திங்கள், 29 நவம்பர், 2010

விதியை யாரால் வெல்ல முடியும் ?


வேளாண்மை பற்றி பலரும் இந்த தளத்தில் பின்னூட்டம் இட்டு வருகிறார்கள். நான் ஒரு விவசாயப் பட்டதாரியாக இருந்து கொண்டு ஏன் விவசாயத்தைப் பற்றி எழுதக்கூடாது என்று ஏறக்குறைய குற்றம் சாட்டுகிறார்கள். அவர்கள் தலையில் என்னுடைய விவசாயக் கருத்துக்களைப் படிக்கவேண்டும் என்கிற விதி இருந்தால் அதை மாற்ற யாரால் முடியும்? ஆகவே விவசாயத்தைப் பற்றியும் எழுதுவது என்கிற முடிவுக்கு வந்துள்ளேன்.

முதலில் என்னுடைய இன்னொரு தளத்தில் எழுதிய சில பதிவுகளை மீள் பதிவாகப் போடுகிறேன். பிறகு விவசாய சம்பந்தமான கேள்வி-பதில் பகுதி ஒன்று ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு கேள்விகளைப் பின்னூட்டமாகவோ அல்லது என்னுடைய மின் முகவரிக்கு மின்னஞ்சலாகவோ அனுப்பலாம். அவ்வப்போது பதில் எழுதுகிறேன்.

முதல் பதிவு - ஒரு புனைவு:

சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு. கோயமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு விவசாயி. அவனுக்கு ஒரு பத்து ஏக்கர் பூமி இருக்கிறது. அங்கு ஒரு கிணறு. மழை, மாரி ஒழுங்காகப் பெய்வதால் கிணற்றில் தண்ணீல் எப்போதும் வற்றாமல் இருக்கும். அந்தக்கிணற்றிலிருந்து வரும் நீரில் ஒரு ஐந்து ஏக்கரில் தோட்டக்கால் விவசாயம். மீதி ஐந்து ஏக்கரில் மானாவாரி விவசாயம். ஒரு மனைவி, இரண்டு குழந்தைகள், ஒரு பெண், ஒரு ஆண். விவசாயத்தில் உதவ ஒரு பண்ணையாள். தோட்டத்திலேயே ஒரு குடிசை போட்டு அவனையும் அவன் குடும்பத்தையும் குடி வைத்திருக்கிறான். இவன் ஊருக்குள் இருக்கும் பழங்கால வில்லை வீட்டில் குடியிருக்கிறான்.

விவசாயிக்கும் அவன் மனைவிக்கும் படிப்பு கிடையாது. குழந்தைகள் ஐந்தாவது வகுப்பு வரைக்கும் உள்ளூர் ஆசிரியரிடம் அவருடைய வீட்டில் படித்தார்கள். அதற்கு மேல் படிப்பதானால் டவுனுக்குப் போகவேண்டும். அதனால் படிப்பைத் தொடரவில்லை. பையன் அப்பாவுக்கு உதவியாக பண்ணை வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்கிறான். பெண் அம்மாவுக்கு உதவியாக வீட்டு வேலைகளைச் செய்து கொண்டிருக்கிறாள்.

தோட்டத்தில் முக்கிய பயிர் சோளம், ராகி, காய்கறிகள், கொஞ்சம் பணப்பயிர்கள். வாய்க்கால் ஓரங்களில் சுமார் ஐம்பது தென்னை மரங்கள் இருக்கின்றன. அந்த விவசாயிக்கு தினசரி வாழ்க்கைத் தேவைகளுக்கு வேண்டிய அனைத்தும் தோட்டத்திலேயே விளைகின்றன. விளக்கு எரிக்க கெரசின் ஆயில், உப்பு, சில சமையல் எண்ணைகள், தீப்பெட்டி இது போன்று சில பொருள்களை மட்டும் வெளியில் இருந்து வாங்கவேண்டும். அவைகளையும் வியாபாரிகள் ஊருக்குள் கொண்டு வந்து பண்டமாற்று முறையில் கொடுத்து விட்டுப் போவார்கள். பணத்திற்கு ஏறக்குறையத் தேவையே இல்லை. பண்டிகை சமயத்தில் துணிமணிகளும் கூட பண்டமாற்று முறையிலேயே கிடைக்கும். சிலர் மட்டும் டவுனுக்குப் போவார்கள்.

கூலி கொடுப்பது தானியங்கள் மூலமாகத்தான். வண்ணான், நாவிதன், கொல்லன், கொசவன், பண்டாரம், பஞ்சாங்க அய்யர் அனைவருக்கும் வருடத்திற்கு ஒரு முறை அறுவடை சமயத்தில் தானியங்கள்தான் கொடுக்கப்படும்.

எல்லாத் தேவைகளுக்கும் போக தானியங்கள் மீதி இருக்கும் என்று தெரிந்தால் அவைகளை மட்டும் பண்ணைக்கே வரும் வியாபாரிகளிடம் விற்றுவிட்டு பணம் வாங்கி பெட்டியில் வைத்துக்கொள்வார். இந்தப்பணம் ஒரு கணிசமான அளவு சேர்ந்ததும் ஏதாவது முதலீடு செய்வார்.

பண்ணையில் இரண்டு ஜோடி எருதுகள், இரண்டு பால் மாடுகள், நாலு ஆடு, நாலு கோழி இவைகள் இருக்கும். தோட்டத்தில் விளையும் பயிர்களிலிருந்து வரும் கழிவுகள் இந்தக் கால்நடைகளுக்கு போடுவார்கள். இவைகளிலிருந்து வரும் சாணி முதலானவற்றை கவனமாக சேகரித்து ஒரு எருக்குழியில் சேர்த்து வைப்பார்கள். புதிய பயிர் பயிரிடுமுன் இந்த எருவைப் பயன்படுத்துவார்கள்.

இப்படிப்பட்ட பண்ணை வாழ்க்கைதான் இயற்கையோடு இணைந்த வாழ்க்கை. எல்லோரும் ஆரோக்யமாக இருந்தார்கள். இந்தப் பண்ணைகளை ஏறக்குறைய பூலோக சொர்க்கத்திற்கு இணையாகச் சொல்லலாம். அப்படிப்பட்ட பண்ணை இப்போது இருந்தால் எவ்வளவு விலை கொடுத்தும் வாங்க இன்று ஆட்கள் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பண்ணைகள் எங்கே போயின? இந்த மாதிரி பண்ணைகளை இன்று உருவாக்க முடியுமா? இயற்கை விஞ்ஞானிகளே, யோசியுங்கள். யோசித்து உங்கள் பதிலைக் கூறுங்கள்.

ஞாயிறு, 28 நவம்பர், 2010

விவசாயம் பற்றி

விவசாயம் பற்றி



உங்கள் தொழில் சார்ந்த விவசாயம் பற்றி ஒரு தொடர் எழுதினால் பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்...இன்றைய கால கட்டத்தில் விவசாயம் மட்டும் செய்து வாழ்வது இயலுமா!!! என்ன மாதிரியான விவசாயம் செய்ய வேண்டும்? குறைந்தது எவ்வளவு நிலம் வேண்டும்...விவசாயம் பற்றி ஒன்றுமே தெரியாத என்னை போன்றோர் செய்ய நினைப்பது மடமையா? இல்லை செய்ய முடியும் என்றால் அதற்கு அடிபடையாக செய்ய வேண்டியவை யாவை?
அதிகமான அதிக பிரசங்கி கேள்விகளுக்கு மன்னிக்கவும்...

மேலே கொடுத்துள்ள குறிப்பு ஒரு பதிவர் பின்னூட்டத்தில் கேட்டது. அங்கேயே பதில் சொல்ல இடம் போதாதாகையால் ஒரு தனிப்பதிவாகப் போடுகிறேன்.

முதலில் சொல்ல விரும்புவது: இதைத்தொடர் பதிவாகப் போடமாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். ஆகவே யாரும் பயப்படவேண்டாம். விவசாயத்தைப்பற்றி ஏற்கனவே நிறையப்பேர் பலப்பல கருத்துக்களைச் சொல்லி பரம்பரை விவசாயிகளையே குழப்பி வருகிறார்கள். அந்த வரிசையில் நான் சேரமாட்டேன்.

இன்றைய காலகட்டத்தில் முன் அனுபவமில்லாமல் செய்யக்கூடிய ஒரே தொழில் அரசியல்தான். அது மட்டுமல்லாமல் போட்ட முதலுக்கு பலமடங்கு லாபம் மொடுக்கும் தொழில் அது ஒன்றுதான். பரம்பரை விவசாயிகள் வேறு வழி தெரியாமல் விவசாயத்தை விட முடியாதவர்களாக இருக்கிறார்கள். கொஞ்சம் பேரே விவசாயத்தில் லாபம் கண்டு சௌகரியமாய் இருக்கிறார்கள். சொஞ்சம் பேர் வரவுக்கும் செலவுக்கும் சரியாய்ப் போய் வாழ்க்கை நடத்துகிறார்கள். மீதிப்பேர் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெரிய பெரிய கார்ப்பரேட் ஆட்களெல்லாம் விவசாயம் செய்ய ஆரம்பித்து, துண்டைக்காணோம், துணியைக்காணோம் என்று ஓடிய கதைகளெல்லாம் இங்கு உண்டு.

விவசாயத்தைப்பற்றி ஒன்றும் தெரியாமல் விவசாயம் செய்யலாமா என்று கேட்பவருக்கு என் ஆலோசனை என்னவென்றால்: நல்ல நிலம், நல்ல சீதோஷ்ண நிலை, கூலியாட்கள் தடையில்லாமல் கிடைக்கக்கூடிய நிலை, நல்ல மார்க்கெட்டிங் உத்திகள் தெரிந்த ஒரு ஆலோசகர், நல்ல மேனேஜ்மென்ட் தெரிந்த ஒரு மேனேஜர், எடுக்க எடுக்க குறையாத பேங்க் பேலன்ஸ் ஆகிய இவை இருந்தால் தாராளமாக விவசாயத்தில் ஈடுபடலாம்.

என்னை டெக்னிகல் அட்வைசராகப் போடுவதாயிருந்தால் பத்து வருட நோட்டீஸ் கொடுக்கவேண்டும். ஆனால் கன்சல்டிங்க் பீஸ் நோட்டீஸ் கொடுத்த நாளிலிருந்து பேங்கில் செலுத்தி விடவேண்டும். என்னுடைய அக்கவுன்ட் நெம்பரும் கன்சல்டிங்க் பீஸ் விவரங்களும் வேண்டுபவர்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு பேங்க் டிராப்ட் எடுத்து அனுப்பினால் தெரியப்படுத்தப்படும்.

சனி, 27 நவம்பர், 2010

கேதார் யாத்திரை முடிவு

கேதார் யாத்திரை ஜூலை மாதம் போய் வந்தோம். இப்போது நடப்பது நவம்பர் மாதம். நான்கு மாதத்திற்கு மேல் ஒரு பயணப்பதிவை தொடர்வது பதிவுலக தர்மங்களின்படி நியாயமல்ல. ஆகவே இந்தப்பதிவுடன் இந்தப்பயணத் தொடரை மங்களகரமாக முடித்துக்கொள்கிறேன்.

மறுநாள் ரிஷிகேசத்திற்கு சென்று விட்டு, அதற்கடுத்த நாள் புறப்பட்டு டில்லி வந்து சேர்ந்தோம். அங்கிருந்து ஒரு நாள் ஆக்ரா போய்வந்தோம். படங்களை தனி பதிவாகப் போடுகிறேன்

அடுத்த நாள் டில்லியிலிருந்து புறப்பட்டு பிளேன் சவாரியாக கோவை வந்து வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். வீட்டுக்கு வந்ததும் செய்த முதல் காரியம் ரசம் சாதம் சாப்பிட்டதுதான்.

சுபம்.

வெள்ளி, 26 நவம்பர், 2010

ஹரித்துவாரும் ரிஷிகேசமும்



ஹரித்துவாரில் கங்கையில் குளிப்பது என்பது ஒரு தனி அனுபவம். உண்மையில் நாம் குளிப்பது கங்கை கால்வாயில்தான். இருந்தாலும் இது காசியில் கங்கா ஸ்நானம் செயவதைவிட உற்சாகமாக இருக்கும். காசியில் கங்கை ஓடுவதே தெரியாது. சமவெளியாதலால் நதியின் வேகம் மிகவும் குறைந்து நதி ஓடுவதே தெரியாமல் இருக்கும். ஆனால் ஹரித்துவார் இமய மலையின் அடித்துவாரம். இமயமலையின் ஆழமான சரிவுகளில் ஓடிவரும் கங்கை இன்னும் சாந்தமடையாத நிலை. சற்று கவனக்குறைவாக கங்கையில் இறங்கினால் தன் உற்பத்தி ஸ்தானத்துக்கே, அதாவது மகேஸ்வரனின் ஜடாமுடிக்கே, அழைத்துச் சென்றுவிடுவாள். அவ்வளவு வேகம்.

அந்த வேகத்தை பல தடுப்பணைகள் முலமாகக் கட்டுப்படுத்தி கால்வாய்கள் மூலமாக கங்கையை ஹரி-கி-பியாரிக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த கால்வாய் நெடுகிலும் குளிப்பவர்களின் சௌகரியத்திற்காக படித்துறை கட்டி, இரும்பு குழாய்களை நட்டு அவைகளை இணைத்து கெட்டியாக இரும்புச்சங்கிலி போட்டிருக்கிறார்கள். குளிப்பவர்கள் இந்த இரும்பு சங்கிலிகளைப் பிடித்துக்கொண்டு குளிப்பது பாதுகாப்பாக இருக்கும். இந்த சங்கிலிகள் இன்னொரு விதத்திலும் பாதுகாப்பானது. கங்கைக் கால்வாயின் நீர் ஏறக்குறைய ஐஸ் கட்டியை உருக வைத்தது போல இருக்கும். முதல் தடவை இங்கு குளிப்பவர்களின் உடல் குளிர் ஜுரம் வந்தவர்கள் உடம்பு போல நடுங்கும். அப்போது இந்த இரும்பு சங்கிலிகள்தான் ஆதரவாக இருக்கும்.

ஆனால் இந்த ஊர் வாண்டுப் பையன்கள் எந்த வித பயமும் இல்லாமல் கால்வாயின் குறுக்கே கட்டியிருக்கும் பாலத்திலிருந்து கால்வாய்த்தண்ணீரில் குதித்து விளையாடுகிறார்கள். அதில் ஒரு சில வாண்டுகள் அந்த மாதிரி குதித்துக்காட்டுவதற்காக யாத்திரீகர்களிடம் பணம் கேட்பதுவும் உண்டு. ஐந்து ரூபாய் கொடுத்தால் ஒரு முறை ஜம்ப் செய்து காண்பிப்பார்கள். அவர்களுக்கு பழக்கமானதால் குளிர் அவர்களுக்கு உறைப்பதில்லை.

காலையில் நேரத்தோடு வெறும் வயிற்றில் குளிப்பது நல்லது. தண்ணீரில் ஒரு முறை முங்கி எழுந்துவிட்டால் அப்புறம் குளிர் போய்விடும். தண்ணீரை விட்டு வெளியில் வரவே மனது வராது. அழுக்குத்துணிகளைத் துவைத்து பக்கத்திலுள்ள செடிகளின் மேல் காயப்போட்டுவிட்டு குளித்துவிட்டு வந்தால் துணிகள் காய்ந்து இருக்கும். அவைகளைப் போட்டுக்கொண்டு, கங்கா மாதா கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு ரூமுக்கு வந்தோம். முருகேசன் கடையில் இட்லி வாங்கி சாப்பிட்டோம்.

பிறகு ஹரித்துவாரில் அடுத்து மிகப்பிரபலமானமன்ஸா தேவிகோவிலைப் பார்க்கலாம் என்று புறப்பட்டோம். இந்தக்கோவில் ஒரு சிறிய மலைக்குன்றின் மேல் இருக்கிறது. கோவிலுக்குப் போவதற்கு நல்ல பாதை போட்டிருக்கிறார்கள். கூடவே கேபிள் கார் சேவையும் இருக்கிறது. பெரும்பாலானவர்கள் டூரிஸ்ட்கள் ஆனதால் நேரத்தை மிச்சப்படுத்த கேபிள் காரையே பயன்படுத்துகிறார்கள். நாங்கள் ஹோட்டலிலிருந்து ஆட்டோ ரிக்சா மூலம் கோவில் அடிவாரத்தை அடைந்தோம். கேபிள் காருக்கு போகவர டிக்கெட் வாங்கி கேபிள் காருக்காக கொஞ்சம் நேரம் காத்திருந்தோம். பிறகு கேபிள் காரில் ஏறி மேலே கோவிலுக்குப் போய்ச் சேர்ந்தோம்.

நான் பலமுறை இந்தக் கோவிலுக்குப் போயிருக்கிறேன். ஒவ்வொரு முறை போகும்போதும் கோயிலில் கூட்டம் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இந்த அம்மனின் பெயர்மன்ஸா தேவி”. இந்த அம்மனை மனதில் என்ன நினைத்து வேண்டிக்கொண்டாலும் அது கண்டிப்பாக நிறைவேறும் என்று பெயர் பெற்றது. அம்மனின் குங்குமப் பிரசாதம் கோவில் முழுவதும் பரவிக்கிடக்கிறது. உங்கள் ஆடை எங்கு உரசினாலும் குங்குமம் ஒட்டிக் கொண்டு விடும். நான் எந்தக் கோவிலுக்குப் போனாலும் எதையும் குறிப்பிட்டு வேண்டிக்கொள்வது இல்லை. எனக்கு என்ன வேண்டும் என்று கடவுளுக்குத் தெரியும். எனக்கு என்ன பிராரப்தமோ அது எனக்கு கிடைக்கும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை உடையவன் நான். அதனால் கோவிலுக்குப் போனால் ஒரு நமஸ்காரம் போட்டுவிட்டு வந்துவிடுவேன். இங்கும் அதே மாதிரி செய்தேன். கொஞ்ச நேரம் அங்கு உட்கார்ந்துவிட்டு கீழே வந்தோம்.

ரூமுக்குப் போவதற்கு ஆட்டோக்காரன் வரும்போது கொடுத்ததைவிட இரண்டு மடங்கு வாடகை கேட்டான். வேறு வழியில்லாததால் அவன் கேட்ட வாடகையைக் கொடுத்து ரூமுக்கு வந்து சேர்ந்தோம். சாப்பிட்டுவிட்டு ரெஸ்ட் எடுத்தோம்.

தொடரும்….