ஞாயிறு, 4 ஏப்ரல், 2010

கிளிகளுக்கு வந்த ஆபத்து




காட்டில் விடப்பட்ட விக்கிரமாதித்தனாகிய கிளி, கம்மாளன் போனபிறகு, ஆஹா, மோசம் போனோமே, பட்டி வெகு தூரம் சொல்லியும் கேட்காமல் போனோமே என்று வருத்தப்பட்டு, சரி, போனதைப்பற்றி வருத்தப்பட்டு ஆவதென்ன, நடக்கப் போவதைப் பார்ப்போம் என்று மனதைத் தேற்றிக்கொண்டு கிளிகளோடு கிளிகளாக இருந்தான்.     

இருந்தாலும் ராஜாவாக இருந்தவனல்லவா? அந்த வீர தீர பராக்கிரமத்தினாலே அந்த மரத்தில் இருந்த ஆயிரம் கிளிகளையும் ஒன்று சேர்த்து, எங்கு போனாலும் ஒன்றாகப் போவதும், ஒன்றாக இரை தேடுவதுமாக, விக்கிரமாதித்தன் தலைமையில் வாழ்ந்து கொண்டிருந்தன.

இப்படி இருக்கையில் ஒரு வேடன் இந்த ஆயிரம் கிளிகள் ஒன்றாகப் போவதையும் வருவதையும் பார்த்து ஆஹா, இந்த ஆயிரம் கிளிகளையும் பிடித்தால், கிளி ஒன்று ஒரு காசு என்று விற்றாலும் நமக்கு ஆயிரம் காசுகள் கிடைக்குமே என்று கணக்குப்போட்டு, ஒரு நாள் அந்தக் கிளிகள் இரை தேடப்போனபின்னர், அந்த மரத்தடியில் வலையை விரித்து வைத்து, கொஞ்சம் தானியங்களை இறைத்துவிட்டு மறைவாகப் போயிருந்தான்.

அன்று மாலை இரை தேடப்போயிருந்த கிளிகள் யாவும் தாங்கள் வசிக்கும் மரத்திற்கு வரும்போது கீழே தானியங்கள் சிதறிக் கிடப்பதைப்பார்த்ததும், எப்போதும் விக்கிரமாதித்தனைக்கேட்டு செயல்படும் கிளிகள் அன்று யாதும் யோசிக்காமல் தானியங்களைப் பொறுக்கப்போய் வலையில் சிக்கிக்கொண்டன. விக்கிரமாதித்தனாகிய கிளியும் எல்லோருக்கும் நேர்ந்த விதி நமக்கும் நேரட்டும் என்று வலையில் விழுந்தது.

எல்லாக்கிளிகளும் விக்கிரமாதித்தனை குறை கூறின. நாங்கள் எல்லோரும் அவரவர்கள் பாட்டில் எங்கள் மனம் போல் வாழ்ந்துகொண்டிருந்தோம். எங்களை எல்லாம் ஒன்று சேர்த்து இப்போது எல்லோரும் ஆபத்தில் சிக்கிக்கொண்டோமே! இப்போது என்ன செய்வது என்று ஆளாளுக்கு பிரலாபித்தன. அப்போது விக்கரமாதித்தன் சொல்கிறான்: கூடி வாழ்ந்து கெட்டாரும் இல்லை, பிரிந்து வாழ்ந்து உயர்ந்தாரும் இல்லை. இப்போது நான் சொல்வதை எல்லோரும் கவனமாகக் கேளுங்கள். வேடன் வந்து பார்க்கும்போது எல்லோரும் சிறகுகளை விரித்து இறந்தது போல் படுத்துக் கொள்ளுங்கள். வேடன் ஓஹோ, வலையில் விழுந்த வேகத்தில் கிளிகள் செத்துப்போனாற்போல் இருக்கிறது என்று எண்ணி ஒவ்வொரு கிளியாக கீழே போடுவான். முதலில் விழுந்த கிளி பின்னால் விழுகின்ற கிளிகளை எண்ணிக்கொண்டு இருந்து ஆயிரம் எண்ணிக்கை ஆனவுடன் எல்லோரும் பறந்து போய்விடலாம் என்று யோசனை சொல்லியது.

அப்படியே வேடன் வந்து பார்க்கும்போது எல்லாக்கிளிகளும் இறந்தது போல் கிடந்தன. வேடனும் இதைப்பார்த்து அடடா, வலையில் விழுந்த வேகத்தில் எல்லாக்கிளிகளும் செத்துப்போயினவே என்று வருத்தப்பட்டு ஒவ்வொரு கிளியாக எடுத்து கீழே போட்டான். முதலில் விழுந்த கிளி எண்ணிக்கொண்டு இருந்தது. 999 கிளிகள் ஆனவுடன் வேடன் இடுப்பில் இருந்த வெட்டுக்கத்தி தவறி கீழே விழுந்தது. ஆஹா, இத்துடன் ஆயிரம் கிளிகளும் சரியாய்விட்டன என்று முதல் கிளி பறக்க எல்லாக்கிளிகளும் பறந்து போய்விட்டன. வேடன் கையில் இப்போது விக்கிரமாதித்தன் மட்டும் இருந்தான். வேடனுக்கு ஒரே சமயத்தில் ஆச்சரியமும் கோபமும் சேர்ந்து வந்தன. கையில் இருக்கும் கிளியைப்பார்த்தான். அது மற்ற கிளிகளைவிட பெரிதாகவும் வயதானதாகவும் இருந்தது. ஆஹா இந்தக்கிளிதான் மற்ற கிளிகளுக்கு இந்த யோசனையை சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும், இதை என்ன சொய்கிறேன் பார் என்று கூறிக்கொண்டு அதன் கழுத்தைத் திருகப் போனான்.








26 கருத்துகள்:

  1. சுத்தம்....நெம்ப நல்லா இருக்குது...அதுனால, சட்டுப் புட்டுன்னு அடுத்த இடுகையையும் போடுங்க சீக்கிரம்!

    பதிலளிநீக்கு
  2. கதை எழுத்தாளர் தாத்தா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

    மிக சிறப்பான எழுத்து நடை கலக்குங்க தாத்தா

    பதிலளிநீக்கு
  3. அரும்பாவூருக்கும் பழமைபேசிக்கும்,
    முதல் போணிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. எங்க பாட்டி, கதை சொல்லும்போது இப்படிதான்
    சஸ்பென்ஸ் வச்சு முடிப்பாங்க, அதே மாதிரி
    தொடரும் போட்டுட்டீங்களே.

    பதிலளிநீக்கு
  5. சைவகொத்துப்பரோட்டா said:

    //எங்க பாட்டி, கதை சொல்லும்போது இப்படிதான்
    சஸ்பென்ஸ் வச்சு முடிப்பாங்க, அதே மாதிரி
    தொடரும் போட்டுட்டீங்களே.//

    அதாங்க இன்டரஸ்ட்

    பதிலளிநீக்கு
  6. எனக்கும் உங்களிடம் கதை கேட்கும் ஆசை வந்து விட்டது.
    தெரிந்த கதைதான் என்றாலும் நீங்கள் கதை சொல்லும் வாஞ்சையும், பொறுமையும்.
    பெரியவர்கள் பெரியவர்கள்தான்.

    பதிலளிநீக்கு
  7. கக்கு-மாணிக்கம் சொன்னது:

    //எனக்கும் உங்களிடம் கதை கேட்கும் ஆசை வந்து விட்டது.
    தெரிந்த கதைதான் என்றாலும் நீங்கள் கதை சொல்லும் வாஞ்சையும், பொறுமையும்.
    பெரியவர்கள் பெரியவர்கள்தான்.//

    என்ன தம்பி, நீங்க ஆரம்பிச்ச கதைதான நான் சொல்றேன்.

    பதிலளிநீக்கு
  8. தெரிந்த கதைதான் என்றாலும் என்னவோ ஏதோ என்ற ஆவல் இருக்கத்தான் செய்து....

    பதிலளிநீக்கு
  9. கதை சொல்லும் விதம் அருமை.

    தொடருங்கள்!

    நன்றி!

    பதிலளிநீக்கு
  10. Maximum India said:

    //கதை சொல்லும் விதம் அருமை.

    தொடருங்கள்!

    நன்றி!//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  11. மலர் சொன்னது:

    //தெரிந்த கதைதான் என்றாலும் என்னவோ ஏதோ என்ற ஆவல் இருக்கத்தான் செய்து....//

    அதுதான் காலத்தை வென்ற கதைகளின் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  12. அய்யா நிறையக் கதைகள் எழுதியிருக்கின்றீர்கள். எனக்கு கதைகள் மிகவும் பிடிக்கும்.(கதை உடவும் பிடிக்கும்). நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து படிக்கின்றேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  13. பழையது என்றாலும் மொந்தை புதுசு,ஆதலால் கதை நன்றாக இருக்கிறது,தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  14. கதை சொல்லும் விதம் அருமை தாத்தா, சஸ்பென்ஷா முடிச்சிருக்கிங்க....அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..

    பதிலளிநீக்கு
  15. பித்தனின் வாக்கு சொன்னது:

    //அய்யா நிறையக் கதைகள் எழுதியிருக்கின்றீர்கள். எனக்கு கதைகள் மிகவும் பிடிக்கும்.(கதை உடவும் பிடிக்கும்). நேரம் கிடைக்கும் போது எல்லாம் வந்து படிக்கின்றேன். நன்றி.//

    மிக்க நன்றி பி.வா. அவர்களே.

    பதிலளிநீக்கு
  16. தமிழன் வீதி சொன்னது:

    //"சரியா போச்சி போங்க...! இப்பவும் பிரேக்கா?"//

    வண்டி ரொம்ப ஸ்பீடா போனா கொடைசாய்ந்திடுங்க, அதனாலதான் அப்பப்ப பிரேக்குங்க. சரிதானுங்களே!

    பதிலளிநீக்கு
  17. உருத்திரா சொன்னது:

    //பழையது என்றாலும் மொந்தை புதுசு,ஆதலால் கதை நன்றாக இருக்கிறது,தொடருங்கள்//

    பழைய சரக்குக்குத்தானுங்க கிராக்கி அதிகம். அதென்னமோ அதை vintage wine னு சொல்லுவாங்களாமே. எல்லாம் கேள்வி ஞானம்தானுங்க. என்னை தப்பா நெனச்சுடாதீங்க, உருத்திரா அவர்களே.

    பதிலளிநீக்கு
  18. Mrs.Menakasathya said:

    //கதை சொல்லும் விதம் அருமை தாத்தா, சஸ்பென்ஷா முடிச்சிருக்கிங்க....அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்..//
    வருகிறது,வந்து கொண்டே இருக்கிறது.

    தாராபுரத்தான் சொன்னது:

    //சட்டு புட்டுன்னு சொல்லுங்க..//

    ஏனுங்க, வயசான காலத்துல நின்னு நெதானமாத்தான் எல்லாத்தையும் செய்யோணுமுங்க. நாமெல்லாம் என்ன சின்னப்பசங்களா, ஓடற பாம்பெ மிதிக்கிறதுக்கு? ஏனுங்க நாஞ்சொல்றது சரிதானுங்களே?

    பதிலளிநீக்கு
  19. அன்புள்ள அய்யா! பழைய பதிவில் பெரியவர் தாராபுரத்தான் அவர்களை நம்மூரில் அனைவரும் நலமா? என விசாரித்தீர்கள். அப்படி என்றால் நீங்களும் தாராபுரமா? அல்லது கோயமுத்தூர் என்ற முறையில் சொன்னீர்களா?. நானும் தாராபுரத்தான் தான்.

    அய்யா ஜோதிடம் குறித்த கருத்துக்களை சொன்னீர்கள், ஜோதிடர்கள் பொய்யர்கள் என்று வேணுமானல் கொள்ளலாம், ஆனால் ஜோதிடம் பொய் இல்லீங்க. ஆனா பரிகாரம்,பூஜை எல்லாம் பொய். ஜோதிடம் ஒரு அருமையான கலை. நீங்கள் பிறக்கும் போதே உங்களின் பயணங்கள் நிச்சயிக்கப் பட்டு விட்டன. ஆனால் அவற்றுக்கு பரிகாரம்,சாந்தி என்ற ஒன்று எல்லாம் செய்ய முடியாது. பலனில்லை. ஆனா இது தெரியாம ஏமாறவங்க ஏராளம். நாம் பிறந்த பலனை அனுபவித்துதான் ஆக வேண்டும். அது நல்லது,கெட்டது என்றாலும்.

    ஆகா தென் காசி விசுவனாதரையும்,கோவிலின் எதிரில் இருக்கும் அய்யர் கடை வடையும் மிஸ் பண்ணீட்டீங்க. சரி, போண்டா,பஜ்ஜி சாப்பிட கொடுத்து வைக்கவில்லை.

    தங்களின் பயணக் கட்டுரைகள், மற்றும் சிறிய அளவிலான அனுபவ கட்டுரைகள் போட்டுள்ளீர்கள். நான் இன்னமும் நிறைய எதிர்பார்க்கின்றேன். விவசாய கட்டுரைகள், தானியங்களின் சத்துக்கள்,பயன், விளைச்சல்,பணப்பயிர்களின் தன்மை போன்றவற்றில் நிறைய சொல்லலாம். யார் படிப்பார்கள் என்றும், படிப்பவர்களுக்காக எழுத வேண்டாம், உங்களின் அனுபவங்களை பதிவு செய்யுங்கள், அதில் ஒருவருக்குப் பயன்பட்டால் கூட அது உங்களின் வழிகாட்டுதல் ஆகும். இப்போது இல்லாவிட்டால் கூட எதிர்காலத்தில் யாருக்காவது நண்மை பயக்கும் என்று எழுதுங்கள். நான் எழுத வந்த புதிதில் என் திருப்திக்காக நான் என்ன நினைக்கின்றேனே அதை எழுத ஆரம்பித்தேன். கொஞ்ச நாளில் தானக ஒரு கூட்டம் சேர்ந்தது. உங்களின் பிரபல பதிவர் கட்டுரையில் சொன்ன எதையும் நான் செய்ய வில்லை. இப்பவும் மற்றவர்களைப் பற்றிய கவலை இல்லை. காலையில் குளிக்கும் போது என்ன சிந்தனை வருகின்றதே (அதிகாலை ஜந்தரைக்கு) அது அன்றைய பதிவாகி விடும். என் மனதிருப்திக்காக எழுதுவதை போல, உங்களின் பரந்த, நிறைந்த அனுபவங்கள் பதிவாக வேண்டும் என்று பிரியப் படுகின்றேன்.

    1970களில் ஆனைமலையில் வேலை என்றால்,சிறுத்தை,யானை போன்றவற்றின் நடமாட்டத்துக்கு இடையில் வேலை,குடித்த கட்டஞ்சாயா,மாசானி அம்மன் கோவில், குளிரின் இதம் போன்றவைகள் பதிவாக வந்துருக்க வேண்டும். சோலையார்,ஆளியார்,பரம்பிக்குளம். பிஏபி புராஜட் போன்றவைகள் எல்லாம் நீங்கள் பார்த்துருப்பீர்கள் அது எல்லாம் சொன்னால் எவ்வளவு நல்லா இருக்கும். நிறைய எதிர்பார்க்கின்றேன் எழுதுங்கள். நன்றி.

    நேரம் கிடைக்கும் போது என் வெள்ளியங்கிரி மற்றும் சபரி மலை அனுபவங்களை படியுங்கள்(விருப்பம் இருந்தால் மட்டும்). நான் கருத்து சொல்லி கூப்பிட்டதாக நினைக்காதீர்கள். என் வாழ்க்கையும்,எண்ணங்களும் தெரியும் என்று சொல்ல வந்தேன். நான் குடுகுடுப்பையாரின் அனுபவங்களைப் படிக்கும் போது அட நம்ம வாழ்க்கையில் இப்படி நடந்துள்ளதே,அப்ப நாமளும் இப்படி எழுதலாமே என்ற எண்ணம் வந்தது. ஆதலால் மற்றவர்களின் அனுபவங்களைப் படிக்கும் போது உங்களின் அனுபவங்களும் அதுபோல எழுத வேண்டும் என்று ஆசையில் எழுத ஆரம்பித்து விடுவீர்கள் என்ற ஆவலில் அழைக்கின்றேன். படித்தாலும், படிக்காவிட்டாலும், உங்கள் கால விவசாயம்,எதிர்காலத்தில் விவசாயத்தின் தன்மை எப்படி இருக்கும் என்ற உங்களின் கருத்துக்கள் பதிவாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றேன். நாம் செய்தது சம்பளத்திற்கான வேலை மட்டும் அல்ல எதிர்காலத்தில் ஒரு நண்மை பயக்கும் வண்ணமாக வழிகாட்டியாக இருக்க இன்னமும் நிறைய பகிருங்கள். உங்களின் அனுபவங்களை தினமும் ஒரு பதிவு போட்டு சொன்னால் கூட சொல்லி முடிக்க முடியாது என்று நினைக்கின்றேன். வேளாண் ஆராய்ச்சியில் வேறு இருந்து இருக்கீன்றீர்கள். தயவு செய்து நிறைய சொல்லுங்கள் அய்யா.பதிவர் லதானந்த் அவர் காட்டிலாக தகவல்களைப் படியுங்கள், அதுபோல வேளாண் தகவல்கள் நிறைய எழுதுங்கள். நன்றி.

    பதிலளிநீக்கு
  20. கதை பழையது என்றாலும் அய்யா சொன்ன முறை புதிது. ஒல்டு இஸ் கோல்டுன்னு சும்மாவா சொன்னாங்க....

    பதிலளிநீக்கு
  21. malar said:

    //என்ன இன்றைக்கும் கதையை கானும்//

    இன்னக்கி ராத்திரி தூங்கி எழுந்திரிச்சு கண்ணெத்திறக்காமெ போயி கம்ப்யூட்டரெ பாருங்க!!!!!

    பதிலளிநீக்கு
  22. பித்தனின் வாக்கு சொன்னது:

    நான் அசல் கோயமுத்தூரான். தாராபுரத்தான் அவர்களைக்கேட்டது பொதுவாக கோவை ஜில்லாக்காரர்கள் நலம் விசாரிக்கும் முறையிலான விசாரிப்புத்தான்.

    அதாவது "நம்மூட்டிலெ எல்லோரும் நலமா" என்று கேட்பதில் உள்ள நுணுக்கம் என்னவென்றால் உங்கள் வீடு, என் வீடு என்கிற வித்தியாசம் இல்லாமல் எல்லார் வீடும் நம்ம வீடுதான் என்கிற ஒருமைப்பாட்டு உணர்வுதான்.

    நீங்கள் கூறியுள்ள அனைத்து கருத்துகளையும் மனதில் வைத்திருக்கிறேன். ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறேன். கருத்துகளுக்கு மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
  23. அஹமது இர்ஷாத் சொன்னது:

    //கதை பழையது என்றாலும் அய்யா சொன்ன முறை புதிது. ஒல்டு இஸ் கோல்டுன்னு சும்மாவா சொன்னாங்க...// மொத தடவையா வந்திருக்கீங்க, வாங்க, வாங்க.
    இஸ்லாமிய பாணியில் வணக்கம் சொல்ல ஆசைதான், ஆனா தப்பாப்போயிடுமோன்னு பயமா இருக்கு, இருந்தாலும் சொல்ல முயற்சி செய்கிறேன். தப்பாயிருந்தா மன்னிக்கணும். "அஸ்ஸலாமு அலைக்கும்" அல்லா ஆசீர்வதிக்கட்டும்.

    பதிலளிநீக்கு