அடுத்த நாள் காலையில் எழுந்தால், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு உபாதை. எனக்கு காலில் காயம். மனைவிக்கு உடம்பு வலி. சம்பந்திக்கு வயிறு கோளாறு. சம்பந்தியம்மாவுக்கு இட்லி கிடைக்காத குறை. தங்கச்சிக்கு தூக்கம் போறவில்லை. டாக்சி டிரைவருக்கு சளிக்காய்ச்சல். நான் லீடர். பேரு பெத்தப்பேருதான். புது இடத்தில் என்ன செய்ய முடியும்?
ஊரிலிருந்து புறப்படும்போதே ஒரு புத்திசாலித்தனமான காரியம் செய்திருந்தோம். நாங்கள் எப்போது டூர் போனாலும் இப்படித்தான் செய்வோம். அதாவது ஒரு எலெக்ட்ரிக் “டம்ளர்ஹீட்டர்”. நூறு ரூபாய் விலையில் எலெக்ட்ரிக் சாமான் விற்கும் கடைகளில் கிடைக்கிறது. 100 முதல் 500 வாட்ஸ் வரை கரன்ட் தரத்தில் கிடைக்கும். ஹோட்டல்களில் உள்ள கரன்ட் பிளக்குகளில் உபயோகப்படுத்தலாம். பியூஸ் போகாது. ஒரு லோட்டா டம்ளர் தண்ணீரை (அரை லிட்டர்) 10 நிமிடத்தில் கொதிக்க வைத்துவிடும். (என் சம்பந்தி இதை வைத்து டில்லியில் நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலைக் கொளுத்தப் பார்த்தார். கேதார்நாத், பத்ரிநாத் தரிசன புண்ணியத்தால் தப்பினோம். அந்த சாதனையை தகுந்த இடத்தில் சொல்கிறேன்).
அடுத்து பால் பவுடர். பலவித பிராண்டுகளில் கிடைக்கிறது. வாங்கி ஒரு டப்பர்வேர் டப்பாவில் போட்டு வைத்து விட்டால் காற்றுப்புகாமல் அப்படியே இருக்கும். கூடவே இன்ஸ்டன்ட் காபி பவுடர். இதையும் ஒரு டப்பர்வேர் டப்பாவில் போட்டு எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை ஒரு பாட்டில், கூட தேவையான டம்ளர்களும் ஒரு லோட்டாவும் வேண்டும்.
தண்ணீரைக் கொதிக்க வைத்து, டம்ளர்களில் தலா இரண்டு ஸ்பூன் பால் பவுடர், ஒரு ஸ்பூன் சர்க்கரை, அரை ஸ்பூன் இன்ஸ்டன்ட் காபி பவுடர் போட்டு வெந்நீரை டம்ளர் நிறைய ஊற்றி இரண்டு தடவை ஆற்றினால் மணக்கும் காபி ரெடி. ஹோட்டல்களில் ரூம் பாய்களிடம் சொன்னால் ஒரு மணி நேர்ம கழித்துத்தான் காபி கிடைக்கும். அதுவும் சூடு இல்லாமல். இந்த முறையில் சூடான, சுத்தமான காபி பத்து நிமிடங்களில் ரெடி.
இந்த முறையில் எல்லோருக்கும் காபி போட்டுக் கொடுத்தேன். நம்ம தமிழ் நாட்டுக்காரங்களுக்கு காபியைப் போன்ற சர்வ ரோக நிவாரணி எதுவும் இல்லை. காலையில் எழுந்தவுடன் ஒரு காபி குடிக்காவிட்டால் ஒரு வேலையும் ஓடாது அல்லவா? காபி குடித்தவுடன் எல்லோரும் ஓரளவுக்கு சுறுசுறுப்பாகி குளித்து ரெடியானார்கள்.
அப்புறம்தான் எனக்கு சோதனை ஆரம்பித்தது. டிபன் சாப்பிடலாமா என்றால் எல்லோரும் எனக்கு வேண்டாம், உனக்கு வேண்டாம் என்று ரகளை. முந்தின நாள் இரவும் களைப்பினால் ஒருவரும் சரியாக சாப்பிடவில்லை. காலையிலும் டிபன் ஒழுங்காக சாப்பிடவில்லை என்றால் அன்றைய பிரயாணக் களைப்பை எப்படி ஈடு செய்ய முடியும்? அந்தக் கடுகு எண்ணையின் வாசனை எல்லோருக்கும் வெறுத்து விட்டது. போதாக்குறைக்கு வயிற்றுக்கும் ஒத்துக்கொள்ளவில்லை. சரியென்று நான் மட்டும் சாப்பிட்டேன். மற்றவர்களுக்கு ஆளுக்கு நாலு மாத்திரை கொடுத்து சாப்பிடச் சொல்லிவிட்டு, பத்ரிநாத்துக்குப் புறப்பட்டோம்.
கேதார்நாத்திலிருந்து பத்ரிநாத்துக்கு இப்போது ஒரு குறுக்கு வழியில் சாலை போட்டிருக்கிறார்கள். சாலை நன்றாக இருக்கிறது. டிராபிக் குறைவு. தூரமும் 50-60 கி.மீ. குறைவு. வழியெங்கும் அடர்ந்த காடுகள். ஓங்கி வளர்ந்த மரங்கள். மனிதனால் கன்னி கழிக்கப்படாதவை. அமைதி என்றால் அப்பேர்ப்பட்ட அமைதி. காலமெல்லாம் இங்கேயே கழித்துவிட மாட்டோமா என்று ஏங்க வைக்கும் அமைதி. தனியாகப் போயிருந்தால் அப்படி செய்திருப்பேனோ என்னமோ? இப்போது பக்கத்தில் உள்ளவர்களைப் பார்த்ததும்தான், வந்த வேலை ஞாபகத்திற்கு வந்தது. சரி, பிராப்தம் இருந்தால் அடுத்த ஜன்மத்திலேயாவது இங்கு வந்து தங்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.
ஒரே குறை என்ன என்றால் வழியில் அதிகமான ஊர்கள் இல்லை. வண்டி பிரேக்டவுன் ஆனால் ஆட்களைக்கண்டு பிடித்து ரிப்பேர் செய்ய இரண்டு நாட்கள் ஆகிவிடும். வழியில் ஒரு இடத்தில் ஒரு டீக்கடை இருந்தது. ஆற்று ஓரத்தில் ரம்யமான சுழ்நிலை. தங்கும் வசதி இருந்தால் அங்கேயே நான்கு நாட்கள் தங்கலாமென்ற எண்ணம் வந்தது. அங்கு வண்டியை நிறுத்தி டீ சாப்பிட்டு விட்டு, அரை மணி நேரம் ரெஸ்ட் எடுத்தோம்.
பிறகு புறப்பட்டு ஹரித்துவார்-பத்ரிநாத் மெயின் ரோடில் சமோலி என்னுமிடத்தில் சேர்ந்தோம். அங்கிருந்து ஆறு மிலோமீட்டர் தூரத்தில் பிப்லிகோட் என்னும் ஊர் வருகிறது. இது கொஞ்சம் பெரிய ஊர். அங்கு மதிய உணவை முடித்துக்கொள்ளலாம் என்று டிரைவர் பரிந்துரைத்ததால் அங்குள்ள ஒரு பெரிய ஓட்டலில் சாப்பிடப் போனோம்.
சம்பந்தியம்மாளுக்கு தேவையான அரிசிச் சாதம் அங்கே கிடைத்தது. நல்ல தயிரும் இருந்தது. மிகவும் ஆசையாக வாங்கிப் பிசைந்து சாப்பிட்டால் சாதம் உள்ளே போகமாட்டேன் என்று சத்தியாக்ரஹம் பண்ணுகிறது. என்ன விஷயம் என்றால் சாதம் அரை வேக்காட்டில் எடுத்து விட்டார்கள். அப்புறம்தான் தெரிந்தது, வட இந்தியா முழுவதும் எல்லா ஹோட்டல்களிலும் சாதம் இப்படித்தான் இருக்கும் என்று கண்டுபிடித்தேன். இப்போது நம் ஊரிலும் சாதத்தை ஓட்டல்களிலும் கல்யாண வீட்டுகளிலும் இப்படித்தான் அரை வேக்காட்டில்தான் போடுகிறார்கள். பலருக்கும் பிடிக்கிறது போல் இருக்கிறது. எனக்குத்தான் பிடிக்கவில்லை போலும்.
எப்படியோ ஒரு மாதிரி மதிய உணவை முடித்துவிட்டு பத்ரிநாத் புறப்பட்டோம். முன்பே சொல்லியிருக்கிறேன், இந்த ரோடு எல்லைப் பாதுகாப்பு படையினரின் பராமரிப்பில் இருக்கிறது என்று. போகும் வழியெங்கும் சாலை அகலப்படுத்தும் வேலைகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பல இடங்களில் கார் மிகவும் மெதுவாகத்தான் ஓட்ட முடிந்தது. ஒரு வழியாக மாலை ஐந்து மணிக்கு பத்ரிநாத் சேர்ந்தோம். அந்நேரத்திலேயே குளிர் எலும்பு வரைக்கும் ஊடுருவியது. கேதார்நாத்தைவிட பத்ரிநாத் 1500 அடி அதிக உயரம். (கடல் மட்டத்திலிருந்து 11500 அடி உயரம்) ராத்திரிக்கு எப்படி தூங்கப்போகிறோம் என்ற கவலை எட்டிப்பார்த்தது.
டாக்சி டிரைவர் பரிந்துரைத்த ஒரு லாட்ஜில் தங்கினோம். ஒரே ரூம். ஐந்து பேர் தங்கக்கூடியது. கட்டில்களின் மேல் அரை அடி கனமுள்ள மெத்தைகள் இருந்தன. இது என்னவென்று கேட்டதற்கு அவைதான் ரஜாய், ராத்திரிக்கு தூங்கும்போது அவைகளைத்தான் போர்வையாகப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்று ரூம்பாய் சொன்னான். அவைகளைத் தூக்கவே தனியாக சாப்பிடவேண்டும் போல இருந்தது. ஆனால் தூங்கும்போதுதான் தெரிந்தது. பத்ரிநாத் குளிருக்கு அந்த ரஜாய்தான் பாதுகாப்பு கொடுத்தது. அவை இல்லாவிட்டால் நாங்கள் தூங்கியே இருக்க முடியாது.
நம் ஸ்பெஷல் காபி போட்டுக் குடித்துவிட்டு பத்ரிநாதரைத் தரிசிக்கப் புறப்பட்டோம். லாட்ஜிலிருந்து கோவில் அரை கிலோமீட்டர் தூரம்தான். ஆனால் கோவிலுக்கு போய்விட்டு வர நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே? அதை அடுத்த பதிவில் பார்க்கலாமா?
(பின்குறிப்பு: பல விவரங்களை மிகவும் விரிவாக எழுதக்காரணம், இந்தக் குறிப்புகள் இந்த யாத்திரை மேற்கொள்ளுபவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால்தான். மற்றவர்களுக்கு கொஞ்சம் சலிப்பாக இருந்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.)