செவ்வாய், 29 நவம்பர், 2011

இடைவேளை



பூஜை படம் போடலாம்னு கூகுளாண்டவரைக் கேட்டா இந்தப் படத்தைக் கொடுத்தாருங்க. சரி, பாட்டுக்குப் பொருத்தமா இருக்குதுன்னு போட்டுட்டனுங்க, வேற ஒண்ணுமில்லீங்க.

டிஸ்கி: டி.வி. சீரியல் பார்க்காதவர்கள் இந்த உலகில் இருக்கலாம். ஆனால் அவர்கள் மனித இனத்தை சேர்ந்தவர்கள் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தெரியும், டி.வி.சீரியலில் விளம்பரங்கள் தவிர்க்க முடியாதவை என்று. அது போல் இந்த பாடல்களை என் பதிவில் வரும் விளம்பரங்கள் என்று நினைத்துக்கொள்ளுங்கள். (கருத்து என்னவென்றால் இந்தப் பதிவைப் படித்தாலும் படிக்கலாம், விட்டாலும் விடலாம். ஆனாலும் விளம்பரங்கள் தேவையல்லவா?)

கையொன்று செய்ய விழியொன்று நாடக் கருத்தொன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாவொன்று பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச்செவியொன்று கேட்க விரும்பும் யான்
செய்கின்ற பூசையெவ்வாறு கொள்வாய் வினைதீர்த்தவனே.

பூசை செய்யும் மனிதன் மனமொன்றிப் பூசை செய்தால்தான் அது பலன் தரும். இவ்வாறு பூசை செய்பவர்கள் எத்துணை பேர் உள்ளார்கள்? 

ஞாயிறு, 27 நவம்பர், 2011

மனதுக்கு வயதாவதில்லை



உடலுக்குத்தான் வயதாகும், மனதுக்கு வயதில்லை. மனதை இளமையாக வைத்துக்கொண்டால் உடலும் இளமையாக இருக்கும்.

இந்த பொன்மொழிகளை நாம் எல்லோரும் கேட்டிருப்போம். அவை உண்மையென்று நம்பிக்கொண்டும் பலர் இருக்கக் கூடும். இந்த நம்பிக்கை ஓரளவுக்குத்தான் சரி. வாழ்க்கையில் சலிப்பும் சோர்வும் வந்து விடக்கூடாது என்பதற்காக சொல்லப்படும் வார்த்தைகள் இவை. இதைப் புரிந்து கொள்ளாமல் என் நண்பர் ஒருவர் (75 வயது) தன்னை 30 வயது இளைஞனாக நினைத்துக் கொண்டு 300 கி.மீ. தனியாக, காரில் தானே ஓட்டிக்கொண்டு சென்றார். அவருக்கு 15 வருடங்களுக்கு முன் பை-பாஸ் ஆபரேஷன் செய்திருக்கிறது.

அங்கு ஒரு கல்யாணத்திற்காகப் போனார். கல்யாணத்தன்று காலை 4 மணிக்கு மார்பு பகுதியில் கனமாக இருப்பதாக உணர்ந்தார். உடனே பக்கத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு சென்று டெஸ்ட் பண்ணினார். ரத்த அழுத்தம் மிகவும் அதிகமாக இருந்திருக்கிறது. உடனடி வைத்தியம் செய்ததில் ஓரளவு சரியாக ஆகிவிட்டது. அங்கு ஒரு டிரைவரைப் பிடித்து ஊருக்கு வந்து சேர்ந்தார். அன்று இரவே மறுபடியும் தொந்திரவு வந்து பக்கத்திலிருந்த ஒரு நண்பரின் உதவியுடன் ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்து கொண்டார்.

கடந்த மூன்று நாட்களாக நான் அவருடன் இருந்து கவனிக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எல்லாப் பரிசோதனைகளும் முடிந்தபிறகு டாக்டர்கள் சொன்னது என்னவென்றால், அவருக்கு வயதாகிவிட்டது, அதை மனதில் கொள்ளாமல் சிறு வயதுக்காரனைப் போல் அலைந்ததுதான் அவருடைய இப்போதைய தொந்திரவுகளுக்கு காரணம், இனி மேல் அவர் தன்னுடைய நடவடிக்கைகளை வயதுக்கு தகுந்த மாதிரி குறைத்துக்கொள்ள வேண்டும், இவ்வாறு சொல்லி விட்டார்கள்.

இந்த அனுபவத்தை ஏன் இங்கு பகிர்ந்து கொண்டேன் என்றால், வயதானவர்கள் தங்களை மனதிற்குள் இளைஞனாக நினைத்துக் கொள்ளலாம், ஆனால் தங்கள் நடவடிக்கைகளை வயதுக்கு ஏற்ற மாதிரி வைத்துக் கொண்டால் அவருக்கும் அவருடைய குடும்பத்திற்கும் நலமாக இருக்கும் என்பதற்காகத்தான்.

திங்கள், 21 நவம்பர், 2011

விலை உயர்வை சமாளிப்பது எப்படி?


பால் விலை, பஸ் கட்டணம், மின் கட்டண உயர்வு ஆகியவை உங்களைக் கவலைக்கு உள்ளாக்குகிறதா? கவலைப்படாதீர்கள். உங்கள் நலம் கருதி பல சிக்கன யோசனைகளை இங்கே கொடுக்கிறேன்.

நீங்கள் மாத சம்பளக்காரராக இருந்தால் ஏற்கெனவே ஒரு குடும்ப பட்ஜெட் வைத்திருப்பீர்கள். அதை தூசி தட்டி வெளியில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பட்ஜெட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் உங்கள் வரவின் பாதிக்குள்தான் செலவினங்களை கட்டுப் படுத்தி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மீதி இருக்கும் சேமிப்பில் ஒரு கால் பங்கு அவசர செலவுகளுக்குப் பயன்படும். மீதி இருக்கும் கால் பங்கு சேமிப்பாக வளரும்.

இப்படி போட்டிருக்கும் பட்ஜெட்டை இப்போது கடைப்பிடித்தீர்களானால் உங்களை இந்த விலைவாசி உயர்வு ஒன்றும் செய்துவிட முடியாது. எப்படி என்று பார்ப்போம்.

இப்போது பால் விலை அதிகமாகி இருக்கிறது. இதை அம்மா ஏன் செய்தார்கள் என்றால் மக்கள் நலம் கருதியே. பால் எதற்கு உபயோகப்படுத்துகிறோம்? காப்பி குடிக்க. காபியினால் உடலுக்கு எவ்வளவு தீங்கு ஏற்படுகிறது தெரியுமா? தமிழ் நாட்டில் ஹார்ட் அட்டேக்கில் இறப்பவர்களில் பாதிப்பேர் காப்பிக் குடியர்கள். அதனால்தான் அவர்களுக்கு ஹார்ட் அட்டேக் வந்தது. இந்த எச்சரிக்கையையும் மீறி காப்பி குடிக்கவேண்டுமென்றால் இதுவரை குடித்த அளவில் பாதி அளவே குடியுங்கள். பால், காபித்தூள், சர்க்கரை செலவு பாதியாகக் குறைந்துவிடும்.

அப்புறம் பால் தயிருக்காக உபயோகப்படுத்துகிறோம். தயிரில் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவும் ஹார்ட் அட்டேக் வருவதற்கு ஒரு காரணமாகும். ஆகவே தயிரை மோராக்கி உபயோகப்படுத்துங்கள். அதற்கு பாதி பால் இருந்தால் போதும். ஆகவே உங்கள் பால் தேவை பாதியாகக் குறைந்துவிட்டதல்லவா? இப்படி பால் விலை உயர்வை சமாளித்தாகி விட்டது.

அடுத்து பஸ் கட்டண உயர்வு. பஸ் செலவிற்கென உங்கள் பட்ஜெட்டில் ஒரு தொகை ஒதுக்கியிருப்பீர்கள் அல்லவா? அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். என்ன சங்கடம் என்றால் அந்தப் பணம் இப்போதுள்ள பஸ் கட்டணத்திற்கு போதாது. அதற்கு மூன்று உபாயங்கள் இருக்கின்றன.

1.   ஆபீசுக்கு போகும்போது பஸ்சில் போய்விட்டு, வரும்போது நடந்து வரலாம்.
2.   பாதி தூரம் மட்டும் பஸ்சில் போய்விட்டு மீதி தூரத்தை நடந்து கடக்கலாம்.
3.   ஒரு நாளைக்கு பஸ், மறுநாள் நடை என்று மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
நடைப் பயிற்சிக்காக தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.

அடுத்து மின் கட்டண உயர்வு. இது உங்களை அதிகமாகப் பாதிக்க வழியில்லை. ஏனென்றால் இனி வரும் காலங்களில் மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் ஆதலால் மினசார உபயோகம் தானாகவே கட்டுக்குள் வந்து விடும்.

ஆக மொத்தம் இந்த விலை உயர்வு மக்களின் நன்மைக்காக கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். மக்களின் பெரிய அறியாமை என்னவென்றால் தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை அறியாமலிருத்தலேயாகும். மக்கள் அனைவரும் இந்த அறியாமை இருளிலிருந்து வெளிவர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

டிஸ்கி: இந்தப் பதிவைப் படித்தபின் எனக்கு ஏதாவது செய்யவேண்டுமென்று யாராவது நினைத்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். ஆவன செய்து கொடுக்கப்படும்




சனி, 19 நவம்பர், 2011

தமிழ் வளர்ப்போம்


எரியெனக் கென்னும் புழுவோ வெனக்கென்னும் இந்த மண்ணும்
சரியெனக் கென்னும் பருந்தோ வெனக்கென்னுந் தான் புசிக்க
நரியெனக் கென்னும் புண்ணா யெனக்கென்னுமிந் நாறுடலைப்
பிரியமுடன் வளர்த்தேன் இதனாலென்ன பேறெனக்கே.

இது தமிழ் பாட்டு என்பதினால் பதவுரை, அரும்பதவுரை, பொழிப்புரை, கருத்துரை ஆகிய எதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன். அப்படி தேவைப்படுகிறவர்கள் உங்கள் வீட்டுக்கு அருகாமையிலுள்ள புளியமரத்திற்கு சென்று அதனடியில் மூன்று இரவுகள் தூங்கினால் எல்லா உரைகளும் உள்ளங்கை நெல்லியெனத் தெளிவாகும்..

வியாழன், 17 நவம்பர், 2011

அரசு அலுவலமும் தணிக்கைகளும்


அரசு அலுவலகங்களில் மாமூலாக ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை நடைபெறும். தணிக்கை அதிகாரிகள் வரும் தகவல் ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்து விடுவார்கள். அந்த தகவல் வந்த நாளிலிருந்து அந்த ஆபீஸ் அல்லோல கல்லோலப்படும். எல்லோரும் ஏதோ பெரிய கிரிமினல் அப்பீல் கேசில் தீர்ப்பை எதிர் பார்ப்பது போல் தணிக்கை அதிகாரிகள் வரும் நாளை ஒருவித படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
காரணம் என்னவென்றால் பெரும்பாலான அலுவலகங்களில் பெரிய ஆபீசருக்கும் மற்ற அலுவலர்களுக்கும் சரியானபடி அரசு சட்டதிட்டங்கள் தெரியாது. அதனால் தணிக்கை அதிகாரிகள் ஏதாவது விளக்கம் கேட்டால் முழிப்பார்கள். இதனால் தணிக்கை அதிகாரிகள் இவர்களை சீப்பாக நடத்துவார்கள். எப்படியென்றால் அவர்கள் அங்கு தங்கும் நாட்களில் அவர்களின் உணவுச் செலவுகளை அந்த ஆபீஸ்காரர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். அது தவிர எங்கள் துறையில் பண்ணையில் ஆராய்ச்சி செய்வதுதான் முக்கிய வேலை. அதற்காகத்தான் அந்த ஆபீஸ் இருக்கிறது.
தணிக்கை அதிகாரிகள் பொதுவாக ஆபீசிலேயே தங்கிக்கொள்வார்கள். அவர்களுக்கு குற்றேவல் செய்ய ஒரு ஆளைப் போடவேண்டும். அப்போது பண்ணையில் என்னென்ன விளைகிறது என்று நோட்டம் போட்டுக் கொள்வார்கள். பொதுவாக பண்ணைகளில் தென்னை மரங்கள் தவறாது இருக்கும். இவர்கள் ஊருக்குத் திரும்பும்போது பண்ணையின் சைஸைப்பொருத்து தேங்காய்களும் மற்றும் என்னென்ன இருக்கிறதோ அத்தனையையும் வாங்கிக்கொண்டு போவார்கள். இவையெல்லாம் எந்தக் கணக்கிலும் வராது.
நான் வேலையில் சேர்ந்தது ஒரு ஆபீசர், ஒரு அசிஸ்டன்ட் ரிசர்ச் ஆபீசர் (நான்), ஒரு கிளார்க் இப்படி மூவர் உள்ள ஆபீஸ். அந்த ஆபீசில் எந்த கிளார்க்கும் மூன்று மாதத்திற்கு மேல் இருந்ததில்லை. நான் மட்டும்தான் மூன்று வருடம் இருந்தேன். அதனால் புதிதாக வரும் கிளார்க்குக்கு நான்தான் வேலை செய்யக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதனால் ஆபீஸ் வேலைகள், சட்டதிட்டங்கள் எல்லாம் எனக்கு நன்றாக அத்துபடியாகி விட்டது.
இதனால் எனக்கு தணிக்கையைக் கண்டு பயமில்லாமல் போய்விட்டது. அது மட்டுமில்லாமல் இந்த தணிக்கையாளருக்கு விளையாட்டுக் காட்டுவது எனக்கு ஒரு பொழுது போக்காகிவிட்டது. ஒரு முறை நான் மண்வள ஆய்வுக்காக டூர் போகவேண்டி வந்தது. ஒரு ஊருக்கு பேருந்தில் சென்று விட்டு அங்கிருந்து ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு அந்தப் பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு திரும்பவும் சைக்கிளை கொண்டு வந்து கடையில் விட்டு விட்டு ஊர் திரும்புவேன்.
இந்த டூருக்கு பில் தயார் செய்து ஆபீஸ் அக்கவுன்ட் செக்ஷனுக்கு அனுப்பி பாஸ் செய்து பணம் வாங்க வேண்டும். அப்படி பணம் வாங்காவிட்டால் நான் டூர் போனது பொய் என்று ஆகிவிடும். இந்த டூரில் நான் பல ஊர்கள் வழியாக சென்றிருந்தேன். ஆனால் எந்த ஊரிலும் எனக்கு எந்த வேலையுமில்லை. இரண்டு ஊர்களுக்கு நடுவில் இருக்கும் திலங்களின் மண்தன்மையை ஆராய்ந்து குறிப்பு எட்ப்பதுதான் என் வேலை. ஆனால் டூர் பில்லில் டூர் போன தூரத்தைக் காட்டுவதற்காக ஊர்களின் பெயரையும் அங்கு சென்ற நேரத்தையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எந்த ஊரிலும் கொஞ்சநேரம் கூட இருந்ததாகக் காட்டவில்லை. உண்மையும் அதுதானே.
இந்த பில் ஆடிட்டரிடம் சென்றது. அவர் பில்லைப் பார்த்து இவர் பல ஊர்களுக்குப் போனதாக பில் போட்டிருக்கிறார். ஆனால் எந்த ஊரிலும் அவர் கொஞ்ச நேரம் கூட இருக்கவில்லை. ஆகவே அவர் இந்த டூரில் எந்த வேலையையும் செய்திருக்கமுடியாது. ஆகவே பில் பாஸ் செய்யமுடியாது என்று எழுதி பில்லை திருப்பி விட்டார்.
ஆஹா ஆடிட்டர் வசமாக நம்மிடம் மாட்டிக்கொண்டார் என்று ஆனந்தப்பட்டுக்கொண்டு கீழ்க்கண்டவாறு எழுதினேன்.
அன்புள்ள ஆடிட்டர் துரை அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ள டூர் பில், நான் மண் ஆய்வுக்கான டூர் சென்றதற்கான பில்லாகும். துரதிர்ஷ்டவசமாக மண் இருக்கும் நிலங்கள் எல்லாம் இரண்டு ஊர்களுக்கு மத்தியிலேயே இருக்கின்றன. நான் அப்படி நிலங்கள் இருக்கும் பகுதியில் அதிக நேரம் இருந்து மண்ணின் தன்மையை ஆராய்ந்து குறிப்புகள் எடுத்துள்ளேன். நான் வழியைக் காட்டுவதற்காகத்தான் அந்த ஊர்களின் பெயரைக் குறித்துள்ளேன். நான் பார்த்தவரையில் அந்த ஊர்களில் வீடுகள்தான் இருந்தன. இந்த பதில் உங்களுக்குத் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் பில்லை பாஸ் செய்யுங்கள். ஏதாவது ஆட்சேபணை இருந்தால் மேலதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களின் ஆலோசனையைக் கேட்கலாம்.
சத்தமில்லாமல் பில் பாஸாகி வந்துவிட்டது. அடுத்த முறை அந்த ஆடிட்டரைப் பார்க்கும்போது என்னங்க இப்படி எழுதி எங்களை முட்டாளாக்கி விட்டீர்களே, நேரில் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதுமே, இப்போது இந்த விஷயம் பகிரங்கமாகிவிட்டதே என்று அங்கலாய்த்தார். ஏன் நீங்கள் என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கப்படாதா? உங்கள் சங்கதி ரகசியமாக இருந்திருக்குமல்லவா? என்று பதில் சொல்லிவிட்டு வந்தேன்.

வியாழன், 10 நவம்பர், 2011

எதற்கெடுத்தாலும் புலம்பாதீர்கள்


சிலர் எதற்கெடுத்தாலும் புலம்பிக்கொண்டே இருப்பார்கள். “ நான் எந்தக் காரியத்தை ஆரம்பித்தாலும் அது தவறாகவே நடக்கிறது. எனக்கு ராசியில்லை”  என்பார்கள்.

சிலர், “அவனுக்கு அந்தக்காலத்தில் நான்தான் வேலை வாங்கிக்கொடுத்தேன். இப்போது பெரிய மேனேஜர் ஆயிட்டான். என்னைப் பார்ப்பதேயில்லை”, என்று புலம்புவார்கள்.

இந்தப் புலம்பல்கள் அவர்களின் மனோநிலையைக் காட்டுகிறது. மனதில் தெளிவும் உறுதியும் உள்ளவர்கள் இந்த மாதிரி புலம்பிக்கொண்டு இருக்க மாட்டார்கள். வாழ்க்கையின் நோக்கம் என்ன? நம்மால் என்ன சாதிக்க முடியும்? என்ற தெளிவுடன் அவர்கள் வாழ்க்கையில் முன்னே போய்க்கொண்டு இருப்பார்கள்.

இந்த உலகத்தில் பிறக்கும்போது எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரி குண அமைப்புடன்தான் பிறக்கின்றன. உடம்பு அமைப்பில் அந்தந்த தேசத்திற்கு உண்டான மாறுதல்கள் இருக்கும். அது தவிர எல்லோருடைய மூளையும் எந்த விதமான எண்ணங்களோ, குணங்களோ இல்லாமல்தான் இருக்கும்.

அவர்கள் வளர வளர அவர்களின் குணபேதங்கள் வெளியில் தெரிய வருகின்றன. இந்த குணபேதங்களுக்கு பல காரணிகள் இருக்கலாம். அவர்களின் மரபணுக்கள், வளர்ந்த, வளர்க்கப்பட்ட சூழ்நிலை ஆகியவை முக்கிய பங்கு ஆற்றுகின்றன. ஆனால் அவைகளின் மேல் அந்த மனிதனுக்கு ஒரு காலகட்டம் வரையில் எந்த கட்டுப்பாடும் இல்லை. அவன் சுயமாக சிந்திக்கத் தொடங்கும்போதுதான் அவனுக்கென்று ஒரு சுய சூழ்நிலை உருவாகிறது.

அதற்குப் பிறகு அவன் தன்னை ஆராய்ந்து, தான் சென்று கொண்டிருக்கும் பாதை சரிதானா என்று முடிவு செய்யவேண்டும். இந்தக் காலகட்டத்தில்தான் ஒருவனுடைய குணம் நிலைபெறுகிறது.  இதன் அடிப்படையில்தான் ஒருவன் வளர்ச்சியோ அல்லது தாழ்ச்சியோ அடைகிறான். ஆகவே ஒருவன் தன்னுடைய நிலைக்கு தானே காரணம் என்ற அறிவைப் பெற்றால், பிறகு அவனுக்குப் புலம்புவதற்கு காரணம் கிடையாது.

புலம்புவதினால் ஒருவனுடைய நிலையில் எந்தவித மாற்றமும் ஏற்படப்போவதில்லை. இதை உணர்ந்தவனே அறிவாளி. மற்றவர்கள் என்ன என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டுவிடுகிறேன்.

புதன், 9 நவம்பர், 2011

தலைமுறை இடைவெளி


வயசானவங்க கிட்ட இருக்கிற ஒரு பெரிய துர்க்குணம் என்னன்னா, எதையாச்சும் புடிச்சுகிட்டு, தொணதொணன்னு பேசிக்கிட்டே இருக்கறதுதான். (இப்ப நான் பதிவில பண்ணுகிறேன் பாருங்க, அந்த மாதிரி).

“நாங்கல்லாம் அந்தக்காலத்தில” அப்படீன்னு ஆரம்பிச்சா அன்னக்கி பூராவும் அதையே வேறு வேறு வார்தைகள்ல பேசிக்கிட்டே இருப்பாங்க. சங்கீத வித்வான்கள் இதை “சங்கதி” பாடறது என்பார்கள். ஒரே பல்லவியை வெவ்வேறு பாணியிலே ஒரு பத்து இருபது தடவை பாடுவார்கள். எவ்வளவு அதிக தடவை பாடுகிறாரோ அந்த அளவுக்கு அவர் பெரிய வித்வான்.

ஆனா இந்தக் கெளடுக பேசறது ஒரே கழுத்தறுப்பா இருக்கும். பொண்டாட்டி சத்தமா ஒரு கொரல் கொடுத்தாத்தான் இது நிக்கும். பேராண்டிகளெல்லாம் ஒரே ஓட்டமா ஓடி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுவார்கள். சில பெரிசுக, எதிர ஆள் இல்லாட்டியும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் மூளையில் இரண்டொரு மறைகள் வயதானதினால் லூசாகி இருக்கும். அதனால்தான் இந்த தனி ஆவர்த்தனம்.

அடுத்த தலைமுறைக்காரங்க என்ன செய்தாலும் தப்பு கண்டு பிடிப்பாங்க. இந்தக் காலத்துப் பசங்க சட்டை, பேன்டெல்லாம் வாங்கற பணம் ஒரு பெரிய குடும்பத்தின் ஒரு மாதச்செலவுக்கு மேல் இருக்கும். என் நண்பர் ஒருவர் பேராண்டி வாங்கி வந்த துணியின் விலையைக் கேட்டிருக்கிறார். அவன் அதன் உண்மை விலையில் பாதி சொல்லியிருக்கிறான். அவரும் இவ்வளவு விலையா என்று சொல்லிவிட்டு, அவர் வேலையைப் பார்க்கப் போய்விட்டார். இரண்டு நாள் கழித்துத்தான் அதன் உண்மை விலையை யாரோ அவருக்குச் சொல்லியிருக்கிறார்கள்.

அவர் பேரனைக் கூப்பிட்டு என்னிடம் ஏன் அப்படி சொன்னாய் என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்தப் பேரன் “ நான் உண்மை விலையைச் சொல்லியிருந்தால் உங்களுக்கு “ஹார்ட் அட்டேக்” வந்திருக்குமே, அதனால்தான் உண்மை விலையைச் சொல்லவில்லை” என்று சொன்னானாம். இது எப்படியிருக்கு பாருங்க. ஆனாலும் பேராண்டி விவரமாத்தான் சொல்லியிருக்கிறான்.

இதுதான் தலைமுறை இடைவெளி. இன்றைய இளைய தலைமுறையினரின் பொருளாதார நிலை வயதானவர்களின் இளமைக்கால பொருளாதாரத்திலிருந்து மிகவும் மாறுபட்டது. அதை வயதானவர்களால் புரிந்து கொள்ள முடியாது. ஆகவேதான் இந்த இடைவெளி. வயதானவர்கள் என்ன செய்ய வேண்டுமென்றால் இன்றைய இளைய சமுதாயத்தைப் புரிந்து கொள்ள உங்களால் முடியாது. ஆகவே அவர்களை அனுசரித்துக் கொண்டு போனால் எல்லோருக்கும் மகிழ்ச்சியாயிருக்கும்.

திங்கள், 7 நவம்பர், 2011

பேயை மேய்ப்பது எப்படி?


பணம் என்பது ஒரு பேய் என்று முந்தைய பதிவில் பார்த்தோம். ஆனாலும் அந்தப் பேயுடன் வாழ்ந்தே ஆகவேண்டும். வேறு வழி - இந்த உலகை விட்டுப் போய்விடுவதுதான். அது நம் கையில் இல்லை. ஆகையால் அது வரை அந்தப் பேயை எப்படி கட்டி மேய்ப்பது என்று பார்ப்போம்.

தெளிவாகப் புரிந்து கொள்வதற்காக, ஒவ்வொரு குறிப்பாக, வரிசை எண்ணுடன் கொடுத்திருக்கிறேன். மூத்த குடிமக்களுக்கு என்று இருந்தாலும் இளைய தலைமுறையும்இவைகளைக் கடைப்பிடிக்கலாம். எனக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை.

1. மூத்த குடிமக்களுக்கு பேங்க் அக்கவுன்ட் இன்றியமையாதது. (அதற்கு முன் பணம் இன்றியமையாதது !)

2. முடிந்த வரை வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் பேங்குகளில் கணக்குகளை ஆரம்பிக்கவும்.

3. இரண்டு பேங்குகளில் கணக்கு வைத்துக்கொள்ளுங்கள்.

4. ஒரு அக்கவுன்டில் செக் புக், ஏடிஎம் கார்டு, மொபைல் அலெர்ட், இன்டர்நெட் வசதி, இப்படி என்னென்ன கருமாந்திரங்கள் இருக்கோ, அத்தனையையும் வைத்துக்கொள்ளுங்கள்.

5. ஆனால் பணம் மட்டும் அளவாக வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் மொத்தப் பணத்தில் 10% மட்டும் இங்கே இருக்கட்டும்.

6. இன்னொரு பேங்கில் கணக்கு ஆரம்பித்து விடுங்கள். செக் புக், ஏடிஎம் கார்டு, இன்டர்நெட் பேங்கிங்க், மொபைல் அலெர்ட் இது மாதிரி எந்த ஒரு கண்றாவி வசதியையும் பெற்றுக்கொள்ளாதீர்கள். நாமினேஷன் மட்டும் உங்கள் மனைவி பெயரில் இருக்கட்டும்.

7. பேங்கை இரண்டு நாட்கள் நோட்டம் போடுங்கள். பாங்க் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை எப்படி நடத்துகிறார்கள் என்று பாருங்கள். வித்டிராயல் பார்ம்கள் அங்கே டேபிளில் இறைந்து கிடக்கிறதா என்று பாருங்கள். அப்படி இருந்தால் அந்தப் பேங்கை மறந்து விடுங்கள்.

8. அக்கவுன்ட் பாஸ்புக் மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள். பாஸ் புக்கை முடிந்தவரை யார் கண்ணிலும் காட்டாதீர்கள்.

9. பணம் செலுத்த நீங்களே நேரில் சென்று செலுத்துங்கள். செலான் பாரம் அவ்வப்போது ஒவ்வொன்றாக மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள்.

10. பணம் எடுக்கும்போது நீங்களே நேரில் சென்று ஒரு வித்டிராயல் பாரம் வாங்கி அவர்களையே எழுதச்சொல்லி கையெழுத்து மட்டும் நீங்கள் போட்டு பணத்தை எடுங்கள்.

11. ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுப்பதாயிருந்தால் துணைக்கு நம்பகமான ஒருவரைக் கூட்டிக்கொண்டு போகவும். அப்படிக் கூட்டிக்கொண்டு போகும் நபருக்கு 100 ரூபாய் கொடுக்கவும். அப்போதுதான் அடுத்த தடவை கூப்பிடும்போது உற்சாகமாக வருவார்.

12. இப்படி செய்தால் உங்கள் பணம் உங்கள் பெயரில் பத்திரமாக இருக்கும்.

13. உங்கள் காலத்திற்குப் பிறகு??? இதைப்பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்க்ள?  யாரோ எப்படியோ என்னமோ செய்து கொள்ளுகிறார்கள்? உங்களுக்கென்ன, பேசாமல் உங்கள் படுக்கையில் (?!) படுத்துக்கொண்டிருங்கள்.



வெள்ளி, 4 நவம்பர், 2011

பணம் என்னும் பேய்


பேய் பிசாசு பிடிச்சா விடறது ரொம்பக் கஷ்டம். ( நான் மனைவியைச் சொல்றதா யாராவது நினைச்சால் அதற்கு நான் பொறுப்பில்லை ). பணமும் ஒரு பேய்தான்.

பணம் இல்லாதவன் பிணம். கொஞ்சம் பணம் இருந்தா அவன் ஏழை. நெறய பணம் இருந்தா அவன் சுகவாசி, பணக்காரன். இப்படித்தான் நாம் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் உண்மை அதுவல்ல. எவன் ஒருவன் பணத்தை தன்னுடைய மற்றும் தன்னைச் சார்ந்தவர்களுக்காக, அவர்களின் சுகத்திற்காக செலவழிக்கிறானோ அவனே சுகவாசி, அவனே உண்மையில் பணக்காரன். நாம் சேகரித்த பணம் எல்லாம் நம் பணம் அல்ல. நாம் நல்வழியில் செலவழித்த பணமே நாம் சம்பாதித்த பணம். மற்றவையெல்லாம் யாரோ சம்பாதித்த பணம்.

நாம் எல்லோரும் பணத்தை எதிர்காலத் தேவைக்காக சேமித்து வைக்கிறோம். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு அதன் மேல் ஆசை அதிகரிக்கிறது. இன்னும், இன்னும், இன்னும் என்று மேன்மேலும் சேர்ப்பதிலேயே மனம் செல்லுமே தவிர, அந்தப் பணத்தை எதற்காக சேர்க்க வேண்டும் என்கிற உணர்வு இல்லாமல் போகிறது. பணப்பிசாசு அவனைப் பிடித்தது என்ற நிலை மாறி அவனே பணப்பிசாசாக மாறிவிடுகிறான்.

மேல் உலகத்திற்குப் போகும்போது இந்தப் பணத்தைக் கொண்டு போக நிச்சயம் முடியாது. நான் எல்லா பேங்குகளிலும் விசாரித்து விட்டேன். உங்கள் வாரிசுகள் நீங்கள் விட்டுப் போன பணத்தைப் பார்த்து என்ன சொல்லுவார்கள் தெரியுமா? கஞ்சப்பய, நல்லா சோறுகூட திங்காம எத்தன பணத்தை வச்சுட்டுப் போயிருக்கான் பாரு, கஞ்சப்பய, என்றுதான் சொல்லுவார்கள். இந்த பெயர் எடுக்கவா இவ்வளவு கஷ்டங்கள்?


ஆகவே, மக்களே நீங்கள் பிசாசாக எப்போது மாறப்போகிறீர்கள்? இல்லை, ஏற்கனவே ஆகிவிட்டீர்களா?


புதன், 2 நவம்பர், 2011

சிறு குழந்தையை இம்சிப்பது எப்படி?


நான் மூன்று நாட்களுக்கு முன் என் நண்பருடைய ஊருக்குப் போயிருந்தேன். அங்கு அவருடைய மச்சினன் பையனுடைய குழந்தைக்கு காது குத்தும் விழா நடந்தது. அந்த விழாவில் கலந்து கொள்வதற்காகத்தான் நான் போயிருந்தேன்.

இந்து மத சம்பிரதாயங்களில் காது குத்துதல் ஒரு முக்கிய சடங்காகும். குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்குள் இந்த சடங்கை முடிக்கவேண்டும். இல்லாவிட்டால் இன்னும் இரண்டு வருடம் தாள்ளிப்போட வேண்டும். ஆகவே பெரும்பாலான குடும்பங்களில் இந்த விழாவை ஒரு வருடத்திற்குள் முடித்து விடுவார்கள். பொதுவாக அவரவர்கள் குல தெய்வக் கோயிலில்தான் இந்த வைபவம் நடக்கும்.


முதலில் குழந்தைக்கு மொட்டை போடவேண்டும். குழந்தையை தாய் மாமன் மடியில் வைத்துக்கொள்ள, தலை ஆடாமல் இருக்க ஒரு நாலு பேர் பிடித்துக்கொள்வார்கள். குழந்தைக்கு இந்த அனுபவம் புதிதாகையால் முடிந்த மட்டும் அழும். இந்த அழுகையைப் பொருட்படுத்தாமல் நாவிதர் கருமமே கண்ணாக தன் வேலையை முடிப்பார். இந்தக்காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.


அடுத்தது குழந்தையைக் குளிப்பாட்டுவார்கள். குளிப்பாட்டும்பொது சாதாரணமாகவே குழந்தைகள் அழுவார்கள். அதுவும் பலர் வேடிக்கை பார்க்க, புது இடத்தில் குளிப்பாட்டும்போது கேட்கவே வேண்டாம்.


அப்புறம் காது குத்துதல். இப்பொதும் குழந்தையை நாலு பேர் பிடித்துக்கொள்ள, ஆசாரியார் காது குத்தி தளுக்கனைப் போட்டு விடுவார். இப்போதும் குழந்தை அழும்.

இந்தக் கூத்தெல்லாம் முடிந்த பிறகு குழந்தையைப் பார்க்க சகிக்காது. முகமெல்லாம் சிவந்து வீங்கி அலங்கோலமாக இருக்கும். நான்கு நாள் போனால் இதே குழந்தை தன் தளுக்கைப் பார்த்து சந்தோஷப்படும். அது வேறு கதை.