வியாழன், 17 நவம்பர், 2011

அரசு அலுவலமும் தணிக்கைகளும்


அரசு அலுவலகங்களில் மாமூலாக ஒவ்வொரு ஆண்டும் தணிக்கை நடைபெறும். தணிக்கை அதிகாரிகள் வரும் தகவல் ஒரு மாதத்திற்கு முன்பே அறிவித்து விடுவார்கள். அந்த தகவல் வந்த நாளிலிருந்து அந்த ஆபீஸ் அல்லோல கல்லோலப்படும். எல்லோரும் ஏதோ பெரிய கிரிமினல் அப்பீல் கேசில் தீர்ப்பை எதிர் பார்ப்பது போல் தணிக்கை அதிகாரிகள் வரும் நாளை ஒருவித படபடப்புடன் எதிர்பார்த்துக் கொண்டு இருப்பார்கள்.
காரணம் என்னவென்றால் பெரும்பாலான அலுவலகங்களில் பெரிய ஆபீசருக்கும் மற்ற அலுவலர்களுக்கும் சரியானபடி அரசு சட்டதிட்டங்கள் தெரியாது. அதனால் தணிக்கை அதிகாரிகள் ஏதாவது விளக்கம் கேட்டால் முழிப்பார்கள். இதனால் தணிக்கை அதிகாரிகள் இவர்களை சீப்பாக நடத்துவார்கள். எப்படியென்றால் அவர்கள் அங்கு தங்கும் நாட்களில் அவர்களின் உணவுச் செலவுகளை அந்த ஆபீஸ்காரர்களே பார்த்துக்கொள்ள வேண்டும். அது தவிர எங்கள் துறையில் பண்ணையில் ஆராய்ச்சி செய்வதுதான் முக்கிய வேலை. அதற்காகத்தான் அந்த ஆபீஸ் இருக்கிறது.
தணிக்கை அதிகாரிகள் பொதுவாக ஆபீசிலேயே தங்கிக்கொள்வார்கள். அவர்களுக்கு குற்றேவல் செய்ய ஒரு ஆளைப் போடவேண்டும். அப்போது பண்ணையில் என்னென்ன விளைகிறது என்று நோட்டம் போட்டுக் கொள்வார்கள். பொதுவாக பண்ணைகளில் தென்னை மரங்கள் தவறாது இருக்கும். இவர்கள் ஊருக்குத் திரும்பும்போது பண்ணையின் சைஸைப்பொருத்து தேங்காய்களும் மற்றும் என்னென்ன இருக்கிறதோ அத்தனையையும் வாங்கிக்கொண்டு போவார்கள். இவையெல்லாம் எந்தக் கணக்கிலும் வராது.
நான் வேலையில் சேர்ந்தது ஒரு ஆபீசர், ஒரு அசிஸ்டன்ட் ரிசர்ச் ஆபீசர் (நான்), ஒரு கிளார்க் இப்படி மூவர் உள்ள ஆபீஸ். அந்த ஆபீசில் எந்த கிளார்க்கும் மூன்று மாதத்திற்கு மேல் இருந்ததில்லை. நான் மட்டும்தான் மூன்று வருடம் இருந்தேன். அதனால் புதிதாக வரும் கிளார்க்குக்கு நான்தான் வேலை செய்யக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதனால் ஆபீஸ் வேலைகள், சட்டதிட்டங்கள் எல்லாம் எனக்கு நன்றாக அத்துபடியாகி விட்டது.
இதனால் எனக்கு தணிக்கையைக் கண்டு பயமில்லாமல் போய்விட்டது. அது மட்டுமில்லாமல் இந்த தணிக்கையாளருக்கு விளையாட்டுக் காட்டுவது எனக்கு ஒரு பொழுது போக்காகிவிட்டது. ஒரு முறை நான் மண்வள ஆய்வுக்காக டூர் போகவேண்டி வந்தது. ஒரு ஊருக்கு பேருந்தில் சென்று விட்டு அங்கிருந்து ஒரு வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு அந்தப் பகுதி முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு திரும்பவும் சைக்கிளை கொண்டு வந்து கடையில் விட்டு விட்டு ஊர் திரும்புவேன்.
இந்த டூருக்கு பில் தயார் செய்து ஆபீஸ் அக்கவுன்ட் செக்ஷனுக்கு அனுப்பி பாஸ் செய்து பணம் வாங்க வேண்டும். அப்படி பணம் வாங்காவிட்டால் நான் டூர் போனது பொய் என்று ஆகிவிடும். இந்த டூரில் நான் பல ஊர்கள் வழியாக சென்றிருந்தேன். ஆனால் எந்த ஊரிலும் எனக்கு எந்த வேலையுமில்லை. இரண்டு ஊர்களுக்கு நடுவில் இருக்கும் திலங்களின் மண்தன்மையை ஆராய்ந்து குறிப்பு எட்ப்பதுதான் என் வேலை. ஆனால் டூர் பில்லில் டூர் போன தூரத்தைக் காட்டுவதற்காக ஊர்களின் பெயரையும் அங்கு சென்ற நேரத்தையும் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் எந்த ஊரிலும் கொஞ்சநேரம் கூட இருந்ததாகக் காட்டவில்லை. உண்மையும் அதுதானே.
இந்த பில் ஆடிட்டரிடம் சென்றது. அவர் பில்லைப் பார்த்து இவர் பல ஊர்களுக்குப் போனதாக பில் போட்டிருக்கிறார். ஆனால் எந்த ஊரிலும் அவர் கொஞ்ச நேரம் கூட இருக்கவில்லை. ஆகவே அவர் இந்த டூரில் எந்த வேலையையும் செய்திருக்கமுடியாது. ஆகவே பில் பாஸ் செய்யமுடியாது என்று எழுதி பில்லை திருப்பி விட்டார்.
ஆஹா ஆடிட்டர் வசமாக நம்மிடம் மாட்டிக்கொண்டார் என்று ஆனந்தப்பட்டுக்கொண்டு கீழ்க்கண்டவாறு எழுதினேன்.
அன்புள்ள ஆடிட்டர் துரை அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ள டூர் பில், நான் மண் ஆய்வுக்கான டூர் சென்றதற்கான பில்லாகும். துரதிர்ஷ்டவசமாக மண் இருக்கும் நிலங்கள் எல்லாம் இரண்டு ஊர்களுக்கு மத்தியிலேயே இருக்கின்றன. நான் அப்படி நிலங்கள் இருக்கும் பகுதியில் அதிக நேரம் இருந்து மண்ணின் தன்மையை ஆராய்ந்து குறிப்புகள் எடுத்துள்ளேன். நான் வழியைக் காட்டுவதற்காகத்தான் அந்த ஊர்களின் பெயரைக் குறித்துள்ளேன். நான் பார்த்தவரையில் அந்த ஊர்களில் வீடுகள்தான் இருந்தன. இந்த பதில் உங்களுக்குத் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் பில்லை பாஸ் செய்யுங்கள். ஏதாவது ஆட்சேபணை இருந்தால் மேலதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களின் ஆலோசனையைக் கேட்கலாம்.
சத்தமில்லாமல் பில் பாஸாகி வந்துவிட்டது. அடுத்த முறை அந்த ஆடிட்டரைப் பார்க்கும்போது என்னங்க இப்படி எழுதி எங்களை முட்டாளாக்கி விட்டீர்களே, நேரில் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் போதுமே, இப்போது இந்த விஷயம் பகிரங்கமாகிவிட்டதே என்று அங்கலாய்த்தார். ஏன் நீங்கள் என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கப்படாதா? உங்கள் சங்கதி ரகசியமாக இருந்திருக்குமல்லவா? என்று பதில் சொல்லிவிட்டு வந்தேன்.

13 கருத்துகள்:

  1. ////அன்புள்ள ஆடிட்டர் துரை அவர்களுக்கு, நீங்கள் குறிப்பிட்டுள்ள டூர் பில், நான் மண் ஆய்வுக்கான டூர் சென்றதற்கான பில்லாகும். துரதிர்ஷ்டவசமாக மண் இருக்கும் நிலங்கள் எல்லாம் இரண்டு ஊர்களுக்கு மத்தியிலேயே இருக்கின்றன. நான் அப்படி நிலங்கள் இருக்கும் பகுதியில் அதிக நேரம் இருந்து மண்ணின் தன்மையை ஆராய்ந்து குறிப்புகள் எடுத்துள்ளேன். நான் வழியைக் காட்டுவதற்காகத்தான் அந்த ஊர்களின் பெயரைக் குறித்துள்ளேன். நான் பார்த்தவரையில் அந்த ஊர்களில் வீடுகள்தான் இருந்தன. இந்த பதில் உங்களுக்குத் திருப்தியாக இருக்கும் பட்சத்தில் பில்லை பாஸ் செய்யுங்கள். ஏதாவது ஆட்சேபணை இருந்தால் மேலதிகாரிகளுக்கு அனுப்பி அவர்களின் ஆலோசனையைக் கேட்கலாம்.////
    சபாஸ் சரியான விளக்கம்

    பதிலளிநீக்கு
  2. நல்ல அனுபவம்... இப்போது எங்களது அலுவலகத்தில் தணிக்கை... :)

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான வரம் வாங்கி வந்தவர்கள் என்று ஒவ்வொரு அரசு ஊழியர்களையும் பார்க்கும் போது மனதில் நினைத்துக் கொள்வேன். அதுவும் இந்தியாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் இரத்தம் மற்றவர்களை மிக மிக மெதுவாக ஓடுமோ என்று நினைக்கும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் ஆச்சரியமளிக்கும்.

    பதிலளிநீக்கு
  4. ஆஹா... சரியான பதிலடி...
    சிரிக்க வைத்தாலும் இதுபோல ஆடிட்டர்கள் எல்லா இடத்திலும் உண்டு...

    பதிலளிநீக்கு
  5. பணியில் இருக்கும்போது நடந்த இந்த மாதிரியான சம்பவங்கள் நினைத்துப் பார்க்க மகிழ்வாக இருக்கும். அவ்வப்போது இம்மாதிரி நினைவு கூறுங்கள்.

    பதிலளிநீக்கு
  6. சுவாரசியமான நிகழ்ச்சி., அரசு அலுவலர்கள் காசிலேயே குறியா இருப்பாங்க..அதிகமாக யோசிக்க மாட்டாங்க அப்படிங்கறதுக்கு நல்ல உதாரணம்.,

    நன்றிங்க..

    பதிலளிநீக்கு
  7. இப்படி போட்டு உடைச்சுட்டீங்களே? அரசு அலுவலகங்கள் மட்டுமல்ல கல்லூரிகளிலும் இன்ஸ்பெக்சன் கமிட்டி வந்துவிட்டால் அவர்களையும் செமயாக கவனிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  8. உங்க அலுவலக அனுபவங்களை சுவாரசியமா பகிர்ந்துகொண்டிருக்கீங்க. ஆபீசில் ஆடிடிங்க் என்றாலே ஒரே பரபரப்புத்தான்.

    பதிலளிநீக்கு
  9. Your story reminds me of an anecdote I used to hear ages back. When submitting TA bills, the government 'servants' (that was how they were called before!)should add a particular phrase on their bills that the claim was under ....rupees". Say, for a claim of Rs.1,000, the claimant should state the claim is under Rs.1001 only. The bills passing Upper Division Clerks (UDCs) in the Pay & Accounts Office, at times, might choose to return the bills under the pretext that there was no 'restrictive endorsement' on the bill. In case the claimant was known to him, the UDC would himself add such a sentence in red ink and pass the bills for payment. Well, I started my career (Kamaraj's period) in P&AO Office at Fort St. George, then later moved to Town Planning Dept, and left govt service for good (rather for my good!). But those enjoyable three years taught me a lot about govt functioning, as I was working under top class competent officers. I still carry happy memories of those formative years.

    பதிலளிநீக்கு
  10. //D. Chandramouli said...//

    பரவாயில்லீங்க, பழச மறக்காம வச்சிருக்கீங்களே!!!

    பதிலளிநீக்கு
  11. //ஜோதிஜி திருப்பூர் said...
    சிறப்பான வரம் வாங்கி வந்தவர்கள் என்று ஒவ்வொரு அரசு ஊழியர்களையும் பார்க்கும் போது மனதில் நினைத்துக் கொள்வேன். அதுவும் இந்தியாவில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் இரத்தம் மற்றவர்களை மிக மிக மெதுவாக ஓடுமோ என்று நினைக்கும் அளவுக்கு அவர்களின் செயல்பாடுகள் ஆச்சரியமளிக்கும்.//

    அப்படியில்லீங்க ஜோதிஜி, அரசு ஊழியர்கள் எதையும் நிதானமா, யோசிச்சு, பொறுமையா செய்வாங்க. அது மத்தவங்களுக்கு புரியறதில்ல?

    பதிலளிநீக்கு
  12. //வெங்கட் நாகராஜ் said...
    நல்ல அனுபவம்... இப்போது எங்களது அலுவலகத்தில் தணிக்கை... :)//

    தணிக்கை நல்லபடியாக முடிய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு