வியாழன், 26 ஜூலை, 2012

விளையாட்டுகளும் போட்டிகளும்.



மனிதன் ஒரு குழு மிருகம். அதாவது அவன் குழுவாக இருக்க விரும்புபவன். யாருடனும் சேராமல் தனியாக இருப்பவனை எல்லோரும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பார்கள். (என்ன சந்தேகம், மனநோய் பீடித்தவன் என்ற சந்தேகம்தான்).

குழுவாக சேர்ந்து என்ன செய்யமுடியும்? அதற்காக கண்டுபிடிக்கப்பட்டதுதான் விளையாட்டுகள். பழங்காலத்திலிருந்தே பல வகையான விளையாட்டுகள் விளையாடப்பட்டு இருக்கின்றன. 

விளையாட்டுகளுடன் கூடவே அவற்றை வேடிக்கை பார்ப்பதும் ஒரு குழு செயலாகவே இருந்து வந்திருக்கிறது. ஆகவே விளையாட்டு என்றாலே விளையாடுபவர்கள் சிலரும் அதை வேடிக்கை பார்ப்பவர் பலரும் சேர்ந்த செயல்பாடாகவே இருந்து வந்திருக்கிறது.

விளையாட்டுகள் அந்தந்த நாடுகளின் கலாசாரம், கால நிலை, வாழ்க்கை முறைகள் ஆகியவைகளை அனுசரித்தே உருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் மஞ்சு விரட்டு என்று சொல்லப்படும் ஜல்லிக்கட்டு தமிழர்களின் வாழ்க்கை முறையான விவசாயத்தை ஒட்டி அமைந்த விளையாட்டாகும். காளைகள் விவசாயத்திற்கு இன்றியமையாதவை. அவைகளைக் கட்டுப்படுத்தி வேலை வாங்குவது அவசியமான ஒன்று. அதையே ஒரு வீர விளையாட்டாக அமைத்துக் கொண்டார்கள்.

பல்லாங்குழி, பாண்டி ஆகிய விளையாட்டுகள் சிறுமிகளுக்கு உகந்ததாக அமைந்தன. இந்த விளையாட்டுகளுக்கு எந்த செலவும் இல்லை. எங்கு வேண்டுமானாலும் விளையாடலாம். குழுவாகப் பொழுது போக்குவதற்கு வசதியாக இருந்தன.

சாதாரணமாக விளையாடக்கூடிய விளையாட்டுகள் கால ஓட்டத்தில் வளர்ச்சி பெற்று பல சட்ட திட்டங்களுடன் வளர்ச்சியடைந்தன. கபடி என்று சொல்லப்படும் விளையாட்டு கிராமத்தில் பத்து பேர் கூடினால் விளையாடக்கூடிய விளையாட்டாக இருந்த காலம் மாறி இன்று அது ஒரு தேசிய விளையாட்டாக பல சட்டதிட்டங்களுடன் மாறி விட்டது.

பொதுவாக எல்லா விளையாட்டுகளும் உடலுக்கு ஒரு பயிற்சியாகவே இருந்து வந்திருக்கின்றன. இங்கிலாந்து நாடு ஒரு குளிர்ப் பிரதேசம். வெயிலைக் காண்பதே அபூர்வம். அந்த நாட்டில் வெய்யில் வரும்போது குளிர் காய்வதற்காக ஏற்பட்ட விளையாட்டு கிரிக்கெட். அதுவும் ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக விளையாடுவார்கள். விளையாடுபவர்களுக்கும் வேடிக்கை பார்ப்பவர்களுக்கும் வெய்யிலின் பயன் கிடைத்து உடலுக்கு ஆரோக்கியம் கிடைத்தது. இதே மாதிரிதான் கோல்ப்ஃ என்ற விளையாட்டும். ஒரு பந்தை நாற் முழுவதும் தட்டிக்கொண்டே போவது.

குளிர் பிரதேசத்துக்காரன்  வெயில் காய்வதற்காக ஏற்படுத்திய விளையாட்டுகளை வெயில் பிரதேசங்களில் எதற்காக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது எனக்குப் புரியாத புதிர்களில் ஒன்று. தவிர, நாள் கணக்கில் வெய்யிலில் நின்று கொண்டிருப்பது உஷ்ணப் பிரதேசங்களில் முடியாததும் தேவையில்லாததும் ஆகும்.

நம் நாட்டுக்கு உகந்தது ஒரு மணி நேரம் விளையாடக்கூடிய கால் பந்தும் ஹாக்கி விளையாட்டும்தான். ஒரு காலத்தில் உலக அரங்கில் நெம்பர் ஒன்றாக இருந்த நம் ஹாக்கி டீம் இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருக்கிறது. காரணம் நம் அரசு கிரிக்கெட்டுக்கு கொடுக்கும் ஆதரவை கால் பந்துக்கும் ஹாக்கிக்கும் கொடுக்காததுதான்.

விளையாட்டு வெறும் பொழுது போக்காக மட்டும் இல்லாமல் அதில் ஜெயிப்பவர் கெட்டிக்காரர் என்ற எண்ணம் எப்போதும் உண்டு. இதனால் விளையாட்டு என்பது குழுவாகப் போட்டி போடுவதுடன் நில்லாமல் யார் ஜெயிக்கிறார்களோ அவர்களே கெட்டிக்காரர்கள் என்று பேசப்பட்டார்கள். நாளாக நாளாக இந்த விளையாட்டுகளில் யார் ஜெயிப்பார்கள் என்று பணையம் கட்டுவதும் தொடங்கியது.

கிரிக்கெட்டில் இது பெரும் பூதமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது என்று சொல்கிறார்கள். எல்லா விளையாட்டுகளிலும் இந்த சூதாட்டம் பரவி இன்று சூதாட்டம் இல்லாத விளையாட்டே இல்லை என்று ஆகிப்போனது. 

மனித நாகரிக வளர்ச்சியின் அடையாளமாகக் கருதப்பட்ட விளையாட்டுகள் இவ்வாறு சூதாட்டமாக மாறிப்போனது பெரிய கலாச்சார சீர்கேடு. இந்த நிலை மாறுமா என்ற கேள்விக்கு காலம்தான் பதிலளிக்கவேண்டும்.

புதன், 25 ஜூலை, 2012

இந்திய தேசியக் கலாச்சாரம்



ஒவ்வொரு நாட்டிற்கும், ஏன் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனி கலாசாரங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தை எடுத்துக் கொண்டால் அங்கிருக்கும் வெள்ளைக்காரர்கள் தானுண்டு, தன் வேலையுண்டு என்று இருப்பார்கள். பொது இடங்களிலோ, பயண ஊர்திகளிலோ, மற்றவர்களிடம் அநாவசியமாகப் பேசமாட்டார்கள். முன்பின் தெரியாதவர்களிடம் வலியப் போய் பேசுவதை அநாகரிகமாக கருதுவார்கள். எங்கு சென்றாலும் தன்னுடைய முறை வரும் வரையிலும் காத்திருப்பார்கள். அடுத்தவனை முந்திக்கொண்டு செல்லமாட்டார்கள்.

தமிழர்களின் குணமே வேறு. அடுத்தவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவன் காட்டும் அக்கறையில் பத்தில் ஒரு பங்கு தன்னைப்பற்றி சிந்தித்தான் என்றால் அவன் எவ்வளவோ முன்னேறியிருப்பான். கேரளாக்கரர்களை எடுத்துக்கொண்டால் உலகின் எந்த மூலையில் கொண்டு போய் விட்டாலும் அவன் அங்கும் ஒரு பிழைக்கும் வழியைத் தேடிக்கொள்வான். பஞ்சாபியர்கள் எதையும் துணிந்து செய்வார்கள்.

ஜப்பான்காரர்கள் உழைப்பிற்குப் பேர் போனவர்கள். எந்த சங்கடம் வந்தாலும் அதை சகித்துக் கொண்டு, மேற்கொண்டு செய்ய வேண்டியதைச் செய்யும் பண்புள்ளவர்கள். ஐரோப்பியர்கள் எதையும் திட்டமிட்டு ஒரு ஒழுங்குடன் செயல்படுவார்கள். உணர்ச்சி வசப்பட்டு ஆத்திரமாக எதையும் செய்யாதவர்கள்.

இந்த வகையில் இந்தியர்களைப் பற்றிச் சொல்லவேண்டுமென்றால் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. வெளிநாடுகளில் இந்தியர்கள் எல்லோரும் ஏமாற்றுக்காரர்கள் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. அவர்களை எந்தக் காரியத்திலும் முழுதாக நம்ப முடியாது. கையூட்டு கொடுத்தால் எந்த இந்தியனையும் விலைக்கு வாங்கி விடலாம். இத்தகைய எண்ணங்களே அயல் நாட்டில் இந்தியர்களைப் பற்றி பேசப்படுகிறது.

இதற்குக் காரணம் அவர்களுடைய நேரடி அனுபவங்களே ஆகும். மிளகாய்த்தூள் ஏற்றுமதிக்கு ஒரு ஆர்டர் கிடைத்தது. சில நாட்கள் ஒழுங்காக அனுப்பினார்கள். பிறகு செங்கல்லை நன்கு பொடியாக்கி மிளகாய்த் தூளுடன் கலப்படம் செய்து அனுப்பினார்கள். ஆர்டர் கேன்சல் செய்யப்பட்டது.

“வின்கா ரோசியா” என்று அழைக்கப்படும் சுடுகாட்டு மல்லி எனப்படும் செடி மருந்து தயாரிப்புக்காக ஏற்றுமதி ஆர்டர் கொடுத்தார்கள். சுடுகாட்டு மல்லியுடன் பல செடிகளையும் சேர்த்து அனுப்பி அந்த ஆர்டரைப் பாழாக்கினார்கள். திருப்பூர் பனியன் தொழிற்சாலைகள் பல மூடுவிழா நடத்தியதற்குக் காரணம் நம்பிக்கையின்மைதான்.

சமீபத்தில் மாருதி தொழிற்சாலையில் ஏற்பட்ட தகராறுக்கு காரணம் இந்தியர்களின் அதீத உணர்ச்சி வசப்படும் தன்மைதான். இது மாதிரி பல நிகழ்ச்சிகள் இந்தியத் தொழில் துறையில் தினமும் நடக்கின்றன. பீகார் சுரங்கத் தொழில் மாஃபியாவின் கைகளில் அகப்பட்டுக்கொண்டு தத்தளிக்கிறது. வெளிநாட்டுக்காரன் எந்த நம்பிக்கையில் இங்கு முதலீடு செய்ய வருவான்.

அப்துல் கலாம் கண்ட வல்லரசுக் கனவு எப்பொழுது பலிக்கப்போகிறதோ?

செவ்வாய், 24 ஜூலை, 2012

இல்லறம் நடத்துவது எப்படி?



இதென்ன கேள்வி என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது. இப்டித்தான் பல விஷயங்களை நாம் அறிந்ததாக நினைத்துக்கொண்டு இருப்போம். ஆனால் அவைகளில் மேலோட்டமாக ஏதோ சில விஷயங்கள்தான் தெரிந்திருப்போம்.

இல்லறம் என்பது ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வது என்றுதான் பெரும்பாலோர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிலுள்ள பல நுணுக்கங்களை ஆராய்ந்தால்தான் இல்லறத்தில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா என்று மலைப்பாக இருக்கும்.

தன் சந்ததியை தொடரவேண்டும் என்று ஓரணு ஜீவராசிகளிலிருந்து மனிதன் வரை ஆசைப்படுகிறான். இது இயற்கையில் ஏற்பட்ட ஒரு உந்துதல். மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் அனைத்தும் இந்த ஒரு நோக்கத்திற்காகவே உயிர் வாழ்கின்றன. ஆனால் மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று அனைத்து உயிர்களிலும் மேம்பட்டவனாக இருக்கிறான். அவனுக்கு பகுத்தறியும் திறன் இருப்பதால் பல விதங்களில் தன்னை உயர்த்திக் கொண்டுள்ளான்.

அப்படி வாழும் மனிதன் மற்ற ஜீவன்களிடமிருந்து வேறுபட்டு பல சமூகக் கோட்பாடுகளை தனக்காகவும் சமுதாயத்தின் மேம்பாட்டுக்காகவும் ஏற்படுத்தியுள்ளான். இந்தக் கோட்பாடுகள் ஒரு நாளில் ஏற்பட்டவை அல்ல. பல நூற்றாண்டு காலமாக மனித சமுதாயம் ஏற்படுத்தியுள்ள கோட்பாடுகள். இந்தக் கோட்பாடுகளின்படி வாழ்பவனே மனிதன் எனப்படுகிறான். மற்றவர்கள் மனித உருவில் வாழ்பவர்கள் மட்டுமே.

இல்லறம் இனிமையாக அமைய 10 யோசனைகள் கொடுத்திருக்கிறேன். தேவையுள்ளவர்கள் அனுசரிக்கலாம்.
  
   1.   பொறுப்பை உணருங்கள். குடும்பம் என்று ஆகிவிட்டால் குடும்பத்தலைவன் என்கிற பொறுப்பு உங்களுடையது. குடும்பத்திலுள்ள அனைவரின் சுக துக்கங்களும் உங்களுடையதே.
   2.   ஒரு நல்ல தொழில் வேண்டும். வாழ்வதற்கு பொருளாதாரம் அவசியம் தேவை. அது இல்லாவிட்டால் உங்களுக்கு குடும்பம் தேவையில்லை.
   3.   சேமிப்பு மிக மிக அவசியம். உங்கள் வருமானத்தில் பாதியில்தான் உங்கள் குடும்ப செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். மீதியை சேமியுங்கள். அதில் ஒரு பாதி எதிர்பாராத செலவுகளுக்கு உதவும். மீதி பாதி நீண்ட கால சேமிப்பாக இருக்கும்.
   4.   செலவினங்களுக்கு ஒரு திட்டம் போடுங்கள். அப்போதுதான் செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும். சிக்கனம்தான் செழிப்புக்கு வழி.
   5.   ஆடம்பரத்திற்கு ஆசைப்படாதீர்கள். உணவு விடுதிகளில் சாப்பிடுவது வீண் செலவு தவிர சுகாதாரக் கேடும் கூட.
   6.   எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள். உங்கள் எதிர்காலத்தைப் பற்றி அவர்களிடம் விவாதியுங்கள்.
   7.   பிரச்சினைகளை வளர விடாதீர்கள். அவ்வப்போது அவைகளுக்குத் தீர்வு கண்டு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள்.
   8.   உங்கள் குழந்தைகளுக்கு நல்ல கல்வி, நல்ல ஒழுக்கம் ஆகியவைகளைக் கற்றுக்கொடுப்பது உங்கள் கையில்தான் உள்ளது.
   9.   ஆணானாலும் பெண்ணானாலும் காலா காலத்தில் அவர்களின் கல்யாணங்களை செய்து வைப்பது பெற்றோர்களின் கடமை. இதை எப்போதும் மறக்கக்கூடாது.
   10. தன் கடைசி காலத்தை சிரமமில்லாமல் கழிக்கப் போதுமான ஆதாரத்தை தேடிக்கொள்ள வேண்டும்.


திங்கள், 23 ஜூலை, 2012

இலக்கியமும் இலக்கணமும் நாகரிகமும்



எது முதலில் தோன்றியது? இலக்கணமா அல்லது இலக்கியமா? இது பட்டி மன்ற விவாதத்திற்கு மிகவும் ஏற்ற ஒரு பொருள். நாள் கணக்கில் விவாதிக்கலாம். இந்தப் பொருள் பற்றி விவாதிக்கும் முன் நாம் ஒன்றைத் தெளிவு படுத்திக்கொண்டால் விவாதமே தேவையிருக்காது.

எது முதலில் தோன்றியது? மொழியா அல்லது மொழியின் இலக்கணமா? இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க வாய்ப்பில்லை. மொழிதான் முதலில் தோன்றியிருக்கவேண்டும். கற்காலத்தில் மனிதன் சைகளினால்தான் பேசினான் என்று சரித்திரங்கள் சொல்லுகின்றன. அதன்பிறகுதான் அவன் ஒலிகளினால் பேச ஆரம்பித்திருக்கவேண்டும்.

ஒவ்வொரு பகுதி மக்களும் தங்களுக்குள் கருத்துப் பரிமாற்றம் செய்ய தனித்தனியாக மொழிகள் உருவாகின. அவை வலுப்பெற்று அவைகளுக்கு வரிவடிவம் ஏற்பட்ட பின் அந்தந்த மொழிகளில் இலக்கியங்கள் உருவாகின. இந்நிலையில் அம்மொழிக்கு இலக்கணம் என்று ஒன்று இருந்திருக்க முடியாது. ஓரளவு இலக்கியங்கள் உருவான பின்புதான் அந்த மொழிக்கு இலக்கணம் உருவாகியிருக்கும்.

ஆகவே இலக்கியம்தான் முதல், இலக்கணம் இரண்டாவது என்பது தெளிவாகின்றது. இந்த அடிப்படையில்தான் ஒரு சமுதாயத்தின் நடைமுறைகளும் உருவாகின்றன. மனிதன் கூட்டாக வாழவேண்டியதின் அவசியத்தை உணர்ந்தபின் சமுதாயங்கள் ஏற்பட்டன. இந்த சமுதாயங்கள் கட்டுக்கோப்பாக வாழ சிலபல விதிமுறைகள் தேவைப்பட்டன. அந்த சமுதாயத்தின் மூத்த அறிஞர்கள் கூடிப்பேசி இந்த வரைமுறைகளை உருவாக்கியிருப்பார்கள்.

நல்ல விதிமுறைகள் உள்ள சமுதாயங்களே நாகரிகம் பெற்றவை என்று போற்றப்படுகின்றன. விதிமுறைகள் மட்டும் இருந்தால் போதுமானதல்ல. அவைகளை நடைமுறையில் அந்த சமுதாயத்தினர் அனைவரும் கடைப்பிடிக்கவேண்டும். அப்போதுதான் அந்நாகரிகம் முழுமை அடைகின்றது. அப்டிப்பட்ட நாகரிகமடைந்த சமுதாயங்கள் உள்ள நாடுகள்தாம் பொருளாதாரத்திலும் முன்னேறுகின்றன.

இத்தகைய விதிகள் இலக்கியத்திற்கும் சமுதாயத்திற்கும் பொதுவானவை, அவைகள் மீறப்படும்போதுதான் சிக்கல்கள் உருவாகின்றன. மொழிகளும் சமுதாயங்களும் அழிவது இதனால்தான். தனிமனித ஒழுக்கம்தான் சமுதாய ஒழுக்கமாக அமைகிறது. தனிமனிதனின் மொழிப் புலமைதான் அந்த மொழி வளர்வதற்கு ஆதாரமாக இருக்கின்றது. இதை நாம் புரிந்து நடக்கவேண்டும்.

சனி, 21 ஜூலை, 2012

வாலை விட்டு ஆப்பை எடுத்த குரங்கு

நான் ஒரு சரியான வாழைப்பழச் சோம்பேறி. நாளைக்கு தள்ளிப்போடக்கூடிய வேலைகளை நாளை மறுநாளைக்கு தள்ளிப் போடுபவன். ஒரு நொடி சலன மனநிலையில் வாலை பாதி அறுத்த மரத்தின் இடைவெளியில் விட்டுவிட்டு ஆப்பை எடுத்துவிட்டேன். இப்போது வால் சிக்கிக்கொண்டு விட்டது. "காள்,காள்" என்று கத்தினால் யார் உதவிக்கு வரப்போகிறார்கள்?


விஷயம் என்னவென்றால், ஒரு வாரத்திற்கு முன் ஒரு பதிவுலக நண்பர் ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார். அதில் என்னை இந்திரன், சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்துவிட்டு, உங்களை தமிழ்மண நட்சத்திரமாக ஆக்க சிபாரிசு செய்யட்டுமா என்று கேட்டிருந்தார். நான் சினிமா நட்சத்திரம் மாதிரியாக்கும் என்று முன்பின் யோசிக்காமல் சரி என்று சொல்லிவிட்டேன்.


பிறகு தமிழ்மண நட்சத்திரப் பதிவர் நிர்வாகி ஒரு அஞ்சல் அனுப்பியிருந்தார் அதில் உங்களை நட்சத்திரமாக்குவதில் தமிழ்மணம் பெருமையடைகிறது, இத்தியாதி, இத்தியாதி, என்று சொல்லிவிட்டு, வருகிற ஜூலை மாதம் 23 ம் தேதி தொடங்குகிற வாரத்தில் நீங்கள் தமிழ்மண வானில் நட்சத்திரமாக ஜொலிப்பீர்கள் என்று முடித்திருந்தார். என்னுடைய ஒப்புதல் வேண்டுமென்று கேட்டிருந்தார்.


உங்களுக்குத் தெரியும், நான் கணிணியைப் பார்ப்பது காலை 3 மணியிலிருந்து என்று. தூக்கக் கலக்கத்தில் சரி என்று பதில் போட்டுவிட்டேன். இப்போதுதான் அந்த அஞ்சலை முழுமையாகப் பார்த்தேன். அதில் ஒரு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தது. அதை கிளிக் செய்து பார்த்தபோதுதான் வாலை விட்டுவிட்டு ஆப்பை எடுத்து விட்டேன் என்பது மண்டையில் உறைத்தது.


நான் வருகிற ஜூலை 23 ம் தேதி முதல் தினம் ஒரு பதிவு வீதம் ஒரு வாரம் பதிவு போடவேண்டுமாம். அவை நட்சத்திரப் பதிவுகள் என்று தமிழ்மணத்தில் தனியாக கட்டம் கட்டி காண்பிப்பார்களாம். என்னுடைய தலை கழுத்தில் நிற்காதாம். என்னை அநேகமாக இந்திய ஜனாதிபதியாக இருக்கும்படி பிரதம மந்திரி கெஞ்சுவாராம். இப்படி பல ஆம்கள்.


உரலுக்குள் தலையைக் கொடுத்த பின் உலக்கைக்குப் பயந்தால் ஆகப்போகிறது என்ன? நடப்பவை நடந்தேதான் தீரும். துணிந்து விட்டேன். எல்லோருக்கும் எனது வாழ்த்துக்களும் என் நட்சத்திரப் பதிவுகளைப் படிப்போருக்கு என் அனுதாபங்களும். வாழ்க பதிவுலகம்.

பின்குறிப்பு. சரியான படம் கூகுளில் கிடைக்கவில்லை. ஆகவேதான் இந்தப்படம். இதுவும் என் நிலையை சரியாகத்தான் காட்டுகிறது.

செவ்வாய், 17 ஜூலை, 2012

ஆஹா, நானூறாவது மொக்கை



இது என்னுடைய 400 வது பதிவு. உடனே எல்லோரும் வாழ்த்துப் பின்னூட்டங்கள் போடவேண்டாம். ஏனெனில் இதில் ஒன்றும் பெரிய பெருமை இருப்பதாக நான் நினைக்கவில்லை. "ஊரான் வீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே" என்கிற மாதிரி கூகுள்காரன் புண்ணியத்தில நாம இலவசமா பதிவு போட்டுட்டு இருக்கிறோம். பதிவு ஒன்றுக்கு 10 ரூபாய் என்று சார்ஜ் போட்டிருந்தால் 95 சதம் பேர்கள் காணாமல் போயிருப்பார்கள்.

பதிவுகளில் மொக்கைகள்தான் அதிகம். அதில் யாருடையது பெரிய மொக்கை என்று கண்டு பிடித்துச் சொல்ல பல திரட்டிகள் இருக்கின்றன. என்னுடைய பதிவுதான் அசல் மொக்கை என்று தமிழ்மணம் சான்றிதழ் கொடுத்திருக்கிறது.

இப்போ மேட்டருக்கு வருவோம். எனக்கு ரொம்ப நாளா ஒரு "ஸ்லேட்" வாங்க வேண்டுமென்று ஆசை. ஸ்லேட்டுன்னாத் தெரியும் என்று நினைக்கிறேன். அதாங்க டேப்லெட் பி.சி. அதாவது டேப்ஃ அல்லது செல்லமா ஸ்லேட் என்று சொல்லப்படும் லேடஸ்ட் கேட்ஜட்.

அமெரிக்காவிலிருந்து வந்திருந்த என் நண்பரின் பேத்தி ஒரு ஸ்லேட் வைத்திருந்தாள். அதில் என்னென்னமோ வேடிக்கையெல்லாம் காட்டினாள். அதைப் பார்த்த எனக்கும் அது மாதிரி ஒன்று வாங்வேண்டும் என்ற ஆசை வந்தது. என்ன விலை என்று கேட்டேன். சும்மா 600 டாலர்தான் தாத்தா என்று சொன்னாள். எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

விலையைக் கேட்டல்ல. என்னைத் தாத்தா என்று கூப்பிட்டதால்தான். இதுவரை என்னை யாரும் அப்படிக் கூப்பிட்டதில்லை.

சரி, 600 டாலருக்கு எத்தனை ரூபாய் என்று மனக்கணக்கு போட்டதில் 30000 ரூபாய் என்று தெரிந்தது. வாங்கிடலாம், ஆனால் வீட்டம்மாவிற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் இந்த யோசனையைக் கைவிட்டேன்.

இந்த 400 வது பதிவிற்காக ஏதாவது செய்யவேண்டுமே என்று எங்கள் ஊர் கடைவீதிக்கு சென்றேன். அங்கு நான் வழக்கமாகப் போகும் கடைக்குப் போய் ஸ்லேட் இருக்கிறதா என்று கேட்டேன். அவர் இருக்கிறது என்று சொன்னார். என்ன விலை என்று கேட்டேன். அவர் 30 ரூபாய் என்று சொன்னார்.

எங்க ஊரில் ஆயிரம் ரூபாயை ஒரு ரூபாய் என்று சொல்லும் வழக்கம் உண்டு. நான் அதை நினைவில் கொண்டு என்ன பெரிய ரூபாயில் முப்பதா என்று கேட்டேன். இல்லைங்க, வெறும் 30 ரூபாய்தானுங்க என்றார்.  அட, வெலை ரொம்ப சலீசா இருக்குதே அப்படீன்னு நெனச்சிக்கிட்டு ஒண்ணு கொடுங்க என்றேன். அவர் ஒரு பையில் போட்டுக் கொடுத்தார்.

அதை வீட்டில் வந்து பிரித்துப் பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். நீங்களும் பாருங்கள். சரி, வாங்கினது வாங்கியாய் விட்டது. உருப்படியாய் எங்கேஜ்மென்ட்டுகளையாவது எழுதி வைப்போம் என்று எழுதி வைத்திருக்கிறேன். 


திங்கள், 16 ஜூலை, 2012

வால்பாறை சுற்றுலா

வால்பாறைக்குப் போகவேண்டும் என்று பலநாட்களாக கனவு கண்டு கொண்டிருந்தது இப்போது நிறைவேறியது.

வால்பாறை ஒரு சிற்றூர். மேற்கு மலைத்தொடரில் 4000 அடி உயரத்தில் உள்ளது. மிதமான குளிரும் நல்ல காற்றும் உள்ள ஊர். தென்மேற்குப் பருவ மழை காலத்தில் கொட்டோ கொட்டென்று கொட்ட வேண்டிய ஊர். எங்கள் வருகையை முன்னிட்டு மழைக்கு லீவு விட்டிருந்தார்கள்.

கோவையிலிருந்து 105 கி.மீ. தூரம். பொள்ளாச்சி சென்று அங்கிருந்து ஆழியார் அணை வழியாக மலை அடிவாரத்தை அடைந்தோம். அங்கிருந்து சரியாக 40 கி.மீ. தூரம்.


இந்த 40 கி.மீ. தூரத்தில் 40 ஹேர்பின் பெண்டுகள், அதாவது கொண்டை ஊசி வளைவுகள். ரோடு அருமையாக இருக்கிறது. ஆனால் இத்தனை வளைவுகளை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்ற பயமும் மனதிற்குள் இருந்தது.

கார் ஒட்டுபவர்கள் கவனத்திற்கு. நான் கூறும் நான்கு விதிகளையும் எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

1. பயம் வேண்டும். எவ்வளவு அனுபவம் வாய்ந்த ஓட்டுனராக இருந்தாலும் எந்த சமயத்திலும் விபத்து நேரலாம் என்ற பயம் மனதிற்குள் இருக்கவேண்டும். எப்போது நான் விபத்துக்கு அப்பாற்பட்டவன் என்று ஒரு ஓட்டுனர் நினைக்கிறாரோ அடுத்த நொடி அவர் விபத்தைச் சந்திப்பார்.

2. பொறுமை வேண்டும். வாகனம் ஓட்டும்போது பொறுமை அதிகம் வேண்டும். ரோட்டில் போகும் மற்ற வாகனங்கள், மனிதர்கள், விலங்குகள், குண்டு குழிகள், இவை எல்லாம் பொறுமையைச் சோதிக்கும்.

3. கவனம் சிதறாமை. உங்கள் கவனம் முழுவதும் கார் ஓட்டுவதில்தான் இருக்கவேண்டுமே தவிர, இயற்கைக் காட்சிகளைப் பார்ப்பதிலோ, அரட்டை அடிப்பதிலோ இருக்கக் கூடாது.

4. வாகனத்தின் தன்மை. நீங்கள் ஓட்டும் வாகனத்தின் தன்மையை நன்கு அறிந்து, அதற்கு ஏற்ற மாதிரி ஓட்டவேண்டும். 5 பேர் போகக்கூடிய வாகனத்தில் 10 பேர் ஏறிக்கொண்டு சென்றால் விபத்து நிச்சயம். 80 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய வாகனத்தை 120 கி.மீ. வேகத்தில் ஓட்டினால் விளைவு விபரீதமாகத்தான் இருக்கும்.

இந்த விதிகளை மறக்காமல் கடைப்பிடித்ததினால் எங்கள் பயணம் விபத்தில்லாமல் இனிதே இருந்தது. ரோடு அருமையாக இருந்தது. வழியெங்கிலும் பசுமையான காட்சிகள்.

இந்த 40 கி.மீ. தூரத்தை 3 மணி நேரத்தில் கடந்தோம்.

மதியம் சாப்பாட்டு நேரத்திற்கு வால்பாறை போய்ச்சேர்ந்தோம். நணபர் கையோடு தயிர் சாதம் கொண்டு வந்திருந்தார். ஆகவே உணவு விடுதியைத் தேடாமல் எங்கள் மதிய உணவை முடித்தோம்.

எங்கள் பொது நண்பர் ஒருவர் வால்பாறையில் பொறியாளராக இருக்கிறார். அவர் எங்களுக்குத் தங்க நல்ல அரசு விடுதியை ஏற்பாடு செய்திருந்தார். நல்ல வசதிகளும் விசாலமான அறைகளும் இருந்தன.


விடுதிக்கு அருகாமையில் (ஐந்து கி.மீ. தூரத்தில்- காட்டுப்பாதை-போகவர 2 மணி நேரம் மட்டுமே ஆகும்) ஒரு தம்பதியினர் நடத்தும் 5 ஸ்டார் ரெஸ்டாரென்ட் ஒன்று இருக்கிறது.


இட்லி, சப்பாத்தி, சட்னி, சாம்பார், குருமா, கோழி குருமா, கோழி வருவல் எல்லாம் வீட்டு முறைப்படி தயாரித்துக் கொடுத்தார். அன்னதாதா அவர். நீடு வாழ்க.

போகும் வழியில் கீழ் நீரார், மேல் நீரார் என்று இரண்டு அணைகளைப் பார்த்தோம்.


கீழ் நீரார் அணை



மேல் நீரார் அணை

இந்த அணைகளிலிருந்து சுரங்கங்கள் மூலமாக நீர் சோலையார் டேமுக்கு வந்து அங்கிருந்து மீண்டும் சுரங்கங்கள் மூலமாக ஆழியார், மற்றும் திருமூர்த்தி அணைக்கட்டுகளுக்கு வந்து சேருகின்றன.

இரவு உணவு முடித்து படுத்ததுதான் தெரியும். விழிப்பு வந்தபோது நன்கு விடிந்திருந்தது. பயணக் களைப்பு அப்படி ஒரு தூக்கத்தைப் பரிசாக்கியிருந்தது.  
காலையில் பெட் காப்பி இல்லையென்றால் என்ன வாழ்க்கை? காப்பி கிட் (சொந்த தயாரிப்பு) கொண்டு போயிருந்ததினால் நல்ல காப்பி போட்டு சாப்பிட்டோம்.

குளித்து முடித்து 8 மணிக்கு கிளம்பி நமது 5 ஸ்டார் ரெஸ்டாரென்டில் டிபன் சாப்பிட்டு விட்டு பாலாஜி கோவில் பார்க்கப்போனோம். வால்பாறையிலிருந்து 6 கி.மீ. தூரம். இது ஒரு தனியார் கோவில். நல்லமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் கெடுபிடிகள் அதிகம். தனியார் வாகனங்கள் ஒரு கி.மீ. தூரத்திலேயே நிறுத்தப்படுகின்றன. அங்கிருந்து நடந்துதான் போகவேண்டும். டாக்சிகள் அனுமதிக்கப்படுகின்றன.
காலை 7 மணியிலிருந்து பகல் 12 வரையிலும் மாலை 3 மணியிலிருந்து 7 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 

பிறகு சோலையார் டேம் பார்க்கக் கிளம்பினோம். வால்பாறையிலிருந்து 20 கி.மீ. தூரம். நல்ல ரோடு. வழியெங்கிலும் தேயிலைத் தோட்டங்கள்தான். மரகதக் கம்பளம் விரித்த மாதிரி எங்கு பார்த்தாலும் பசுமைதான். ஆயுசுக்கும் அங்கேயே இருந்துவிடலாம் என்று மயக்கும் இயற்கைக் காட்சிகள்.



இந்த டேமிலிருந்துதான் நீர் ஆழியாருக்கும் திருமூர்த்தி டேமுக்கும் வருகிறது.

மதிய உணவு இங்கே சாப்பிட்டுவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்துக்கொண்டு திரும்பவும் விருந்தினர் மாளிகைக்குத் திரும்பினோம். திரும்பும் வழியிலேயே நமது 5 ஸ்டார் ரெஸ்டாரென்டில் நமக்காக ஸ்பெஷலாகத் தயாரித்த நாட்டுக்கோழி வருவலும், குருமாவும், சப்பாத்தியையும் வாங்கிக்கொண்டோம். ரெஸ்ட் ஹவுசில் அவைகளை ஒரு கை பார்த்தோம். அந்த மிதமான குளிருக்கு ரெஸ்ட் ஹவுஸ் அடக்கமாக இருந்தது. தூக்கம் நன்றாக வந்தது.

அடுத்த நாள் எழுந்து குளித்து விட்டு, நமது ரெஸ்டாரென்டில் காலை டிபன் முடித்து விட்டு, எல்லோரிடமும் விடை பெற்றுக்கொண்டு, திரும்பவும் 40 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து ஆழியார் டேம் பக்கத்திலுள்ள குரங்கு அருவிக்கு வந்து சேர்ந்தோம்.

அருவியில் குளிக்க இன்னும் இரண்டு கி.மீ. தொலைவு சென்று டிக்கட் வாங்கு வரவேண்டும் என்றார்கள். ஆகவே குளிக்கும் திட்டத்தை கைவிட்டோம். கீழே இறங்கிப் பார்க்கலாம் என்று கார் கதவைத் திறந்தேன். கையில் ஒரு சாக்கலேட் பாதி சாப்பிட்டு விட்டு வைத்திருந்தேன். இரண்டு குரங்குகள் வந்து மிரட்டி அந்த சாக்கலேட்டைப் பிடுங்கிக்கொண்டு ஓடிவிட்டன. ஒன்றும் செய்ய முடியவில்லை.

அங்கிருந்து வேதாத்திரி மகரிஷியின் அறிவுத் திருக்கோவிலுக்குச் சென்றோம். உள்ளே சென்று பார்க்க ஏறக்குறைய அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் இருக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கின்றன. எப்படியோ கெஞ்சிக் கூத்தாடி உள்ளே போனோம். ஒரே ஒரு கட்டிடத்தை மட்டும் பார்க்க அனுமதித்தார்கள். நமக்கு இருக்கும் அறிவே போதும் என்று திரும்பி விட்டோம்.

இப்படியாக மூன்று நாள் வால்பாறையைப் பார்த்தோம்.


வெள்ளி, 13 ஜூலை, 2012

கணக்குப் போடத் தெரியுமா?

இந்த விளம்பரத்தைப் பாருங்கள்.



உங்களில் எல்லோருக்கும் ஓரளவு கணக்குத் தெரிந்திருக்கும். இந்த விளம்பரத்தில் உள்ள மாதிரி செய்ய எந்தக் கம்பெனியினால் முடியும்? இந்த விளம்பரத்தை நம்பி முதலீடு செய்பவர்களை என்ன சொல்லி அழைக்கலாம்?

பிற்சேர்க்கை: நண்பர் அரிஃப் அவர்கள் ஒரு விளம்பரத்தை எல்லோருடைய கவனத்திற்காகவும் அனுப்பியுள்ளார்கள். அதையும் பிற்சேர்க்கையாக சேர்க்கிறேன்.

========================================================================

போனவாரம் நானும் எனது இரண்டு நண்பர்களும் வால்பாறை டூர் போய் வந்தோம். அதைப்பற்றி அடுத்த பதிவில்.


செவ்வாய், 10 ஜூலை, 2012

இந்தியா தலைகீழா மாறுது பாருங்க.

முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.


மறுநாள் கூட்டத்திற்கு தன்னுடைய புரொக்ராம்களை ரத்து செய்து விட்டு பிரதம மந்திரி வந்து விட்டார். அந்தக் கூட்டத்தில் கீழ்க்கண்ட திட்டங்களை அறிவித்தேன்.
நவீனத்திட்டங்கள்.
   1.   இன்று முதல் இந்தியாவில் ஜாதி, மத பாகுபாடு இல்லை. தனிப்பட்ட நபர்கள் தங்கள் ஜாதியையும் மதங்களையும் அனுசரித்துக்கொள்ள அரசு எந்தத் தடையும் விதிக்காது. ஆனால் ஜாதி, மதங்களின் பெயரால் எந்த வித்தியாசமும் காண்பிக்கப்படாது.
   2.   இன்று முதல் எல்லா இலவசங்களும், மான்யங்களும், நல வாழ்வுத் திட்டம் என்ற பெயரில் கொடுக்கப்படும் எல்லா சலுகைகளும் ரத்தாகின்றன.
   3.   அனைத்து சாமியார்களின் பதவிகளும், சொத்துக்களும் அரசுடமை ஆகின்றன. அந்த மடங்களெல்லாம் கல்விச்சாலைகளாக மாற்றியமைக்கப்படும். அந்தந்த சாமியார்கள் அந்தக் கல்வி நிலையங்களின் தலைவர்களாக செயல்படுவார்கள். அப்படி சொத்து ஏதும் இல்லாத சாமியார்கள் இந்தக் கல்வி நிலையங்களில் அவரவர்கள் தகுதிகளுக்கு ஏற்ப வேலை செய்வார்கள்.
   4.   எந்த சாமியாருக்காவது ஏற்கனவே குடும்பம் இருந்தால் அவர்களையும் இந்த நிறுவனங்களில் வேலைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.
   5. குடும்பம் இல்லாத சாமியார்கள் தேவைப்பட்டால் குடும்பம் உண்டாக்கிக் கொள்ளலாம்.
   6.   கோயில்களின் சொத்துக்கும் இதே மாதிரி செய்யப்படும்.
   7.   லஞ்சம் ஒழிக்கப்படுகிறது. இதுவரை லஞ்சம் வாங்கி சேர்த்த சொத்துக்கள், பணங்கள் அனைத்தும் அரசுக்கு சேரும்.
   8.   ஸ்விஸ் பேங்கில் இந்தியர்கள் போட்டு வைத்திருக்கும் பணம் முழுவதையும் எடுத்து, அயல் நாட்டினரிடம் இந்தியா வாங்கிய கடன்களையெல்லாம் தீர்க்கப்படும்.
   9.   இனிமேல் லஞ்சம் வாங்கினாலோ, கொடுத்தாலோ, அதற்கு கேபிடல் தண்டனை விதிக்கப்படும்.
  10. இந்தியாவில் உள்ள அனைத்து பிச்சைக்காரர்களும் நாடு கடத்தப்படுவார்கள்.
  11. எல்லாவிதமான ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பஸ் டே, ரேக்கிங்க் ஆகியவை தடை செய்யப்படுகின்றன.

சம்பத்தப்பட்ட அதிகாரிகள் இந்த திட்டங்களை நடைமுறைப்படுத்த ஆவன செய்வார்கள். எந்தவிதமான சால்ஜாப்புகளும் ஏற்றுக்கொள்ளப்படாது. தவறும் அதிகாரிகளுக்கு "ஸ்பெஷல் ட்ரீட்மென்ட்" கொடுக்கப்படும். இந்த திட்டங்களை தங்களால் முடியாது என்று கருதும் அதிகாரிகள் தங்களது ராஜீனாமா கடிதங்களை வெளியில் இருக்கும் பெட்டியில் போட்டுவிட்டு அப்படியே வீட்டுக்குப்போகலாம். அவர்கள் வீட்டுக்குப்போக அரசு வாகனத்தை உபயோகப்படுத்தக்கூடாது. அப்படி ராஜீனாமா கொடுத்துவிட்டுப் போகும் அதிகாரிகள் அரசு வீடுகளில் குடியிருந்தால் இன்று இரவிற்குள் காலி செய்து விடவேண்டும்.

அடுத்த கூட்டம் 66ஆறு மாதம் கழித்து கூட்டப்படும்.

திங்கள், 9 ஜூலை, 2012

நான் செய்த புரட்சிகள்


முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.



மறுநாள் மீட்டிங்க்குக்கு பிரதம மந்திரி தவிர ஏறக்குறைய மற்ற எல்லா மந்திரிகளும் ஆஜர். செக்ரடரிகள் எல்லோரும் வந்திருந்தார்கள். நம்ம பெர்சனல் செக்ரடரியையும் ஸ்டெனோவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டேன்.

எல்லோரையும் பார்த்து என் சொற்பொழிவை ஆரம்பித்தேன்.

நீங்கள் எல்லோரும்தான் இந்நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கிறவர்கள். இந்திய நாட்டின் எதிர்காலம் உங்கள் கையில்தான் இருக்கிறது. இப்படியெல்லாம் சொல்லி உங்களை நான் ஏமாற்றப்போவதில்லை. நீங்கள் செய்த சேவைகளினால் நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று வெளிநாட்டில் கேட்டால்தான் தெரியும். இனியும் அதே நீலை நீடிக்க நான் அனுமதிக்கப்போவதில்லை.

நான் வகுக்கும் திட்டங்களை நீங்கள் எல்லோரும் முழு மனதுடன் ஒத்துக் கொண்டு செயல் புரிய வேண்டும். அதற்கு விருப்பமில்லாதவர்கள் யாராவது இருந்தால் கைகளைத் தூக்குங்கள் என்றேன்.

யாரும் இதை எதிர்பார்க்காததினால் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பே கோச்சிங்க் கிளாஸ் நடத்தினால்தான் அவர்களுக்கு ஏதாவது பேசத் தெரியும். பிரதம மந்திரி வேறு இல்லையா? அவர் இருந்தால் எல்லாவற்றையும் அவர் கவனித்துக்கொள்வார். நாம் பாட்டுக்குத் தூங்கிக்கொண்டிருக்கலாம். இந்த ஆளுக்கு ஓட்டுப்போட்டு ஜனாதிபதி ஆக்கினது தவறோ என்று யோசிக்க ஆரம்பித்தார்கள். ஒருவரும் கை தூக்கவில்லை.

முதலில் ஒன்று புரிந்து கொள்ளுங்கள். உங்களில் யாருடைய பதவிக்கும் ஆபத்தில்லை என்றேன். இதைக்கேட்டவுடன்தான் எல்லோருடைய முகத்திலும் கொஞ்சம் பிரகாசம் தெரிந்தது.

கவனமாகக் கேளுங்கள். நம் இந்திய நாட்டை மற்ற நாட்டவர்கள் கேவலமாகப் பேசுவதற்கு முக்கிய காரணம் நம் கிராமப்புறங்களில் இருப்பவர்கள் தங்கள் காலைக் கடன்களை நிறைவேற்றும் முறைதான். இதை மாற்றினாலே நம் நாடு வல்லரசாகும் பாதையில் அடி எடுத்து வைத்துவிட்டது என்று அர்த்தம்.

நமது மதிப்பிற்குரிய மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் உடனே தங்கள் தொகுதிக்கு சென்று மக்களுக்கு விழிப்பு உண்டாக்கவேண்டும். உங்களுக்கு மூன்று நாள் அவகாசம் தருகிறேன். நான்காம் நாள் காலையிலிருந்து யாரும் வெட்டவெளியில் காலைக்கடன்களை கழிக்கக்கூடாது. அப்படி யாராவது செய்தால் அவர்களை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு போய் சகாரா பாலைவனத்தில் விடப்படுவார்கள். இந்த வேலையை நம் முப்படைத் தளபதிகளிடம் விடுகிறேன்.

இதற்கான எழுத்து மூலமான உத்திரவுகள் இன்று மாலைக்குள் எல்லோருக்கும் வந்து சேரும். உத்திரவுகளை உடனடியாக நிறைவேற்றத் தவறினால் அதற்கு காரணமானவர்கள் உடனடியாக வேலை நீக்கம் செய்யப்படுவார்கள். அடுத்த கூட்டம் நாளை இதே நேரத்தில் நடைபெறும். நாளைக் கூட்டத்தில் "லஞ்ச ஒழிப்பு வாரியம்" அன்னா ஹஸாரே தலைமையில் தொடங்கவிருக்கிறேன். மேலும் பல திட்டங்களை அறிவிப்பேன். இந்தக் கூட்டம் முடிந்தது என்று சொல்லிவிட்டு எழுந்து வந்து விட்டேன்.


சனி, 7 ஜூலை, 2012

கனவுலகில் இந்திய ஜனாதிபதியாக நான்-பாகம் 2

முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.





போன பகுதியில் என்னுடைய பிரின்சபல் செக்ரடரி மயங்கி விழுந்துவிட்டார் என்று பார்த்தோம். பக்கத்தில் இருந்த தண்ணீரை எடுத்து அவர் முகத்தில் தெளித்து மயக்கம் தெளியவைத்தோம். என்ன, செக்ரடரி, இப்படி காபரா படுத்தி விட்டீர்களே என்றேன். அது ஒண்ணுமில்லைங்க சார், நீங்க டிக்டேட் செய்த ஆர்டரைக் கேட்டதும் என்னையறியாமல் மயக்கம் வந்துவிட்டது என்றார்.

செக்ரடரி, இதுக்கே இப்படி மயக்கம் போட்டா எப்படி? இன்னும் எவ்வளவோ இருக்கே, தைரியமா இருங்க என்று சொல்லி அவரைக் கூப்பிட்டுக் கொண்டு நான் குடியிருக்கப்போகும் வீட்டைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினேன். காலை 10 மணிக்குப் புறப்பட்டவன் மதியம் 1 மணி ஆகியும் பாதியைக்கூடப் பார்த்து முடிக்கவில்லை. பசி வந்து விட்டது.

செக்ரடரி, பசிக்குதே, சாப்பிட்டுவிட்டு மீதியைப் பார்க்கலாம் என்றேன், அவருக்கும் பசி போலும். உடனே ஒத்துக்கொண்டார். இருவரும் டைனிங்க் ஹாலைத் தேடிப்போனோம். அதற்கே அரை மணி நேரம் ஆயிற்று. சாப்பிட உட்கார்ந்தோம். அரை டஜன் ஆட்கள் ஒவ்வொரு ஐட்டமாக மொத்தம் 64 வகை பதார்த்தங்கள் கொண்டுவந்து பரிமாறினார்கள்.

என்னய்யா, தினமும் இப்படித்தானா என்றேன். ஆமாம் என்றார்கள். அப்படியானால் இவ்வளவையும் சமைப்பதற்கு நிறைய ஆட்கள் வேண்டுமே என்றேன். செக்ரடரி, எஸ் சார், 24 சீப் குக்குகளும் 62 அசிஸ்டன்ட் குக்குகளும் இருக்கிறார்கள் என்றார். அப்போதே ஸ்டெனோவைக் கூப்பிட்டு, இனி சாப்பாட்டில் சாதம், ஒரு சாம்பார், ஒரு ரசம், ஒரு பொரியல், தயிர், ஊறுகாய் இவை மட்டும் இருந்தால் போதும். ஒரு தமிழ்நாட்டு சமையல்காரர், ஒரு வேலைக்காரி இரண்டு பேர் மட்டும் போதும். மற்றவர்களையெல்லாம் நல்ல ஓட்டலில் சேர்த்து விடவும் என்று ஆர்டர் டிக்டேட் செய்தேன்.

 சரி. இத்தனை குக்குகளும் சேர்ந்து எத்தனை பேருக்கு சமைப்பார்கள் என்று கேட்டேன். செக்ரடரி கொஞ்ச நேரம் கால்குலேட்டரை எடுத்து கணக்குப் போட்டுவிட்டு, சார், மொத்தம் 7245 பேருக்கு சமையல் செய்வார்கள் என்றார். எனக்கே தலை சுற்றி வந்து விட்டது. அவ்வளவு பேர் எங்கிருந்து வருவார்கள் என்று கேட்டேன்.

அவர் சொன்னது:    செக்ரடரிகள் 2492, செக்யூரிடிகள் 3246, மற்ற வேலைக்காரர்கள் 1507 ஆக ஒத்தம் 7245, என்று கண்க்கு சொன்னார். உங்களைத்தவிர மற்ற செக்ரடரிகளை ரிடையர் பண்ணியாச்சு. அதே மாதிரி, 10 செக்யூரிடி ஆட்களை மட்டும் வைத்துக்கொண்டு மீதி ஆட்களை போலீஸ் டிபார்ட்மென்டுக்கு அனுப்பிவிடவும். மற்ற வேலைக்காரர்களில், மொகல் கார்டனைப் பார்த்துக்கொள்ளவும், மற்ற செடிகொடிகளைப் பார்த்துக்கொள்ளவும் ஒரு 10 பேர் மட்டும் போதும். மிச்ச ஆட்களை எல்லாம் அவர்கள் ஊருக்குப் போக டிக்கட் வாங்கிக்கொடுத்து ரயில் ஏற்றி விடவும். இந்த இரண்டிற்கும் உடனடியாக ஆர்டர் டிக்டேட் செய்தேன்.

 சரி, நாளையில் இருந்து நான், என் மனைவி, சமையல் ஆட்கள் இரண்டு பேர் ஆக 4 பேருக்கு மட்டும் சமையல் செய்தால் போதும். நீரும் மற்றவர்களும் வீட்டில் இருந்து லஞ்ச் கட்டிக்கொண்டு வந்துவிடவும், என்று சொல்லி அதையும் ஆர்டர் போட உடனடியாக உத்திரவு கொடுத்தேன்.


சாப்பிட்டுவிட்டு திரும்பவும் வீட்டைப்பார்க்க கிளம்பினோம். ஒரு இடத்தில் ஏகப்பட்ட கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. செக்ரடரியிடம் ஏன் கார் கம்பெனிக்கெல்லாம் இங்கு ஷோ ரூம் வைக்க இடம் கொடுத்திருக்கிறீர்கள்  என்று கேட்டேன். அவர், சார் இவையெல்லாம் ஷோரூம் கார்கள் இல்லை, எல்லாம் ஜனாதிபதியின் உபயோகத்திற்குண்டான கார்கள் என்றார். என்னய்யா, ஜனாதிபதி ஒருத்தர்தானே, அவர் ஒரு காரில் மட்டும்தானே போகமுடியும், அப்புறம் எதற்கு இவ்வளவு கார்கள் என்றேன்.


சார், வெளிநாட்டில் இருந்து முக்கியஸ்தர்கள் வந்தால் அவர்களுக்கு கார் தேவைப்படும். தவிர ஜனாதிபதி வெளியில் போகும்போது, ஒவ்வொரு தடவைக்கும் ஒவ்வொரு கார் உபயோகப்படுத்துவோம். செக்யூரிடி காரணமாக இப்படி நடைமுறை, என்றார். செக்யூரிடியைத் தூக்கி குப்பைத்தொட்டியில் போடுங்கள். வெளிநாட்டுக்காரனுங்களுக்காக ஒரு கார் இருக்கட்டும். எனக்கு ஒரு மாருதி ஆல்டோ போதும். நானே செல்ப் டிரைவிங்க் பண்ணிக் கொள்வேன். ஒரு ஆட்டோ ரிக் ஷா மட்டும் என்வீட்டு அம்மா, மற்றும் வேலைக்காரங்க வெளியில் போக வர இருக்கட்டும். அதுக்கு ஒரு டிரைவர், வெளிநாட்டுக்காரனுக்கு ஒரு டிரைவர் வைத்துக்கொண்டு மீதி டிரைவர்களை எல்லாம் தமிழ்நாடு ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் டிபார்ட்மென்டுக்கு அனுப்பி விடுங்கள் என்று ஆர்டர் போட்டேன். அங்கதான் அவனுங்களுக்கு நல்லா தூங்கறதுக்கு வசதிகள் உண்டு என்றேன்.


அப்ப மற்ற கார்களையெல்லாம் என்ன செய்வது என்று செக்ரடரி கேட்டார். அவைகளையெல்லாம் அயல்நாட்டுத் தூதரகங்களுக்கு அவர்கள் கேட்ட விலைக்கு கொடுத்துவிடுங்கள் என்றேன்.


இப்படியாக ஒரு வழியாக ஜனாதிபதி வீட்டை ஒழுங்கு படுத்தினேன். 


மறு நாள் ஒரு மந்திரி சபைக் கூட்டத்திற்கு ஏற்பாடு பண்ணுங்கள் என்று செக்ரடரியிடம் சென்னேன். அவர் தலையைச் சொறிந்தார். என்னய்யா விஷயம், தலையைச் சொறிகிறீர்களே என்றேன்.  சார், பிரதம மந்திரி இப்போதுதான் ஜிக்ஜிக்ஸ்தான் போனார். மற்ற மந்திரிகளில் பாதி பேர் பல வெளிநாடுகளுக்கு, பல ஜோலிகளுக்காகப் போய் விட்டார்கள். மீதிப்பேர் பெண்டாட்டி பிள்ளைகளைப் பார்ப்பதற்காக அவரவர் ஊருக்குப் போயிருக்கிறார்கள் என்றார்.


அப்ப அவங்க டிபார்ட்மென்ட் வேலைகளையெல்லாம் யார் பார்த்துக்கொள்வார்கள் என்றேன். அந்தந்த டிபார்ட்மென்ட் செக்ரடரிகள் பார்த்துக்கொள்வார்கள் சார், என்றார். அப்படியானால் அவர்களையெல்லாம் நாளைக்கு இங்கே வரச்சொல்லுங்கள். கூடவே முப்படைகளின் தளபதிகளையும் வரச்சொல்லுங்கள். பல முக்கியமான முடிவுகள் எடுக்கவேண்டும், என்றேன். 


அப்படியே எல்லா மந்திரிகளையும் தலைநகருக்கு உடனே வரச்சொல்லுங்கள். இப்போதே தகவல்கள் போகவேண்டும் என்றேன்.


இதற்குள் இரவு ஆகி விட்டதால் எல்லோரும் தூங்கப்போனோம்.

வெள்ளி, 6 ஜூலை, 2012

இந்திய ஜனாதிபதி - கனவுலகில் நான் - பாகம் 1

முக்கிய அறிவிப்பு: இந்தப் பதிவு தொடர் பதிவாக வெளிவரும். எத்தனை பாகங்கள் என்பது கற்பனை ஓட்டத்தில் முடிவு செய்யப்படும். இந்தப் பதிவில் நடக்கும் அனைத்துக் காரியங்களும் கற்பனையே. அவைகளை உண்மை என்று எண்ணி யாராவது ஏமாந்தால் அதற்கு பதிவின் ஆசிரியர் (அதாவது நான்) எந்த விதத்திலும் பொறுப்பு ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அறியவும்.


நான் இந்திய நாட்டின் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டேன். பரீட்சார்த்தமாக எனக்கு எல்லையில்லா அதிகாரங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. என்னைக் கேள்வி கேட்பார் யாருமில்லை.

இந்த மாதிரி நடந்தால் என்ன செய்வது என்று நான் தூக்கம் வராத இரவுகளில் ஏற்கனவே யோசித்து வைத்திருந்ததனால் நான் பெரிதாக ஒன்றும் ஆச்சரியப்படவில்லை. சில நடைமுறை சந்தேகங்கள் மட்டும் இருந்தன. என்னுடைய முதன்மை செக்ரடரியைக் கூப்பிட்டு விசாரித்தேன்.

அவர் சொன்னதாவது. சார் நீங்கள் காகிதத்தில் என்ன எழுதிக் கையெழுத்துப் போடுகிறீர்களோ அந்த உத்திரவுகள் அடுத்த விநாடி நிறைவேற்றப்படும் என்றார். ஏனய்யா, இவ்வளவு பெரிய நாட்டின் ஜனாதிபதி அவரே எழுத வேண்டுமா? என்று கேட்டேன். அதற்கு அவர், சார் உங்களுக்காக 347 ஸ்டேனோக்கள் நியமிக்கப்பட்டு ரெடியாக இருக்கறார்கள் என்றார். 

அது சரி, உங்கள் மாதிரி எத்தனை செக்கரட்டரிகள் இருக்கிறார்கள் என்று கேட்டேன். அவர், என்னையும் சேர்த்து பல கிரேடுகளில் 2492 செக்ரட்டரிகள் இருக்கிறார்கள் என்று சொன்னார். அப்படியா, சரி என்று சொல்லி விட்டு, ஒரு நல்ல, இங்கிலீஷ் தெரிந்த ஸ்டெனோவைக் கூப்பிடுங்கள் என்று சொன்னேன்.

அவர் இன்டர்காமில் என்னமோ சொல்ல, உடனே ஒரு சினிமா நடிகை உள்ளே வந்தாள். இது யார் என்று கேட்க, சார், இதுதான் உங்கள் முதன்மை ஸ்டனோ என்றார். அப்படியா, முதலில் இந்தப் பெண்ணை, மேக்கப் எல்லாம் கலைத்துவிட்டு வரச்சொல்லுங்கள் என்றேன். கொஞ்ச நேரம் கழித்து ஒரு வயதான அம்மாள் உள்ளே வந்தார்கள். 

செக்ரட்டரியிடம் யாரய்யா இது என்று கேட்டேன். சார், முன்னால் பார்த்தீர்களே, ஸ்டெனோ, அவர்கள்தான் இது, மேக்கப்பைக் கலைத்துவிட்டு வந்திருக்கிறார்கள் என்றார். சரி, இப்போதைக்கு இருக்கட்டும், நாளையிலிருந்து எனக்கு, ஒரு நல்ல பையனாப்பார்த்து ஸ்டெனோவாப் போட்டுடுங்க என்றேன்.

என்னுடைய அதிகாரம் இந்த செக்ரட்டரி சொன்னமாதிரிதான் இருக்கிறதா என்பதைச் சோதிக்க ஒரு டெஸ்ட் செய்தேன். இந்த முதன்மை செக்ரட்டரி தவிர மீதமுள்ள 2491 செக்ரட்டரிகளையும் கட்டாய ஓய்வு கொடுத்து வீட்டுக்கு அனுப்பவும் என்று ஆர்டரை டைப் செய்து எடுத்துக்கொண்டு வா என்று ஸ்டெனோவிடம் சொன்னேன். அந்த அம்மா வெளியில் போனார்கள்.

என்ன, செக்ரட்டரி, என்று திரும்பிப் பார்த்தால், செக்கரட்டரி மயக்கமாகக் கீழே விழுந்து கிடந்தார்.  

தொடரும்........

வியாழன், 5 ஜூலை, 2012

அந்தரங்கமா அல்லது அம்பலமா?




மனிதனுக்கு அந்தரங்கம் என்று ஒன்று இருக்கிறது. அவன் நினைத்த, நினைக்கும் எண்ணங்கள், செய்த, செய்யப்போகும் செயல்கள் இவைகளைப்பற்றி, எல்லாவற்றையும் எல்லோரிடத்திலும் சொல்ல முடியாது, சொல்லவும் கூடாது. அப்படிச் சொல்பவனை பைத்தியக்காரன், வெள்ளைச்சோளம், விவேகமற்றவன், இப்படி பல பட்டங்களினால் அழைக்கப்படுவான்.


இப்படித்தான் எங்கள் காலத்தில் இருந்தது. காலங்கள் மாறுகின்றன. வாழ்க்கை நெறிகள் மாறுகின்றன. இன்று open Society என்று சொல்லுகிறார்கள். மனிதன் வாழ்வில் ஒளிவு மறைவு கூடாது. எல்லாவற்றிலும் வெளிப்படையாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மனிதன் நாகரிகம் அடைந்தபோது மானத்தை மறைக்க ஆடைகள் அணிய ஆரம்பித்தான். இப்போது நாகரிகம் முற்றிப்போய் Nude club ஆரம்பித்து நடக்கின்றன.


இன்றைய விஞ்ஞான வளர்ச்சியினால் மனித வாழ்விற்கு வேண்டிய கண்டுபிடிப்புகள் கணக்கிலடங்கா வண்ணம் வந்து கொண்டிருக்கின்றன. பாதி பேருக்கு அதிகமாக வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கிறார்கள் என்று சொல்லப்படும் நமது புண்ணிய பூமியில் ஆளுக்கு ஒன்று என்ற அளவில் செல்போன்கள் இருக்கின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றன. ரோட்டில் நடந்து செல்லும் பாதி ஆட்கள் செல்போன் பேசியபடிதான் நடக்கிறார்கள். மீதிப் பேர் செல்போனைக் கையில் வைத்தபடிதான் நடக்கிறார்கள்.


காலையில் தூங்கி எழுந்தவுடன் எல்லோரும் செய்யும் காரியங்களை காலைக்கடன்கள் என்று பூடகமாகச் சொல்லிவந்தோம். அதே மாதிரி தம்பதிகள் குடும்பம் நடத்தினார்கள் என்று குறிப்பிட்டோம். ஆனால் அவற்றை இன்று படம் பிடித்து வைத்துக் கொள்கிறார்கள். பிறகு வம்பில் மாட்டிக்கொண்டு குய்யோ முறையோ என்று ஓலமிடுகிறார்கள். 


இன்டர்நெட்டில், செல்போனில் முகம் பார்க்காமலேயே தொடர்பு கொண்டு பேசுகிறார்கள். தங்கள் அந்தரங்கங்களை முன்பின் தெரியாதவர்களுடன் பகிர்கிறார்கள். தேவையில்லாத பிரச்சினைகள் எழுகின்றன.


விஞ்ஞான வளர்ச்சியின் பயனை இவ்வாறு விவஸ்தையில்லாமல் பயன்படுத்தி சீரழிந்து போகும் இந்திய சமுதாயத்தினை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியுமா என்று சொல்ல முடியவில்லை.