ஞாயிறு, 3 அக்டோபர், 2010

உங்களுக்குப் பைத்தியம்தான் புடிச்சிருக்கு !





இன்று காலையில் இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் யாரு, யாருக்காக இந்த அறிவிப்பை ஒலிபரப்புகிறார்கள் என்று சுற்று முற்றும் பார்த்தேன். என் மனைவிதான் நின்றுகொண்டிருந்தார்கள். (எதுக்கும் கொஞ்சம் மரியாதையாகவே இருப்போம் - எதிரணியின் உத்தி என்னவென்று தெரியவில்லையே).
என்ன, யாருக்கு இந்த அர்ச்சனை என்று கேட்டேன்.
எல்லாம் உங்களுக்குத்தான், என்றார்கள்.
ஏன், என்ன ஆச்சு, எனக்கு எதுக்காக இப்போ இந்தப் பட்டம்?
ஆமா, நானும் அரை மணி நேரமா டிபன் சாப்பிடக் கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறேன், உங்க காதிலேயே விழல்ல, அந்தக் கம்ப்யூட்டர்ல அப்படி என்ன இருக்கு, அதயே எப்பப் பார்த்தாலும் பயித்தியம் மாதிரி பார்த்துட்டே இருக்கீங்க, அதனாலதான் அந்தப் பட்டம் என்றார்கள்.
பதில் பேசாமல் டிபன் சாப்பிட்டுவிட்டு வந்து ஒரு சுய பரிசோதனை செய்தேன்.
பயித்தியம், கிறுக்கு, பிராந்து, மென்டல், கீழ்ப்பாக்கம், லூஸு என்று பல சொற்களால் அழைக்கப்படும் ஒரு மனிதனுடைய (இது, அது என்றுதான் குறிப்பிடப்படுவதால் அந்த மனிதன் அஃறிணை லெவலுக்கு தள்ளப்படுகிறான்) குணங்கள் என்னென்ன என்று ஒரு ஆராய்ச்சி செய்தேன். {என்ன இருந்தாலும் நான் ஒரு ஆராய்ச்சியாளனல்லவா}. அந்த ஆராய்ச்சியில் கண்டு பிடித்தவை.
1. பைத்தியம் எப்போதும் ஒரு வேலையையே திரும்பத் திரும்ப செய்யும்.

ஆமாம், நானும் எப்ப பார்த்தாலும் கம்ப்யூட்டரையே நோண்டிக் கொண்டிருக்கிறேன்.

2. பைத்தியம், ஏதாவது ஒன்றையே முறைத்துப்பார்த்துக்கொண்டே இருக்கும்.
ஆமாம், நானும் எப்பொழுதும் கம்ப்யூட்டரையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
3. பைத்தியத்திற்கு சுற்றுப்புறத்தில் என்ன நடக்கிறது என்ற பிரக்ஞையே இருக்காது.

ஆமாம், என்ன நடந்தாலும், யார் வந்தாலோ, போனாலோ எனக்குத் தெரிவதில்லை.

4. பசி, தாகம் என்ற உணர்வுகள் இருக்காது.
ஆமாம், சாப்பிடவேண்டும் என்றே தோணுவதில்லை.
5. யாராவது கூப்பிட்டால் காது கேட்காது.
கரெக்ட், கூப்பிட்டா காது கேட்பதில்லை.
இந்த ஆராய்ச்சியின் முடிவில் நான் ஒரு பைத்தியம்தான் என்ற முடிவுக்கு வந்தேன். மனைவியைக் கூப்பிட்டு, ஆமாம், நீ சொன்னது சரிதான் போல இருக்குது என்றேன்.
எது சரியாய் இருக்கு என்றாள்.
அதுதான், நீ சொன்னது போல் எனக்குப் பைத்தியம்தான் போல இருக்கு என்றேன்.
சரிதான், இப்பத்தான் உங்களுக்கு பைத்தியம் முத்திக்கொண்டு வருகிறது என்றாள்.
இனி மேற்கொண்டு இவளிடம் பேசினால் வம்பு வந்துவிடும் என்று பேசாமல் இருந்தேன்.
என் மகள் வந்தவுடன் (அவள் ஒரு கைனகாலஜிஸ்ட்) யாராவது ஒரு பைத்தியக்கார டாக்டர் பக்கத்துல இருக்காங்களா என்று விசாரித்தேன்.
அப்படி பைத்தியக்கார டாக்டர் யாரும் கிடையாது, பைத்தியத்துக்கு வைத்தியம் பண்ற டாக்டர்தான் இருக்கிறாரு, சரி, யாருக்கு இப்போ பைத்தியம் என்று கேட்டாள்.
எனக்குத்தான் என்றேன்.
யாரு சொன்னா என்றாள்.
உங்கம்மாதான் சொன்னாள், எனக்குப் பைத்தியம் என்று, அப்படீன்னேன்.
பைத்தியம் யாரும் தனக்குப் பைத்தியம்னு சொல்லமாட்டாங்களே, இது என்ன புது குழப்பம் என்று அவங்கம்மாவைக் கூப்பிட்டு விசாரித்தாள்.
விசாரணை முடிவில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்னவென்றால் நான் இனிமேல் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம்தான் கம்ப்யூட்டர் பார்க்கலாம். அதற்கு மேல் பார்த்தால் கம்ப்யூட்டர் பறிமுதல் செய்யப்படும்.
இந்த தீர்ப்புக்கு அப்பீல் செய்ய முடியுமா?
ஆகவே, என் பெருமதிப்பிற்குரிய பதிவுலக நண்பர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் :-
1. இனி என் பதிவுகள் வாரத்துக்கு ஒன்றுதான் வரும்.
2. அப்படி வரும் பதிவுகளுக்கு வரும் பின்னூட்டங்களுக்கு எதிர்வினை போடுவது தாமதமாகும்.
3. அப்படிப்பின்னூட்டம் போட்டவர்களின் பதிவுகளுக்குப் போய் அந்தப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் போடுவது இன்னும் தாமதமாகும்.
4. அது போக புதிதாக மற்றவர் பதிவுகளுக்குப் போய் அந்தப் பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் போடுவது மேலும் தாமதமாகும்.
என்னுடைய கைகளுக்கு மீறி சுற்றுப்புற சுழ்நிலைகள் மாற்றியமைக்கப்பட்டதால் நிலைமைகள் சீராகும் வரை இந்த நிலையே தொடரும் என்பதை வருத்தத்துடன் சொல்லிக்கொள்கிறேன். எல்லோரும் வழக்கம்போல் தொடர்ந்து தங்கள் ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி, வணக்கம்.
என்னுடைய இந்த முடிவுகளினால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
(டிஸ்கி: நீண்ட நேரம் உட்கார்ந்தால் பின்புறத்தில் வலி வருகிறது. கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்ப்பதால் கண்களில் பார்வை மங்குகிறது. இவைதான் உண்மையான காரணங்கள். பதிவுகள் தொடரும்.)

53 கருத்துகள்:

  1. அப்படீன்னா நீங்க மொதல்லயே பயித்தியம் இல்லீங்களா? இப்பத்தான் ஆகறீங்களா? ரொம்ப சந்தோஷமுங்க. இனி உங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லீங்க.

    பதிலளிநீக்கு
  2. வயசாச்சுன்னா ரெஸ்ட் எடுக்கணும்.அஅத உட்டுப்போட்டு பிளாக்கு அது இதுன்னு போனா இப்படித்தான் ஆகும். நான் எதிர்பார்த்த்துதான். என்ன மொஞ்சம் தேட்.

    பதிலளிநீக்கு
  3. Prabhu said:

    //என்னங்க அப்பிச்சி, என்ன ஆச்சு? //

    அத ஏன் கேக்கற பேராண்டி, எல்லாரும் சேந்து சதி பண்ணி என்ன இந்த நெலைக்கு கொண்டு வந்துட்டாங்க, பேராண்டி, நீதான் காப்பாத்தோணும்.

    பதிலளிநீக்கு
  4. மசக்கவுண்டன் சொன்னது:
    //அப்படீன்னா நீங்க மொதல்லயே பயித்தியம் இல்லீங்களா? //
    இந்த எகத்தாளம்தான வேண்டாங்கறது?

    பதிலளிநீக்கு
  5. உங்கள் உடல்நலனுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்,

    உங்கள் நகைச்சுவை உணர்வுக்கு இன்னும் வயதாகவே இல்லை:)

    பதிலளிநீக்கு
  6. பைத்தியகார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் பிடித்தால் அவர் எந்த பைத்தியங்களுககு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியகார டாக்டரிடம் போவார்....? நீங்கள் இப்போதுதான் பைத்தியகார பட்டம் வாங்கி உள்ளீர்கள். நாங்களெல்லாம் வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது..(உடம்பை பார்த்துக்கொள்ளுங்கள்...என்றும் நாங்கள் உடன் இருப்போம்)
    வாழ்க வளமுடன்.
    வேலன்.

    பதிலளிநீக்கு
  7. வேலன் சொன்னது;

    //பைத்தியகார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் பிடித்தால் அவர் எந்த பைத்தியங்களுககு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியகார டாக்டரிடம் போவார்....?//

    விசு ஒரு படத்துல சொன்ன வசனம்னு நினைக்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. வேலன் சொன்னது:

    //நீங்கள் இப்போதுதான் பைத்தியகார பட்டம் வாங்கி உள்ளீர்கள். நாங்களெல்லாம் வாங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது.//

    பட்டம் வாங்கி சட்டம் போட்டு வைத்துள்ளீர்களாக்கும? அப்போ வைத்தியம் ஒண்ணும் பண்ண வேண்டாங்களா?

    பதிலளிநீக்கு
  9. //பேராண்டி, நீதான் காப்பாத்தோணும்.//

    அப்பிச்சி, இன்னும் மூணு வருசம் பொறத்துக்கோங்க, நான் படிப்ப முடிச்சுட்டு வந்து உங்களைச் சரி (?) பண்ணீடுறேன்.

    (MBBS- 3rd year)

    பதிலளிநீக்கு
  10. பிரபு சொன்னது:

    //அப்பிச்சி, இன்னும் மூணு வருசம் பொறத்துக்கோங்க, நான் படிப்ப முடிச்சுட்டு வந்து உங்களைச் சரி (?) பண்ணீடுறேன்.//

    இன்னும் மூணு வருசமா? பொளச்சுக்கெடந்தா பாத்துக்கலாம்?

    பதிலளிநீக்கு
  11. வேலன் அவர்களுக்கு, உங்களுடைய முதல் வருகைக்கு மிக்க நன்றி. உங்க பிளாக்குல பின்னூட்டம் போடறதுக்கான வழி தெரியவில்லை. விளையாட்டுகளை தரவிறக்கம் செய்ய முடியுமா?

    பதிலளிநீக்கு
  12. என்னுடைய வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
    ஒரு படைப்பாளியின் சுதந்திரம் இப்படி பறிக்கப்படுவது கொடுமை.
    சங்க தலைவருக்கே இந்த கதி என்றால்...??
    உடனடியாக சங்கத்தை கூட்டி விவாதித்தித்து முடிவு எடுக்கப்படவேண்டும்.............

    //வீட்டில் வைத்துக்கொள்வதா இல்லை......ஆஸ்பத்தரியில் கொண்டு விடுவதா//

    என்று.

    உறுப்பினர்கள் அணைவரும் கலந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்ள படுகிறது.

    பதிலளிநீக்கு
  13. எதுக்கும் வருத்தப் படாதிங்க. நாங்க இருக்கோம் டாக்டர் சார்.

    பதிலளிநீக்கு
  14. நல்ல அலசல்.எல்லோரும் ஒரு வகையில் பைத்தியம் ஆகிக்கொண்டு இருப்பதுதான் உண்மை.வைராக்கியம் பிரசவ வைராக்கியமாக இருந்து விடாதே?உடல் நல முக்கியம்.அதனை முதலில் கவனியுங்கள்.நேரம் கிடைக்கும் பொழுது http://shadiqah.blogspot.com/2010/06/blog-post_25.html இந்த பதிவைப்பாருங்கள்

    பதிலளிநீக்கு
  15. எல்லாப் பதிவர்க்ளுக்கும் இலவசமாக் கொடைக்கும் ஒரே பட்டம் இதுதான் போல!! :-((

    ஆனாலும் உங்க வீட்டம்மா சொன்னாச் சரியாத்தான் இருக்கும்!! :-))))

    பதிலளிநீக்கு
  16. மிகுந்த நகைச்சுவையாகச் சொல்லிவிட்டீர்கள்.:)

    உங்கள் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  17. சார்ர்ர்ர்ர்...
    உங்களுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.
    ஆனால், எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.
    இன்னும் மூன்று ஆண்டுகள் பொறுத்துக்கிட்டால்,
    பிரபு வந்திடுவாரு, அப்புறம் நீங்க துணிச்சலாய்
    இறங்கி உங்க விளையாட்ட நடத்துங்க; யாருக்கும்
    பயப்படாமல்.

    பதிலளிநீக்கு
  18. //(டிஸ்கி: நீண்ட நேரம் உட்கார்ந்தால் பின்புறத்தில் வலி வருகிறது. //

    சார்... நின்னுக்கிட்டே கம்ப்யூட்டர் பார்ப்பதுமாதிரியான
    ஏற்பாடு எதுவும் செஞ்சிக்கிடலாமே, சார்? (நகைச்சுவை
    என்று லேபில் போட்டதால், நானும் கொஞ்சம்
    நகை- சுவையாய் பின்னூட்டம் போட்டுள்ளேன்)

    சார், உடல் நலம் கவனித்துக் கொள்ளுங்கள்.

    பதிலளிநீக்கு
  19. \\இனி என் பதிவுகள் வாரத்துக்கு ஒன்றுதான் வரும்.\\

    சார், வீட்ல சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க. எரும மாட்டு மேல மழை பெஞ்ச மாதிரி அதெல்லாம் கண்டுக்கக் கூடாது:)))))))))

    பதிலளிநீக்கு
  20. ஹுஸைனம்மா சொன்னது:

    //ஆனாலும் உங்க வீட்டம்மா சொன்னாச் சரியாத்தான் இருக்கும்!!//

    சகோதரிகள் எப்பவும் அண்ணியுடன் சேர்ந்துகொண்டு அண்ணனைக் காலை வாரி விடுவார்கள் என்பது சரியாத்தான் இருக்கு.

    பதிலளிநீக்கு
  21. மாதேவி சொன்னது:

    //மிகுந்த நகைச்சுவையாகச் சொல்லிவிட்டீர்கள்.:)
    உங்கள் நலனைக் கவனித்துக் கொள்ளுங்கள்.//

    மிக்க நன்றி மாதேவி அவர்களே.

    பதிலளிநீக்கு
  22. நிஜாமுதீன் சொன்னது:

    //சார்ர்ர்ர்ர்...
    உங்களுக்கு பைத்தியம்தான் பிடிச்சிருக்கு.
    ஆனால், எனக்கு உங்களை பிடிச்சிருக்கு.
    இன்னும் மூன்று ஆண்டுகள் பொறுத்துக்கிட்டால்,
    பிரபு வந்திடுவாரு, அப்புறம் நீங்க துணிச்சலாய்
    இறங்கி உங்க விளையாட்ட நடத்துங்க; யாருக்கும்
    பயப்படாமல்.//

    பயமா, எனக்கா, என்ன சொல்லிப்பிட்டீங்க போங்க? கொஞ்சம் இருங்க, ஊட்டுக்கார அம்மா வராப்ல இருக்கு, அப்பறமா பேசலாம்!

    பதிலளிநீக்கு
  23. நிஜாமுதீன் சொன்னது:

    //சார்... நின்னுக்கிட்டே கம்ப்யூட்டர் பார்ப்பதுமாதிரியான
    ஏற்பாடு எதுவும் செஞ்சிக்கிடலாமே, சார்? //

    சூப்பர் ஐடியாங்க, ஏற்பாடு பண்ணீடலாங்க, என்ன, இப்ப "அரை"ங்கறாங்க, அப்ப "முழுசு"ம்பாங்க. மத்தவங்க சொல்றதையெல்லாம் பாத்துட்டிருந்தா நம்ம காரியம் ஆகுமுங்களா?

    பதிலளிநீக்கு
  24. Gopi Rammamoorthy said:

    //சார், வீட்ல சொல்லிக்கிட்டுதான் இருப்பாங்க. எரும மாட்டு மேல மழை பெஞ்ச மாதிரி அதெல்லாம் கண்டுக்கக் கூடாது:)))))))))//

    அப்படித்தானுங்க இருக்கறேன். ஆனா அப்பப்போ உங்க சப்போர்ட் தேவைப்படுகிறது.

    பதிலளிநீக்கு
  25. //என்னுடைய இந்த முடிவுகளினால் இந்தியப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல//

    ஐயா!
    என்ன இப்படி சொல்லிவிட்டீங்க , உலகப் பொருளாதாரமே பாதிக்க போகிறதே, ஆனாலும் உங்கள்
    முடிவை வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  26. யோகன்-பாரிஸ் சொன்னது;

    //ஐயா!
    என்ன இப்படி சொல்லிவிட்டீங்க , உலகப் பொருளாதாரமே பாதிக்க போகிறதே, ஆனாலும் உங்கள்
    முடிவை வரவேற்கிறேன். //

    ஐயா, அப்படியா நினைக்கறீங்க, சரிங்க, அமெரிக்க ஜனாதிபதி இந்தியா வர்ராருங்களாமே, அவரும் மன்மோகன்சிங்கும் ஜாயின்ட்டா கேட்டுக்கிட்டாங்கள்னா, என் முடிவை மாத்திக்கிறேனுங்க.

    பதிலளிநீக்கு
  27. வயதில் மூத்த நாலைந்து பேர்களை ஆச்சரியமாய் பார்ப்பேன். இநத் கணினி என்பது வாசிக்க மற்ற விசயங்களுக்கு எரிச்சல் மிகுந்த சமாச்சாரம். புத்தகம் தான் எப்போதுமே சிறப்பு. ஆனால் தொடக்கம் முதல் உங்கள் நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லாமல் இருக்க சரி நீங்களும் நடிகர் சிவகுமார் மாதிரி கொஞ்சம் எளமையா ரகஸ்யமா இருப்பீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

    முதலில் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். உங்க அனுபவ வயது மட்டும் இருக்கும் இங்கே அல்லாடுது. நீங்க தூள் கிளப்பி இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க. அதுக்கே மொத வாழ்த்து சொல்லனும்.

    பதிலளிநீக்கு
  28. நல்ல தமாஸ்..நம்ம நிலையும் ஆது தானுங்க..தம் கட்டி சமாளிக்க வேண்டியதாக உள்ளது. பேரர் வேற போட்டிக்கு..

    பதிலளிநீக்கு
  29. டாக்டர் ஐயா ,எல்லா பதிவர்களுக்கும் நேரும் அனுபவத்தை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டி இருக்கு சார்

    பதிலளிநீக்கு
  30. ///(டிஸ்கி: நீண்ட நேரம் உட்கார்ந்தால் பின்புறத்தில் வலி வருகிறது.கம்ப்யூட்டரை அதிக நேரம் பார்ப்பதால் கண்களில் பார்வை மங்குகிறது. இவைதான் உண்மையான காரணங்கள். பதிவுகள் தொடரும்.) //



    இப்படிப் பட்ட விசயத்த இப்படி கூட சொல்லலாமா ..?

    நல்லா இருக்குங்க ..

    பதிலளிநீக்கு
  31. ஜோதிஜி சொன்னது:

    //முதலில் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். உங்க அனுபவ வயது மட்டும் இருக்கும் இங்கே அல்லாடுது. நீங்க தூள் கிளப்பி இவ்வளவு தூரம் வந்து இருக்கீங்க. அதுக்கே மொத வாழ்த்து சொல்லனும்.//

    வாழ்த்துக்கு நன்றி. நான் வாழ்க்கையில் நகைச்சுவையை விடக்கூடாது என்பதை நம்புபவன். அது இல்லாவிட்டால் வாழ்க்கை சலித்து விடும்.

    பதிலளிநீக்கு
  32. தாராபுரத்தான் சொன்னது:

    //நல்ல தமாஸ்..நம்ம நிலையும் ஆது தானுங்க..தம் கட்டி சமாளிக்க வேண்டியதாக உள்ளது. பேரர் வேற போட்டிக்கு..//

    நமக்கு வயசாகறபோது மனைவிக்கும் வயசாகிறதல்லவா? கொஞ்சம் நாமும் விட்டுக்கொடுத்துப்போகணும்.

    பேரர் என்னங்கறாரு?

    பதிலளிநீக்கு
  33. சி.பி.செந்தில்குமார் சொன்னது:

    //டாக்டர் ஐயா ,எல்லா பதிவர்களுக்கும் நேரும் அனுபவத்தை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறீர்கள்.உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ளவேண்டி இருக்கு சார்//

    நன்றி செல்வக்குமார். வாழ்க்கையை இப்படித்தான் கொண்டுபோக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  34. ப.செல்வகுமார் சொன்னது:

    //இப்படிப் பட்ட விசயத்த இப்படி கூட சொல்லலாமா ..?

    நல்லா இருக்குங்க ..//

    வாங்க செல்வம், இப்படி கொஞ்சம் நகைச்சுவையோட இருந்தாத்தான் வாழ்க்கையின் சுமை தெரியாது. இல்லீங்களா?

    பதிலளிநீக்கு
  35. பட்டத்துக்கு மேல பட்டமா வாங்கி குவிச்சிக்கிட்டு இருக்கீங்க...ம்ம். நடத்துங்க!

    பதிலளிநீக்கு
  36. ஐயா! உடல் நலன் தான் முதல்ல கவனிக்கப்படவேண்டியது. வீட்டு அம்மா சொன்னாங்கன்னா அதில எவ்வளவு அக்கறை உங்க மேல இருக்குன்னு நல்லாவே தெரியுது. அதனால உடம்பை ரொம்ப வறுத்திக்கொள்ள வேணாமுங்க.

    வாரம் 1 பதிவு ரொம்ப குறைவு. வாரம் 2 பதிவு போடுங்க. அதில ஒன்னு உங்க பக்தி ட்ரிப்பை பற்றிப் எழுதுங்க. என்னங்க ஐயா! நான் சொல்றது? நாட்டாமை தீர்ப்பு சொல்லிப்புட்டேன். அதை தட்டக்கூடாது நீங்க. ஆமா சொல்லிப்புட்டேன்.

    பதிலளிநீக்கு
  37. டாக்டர் சார்..................சுகமான் சுவை உங்க நகைச்சுவை

    பதிலளிநீக்கு
  38. ப.ரா. சொன்னது:

    //பட்டத்துக்கு மேல பட்டமா வாங்கி குவிச்சிக்கிட்டு இருக்கீங்க...ம்ம். நடத்துங்க! //

    எதோ நீங்க எல்லாம் இருக்கீங்க என்கிற தைரியத்துல கொஞ்சம் பூந்து வெளயாடறனுங்க.

    பதிலளிநீக்கு
  39. என்னது நானு யாரா? சொன்னது:

    //ஐயா! உடல் நலன் தான் முதல்ல கவனிக்கப்படவேண்டியது. வீட்டு அம்மா சொன்னாங்கன்னா அதில எவ்வளவு அக்கறை உங்க மேல இருக்குன்னு நல்லாவே தெரியுது. அதனால உடம்பை ரொம்ப வறுத்திக்கொள்ள வேணாமுங்க.//

    பாத்துக்கறனுங்க.

    பிறவியிலேயே நான் கொஞ்சம் சோம்பேறிங்க. வாழப்பழத்த உரிச்சுக் கொடுத்தாத்தான் சாப்பிடுவனுங்க. அதனால அவ்வளவு சீக்கிரம் உடம்ப வருத்தி ஒண்ணும் செய்யமாட்டனுங்க.

    பதிலளிநீக்கு
  40. தெய்வ சுகந்தி சொன்னது:

    //ஐயா உடல் நலனை பாத்துக்குங்க!//

    அக்கறைக்கு ரொம்ப நன்றி, சுகந்தி

    பதிலளிநீக்கு
  41. நிலாமதி சொன்னது:

    //டாக்டர் சார்..................சுகமான் சுவை உங்க நகைச்சுவை//

    நன்றி, நிலாமதி.

    பதிலளிநீக்கு
  42. நான் உங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  43. அட நீங்களும் நம்ம ஊருதானுங்கள? (பத்தமடை என் ஊருங்க. பாய்க்கும், பைத்தியத்துக்கும் ரொம்ப famous ங்க)

    பதிலளிநீக்கு
  44. நாகராஜசோழன் MA said...
    //நான் உங்களுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கிறேன்!//
    வாங்க நாகராஜசோழன், ஆதரவு எங்கிருந்து கொடுத்தால் என்னங்க? வரவேற்கிறேன்.

    பதிலளிநீக்கு
  45. Vishnu said...

    //அட நீங்களும் நம்ம ஊருதானுங்கள? (பத்தமடை என் ஊருங்க. பாய்க்கும், பைத்தியத்துக்கும் ரொம்ப famous ங்க)//

    பைத்தியத்துக்கும் கூட famous ங்களா? அப்ப அங்க போனா என்ற பைத்தியம் தெளிஞ்சுடுமுங்களா?

    பதிலளிநீக்கு
  46. ஹா ஹா ஹா.. உண்மையில் சூப்பர் பதிவு..
    நல்லா சிரிச்சேன்...
    உங்க ஆராய்ச்சியும், அதில் நீங்க கண்டு அறிந்த உண்மையும்..சூப்பர்..
    (எல்லார் வீட்டிலும் இப்படி தான் போல.....)

    பதிலளிநீக்கு
  47. அவங்க அப்படித்தான் பாஸ் சொல்லிக்கிட்டே இருப்பாங்க, இதெல்லாம் பாத்தா தொழில் பண்ண முடியுமா பாஸ், விடுங்க பாஸ்.

    உடம்பை கவனித்துக் கொள்ளவும். அப்படி கவனிக்க த்வறினால் பைத்தியம் முற்றி வீட்டில் உள்ளவர்களுக்கு பிரச்சனகியாகி விடும்.

    இப்ப சீறியஸ்: உடல் நலனில் அக்கறை காட்டுங்கள் டாக்டர் சார். உடல் நலமாக இருந்தால் தான் நாங்கள் நல்ல பதிவுகளை படிக்க முடியும். அதனால் தான் உங்க தங்கமனி அதிக நேரம் கம்ப்யூட்டரில் உட்காருவதற்கு தடை விதித்திருக்கிறார்கள் போல.

    பதிலளிநீக்கு
  48. //பைத்தியகார ஆஸ்பத்திரியில் பைத்தியங்களுக்கு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியக்கார டாக்டருக்கு பைத்தியம் பிடித்தால் அவர் எந்த பைத்தியங்களுககு வைத்தியம் பார்க்கின்ற பைத்தியகார டாக்டரிடம் போவார்.//

    டாக்டர் அல்ல - வைத்தியர் (மைத்தியம், வைத்தியம், வைத்தியர் -- எதுகை..)

    பதிலளிநீக்கு
  49. 'ரெஸ்ட் இஸ் எ மஸ்ட்' அய்யா... நீங்க எப்ப வந்து பதிவு போட்டாலும் அதுக்கு கமெண்ட்டும், வாசகர் வட்டமும், ஓட்டும் கிடைத்து விடும்....கிடைக்காமல் போகது...ஆனால் உடம்பு என்பது அப்படியல்ல. அது உங்கள் சொத்து, அதை பாதுகாப்பதே தலையாய கடமை. சரிங்களா...அதனால நல்ல்படியா இனிமே ரெஸ்ட் எடுங்க. எப்ப முடியுதோ அப்ப பதிவும் பின்னூட்டங்களும் போடுங்க...வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  50. நீங்க விவரமா எழுதிட்டீங்க. இங்க கணனி அருகில போகவே விடமாட்டேன் என்கிறாங்க, நம்ம வீட்டில

    பதிலளிநீக்கு
  51. உருத்திரா said...

    //நீங்க விவரமா எழுதிட்டீங்க. இங்க கணனி அருகில போகவே விடமாட்டேன் என்கிறாங்க, நம்ம வீட்டில//

    வாங்க காம்ரேட் (comrade). நான் வக்கீல்கிட்ட போலாம்னு இருக்கேன். நீங்களும் சேர்ந்துக்கறீங்களா?

    பதிலளிநீக்கு