வால்பாறைக்குப் போகவேண்டும் என்று பலநாட்களாக கனவு கண்டு கொண்டிருந்தது இப்போது நிறைவேறியது.
வால்பாறை ஒரு சிற்றூர். மேற்கு மலைத்தொடரில் 4000 அடி உயரத்தில் உள்ளது. மிதமான குளிரும் நல்ல காற்றும் உள்ள ஊர். தென்மேற்குப் பருவ மழை காலத்தில் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டிய ஊர். எங்கள் வருகையை முன்னிட்டு மழைக்கு லீவு விட்டிருந்தார்கள்.
கோவையிலிருந்து 105 கி.மீ. தூரம். பொள்ளாச்சி சென்று அங்கிருந்து ஆழியார் அணை வழியாக மலை அடிவாரத்தை அடைந்தோம். அங்கிருந்து சரியாக 40 கி.மீ. தூரம்.
இந்த 40 கி.மீ. தூரத்தில் 40 ஹேர்பின் பெண்டுகள், அதாவது கொண்டை ஊசி வளைவுகள். ரோடு அருமையாக இருக்கிறது. ஆனால் இத்தனை வளைவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயமும் மனதிற்குள் இருந்தது.
கார் ஒட்டுபவர்கள் கவனத்திற்கு. நான் கூறும் நான்கு விதிகளையும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
1.
பயம் வேண்டும். எவ்வளவு அனுபவம் வாய்ந்த ஓட்டுனராக இருந்தாலும் எந்த சமயத்திலும் விபத்து நேரலாம் என்ற பயம் மனதிற்குள் இருக்கவேண்டும். எப்போது நான் விபத்துக்கு அப்பாற்பட்டவன் என்று ஒரு ஓட்டுனர் நினைக்கிறாரோ அடுத்த நொடி அவர் விபத்தைச் சந்திப்பார்.
2.
பொறுமை வேண்டும். வாகனம் ஓட்டும்போது பொறுமை அதிகம் வேண்டும். ரோட்டில் போகும் மற்ற வாகனங்கள், மனிதர்கள், விலங்குகள், குண்டு குழிகள், இவை எல்லாம் பொறுமையைச் சோதிக்கும்.
3.
கவனம் சிதறாமை. உங்கள் கவனம் முழுவதும் கார் ஓட்டுவதில்தான் இருக்கவேண்டுமே தவிர, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதிலோ, அரட்டை அடிப்பதிலோ இருக்கக் கூடாது.
4. வாகனத்தின் தன்மை. நீங்கள் ஓட்டும் வாகனத்தின் தன்மையை நன்கு அறிந்து, அதற்கு ஏற்ற மாதிரி ஓட்டவேண்டும். 5 பேர் போகக்கூடிய வாகனத்தில் 10 பேர் ஏறிக்கொண்டு சென்றால் விபத்து நிச்சயம். 80 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வாகனத்தை 120 கி.மீ. வேகத்தில் ஓட்டினால் விளைவு விபரீதமாகத்தான் இருக்கும்.
இந்த விதிகளை மறக்காமல் கடைப்பிடித்ததினால் எங்கள் பயணம் விபத்தில்லாமல் இனிதே இருந்தது. ரோடு அருமையாக இருந்தது. வழியெங்கிலும் பசுமையான காட்சிகள்.
இந்த 40 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்தோம்.
மதியம் சாப்பாட்டு நேரத்திற்கு வால்பாறை போய்ச்சேர்ந்தோம். நணபர் கையோடு தயிர் சாதம் கொண்டு வந்திருந்தார். ஆகவே உணவு விடுதியைத் தேடாமல் எங்கள் மதிய உணவை முடித்தோம்.
எங்கள் பொது நண்பர் ஒருவர் வால்பாறையில் பொறியாளராக இருக்கிறார். அவர் எங்களுக்குத் தங்க நல்ல அரசு விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். நல்ல வசதிகளும் விசாலமான அறைகளும் இருந்தன.
விடுதிக்கு அருகாமையில் (ஐந்து கி.மீ. தூரத்தில்- காட்டுப்பாதை-போகவர 2 மணி நேரம் மட்டுமே ஆகும்) ஒரு தம்பதியினர் நடத்தும் 5 ஸ்டார் ரெஸ்டாரென்ட் ஒன்று இருக்கிறது.
இட்லி, சப்பாத்தி, சட்னி, சாம்பார், குருமா, கோழி குருமா, கோழி வருவல் எல்லாம் வீட்டு முறைப்படி தயாரித்துக் கொடுத்தார். அன்னதாதா அவர். நீடு வாழ்க.
போகும் வழியில் கீழ் நீரார், மேல் நீரார் என்று இரண்டு அணைகளைப் பார்த்தோம்.
கீழ் நீரார் அணை
மேல் நீரார் அணை
இந்த அணைகளிலிருந்து சுரங்கங்கள் மூலமாக நீர் சோலையார் டேமுக்கு வந்து அங்கிருந்து மீண்டும் சுரங்கங்கள் மூலமாக ஆழியார், மற்றும் திருமூர்த்தி அணைக்கட்டுகளுக்கு வந்து சேருகின்றன.
இரவு உணவு முடித்து படுத்ததுதான் தெரியும். விழிப்பு வந்தபோது நன்கு விடிந்திருந்தது. பயணக் களைப்பு அப்படி ஒரு தூக்கத்தைப் பரிசாக்கியிருந்தது.
காலையில் பெட் காப்பி இல்லையென்றால் என்ன வாழ்க்கை? காப்பி கிட் (சொந்த தயாரிப்பு) கொண்டு போயிருந்ததினால் நல்ல காப்பி போட்டு சாப்பிட்டோம்.
குளித்து முடித்து 8 மணிக்கு கிளம்பி நமது 5 ஸ்டார் ரெஸ்டாரென்டில் டிபன் சாப்பிட்டு விட்டு பாலாஜி கோவில் பார்க்கப்போனோம். வால்பாறையிலிருந்து 6 கி.மீ. தூரம். இது ஒரு தனியார் கோவில். நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கெடுபிடிகள் அதிகம். தனியார் வாகனங்கள் ஒரு கி.மீ. தூரத்திலேயே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து நடந்துதான் போகவேண்டும். டாக்சிகள் அனுமதிக்கப்படுகின்றன.
காலை 7 மணியிலிருந்து பகல் 12 வரையிலும் மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
பிறகு சோலையார் டேம் பார்க்கக் கிளம்பினோம். வால்பாறையிலிருந்து 20 கி.மீ. தூரம். நல்ல ரோடு. வழியெங்கிலும் தேயிலைத் தோட்டங்கள்தான். மரகதக் கம்பளம் விரித்த மாதிரி எங்கு பார்த்தாலும் பசுமைதான். ஆயுசுக்கும் அங்கேயே இருந்துவிடலாம் என்று மயக்கும் இயற்கைக் காட்சிகள்.
இந்த டேமிலிருந்துதான் நீர் ஆழியாருக்கும் திருமூர்த்தி டேமுக்கும் வருகிறது.
மதிய உணவு இங்கே சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பவும் விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினோம். திரும்பும் வழியிலேயே நமது 5 ஸ்டார் ரெஸ்டாரென்டில் நமக்காக ஸ்பெஷலாகத் தயாரித்த நாட்டுக்கோழி வருவலும், குருமாவும், சப்பாத்தியையும் வாங்கிக்கொண்டோம். ரெஸ்ட் ஹவுசில் அவைகளை ஒரு கை பார்த்தோம். அந்த மிதமான குளிருக்கு ரெஸ்ட் ஹவுஸ் அடக்கமாக இருந்தது. தூக்கம் நன்றாக வந்தது.
அடுத்த நாள் எழுந்து குளித்து விட்டு, நமது ரெஸ்டாரென்டில் காலை டிபன் முடித்து விட்டு, எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு, திரும்பவும் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து ஆழியார் டேம் பக்கத்திலுள்ள குரங்கு அருவிக்கு வந்து சேர்ந்தோம்.
அருவியில் குளிக்க இன்னும் இரண்டு கி.மீ. தொலைவு சென்று டிக்கட் வாங்கு வரவேண்டும் என்றார்கள். ஆகவே குளிக்கும் திட்டத்தை கைவிட்டோம். கீழே இறங்கிப் பார்க்கலாம் என்று கார் கதவைத் திறந்தேன். கையில் ஒரு சாக்கலேட் பாதி சாப்பிட்டு விட்டு வைத்திருந்தேன். இரண்டு குரங்குகள் வந்து மிரட்டி அந்த சாக்கலேட்டைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டன. ஒன்றும் செய்ய முடியவில்லை.
அங்கிருந்து வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவிலுக்குச் சென்றோம். உள்ளே சென்று பார்க்க ஏறக்குறைய அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி உள்ளே போனோம். ஒரே ஒரு கட்டிடத்தை மட்டும் பார்க்க அனுமதித்தார்கள். நமக்கு இருக்கும் அறிவே போதும் என்று திரும்பி விட்டோம்.
இப்படியாக மூன்று நாள் வால்பாறையைப் பார்த்தோம்.