செவ்வாய், 15 ஜனவரி, 2013

தெனாலிராமனின் எது சுகம் கதை

தெனாலிராமன் கிருஷ்ணதேவராயர் அரசவையில் ஆஸ்தான விகடகவியாக இருந்து, அரசரையும், அரசவையில் இருந்தோரையும் சிரிக்கவைத்த பல கதைகளைக் கேட்டிருப்பீர்கள். அவ்வளவாக பிரபலம் ஆகாத கதை ஒன்றை இந்தப் பதிவில் சொல்ல ஆசைப் படுகிறேன்.

ஒரு நாள் அரசவையில் எல்லோரும் கூடியிருக்கும்போது அரசர் ஒரு கேள்வியை எழுப்பினார். "மனிதனுக்கு மிகவும் சுகமான அனுபவம் எது?" என்பதுதான் அந்தக் கேள்வி. ஒவ்வொருவரும் தங்களுக்குத் தோன்றிய பதில்களைச் சொன்னார்கள்.

ஒருவர் "நல்ல அழகிகளுடன் பேசிக்கொண்டு இருப்பதுதான் சுகமானது" என்றார். இன்னொருவர் "நல்ல அறுசுவை விருந்து சாப்பிடுவதுதான் சுகமானது" என்றார். மற்றொருவர் "நல்ல சங்கீதத்தைக் கேட்பதுதான் சுகமானது" என்று சொன்னார். இப்படி ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் மனதிற்குப் பிடித்ததைச் சொன்னார்கள்.

அரசர் தெனாலிராமனைப் பார்த்து, "என்ன நீ ஒன்றுமே சொல்லவில்லையே" என்று கேட்டார். அதற்கு தெனாலிராமன் "நான் நினைப்பதைச் சொன்னால் நீங்கள் வருத்தப்படுவீர்கள்" என்றான். அரசர், "பரவாயில்லை, எதுவானாலும் சொல்" என்றார்.

அப்போது தெனாலிராமன் சொன்னான். "உலகிலேயே சுகமானது வெளிக்குப் போவதுதான்" என்றான். இதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். அரசருக்குக் கோபம் வந்துவிட்டது. "அரசவையில் இப்படிப்பட்ட அருவருப்பான சமாசாரத்தை சொன்ன நீ அறிவற்றவன்" என்று அவனைத்திட்டினார். அப்போது தெனாலிராமன் சொன்னான் - நான் இதை நிரூபிப்பேன் என்று சொன்னான். அரசரும் நீ அவ்வாறு நிரூபிக்காவிட்டால் உனக்கு சிறைத் தண்டனை கொடுப்பேன் என்றார். தெனாலிராமன் ஒத்துக் கொண்டான்.

இரண்டு நாட்கள் கழித்து தெனாலிராமன் ஒரு பெரிய விருந்திற்கு ஏற்பாடு செய்தான். அரசவையின் முக்கிய பிரமுகர்களையெல்லாம் அந்த விருந்திற்கு அழைத்திருந்தான். அரசரும் வந்திருந்தார். விருந்து மிகவும் தடபுடலாக நடந்து முடிந்தது. இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அதனால் அரசரைத் தவிர மற்ற அனைவரையும் தெனாலிராமன் அரண்மனையில் ஒரு அறையில் தங்க வைத்தான். அந்த அறையின் கதவைப் பூட்டி சாவியை தன்னிடமே வைத்துக் கொண்டான். காலையில் விடிந்த பிறகு வெகு நேரம் கழித்தே அவன் அந்த அறைப் பக்கம் சென்றான்.

அந்த அறையில் சிக்கிய அனைவரும் காலைக் கடனைக் கழிக்க முடியாமல் மிகுந்த வேதனையில் இருந்தார்கள். தெனாலிராமனைப் பார்த்தவுடன் எல்லோரும் அவனைக்  கதவைத்திறந்து விடுமாறு கெஞ்சினார்கள். தெனாலிராமன் அவர்களிடம் நான் சொன்ன பிரகாரம் கேட்பதாக இருந்தால் கதவைத் திறந்து விடுவேன் என்று சொன்னான். அவர்கள்,நீ என்ன சொன்னாலும் கேட்கிறோம் என்று உறுதி கூறிய பின்பே கதவைத் திறந்து விட்டான். அனைவரும் ஓடிப்போய் காலைக்கடனைக் கழித்து விட்டு அப்பாடா என்று ஆசுவாசப் படுத்திக்கொண்டார்கள்.

அப்போது தெனாலிராமன் அவர்களிடம் கேட்டான். இரவு சாப்பிட்ட விருந்து சுகமா அல்லது இப்போது வெளிக்குப் போய்விட்டு வந்தீர்களே இது சுகமா என்று கேட்டான். அப்போது அவர்கள் எல்லோரும் ஏகமனதாக, அப்பனே தெனாலிராமா, இதுதான் சுகம் என்றார்கள். தெனாலிராமன் அப்படியானால் இதை அரசரிடம் சொல்லுவீர்களா என்று கேட்டான் சொல்லுகிறோம் என்று ஒப்புக்கொண்டார்கள்.

அன்று அரசவை கூடிய பின், தெனாலிராமன், அரசே, இப்போது இங்கு கூடியுள்ள பிரமுகர்களை எது சுகம் என்று கேளுங்கள் என்றான். அரசர் அவ்வாறு கேட்டதற்கு அனைவரும் வெளிக்குப் போவதுதான் சுகம் என்றார்கள். அரசரும் தெனாலிராமனின் சாதுர்யத்தை மெச்சி அவனுக்குப் பரிசுகள் கொடுத்தார்.

இந்தக் கதையின் முக்கியத்துவத்தை என்னுடைய அடுத்த பதிவுகளில் தெரிந்து கொள்வீர்கள்.

5 கருத்துகள்:

 1. நல்ல குளியல் அறை அமைப்பது எப்படி?

  என்று பகிர்வதற்காக இந்த கதை !!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாய்ன்ட்டை கரெக்ட்டாப் புடிச்சிட்டீங்களே! இது பெண்களுக்கே உரிய சாதுர்யம். பாராட்டுகிறேன்.

   நீக்கு
 2. நான் இதுவரை கேள்விப்பட்டிராத கதை.இதனுடைய சிறப்பை அறிய காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. உடம்பிற்குள் அடக்கி வைக்கப்பட்ட ஒன்றை வெளியேற்றும்போது கிடைக்கும் ஆனந்தம்! ஆனந்தமே!


  பதிலளிநீக்கு
 4. மலசிக்கல் மனுஷனுக்கு பலசிக்கல் !உண்மைதான் !

  பதிலளிநீக்கு