புதன், 22 செப்டம்பர், 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 7 - கேதார்நாத் அதிர்ச்சிகள்{அங்கு நாங்கள் முதலில் அடைந்தது பெரிய அதிர்ச்சி. அது என்னவென்று அடுத்த பதிவில் பார்க்கலாமா?}

கோவிலுக்கு போகும் வழியில் கங்கையின் உபநதியான அலக்நந்தா நதி ஓடிக்கொண்டு இருக்கிறது. தண்ணீரைத் தொட்டுப் பார்த்தோம்ஐஸ் மாதிரி இருந்தது. நாங்கள் சட்டைக்கு உள்ளே ஒரு ஸ்வெட்டர், வெளியே ஒரு ஸ்வெட்டர் போட்டுக்கொண்டு இருந்த போதிலும் குளிரால் நடுங்கிக்கொண்டு இருந்தோம். பேசுவதற்கு வாயைத்திறந்தால் ஆவியாக வெளியில் வருகிறது. அவ்வப்போது பெய்யும் மழையில் வேறு நனைந்திருந்தோம். நாங்கள் இப்படி இருக்கும்போது அந்த ஐஸ் ஆற்றில் வடநாட்டு ஜனங்கள் சர்வ சாதாரணமாக, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் காவிரி ஆற்றில் குளிப்பது போல் குளித்துக்கொண்டும், துணிகளைத் துவைத்துக் கொண்டும் இருந்தார்கள். படத்தைப்பாருங்கள். அதைப் பார்த்தே எங்களுக்கு குளிர் ஜுரம் வந்தது போல் ஆகிவிட்டது. இது முதல் ஆச்சரியம்.

அடுத்தது-தென்னிந்தியாவில் இருப்பவர்களுக்கு கோவில் என்றால் ராமேஸ்வரம், தஞ்சாவூர், மதுரை, திருப்பதி, திருவனந்தபுரம் பத்மநாப ஸ்வாமி இப்படிப்பட்ட பிரம்மாண்டமான கோவில்கள்தான் மனக்கண்ணில் தெரியும். நான்கைந்து பிரகாரங்கள், நாலு மகாமண்டபங்கள் இப்படி இருந்தால்தான் ஆஹா, சக்தி வாய்ந்த நல்ல கோவில்என்று ஒத்துக்கொள்வோம். இப்படிப்பட்ட நமக்கு சென்னையில் இருக்கும் தெருமுனை பிள்ளையார் கோவில் மாதிரி ஒன்றைக்காட்டி இதுதான் கேதார்நாத் கோவில் என்றால் எப்படியிருக்கும்? பதினாறு அடிக்கு பதினாறு அடியில் ஒரு ரூம். அதில் நடுவில் ஸ்வாமி என்று சொல்லப்படும் ஒன்று. இருபது பேர் ஒன்றாக நிற்க முடியாத இடம். நம்மூரில் சில பணக்காரர்களின் வீடுகளில் பங்களாக்களில் கூட பூஜை அறை இதைவிடப் பெரிதாக இருக்கும். நான் நாஸ்திகனல்ல. இருந்தாலும் இந்தக் கோவிலைப் பார்க்கவா இவ்வளவு கஷ்டப்பட்டோம் என்று மனது பெரும்பாலானவர்களுக்கு சோர்ந்து போகும். ஆனால் வடநாட்டவர்கள் காட்டும் பக்தி உண்மையிலேயே பாராட்டுக்குரியது. இப்படிப்பட்ட கோவிலுக்கு கூட பயபக்தியுடன் கூட்டம் கூட்டமாக, வயதானவர்கள் உட்பட, வருகிறார்கள். இது இரண்டாவது ஆச்சரியம்.  
மூன்றாவது ஆச்சரியம். ஏழு அடி உயரமான திருப்பதி பாலாஜி, முப்பது அடி ஆஞ்சனேயர், இருபத்தியைந்து அடி விநாயகர் ஆகிய சாமிகளைப்பார்த்துப் பழகிய நமக்கு ஒரு இரண்டடி உயரமுள்ள ஒரு மலை முகட்டைக்காட்டி இதுதான் உலகப்பிரசித்தி பெற்ற கேதார்நாத் என்றால் கொஞ்சம் ஏமாற்றம் வருவதைத் தடுக்க முடியவில்லை. என்ன, ஒரே ஆறுதல் என்றால், சாமியை நம் கையாலேயே தொட்டு வணங்கலாம். நாமே அபிஷேக ஆராதனைகளைச் செய்யலாம். இது ஒன்றுதான் வித்தியாசமான விஷயம். நம்ம ஊர்ல சாமிக்கு பத்து அடி தூரத்தில நின்னுதான் சாமி கும்பிடணும். குருக்கள் மேல நம்ப கையோ, உடம்போ தெரியாத்தனமா பட்டுடுச்சுன்னா உடனே தீட்டு வந்துடுச்சுன்னு பெரிய ரகளை நடந்துடும்.
ஆனா, கோயிலுக்குள் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்ததாலும், பூஜை வழிமுறைகள் தெரியாததாலும், அந்தக் குளிரிலிருந்து சீக்கிரம் தப்பித்து செல்லவேண்டும் என்கிற எண்ணத்தினாலும் ஒரு புரோக்கர் அய்யரைப் பிடித்து ஒரு தொகை பேசி பூஜைக்கு ஏற்பாடு செய்யவேண்டிய சூழ்நிலையாகி விட்டது. அந்த அய்யர் கிடுகிடுவென் பூஜை சாமான்களை வாங்கி எங்கள் கையில் கொடுத்து கோவிலின் பின்புறவாசல் வழியாக கேதார்நாத்திடம் கூட்டிப்போய்விட்டார். அவருக்கு அங்குள்ள நடைமுறைகள் அத்துபடி.
எங்கள் கையாலேயே பாலபிஷேகம் செய்வித்தார். பூவால் அர்ச்சித்து சந்தனம், குங்குமம் பொட்டு வைத்தோம். அவுவளவுதான். சாமியைத் தொட்டு ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு வெளியே வந்தோம். இவ்வளவையும் மொத்தம் ஐந்து நிமிடங்களில் முடித்துவிட்டோம். வெளியில் வந்ததும் அய்யர் பூஜை சாமான்களுக்கு காசை வாங்கிக் கொடுத்துவிட்டு, அவருடைய காணிக்கையை வாங்கிக்கொண்டு காணாமல் போய்விட்டார். அடுத்த கிராக்கியைப் பிடிக்க வேண்டுமல்லவா?

சாமியை எங்கள் கைகளால் தொட்டு நமஸ்காரம் செய்தது இந்தக்கோவிலில் மட்டும்தான். இத்தனை கஷ்டங்களுக்கு இடையிலும் ஆறுதல் தந்தது அது ஒன்றுதான்.
மதியம் ஒரு மணி ஆகிவிட்டது. இனி கீழே இறங்கவேண்டும். மேகங்கள் கூடி எப்பொழுது வேண்டுமானாலும் மழையைப்பொழிவேன் என்று பயமுறுத்திக்கொண்டு இருக்கிறது. உடம்பு அசதி, குளிர், மூச்சுத்திணறல் இவைகளினால் பசி மறந்தும் மறைந்தும் போனது. ஆளுக்கு ஒரு டீ வாங்கிக் குடித்து விட்டு குதிரைக்காரர்கள் இருக்குமிடத்துக்கு வந்தோம். பார்த்தால் நான்கு குதிரைக்காரர்கள் மட்டும் இருக்கிறார்கள், ஒருவனைக் காணோம். எல்லோருமாகத் தேடி அவனைக்கண்டு பிடித்து எல்லோரும் குதிரைகளில் ஏறிப் புறப்பட்டோம். இறங்கும்போது குதிரைகள் வேகமாக இறங்குகின்றன. அதனால் அவைகள் கால்களை கீழே வைக்கும்போது ஏற்படும் அதிர்ச்சி இடுப்பு எலும்புக்குள் ஊடுருவி, ஏற்கனவே புண்ணாகி இருக்கும் தசைகளை மேலும் ரணமாக்குகிறது. இந்த வேதனையால் வழியில் தெரிந்த இயற்கைக்காட்சிகளை ரசிக்க முடியவில்லை. இருந்தாலும் உங்களுக்காக சில காட்சிகளை படம் பிடித்து வந்திருக்கிறேன்.
பாதி வழியில் இருக்கும் ராம்பாரா வந்தவுடன் நான் இனி நடந்தே வந்து விடகிறேன், நீங்கள் எல்லோரும் கீழே போய் காத்திருங்கள் என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தேன். என் சம்பந்தி அதற்கு முன்பிருந்தே நடந்து வந்து கொண்டிருந்தார். இருவரும் இரண்டு கிலோ நடந்திருப்போம். கால்களை பிரேக் போட்டு நடந்ததால் கால்களில் வலி ஆரம்பித்துவிட்டது. அப்படி நடக்காவிட்டால் நடக்கும் வேகத்தில் தலை குப்புற விழ வேண்டிவரும். என்ன செய்வதென்று யோசித்து திரும்பவும் வேறு குதிரைகளைப் பேசி மீதி தூரத்தைக்கடந்து கௌரிகுண்டிற்கு வந்து சேர்ந்தோம். அவ்வப்போது பெய்த மழையினால் எல்லோரும் நன்றாக நனைந்து விட்டோம். ஆனால் குதிரை சவாரிசுகத்தில்மழை ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.
எங்களக்கொண்டு வந்து விட்ட டாக்சி டிரைவர் எங்களை உடனடியாகக் கண்டு பிடித்துவிட்டார். டாக்சியில் ஏறி ரூமுக்கு வந்து படுத்ததுதான் தெரியும். தூங்கினது எப்பொழுது என்று ஒருவருக்கும் தெரியவில்லை. தூக்கத்தில் குதிரை என்னைக்கீழே தள்ளுவது போலவும், நான் அதல பாதாளத்தில் விழுவது போலவும் கனவுகள் வந்து கொண்டே இருந்தன. ஒரு வழியாகப் பொழுது விடிந்தது. முந்தின நாள் பயணம் ஒரு கனவு போல்தான் தோன்றியது. காலில் பட்ட காயம்தான் அது கனவல்ல, நிஜம்தான் என்று உணர வைத்தது.
காலையில் வெந்நீரில் குளித்து டிபன் சாப்பிட்ட பிறகுதான் ஓரளவு தெம்பு வந்தது. இன்று புறப்பட்டு பத்ரிநாத் போகவேண்டும். டிரைவர் ஒரு நாள் ஓய்வு எடுத்திருந்ததால் புத்துணர்ச்சியுடன் இருந்தார்.
பத்ரிநாத் பயணம் அடுத்த பதிவில்.


29 கருத்துகள்:

 1. //அதைப் பார்த்தே எங்களுக்கு குளிர் ஜுரம் வந்தது போல் ஆகிவிட்டது.//

  ஐயாவோட எழுத்தில சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காதுன்னு மறுபடியும் நிறுபிச்சிட்டீங்க!

  //அவைகள் கால்களை கீழே வைக்கும்போது ஏற்படும் அதிர்ச்சி இடுப்பு எலும்புக்குள் ஊடுருவி, ஏற்கனவே புண்ணாகி இருக்கும் தசைகளை மேலும் ரணமாக்குகிறது.//

  மனுஷனுக்கு துன்பம் வரலாம், ஆனா துன்பமே குதிரை சவாரி மூலம் வந்தா அது எப்படி? என்ன செய்வது ஐயா? முள்ளுமேல சேலையை போட்டப்பின்னாடி அதை கஷ்டப்பட்டுத்தானே விடுவிக்கணும்.

  //ஆனால் குதிரை சவாரி “சுகத்தில்” மழை ஒன்றும் பெரிதாகத் தெரியவில்லை.//

  இந்த நையாண்டி தான் உங்க டச்! அருமை!

  பத்ரிநாத்ல என்ன கொடுமை அனுபவிச்சீங்க தெரியலையே?

  பதிலளிநீக்கு
 2. என்னது நானு யாரா? சொன்னது:
  //பத்ரிநாத்ல என்ன கொடுமை அனுபவிச்சீங்க தெரியலையே? //

  முதல் வருகைக்கு நன்றி.

  திருக்குறள் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
  "இடுக்கண் வருங்கால் நகுக அடுத்தூர்வது அஃதொப்பதில்". வாழ்க்கையின் எல்லாக் கால கட்டங்களுக்கும் இது பொருந்தும்.

  பத்ரிநாத் வந்துகொண்டே இருக்கிறது. அரிசி ஊற வச்சாச்சு. ஒலை வச்சா, சாப்பாடு ரெடி.

  பதிலளிநீக்கு
 3. கை பிடித்து அழைத்துச் செல்வது போலிருந்ததுங்க பயணக் கட்டுரை. பத்ரிநாத்துக்கு தயாராகிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. எப்படியும் மேலும் கீழுமாக ஏழுமணி நேர குதிரைப் பிரயாணம்.

  குதிரையும் பறக்கறாப்பிலயே இருக்கத்தான் செய்யும் :)

  பத்ரிநாத் கட்டுரைக்கு காத்திருக்கிறேன்

  நன்றி

  பதிலளிநீக்கு
 5. அடடா....... படிச்சதே போதுமுன்னு திருப்தி கிடைச்சுருச்சு.

  ஊஹூம்..... நான் போறதா இல்லை, இல்லை.

  பதிலளிநீக்கு
 6. கூடவே வந்தது போலிருந்தது சார் உங்க பதிவைப் படிக்கும் போது,..

  பதிலளிநீக்கு
 7. நானும் நண்பர்களும் இங்கெல்லாம் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்.. உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ...

  பதிலளிநீக்கு
 8. நிகழ்காலத்தில் சொன்னது:

  //எப்படியும் மேலும் கீழுமாக ஏழுமணி நேர குதிரைப் பிரயாணம்.

  குதிரையும் பறக்கறாப்பிலயே இருக்கத்தான் செய்யும் :)

  பத்ரிநாத் கட்டுரைக்கு காத்திருக்கிறேன்

  நன்றி//

  வாங்க, கருத்துக்கு நன்றி. பத்ரிநாத் வந்துகொண்டே இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 9. வானம்பாடிகள் சொன்னது:

  //கை பிடித்து அழைத்துச் செல்வது போலிருந்ததுங்க பயணக் கட்டுரை. பத்ரிநாத்துக்கு தயாராகிக்கிறேன்.//

  கையைப் பிடித்து அழைத்துச்செல்லும் வயது ஆகிக்கொண்டு இருக்கிறதல்லவா?

  பதிலளிநீக்கு
 10. துளசி கோபால் சொன்னது:

  //அடடா....... படிச்சதே போதுமுன்னு திருப்தி கிடைச்சுருச்சு.

  ஊஹூம்..... நான் போறதா இல்லை, இல்லை.//

  கேதார்நாத்ஜி என்ன நெனச்சுட்டு இருக்கிறாரோ, அதுதான் நடக்கும்.

  பதிலளிநீக்கு
 11. கே.ஆர்.பி.செந்தில் சொன்னது:

  //நானும் நண்பர்களும் இங்கெல்லாம் செல்ல திட்டமிட்டு இருக்கிறோம்.. உங்கள் பதிவு எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் ...//

  போய்ட்டு வாங்க, நல்ல அனுபவம் கிடைக்கும்.

  பதிலளிநீக்கு
 12. மோகன்ஜி சொன்னது:

  //கூடவே வந்தது போலிருந்தது சார் உங்க பதிவைப் படிக்கும் போது,..//

  ரொம்ப நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 13. கக்கு-மாணிக்கம் சொன்னது:

  //தீர்த்த யாத்திரை என்பது மிக கடினமான ஒன்றுதான் போலும்.
  எனக்கும் ஆசை உண்டு. கயிலை தரிசிக்க. யார் அறிவார்!//

  உங்க ஆசையை மனதில் ஒரு புறம் பொட்டு வையுங்கள். சந்தர்ப்பம் வரும். அப்போது அதை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்துக்கொள்ளுங்கள்.

  மாணிக்கம், உங்க கமென்ட் பிளாக்கருக்கு வரவில்லையே. நான் மெயிலில் பார்த்துத்தான் பதில் போட்டேன்.

  பதிலளிநீக்கு
 14. நையாண்டி மற்றும் உங்கள் இயல்பான தமிழ் நடை சூப்பர்!

  வாழ்த்துக்கள்!

  என்றும் எப்போதும் அன்புடன்,
  ஆட்டையாம்பட்டி அம்பட்டன்
  அல்லது
  அமெரிக்கா அம்பட்டன்!

  பதிலளிநீக்கு
 15. உங்கள் மூலம் நாங்களும் கேதார்நாத் சென்றிருக்கிறோம். அதற்கு நன்றிகள். - வட நாட்டு வழிபாட்டு முறைகள் பெரும்பாலானவர்களுக்குப் புதுசு. உங்களுடன் பத்ரி செல்ல தயாராக இருக்கிறேன். சீக்கிரமே அழைத்துச் செல்லுங்கள்....

  வெங்கட்.

  பதிலளிநீக்கு
 16. உங்களது பயணம் எனக்கும் போவதற்கு ஒரு வழிகாட்டியா
  இருக்கும்னு நம்பறேன்.உங்கள் பதிவு நல்லா இருக்குங்க.

  பதிலளிநீக்கு
 17. அய்யா உங்கள் பயணக்கட்டுரை எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 18. கேதாரநாத் தரிசித்தோம்.

  இயற்கைக் காட்சிகளும் அருமை. நன்றி.

  பதிலளிநீக்கு
 19. ஆட்டையாம்பட்டி அம்பி சொன்னது;

  //நையாண்டி மற்றும் உங்கள் இயல்பான தமிழ் நடை சூப்பர்!
  வாழ்த்துக்கள்!என்றும் எப்போதும் அன்புடன்,ஆட்டையாம்பட்டி அம்பட்டன்
  அல்லது அமெரிக்கா அம்பட்டன்!//

  நன்றி ஆ.அ. அவர்களே.

  நீங்க உச்சிக்குடுமி வச்ச அம்பீன்னு நெனச்சுண்டிருந்தேன். அப்போ நீங்க அந்த அம்பி இல்லீங்களா?

  பதிலளிநீக்கு
 20. வெங்கட் நாகராஜ் சொன்னது:

  //வட நாட்டு வழிபாட்டு முறைகள் பெரும்பாலானவர்களுக்குப் புதுசு.//

  சரிங்க. அந்த முறைகளுக்குப் பழக கொஞ்சம் அனுபவம் தேவைப்படுகிறது.

  பத்ரிநாத் சீக்கிரம் போய்விடலாம்.

  பதிலளிநீக்கு
 21. வாங்க ஜிஜி அவர்களே,
  //உங்களது பயணம் எனக்கும் போவதற்கு ஒரு வழிகாட்டியா
  இருக்கும்னு நம்பறேன்.உங்கள் பதிவு நல்லா இருக்குங்க.//
  உங்க கருத்துக்கு மிக்க நன்றிங்க

  பதிலளிநீக்கு
 22. கோவை2தில்லி சொன்னது:

  //அய்யா உங்கள் பயணக்கட்டுரை எங்களுக்கு உபயோகமாக இருக்கும்.//

  நன்றி. மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் கேட்கவும்.

  பதிலளிநீக்கு
 23. மாதேவி சொன்னது:

  //கேதாரநாத் தரிசித்தோம்.

  இயற்கைக் காட்சிகளும் அருமை. நன்றி.//

  நன்றிங்க.

  பதிலளிநீக்கு
 24. போற வழியெல்லாம் கேதாரினாத்தை தான் பார்த்துட்டுப் பொய் இருக்கீங்க. எவ்வளவு அழாக இருக்கு.

  நீங்க சொல்லுவது புரியுது. நம்ம கோவில்களில் பிரமாண்டங்களை பார்த்து பழகிட்டோம்.

  மலைக்குன்று மாதிரி இருப்பது தான் கேதாரினாத்தா? சுயம்புவா. அதுக்கு ஏதாவது புராணம் இருக்குமே

  பதிலளிநீக்கு
 25. அருமையான புகைப்படங்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி. அங்குள் கோயில்களின் சிறிய அளவும், அந்த மக்களின் பக்திப் பெருக்கும் மனத்தில் நிற்கிறது.

  பதிலளிநீக்கு
 26. Dr.எம்.கே.முருகானந்தன் சொன்னது:

  //அருமையான புகைப்படங்களுடன் அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு நன்றி. அங்குள் கோயில்களின் சிறிய அளவும், அந்த மக்களின் பக்திப் பெருக்கும் மனத்தில் நிற்கிறது. //

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  மிகவும் வயதானவர்கள் கூட அந்த மலைப்பாதையில் நடந்து செல்வதைப் பார்த்தால்தான் அவர்களுடைய பக்தியின் ஆழம் புரிகிறது.

  பதிலளிநீக்கு
 27. super ... மிக நன்றாக இருக்கிறது..எனக்கும் போய் பார்க்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்தியது

  பதிலளிநீக்கு
 28. பார்வையாளன், விநாயகதாசன் அவர்களுக்கு,
  வருகைக்கும் ஊக்கம் தந்தமைக்கும் மிக்க நன்றி. அடிக்கடி வாங்க.

  பதிலளிநீக்கு