செவ்வாய், 16 நவம்பர், 2010

ஹரித்துவாரும் ரிஷிகேசமும் - 2.

ஹரித்துவாரில் பார்க்கவேண்டிய இடங்களில் தலையானதுகங்கா ஆரத்தி”. பலரும் இதைப்பற்றி பதிவிட்டிருப்பார்கள் அல்லது யூட்யூப்பில் விடியோவாக தரவேற்றியிருப்பார்கள். இருந்தாலும் நானும் என் கடமையைச் செய்ய வேண்டுமல்லவா? அதற்காக என் பங்கை இங்கே அளிக்கிறேன்.

வட இந்தியாவில் கங்கை நதிக்கு மிகுந்த மதிப்பும், மரியாதையும், பக்தியும் உண்டு. கங்கை நதியை கடவுளாகவே அங்குள்ள மக்கள் வணங்குகிறார்கள். கங்கா மாதாவுக்கு ஜே! என்பது அங்கு அடிக்கடி கேட்கக்கூடிய கோஷம். காரணம் கங்கை நதிதான் அவர்களுக்கு உயிர் போன்றது. அந்த ஜீவநதிதான் கங்கை சமவெளியில் விவசாயத்திற்கு ஆணிவேர் போன்றது. எல்லா முக்கிய நகரங்களும் கங்கை அல்லது யமுனா நதிக்கரையில்தான் அமைந்துள்ளன. கங்கை அவர்களின் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது. ஆகவே அவர்கள் அந்நதியை பக்தியுடன் வழிபடுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

காசியிலும் ஹரித்துவாரிலும் அனுதினமும் மாலையில் கங்கைக்கு ஆரத்தி காட்டி வழிபடுகிறார்கள். இந்த வழிபாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான யாத்திரிகர்கள் கலந்து கொள்கிறார்கள். ஹரித்துவார் சென்றுவிட்டு கங்கா ஆரத்தி பார்க்காமல் வருபவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். இந்த ஆரத்தி மாலை சுமார் ஆறரை மணிக்கு ஆரம்பிக்கிறது. இந்த நேரம் சூரிய அஸ்தமன நேரத்தை ஒட்டி மாறும். ஆரத்தி ஆரம்பிப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே யாத்திரீகர்கள்ஹரி-கி-பியாரிஎன்னுமிடத்தில் கூட ஆரம்பித்து விடுகிறார்கள். உண்மையில் இந்த இடம் கங்கை நதிக்கரை அல்ல. கங்கையின் வேகத்தைக் கட்டுப்படுத்தி கால்வாயின் மூலம் கங்கை நீரை இங்கு கொண்டு வந்திருக்கிறார்கள். ரிஷிகேசத்தில்தான் உண்மையான கங்கைக்கரையில் ஆரத்தி நடைபெறுகிறது.

ஹரி-கி-பியாரியில் கங்கா மாதாவுக்காக ஒரு புராதன கோவில் இருக்கிறது. அதைச்சுற்றி பல கோவில்கள் இருக்கின்றன. கோவில் என்றால் உடனே மதுரைக் கோவிலைக் கற்பனை பண்ண வேண்டாம். சென்னையில் தெருவோரங்களில் இருக்கும் நடைபாதைக் கோவில்கள் சைஸில்தான் எல்லாக்கோவில்களும் இருக்கின்றன. அபரிமிதமான பக்தி மனதில் இருந்தால்தான் இந்தக்கோவில்களை ரசிக்க முடியும். இந்த கங்கா மாதா கோவில் பூஜாரி ஆரத்தி காட்ட ஆரம்பித்த பிறகுதான் மற்ற கோவில்களின் பூஜாரிகள் ஆரத்தி காட்டுகிறார்கள்.

மாலை ஐந்து மணியிலிருந்தே பக்தர்கள் ஹரி-கி-பியாரியில் கூட ஆரம்பித்து விடுகிறார்கள். கூட்டம் ஓரளவிற்கு சேரும்போது, கூட்டத்தை ஒழுங்கு படுத்த சில தொண்டர்கள் வருகிறார்கள். அவர்கள் ஏதோவொரு சேவா-ஸ்தாபனத்தைச் சேர்ந்தவர்கள். கூட்டத்தை ஒழுங்கு படுத்திக்கொண்டு இருக்கும்போதே, அவர்கள் செய்யும் பொதுத் தொண்டுகளுக்காக நன்கொடையும் வசூலிக்கிறார்கள். நன்கொடை கட்டாயமல்ல. ஆனாலும் நிறையப் பேர்கள் நன்கொடை கொடுக்கிறார்கள். மைக்கிலும் இந்த சேவா ஸ்தாபனத்தைப்பற்றி அறிவிப்பு செய்கிறார்கள். ஆரத்தி நேரம் நெருங்க நெருங்க கூட்டம் நிறையவே சேர்ந்து விடுகிறது. எங்கு பார்த்தாலும் மனித தலைகள்தான் தெரிகின்றன. உட்கார இடம் கிடைக்காதவர்கள் ஆங்காங்கே நின்றுகொண்டும் இருக்கிறார்கள்.

ஆரத்தி நேரம் வந்தவுடன் மைக்கில் ஆரத்தி பாட்டு போடப்படுகிறது. எல்லோரும் பேச்சை நிறுத்திவிட்டு கோவில்களையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எல்லாக்கோவில்களின் முன்பும் ஆரத்தி விளக்குகள் திரி போட்டு எண்ணை விட்டு தயாராக வைக்கப்பட்டு இருக்கின்றன. ஆரத்தி நேரம் வந்தவுடன் கங்கா மாதா கோவிலில் அம்மனுக்கு வழிபாடு செய்கிறார்கள். அந்த மணி ஓசை கேட்டவுடன் அனைத்து கோவில் பூஜாரிகளும் தயாராக நின்று கொள்கிறார்கள். தலைமைப்பூஜாரி அம்மன் பூஜையை முடித்துவிட்டு வெளியில் வந்து நிற்கிறார். அவருடைய ஆரத்தி விளக்கை (பல அடுக்குகள் கொண்டது) அசிஸ்டன்ட் பூஜாரி ஏற்றி அவரிடம் கொடுக்கிறார். எல்லோரும் பலமாககங்கா மாதா கி ஜேஎன்று கோஷமிடுகிறார்கள். தலைமைப்பூஜாரி அந்த விளக்கை வாங்கிக்கொண்டு கங்கைக்கு ஆரத்தி காட்ட ஆரம்பிக்கிறார். உடனே மற்ற கோவில் பூஜாரிகளும் அவரவர்கள் விளக்குகளைப் பற்ற வைத்து ஆரத்தி காட்டுகிறார்கள். சுமார் இருபத்தியைந்து பூஜாரிகள் ஆரத்தி காட்டுகிறார்கள். எல்லோரும் ஆரத்தி காட்டும்போது அது ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. மக்கள் கோஷம் விண்ணைப் பிளக்கிறது.

இந்த பூஜாரிகள் ஆரத்தி காட்ட ஆரம்பித்தவுடன், மக்கள் தாங்கள் கொண்டு வந்திருக்கும் ஒரு இலையால் ஆன பூக்கூடையில் உள்ள விளக்கைப் பொருத்தி, கங்கை நதியில் பக்தியுடன் விடுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் இவ்வாறு விடும் விளக்குகளினால் கங்கை ஆறே விளக்கு மயமாக காட்சி தருகிறது. ஒரு பக்கம் பூஜாரிகள் காட்டும் ஆரத்தி விளக்குகள்! இன்னொரு பக்கம் மக்கள் விடும் விளக்குக்கூடைகள்! பார்க்க மிகவும் பரவசமாக இருக்கிறது. மக்களின் பக்திப்பெருக்கு நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

பூஜாரிகள் காட்டும் ஆரத்தி விளக்குகள் பல அடுக்குகள் கொண்டவை. கனமும் பல கிலோக்கள் இருக்கும். அந்த கனம் மிகுந்த விளக்குகளை அநாயாசமாகப் பிடித்துக்கொண்டு அவர்கள் ஆரத்தி காட்டும் நேர்த்தியை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அதுவும் ஏறத்தாழ பத்து நிமிடங்களுக்கு ஆரத்தி காட்டுகிறார்கள். இது உண்மையிலேயே ஒரு சாதனைதான். இவ்வாறு ஆரத்தி காட்டி முடிந்ததும் பூஜாரிகள் கோவிலுக்குள் போய்விடுகிறார்கள். மக்கள் கூட்டம் கலைய ஆரம்பிக்கிறது.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் கலைய ஆரம்பித்தால் எப்படிப்பட்ட களேபரம் இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனாலும் எந்த அசம்பாவிதமும் நடப்பதில்லை. நல்ல இருட்டு வந்து விடுவதால் குழுவாகச் செல்பவர்கள் சிறிது நேரம் பொறுத்திருந்து வழிதெரிந்தவர்களின் பின்னாலேயே போவது நல்லது. புது ஊரில் வழி தவறிவிட்டால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவேண்டும்.திரும்பும்போது மனது பக்தி பரவசத்தினால் நிறைந்து இருந்தது. இந்துக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கங்கா ஆரத்தியைக் காணவேண்டும்.

தொடரும்

11 கருத்துகள்:

 1. உங்க பதிவே நேரில் பார்த்ததை போல இருக்குதுங்க..நன்றிங்க

  பதிலளிநீக்கு
 2. கங்கா ஆரத்தி பற்றி விரிவான பதிவு - நன்றாக இருந்தது. அந்த ஆரத்தியின் அழகு பார்க்க பரவசமூட்டும். நல்ல பகிர்வு.

  பதிலளிநீக்கு
 3. அப்படியே பூஜையை கண்முன்னே கொண்டுவந்து விட்டீர்கள். உங்கள் பயணக் கட்டுரையைத் தொடருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. //இந்துக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கங்கா ஆரத்தியைக் காணவேண்டும்//

  அருமையாக சொன்னீர்கள் அய்யா,
  ”இருந்தாலும் நானும் என் கடமையைச் செய்ய வேண்டுமல்லவா?”

  தெளிவாகவும் பதிவு செய்துள்ளீர்கள்

  அப்படியே பூஜையைப் பார்த்தது போன்ற ஒரு உணர்வு

  தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

  நன்றி
  நட்புடன்
  மாணவன்

  பதிலளிநீக்கு
 5. படங்களைப் பார்த்ததும் என்னென்னமோ ஞாபகம் வந்திடுச்சுங்க! நானும் போகணும்;

  (ஹரித்வாருலே தான் ஸ்ரேயா பொறந்தாங்க! :-))

  பதிலளிநீக்கு
 6. சேட்டைக்காரன் said...
  //படங்களைப் பார்த்ததும் என்னென்னமோ ஞாபகம் வந்திடுச்சுங்க! நானும் போகணும்;
  ஹரித்வாருலே தான் ஸ்ரேயா பொறந்தாங்க! :-))//

  என்னங்க, சேட்டைக்காரன், போறதுக்கு முன்னாடியே சொல்லீருக்கப்படாதா? அந்தப் புண்ணிய ஸதலத்தையும் பார்த்திருப்பேனில்ல?

  பதிலளிநீக்கு
 7. இந்துக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கங்கா ஆரத்தியைக் காணவேண்டும்.

  எனக்க வாய்ப்பு கிடைக்கிறதோ
  இல்லலையோ
  தங்களின் விரிவான் பதிவு

  என்னை கங்கை கரைக்கே கொண்டு சென்று விட்டது.

  அந்த ஆரத்தியின் அழகை நானே ரசித்தத போன்ற உள்ளது.

  உண்மையில் நான் எனது வாழ்நாளில் செல்ல வாய்ப்பு கிடைத்தால் அதை பார்க்கும் பொழுது தங்களின் பதிவு அன்று கண்டிப்பாக எனக்க நினைவுக்கு வரும்.

  எல்லாம் அவன் செயல்

  நன்றி

  வராகன்

  பதிலளிநீக்கு
 8. இந்துக்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது கங்கா ஆரத்தியைக் காணவேண்டும்//
  ... ஆஹா..கண்டுகொண்டேன் தங்கள் பதிவில் !


  அன்புடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 9. கங்கை ஆரத்தியும் படங்களும் மனத்திற்கு இதமாய் இருந்தன.

  பதிலளிநீக்கு
 10. நல்ல கட்டுரை அய்யா, நான் காசியில்தான் இந்த கங்கா ஆரத்தி நிகழ்வை பார்த்துள்ளளேன். நல்ல படங்களுடன் அழகான பதிவு. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு