திங்கள், 22 ஜூலை, 2013

வழி சொல்லத் தெரியுமா ?


நேற்று நான் கடைக்கு ஒரு பொருள் வாங்கப் போகும்போது ஒரு பெண் என்னிடம் வந்து " ஐயா, இங்கு காயின் பாக்ஸ் போன் எங்காவது இருக்கிறதா" என்று கேட்டாள். நான் அவள் "காயின்" அதுதான் ஒரு ரூபாய் காசு இல்லாமல் கேட்கிறாள் என்று நினைத்துக்கொண்டு என் பர்சை எடுத்தேன்.

அதற்கு அவள் "ஐயா, என்னிடம் காசு இருக்கிறது, காயின் பாக்ஸ் போன் பக்கத்தில் இருக்கிறதா?" என்று கேட்டாள். கொஞ்ச தூரத்தால் ஒரு போன் இருந்ததைக் காட்டினேன். அவள் தயங்கினாள். சரி போனில் என்ன பேசவேண்டும் என்று கேட்டேன். அதற்ஃகு அவள் நான் இங்கு என் சித்தி வீட்டிற்கு வந்தேன். வழி தெரியவில்லை, அதனால் அவர்களுக்கு போன் செய்து வழி கேட்கவேண்டும் என்றாள். நான் என் செல்போனை எடுத்து அவள் சொன்ன எண்ணுக்கு போன் செய்து அவளிடம் கொடுத்தேன்.

ஒரு நிமிடம் பேசினாள். அவர்களை என்னிடம் பேசச் சொல், நான் விவரம் கேட்டு உனக்குச் சொல்கிறேன் என்று சொல்வதற்குள் போன் கட் ஆகிவிட்டது. சரி என்ன சொன்னார்கள் என்றேன். கண்ணன் டிபார்ட்மென்ட் ஸ்டோரிலிருந்து நேராக வரவும் என்று சொன்னார்கள் என்றாள்.

இதைப் போன்ற மொட்டையான வழியை வைத்துக்கொண்டு என்ன செய்வது? நேராக வரவும் என்றால் எந்த ரோட்டில் என்று சொல்லவேண்டாமோ? அந்தப் பெண் என் பின்னாலேயே வர ஆரம்பித்தது. நான் திரும்பவும் அந்த நெம்பரைக் கூப்பிட்டு "அம்மா, உங்க வீடு எங்கேயிருக்குறது என்று அழுத்தமாகக் கேட்டேன்.

அப்போது அந்த அம்மா அவர்கள் இருக்கும் வீட்டைச் சொன்னார்கள். அது என் வீட்டிலிருந்து மூன்றாவது வீடு. அந்தப் பெண்ணிற்கு வழி சொல்லி அனுப்பி வைத்தேன்.

நான் சமீபத்தில் எங்கள் ஏரியாவிலேயே ஒரு அபார்ட்மென்ட்டுக்குப் போக வேண்டி இருந்தது. அந்த அபார்ட்மென்ட் பெயரில் மூன்று இடங்களில் அபார்ட்மென்ட் இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் பெயரில் சிறிய வித்தியாசமே. அரை மணி நேரம் சுற்றிவிட்டு கடைசியாக ஒரு அபார்ட்மென்ட் வாட்ச்மேனிடம் வழி கேட்டேன். அந்த ஆள் அவ்வளவு படித்தவராகத் தென்படவில்லை. இருந்தாலும் வழி சரியாக சொன்னார்.

சார் இங்கிருந்து இந்த ரோட்டில் நேராக சென்றால் ஒரு ஸ்கூல் வரும் அங்கு வலது பக்கம் திரும்பி போய் மூன்றாவது ரோட்டில் இடது பக்கம் திரும்புங்கள். அங்கிருந்து  மூன்றாவது கட்டில் வலது பக்கமாக திரும்பி நேராகப் போனால் நீங்கள் தேடும் அபார்ட்மென்ட் வந்து விடும் என்றார். அதேபோல் சென்று அடுத்த ஐந்து நிமிடங்களில் நான் போகவேண்டிய அபார்ட்மென்ட்டுக்கு போய்ச் சேர்ந்தேன்.

 ஆகவே வழி சொல்லும்போது, அவர்களுக்குப் புரியும்படியாக தெளிவாக வழி சொல்லவேண்டும். தெளிவில்லாமல் சொல்லப்படும் வழிகளினால் எவ்வளவு சிரமங்கள் ஏற்படுகின்றன.

நான் ஸ்வீடன் போயிருந்தபோது அங்கிருந்து நேதர்லாந்தில் உள்ள சர்வதேச மண் ஆராய்ச்சி நிலையம் பார்க்க விரும்பினேன். அதற்கு ஏற்பாடு செய்தார்கள். அந்த ஆராய்ச்சி நிலையத்திற்கு வருவதற்கான வழியை ஒரு பேக்ஸ் மூலம் நான்கே நான்கு வரியில் தெரியப்படுத்தியிருந்தார்கள். சுருக்கமாகவும் தெளிவாகவும் எந்த குழப்பமுமில்லாமல் அந்த செய்தி இருந்தது. அதைப் பற்றி அடுத்த பதிவில்.

19 கருத்துகள்:

 1. தெரியவில்லை என்றால் "தெரியவில்லை" என்று சொல்லி விட வேண்டும்... சிலர் அதை செய்வதில்லை... அதனால் நமக்கு சிரமம் தான்...

  பதிலளிநீக்கு
 2. வழி சொல்லுதல் பற்றி தெளிவான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

  பதிலளிநீக்கு

 3. // வழி சொல்லும்போது, அவர்களுக்குப் புரியும்படியாக தெளிவாக வழி சொல்லவேண்டும்.//
  உண்மைதான் சரியா வழி சொல்லாததால் நானும் கஷ்டப்பட்டிருக்கிறேன்.

  நெதர்லாந்தில் தங்களுக்கு அவர்களது மண் ஆராய்ச்சி நிலையம் செல்ல எவ்வாறு சுருக்கமாக தெரிவித்திருந்தார்கள் என அறிய ஆவல்.

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் சொல்வது மிகவும் சரி
  வழி தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குச்
  சொல்கிறோம் என்கிற எண்ணத்தில் பெரும்பாலும்
  சொல்வதில்லைதான்

  பதிலளிநீக்கு
 5. ஒரு ஹிந்தி திரைப்படத்தில் புதிதாக வேலைக்குச் சேர வரும் ஆசிரியர் ஒருவர் பள்ளிக்குச் செல்ல இரு பையன்களிடம் வழி கேட்க அவர்கள் குறும்பாக நேர் எதிர் திசையில் அவரை அனுப்பி விடுவார்கள். நாம் மும்பையில் ( அப்போது பாம்பே) ஒரு தென் இந்திய பூணூல் அணிந்த அர்ச்சகர் போல் இருந்த ஒருவரிடம் வழி தமிழில் கேட்க அவர் “ மாலும் நஹி: என்று ஹிந்தியில் பதில் சொன்னார். மதுரையில் நம் கூடவே வந்து வழி காட்டுகிறார்கள் சிலர். ஒவ்வொன்றும் ஒரு விதம்...!

  பதிலளிநீக்கு
 6. விரிவாக சொல்லும் வழி சமயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி விடும் என்பதும் உண்மை.

  பதிலளிநீக்கு
 7. ஒரு நாள் காலை தச்சநல்லூர் பைபாஸ் அருகே நான் இருந்தபோது மதுரையிலிருந்து வந்த காரிலிருந்தவர் கன்யாகுமரிக்கு வழி கேட்டார். இந்த பைபாஸ்சில் நேரே போங்கள். முதலில் ரயில்வே மேம்பாலம், அடுத்து நெல்லையின் முக்கிய சாலையின் மேம்பாலம். மீண்டும் ஒரு ரயில்வே மேம்பாலம். பிறகு ஒரு ட்ராபிக் சிக்னலை தாண்டி நேரே போனால் கன்யாகுமரி சாலையில் ரைட் திரும்பி போங்கள் என்றேன். ''கன்யாகுமரிக்கே கொண்டு விடும் மாதிரி வழி சொன்னீரகள். நன்றி', என்றார்.
  என் கையில் ஒரு பேப்பர் இருந்தால் மேப் மாதிரி படம் போட்டே காட்டி விடுவேன்.

  பதிலளிநீக்கு
 8. ஐயா எனக்கு ஒரு திருவிளையாடல் சந்தேகம். மழை பெய்து மண்வாசனை வருகிறதே அது மண்ணாலா அல்லது மண்ணில் வாழும் பாக்டிரியாக்களாலா? இது பற்றி ஒரு பதிவு இடுங்களேன்.


  Jayakumar

  பதிலளிநீக்கு
 9. வீட்டருகே ஏதாவது லேண்ட்மார்க் இருந்தா அதையும் குறிப்பிடலாம். ஆனா ஒண்ணு, நாம குறிப்பிடும் லேண்ட்மார்க் உண்மையிலேயே பிரபலமான இடமா இருக்கணும்.

  பதிலளிநீக்கு
 10. வழி சொல்றதே ஒரு கலைங்க. சென்னையில நிறைய பேருக்கு அந்த கலை கைவராத கலையாகத்தான் இருக்கு. அதனால என்னிடம் யாராவது வீட்டுக்கு வாருங்கள் என்றால் அருகில் இருக்கும் கடை அல்லது கோவில் பெயரை கேட்டு வைத்துக்கொள்வேன். இதை தெரியாதவர்களே இருக்க முடியாது என்ற நம்பிக்கை. ஆனால் அதுவும் சிலநேரம் சொதப்பிவிடும்.

  பதிலளிநீக்கு
 11. நிறைய பேர்களுக்கு சரியாக வழி சொல்லத் தெரியாது. பொதுவாக பெண்களுக்கு இடது வலது குழப்பம் இருக்கும் அதனால் சரியாக சொல்ல மாட்டார்கள் என்று சொல்லுவார்கள். விதிவிலக்குகள் இருக்கலாம்.
  எங்கு வழிகேட்டாலும் அங்கு இருக்கும் பெரிய கட்டிடம், பள்ளி, வங்கி முதலியவற்றை சொல்வது தேடுதலை சுலபமாக்கும்.

  உங்கள் ஸ்வீடன் அனுபவம் படிக்கக் காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. நானும் இந்த அவஸ்தையை அனுபவித்து இருக்கிறேன்.
  சில உபயோகமான டிப்ஸ்

  1) நமது ஊர்களில் தெரு பெயரை சொல்லி அடையாளம் சொன்னால் போச்சு. கண்டுபிடிக்கவே முடியாது. எல்லா தெரு பெயர்பலகைகளிலும்தான் சினிமா போஸ்டர், கட்சி போஸ்டர் எல்லாம் ஒட்டி விடுகிறார்களே.

  2) மேலும் பாதி பேருக்கு மேல் பிழைக்க வந்தவர்கள். அலுவலகம் உண்டு வீடு உண்டு என்றிருப்பவர்கள். எனவே அவர்கள் மேலும் தப்பு சொல்ல முடியாது.

  3) அபார்ட்மெண்ட்களில் இருப்பவர்களுக்கு அடுத்த பிளாட்டில் இருப்பவர்களையே தெரியாது. இனி எங்கே விலாசம் தேடுபவர்களுக்கு உதவப்போகிறார்கள்

  4) பிளாட்பார கடைகாரர்கள், ஆட்டோகாரர்கள் போன்றோர் ஒருமாதிரி உதவி புரியலாம்.

  5) பணம் படைத்தோர் செல்லில் கூகிள் மேப் வழியாக அடையாளம் கண்டு பிடித்து விடலாம்.

  6) எல்லாம் கண்டுபிடித்து போனால் வீட்டில் பெரிய பூட்டு தொங்கினால் திட்ட வேண்டாம்

  7) ஆகையால் நண்பர்கள் அல்லது சொந்தக்காரர்கள் வீடு என்றால் நீங்கள் இருக்கும் இடம் சொல்லிவிட்டு அவர்களை வந்து உங்களை அழைத்துக்கொண்டு போக சொன்னால், விலாசம் தேடி அலையும் படலத்தை தவிர்க்கலாம்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 13. வழி சொல்வதில் பாதி பேர் குழப்பவாதிகள் தான்... கேட்காமலேயே இருந்திருக்கலாம் எனத் தோன்றிவிடும் சில சமயங்களில்.....

  பதிலளிநீக்கு
 14. uk வில் போஸ்ட் கோடு இருந்தால் போதும் எந்த இடத்துக்கும் சுலபமாக போய் விடலாம்

  பதிலளிநீக்கு
 15. சுருங்கச் சொல்லி புரிய வைத்தல் என்பது அநேகருக்கு வருவதில்லை

  பதிலளிநீக்கு
 16. உங்களின் அடுத்த பகிர்வு : http://engalblog.blogspot.in/2013/07/2.html

  தொடர வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 17. நான் மற்றவர்களுக்கு வழி சொல்லும்போது லேண்ட்மார்க் எல்லாம் சொல்லி விளக்கமாகச் சொல்லுவேன். நீங்கள் சொன்னது போல அரைகுறையாய்ச் சொல்பவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

  உங்களை ஒரு தொடர்பதிவு எழுத அழைத்திருக்கிறேன். தயவு செய்து எங்கள்ப்ளாக் வந்து படிக்கவும்! தொடரவும்!

  பதிலளிநீக்கு
 18. தெளிவில்லாமல் சொல்லும் வார்த்தைகளால் எவ்வளவு குழப்பம், நேர விரயம் பாருங்கள்..!!! கேட்பவர்களும் நன்கு விபரமாக கேட்டுக்கொள்ள வேண்டும்...!!!

  பதிலளிநீக்கு