திங்கள், 8 ஜூன், 2015

மனம் மயங்குதல் அல்லது கலங்குதல்

                                      Image result for confusion images
சுமைதாங்கி எனும் சினிமாவில் கண்ணதாசன் எழுதி எம்.எஸ் விஸ்வநாதன் இசையமைத்து பிபிஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் நிறையப் பேருக்கு நினைவிருக்கலாம்.

மயக்கமா கலக்கமா  மனதிலே குழப்பமா   வாழ்க்கையில் நடுக்கமா


                         

கண்ணதாசன் மிகுந்த பொருட்செறிவோடு எழுதிய பாடல் இது.

மயக்கம் என்பது இல்லாததை இருப்பதாக அல்லது இருக்கும் ஒன்றை வேறொன்றாக காணும் மனநிலை. இந்த நிலையில் இருக்கும் ஒருவன் எந்த ஆக்கபூர்வமான செயலையும் செய்யும் சக்தி அற்றவனாகிறான். மாயை என்னும் சொல்லிலிருந்து வந்தது மயக்கம்.

கலக்கம் என்பது மனம் தெளிவான நிலையை இழந்து நிற்கும் நிலை. இந்த நிலையில் எது சரி, எது தவறு என்று பகுத்தறியும் ஆற்றலை ஒருவன் இழந்து விடுகிறான்.

இந்த இரண்டு நிலைகளும்,  ஒருவன் எதிர்பாராத அல்லது மிகப்பெரிய வாழ்க்கைப் பிரச்சினைகள் ஏற்படும்போது அடையும் நிலைகளாகும். இது சாதாரணமாக பெரும்பலானோருக்கு ஏற்படும் அனுபவமே. இதிலிருந்து வெளிவந்து அந்த பிரச்சினையின் தீர்வுக்காக செயல் புரிபவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகிறான்.

இந்த மயங்குதல் மற்றும் கலங்குதல் நிலையைக் கடப்பது எப்படி என்பது வாழ்க்கையின் ஒரு பெரும் சவாலாகும். மன திடம் உள்ளவர்களுக்கு இது சுலபம். மற்றவர்களுக்கு இது கடினம். ஆனால் எல்லோருக்கும் பொதுவான சில தீர்வுகள் இருக்கின்றன. அவரவர்களுக்குப் பிடித்தமானவற்றைக் கடைப்பிடிக்கலாம்.

முழுவதுமாக ஆண்டவன் பேரில் இந்தச் சுமையை இறக்கி வைத்து விடுவது. இது கடவுள் பக்தி உள்ளவர்களால் மட்டுமே முடியக்கூடியது. ஆண்டவன் நேரில் வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பானா என்ற கேள்விக்குப் பதில் இதுதான். ஆண்டவன் நேரில் வராவிட்டாலும் பிரச்சினை தீர்வதற்கு உண்டான ஏதாவது ஒரு வழியைக் காண்பிப்பான்.

உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் யாராவது உதவிக்கு வந்து இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம். அல்லது இரண்டொரு நாளில் உங்களுக்கே ஒரு வழி தோன்றலாம். எப்படியோ பிரச்சினை தீர்ந்து விடும். சிறிது நாட்கள் கழித்து நீங்களே நினைப்பீர்கள். "இந்தப் பிரச்சினைக்குப் போயா நாம் இவ்வளவு வருந்தினோம்" என்று.

அடுத்து உங்களுக்கு வேண்டிய பெரியவர்கள் யாராவதிடம் ஆலோசனை கேட்கலாம். இதை ஒரு தன்மானப் பிரச்சினையாகக் கருத வேண்டியதில்லை. அடுத்தவரிடம் யோசனை கேட்பதா என்று நினைக்கக் கூடாது. உடல் தலம் குன்றினால் டாக்டரிடம் போகிறோம். மனதில் கலக்கம் இருந்தால் அடுத்தவரிடம் யோசனை கேட்பதில் என்ன தவறு? அவர்கள் இந்தப் பிரச்சினையை பாரபட்சமில்லாமல் அணுகி ஒரு தீர்வு கண்டுபிடிக்கக் கூடும்.

இந்த நிலையில் ஒரு உண்மையை நீங்கள் உணர வேண்டும். இந்தப் பிரச்சினையில் உங்களால் ஏன் உடனடியாக ஒரு முடிவு எடுக்க முடியவில்லை என்றால் அந்தப் பிரச்சினை நீங்கள் சம்பந்தப்பட்டது. அதனால் நீங்கள் அதனுடன் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டு இணைந்திருக்கிறீர்கள். அதனால் நீங்கள் பாரபட்சமில்லாமல் அந்தப் பிரச்சினையை அணுக முடியவில்லை.

இங்குதான் நான் முந்தைய பதிவில் குறிப்பிட்ட தாமரை இலைத் தண்ணீர் உதாரணம் பொருத்தமாக இருக்கும். அடுத்து நான் எழுதிய "தள்ளிப் போடுதல்" உத்தியும் இந்த மாதிரி பிரச்சினைகளைத் தீர்க்க உதவும். இரண்டு நாளைக்கு ஒன்றும் செய்யாமல் இருந்தால் மூன்றாம் நாள் உங்களுக்கே ஏதாவது ஒரு நல்ல யோசனை தோன்றும்.

ஒரு முனிவர் ஒரு ராஜாவிற்குச் சொன்ன புத்திமதியை இங்கு நினைவு கூர்கிறேன். "இதுவும் கடந்து போகும்". இதுதான் அவர் சொன்ன புத்திமதி. எந்தப் பிரச்சினை ஆனாலும் காலம் அதை மாற்றி விடும் என்பதே அதன் கருத்து.

நடைமுறைக்கு பெரிதும் உதவும் எளிமையான இன்னும் ஒரு வழியைச்  சொல்கிறேன் கேளுங்கள். "சாமியின் மன அலைகள்" என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதைத் தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க அந்த தளத்தில் வழி சொல்லப்பட்டிருக்கும்.

எல்லோரும் இன்பமாக வாழ வேண்டும் என்பதே என் ஆசை.

19 கருத்துகள்:

  1. எனக்கும் மிகவும் பிடித்த பாடல்
    மயக்க கலக்க நிலையில் பாடும் அதே கதாபாத்திரம்
    மிகவும் நேர்மறை எண்ணத்துடன் பாடும் பாடல்
    "மனிதன் என்பவன் தெய்வமாகலாம்.."

    ஏறக்குறைய தாங்கள் விளக்கிப்போகும்
    கருத்துக்கு அந்தப் பாடல் ஒத்துப்போகும்

    விரிவான அருமையான இன்றைய நிலையில்
    தேவையான பகிர்வினைத் தந்தமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. //நடைமுறைக்கு பெரிதும் உதவும் எளிமையான இன்னும் ஒரு வழியைச் சொல்கிறேன் கேளுங்கள். "சாமியின் மன அலைகள்" என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதைத் தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க அந்த தளத்தில் வழி சொல்லப்பட்டிருக்கும்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

    வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க இதுவே மிகச்சுலபமான வழி என்று தோன்றுகிறது. அதனால் நான் இதையே செய்ய உள்ளேன்.

    மிகச்சுலபமான வழிகாட்டியுள்ள தங்களின் இந்தப்பதிவுக்கு என் நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  3. உனக்கும் கீழே உள்ளவர் கோடி...
    நினைத்து பார்த்து நிம்மதி நாடு...

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு. இந்தப் பதிவு படித்த உடன் எனக்கு நினைவுக்கு வந்த ஒரு பாடல் சொல்லட்டுமா?

    "மலை போலே வரும் சோதனை யாவும் பனி போல் நீங்கி விடும்..."

    பதிலளிநீக்கு
  5. அமரர் கவிஞர் வாலி அவர்கள் துயர் தாங்காமல் ஒரு விபரீத முடிவுடன்
    நின்று கொண்டிருந்த போது இப்பாடலை கேட்டு மாற்றம் பெற்று பின்பே வாழ்வில் ஏற்றம் பெற்றதாக நண்பர் ஒருவர் சொன்னார்.
    சரி
    "சாமியின் மன அலைகள்" என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதைத் தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க அந்த தளத்தில் வழி சொல்லப்பட்டிருக்கும் (குசும்புதானே)
    ஆமா இப்ப எனக்கு அவசரமா (அதிகமில்லை ஜெண்டில் மேன்) 2 லட்சம் தேவைப்படுகிறது. அதனால வங்கிக்காரங்காகிட்டயெல்லாம் பேசியாச்சு 1 கியாரண்டி கையெழுத்து போடணும். எப்ப வர்ரீங்க?????!!!! நைனா .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ப்பூ, 2 லட்சம் கடனெல்லாம் ஒரு கடனா ஐயா? வாங்கினா 2000 கோடி கடன் வாங்கணும். அப்படி வாங்கினா, அதுக்கு வட்டி கட்டத்தேவையில்லை, அசலையும் கூடத் திருப்பிக் கட்டவேண்டியதில்லை. பிரதம மந்திரியைப் புடிங்க. இந்த மாதிரி கடன் எல்லாம் அவர் சிபாரிசில்தான் சுலபமாகக் கிடைக்கும்.

      நீக்கு
    2. ஹஹஹஹஹஹ்ஹ் மிகவும் ரசித்தோம் கருத்தையும் உங்கள் பதிலையும்...

      நீக்கு
  6. எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் இதுவும் ஒன்று ஐயா
    நன்றி
    தம +1

    பதிலளிநீக்கு
  7. மயக்கமா கலக்கமா பாடல் அனைவருடைய மனதில் பதிந்த பாடல். அப்பாடலைப் பற்றிய விவாதம் நன்று. நடைமுறைக்குரிய எளிதான தங்களின் யோசனையை நான் முழுமையாக ஏற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. //"சாமியின் மன அலைகள்" என்றொரு வலைத்தளம் இருக்கிறது. அதைத் தவறாமல் படித்து வந்தால் வாழ்க்கையில் எந்தச் சிக்கல் வந்தாலும் சமாளிக்க அந்த தளத்தில் வழி சொல்லப்பட்டிருக்கும்.//

    சரியாய் சொன்னீர்கள். அதைத்தான் நாங்கள் செய்துகொண்டு இருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  9. ஐயா

    மயக்கமா கலக்கமா எழுதிய அதே கண்ணதாசன் தான் மயக்கம் எனது தாயகம் என்று கூறினார். அந்த மயக்கம் இருந்ததால் தான் அவர் இது போன்ற நினைவில் நிற்கும் பாடல்களை எழுத முடிந்தது.

    ஆக மயக்கம் என்பதற்கு பல பொருள் உண்டு. மாயையால் வந்த மயக்கம் (ஏமாறுவது), டாஸ்மாக் மயக்கம் (பின் விளைவகளை ஆராயாமல் செய்யும் செயல்கள்) அதிர்ச்சியில் சுய நினைவு இழத்தல், வியத்தல் (பெண் அழகு கண்டு மயக்கம் அடைவது) செயலற்ற தன்மை (தாங்கள் கூறியது) என்று பல மயக்கங்கள் உண்டு.

    ஆனால் ஒரு உண்மை கூறுகிறேன். நீங்கள் உங்களுடைய மன அலைகள் பதிவுகளால் வாசகர்களாகிய எங்களை மயக்கி வைத்திருக்கிறீர்கள்.இந்த மயக்கத்திற்கு மாற்று இல்லை.
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  10. அன்பு வலைப்பூ நண்பரே!
    நல்வணக்கம்!
    இன்று 08/06/2015 அன்று முதலாம் ஆண்டினை நிறைவுசெய்யும் "குழலின்னிசை"க்கு
    தங்களது அன்பான ஆதரவும், கருத்தும், அளித்து அகம் மகிழ்வுற செய்ய வேண்டுகிறேன்.

    முதலாம் ஆண்டு பிறந்த நாள் அழைப்பிதழ்
    அன்பின் இனிய வலைப் பூ உறவுகளே!
    "குழலின்னிசை" என்னும் இந்த வலைப் பூ!
    உங்களது மனம் என்னும் தோட்டத்தில் மலர்ந்த மகிழ்ச்சிகரமான நாள் இன்று.
    ஆம்!
    கடந்த ஆண்டு இதே தினத்தன்றுதான் 08/06/2014, "குழலின்னிசை" வலைப்பூ மலர்ந்தது.
    http://kuzhalinnisai.blogspot.com/2015/06/blog-post_7.html#comment-form
    சரியாக ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் இந்த வலைப்பூவானது, நல் இசையை நாள்தோறும் இசைத்து, அனைவருக்கும் நலம் பயக்குவதற்கு, உள்ளன்போடு உங்களது நல்லாசியைத்தாருங்கள்.
    தங்களது வருகையை எதிர் நோக்கும் வலைப்பூ நண்பர்கள்.
    மற்றும்!
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com
    tm 8

    பதிலளிநீக்கு
  11. எனக்கு மிகவும் பிடித்த பாடல்!

    பதிலளிநீக்கு
  12. உங்கள் ஆலோசனைகள் அனைவரும் இன்பமாய் வாழ உதவட்டும்.

    பதிலளிநீக்கு
  13. ஒரே பாடல்.... எத்தனை ரியாக்‌ஷன்ஸ்...அதேபோல்தான் மனக்கலக்கங்களும் துயர்களும். உங்கள் பதிவைத் தவறாமல் படித்து வருகிறேன்

    பதிலளிநீக்கு
  14. நல்ல டெக்னிக்தான் ஐயா அப்படியே தமிழ் மணம் ஓட்டும் போடனும் சொல்லலையா ?
    தமிழ் மணம் 11

    பதிலளிநீக்கு
  15. அருமையான பதிவு. அந்தப்பாடலும் அப்படியே!

    ஹஹஹஹ இறுதியில் சொன்னீர்கள் பாருங்கள் அதுதான் ஹைலைட்...ஹை இந்த டெக்னிக் கூட நல்லாத்தான் இருக்கு!!!!

    உங்கள் பதிவுகளை இடையில் வேலைப்பளுவால் விட்டாலும் தொடர்ந்து படித்து வருகின்றோம்...

    பதிலளிநீக்கு