புதன், 25 ஆகஸ்ட், 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 4




பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷனிலிருந்து ஹரித்துவார் வரை.
எல்லா ஊர் ரயில்வே ஸ்டேஷனிலும் பிரதான நுழைவாயிலில் புகுந்தால் முதலில் இருப்பது ஒன்றாம் நெம்பர் பிளாட்பாரம்தான். அதுதான் VIP பிளாட்பாரமாக இருக்கும். எல்லா பிளாட்பாரங்களையும் விட அதுதான் எல்லா வசதிகளுடனும் இருக்கும். அது மாதிரிதான் பழைய டில்லியிலும் இருக்கும் என்று நினைத்து ஏமாந்து போனேன். சில வருடங்களுக்கு முன் போனபோதுகூட அப்படித்தான் இருந்தது. திடீரென்று யாருக்கு கிறுக்கு பிடித்ததோ தெரியவில்லை, எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியிருக்கிறார்கள்.
டில்லி பறப்படுவதற்கு முன்பாகவே பதிவர் நண்பர் திரு. வெங்கட் நாகராஜ் அவர்கள் டில்லியில் என்னைப் பார்க்க வருவதாகச் சொல்லியிருந்தார். நானும் என் புரோகிராமைச் சொல்லியிருந்தேன். நான் பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் சேர்ந்து அரை மணி நேரத்தில் அவர் எனக்கு போன் செய்தார். நானும் ரொம்ப ஜோராக, நான் பழைய ஞாபகத்தில் முதல் பிளாட்பாரத்தில் இன்ன கடைக்கு முன்பாக இருக்கிறேன், வாருங்கள் என்று சொல்லிவிட்டேன். அவரும் ரொம்ப உண்மையாக முதல் பிளாட்பாரத்தில் போய்த்தேடியிருக்கிறார். நான் சொன்ன கடை அங்கு இல்லை. நான் அரை மணி நேரம் கழித்து, என்னடா இவரை இன்னும் காணவில்லையே என்று மறுபடியும் போன் பண்ணினால் அவர் நான் முதல் பிளாட்பாரத்தில்தான் இருக்கிறேன், அங்கு நீங்கள் சொன்ன கடையைக் காணவில்லையே என்றார். அப்புறம்தான் நன்றாகப் பார்த்ததில் நாங்கள் இருந்தது 12 வது பிளாட்பாரம் என்று தெரிந்தது. இதில் இன்னொரு கூத்து என்னவென்றால் அந்தப் பிளாட்பாரத்திலேயே இன்னும் கொஞ்ச தூரம் போனால் அது 18 வது பிளாட்பாரமாகி விடுகிறது.
இந்த விபரத்தை வெங்கட்டிடம் சொன்ன ஐந்தாவது நிமிடத்தில் அவர் என் முன்னால் நின்றார். என் தற்போதைய மீசை, நான் எங்கிருந்தாலும் அடையாளம் காட்டிவிடும். அவர் அன்புடன் டில்லி பிளம்ஸ் பழங்கள் வாங்கி வந்திருந்தார். அவரை என் குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்துவிட்டு பொதுவான குடும்ப சமாசாரங்கள் பரிமாறிக்கொண்ட பிறகு பதிவுலகத்தைப் பற்றியும் சிறிது பேசினோம். பதிவுலகத்தை தற்போது பீடித்திருக்கும் முக்கிய வியாதியான ஜாதி, மதம் வேற்றுமைகளைப் பற்றிப் பேசினோம். அதைப்பற்றி இருவரும் ஒத்த கருத்துக்கள் கொண்டிருந்தோம். ஒரு 45 நிமிடம் அளவளாவிய பிறகு அவர் விடை பெற்றுச்சென்றார்.
டில்லி ஏர்போர்ட்டில் இறங்கும்போது வெளியில் உஷ்ண நிலை 45 டிகிரி செல்சியஸ் என்று சொன்னார்கள். கோவையில் 45 டிகிரி வெய்யிலைப் பார்த்ததே இல்லை. வெளியில் வந்தவுடனேயே வெய்யிலின் தாக்கத்தை எங்களால் தாங்க முடியவில்லை. தண்ணீர், பாட்டில் ஜூஸ், மாற்றி மாற்றி குடித்தும் தொண்டை வறட்சியை நிறுத்த முடியவில்லை. பழைய டில்லி ரயில்வே ஸ்டேஷன் வந்த பிறகு வெங்கட் வந்து பேசிவிட்டுப் போகும் வரை ஒரு மாதிரி வெய்யிலை மறந்திருந்தேன். அவர் போன பிறகு இரவு 10 மணி வரை என்ன செய்வது என்றே தெரியாமல் ஒருவிதமான மயக்கத்திலேயே இருந்தோம். பத்தரை மணிக்கு ஹரித்துவார் போகும் முஸ்ஸோரி எக்ஸ்பிரஸ் ரயில் முதல் பிளாட்பாரத்திற்கு வந்தது. வெங்கட் போனபிறகு மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு உண்மையான முதல் பிளாட்பாரத்திற்கு வந்து விட்டோம்.
ரயில் வந்தவுடன் எங்கள் கம்பார்ட்மென்டில் (நல்ல காலம் ஏ.சி. கிளாஸ்) ஏறி உட்கார்ந்ததும்தான் ஒரு மாதிரி போன உயிர் திரும்பி வந்தது. ரயில் அரை மணி நேரத்தில் புறப்பட்டது. ரயில் புறப்பட்டவுடன் தூங்கி விட்டோம். காலை ஐந்தரை மணிக்கு ஹரித்துவார் சேர்ந்தோம். லக்கேஜ்களை இரண்டு சைக்கிள் ரிக்ஷாவில் ஏற்றி அய்யப்பன் கோவில் தங்குமிடத்துக்கு போனோம். அங்கு காலைக்கடன்களை முடித்துவிட்டு வெளியில் வந்தோம். வாசலில் தள்ளுவண்டியில் சென்னையைச் சேர்ந்த முருகேசன் என்பவர் இட்லி தயாரித்து விற்றுக்கொண்டிருந்தார். ஆளுக்கு நான்கு இட்லி வாங்கி சாப்பிட்டோம்.
ஹரித்துவாரில் ஒரு தாள் தங்கிவிட்டு அடுத்த நாள்தான் கேதார்நாத் புறப்படுவதாக முதலில் திட்டம். ஆனால் டிராவல் கம்பெனிக்கும் எனக்கும் நடந்த பேச்சுகளில் ஏற்பட்ட குழறுபடி காரணமாக அன்றே கேதார்நாத் புறப்பட அவர் டாக்சி 8 மணிக்கு அனுப்புவதாகச் சொல்லி விட்டார். வேறு வழியில்லை. டிபன் சாப்பிட்டவுடன் டாக்சி வந்துவிட்டது. உடனே புறப்படவேண்டியதாயிற்று. குழறுபடிக்குக் காரணம், டிராவல் ஏஜென்ட் இந்தியில் பேசினார். நான் எனக்குத் தெரிந்த காலே அரைக்கால் இந்தி. தமிழ், இங்கலீஷ் கலந்த பாஷையில் பேசினேன். எப்படியோ டாக்சி வந்துவிட்டது.



மூட்டைகளை ஏற்றி நாங்களும் ஏறி கேதார்நாத் மகாதேவ் சாமியைக் கும்பிட்டு விட்டுப் புறப்பட்டோம்.


தொடரும்…..

13 கருத்துகள்:

  1. Subramaniam said:

    //muthal 3 paguthigalukana link engey?//

    சைடு பாரில் பிளாக் Archive ல் இருக்குதுங்க.

    பதிலளிநீக்கு
  2. நீங்க தமிழ்ல பேசிப் பாருங்க..பாதி ஆளுங்களுக்கு தமிழ் தெரிந்திருக்கும். இப்படித் தான் ஆஃபீஸிலிருந்து நாங்க மூணு பேர் நாக்பூர் போயிருந்தோம். நான் தமிழ்..ஒருவர் பெங்காலி..இன்னொருவர் தெலுங்கு.. நான் நம்ம செம்மொழி பேசினேன். workout ஆயிடிச்சு!!

    பதிலளிநீக்கு
  3. ///நான் எனக்குத் தெரிந்த காலே அரைக்கால் இந்தி. தமிழ், இங்கலீஷ் கலந்த பாஷையில் பேசினேன்///

    நல்ல தமாஷ் ஐயா! மொழி ஒரு பிரச்சனையாவே இருக்கு நம்ப நாட்டில.

    April, May மாதங்களில் வடக்கு பக்கம் போகாமல் இருப்பதே நல்லது!

    பதிலளிநீக்கு
  4. தாராபுரத்தான் சொன்னது:

    //சமையல்,சும்மா..பயணம்..கலக்குறீங்க.. //

    வயசான காலத்தில சும்மா இருந்தா உடம்பு துருப்பிடிச்சுடுமுங்க. அதனாலதானுங்க இந்த வெளயாட்டெல்லாம்.

    பதிலளிநீக்கு
  5. ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி said:

    //நீங்க தமிழ்ல பேசிப் பாருங்க..பாதி ஆளுங்களுக்கு தமிழ் தெரிந்திருக்கும். இப்படித் தான் ஆஃபீஸிலிருந்து நாங்க மூணு பேர் நாக்பூர் போயிருந்தோம். நான் தமிழ்..ஒருவர் பெங்காலி..இன்னொருவர் தெலுங்கு.. நான் நம்ம செம்மொழி பேசினேன். workout ஆயிடிச்சு!!//

    அடுத்த தடவை போனால் டெஸ்ட் பண்ணிப்பார்த்துடறனுங்க.

    பதிலளிநீக்கு
  6. என்னது நானு யாரா?
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  7. பயணக் கட்டுரை அருமை..தொடரிங்கள்...:)

    பதிலளிநீக்கு
  8. நல்ல பகிர்வு. பழைய தில்லி ரெயில்வே ஸ்டேஷன் ரொம்பவுமே குளறுபடியான ஒரு இடம் தான். இப்போது இன்னும் குளறுபடியை அதிகமாக்க, இப்போதுள்ள ஸ்டேஷன்கள் பத்தாமல், இன்னுமொரு ரெயில்வே ஸ்டேஷன் திறந்துள்ளார்கள் ஆனந்த் விகாரில். உங்களை சந்தித்து அளவளாவியதில் மகிழ்ச்சி.

    வெங்கட்.

    பதிலளிநீக்கு
  9. Jey, வெங்கட் நாகராஜ்,கே.ஆர்.பி. செந்தில், கருத்துக்கும் ஊக்கத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. ///பதிவுலகத்தை தற்போது பீடித்திருக்கும் முக்கிய வியாதியான ஜாதி, மதம் வேற்றுமைகளைப் பற்றிப் பேசினோம்./// சார் நான் பதிவுலகத்துக்கு புதியவன் அந்த மாதிரி பிளக் இருந்தால் அதை கண்டிப்பாக அனைவரும் ஒதுக்க வேண்டும் என்பதுதான் எனது கருத்து.

    பதிலளிநீக்கு