செவ்வாய், 27 டிசம்பர், 2011

சாவக்கட்டு என்னும் சூதாட்டம்



சாவக்கட்டு என்று கொங்கு நாட்டில் அழைக்கப்படும் சேவல் சண்டை தென் மாநிலங்களில் அதிக அளவில் நடக்கிறது. போலீஸ் கெடுபிடி இருந்தாலும் எப்படியோ அவர்களைச் சரிக்கட்டி இந்த திருவிழா நடந்துகொண்டுதான் இருக்கிறது.

நான் நகரத்தில் பிறந்து வளர்ந்திருந்தபடியால் என் எண்ணங்கள் கிராமத்தில் வளர்ந்தவர்களிடமிருந்து வேறாக இருப்பதில் ஆச்சரியமில்லை. நான் நினைத்துக் கொண்டிருந்தது, “சாவல்கட்டு” என்பது கிராமங்களில் வேலை வெட்டியில்லாமல் திரிந்து கொண்டிருப்பவர்களின் பொழுதுபோக்கு என்பதுதான். ஆனால் சமீபத்தில் ஈமு பண்ணையைப் பார்க்கப் போனபோது அங்கு நிறைய சேவல்கள் கட்டி வைக்கப் பட்டிருந்தன. அவைகளைப் பற்றி விசாரித்ததில் பல புது விஷயங்களைத் தெரிந்து கொண்டேன்.  

இந்த சாவல்கட்டு ஏறக்குறைய குதிரைப் பந்தய விளையாட்டு போன்றது. பந்தயக்குதிரைகள் போலவே சேவல்களும்  பல்லாயிரக்கணக்கில் விலை மதிப்புள்ளவை. சேவல் வளர்க்கிறவர்களுக்கு இது ஒரு முழு நேரத் தொழில். ஜல்லிக்கட்டு போல் இது சாதாரண கிராம மக்களுக்கு ஒரு வீர விளையாட்டு. ஆனால் குதிரைப் பந்தயத்தைப் போல இதில் லட்சக்கணக்கான ரூபாய்கள் பந்தயமாக புரள்கிறது. குதிரைப் பந்தயம் மேல்தட்டு மக்களின் சூதாட்டம். சாவக்கட்டு சாதாரண மக்களின் சூதாட்டம்.

இந்த பந்தயத்தில் ஈடுபடுபவர்கள் இரண்டு வகை. முதல் வகை --- சொந்தமாகப் பணம் போட்டு சேவல்கள் வாங்கி வளர்த்து பந்தயத்திற்கு கொண்டுபோகும் முதலாளிகள். சண்டைக்கு லாயக்கான சேவல்களைக் கண்டால் என்ன விலையானாலும் இவர்கள் அதை வாங்கி விடுகிறார்கள். இதோ இந்தச் சேவல் 20000 ரூபாயாம்.


இவைகளை வளர்ப்பதும் சண்டைக்குத் தயார் செய்வதும் ஒரு தனிக்கலை. ஆகாரத்தில் மிக கவனமாக இருக்கிறார்கள். எங்காவது சாவல்கட்டு நடக்கிறதென்றால் இவர்களுக்கு தகவல் வந்துவிடும். மிகவும் தூரத்தில் உள்ள ஊர்களுக்குப் போகமாட்டார்கள். காரணம் அங்குள்ள மக்களின் மனோபாவம் தெரியாது. வீண் கஷ்டங்கள் ஏற்படும். சாவல்கட்டுக்கு புறப்படுவது என்பது ராஜாக்கள் போருக்குப் புறப்படுவது போல்தான். ஏகப்பட்ட முஸ்தீபுகள் செய்யவேண்டும். குறைந்தது பத்து சகாக்கள் வேண்டும். சண்டைப் பயிற்சி கொடுத்தவர் கண்டிப்பாக வேண்டும்.

இப்படி போனால்தான் ஏதாவது தகராறு என்ற வந்தால் சமாளிக்க முடியும். இதற்கெல்லாம் செலவை சேவல் சொந்தக்காரர்தான் செய்யவேண்டும். சேவல் சண்டையில் ஜெயித்தால் வருமானம் வரும். இல்லையென்றால் கைக்காசைத்தான் செலவழிக்கவேண்டி வரும். அது தவிர பல ஆயிரம் கொடுத்து வாங்கின சேவலும் கை விட்டுப் போய்விடும். ஆக மொத்தம் சாவக்கட்டு என்பது சூதாட்டம்தான்.

சேவல் சொந்தக்காரன் கட்டாயம் பந்தயம் வைத்துத்தான் ஆகவேண்டும். அது தவிர பார்வையாளர்களும் தங்களுக்குள் பந்தயம் வைத்துக்கொள்வார்கள். இப்படி சாவக்கட்டு நடக்கும் இடங்களில் லட்சக்கணக்கில் பணம் புரளும். சூதாட்டம் என்பதினால் அது குறித்து வரும் சண்டை சச்சரவுகளும் வரத்தான் செய்யும். அதனால்தான் இதை அரசு அனுமதிப்பதில்லை. இருந்தாலும் இது ஒரு வீர விளையாட்டு என்று கூறி நீதி மன்றங்கள் மூலமாக அனுமதி வாங்கி சாவக்கட்டுகள் நடந்து வருகின்றன.

ஆந்திரா, கர்னாடகா மாநிலங்களில் சாவக்கட்டு மிகவும் பிரசித்தியுடன் நடக்கிறது. அமெரிக்காவிலும் கூட சாவக்கட்டு நடக்கிறதென்று கூகுள் தேடலில் தெரிந்தது. வரும் பொங்கல் சமயத்தில் பல இடங்களில் சாவக்கட்டு நடக்கலாம்.




6 கருத்துகள்:

  1. எங்கள் ஊரில் இப்போதும் சேவல் சண்டை நடக்கிறது.

    பதிலளிநீக்கு
  2. "சாவக்கட்டு" பற்றி நிறைய தகவலல்களை அறிந்து கொண்டேன்.

    பதிவுக்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  3. சேவல்கட்டு என்பதை ஏதோ சின்ன லெவலில் நடக்கும் விளையாட்டு/சூதாட்டம் என்றுதான் நினைத்தேன். “ஆடுகளம்” படம் பார்த்தபின் தான் இது எந்தளவு பரவியிருக்கிறது என்று புரிந்தது!!

    பதிலளிநீக்கு
  4. நிறைய தகவல்கள்... எல்லாவற்றிலும் சூதாட்டம் தான்... :(

    பதிலளிநீக்கு
  5. அந்த சேவல்கள்தான் பாவம், மனிதன் என்னவோ பணம் சம்பாதிக்கிறாப், அந்த ஜீவன்களுக்குத்தான் சித்ரவதை, சண்டை சமயத்தில் சாராயம் ஊற்றி விடுவார்கள் எப்போதுக் கட்டியே வைத்திருப்பார்கள்.

    பதிலளிநீக்கு

  6. அன்பின் அருந்தகையீர்!
    வணக்கம்!

    இன்றைய...
    வலைச் சரத்திற்கு,

    தங்களது
    தகுதி வாய்ந்த பதிவு
    சிறப்பு செய்துள்ளது!

    வருக!
    வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.fr/
    கருத்தினை தருக!

    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு