வெள்ளி, 23 டிசம்பர், 2016

சர்க்கரை நோயைக் கையாளும் வழிகள்

இது ஒரு மீள் பதிவு


சர்க்கரை நோயைக் கையாளும் வழிகள்


சர்க்கரை நோயைப் பற்றி பல மருத்துவர்கள் குறிப்பாக டாக்டர் முருகானந்தம் பல பதிவுகள் எழுதியிருக்கிறார். அந்தப் பதிவுகள் மருத்துவ ரீதியில் மிகவும் துல்லியமானவை. பல மருத்துவ ஆராய்ச்சிகளின் முடிவுகளைத் தொகுத்து அதன் சாராம்சங்களை கொடுத்துள்ளார்.

ஆனால் சாதாரண சர்க்கரை நோய் உள்ள, சாதாரண மனிதனுக்கு அந்த குறிப்புகளை மனதில் வாங்கி நடைமுறைப் படுத்துவது கொஞ்சம் சிரமமான சமாச்சாரம். அதற்காக, என்னைப் போல் உள்ள பாமர மக்களுக்கும் புரியும்படி சிறு குறிப்புகள் கொடுத்திருக்கிறேன். இவைகளைச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று கேட்கிறீர்களா? 20 வருடகாலம் சர்க்கரை நோய் அனுபவம் எனக்கு இருக்கிறது. அதைவிட வேறென்ன வேண்டும்.

இவை யாவும் நான் கற்றுக்கொண்ட நடைமுறை உண்மைகள். ஆனால் இவைகளைக் கடைப்பிடிக்கும்போது ஏதாவது சிக்கல்கள் வருகிற மாதிரி தோன்றினால் உடனே உங்கள் வழக்கமான டாக்டரைப் பார்த்து விடுங்கள்.

1. நீங்கள் சர்க்கரை நோயாளி என்பதை முதலில் மறந்து விடுங்கள். கவலை சர்க்கரை நோயை அதிகரிக்கும்.

2. எப்போதும் போல் எல்லா உணவுகளையும் சாப்பிடலாம். ஆனால் பழைய அளவில் பாதி மட்டும் சாப்பிடவேண்டும். அதாவது முன்பு ஒரு டஜன் இட்லி சாப்பிடுபவராக இருந்தால் இப்போது அரை டஜன் மட்டும் சாப்பிடவும்.

3. நீங்கள் காப்பிப் பிரியரா? சர்க்கரை இல்லாத காப்பி குடிப்பதற்குப் பதிலாக விஷத்தை குடித்து விடலாம். நல்ல காப்பி குடிக்காமல் வாழும் வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? என்ன இரண்டு ஸ்பூன் சர்க்கரைக்குப் பதிலாக ஒரு ஸ்பூன் போட்டுக் கொள்ளுங்கள். ஒரு மாதத்தில் பழகி விடும்.

அதற்குப்பிறகு ஒரு ஸ்பூனுக்குப் பதிலாக அரை ஸ்பூன் சர்க்கரை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்த ஒரு மாதத்தில் இதுவும் பழகி விடும்.

அப்புறம் மற்றவர்கள் குடிக்கும் காப்பி பாயசம் மாதிரி இருக்கும். என்னய்யா காபி குடிக்கறீங்களா, இல்லை பாயசம் குடிக்கிறீங்களா என்று மற்றவர்களைக் கலாய்க்கலாம்.

4.கல்யாணம் மாதிரி விசேஷங்களுக்குப் போனால் விருந்தில் நன்றாக ஒரு வெட்டு வெட்டுபவரா நீங்க? கவலையே படாதீங்க. கல்யாணங்களுக்குப் போவதை அடியோடு நிறுத்துங்கள்.

5. டாக்டர் சொல்லும் மருந்துகளைத் தவறாது டாக்டர் சொன்ன முறைப்படி சாப்பிட்டுவிடுங்கள். இதில் எந்த மாற்றமும் கூடாது.

6.பசி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து "லோ சுகர்" ஆகிவிடும். அப்போது கைகால்களில் ஒரு மாதிரி நடுக்கம் வந்து விடும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் மயக்கம் கூட வரலாம். இந்த நிலை வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.

7. மாதம் ஒரு முறை தவறாமல் ரத்தத்தின் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள். வெறும் வயிற்றில் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு 150 க்கு கீழ் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை. 100 இருந்தால் அன்று நீங்கள் ஒரு ஸ்வீட் சாப்பிடலாம்.

8. எங்கேயாவது ஸ்வீட் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட நேர்ந்தால் இரண்டாக சாப்பிட்டு விடுங்கள். அப்போதுதான் உங்கள் மனதில் குற்ற உணர்வு அதிகரித்து அப்புறம் கொஞ்ச நாளைக்கு ஸ்வீட் பக்கம் போகாமலிருப்பீர்கள்.

9. வீட்டில் மற்றவர்கள் எல்லாம் வக்கணையாக, விதம் விதமாக ஸ்வீட்டுகள் செய்து சாப்பிடுவார்கள். அவர்கள் மேல் வரும் கொலைவெறியை எப்படியாவது கட்டுப் படுத்துங்கள். ஜெயில் களி ரொம்ப மோசமாயிருக்கும்.

10. தினமும் தவறாமல் முக்கால் மணி நேரம் நடைப் பயிற்சி செய்யுங்கள். இது மிகவும் அவசியம்.

அவ்வளவுதானுங்க. ஜாம் ஜாமுன்னு சர்க்கரையில்லா வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

17 கருத்துகள்:

  1. முதல் பாயிண்ட் மிகவும் முக்கியம்... அதற்காக மற்றதெல்லாம் ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  2. // இவைகளைச் சொல்ல எனக்கு என்ன தகுதி இருக்கிறதென்று கேட்கிறீர்களா? 20 வருடகாலம் சர்க்கரை நோய் அனுபவம் எனக்கு இருக்கிறது. அதைவிட வேறென்ன வேண்டும் //.

    படித்தவுடன் சிரித்து விட்டேன். நல்லவேளை அருகில் யாரும் இல்லை. சர்க்கரை நோய் பார்க்கும் டாக்டர்களுக்கும் முன் அனுபவமாக அவர்களுக்கும் சர்க்கரை இருக்க வேண்டும் என்று சொல்லாதவரை சரிதான்.

    ஆண்டவன் புண்ணியத்தில் எனக்கு ‘சுகர்’ இல்லை. இருப்பினும் வருமுன் காக்க, டாக்டர் முருகானந்தம் அய்யாவின் வலைப்பக்கம் போய்ப் பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. //மாதம் ஒரு முறை தவறாமல் ரத்தத்தின் சர்க்கரை அளவை சோதித்துக் கொள்ளுங்கள்.//

    அப்படியேதான் செய்து கொண்டு வருகிறேன்.

    //வெறும் வயிற்றில் எடுக்கப்படும் சர்க்கரையின் அளவு 150 க்கு கீழ் இருந்தால் கவலைப்பட ஒன்றுமில்லை.//

    ஆஹா இதைக்கேட்கவே சந்தோஷமாக உள்ளது. இப்போதெல்லாம் நான் எதற்குமே கவலையே படுவது இல்லை. இந்த மாதம் 126 இருந்தது. சென்ற மாதம் வெறும் 98 எனக் காட்டி என்னையே ஆச்சர்யப்படுத்தியது. உணவுக்கு முன்னும் பின்னும் வேளாவேளைக்கு ஏராளமான மருந்து மாத்திரைகளும் உள்ளே போய்க்கொண்டு உள்ளன.

    //100 இருந்தால் அன்று நீங்கள் ஒரு ஸ்வீட் சாப்பிடலாம்.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! மிகவும் இனிமையான செய்தியாகச் சொல்லியுள்ளீர்கள். சர்க்கரை அளவு குறைந்த மகிழ்ச்சியைக் கொண்டாட வேண்டாமா? அதெல்லாம் நான் கரெக்டா எடுத்துச் சாப்பிட்டு விடுவேன். கால் கிலோ டப்பா ஆவின் மில்க் திரட்டுப்பால் அல்லது கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர்ப்பா போன்ற வேறு ஏதேனும் ஒஸத்தியான ஃப்ரெஷ்ஷான ஸ்வீட்ஸ் எப்போதும் என் கைவசம் ஸ்டாக்கில் இருக்குமாறு பார்த்துக்கொள்வது உண்டு.

    பதிலளிநீக்கு
  4. //அப்புறம் மற்றவர்கள் குடிக்கும் காப்பி பாயசம் மாதிரி இருக்கும். என்னய்யா காபி குடிக்கறீங்களா, இல்லை பாயசம் குடிக்கிறீங்களா என்று மற்றவர்களைக் கலாய்க்கலாம்.//

    இது மிகவும் உண்மை. கசப்பான காஃபி குடித்துப் பழகிவிட்டால், பிறகு ஒரு துளி சர்க்கரை போட்டக் காஃபி கூட பாயஸம் போல தித்தித்து வழிகிறது. அதனைக் குடிக்கப்பிடிப்பது இல்லை.

    நான் நள்ளிரவு நேரங்களில், காஃபிக்கு பதில் சில சொட்டு டிகாக்‌ஷன் மட்டுமே குடித்துவிட்டு, காஃபி குடித்த திருப்தியை அடைவதுண்டு.

    நள்ளிரவு நேரத்தில் காஃபி கேட்டு பிறருக்கு (குறிப்பாக மேலிடத்திற்கு) தொந்தரவு கொடுக்கக்கூடாது அல்லவா .... அதனால் மட்டுமே. :)

    பதிலளிநீக்கு
  5. //பசி வந்தால் உடலில் சர்க்கரையின் அளவு குறைந்து "லோ சுகர்" ஆகிவிடும். அப்போது கைகால்களில் ஒரு மாதிரி நடுக்கம் வந்து விடும். இதை கவனிக்காமல் விட்டு விட்டால் மயக்கம் கூட வரலாம். இந்த நிலை வராமல் காத்துக்கொள்ள வேண்டும்.//

    இதுபோன்ற சமயங்களில், ஏ.ஸி.யும், ஃபேனும் ஓடிக்கொண்டிருந்தாலும்கூட எனக்கு என் தலை, நெற்றி, முதுகு எல்லாம் ஏராளமாக வியர்த்துக்கொட்டி விடும். உடனே இரண்டு ஸ்பூன் சர்க்கரையை எடுத்து முதலில் வாயில் போட்டுக்கொண்டு, அதன்பின் மட்டுமே சாப்பிட உட்கார்ந்து கொள்வேன். இதுபோல எப்போதாவது மட்டுமே நேரும். அதாவது ஒரு வேளை சாப்பிட்டபின் 5-6 மணி நேரங்கள் தாண்டாமல் அடுத்த வேளை சாப்பாட்டை முடித்து விட வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் இந்தப் பிரச்சனையை நான் சந்திக்க நேரிடுகிறது.

    ஆனால் ஒவ்வொருவர் விஷயத்திலும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன என்பதை யாரும் தயவுசெய்து மறக்கக்கூடாது.

    மனதுக்கு உற்சாகம் அளிக்கும் மிகவும் அருமையான, எளிமையான பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் பின்னூட்டமே ஒரு ஊக்க மருந்து. அதற்காகவே பதிவுகள் எழுதலாம். டயாபெடீஸ் பொருத்த வரை நமக்குள் பல ஒற்றுமைகள் இருக்கின்றன.

      நீக்கு
  6. எனக்கு சர்க்கரைப் பிரச்னை இல்லாவிடினும் காபி கசப்பாகவே குடித்து வழக்கம்!

    பதிலளிநீக்கு
  7. சர்க்கரை வியாதி இருக்கு. அதனால அதைப்பத்தி சொல்றீங்க. அதேவேளை 'ஜெயில் களி ரொம்ப மோசமாயிருக்கும்' ன்னு சொல்றீங்களே ஐயா, ஹிஹிஹி.

    பதிலளிநீக்கு
  8. டாஸ்மாக் தீர்த்தம் சாப்பிடலாமா என்பது பற்றி சொல்லளவில்லையே?
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  9. எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் சர்க்கரை நோய் உள்ளவர் எந்த வண்டியும் உபயோகிக்க மாட்டார் எங்கும் எப்போதும் நடைதான் ஆனால் கவலை படாமல் விரும்பியதைச் சாப்பிடுவார் வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர் அண்மையில் அவரது எழுபதுகளில் காலமானார்

    பதிலளிநீக்கு