வியாழன், 8 டிசம்பர், 2016

முதுமை ஒரு வரம்.
முதுமை ஒரு வரம்தான். எந்த சூழ்நிலையில் என்பதுதான் கேள்வி? இளமையில் ஒழுங்காக வாழ்ந்திருந்தால் முதுமை ஒரு வரமே.

"ஒழுங்காக" என்பதற்கு பலவிதமாக வியாக்யானம் கொடுக்கலாம். நான் "ஒழுங்காக" என்று நினைப்பது மற்றவர்களுக்கு ஒழுங்கற்றதாகத் தெரியலாம். அதை பின்னூட்டங்களில் விவாதித்துக் கொள்ளலாம்.

"ஒழுங்காக" என்பதற்கான இலக்கணங்கள்.

1. படிக்கவேண்டிய வயதில் நன்றாகப் படிக்கவேண்டும்.

2. படித்து முடித்தவுடன் தன் தகுதிக்கேற்ப ஒரு வேலை தேடிக்கொள்ள வேண்டும்.

3. வேலையில் செட்டில் ஆனவுடன் ஒரு கல்யாணம் செய்துகொண்டு குடும்பத்தை விருத்தி செய்யவேண்டும்.

4. வரவிற்குள் செலவை அடக்கி சேமிப்பும் செய்யவேண்டும்.

5. தன் வாரிசுகளுக்கு நல்ல படிப்பும் நல் ஒழுக்கமும் கற்றுத் தரவேண்டும்.

6.அவர்களுக்கு காலா காலத்தில் ஆணாக இருந்தால்   நல்ல வேலையில் அமர்த்த வேண்டும், பெண்ணாக இருந்தால் ஒரு கல்யாணம் செய்து வைக்கவேண்டும்.

7. ரிடையர் ஆன பிறகு கிடைக்கும் தொகைகளை பத்திரமாகப் பாதுகாத்து வைத்துக் கொள்ளவேண்டும்.

இப்படியெல்லாம் வாழ்ந்திருந்தால் முதுமை ஒரு வரமே.

எல்லோரும் இப்படி வாழ முடியுமா என்று பலரும் நினைக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இப்படித்தான் வாழ்ந்தேன். இன்று முதுமையில் கவலை இல்லாமல் இருக்கிறேன்.

என் அனுபவத்தைச் சொல்வதன் மூலம் ஒரு சிலராவது பலனடைந்தால் அது என் எழுத்திற்கு கிடைத்த சன்மானம்.

16 கருத்துகள்:

 1. நானும் இந்தச்
  சுகப் பட்டியலில் இருக்கிறேன் எனச்
  சொல்லிக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்
  வாழ்த்துக்களுடன்..

  பதிலளிநீக்கு
 2. ஆறாவது விஷயம்தான் சட்டென்று நடக்க மாட்டேன் என்கிறது!

  பதிலளிநீக்கு
 3. "ஒழுங்காக" - இதில் ரொம்ப முக்கியமான ஒன்றை விட்டுவிட்டீர்கள். அது 'ஒழுங்காக' - அதாவது உடல் நலத்தில் கவனம் வைத்து. இது இல்லாவிட்டால், மற்ற எல்லாம் சரியாக அமைந்தாலும், நாம் பிறருக்கு மட்டுமல்ல, நமக்கே பெரிய தொந்தரவாக ஆகிவிடுவோம்.

  தெரிந்தவர்கள் எல்லோரும் சுகப் பட்டியலில் இருக்கவேண்டும் என்றே ப்ரார்த்திக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. முக்கியமான ஒன்றை மறந்து விட்டீர்கள்.

  3a. மனைவி சொல்வது எல்லாம் ஒழுங்காகக் கேட்டுக்கொண்டு அதன் படி நடக்க வேண்டும்.

  3b. வயதான தாய் தந்தையரை முடிந்த வரைக் காப்பாற்ற வேண்டும்.
  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. 3 a.ஓரளவிற்கு கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

   3.b.என் தந்தை தான் சாகும் வரை சுய சம்பாத்தியத்தில் வாழ்ந்தார். அதன் பிறகு என் தாயாரை அவர்கள் கடைசி காலம் வரை வைத்துக் காப்பாற்றினேன். அதன் பிறகு என் மாமியாரையும் (என் மச்சினன்களெல்லாம் இறந்து விட்டபடியால்) அவர்கள் இறுதிக் காலம் வரை என் வீட்டில் வைத்துக் காப்பாற்றினேன்.

   நீக்கு
 5. //எல்லோரும் இப்படி வாழ முடியுமா என்று பலரும் நினைக்கலாம். எனக்குத் தெரியவில்லை. ஆனால் நான் இப்படித்தான் வாழ்ந்தேன். இன்று முதுமையில் கவலை இல்லாமல் இருக்கிறேன்.//

  இதனைக் கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பாராட்டுகள். வாழ்த்துகள்.

  உங்கள் அளவுக்கு இல்லாவிட்டாலும் (ஓய்வூதியம் என்ற ஒன்று எனக்கு இல்லாததால்) நானும் ஏதோ இதுவரை நிம்மதியாகவே வாழ்ந்து வருகிறேன் .... போதும் என்ற மனம் என்னிடம் நிறையவே நிரம்பியுள்ளதால்.

  மேலும் தாங்கள் சொல்லியுள்ள பாயிண்ட் நம்பர் - 4 இல், அன்று முதல் இன்று வரை கவனமாக இருப்பவன்தான் நான். அதனாலும் இதுவரை சமாளிக்க முடியாத பிரச்சனைகள் என்று ஒன்றையும் சந்திக்க வேண்டிய அவசியம் எனக்கு ஏற்படாமல் இருந்து வருகிறது. சொந்த மகன்களிடமேகூட நான் இதுவரை எதையும் எதிர்பார்ப்பதோ, கேட்பதோ, வாங்கிக்கொள்வதோ இல்லை. இன்றுவரை நான் ஒரு ’பிரஸ்டீஜ் பத்மனாபன்’ மட்டுமே. நாளை எப்படியோ ..... நான் அறியேன் பராபரமே !

  இந்தக்காலத்தில் ஸ்ரீராம் சொல்லியுள்ளதும் கவனத்தில் கொள்ள வேண்டியதே. மகன்களுக்குத் திருமணம் செய்து வைக்க மணப்பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாகவே இருந்து வருகிறது.

  நல்லவேளையாக என் மூன்று மகன்களையும், உரிய பருவத்தில் (அதாவது அவர்களின் 25-26 வயதுக்குள்) தனித்தனியே மூன்று (வேலைக்குச் செல்லாத) பெண்களின் கைகளில் பொறுப்பாக ஒப்படைத்து விட்டேன். அந்த மூன்று பெண்களும் என் மூன்று மகன்களையும் கண் கலங்காமல் பார்த்துக்கொண்டு வருகிறார்கள். என் கடமையைச் செவ்வனே முடித்து விட்டதில் எனக்கோர் மகிழ்ச்சி. :) :) :)

  அதனால் நானும் என் மனைவியும் தனியாகவே இருப்பினும் இன்று மிகவும் நிம்மதியாகவே உள்ளோம். :) எல்லாம் கடவுள் அருளால் மட்டுமே !!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. "தனித்தனியே மூன்று " - இதுதான் கோபு சாரின் குறும்பான நகைச்சுவை

   நீக்கு
  2. 'நெல்லைத் தமிழன் வியாழன், 8 டிசம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:38:00 IST

   //"தனித்தனியே மூன்று " - இதுதான் கோபு சாரின் குறும்பான நகைச்சுவை//

   :) ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா!

   என் எழுத்துக்கள் எதிலும் வாசகர்களுக்கு குழப்பம் ஏதும் ஏற்படாமல் தெளிவாகச் சொல்லப்பட வேண்டும் என்பதே இதில் என் நோக்கமாகும்.

   அதனைத் தாங்கள் ’குறும்பான நகைச்சுவை’ எனப் பாராட்டிச் சொல்லியிருப்பதில் எனக்கு ஓர் தனி மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, நண்பரே.

   அன்புடன் கோபு

   நீக்கு
 6. முதுமையில் உடல் ஆரோக்கியமாக இருப்பதே வரம்

  பதிலளிநீக்கு
 7. இந்த ஏழையும் கடைபிடித்து முதுமையை ஒரு வரமாக நினைத்து மகிழ்வுடனிருக்கும் உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்! இந்த 'ஏழாவது ' விஷயத்தில் தான் நிறைய பேர் பாச வலையில் அகப்பட்டு சறுக்கி விடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
 8. முதுமை அடைந்ததைப் பற்றி கவலைப்படாமல் உறவோடு மகிழ்ந்து, அளவோடு சாப்பிட்டு, நண்பர்களோடு அளவளாவி, நலமோடு வாழ்ந்து ஆனந்தமாக பொழுதைக் கழிப்பதையும் சேர்த்துக்கொள்ளலாம்.

  பதிலளிநீக்கு