புதன், 19 ஆகஸ்ட், 2015

நானும் மாணவர்களின் கட்டுப்பாடும்.

                                       Image result for அக்ரி காலேஜ் கோவை

மாணவர்களின் கடமை படிப்பது மட்டும்தான். என்னென்ன படிக்கவேண்டும்? பாடம் மட்டுமல்ல. கட்டுப்பாடு, ஒழுங்கு, நேரம் தவறாமை, மற்றவர்களிடம் அனுசரித்துப் போதல், ஆசிரியரிடம் மரியாதை இவை எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும். இதுவே என் தாரக மந்திரம்.

விவசாயக் கல்லூரியில் பெரும்பாலான மாணவர்கள் விடுதியில் தங்கிப் படிப்பார்கள். ஆகவே அவர்கள் ஏறக்குறைய 24 மணி நேர மாணவர்கள். இந்த வாழ்வு முறையில் அவர்கள் வாழ்க்கையின் நுணுக்கங்களை முழுவதுமாகக் கற்றுக் கொள்கிறார்கள். விவசாயக் கல்லூரியில் படித்த மாணவர்கள் விவசாயம் மட்டும் அல்லாது பல்வேறு துறைகளிலும் (IAS, IPS, IRS, Banking, Social Work)ஈடுபட்டு பிரகாசிக்கிறார்கள்.

இதற்கெல்லாம் முதல் காரணம் ஆசிரியர்களின் ஈடுபாடே. ஏதோ வந்தோம், வகுப்பு எடுத்தோம், சென்றோம் என்று இல்லாமல் மாணவர்களின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் ஆசிரியர்கள் பொறுப்பெடுத்துக்கொண்டார்கள். இதில் நான் கடைப்பிடித்த சில கொள்கைகள் இன்றைய நாளில் செல்லுபடியாகாது. ஆனால் அன்று இருந்த சூழ்நிலையில் என் கொள்கைகள் வெற்றிகரமாக நடந்தன.

அப்போது விவசாயக் கல்லூரி பல்கலைக் கழகமாக உருவாகவில்லை. சென்னை பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆண்டு தேர்வுகளெல்லாம் பல்கலைக்கழகமே நடத்தும். கல்லூரியில் இருக்கும் விரிவுரையாளர்கள் உள் தேர்வு அதிகாரிகளாகவும், வெளி மாநிலத்து வேளாண்கல்லூரிகளிலிருந்து விரிவுரையாளர்களை வெளித் தேர்வு அதிகாரிகளாகவும் நியமிப்பார்கள். செயல் முறைத்தேர்வை இருவரும் சேர்ந்து நடத்துவார்கள்.  எழுத்துத்தேர்வின் விடைத்தாள்கள் வெளித்தேர்வு அதிகாரிகளால் திருத்தப்படும்.

இந்த மதிப்பெண்கள் எல்லாம் சென்னை பல்கலைக் கழகத்திற்கு அனுப்பப்படும். அங்கு இந்த வெளித் தேர்வு அதிகாரிகள் மட்டும் ஒரு நாள் சந்தித்து இந்த முடிவுகளை ஆராய்ந்து முடிவு செய்வார்கள், தேவைப்படுபவர்களுக்கு ஓரிரு மதிப்பெண்கள் தேவையானால் இங்கே அதைச் சேர்ப்பதுண்டு. குறிப்பாக மொத்தம் உள்ள ஆறு பாடங்களில் ஐந்து பாடங்களில் ஒரு மாணவன் தேர்வு பெற்றிருக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். ஒரு பாடத்தில் மட்டும் ஒரு மதிப்பெண் குறைகிறது. அதைச்சேர்த்தால் அவன் முழுத்தேர்வு பெற்ற விடுவான். அந்த சூழ்நிலையில் அந்த ஒரு மதிப்பெண்ணைச் சேர்க்க அந்தக் குழுவிற்கு அதிகாரம் உண்டு.

ஒரு கட்டத்தில் ஒரு வெளி தேர்வு அதிகாரி கடைசி கட்டத்தில் தன்னால் வரமுடியவில்லை என்று பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதி விட்டார். போதிய கால அவகாசம் இல்லாததினால் பல்கலைக் கழகம் உள்தேர்வு அதிகாரியாக இருந்த என்னை வெளித்தேர்வு அதிகாரியாக நியமனம் செய்தது. அதில் இங்குள்ள பலருக்கு, (மேல் அதிகாரிகள் உட்பட) என் மேல் பொறாமை. ஏனெனில் கல்லூரியிலேயே பாடம் நடத்தும் ஒருவரை வெளித்தேர்வு அதிகாரியாக நியமனம் செய்வது அதுதான் முதல் தடவை. இது ஒரு பெரிய கௌரவம். மாணவர்கள் மத்தியில் என்க்கு ஒரு பெரும் மரியாதை கலந்த மதிப்பு கூடியது.

பல்கலைக் கழகம் நடத்தும் தேர்வுகளில் விவசாயக் கல்லூரியின் அதிகாரிகளின் தலையீடு எதுவும் இருக்காது. அதனால் தேர்வு அதிகாரிகள் சதந்திரமாக செயல்புரிய முடிந்தது. ஆனால் யாரும் மனச்சாட்சிக்கு விரோதமாக மதிப்பெண் போடுவதோ, குறைப்பதோ செய்யமாட்டார்கள். அதிகமாகப்போனால் ஒருவனுக்கு சலுகை காட்டமாட்டார்கள். அவ்வளவுதான்.

இந்த சூழ்நிலையில் வருட ஆரம்பத்தில் நான் என் வகுப்புகளை ஆரம்பிக்கு முன் மாணவர்களுக்கு சில குறிப்புகள் கொடுப்பேன்.

1. என் வகுப்புகளுக்கு மாணவர்கள் கட்டாயம் வரவேண்டும். 50 சதத்திற்கு குறைவாக வரும் மாணவர்கள் தேர்வு பெறமாட்டார்கள்.

2. 95 சதம் வருகை புரிந்த மாணவர்கள் தேர்வுக்கு வந்தால் போதும், அவர்கள் பேப்பரில் என்ன எழுதிக் கொடுத்திருந்தாலும் தேர்வு பெறுவார்கள்.

3. என் வகுப்புகளிலோ அல்லது மாணவர் விடுதியிலோ அல்லது கல்லூரி வளாகத்தினுள் எங்கேயாவதோ ஏதாவது கலாட்டா அல்லது சண்டையில் கலந்து கொண்டிருந்தால் அவர்கள் தேர்வில் கட்டாயம் வெற்றி பெற மாட்டார்கள்.

4. இந்த விதிகளுக்கு உற்பட்டு நல்ல மதிப்பெண்கள் வேண்டுபவர்கள் அவர்களாக முயற்சி செய்து வாங்கிக் கொள்ளவேண்டியது.

இந்த விதிகளைச் சொல்லிவிட்டுத்தான் பாடங்களை ஆரம்பிப்பேன். வருடத்திற்கு ஒன்றிரண்டு மாணவர்கள் அவர்களாகவே தேர்வில் வெற்றி பெறாவிட்டலும் நான்தான் அவர்களை வேண்டுமென்றே தோல்வி பெறச்செய்தேன் என்று வதந்தி பரப்புவதுண்டு. அதனால் என் பேரில் எல்லா மாணவர்களுக்கும் ஒரு பயம் உண்டு. நான் அவைகளைக் கண்டுகொள்ளமாட்டேன்.

இவ்வாறாக மாணவர்களை பல வகையில் வளர்வதற்கு ஆசிரியர்கள் பங்களித்தார்கள். நானும் என் பங்களிப்பை அர்ப்பணித்தேன்.

15 கருத்துகள்:

  1. அனைத்து விஷயங்களிலும்
    பொது நல நோக்கோடும்
    அதிக அக்கறை கொண்டிருப்பதும்
    தங்களின் உயர்வுக்கும் நிறைவுக்கும்
    காரணமாயிருக்கிறது
    மிக்க மகிழ்ச்சி
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. //விவசாயக் கல்லூரியில் படித்த மாணவர்கள் விவசாயம் மட்டும் அல்லாது பல்வேறு துறைகளிலும் (IAS, IPS, IRS, Banking, Social Work)ஈடுபட்டு பிரகாசிக்கிறார்கள்.

    இதற்கெல்லாம் முதல் காரணம் ஆசிரியர்களின் ஈடுபாடே.//


    உண்மைதான் ஐயா. எங்கள் ஆசிரியர்கள் ஈடுபாட்டுடன் பாடம் நடத்தி எங்களை கட்டுப்பாடுகளுடன் வழி நடத்தியதால் தான் எங்களால் எந்த துறையிலும் பிரகாசிக்க முடிந்தது. தங்களைப்போன்ற ஆசிரியர்கள் இப்போது இருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தங்களின் மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. மாணவர்கள் மீதான தங்களது அக்கறையும் பொறுப்புணர்வும் எங்களை நெகிழ வைக்கின்றது. ஆசிரியர் மாணவர் பண்பாடு என்பது அப்போது அவ்வாறிருந்தது. ஆனால் இப்போதோ?

    பதிலளிநீக்கு
  4. நல்ல விதிமுறைகள்! பள்ளியிலும் இப்படி சில ஆசிரியர்களை பற்றி மாணவர்கள் வதந்தி பரப்புவது உண்டு. பாவம் அவர்கள் எந்த மாணவனையும் தோல்வி அடைய செய்திருக்கமாட்டார்கள். ஆனால் கண்டிப்பான நடத்தை விதிகள் அவர்களுக்கு அந்தப்பெயரை ஏற்படுத்திவிடுவதுண்டு!

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் சொல்வதுபோல இந்தக் காலத்தில் இதுபோலச் செய்ய முடியாதுதான். மாணவர்களுக்கு ஆசிரியரிடம் தேவையான அளவு பயம் இருக்க வேண்டும். மரியாதையும் இருக்க வேண்டும். அது அந்தக் காலத்தில் இருந்திருக்கும்.

    பதிலளிநீக்கு
  6. தங்கனின் பொருப்புணர்ச்சிக்கு எமது சல்யூட் ஐயா
    தமிழ் மணம் 4

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சல்யூட்டிற்கு நன்றி. மிலிடரியில் ஒருவர் சல்யூட் அடித்தால் அடுத்தவரும் பதில் சல்யூட் அடிக்கவேண்டும் என்பது சட்டம்.

      நீக்கு
  7. அர்ப்பணிப்புடன் ஆசிரியர் பணியின் பங்களிப்பை உணர்ந்து
    அளித்தமைக்கு பாராட்டுக்கள்..!

    பதிலளிநீக்கு
  8. ஆசிரியப் பணி என்பது அர்ப்பணிப்பு சம்பந்தப்பட்டது. ஒரு நல்லாசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  9. மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்பட்ட உங்களுக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும்....

    பதிலளிநீக்கு
  10. நல்ல அர்ப்பணிப்பு...
    ஆசிரியர் பணியே பாலசுப்ரமணியன் ஐயா சொன்னது போல் அர்ப்பணிப்பு வாழ்க்கைதானே....
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. டீச்சின் ப்ரொஃபஷன் இஸ் தெ நோபில் ப்ரொஃபஷன்...அதைத் தாங்கள் செவ்வனே செய்திருக்கின்றீர்கள் ஐயா. ஆனால் என்ன உங்கள் விதி முறைகள் இன்று செல்லுபடியாகாது...

    கீதா: எனது கணவர் உங்கள் ஊட் பக்கத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். வகுப்பில் ஒரு மாணவன் பிற மாணவர்களைக் கவனிக்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டிருக்க, மற்ற மாணவர்கள் கணவரிடம் புகார் கொடுக்க, அவர் அவனைக் கூப்பிட்டு கண்டிக்க, அவனோ"என்னை யார்னு நினைச்சீங்க" என்று மிரட்ட கணவரும் உன் உதார் இங்கு வேலைக்காகாது என்று பதிலுக்கு எகிர அடுத்த நாள் அவன் தனது பெற்றோர்களை அழைத்து வந்து கல்லூரி முதல்வரிடம் பேச, அவனது தந்தை பெரிய பணியில், , முக்கியமான பொறுப்பில் இருப்பது தெரிய வர பின்னர் என்ன நடந்திருக்கும் என்பதை நான் இங்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை...உங்களுக்கே தெரிந்திருக்கும்...கணவர் ரிசைன் செய்யும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார். அதாவது நாங்கள் துரத்தும் முன் நீ வெளியேறு என்பது போல்...ஆனால் நம்ப மாட்டீர்கள் 20 மாணவ மாணவிகள் இங்கு சென்னைக்கு வீட்டுக்கே வந்து விட்டார்கள் "சார் மீண்டும் வந்து சேருங்கள். ஒரு நல்ல ஆசிரியரை நாங்கள் இழக்கின்றோம்..இதுவரை இப்படிப்பட்ட ஆசிரியரை எங்களை வழி நடத்தும் ஆசிரியரைக் கண்டதில்லை என்று...ஆனால் மீண்டும் சேர முடியாதே....இப்படித்தான் நிறைய கல்லூரிகளில் ஐயா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கவ்ர்மெ ந்த்ட் ஆபீசராக இருந்த தால் எனக்கு அதிக த்ய்ரியம் இருந்தது.

      நீக்கு
    2. //நான் கவ்ர்மெ ந்த்ட் ஆபீசராக இருந்த தால் எனக்கு அதிக த்ய்ரியம் இருந்தது//

      இந்த பதில் என்னுடைய மொபைல் போனிலிருந்து போடப்பட்டது. சரியாக வரவில்லை. மன்னிக்கவும்.

      என் கல்லூரியில் இந்த மாதிரி பிரச்சினைகள் வந்ததில்லை. அரசு வேலையென்பதால் அதிக பட்சம் ஒரு மாற்றுதல் வரும் அவ்வளவுதான், வேலையை விட்டு துரத்த ஒருவராலும் முடியாது.

      நீக்கு