுக்கு வந்து விவரத்தை சொன்னவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். இப்போது பிரச்சினை என்னவென்றால் லாட்ஜுக்காரனிடம் என்ன சொல்லி வெளியேறுவது என்பதுதான். அரசுப்பணியில் இந்த மாதிரி சமயங்களில் எவ்வளவு பொய் சொல்லி சமாளித்திருக்கிறோம். அந்த அனுபவம் கை கொடுத்தது. அந்த லாட்ஜ் மேனேஜரிடம் போய்ஊரிலிருந்து அர்ஜன்டாக வரச்சொல்லி ஒரு போன் வந்தது. நாங்கள் உடனே போக வேண்டும். ஆகவே ரூமைக்காலி செய்கிறோம். எங்கள் அட்வான்ஸைத் திருப்பித்தர வேண்டாம்என்று சொன்னோம். அவனும் சந்தோஷப்பட்டு எங்களைப் பத்திரமாகப் போகச்சொல்லி விடை கொடுத்தான். அவனிடம் என்னுடைய வோட்டர் ஐ.டி. கார்டை அடையாளத்திற்காக கொடுத்து வைத்திருந்தேன். அதைத் திரும்ப வாங்கிக் கொண்டு இரண்டு ஆட்டோ பிடித்து புது லாட்ஜுக்கு வந்து சேர்ந்தோம். ரூமைப்பார்த்தவுடன் பெண்களுக்கெல்லாம் மகிழ்ச்சி. பணம் போனால் போகிறது, நாம் சௌகரியமாக இருப்பதுதான் முக்கியம் என்று எல்லோரும் ஏக மனதாகச் சொல்லி விட்டார்கள். இப்படியாக இரண்டாயிரம் ரூபாயை காந்தி கணக்கில் எழுதினோம்.

அடுத்ததாக சாப்பாட்டுப் பிரச்சினையை எப்படித் தீர்க்கலாம் என்று யோசித்து எனக்குத் தெரிந்த ஐயப்பன் கோவில் வட்டாரத்தில் ஒரு வட்டம் அடித்தோம். நம்ம இட்லிக்கடை முருகேசன் ஒரு ஹோட்டலை சிபாரிசு செய்தார். அன்று இரவு அங்கு சாப்பிட்டோம். திருப்திப்படவில்லை. அடுத்த நாளும் சர்வே செய்து ஒரு ஹோட்டலைக் கண்டுபிடித்தோம். ஓரளவு பரவாயில்லை. சம்பந்திகள் சாப்பிட்டுவிட்டு நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டார்கள். அப்பாடா என்று பெருமூச்சு விட்டேன். அந்த ஹோட்டலின் படத்தைப் பார்க்கவும்.



தொடரும்….

18 கருத்துகள்:

  1. நம்மாளுங்க எங்கே போனாலும் இந்த வாய் சுவையை நம்மால் அடக்க முடியவில்லை பார்த்தீங்களா?

    அப்பா போயிட்டு வந்தவுடன் எங்களிடம் சொன்னதே அவர் கண்டுபிடித்த ஹோட்டல் வகைகளைத்தான்.

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு. ஹோட்டல் புக் பண்ணும் முன் அறைகளை பார்க்கவேண்டும்

    பதிலளிநீக்கு
  3. பயண அனுபவங்கள் பிரமாதமாக உள்ளது. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. ஹோட்டலில் ரூம் எடுப்பதற்கு முன்பு ரூமை ஒரு தடவை போய் பார்க்க வேண்டும் போலிருக்கு.. உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் பயணக் கட்டுரை பயனுள்ளதாக இருக்கிறது. தொடருங்கள்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல பகிர்வு. வட இந்திய உணவெனில் பிரச்சனை இல்லை. நம் ஊர் சாப்பாடு வேண்டுமெனில் சிறிது கஷ்டம் தான், அங்கே அது கிடைத்தாலும், பெரும்பாலும் அதை சமைப்பவர்கள் இந்த ஊர்காரர் அல்லது நேபாளி. அதனால் நம் ஊர் சுவை வருவதில்லை. பகிர்வுக்கு நன்றி அய்யா.

    பதிலளிநீக்கு
  7. ஜோதிஜி said...

    //நம்மாளுங்க எங்கே போனாலும் இந்த வாய் சுவையை நம்மால் அடக்க முடியவில்லை பார்த்தீங்களா?
    அப்பா போயிட்டு வந்தவுடன் எங்களிடம் சொன்னதே அவர் கண்டுபிடித்த ஹோட்டல் வகைகளைத்தான்//

    இது ஒரு பெரிய,தவிர்க்க முடியாத வேதனைதான். நான் தனியாகப் போகும்போது எந்த உணவு கிடைத்தாலும் சரி என்று சமாளித்துக் கொள்வேன். டூர் அதிகம் போகாதவர்களுக்கு உணவு ஒரு பிரச்சினை ஆகி விடுகிறது.

    பதிலளிநீக்கு
  8. LK said...

    //நல்ல பகிர்வு. ஹோட்டல் புக் பண்ணும் முன் அறைகளை பார்க்கவேண்டும்//

    கவனமாகப் பார்க்கவேண்டும். நான் இந்த விவரங்களை எழுதினதின் காரணமே, படிப்பவர்களுக்கு ஒரு ஜாக்கிரதை உணர்வு வரவேண்டும் என்பதற்காகத்தான்.

    பதிலளிநீக்கு
  9. Blogger கோவை2தில்லி said...

    //பயண அனுபவங்கள் பிரமாதமாக உள்ளது. அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.//

    நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  10. இராகவன் நைஜிரியா said...

    //ஹோட்டலில் ரூம் எடுப்பதற்கு முன்பு ரூமை ஒரு தடவை போய் பார்க்க வேண்டும் போலிருக்கு.. உங்கள் அனுபவம் எங்களுக்கு பாடம்//

    தரமான, ஸ்டார் ஹோட்டல்களில் அவ்வளவு பிரச்சினை இருக்காது. சாதாரண ஹோட்டல்களில் பல இடங்களில் பல பிரச்சினைகள் வருகின்றன. எல்லோரும் அதிக செலவு செய்ய முடியாதல்லவா?

    பதிலளிநீக்கு
  11. வெங்கட் நாகராஜ், சில நாட்கள் வெளியூருக்குப் போய் வந்தால் தமிழன் அதிகம் விரும்பவது ரசம் சாதம்தான். அதுதான் ஒழுங்காக எங்கும் கிடைக்காதது.

    பதிலளிநீக்கு
  12. நாகராஜசோழன் MA said...

    //உங்கள் பயணக் கட்டுரை பயனுள்ளதாக இருக்கிறது. தொடருங்கள்//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி, நாகராஜசோழன் அவர்களே.

    பதிலளிநீக்கு
  13. இப்படி சில அனுபங்கள்தான் நல்ல படிப்பினையை தரும்....ம்..அப்புறம்..

    பதிலளிநீக்கு
  14. இரண்டாயிரம் ரூபாய் போனது சோக பிண்ணனியெல்லாம் இல்லை. இதெல்லாம் சுற்றுலாவில் சகஜம்தானே..

    உணவு சமாசரமும் தேவைதான். பல்ருக்கும் உணவு சரியாக கிடைக்கவில்லை எனில் சுற்றுலாவில் மனம் செல்லாது:))

    பதிலளிநீக்கு
  15. ஊரில் இல்லை. விட்டுப்போன பதிவுகளையெல்லாம் மொத்தமாகப் படிச்சேன்.

    சாப்பாடு எனக்கு பிரச்சனை இல்லை. கொஞ்சம் ஒரு சின்னக் கிண்ணம் வெறும் சாதம் கிடைச்சால் போதும். குழம்பெல்லாம் வேணாம்.

    ஆனால் தங்கும் அறை மட்டும் சுத்தமா இருக்கணும். அதனால் வலையில் பார்த்தே அறை பதிவு செஞ்சுக்கறோம். அங்கே போனபிறகு அறையை நேரில் பார்த்துட்டுத்தான் ரெஜிஸ்தரில் கையெழுத்தே போடணும்.

    பதிலளிநீக்கு
  16. துளசி கோபால் said...
    //ஊரில் இல்லை. விட்டுப்போன பதிவுகளையெல்லாம் மொத்தமாகப் படிச்சேன்.//

    வாங்க, துளசி கோபால் அவர்களே. வருகைக்கும் பதிவுகளைப் படித்ததிற்கும் நன்றி.

    உங்கள் வெளியூர் அனுபவங்கள் பதிவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  17. நல்ல பகிர்வு.
    சுற்றுலாவின் போது ரூம் எடுப்பது இது ரொம்ப முக்கியம்தான்.

    எனது கணவர் முதலில் பார்த்துவிட்டுத்தான் எடுத்துக்கொள்வார் அதனால் நானும் பிள்ளைகளும் தப்பிப்போம் :)

    பதிலளிநீக்கு
  18. //அங்கே போனபிறகு அறையை நேரில் பார்த்துட்டுத்தான் ரெஜிஸ்தரில் கையெழுத்தே போடணும்//

    இதையேதான் நாங்களும் பின்பற்றுகிறோம், அதுமட்டுமல்ல ஜன்னல்களைத்திறந்து சுற்றுவட்டாரத்தையும் கவனிப்பதுண்டு.வேண்டாத காட்சிகள், சத்தங்கள், வாசனைகள் இதெல்லாம்கூட தவிர்க்கலாம் பாருங்க.. என்னதான் ஏசி ரூம்ன்னாலும்,.. ரூமுக்குள்ளயே இருக்கமுடியாதே,. எப்பவாவது பால்கனிக்கு வரவேண்டியிருக்குமில்லியா.

    அடிக்கடி சுற்றுலா போய் பழகிட்டா, சாப்பாடு ஒரு பெரிய பிரச்சினையா தெரியாது..

    பதிலளிநீக்கு