சனி, 27 மே, 2017

8. பொது சேவை-3

                                    Image result for செம்மறியாடு

இந்திய தேசீய குணங்களில் ஒன்று செம்மறியாட்டு மனப்பான்மை. கூட்டமாக இருக்கும்போது தலைவன் என்ன சொன்னாலும் அதைப்பற்றி சிறிதும் சிந்தியாது உடனே காரியத்தில் இறங்குவார்கள். நூறு பேர் சேர்ந்து ஒரு கோஷம் போட்டால் இவனும் அவர்களுடன் சேர்ந்து கோஷம் போடுவான். என்ன, ஏது என்று கொஞ்சம் கூட யோசிக்க மாட்டான். ஆஹா நம் தலைவர் சொல்லிவிட்டார், அந்த காரியத்தை உடனே செய். அவ்வளவுதான்.அதிலும் இன, மதம், மொழி, ஜாதி விவகாரம் என்று வந்து விட்டால் அவ்வளவுதான், வேறு எதையும் பார்க்கமாட்டான். தலைவன் என்ன சொல்லுகிறானோ அதுதான் வேதவாக்கு. வெட்டு என்றால் வெட்டுவான், அடி என்றால் அடிப்பான், கொல் என்றால் கொலவான். அதன் பின் விளைவுகளைப் பற்றி கொஞ்சம்கூட யோசிக்க மாட்டான். 

தலைவன் தன் ஆபீஸ் ரூமின் பாதுகாப்பில் உட்கார்ந்து கொண்டு மக்களை பகடைக்காய்களாக நகர்த்திக்கொண்டு இருப்பான்.அரசியல் கட்சித்தலைவர்கள் தங்கள் கட்சிகளை வளர்ப்பது இவ்வாறுதான். அவர்கள் சூழ்நிலையை கவனித்துக்கொண்டே இருப்பார்கள். ஏதாவது ஒரு காரணம் கிடைத்தால் போதும். உடனே போராட்டம் ஆரம்பித்து விட வேண்டியதுதான். 

உதாரணத்திற்கு இலங்கைத்தமிழர் பிரச்சினை. இந்த பிரச்சினை பல ஆண்டுகளாக இருந்து கொண்டு இருக்கிறது.ஆயிரக்கணக்கான தமிழர்கள் இங்கு வந்து அகதிகளாக வருடக்கணக்கில் முகாம்களில் பல இன்னல்களுக்கு இடையே தங்கியிருக்கிறார்கள். இப்போது பல விதமான போராட்டங்கள் நடத்தும் அரசியல் கட்சித்தலைவர்கள் அந்த முகாம்களுக்குப் போயிருப்பார்களா என்பது சந்தேகமே.ஆனால் இப்போது இலங்கையில் விடுதலைப்புலிகளின் மேல் இலங்கை அரசு போர் தொடுத்தவுடன் இங்கே இருக்கும் அத்தனை அரசியல் தலைவர்களுக்கும் தமிழர்களின் பேரில் அப்படி ஒரு பாசம் பொத்துக்கொண்டு போராட்டங்களில் இறங்கியிருக்கிறார்கள். இந்தப் போராட்டங்களினால் இலங்கைத்தமிழர்களுக்கு என்ன பயன் இருக்கிறதோ இல்லையோ, இங்கேயுள்ள அரசியல் கட்சிகள் தங்களை நன்றாக வளர்த்துக்கொள்ளும். 

அதே மாதிரிதான் இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமும். 60 -70 வருடங்களாக இதை வைத்துத்தான் திராவிட கட்சிகள் வளர்ந்துள்ளன. தமிழனின் காதில் நன்றாக பூச்சுத்தி பழகி விட்டார்கள். இந்தி மொழி மிகக்குறைந்த அளவு மக்களே தாய்மொழியாகக் கொண்டுள்ளார்கள் என்பது இவர்களின் ஒரு வாதம். ஆனால் இந்தி  மொழி தெரிந்திருந்தால் வடநாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் சமாளித்துக் கொள்ளலாம் என்கிற உண்மையை ஒத்துக்கொள்வதில்லை.

தமிழ் நாட்டை விட்டு வெளியில் எங்கும் செல்லவேண்டிய அவசியம் இல்லாதவர்கள்தான் இந்தப் போராட்டத்தில் தீவிரம் காட்டுகிறார்கள். என் போன்று அரசு வேலையில் இருந்து கொண்டு பல வட இந்தியப் பகுதிகளுக்குப் போய் வந்தவர்களுக்குத்தான் இந்த இந்தி படிக்காததின் வேதனை புரியும். இப்போது  "இந்தி எதிர்ப்பு" என்பதை "இந்தித் திணிப்பு எதிர்ப்பு" என்று வார்த்தை ஜாலம் செய்கிறார்கள். எல்லாம் ஒன்றேதான். இன்னும் எத்தனை காலத்திற்கு தமிழ் மக்கள் மாக்களாக இருக்கப்போகிறார்களோ, தெரியவில்லை.

8 கருத்துகள்:

  1. முடிவில் சவுக்கடியான வார்த்தையோடு முடித்தது அருமை ஐயா
    த.ம.2

    பதிலளிநீக்கு
  2. ஐயா
    தாங்கள் ஐயா நடன சபாபதி எழுதிய நீண்ட தொடர் பதிவுகளைப் படித்தும் இந்தி (திணிப்பு) எதிர்ப்பைப்பற்றி மீள்பதிவு எழுதுவது ஆச்சர்யமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் தமிழைப் புறக்கணித்து இந்தியைப் புகுத்துவதை தான் எதிர்க்கிறோம். மைல் கல்லில் தமிழை அழித்து இந்தியில் எழுதுவதும், ATMகளில் தமிழை எடுத்துவிட்டு இந்தியைப் புகுத்தியது போன்ற தமிழை அழித்து இந்தியைப் புகுத்த வேண்டிய அவசியம் என்ன?

    ஐயா நடனசபாபதி விரிவான பதில் தருவார் என்று எதிர்பார்க்கிறேன்.

    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திரு.நடனசபாபதி எழுதியவை இந்திப் போராட்டங்களைப் பற்றிதானே ஒழிய, அந்தப் பிரச்சினையின் நன்மை-தீமைகளைப் பற்றியல்ல. இந்தி எதிர்ப்புப் போராட்டம் அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுகிறதே தவிர மக்களின் நன்மைக்காக அல்ல என்பதை தமிழன் என்று புரிந்து கொள்வானோ தெரியவில்லை.

      100 வருடங்களுக்கு முன் வடமொழி (சம்ஸ்கிருதம்) தமிழை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. இப்போது அதே மாதிரி ஆங்கிலம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது.

      ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது அனைவரும் சத்தமில்லாமல் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். இன்று ஆங்கிலம் இல்லாவிட்டால் என்ன நிலை இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

      இந்தி எதிர்ப்புப் போராட்ட பிரச்சினையை விருப்பு வெறுப்பு இன்றி விவாதிக்கவேண்டும். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒருவன் ஆதரிக்காவிட்டால் அவன் தமிழன் இல்லை என்ற நிலை இன்று இருக்கிறது. என்னைத் தமிழன் இல்லை என்று சொன்னால் எனக்கு என் நிலையில் என்ன மாற்றம் ஆகப்போகிறது.

      ஆனால் இந்தி படிக்காத தினால் எத்தனை இளைஞர்களின் வேலை வாய்ப்பு பறிபோகிறது என்று யாராவது யோசிக்கிறார்களா? நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்னாடகம், ஆந்திரா மக்களுக்கு மொழிப்பற்று இல்லையா? ஆனால் அவர்கள் ஏன் இந்தியை எதிர்ப்பதில்லை? யோசியுங்கள் மடத்தமிழர்களே.

      நீக்கு
  3. இந்தி கட்டாயம் எல்லா இந்தியர்களுக்கும் தெரிந்திருக்கவேண்டும். இந்தித் திணிப்பைப் பற்றி நமக்கு என்ன கவலை. நாம ஏத்துக்காத ஒண்ணை யாரு நம்மிடம் திணிக்கமுடியும்?

    நமக்கு தமிழ் மேல் பற்று இருப்பதால், ஆங்கிலத்தைத் தவிர்த்துவிட்டு தமிழிலேயே பேச முயற்சி செய்வோம். கந்தசாமி சாரின் பார்வை இந்தி மொழியைப் பொறுத்தவரையில் சரி என்றுதான் நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. //என் போன்று வட இந்தியப் பகுதிகளுக்குப் போய் வந்தவர்களுக்குத்தான் இந்த இந்தி படிக்காததின் வேதனை புரியும்.//

    மிகவும் சரியாகச் சொல்லியுள்ளீர்கள். நான் இதனை நன்கு உணர்ந்துள்ளேன்.

    சிறுவயதில் 1964 to 1966 இல் பள்ளியில் நான் ஹிந்தி படிக்கும் வாய்ப்பு எனக்கு பலவந்தமாகத் தடுக்கப்பட்டது மிகப்பெரிய கொடுமையாகும்.

    பதிலளிநீக்கு
  5. எதிர்ப்பு என்பதுஎதற்கு என்று நீங்களே மறைமுகமாகச் சொல்லி விட்டீர்கள்/ஆங்கிலேயர்கள் நம் நாட்டை ஆண்டுகொண்டிருந்தபோது அனைவரும் சத்தமில்லாமல் ஆங்கிலத்தைக் கற்றுக்கொண்டிருந்தார்கள். இன்று ஆங்கிலம் இல்லாவிட்டால் என்ன நிலை இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்./ஆங்லேயர்கள் நம்நாட்டை ஆண்டு கொண்டிருந்தார்கள் இப்போது வட இந்தியர் ஆள முயற்சிக்கின்றனர் எனக்கென்னவோ இந்த மனொபாவத்தினால்தான் எதிர்ப்பு வலுக்கிறது என்று தோன்று கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "இப்போது வட இந்தியர் ஆள முயற்சிக்கின்றனர்"

      இதை நான் வேறு விதமாகச் சொல்ல ஆசைப்படுகிறேன்.

      "இப்போது வட இந்தியர் ஆண்டுகொண்டிருக்கின்றனர்"

      ஆகவே இந்தி மொழிதான் மத்திய அரசின் ஆட்சி மொழியாக இருக்கும். நாம் (தமிழன்) என்ன கூக்குரலிட்டாலும் எதுவும் நடக்காது. ஏனெனில் மத்திய அரசைப் பகைத்துக்கொண்டு தமிழ்நாடு வாழ முடியாது. வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம் இவற்றிற்கெல்லாம் கோடிக்கணக்கில் பணம் கொடுப்து யார்? அப்படி பணம் வராவிட்டால் கட்சியின் மற்றும் தனி நபர்களின் கஜானா எப்படி நிரம்பும்?

      நான் எங்க ஆட்களைத் திருப்திப்படுத்த என்னவெல்லாமோ நாடகம் போடுவோம், நீங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க என்பதுதான் மத்திய-மாநில அரசுகளின் எழுதப்படாத ஒப்பந்தம்.

      நீக்கு