சனி, 2 மே, 2015

என்னுடைய பலஹீனம்

                                   Image result for கோவில்
நேற்று நானும் என் மனைவியும் எங்கள் ஊரில் (சும்மா ஒரு ஐந்து கி.மீ. தூரம்தான்) ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்குப் போயிருந்தோம். அங்கே கோயில் வளாகத்தில் நான் கொஞ்ச தூரம் சென்று விட்ட பிறகு, என்னைப் பார்த்த ஒரு பெண்மணி, வேறு ஒருவரை அனுப்பி என் பெயரைச் சொல்லி, அவர்தானா என்று விசாரித்து விட்டு என்னைக் கூப்பிட்டுக்கொண்டு வரச் சொன்னார்.

இது என்னடா விபரீதம், என் பெயரைச்சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டு வரச்சொன்னது யாராக இருக்கும் என்று யோசித்துக் கொண்டே சென்றேன். அந்தப் பெண்மணி என்னையும் என் மனைவியையும் மிகவும் அன்னியோன்யமாக நலம் விசாரித்தார்கள். இது யாராக இருக்கும் என்று நான் என் மண்டையைப் பலமாக ஆட்டி யோசித்தும் அடையாளம் பிடிபடவேயில்லை.

எப்படியோ சமாளித்து பேசிவிட்டு விடை பெற்றோம். முதலில் என்னைக் கூப்பிட்ட அம்மாள், அவர்கள் பிறந்த தோட்டத்தின் பெயரைச் சொல்லித்தான் கூப்பிட்டார்கள். ஆனாலும் அவர்களின் அடையாளம் சட்டென்று மனதில் தோன்றவில்லை.

பிறகு திரும்பி வரும்போதுதான் ஒரு மாதிரி கணக்குப் போட்டுப் பார்த்ததில், ஆஹா, அவர்களல்லவா இவர்கள் என்று அடையாளம் துலங்கியது. அவர்கள் என் மனைவியின் ஒன்று விட்ட அக்காளுக்கு நாத்தனார். அவர்களின் கணவர் எனக்கு பால்யத்திலிருந்து நண்பர். அவர்களின் அண்ணன் என்னுடன் கல்லூரியில் படித்தவர்.

மிகவும் நெருங்கிய உறவுதான். ஆனாலும் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் சட்டென்று நினைவிற்கு வரவில்லை. இரவு முழுவதும் இதே யோசனையாகப் போய்விட்டது. எனக்கு இந்த மாதிரி உறவுக்காரர்களை சரியாக ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடிவதில்லை. இது என் ஒரு பெரிய பலஹீனம்.

ஆனால் சிலர், ஒருவரை ஒரு முறை பார்த்துப் பேசினால் போதும், பத்து வருடங்கள் கழித்து பார்த்தால் கூட, நீங்கள் இன்னார்தானே என்று பெயரைச் சொல்லி அடையாளம் கண்டு கொள்கிறார்கள். அது ஒரு கொடுப்பினைதான். 

17 கருத்துகள்:

 1. ஐயா இந்தப் பதிவை ஏற்கனவே படித்தது போல் இருக்கிறதே.
  நெருங்கிய உறவுகளைக் கூட விசேஷங்களில் மட்டுமே பார்க்கும் அளவுக்கு பரபரப்பான வாழ்க்கையாகி விட்டது

  பதிலளிநீக்கு
 2. மறதி பலசமயங்களில் வரம் ஸார். சில சமயங்களில்தான் கஷ்டம்!

  பதிலளிநீக்கு
 3. பழைய நண்பர்களை அல்லது தூரத்து உறவினர்களை நினைவில் வைத்துக்கொள்ள அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்கவுகளை ஒன்றிணைத்து மனதில் இருத்திக்கொண்டால் மிக சுலபமாக அவர்களை பார்க்கும்போது அடையாளம் கண்டுகொள்ளலாம். அப்படியும் கண்டுபிடிக்கமுடியவில்லை என்றால், ‘நீங்கள் இப்போது எங்கு இருக்கிறீர்கள்?’ என்று கேட்டு அவர்கள் சொல்லும் பதிலில் இருந்து விடை காணலாம். சிலசமயம் அப்படி கேட்ககும்போது அவர்கள் ‘அங்கேயே இருக்கிறேன்.’ என்று சொல்லிவிட்டால் திண்டாட்டம் தான்.

  பதிலளிநீக்கு
 4. ரொம்ப சிம்பிள். தெரிஞ்சவங்களுக்கெல்லாம் தலைக்கு ஒரு லட்சம்னு பணம் கொடுத்துடுங்க!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவர்களும் அந்தப் பணத்தைத் திருப்பிக்கொடுக்கமாட்டார்கள், நாமும் அவர்களை மறக்க மாட்டோம். நல்ல யோசனைதான். ஆனால் அப்படி பணம் கொடுத்து அவர்களை நினைவு வைத்துக்கொண்டு நாம் என்ன சாதிக்கப்போகிறோம்?

   நீக்கு
 5. என்ன செய்வது ஐயா?
  அவசரகால உலகமாகிவிட்டதே
  தம +1

  பதிலளிநீக்கு
 6. பல பேருக்கு இவ்வாறான மறதி இருப்பது இயற்கையே. தற்போது உறவுகள் அந்நியப்பட்டு வரும்நிலையில் இவை போன்றவை நிகழ்வுகளை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

  பதிலளிநீக்கு
 7. கூடப் படித்தவர்களை கூட என்னால் சட்டென்று அடையாளம் காண முடிவதில்லை! அவர்கள் நியாபகம் வைத்துக் கூப்பிடுவார்கள்! இது வரமா? சாபமா? புரியாத ஒன்று!

  பதிலளிநீக்கு
 8. முதல் சந்தேகம் பலஹீனமா பலவீனமா? எனக்கும் இம்மாதிரி அனுபவங்கள் ஏற்பட்டு வழிந்ததுண்டு. ஒரு முறை என்னால் அடையாளம் காண இயலாத ஒருவர் என்னை வைது கொண்டே சென்றதும் உண்டு, வயசானால் இதெல்லாம் அடிக்கடி நிகழ வாய்ப்பு இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பலஹீனம் - சம்ஸ்கிருதச் சொல். அந்த "ஹீ" யை "கீ" என்று எழுதுவதால் அது தமிழ்ச்சொல் மாதிரி தோன்றலாம். அவ்வளவுதான்.

   நான் கொஞ்சம் சம்ஸ்கிருதம் படிக்கிறேன். தமிழில் இருக்கும் நிறைய சொற்கள் சம்ஸ்கிருதத்திலும் இருக்கின்றன. எது முதல் என்பதில் பல குழப்பங்கள் இருக்கின்றன.

   நீக்கு
 9. வயது கூடும்போது மறதியும் சேர்நேது கொள்வது இயல்புதான் ஐயா.

  பதிலளிநீக்கு
 10. ஐயா

  நீங்கள் நாதஸ்வரம் தொடர் பார்ப்பதாகத தெரிகிறது. ஏகப்பட்ட ஆட்களை வைத்துக்கொண்டும் இன்னாருக்கு பதில் இன்னார் என்று மாற்றிக்கொண்டும் இருப்பதைப்பார்த்து நிஜ வாழ்க்கையில் இன்னார் சில வருடங்கள் சென்ற பின் இப்படி ஆனார் என்று ஊகிக்க முடியவில்லை.

  இதற்குத் தான் பெண்கள் அதுவும் குறிப்பாக மனைவி உடன் இருக்க வேண்டும். அவர்கள் தாம் சிக்கலான உறவுகளையும் உடன் அடையாளம் கண்டு கொள்வார்கள்,(சிக்கலான கோலம் எல்லாம் போடுறாங்கல்ல)
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
 11. எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் நிறையவே உண்டு.

  அதுவும் நான் ஒரு மிகப்பெரிய நிறுவனத்தில், அதுவும் சுமார் 15000 முதல் 20000 வரை ஊழியர்கள் பணியாற்றிய நிறுவனத்தில், பல்லாண்டுகள் முக்கியமானதொரு ஸ்தானத்தில் இருந்து பணியாற்றியதால் [பணப்பட்டுவாடாக்கள் நடக்கும் இடத்தில்] பலருக்கும் என்னை மிக நன்றாகத்தெரியும்.

  ஆனால் எனக்கு அதில் ஒரு 500 அல்லது 1000 பேர்களை மட்டுமே என் நினைவுகளில் வைத்துக்கொள்ள முடிகிறது. அதிலும் சுமார் ஒரு 100 பேர்களை மட்டுமே அவர்களின் பெயர், இலாகா, வகித்த பதவி, போன்றவற்றுடன் சொல்லக்கூடிய ஞாபக சக்தி ஓரளவுக்கு நன்றாகவே உள்ளது.

  இப்போது நான் பணி ஓய்வு பெற்று விட்டாலும் கூட, BHEL மருத்துவமனைக்குச் சிகிச்சை பெற நான் செல்லும்போது, அங்கு என்னைப்போலவே சிகிச்சைக்கு வரும் ஒரு 50 நபர்களையாகவது சந்திக்க நேருகிறது.

  அவர்களில் பலரும் எனக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, எப்படி சார் இருக்கீங்க ? நலம் தானே ? இப்போ வீடு எங்கே ? பிள்ளைகளெல்லாம் நல்லா இருக்காங்களா ? போன்ற பல கேள்விகள் கேட்கிறார்கள். எனக்கு அவர்களில் ஓரிருவரை மட்டுமே, அவர்களின் பெயருடன் அவர் பணியாற்றிய இலாகா / பதவி போன்ற விபரங்களுடன் சொல்ல முடிகிறது.

  எனக்கான மெமரி பவர் டெஸ்ட் போல இவற்றை நான் கருதி மகிழவும் முடிகிறது.

  போகப்போக எப்படி இருக்குமோ. இப்போதைக்கு ஏதோ ஞாபகம் வந்து பிறரை நன்கு அடையாளம் காண முடிகிறது. அதுவரை சந்தோஷமே. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு