ஹரித்துவாரில் கங்கையில் குளிப்பது என்பது ஒரு தனி அனுபவம். உண்மையில் நாம் குளிப்பது கங்கை கால்வாயில்தான். இருந்தாலும் இது காசியில் கங்கா ஸ்நானம் செயவதைவிட உற்சாகமாக இருக்கும். காசியில் கங்கை ஓடுவதே தெரியாது. சமவெளியாதலால் நதியின் வேகம் மிகவும் குறைந்து நதி ஓடுவதே தெரியாமல் இருக்கும். ஆனால் ஹரித்துவார் இமய மலையின் அடித்துவாரம். இமயமலையின் ஆழமான சரிவுகளில் ஓடிவரும் கங்கை இன்னும் சாந்தமடையாத நிலை. சற்று கவனக்குறைவாக கங்கையில் இறங்கினால் தன் உற்பத்தி ஸ்தானத்துக்கே, அதாவது மகேஸ்வரனின் ஜடாமுடிக்கே, அழைத்துச் சென்றுவிடுவாள். அவ்வளவு வேகம்.
அந்த வேகத்தை பல தடுப்பணைகள் முலமாகக் கட்டுப்படுத்தி கால்வாய்கள் மூலமாக கங்கையை ஹரி-கி-பியாரிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த கால்வாய் நெடுகிலும் குளிப்பவர்களின் சௌகரியத்திற்காக படித்துறை கட்டி, இரும்பு குழாய்களை நட்டு அவைகளை இணைத்து கெட்டியாக இரும்புச்சங்கிலி போட்டிருக்கிறார்கள். குளிப்பவர்கள் இந்த இரும்பு சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டு குளிப்பது பாதுகாப்பாக இருக்கும். இந்த சங்கிலிகள் இன்னொரு விதத்திலும் பாதுகாப்பானது. கங்கைக் கால்வாயின் நீர் ஏறக்குறைய ஐஸ் கட்டியை உருக வைத்தது போல இருக்கும். முதல் தடவை இங்கு குளிப்பவர்களின் உடல் குளிர் ஜுரம் வந்தவர்கள் உடம்பு போல நடுங்கும். அப்போது இந்த இரும்பு சங்கிலிகள்தான் ஆதரவாக இருக்கும்.
ஆனால் இந்த ஊர் வாண்டுப் பையன்கள் எந்த வித பயமும் இல்லாமல் கால்வாயின் குறுக்கே கட்டியிருக்கும் பாலத்திலிருந்து கால்வாய்த்தண்ணீரில் குதித்து விளையாடுகிறார்கள். அதில் ஒரு சில வாண்டுகள் அந்த மாதிரி குதித்துக்காட்டுவதற்காக யாத்திரீகர்களிடம் பணம் கேட்பதுவும் உண்டு. ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு முறை ஜம்ப் செய்து காண்பிப்பார்கள். அவர்களுக்கு பழக்கமானதால் குளிர் அவர்களுக்கு உறைப்பதில்லை.
காலையில் நேரத்தோடு வெறும் வயிற்றில் குளிப்பது நல்லது. தண்ணீரில் ஒரு முறை முங்கி எழுந்துவிட்டால் அப்புறம் குளிர் போய்விடும். தண்ணீரை விட்டு வெளியில் வரவே மனது வராது. அழுக்குத்துணிகளைத் துவைத்து பக்கத்திலுள்ள செடிகளின் மேல் காயப்போட்டுவிட்டு குளித்துவிட்டு வந்தால் துணிகள் காய்ந்து இருக்கும். அவைகளைப் போட்டுக்கொண்டு, கங்கா மாதா கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு ரூமுக்கு வந்தோம். முருகேசன் கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டோம்.
பிறகு ஹரித்துவாரில் அடுத்து மிகப்பிரபலமான “மன்ஸா தேவி” கோவிலைப் பார்க்கலாம் என்று புறப்பட்டோம். இந்தக்கோவில் ஒரு சிறிய மலைக்குன்றின் மேல் இருக்கிறது. கோவிலுக்குப் போவதற்கு நல்ல பாதை போட்டிருக்கிறார்கள். கூடவே கேபிள் கார் சேவையும் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் டூரிஸ்ட்கள் ஆனதால் நேரத்தை மிச்சப்படுத்த கேபிள் காரையே பயன்படுத்துகிறார்கள். நாங்கள் ஹோட்டலிலிருந்து ஆட்டோ ரிக்சா மூலம் கோவில் அடிவாரத்தை அடைந்தோம். கேபிள் காருக்கு போகவர டிக்கெட் வாங்கி கேபிள் காருக்காக கொஞ்சம் நேரம் காத்திருந்தோம். பிறகு கேபிள் காரில் ஏறி மேலே கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.
நான் பலமுறை இந்தக் கோவிலுக்குப் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறை போகும்போதும் கோயிலில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த அம்மனின் பெயர் “மன்ஸா தேவி”. இந்த அம்மனை மனதில் என்ன நினைத்து வேண்டிக்கொண்டாலும் அது கண்டிப்பாக நிறைவேறும் என்று பெயர் பெற்றது. அம்மனின் குங்குமப் பிரசாதம் கோவில் முழுவதும் பரவிக்கிடக்கிறது. உங்கள் ஆடை எங்கு உரசினாலும் குங்குமம் ஒட்டிக் கொண்டு விடும். நான் எந்தக் கோவிலுக்குப் போனாலும் எதையும் குறிப்பிட்டு வேண்டிக்கொள்வது இல்லை. எனக்கு என்ன வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும். எனக்கு என்ன பிராரப்தமோ அது எனக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். அதனால் கோவிலுக்குப் போனால் ஒரு நமஸ்காரம் போட்டுவிட்டு வந்துவிடுவேன். இங்கும் அதே மாதிரி செய்தேன். கொஞ்ச நேரம் அங்கு உட்கார்ந்துவிட்டு கீழே வந்தோம்.
ரூமுக்குப் போவதற்கு ஆட்டோக்காரன் வரும்போது கொடுத்ததைவிட இரண்டு மடங்கு வாடகை கேட்டான். வேறு வழியில்லாததால் அவன் கேட்ட வாடகையைக் கொடுத்து ரூமுக்கு வந்து சேர்ந்தோம். சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்தோம்.
தொடரும்….
ஐயா இந்தப்புகைப்படம் ஹரித்துவார் தானா? கூட்டமே இல்லாமல் பார்ப்பதற்கு இனிமையாய்...
பதிலளிநீக்குபோய்விட்டு வந்து எவ்வளவு மாசம் ஆகிற்று..
பதிலளிநீக்குசீக்கிரம் சுடசுட எழுதிவிட்டு, சிங்கை
வாருங்கள் அய்யா...
கலாநேசன் said...
பதிலளிநீக்கு//ஐயா இந்தப்புகைப்படம் ஹரித்துவார் தானா? கூட்டமே இல்லாமல் பார்ப்பதற்கு இனிமையாய்...//
சந்தேகம் வேண்டாம். ஹரித்துவாரில் ஸ்நான படித்துறைகள் காலை நேரத்தில் இப்படித்தான் இருக்கின்றன.
பட்டாபட்டி.. said...
பதிலளிநீக்கு//போய்விட்டு வந்து எவ்வளவு மாசம் ஆகிற்று..
சீக்கிரம் சுடசுட எழுதிவிட்டு, சிங்கை
வாருங்கள் அய்யா...//
அன்புக்கு நன்றி.
சிங்கை வருவதற்கு முயலுகிறேன்.
நாங்கள் சென்று வந்த நினைவுகளைப்
பதிலளிநீக்குபுதுப்பித்துக்கொள்ளும் வகையில் பழைய போட்டோக்களைப் பார்த்து மகிழ ஒரு சந்தர்ப்பமாக இருக்கிறது.
நன்றி.
கங்கையில் குளிப்பது ஒரு பரவச அனுபவம். நான் ரிஷிகேஷிலும் ஹரித்வாரிலும் குளித்திருக்கிறேன். பல முறை ஹரித்வார் சென்று வேறு எங்கும் செல்லாமல் கங்கையிலே குளித்துவிட்டு வந்தும் இருக்கிறேன். :) நல்ல பகிர்வு.....
பதிலளிநீக்குஹரித்வார் போக வேண்டும் என்கிற ஆவலை தூண்டும் விதம்..இன்னும் கொஞ்சம் பாவம் செய்து விட்டுப் போகலாம் என்றிருக்கிறேன்...
பதிலளிநீக்கு”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...
பதிலளிநீக்கு//ஹரித்வார் போக வேண்டும் என்கிற ஆவலை தூண்டும் விதம்..இன்னும் கொஞ்சம் பாவம் செய்து விட்டுப் போகலாம் என்றிருக்கிறேன்..//
பாவம் செய்வது நாம் மண்டையைப் போட்ட பிறகுதான் நிற்கும். செயல்களில் இல்லாவிட்டாலும் கூட மனதளவில், பேச்சளவில் நாம் ஏதோ ஒரு விதத்தில் பாவம் செய்துகொண்டுதான் வாழ்கிறோம். முற்றும் துறக்க முடியவில்லையே?
எனக்கு என்ன வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும். எனக்கு என்ன பிராரப்தமோ அது எனக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். அதனால் கோவிலுக்குப் போனால் ஒரு நமஸ்காரம் போட்டுவிட்டு வந்துவிடுவேன். very good and fact also
பதிலளிநீக்குநீங்கள் செய்வது போல்தான் நானும் செய்கிறேன். இதுவரை எந்தக் கோவிலிலும் அது வேண்டும், இது வேண்டும் என்று கேட்டதில்லை. உங்கள் கருத்து என்னுடைய கருத்துடன் ஒத்துப் போவதால் உங்களுடைய கமென்ட்டை வரவேற்கிறேன்.
நீக்கு