பால் விலை, பஸ்
கட்டணம், மின் கட்டண உயர்வு ஆகியவை உங்களைக் கவலைக்கு உள்ளாக்குகிறதா? கவலைப்படாதீர்கள்.
உங்கள் நலம் கருதி பல சிக்கன யோசனைகளை இங்கே கொடுக்கிறேன்.
நீங்கள் மாத சம்பளக்காரராக
இருந்தால் ஏற்கெனவே ஒரு குடும்ப பட்ஜெட் வைத்திருப்பீர்கள். அதை தூசி தட்டி வெளியில்
எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பட்ஜெட்டின் முக்கிய அம்சம் என்னவென்றால் உங்கள் வரவின்
பாதிக்குள்தான் செலவினங்களை கட்டுப் படுத்தி வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மீதி
இருக்கும் சேமிப்பில் ஒரு கால் பங்கு அவசர செலவுகளுக்குப் பயன்படும். மீதி இருக்கும்
கால் பங்கு சேமிப்பாக வளரும்.
இப்படி போட்டிருக்கும்
பட்ஜெட்டை இப்போது கடைப்பிடித்தீர்களானால் உங்களை இந்த விலைவாசி உயர்வு ஒன்றும் செய்துவிட
முடியாது. எப்படி என்று பார்ப்போம்.
இப்போது பால் விலை
அதிகமாகி இருக்கிறது. இதை அம்மா ஏன் செய்தார்கள் என்றால் மக்கள் நலம் கருதியே. பால்
எதற்கு உபயோகப்படுத்துகிறோம்? காப்பி குடிக்க. காபியினால் உடலுக்கு எவ்வளவு தீங்கு
ஏற்படுகிறது தெரியுமா? தமிழ் நாட்டில் ஹார்ட் அட்டேக்கில் இறப்பவர்களில் பாதிப்பேர்
காப்பிக் குடியர்கள். அதனால்தான் அவர்களுக்கு ஹார்ட் அட்டேக் வந்தது. இந்த எச்சரிக்கையையும்
மீறி காப்பி குடிக்கவேண்டுமென்றால் இதுவரை குடித்த அளவில் பாதி அளவே குடியுங்கள். பால்,
காபித்தூள், சர்க்கரை செலவு பாதியாகக் குறைந்துவிடும்.
அப்புறம் பால்
தயிருக்காக உபயோகப்படுத்துகிறோம். தயிரில் கொலஸ்ட்ரால் இருக்கிறது. இதுவும் ஹார்ட்
அட்டேக் வருவதற்கு ஒரு காரணமாகும். ஆகவே தயிரை மோராக்கி உபயோகப்படுத்துங்கள். அதற்கு
பாதி பால் இருந்தால் போதும். ஆகவே உங்கள் பால் தேவை பாதியாகக் குறைந்துவிட்டதல்லவா?
இப்படி பால் விலை உயர்வை சமாளித்தாகி விட்டது.
அடுத்து பஸ் கட்டண
உயர்வு. பஸ் செலவிற்கென உங்கள் பட்ஜெட்டில் ஒரு தொகை ஒதுக்கியிருப்பீர்கள் அல்லவா?
அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள். என்ன சங்கடம் என்றால் அந்தப் பணம் இப்போதுள்ள பஸ்
கட்டணத்திற்கு போதாது. அதற்கு மூன்று உபாயங்கள் இருக்கின்றன.
1.
ஆபீசுக்கு
போகும்போது பஸ்சில் போய்விட்டு, வரும்போது நடந்து வரலாம்.
2.
பாதி
தூரம் மட்டும் பஸ்சில் போய்விட்டு மீதி தூரத்தை நடந்து கடக்கலாம்.
3.
ஒரு
நாளைக்கு பஸ், மறுநாள் நடை என்று மாற்றி மாற்றி வைத்துக்கொள்ளலாம்.
நடைப் பயிற்சிக்காக
தனியாக நேரம் ஒதுக்க வேண்டியதில்லை.
அடுத்து மின் கட்டண
உயர்வு. இது உங்களை அதிகமாகப் பாதிக்க வழியில்லை. ஏனென்றால் இனி வரும் காலங்களில் மின்
வெட்டு நேரம் அதிகரிக்கும் ஆதலால் மினசார உபயோகம் தானாகவே கட்டுக்குள் வந்து விடும்.
ஆக மொத்தம் இந்த
விலை உயர்வு மக்களின் நன்மைக்காக கொண்டு வரப்பட்ட ஒன்றாகும். மக்களின் பெரிய அறியாமை
என்னவென்றால் தங்களுக்கு எது நன்மை பயக்கும் என்பதை அறியாமலிருத்தலேயாகும். மக்கள்
அனைவரும் இந்த அறியாமை இருளிலிருந்து வெளிவர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.
டிஸ்கி: இந்தப் பதிவைப் படித்தபின் எனக்கு ஏதாவது செய்யவேண்டுமென்று யாராவது நினைத்தால் பின்னூட்டத்தில் குறிப்பிடவும். ஆவன செய்து கொடுக்கப்படும்.
வணக்கம் அய்யா நல்ல யோசனைதான்... பஸ்ல போகும்போது இடையில் எதையும் சாப்பிடமுடியாது
பதிலளிநீக்குநடந்து போகும்போது வாய் சும்மா இருக்காதே....வேர்க்கடலை சோளக்கருது பானிபூரி
எல்லா வரிசையா கடையா இருக்கு....ம்ம்ம
எப்படி பார்த்தாலும் வில்லங்கம்தான்...
கண்டிப்பா ..உங்க ஐடியாவுக்கு நன்றி
பதிலளிநீக்குarumai sir
பதிலளிநீக்குநல்ல யோசனைகள்.தொடருங்கள் ...
பதிலளிநீக்குநல்ல யோசனை அருமை
பதிலளிநீக்குபொருளாதார நிபுணர்கள் உங்கள் வீட்டு வாசலில் வரிசையாக நிற்கிறார்களா என்று பார்க்கச் சொல்லுங்கள்
பதிலளிநீக்குஎன் பதிவும் ஏறக்குறைய இப்படித்தான் இருக்கிறது அய்யா....
பதிலளிநீக்குஒரு சாமானியன் வருமானத்துக்கு மீறிய இந்த விலை ஏற்றம் மறுபடியும் நம்மை குகை மனிதனாய் மாற வழிசெய்து விடுமோ?...நடந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை தான், பணம் படைத்தவர்களும் பதிவு உள்ளவரும் மட்டுமே வளமாய் வாழ முடியும்...நல்ல பதிவு ஐயா....
பதிலளிநீக்குநல்ல யோசனைகள்....
பதிலளிநீக்குசரியாதான் சொல்லியிருக்கீங்க,அம்மா தொலை நோக்கு பார்வையோடதான் ஒவ்வொன்னு செய்றாங்க போல,நாமதான் புரிஞ்சுகலை,இப்ப புரிஞ்சுடுச்சி.
பதிலளிநீக்கு//நண்டு @நொரண்டு -ஈரோடு said...
பதிலளிநீக்குநல்ல யோசனைகள்.தொடருங்கள் ...//
ஒண்ணும் வம்பு வழக்கு வராதில்லீங்களா? வந்தா நீங்கதான் காப்பாத்தணும்.
அருமையான யோசனைகள். இப்பிடியே சூப்பர் ஐடியாக்களாக குடுங்க.
பதிலளிநீக்குஉங்கள் சார்தாம் யாத்திரை பதிவுகளைப் பார்த்தேன், அருமை, இப்போது நானும் எழுதிக்கொன்டிருக்கிறேன் சமயம் கிடைத்தால் சென்று பாருங்கள்.
சார் வணக்கம் சார்!
பதிலளிநீக்குஅம்மா வாழ்க! ஜனநாயகம் வாழ்க!
ஜனநாய்கள் ஒழிக!!!!!
#சார்.... கெளம்புறேன் சார்...
மக்கள் அனைவரும் இந்த அறியாமை இருளிலிருந்து வெளிவர ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்/
பதிலளிநீக்குஅனுபவ "வரிகள்"..
வாழ்த்துகள்
//வெளங்காதவன் said...
பதிலளிநீக்குசார் வணக்கம் சார்!
அம்மா வாழ்க! ஜனநாயகம் வாழ்க!
ஜனநாய்கள் ஒழிக!!!!!
#சார்.... கெளம்புறேன் சார்.//
ஐயையோ, இப்படி என்னை அம்போன்னு உட்டுட்டு போயிடாதீங்க, வெளங்காதவன். அப்புறம் யாரை நம்பி நான் மொக்கை போடறது?
//Kailashi said...
பதிலளிநீக்குஅருமையான யோசனைகள். இப்பிடியே சூப்பர் ஐடியாக்களாக குடுங்க.
உங்கள் சார்தாம் யாத்திரை பதிவுகளைப் பார்த்தேன், அருமை, இப்போது நானும் எழுதிக்கொன்டிருக்கிறேன் சமயம் கிடைத்தால் சென்று பாருங்கள்.//
தலை சுற்றுகிறது கைலாஷ். எந்த பிளாக்கை முதலில் பார்ப்பது, அடுத்தது எது? புரியவில்லை. பொறுமையாக கண்டுபிடித்து விடுகிறேன். விடமாட்டேன்.
அய்யா.. சாமி.. என் அலுவலகம் 20 கிமீ தள்ளி உள்ளது.. நான் நடந்து போனால் நாளைக்குத்தான் போவேன்.. அப்புறம் என் சம்பளம் கட் ஆனதற்கு ஒரு பதிவு போட வேண்டி வரும்..
பதிலளிநீக்குஉங்க ஆதங்கம் நியாயமானது ப்ளாக்குக்கு இப்போதான் முதல்வருகை மேலும் வாசிச்சி வரேன்
பதிலளிநீக்குஅருமையான யோசனைகள்.மிக்க நன்றி ஐயா பகிர்வுக்கு .....
பதிலளிநீக்கு//ரிஷபன் said...
பதிலளிநீக்குஅய்யா.. சாமி.. என் அலுவலகம் 20 கிமீ தள்ளி உள்ளது.. நான் நடந்து போனால் நாளைக்குத்தான் போவேன்.. அப்புறம் என் சம்பளம் கட் ஆனதற்கு ஒரு பதிவு போட வேண்டி வரும்..//
இது ஒரு உண்மையான பிரச்சினைதான். அடுத்த கேபினட் மீட்டிங்கில் இதுபற்றி விவாதித்து ஒரு நல்ல முடிவு எடுக்கப்படும். அதுவரை அலுவலகத்திலேயே தங்கிக் கொள்ளவும்.
அய்யா, பட்ஜெட் எல்லாம் சரிதாங்க. ஆனா தினம் சரக்கு அடிக்க மட்டும் நூறு ரூவாக்கு குறையாம செலவாகுதே அத என்ன பண்ண சொல்லுதீய.
பதிலளிநீக்கு//ஆரூர் முனா செந்திலு said...
பதிலளிநீக்குஅய்யா, பட்ஜெட் எல்லாம் சரிதாங்க. ஆனா தினம் சரக்கு அடிக்க மட்டும் நூறு ரூவாக்கு குறையாம செலவாகுதே அத என்ன பண்ண சொல்லுதீய.//
இதுக்கு போயி கவலைப் படலாமா? டாஸ்மாக் வாசல்லயே கொஞ்சம் மறைவா நின்னுக்கிட்டிருங்க. யாராச்சும் நம்ம சகா வராமயா போய்டுவான்? நைஸா அவன் கூட ஒட்டிக்குங்க. அம்புட்டுத்தான்.
நல்ல யோசனைகள்.
பதிலளிநீக்குகடைப்பிடிப்பது :(