சமூக சீரழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சமூக சீரழிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 27 மே, 2017
8. பொது சேவை-3
இந்திய தேசீய குணங்களில் ஒன்று செம்மறியாட்டு மனப்பான்மை. கூட்டமாக இருக்கும்போது தலைவன் என்ன சொன்னாலும் அதைப்பற்றி சிறிதும் சிந்தியாது உடனே காரியத்தில் இறங்குவார்கள். நூறு பேர் சேர்ந்து ஒரு கோஷம் போட்டால் இவனும் அவர்களுடன் சேர்ந்து கோஷம் போடுவான். என்ன, ஏது என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டான். ஆஹா நம் தலைவர் சொல்லிவிட்டார், அந்த காரியத்தை உடனே செய். அவ்வளவுதான்.அதிலும் இன, மதம், மொழி, ஜாதி விவகாரம் என்று வந்து விட்டால் அவ்வளவுதான், வேறு எதையும் பார்க்கமாட்டான். தலைவன் என்ன சொல்லுகிறானோ அதுதான் வேதவாக்கு. வெட்டு என்றால் வெட்டுவான், அடி என்றால் அடிப்பான், கொல் என்றால் கொலவான். அதன் பின் விளைவுகளைப் பற்றி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டான்.
தலைவன் தன் ஆபீஸ் ரூமின் பாதுகாப்பில் உட்கார்ந்து கொண்டு மக்களை பகடைக்காய்களாக நகர்த்திக்கொண்டு இருப்பான்.அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் கட்சிகளை வளர்ப்பது இவ்வாறுதான். அவர்கள் சூழ்நிலையை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் போதும். உடனே போராட்டம் ஆரம்பித்து விட வேண்டியதுதான்.
உதாரணத்திற்கு இலங்கைத்தமிழர் பிரச்சினை. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வந்து அகதிகளாக வருடக்கணக்கில் முகாம்களில் பல இன்னல்களுக்கு இடையே தங்கியிருக்கிறார்கள். இப்போது பல விதமான போராட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சித்தலைவர்கள் அந்த முகாம்களுக்குப் போயிருப்பார்களா என்பது சந்தேகமே.ஆனால் இப்போது இலங்கையில் விடுதலைப்புலிகளின் மேல் இலங்கை அரசு போர் தொடுத்தவுடன் இங்கே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் தமிழர்களின் பேரில் அப்படி ஒரு பாசம் பொத்துக்கொண்டு போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களினால் இலங்கைத்தமிழர்களுக்கு என்ன பயன் இருக்கிறதோ இல்லையோ, இங்கேயுள்ள அரசியல் கட்சிகள் தங்களை நன்றாக வளர்த்துக்கொள்ளும்.
அதே மாதிரிதான் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும். 60 -70 வருடங்களாக இதை வைத்துத்தான் திராவிட கட்சிகள் வளர்ந்துள்ளன. தமிழனின் காதில் நன்றாக பூச்சுத்தி பழகி விட்டார்கள். இந்தி மொழி மிகக்குறைந்த அளவு மக்களே தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள் என்பது இவர்களின் ஒரு வாதம். ஆனால் இந்தி மொழி தெரிந்திருந்தால் வடநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற உண்மையை ஒத்துக்கொள்வதில்லை.
தமிழ் நாட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லாதவர்கள்தான் இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டுகிறார்கள். என் போன்று அரசு வேலையில் இருந்து கொண்டு பல வட இந்தியப் பகுதிகளுக்குப் போய் வந்தவர்களுக்குத்தான் இந்த இந்தி படிக்காததின் வேதனை புரியும். இப்போது "இந்தி எதிர்ப்பு" என்பதை "இந்தித் திணிப்பு எதிர்ப்பு" என்று வார்த்தை ஜாலம் செய்கிறார்கள். எல்லாம் ஒன்றேதான். இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ் மக்கள் மாக்களாக இருக்கப்போகிறார்களோ, தெரியவில்லை.
சனி, 21 ஜனவரி, 2017
ஜல்லிக்கட்டுப் போராட்ட அரசியல்
ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கும் 1967-68 களில் நடந்த இந்திப்போராட்டத்திற்கும் ஒரு ஒற்றுமையை நான் உணருகிறேன். இது ஒரு பெரிய அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் ஒரு மாபெரும் சூழ்ச்சி. இதன் பின்னணியில் யார் செயல்படுகிறார்கள் என்று கண்டு பிடிக்க பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.
ஆளும் கட்சியைக் கவிழ்க்க நடத்தப்படும் ஒரு சதியே இது என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை. குறிப்பாக மாணவர்களைத் தூண்டிவிட்டு இத்தகைய போராட்டங்களை அரங்கேற்றுவது காலங்காலமாக நடைபெற்று வரும் யுத்தி.
போராட்டம் வலுவடைந்து காவல் துறை துப்பாக்கிச்சூடு நடத்தும் என்பது கலவரங்களைத் தூண்டி விடுபவர்களின் எதிர்பார்ப்பு. அதை வைத்து அரசியல் ஆதாயம் பெறலாம் என்பது வெளியில் சொல்லப்படாத குறிக்கோள். ஆனால் ஆளும் கட்சியும் அதே குட்டையில் ஊறின மட்டையல்லவா? அவர்கள் இந்த எதிர்பார்ப்புக்கு இடம் கொடுக்காமல் விளையாடுகிறார்கள்.
பொறுத்திருந்து பார்ப்போம். யார் வெற்றி பெறுகிறார்கள் என்று?
திங்கள், 25 பிப்ரவரி, 2013
கும்ப மேளாவும் உயிரிழப்பும்
இந்திய மக்களின் (இல்லை, மாக்களின்) தேசீய கலாசாரம் என்னவென்றால் கூட்டம் கூடுவது. அரசியல் கூட்டமானாலும் சரி, ஆன்மீகக் கூட்டமானாலும் சரி, லட்சக்கணக்கில் கூடுவது . கூட்டம் கூட்டுபவர்களுக்கு கூட்டத்திற்கு ஆட்களைச் சேர்த்துவதுதான் முக்கிய நோக்கமே தவிர, இத்தை பேர் கூடிகிறார்களே, அவர்களின் பாதுகாப்பு குறித்து தேவையான ஏற்பாடுகள் செய்வோமென்ற சாதாரண பொதுப் புத்தி கூடக் கிடையாது.
விபத்துகள் நடந்து உயிர்ச்சேதம் ஆன பின்பு ஒருவருக்கொருவர் பழி சுமத்துவார்களே தவிர முன்னேற்பாடுகளை ஒருவரும் செய்ய மாட்டார்கள். கும்பமேளா சமயத்தில் லட்சக்கணக்கானவர்கள் ரயில்வே ஸ்டேஷனை நாடுவார்கள் என்பது பாமரனுக்கு கூட விளங்கும். ரயில்வேயின் உயர் அதிகாரிகள் கும்பமேளா சமயத்தில் அலகாபாத்தில் இருந்து, நடப்பவைகளை கவனித்து முன் ஜாக்கிரதை நடவடிக்கைகளை எடுத்திருக்கவேண்டும்.
இதைச் செய்யாமல் அசம்பாவிதம் நடந்த பிறகு நொண்டிச் சமாதானங்கள் சொல்வது நமது அரசு அதிகாரிகளின் வாடிக்கையாகப் போய்விட்டது.
மக்களுக்கும் சரி, ஒழுங்கு, கட்டுப்பாடு, பொறுமை என்ற குணங்கள் அடியோடு அற்றுப் போய்விட்டன. இது சமூகச் சீரழிவின் அடையாளம். இதை மாற்ற இறைவன்தான் நேரில் வரவேண்டும். அவனுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருப்பதால், தனக்குப் பதிலாக யமதர்மனை அனுப்புகிறான்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)