சனி, 27 ஜூலை, 2013

கம்ப்யூட்டரி(னா)ல் (வந்த) கதை - பாகம் 2

அந்தக் காலத்தில் மூன்றே மூன்று புரொக்ராம்கள்தான் பிரபலம். வேர்டு. ஸப்ரெட்ஷீட், டேட்டாபேஸ். மூன்றுக்கும் மூன்று பிளாப்பிகள்.

நான் முதலில் போரிட ஆரம்பித்தது வேர்டுடன். அந்த மேன்யிவலைப் புரிந்து கொள்ளவே பல நாட்கள் ஆயின. நான் அந்தக்காலத்தில் டைட்ரட்டிங்க் படிக்கவில்லை. ஏனென்றால் அது என் குடும்ப பொருளாதாரத்திற்கு அப்பாற்பட்டதாய் இருந்தது. மாதம் மூன்று ரூபாய் கட்டணம் என்னால் கொடுக்க முடியவில்லை.

அதனால் இந்த கீபோர்டை ஒவ்வொரு எழுத்தும் எங்கே இருக்கிறது என்று தேடுக்கண்டு பிடித்து ஒரு வரி டைப் அடிப்பதற்கு அரை மணி நேரம் ஆயிற்று. இப்படியாக ஏறக்குறைய ஒரு மூன்று மாதத்தில் வேர்டின் அடிப்படைகளைப் புரிந்து கொண்டேன்.

பின்பு ஒரு முறை அமெரிக்கா சென்றிருந்தபோது என்னுடைய உபயோகத்திற்கென்று ஒரு கம்ப்யூட்டர் தனியாகக் கொடுத்தார்கள். அதற்குள் கம்ப்யூட்டர்கள் வளர்ச்சியடைந்து விட்டன. ஹார்டு டிஸ்க் வந்துவிட்டது. புரொக்ராம் மேன்யுவல்கள் தடிதடியாக தலையாணி சைசில் வந்து விட்டன.

அங்கு உட்கார்ந்து ஸ்ப்ரெட் ஷீட் எப்படி உபயோகிப்பது என்று பழகினேன். பின்பு ஒரு முறை ஸ்வீடன் போயிருந்தபோது அவர்கள் பழைய கம்ப்யூட்டர்களை மாற்றி புதிதாக வாங்கியிருந்தார்கள். பழைய கம்ப்யூட்டர் ஒன்று கொண்டு போகிறார்களா என்று கேட்டார்கள்.

நம் தமிழ்பண்புதான் தெரியுமே. ஒருவன் சாப்பிடும்போது தெருவில் கடனுக்கு யானை  விற்றுக்கொண்டு போனார்களாம். இவன் வாய் நிறைய சோறு. பேச முடியவில்லை. சைகையிலேயே "எனக்கு ஐந்து" என்று சொன்னானாம். கடனில் கொடுப்பதையே அப்படி ஆசைப் பட்ட தமிழன் சும்மா கொடுத்தால் விடுவானா?

ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தேன், தப்பு, தப்பு, கொண்டு வரப்பார்த்தேன். ஸ்வீடன் ஏர்போர்ட்டில் இதன் சைஸைப் பார்த்ததும் ஏற்றிக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி விட்டான். அதை அங்கேயே லவுன்ஞ்சில் அதைக் கொடுத்தவர்கள் விலாசத்தை அந்தப் பார்சலின் மேல் எழுதி வைத்து விட்டு வந்து விட்டேன்.

அந்தப் பார்சல் அதைக் கொடுத்தவர்களிடம் சேர்ந்து விட்டது என்று பின்னால் கேள்விப் பட்டேன்.

கம்ப்யூட்டர்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் நடந்து இன்று விலை மலிவாகவும், பலமடங்கு திறனுள்ளவையாகவும் மாறி விட்டன. இன்று புதிதாக வாங்கும் கம்ப்யூட்டர் அடுத்தவாரம் பழைய மாடல் ஆகி விடுகிறது.

பிறகு நான் ரிடையர் ஆன பின்பு என் பெண் தான் உபயோகித்து கழித்த ஒரு கம்ப்யூட்டரை எனக்கு தானம் கொடுத்தாள். தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்க்கக் கூடாதல்லவா? அதை தட்டிக் கொட்டி இன்றைய நிலைக்கு கொண்டு வந்து உங்களையெல்லாம் வாதித்துக்கொண்டு இருக்கிறேன்.

இப்போது கம்ப்யூட்டர் ஹார்டுவேர், சாஃப்டுவேர் எல்லாம் தலைகீழாக அத்துபடி. இந்தக் கம்ப்யூட்டரினால்தான் என் மூளை துருப்பிடிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறது. 

21 கருத்துகள்:

 1. ஆம் அய்யா. சரியாகச் சொன்னீர். கம்ப்யூட்டரினால்தான் பலபேருக்கு மூளை துருபிடிக்காமல் வேலை செய்து கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 2. எந்தவொரு மென்பொருளையும் முதலில் பயன்படுத்தி சொல்வதில் உங்களை மிஞ்ச முடியாது... வாழ்த்துக்கள் ஐயா...

  பதிலளிநீக்கு
 3. கணினியில் மென்பொருள் வன்பொருள் எல்லாவற்றையும் நன்கு தெரிந்துகொண்டதால் தான், பொருள் பொதிந்த பதிவுகளை அளிக்கிறீர்கள் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. கம்ப்யூட்டர்களின் வளர்ச்சி அசுர வேகத்தில் நடந்து இன்று விலை மலிவாகவும், பலமடங்கு திறனுள்ளவையாகவும் மாறி விட்டன. இன்று புதிதாக வாங்கும் கம்ப்நூட்டர் அடுத்தவாரம் பழய மாடல் ஆகி விடுகிறது.

  வேகமான வளர்ச்சி ..!

  பதிலளிநீக்கு
 5. இன்று மட்டும் கணினியும் அதன் மூலம் காணக்கிடைக்கும் இணையதளங்களும் இல்லையென்றால் மூளை துருப்பிடிப்பது மட்டுமல்ல தனிமையும் வாட்டி வதைத்திருக்கும். நேரில் காண முடியாவிட்டாலும் இதுதான் எத்தனை நண்பர்களை அறிமுகப்படுத்தியிருகிறது! சர்வீசில் இருக்கும்போது கூட இத்தனை நண்பர்களுடன் எழுத்து மூலம் பேசி மகிழ முடிந்ததில்லை. எதையும் கற்றுக்கொள்ள வயது முக்கியமேயில்லை என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள். எதையும் படித்து அறியும் மனது இருந்தால் போதும் இமயத்திற்கும் படிகள் அமைத்துவிடலாம். நீங்களும் யாரையும் எழுத அழைக்கவில்லை போலிருக்கிறது?

  பதிலளிநீக்கு


 6. என் பிறந்த நாளுக்கு என் மக்கள் ஒரு டாப்லெட் பரிசளித்தார்கள். எனக்கென்னவோ ஓல்ட் இஸ் கோல்ட் என்பதுபோல என்பழைய டெஸ்க் டாப் தான் சரியாக வருகிறது. அவர்களுக்குத் தேவை இல்லாத ஒன்றை உங்கள் கையில் கொடுத்து நல்ல பெயர் வாங்க முனைந்தவர்கள் அது அவர்களுக்கே போய்ச் சேர்ந்தபோது என்ன நினைத்திருப்பார்கள். கம்ப்யூட்டர் பதிவிலிருந்து நீங்கள் உலகம் சுற்றியவர் என்று தெரிகிறது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 7. Visit : http://blogintamil.blogspot.in/2013/07/blog-post_27.html

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 8. கம்ப்யூட்டர்களின் அசுர வளர்ச்சி போலவே நீங்களும் உங்கள் கம்ப்யூட்டர் அறிவை வளர்த்துக் கொண்டுள்ளீர்கள், ஐயா!

  பாராட்டுக்கள்!
  யானை கதை பிடித்திருந்தது.

  பதிலளிநீக்கு
 9. அனுபவம் புதுமை...!! அருமையிலும் அருமை...!!!

  பதிலளிநீக்கு
 10. உண்மைதான்... மூளைக்கு இப்போ வேலை கம்மியாயிருச்சு. எல்லாமே கணிப்பொறி பார்ப்பதால் சின்னச்சின்ன வேலைக்குக்கூட அதைத்தான் நாடுகிறோம்....

  பதிலளிநீக்கு
 11. அதெல்லாம் சரிதான், என்னை ஞாபகம் இருக்குங்களா...?? :))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கேள்வி என்னை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியதுள்ளது. உங்கள் பதிவுலக ஆரம்ப காலத்தில் உங்களுடைய சந்தேகங்களுக்கு என்னுடைய சிறு பங்கை ஆற்றியதிலிருந்து இன்று வரை "அனைத்தும்" நினைவில் இருக்கின்றன.

   நீக்கு
 12. நீங்களாகவே கற்றுக்கொண்டு இயக்குவது திறமை. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 13. நல்ல அனுபவங்கள்.... யானை கதை - நிதர்சனம்.... :)

  பதிலளிநீக்கு
 14. நீங்களூம் அந்த கம்ப்யூட்டரை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டீர்கள் போலிருக்கிறது. ஜி டி நாயுடு போல் ஏதாவது கண்டுபிடியுங்கள்.

  பதிலளிநீக்கு
 15. அது தனி மூளைங்க. நம்மால அந்த அளவிற்குப் போக முடியாதுங்க.

  ஜி.டி. நாயுடு என்றவுடன் அவருடன் நான் ஒரு முறை ரயிலில் பிரயாணம் செய்தது நினைவிற்கு வருகிறது. கோவையிலிருந்து சென்னைக்கு டூர் போகவேண்டி முதல் வகுப்பில் ஏறி உட்கார்ந்திருக்கிறேன். வண்டி புறப்பட ஐந்து நிமிடம் இருக்கும்போது ஜி.டி.நாயுடுவும் கூட இரண்டு பேர்களும் அதே கம்பார்ட்மென்டில் ஏறினார்கள். என் எதிர் சீட்டில் நாயுடு உட்கார்ந்தார். அவரிடம் முன் அறிமுகம் இல்லாவிடினும் மரியாதைக்காக வணக்கம் சொன்னேன். அவரும் பதில் வணக்கம் சொல்லிவிட்டு, யார், என்னவென்று விசாரித்தார்.

  வண்டி புறப்பட்டு பத்து நிமிடம் கழித்து கூட வந்தவர்கள் எல்லோருக்கும் கையில் ஒவ்வொரு தட்டு கொடுத்தார்கள். என்ன என்று கேட்டதற்கு நாயுடு சொன்னார், ஒண்ணும் இல்லீங்க தம்பி, இட்லி கொண்டு வந்திருக்காங்க, ரெண்டு இட்லி சாப்பிடுங்க என்றார். மரியாதைக்காக மறுத்துப் பார்த்தேன். ஒன்றும் எடுபடவில்லை. அந்த 'பே' இல் இருந்த நான்கு பேருக்கும் இட்லி சட்னி பறிமாறப்பட்டது. இட்லியும் சட்னியும் பிரமாதமாக இருந்தன.

  பின்புதான் கேள்விப்பட்டேன். அவர் எப்போது ரயில் பயணம் மேற்கொண்டாலும் பத்துப் பேருக்கு வருகிறமாதிரி டிபன் எடுத்துக் கொள்வாராம். அவரா தூக்கிக்கொண்டு வரப்போகிறார். அதற்கென்று ஆள் படைகள் வைத்திருந்தார்.

  பதிலளிநீக்கு
 16. நிச்சயம் உங்களின் அனுபவத்திற்கு கம்ப்யூட்டர் கண்டுபிடித்த காலத்திலிருந்து அதன் வளர்ச்சியை கண்கூடாக பார்த்திருப்பீர்கள். முதல் கணினி அனுபவம் அருமை சார்..

  பதிலளிநீக்கு