ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

கேதார்-பத்ரி யாத்திரை – 5 கேதார்நாத் சலோ


கேதார்நாத் சலோ
இதுதான் எனக்குத் தெரிந்த காலேஅரைக்கால் இந்தி. எல்லாரும் டாக்சியில் ஏறி உக்கார்ந்ததும் நான் டிரைவரிடம் இதைத்தான் கூறினேன். அவனுக்குத் தெரியும். நம்ம சரக்கு அவ்வளவுதான் என்று. அவன் மளமளவென்று ஹிந்தியில் என்னமோ நீளமா சொன்னான். எல்லாம் புரிந்த மாதிரி மண்டையை ஆட்டிவிட்டுடீக்ஹைஎன்று சொன்னேன். அவன் என்ன சொன்னானோ கேதார்நாத்ஜீக்கே வெளிச்சம். அதற்குப்பிறகு பல இடங்களில் அவன் இந்த மாதிரி பேசினபோதெல்லாம்முஜே ஹிந்தி அச்சீ நஹி மாலும்அப்படீன்னு சொல்லி சமாளிப்பேன்.
இந்த டூரைப்பற்றி எழுத ஆரம்பித்ததும் ஒரு பதிவர் சொன்னார். கேதார்நாத் செல்வதற்கு நிறைய மனோதிடம் வேண்டும் என்று. அதை இந்த டூரில் அனுபவ பூர்வமாக உணர்ந்தேன். முதலில் நம் ஊர் சாதம், சாம்பார், ரசம், மோர் இவைகளை மறந்துவிட வேண்டும். ரொட்டி, டால் அல்லது சப்ஜி, கடுகு எண்ணெய், இவைகளுக்கு மனது ஒத்துக்கொண்டால் ஒழிய வடநாட்டு யாத்திரையைப்பற்றி கனவு கூடக் காணவேண்டாம். இது தவிர மனதில் அளவுக்கதிகமான பக்தி வேண்டும். வடநாட்டுக்காரர்களிடம் இருக்கும் அளவு பக்தி தென்னாட்டவரிடம் இல்லையென்றுதான் சொல்லவேண்டும். பக்தி இருந்தால்தான் உடல் உபாதைகளை மறந்து ஆண்டவனைத் தரிசிக்கவேண்டும் என்ற வேட்கை தோன்றும். இரண்டாவது, பணத்தைத் தாராளமாகச் செலவு பண்ணக்கூடிய சௌகரியம். இது இல்லாவிட்டால் இன்னும் அதிகமான, அசௌகரியங்களுக்கு ஆளாகவேண்டும். இந்த அசௌகரியங்களுக்கு அஞ்சாத மனோதிடம் வேண்டும்.

ஹரித்துவாரிலிருந்து கேதார்நாத் மலையின் அடிவாரமானகௌரிகுண்ட்என்னும் இடத்திற்குப்போக ஏறக்குறைய 220 கிலோமீட்டர்கள். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. ஒரு பக்கம் மலை. மறு பக்கம் அதலபாதாளம். அதன் அடியில் சின்ன வாய்க்கால் மாதிரி தெரியும் கங்கை நதியும் அதன் கிளை நதிகளும். இந்தப்பாதாளத்தில் விழுந்தால் நம் காரும் நாமும் என்னவாவோம் என்கிற நினைப்பே ஆண்டவனை நம்ப வைத்துவிடும். அவன் அருள் இல்லையென்றால் அவனை நினைக்கவோ, தரிசிக்கவோ, தரிசித்துவிட்டு உயிருடன் ஊர் திரும்பவோ முடியாது என்கிற நம்பிக்கையை இந்த பாதாளங்களைப் பார்த்ததும் நிச்சயம் தோற்றுவிக்கும்.

இயற்கையன்னை கருணையுடன் நம்மை இந்த சிந்தனைகளிடமிருந்து மீட்டு தன்வயப்படுத்துகிறாள். எங்கும் பச்சப்பசேல் என்ற பசுமை. ஓங்கி வளர்ந்த மரங்கள். வளைந்து வளைந்து செல்லும் மலைப்பாதை. பெரும்பாலான இடங்களில் கூடவே வரும் கங்கை. இவை நம் கவனத்தை ஈர்க்கின்றன.
மதியம் 1 மணிக்கு ஸ்ரீநகர் என்னும் ஊரில் மதிய உணவு சாப்பிட்டோம். என்ன உணவு என்றால் ரொட்டி, சப்ஜி, சாவல், தஹி, அச்சார். இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஐந்து வார்த்தைகளை வைத்துக்கொண்டு வட இந்தியா முழுவதும் உங்கள் உணவுப் பிரச்சினையைத் தீர்த்துக்கொள்ளலாம். என்ன ஒரே சங்கடம் என்றால் இரண்டு நாளில் வயிற்றுப்போக்கு ஆரம்பிக்கும். இதற்கு உண்டான மருந்துகளை நம் மருந்துப்பெட்டியிலிருந்து எடுத்து சாப்பிட வேண்டியதுதான். ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இனி ஊர் திரும்பும் வரையில் இந்த மாத்திரைகள்தான் நம் உணவு. அதற்குத்தேவையான அளவு மாத்திரைகளை ஊரிலிருந்தே முன் எச்சரிக்கையாக கொண்டு வந்திருக்கவேண்டும். வயிற்றுப்போக்கு நிற்பதற்கும் நாம் நம் ஊர் வந்து சேருவதற்கும் சரியாக இருக்கும். அப்புறம் என்ன, நம் டாக்டர் நம்மையும் நாம் திருப்பிக் கொண்டு வந்திருக்கும் மிச்சம் மீதி இருக்கும் பணத்தையும் கவனித்துக் கொள்வார்.
ஹரித்துவாரிலிருந்து கேதார்நாத், பத்ரிநாத் செல்லும் சாலைகளை BSF என்னும் எல்லையோரக் காவல் படையினர் பராமரிக்கிறார்கள். ஆகவே அவைகள் நன்றாக இருக்கின்றன. பல சமயங்களில் மலைச்சரிவு ஏற்பட்டு ரோடு அடைபட்டு விடும். அநேகமாக சில மணி நேரங்களில் சரி செய்து விடுகிறார்கள். ஆனால் சில நேரங்களில் சரி செய்வதற்கு ஓரிரு நாட்கள் கூட ஆகலாம். அந்த மாதிரி நிலைமை ஏற்பட்டால் டூரை கேன்சல் செய்து விட்டு திரும்பவதைத்தவிர வேறு வழி இல்லை. எங்கள் நல்ல காலம் அந்த மாதிரி ஒரு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
அந்த மலைப்பதையில் வண்டி ஓட்டும் டிரைவர்களும் கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். வேகமாகச் சென்றால்கூட விபத்துக்களை ஏற்படுத்துவதில்லை. நமக்குத்தான் பயமாக இருக்கிறது. இப்படியாகப்பயணித்து மாலை 5 மணிக்கு சோனப்பிரயாக் என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த இடம் கௌரிகுண்ட் என்னும் இடத்திற்கு ஐந்து கி.மீ. முன்னால் இருக்கிறது. எங்கள் டிரைவர் என்ன சொன்னாரென்றால், “கௌரிகுண்டிற்குச் சென்றால் தங்குவதற்கு நல்ல சௌகரியமான இடம் கிடைக்காது. சோனப்பிரயாக்கில் நல்ல ஓட்டல் இருப்பதால் அங்கேயே தங்கிக்கொள்ளலாம்என்று சொன்னார். நாங்களும் அப்படியே சரியென்று சொல்லி, சோனப்பிரயாக்கிலேயே தங்கினோம். ஓட்டல் உண்மையிலேயே நன்றாக இருந்தது.

அங்கேயே ஒரு குதிரை புரோக்கர் டிரைவர் மூலமாக வந்தார். அவரிடம் ஐந்து பேர்களுக்குமாக குதிரைகளை, குதிரை ஒன்றுக்கு 1100 ரூபாய் என்று பேசி அடவான்ஸ் கொடுத்தோம். கௌரிகுண்ட்டிலிருந்து கேதார்நாத் கோயிலுக்கு 14 கி.மீ.தூரம். நடக்க மனோதிடமும் உடல்திடமும் உள்ளவர்கள் நடந்து செல்லலாம். ஏறுவதற்கு 6 மணி நேரமும்  இறங்குவதற்கு 5 மணி நேரமும் வேண்டும். நாங்கள் அந்தப் பரீட்சைக்கு தயார் இல்லை. ஆகவே குதிரைகள் ஏற்பாடு செய்தோம். குதிரையில் போவது சுகமாக இருக்கும் என்ற நினைவிலேயே தூங்கிப்போனோம்.
தொடரும்….

24 கருத்துகள்:

 1. அருமை. எங்களுக்கும் குதிரையில் கேதாரிநாத் போவது போல் உள்ளது.
  ஆவலுடன் மீதியை எதிர்பார்கிறோம்

  பதிலளிநீக்கு
 2. //வடநாட்டுக்காரர்களிடம் இருக்கும் அளவு பக்தி தென்னாட்டவரிடம் இல்லையென்றுதான் சொல்லவேண்டும்//
  இதை நான் ஏற்க மாட்டேன்.நானறிந்த வகையில் அவர்கள் பெரும்பாலும் கடவுளிடமும் நடிக்கிறார்கள்.

  இரவு எட்டு மணிக்கு மேல் மலைப்பாதைகளில் பயணம் செய்ய முடியாது. ஆதலால் எங்கு செக் போஸ்ட் போடுகிறார்களோ அதற்கு அருகிலேயே தங்கவேண்டி வரும்.


  ஓகே.ஓகே. குதிரையில் கிளம்பியாச்சா.....இனி அடர்வனம், அருவிகள் பார்க்க ஆவலாய் உள்ளேன். கௌரிகுண்டில் ஓர் வெந்நீர் ஊற்று உள்ளதே அதில் குளித்தீர்களா...

  பதிலளிநீக்கு
 3. Vanjimagal said:

  //அருமை. எங்களுக்கும் குதிரையில் கேதாரிநாத் போவது போல் உள்ளது.
  ஆவலுடன் மீதியை எதிர்பார்கிறோம் //

  விரைவில் வெளிவருகிறது.

  பதிலளிநீக்கு
 4. கலாநேசன் said:

  //இரவு எட்டு மணிக்கு மேல் மலைப்பாதைகளில் பயணம் செய்ய முடியாது. ஆதலால் எங்கு செக் போஸ்ட் போடுகிறார்களோ அதற்கு அருகிலேயே தங்கவேண்டி வரும்.//

  ஆம். நாங்கள் அந்த சூழ்நிலையைத் தவிர்த்துவிட்டோம். எங்கள் பிரயாணம் முழுவதும் பகல் நேரத்திலேயே அமைந்து விட்டது.

  //ஓகே.ஓகே. குதிரையில் கிளம்பியாச்சா.....இனி அடர்வனம், அருவிகள் பார்க்க ஆவலாய் உள்ளேன். கௌரிகுண்டில் ஓர் வெந்நீர் ஊற்று உள்ளதே அதில் குளித்தீர்களா...//

  நாங்கள் கௌரிகுண்ட்டிற்கு முன்னாலேயே தங்கிவிட்டதால் வெந்நீர் ஊற்றில் குளிக்கவில்லை.

  பதிலளிநீக்கு
 5. பயண கட்டுரை ரொம்ப அழகா வருது.. அடுத்த பகுதியை படிக்க ஆவல்...

  ஐயா! நீங்க நம்ப பக்கம் வந்து நாளாச்சே! சீக்கிரம் வாங்க! பலகாரம் எல்லாம் ஆறிட போகுது

  -----------------------------------

  நண்பர்களே! பக்கவிளைவுகள் இல்லா மருத்துவம், இயற்கை மருத்துவத்தை பற்றி எழுதி கொண்டிருக்கின்றேன்.

  என் வலைபக்கம் http://uravukaaran.blogspot.com

  நீங்கள் படித்து பயன் அடைய பல தகவல்கள் இருக்கின்றன. ஆங்கில மருத்துவ கொடும்பிடியில் இருந்து விடுதலை அடைவோம்! வாருங்கள் நண்பர்களே!
  ----------------------------------

  பதிலளிநீக்கு
 6. நானும் கேதார் பத்ரி போகவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.

  font கொஞ்சம் நெட்டுக்கு நிக்குதே. கொஞ்சம் சரி பண்ணுங்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அய்யா நீங்கள் சொல்லும் அழகே நன்றாயிருக்கிறது. அடுத்த பதிவு எப்போ வரும் என்று ஆவலாய் உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 8. என்னது நானு யாரா?

  //பயண கட்டுரை ரொம்ப அழகா வருது.. அடுத்த பகுதியை படிக்க ஆவல்...//

  வருகுது.

  //ஐயா! நீங்க நம்ப பக்கம் வந்து நாளாச்சே! சீக்கிரம் வாங்க! பலகாரம் எல்லாம் ஆறிட போகுது//

  தினமும் வந்துட்டுத்தான் இருக்கேன். என்ன பின்னூட்டம் போடறதுன்னு தெரியாம திரும்பிடறேன். இனி ஆஜர் போட்டுக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. இரா. கோபி சொன்னது:

  //நானும் கேதார் பத்ரி போகவேண்டும் என்று நீண்ட நாள் ஆசை.

  font கொஞ்சம் நெட்டுக்கு நிக்குதே. கொஞ்சம் சரி பண்ணுங்கள். நன்றி.//

  இப்பவே போய்ட்டு வந்துடுங்க. வயசான பிறகு கொஞ்சம் கஷ்டம்.

  font ஐ ஸ்பெஷலா கவனிக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 10. கோவை2தில்லி சொன்னது:

  //அய்யா நீங்கள் சொல்லும் அழகே நன்றாயிருக்கிறது. அடுத்த பதிவு எப்போ வரும் என்று ஆவலாய் உள்ளேன்.//
  நன்றி. அடுத்த பதிவை சீக்கிரம் போடுகிறேன்.

  பதிலளிநீக்கு
 11. //தினமும் வந்துட்டுத்தான் இருக்கேன். என்ன பின்னூட்டம் போடறதுன்னு தெரியாம திரும்பிடறேன். இனி ஆஜர் போட்டுக்கிறேன்.//

  ஐயா..!!! இல்ல..இல்ல..இது செல்லாது செல்லாது... இதை ஒத்துக்க முடியாது...

  உங்களை போல அனுபவசாலிகள், குறை நிறை என்ன என்று சொல்லணும்னு விருப்பபடறேன்.

  உங்களுக்கு சிலது புதிய செய்தியாக இருக்கலாம். சிலது உங்களுக்கு ஏற்கனவே அறிந்தவையாக இருக்கலாம். என் பதிவுகளை பற்றிய உங்களின் பார்வையில் என்ன படுகிறது என்று சொல்வது தானே சரியாக இருக்கும்!

  அதனால் கண்டிப்பாக உங்க கருத்தை பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. என்னது நானு யாரா? சொன்னது:

  //ஐயா..!!! இல்ல..இல்ல..இது செல்லாது செல்லாது... இதை ஒத்துக்க முடியாது...

  உங்களை போல அனுபவசாலிகள், குறை நிறை என்ன என்று சொல்லணும்னு விருப்பபடறேன்.

  உங்களுக்கு சிலது புதிய செய்தியாக இருக்கலாம். சிலது உங்களுக்கு ஏற்கனவே அறிந்தவையாக இருக்கலாம். என் பதிவுகளை பற்றிய உங்களின் பார்வையில் என்ன படுகிறது என்று சொல்வது தானே சரியாக இருக்கும்!

  அதனால் கண்டிப்பாக உங்க கருத்தை பதிவு செய்யவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.//

  அய்யோ, வடிவேலு சொல்ற மாதிரி "பாசக்காரப் புள்ளைக". செஞ்சுர்லாம் தம்பி. கவலைய உடுங்க. இனிப்பாருங்க, எப்படிக் கும்மறேன்னு.

  பதிலளிநீக்கு
 13. டாக்டர் அய்யா,வணக்கம்.மணியம் செல்வம் மாதிரி பயணக்கட்டுரைல அசத்தறீங்களே,வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 14. பயனுள்ள பகிர்வு.

  “ஆச்சார்” - இல்லை அது! ”அச்சார்” - ஊறுகாயைத் தான் ஹிந்தியில் அச்சார் என்று சொல்வார்கள்.

  மேலும் படிக்க ஆவல்.

  வெங்கட்.

  பதிலளிநீக்கு
 15. வெங்கட், ஊறுகாய் (அச்சார்)அங்குள்ள ஹோட்டல்களில் உண்மையாகவே மிகவும் நன்றாக இருக்கிறது. ஊறுகாயைச் சரி செய்துவிட்டேன்.

  பதிலளிநீக்கு
 16. சி.பி.செந்தில்குமார் சொன்னது:

  //டாக்டர் அய்யா,வணக்கம்.மணியம் செல்வம் மாதிரி பயணக்கட்டுரைல அசத்தறீங்களே,வாழ்த்துக்கள்//

  நன்றி, செந்தில்குமார் அவர்களே. தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.

  பதிலளிநீக்கு
 17. குதிரை சவாரி சுலபமில்லை.

  போனவாரம் போய்வந்த தோழியின் தொடைகள் எல்லாம் கன்னிச் சிவந்து பயங்கர வலியில் இருக்காங்க.

  அதுவும் இறங்குபோது குதிரை துள்ளித்துள்ளி இறங்குதாமே:(

  பதிலளிநீக்கு
 18. வணக்கம். படித்து சிரித்து வயிற்று வலி !!

  அருமை.

  நன்றி.

  பதிலளிநீக்கு
 19. //பக்தி இருந்தால்தான் உடல் உபாதைகளை மறந்து ஆண்டவனைத் தரிசிக்கவேண்டும் என்ற வேட்கை தோன்றும்.//


  100சதம் சரி

  பதிலளிநீக்கு
 20. //குதிரையில் போவது சுகமாக இருக்கும் என்ற நினைவிலேயே தூங்கிப்போனோம்//

  குதிரை சவ்வாரி + போட்டில கடல்ல போவது ரெண்டுமே கஷ்டம் . இடுப்பு வலி வந்துடும்

  பதிலளிநீக்கு
 21. துளசி கோபால் சொன்னது:

  //குதிரை சவாரி சுலபமில்லை.

  போனவாரம் போய்வந்த தோழியின் தொடைகள் எல்லாம் கன்னிச் சிவந்து பயங்கர வலியில் இருக்காங்க.

  அதுவும் இறங்குபோது குதிரை துள்ளித்துள்ளி இறங்குதாமே:( //

  அந்த அனுபவம் கேதார்நாத் மாகதேவ் - ஐ ஆயுளுக்கும் மறக்க முடியாமல் செய்துவிடும். அடுத்த பதிவில் அந்த அனுபவங்களை எழுதுகிறேன்.

  பதிலளிநீக்கு
 22. ஜெய்லானி, நீங்கள் அனுபவித்து சொல்கிறீர்கள். மனது ஒன்றி வேண்டினால்தான் இறை அருள் கிடைக்கும் என்பது உண்மை.

  நான் கடலில் போட்டில் போனதில்லை. ஆனால் பிளேன் சவாரியே அதிக நேரம் ஆனால் உடல் உபாதை தருவதை அனுபவித்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 23. வெற்றிமகள் சொன்னது:

  //வணக்கம். படித்து சிரித்து வயிற்று வலி !!
  அருமை.
  நன்றி.//

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 24. சார். கங்கை நதியை பற்றிய வரத்தை பதிவு அருமை... அடுத்த பதிவை படிக்காமலேயே சொல்கிறேன், கங்கையை பார்த்த பயத்தைவிட குதிரையின் பயணம் இன்னும் பயத்தை ஏற்ப்படுத்தும். எல்லாம் அனுபவம் தான் ....

  பதிலளிநீக்கு