புதன், 18 ஜனவரி, 2017

பணமும் பயமும்

                                   
                                        Image result for பணம் image

வயதாகும்போது சில பயங்கள் வந்து விடுகின்றன. குறிப்பாக வரும் காலத்தில் நான் உடல் நலத்தோடு இருப்பேனா? என்னுடைய அன்றாட காரியங்களை நானே செய்து கொள்வேனா? எனக்கு உடல் நலம் குன்றினால் ஆஸ்பத்திரி செலவிற்கு நான் இப்போது சேமித்திருக்கும் பணம் போதுமா? இப்படியான பயங்கள் வருகின்றன.

இந்தப் பயங்களுக்கு சரியான பதில்கள் கிடையாது. உன் விதிப்படி எல்லாம் நடக்கும் என்று பொதுவாக சொல்வார்களே தவிர குறிப்பிட்டு எந்த விவரமும் சொல்ல முடியாது. அவரவர்கள்தான் தங்கள் மனதைத் திடப்படுத்திக் கொள்ளவேண்டுமே தவிர, அடுத்தவர்களின் ஆதரவை எதிர்பார்ப்பது விவேகமல்ல.

இந்தப் பயங்களைப் போக்கத்தான் பலர் (நான் உட்பட) பணத்தை தங்கள் கடைசி காலத்திற்கு வேண்டும் என்று சேமிக்கிறார்கள். இது ஒரு நல்ல முயற்சிதான் என்றாலும் இதில் உள்ள பெரும் சங்கடம் என்னவென்றால், எவ்வளவு பணம் இருந்தால் நல்லது என்பதற்கு ஒரு அளவு இல்லை. ஒருவர் பத்து லட்சம் ரூபாய் இருந்தால் நமது தேவைக்குப் போதும் என்று நினைக்கலாம்.

இன்னொருவர் ஒரு கோடி ரூபாய் இருந்தால்தான் நமது கடைசி காலத்தில் நிம்மதியாக இருக்க முடியும் என்று எண்ணலாம். எப்படி நினைத்தாலும் கடைசியில் ஒவ்வொருவரும் பணத்தை எப்படியாவது சம்பாதித்து சேமிக்கவேண்டும் என்று எண்ணுகிறார்கள். இதற்கு வரம்பு இல்லாமல் போகிறது. ஒரு பூதமும் ஏழு ஜாடி தங்கமும் என்ற கதை இந்த மனப்பான்மைக்கு நல்ல உதாரணம்.

இந்தக் கதை தெரியாதவர்கள் என்னுடைய இந்தப் பதிவை வாசிக்கவும். http://swamysmusings.blogspot.com/2012/04/blog-post_8346.html

நான் இப்போது அனுபவிக்கும் வேதனை என்னவென்றால் என்னுடைய இப்போதைய சேமிப்பு என் வாழ்நாளுக்குப் போதுமா அல்லது போதாதா? இந்தக் கேள்விக்கு நானேதான் விடையளிக்கவேண்டும்.

போதும் என்றால் இனி வரும் வருமானங்களை என்ன செய்வது? யாருக்காவது கொடுக்க முடியாது. ஏனென்றால் பெண்டாட்டி, பிள்ளை குட்டிகள் இருக்கிறார்கள். நானே திங்கலாம் என்றால் பல்லெல்லாம் போன பிறகு எதைத் திங்க முடிகிறது? வேறு ஏதாவது செலவு செய்யலாம் என்றால் பெண்டாட்டி திட்டுகிறாள். சரி, சும்மா இருக்கலாம் என்றால் மனது "நான் அப்படியெல்லாம் சும்மா இருக்க மாட்டேன், எனக்கு ஏதாவது தீனி போட்டால்தான் ஆச்சு" என்று அடம் பிடிக்கிறது.

இப்போது இருக்கும் சேமிப்பு போதாது என்று வைத்துக்கொண்டால், இப்போது இருக்கும் வருமானத்தைக் கொண்டு இன்னும் எவ்வளவு நாள் சேமிப்பது என்ற கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. இந்த சேமிப்பையெல்லாம் நாளைக்கு ஒரு மோடி மஸ்தான் வந்து உங்கள் பேங்க் டெபாசிட் எல்லாம் "ஓகயா". எல்லாப்பணமும் அரசாங்க கஜானாவில் சேர்த்து விட்டாம் என்று சொல்லி விட்டால் அந்தச் செய்தியை இந்த இதயம் தாங்குமா என்ற கவலை வேறு இன்னொரு பக்கம் அரிக்கிறது.

இப்படியாக சாகவும் முடியாமல் பிழைக்கவும் முடியாமல் செய்து விட்ட அந்த ஆண்டவனை திட்டிக்கொண்டு இருக்கிறேன். அவன் எப்போது கண் திறப்பானோ?

17 கருத்துகள்:


  1. எதையும் தாங்கும் இதையம் வேண்டும் வேண்டும் ஐயா

    பதிலளிநீக்கு
  2. ஐயா! உங்களுக்கு அறிவுரை சொல்லும் வயதில்லை என்றாலும் பாரசீகக் கவிஞர் உமர் கய்யாம் சொன்னதை தங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

    Dead yesterday and unborn tomorrow
    Why fret about them if today be sweet

    எனவே கவலையை மறந்து வாழ்க்கையை துய்த்து மகிழுங்கள்!

    பதிலளிநீக்கு
  3. முதிர்ந்த நிலையில் தங்களின் பயமும் இந்த சந்தேகங்களும் மிகவும் நியாயமானதே.

    பொதுவாக பழுத்த அனுபவங்களுடன், எந்தவொரு கவலையின்றி நன்கு நிம்மதியாக வாழ்ந்துகொண்டு, கையிலும், பேங்கிலும் ஓரளவு பணம்-காசுக்கும் பஞ்சம் இல்லாமல், செளக்யமாக இருப்பவர்களுக்கே, இது போலெல்லாம் நினைக்கவும், கற்பனை செய்யவும், கவலைப்படுவதுபோலக் காட்டிக்கொள்ளவும், அவ்வாறான தன் நினைப்புக்களை பிறருடன் பதிவிட்டுப் பகிர்ந்துகொள்ளவும் முடியும்.

    அந்த விதத்தில் தாங்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரரே.

    பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

    நோய் நொடியின்றி தாங்கள் மேலும் பல்லாண்டுகள் ஆரோக்யமாகவும், மன நிம்மதியுடனும் வாழ்ந்து, இதுபோல வாரம் ஒரு நகைச்சுவைப் பதிவுகளாக ஏதாவது எழுதி எங்களை மகிழ்விக்க வேண்டுமாய், நான் வணங்கும் இறைவனைப் பிரார்த்த்தித்துக்கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. தினமும் தங்களால் முடிந்தவரை ‘ராம’ நாமத்தை ஜபித்து வாருங்கள். அல்லது தினமும் 108 தடவை ‘ராம’ ’ராம’ ’ராம’ ’ராம’ ‘ராம’ என எழுதி வாருங்கள். ஒவ்வொரு முறை எழுதும் போதும் ஐந்து தடவை வாயினால் உச்சரித்துக்கொண்டே எழுதி வாருங்கள்.

    இன்னும் முடியுமானால் ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் வரும் இதோ இந்த ஒரேயொரு ஸ்லோகத்தை எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை தினமும் சொல்லி வாருங்கள்.

    இதனை சாதாரணமாக, நாம் நம் படுக்கையில் படுத்துக்கொண்டேகூட, நமக்குத் தூக்கம் வரும்வரை சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதில் தவறு ஒன்றும் இல்லை.

    “ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
    சஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே”

    இந்த ஒரு ஸ்லோகத்தைச் சொன்னாலே, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் முழுவதும் பாராயணம் செய்த பலன் கிடைத்து விடும் என, சாக்ஷாத் ஸ்ரீ பரமேஸ்வரனே தன் பத்னியாகிய பார்வதி தேவிக்குச் சொல்லி அருளியுள்ளார்.

    இதைப்பற்றி சமீபத்தில் ஒருவர் தன் பதிவினிலும் வெளியிட்டுள்ளார். அதற்கான இணைப்பு இதோ:

    http://classroom2007.blogspot.in/2017/01/blog-post_17.html

    நான் ஏற்கனவே ’ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம மஹிமை’ என்ற தலைப்பினில் ஓர் மஹான் கூறியுள்ள செய்திகளை என் வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளேன். அதற்கான இணைப்பு:

    http://gopu1949.blogspot.in/2012/02/blog-post_5095.html

    பதிலளிநீக்கு
  5. எவ்வளவு சேமிக்கணும் - யாருக்கும் விடை தெரியாது. ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு லிமிட்டை மனதில் வைத்துக்கொள்வோம். லிமிட் ஏறிக்கொண்டேதான் செல்கிறது. எனக்குச் சொன்ன அட்வைஸ் - இருப்புக்குள் செலவழித்து வாழ்ந்துவிடுவோம் என்ற நம்பிக்கை எப்போது வருகிறதோ அதுதான் லிமிட்.

    ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பின், தனக்கு வரும் பென்ஷன் பணத்தில் (அல்லது சேமிப்பிலிருந்து வரும் பணத்தில்), முகம் தெரியாதவர்களுக்கு படிப்புக்கோ வேறு எதற்குமோ, சிறிய அளவு ஆனாலும் உதவலாம். அது மட்டும்தான் நமக்கு மன நிம்மதியைத் தரும். தனக்காகச் செலவு செய்யும் எதுவும் மன நிம்மதியை அளிக்காது.

    பதிலளிநீக்கு
  6. எதுவும் மிகையாகும்போது கவலை அதிகரிக்கும்

    பதிலளிநீக்கு
  7. உங்கள் பிரச்சினைக்கு புத்தி சொல்லும் அறிவும் வயதும் எனக்கு இல்லை, ஆனாலும் பிரச்சினை என்பது எவ்வாறு வந்தது என்பது பற்றி ஒரு ஆய்வு.

    சிறு வயதில் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு அமைந்திருக்க வேண்டும். அவ்வாறு கஷ்டப்பட்டதால் வளர்ந்து ஓரளவு நல்ல நிலைமை வந்தாலும் தேவை தேவையின்மை அறிந்து செலவு செய்யும் மனப்பக்குவம் வாய்த்தது. அதுவே சேமிப்பு என்ற பக்க வினையையும் உண்டாக்கியது. ஆகவே நீங்கள் கவலைப் படும் தேவையும் வந்து விட்டது.

    கவலையை விடுங்கள். ஒகய ஆனாலும் தேவைக்கு போதுமான பென்ஷன் என்ற வருமானம் நிரந்தரம் என்று நம்பலாம்.

    75 வயதில் commutation முடித்து சேர்ப்பு, 7ஆம் சம்பள கமிசன், 80 வயதில் அடிப்படை பென்ஷனில் 20% உயர்வு என்று தற்போது ஒரு திடீர் வருமான உயர்வு உங்களின் 7 ஆவது ஜாடியாக இருக்கிறது. ஆனால் கதையில் சொன்னது போன்று அதை திரும்பக் கொடுக்க முடியாது. ஆகவே ஏழாவது ஆடியை நிரப்பும் முயற்சியை கைவிட்டு 7ஆவது ஜாடியை செலவு செய்து 6 ஜாடிகளைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //உங்கள் பிரச்சினைக்கு புத்தி சொல்லும் அறிவும் வயதும் எனக்கு இல்லை//
      நான் அவ்வாறு கருதவில்லை. நல்ல கருத்துகளைச் சொல்வதற்கு வயது ஒரு தடையாக இருக்கவேண்டியது இல்லை.

      //சிறு வயதில் தேவைகளை பூர்த்தி செய்யமுடியாமல் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்க்கை தங்களுக்கு அமைந்திருக்க வேண்டும்//

      உண்மை. இதை எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?

      நீக்கு
  8. ஆஹா! பகவத்கீதையைப் படித்து வாழக்கையின் தத்துவத்தைப் புரிந்துகொண்டதைவிட, தங்களின் இன்றைய பதிவில் இருந்து மிகுந்த ஞானம் கிட்டியது என்றால் மிகையாகாது.....

    ஒரே ஒரு ஆலோசனை: சாகும்வரையில் நம்மிடம் காசு இருந்தாகவேண்டும். இல்லையென்றால் யாரும் மதிக்கமாட்டார்கள்.- மனைவி உள்பட. எனவே, செலவழிக்கமுடியாததைப் பணமாக வங்கியிலோ நகையாகவோ வைத்திருங்கள். ஆனால் எது எங்கே இருக்கும் என்பதை மனைவியிடம் சொல்லிவையுங்கள். (-இது எனக்கு என் வயதான உறவினர் ஒருவர் சொன்னது.)

    - இராய செல்லப்பா நியூஜெர்சி.

    https://chellappatamildiary.blogspot.com/2017/01/blog-post_18.html

    பதிலளிநீக்கு
  9. தங்களுக்கான விடையை தேட
    விஜய் நடித்த பைரவா படத்தில் பட்டைய கிளப்பு பாட்டை கேக்கவும்.

    பதிலளிநீக்கு
  10. அவசியமான கவலைதான்! ஆனால் எல்லா சேமிப்பும் நமக்கும் தேவையான நேரத்தில் பலனலிப்பதும் இல்லை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமா. மோடி அடுத்து 2000 நோட்டு செல்லாது. பாங்கில் இருக்கும் பணம் எல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தம். என்றெல்லாம் சொல்லி விடுவார்.
      --
      Jayakumar

      நீக்கு
  11. விடை இல்லா கேள்விகள்... கவலை கொள்வதில் பயனில்லை.

    பதிலளிநீக்கு