வெள்ளி, 25 ஜனவரி, 2013

புரதத்தை ஏன் கொள்ளை விலைக்கு விற்கிறார்கள்?

சரவணன்
ஒரு சந்தேகம்- புரோட்டீன் உணவுகள் (பருப்பு, கறி, புரோடீன் பானங்கள் உட்பட) விலை அதிகமாக இருப்பது ஏன்? கார்போஹைட்ரேடை விட புரோடீனை விளைவிப்பது செலவு அதிகமாக இருப்பது ஏன்? ஆம்வே நியூட்ரிலைட் பானம் 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்குமேல். அதில் பலன் உண்டா?

கொள்ளைக்காரனைப் பார்த்து "ஐயோ, கொள்ளையடிக்கிறானே" என்று புலம்புவதில் பயனில்லை.

துவரைக் காய்கள்

புரதச்சத்து மனித உடலுக்கு எவ்வளவு அவசியம் என்று முன்பொரு பதிவில் பார்த்தோம். மனிதன் ஆரோக்கியமாக வாழ்வதற்கு புரதம் மிகமிக அவசியம்.
வளரும் குழந்தைகளுக்கு போதுமான புரதச்சத்து இல்லாவிட்டால் அவர்களுக்கு பல குறைபாடுகள் உண்டாகும்.

இன்றைய வளர்ந்த சமுதாயத்தில், குறிப்பாக நடுத்தர வருவாய் ஈட்டும் குடும்பங்களில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளை மட்டுமே பெற்று வளர்க்கிறார்கள். அவர்களைக் குறி வைத்துத்தான் விளம்பரங்கள் அனைத்தும் வெளிவருகின்றன.

புரதச்சத்து இல்லாவிட்டால் உங்கள் குழந்தைகள் வாழ்க்கையில் பின்னுக்குத் தள்ளப்படுவார்கள் என்று சொல்லிவிட்டால் போதும், இந்தப் பெற்றோர்கள் படும் பாடு இருக்கிறதே, அதை எழுத்தில் விளக்கவே முடியாது. மக்களின் இந்த குணத்தைப் பயன்படுத்தி பெரிய கம்பெனிகள் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் மக்களின் மனதை மூளைச்சலவை செய்து தங்கள் பொருட்களை வியாபாரம் செய்து விடுகிறார்கள். 

பத்து ரூபாய் பெறும் ஒரு சத்தை இவர்கள் விளம்பரத்தின் மூலம் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். "ஆம்வே" கம்பெனி இந்தக் கொள்ளையில் முதலிடம் வகிக்கிறது.

மனிதன் ஒழுங்கான உணவுப் பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்தால் அவன் ஆரோக்கியமாக வாழ்வதற்குப் போதும். அரிசி, கோதுமை, துவரம்பருப்பு, அவரைப் பருப்பு, கொள்ளு, நல்லெண்ணை, கடலை எண்ணை, காய்கறிகள், பால் இந்த உணவுகளை முறையாக சாப்பிட்டு வந்தால் போதும். எந்தக் குறைபாடும் வராது.

வளரும் குழந்தைகளுக்கு வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை, வெல்லம், பால் இவை மூன்றுமே அவர்களுடைய புரதத் தேவையை பூர்த்தி செய்து, அவர்கள் நன்கு வளரப் போதுமானவை. கடைகளில் விற்கும் கண்ட கண்ட பானங்களையோ, பொருட்களையோ வாங்கிக் கொடுப்பதினால் ஒன்றும் பலனில்லை. ஆரோக்கியமான உணவுகளைப் பற்றிய அடிப்படை அறிவு இல்லாததினால்தான் இவ்வாறு மக்கள் ஏமாந்து விடுகிறார்கள்.

புரதச்சத்து தானியங்கள் விலை அதிகமாக இருப்பதற்குக் காரணம் அவைகளின் விளைச்சல், மாவுச்சத்து தானியங்களை விடக் குறைவு. அதனால் அவைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. ஒரு ஏக்கரில் நெல் 2 டன் விளையும். ஆனால் துவரம்பருப்பு 400-500 கிலோ மட்டுமே விளையும். தவிர நெல் 4 மாதத்தில் விளைந்துவிடும். துவரம்பருப்பு விளைய 8 மாதங்கள் ஆகும்.

இன்றைய பொருளாதார நிலையில் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தேவையில்லாமல் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி பணத்தை வீணாக்க வேண்டாம்.

15 கருத்துகள்:

  1. பயனுள்ள அனைவரும் அவசியம்
    அறிந்திருக்கவேண்டிய த்கவல்களுடன் கூடிய பதிவு அருமை
    தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. நல்ல தகவல். காளான்களிலும் அதிகம் புரோட்டீன் உள்ளதால் அதைப்பற்றியும் எழுதுங்களேன்.

    பதிலளிநீக்கு
  3. இந்தக் கேள்வியைக் கேட்டதை நானே மறந்துவிட்டேன்! நீங்கள் ஞாபகத்தில் வைத்திருந்து எழுதிவிட்டீர்களே, பலே! விளக்கமான பதிலுக்கு நன்றி!

    சரவணன்

    பதிலளிநீக்கு
  4. pediasure என்ற ஒரு பானம் இருக்கிறது இதுவும் கொல்லை விலை மக்களை ஏமாற்றி டாக்டர்களால் தினிக்கப்படும் பாலில் கலந்து அருந்தும் பானம்.

    பதிலளிநீக்கு
  5. முருங்கைக் காய்ல கால்சியம் சத்து ஜாஸ்தின்னு சொன்னதால, மூணு கிலோ மீட்டர் சைக்கிள் தள்ளிட்டுப் போய், முருங்கைக் காய் ஒண்ணு

    மூணு ரூபா ன்னு , மூணு முருங்கைக் காய் வாங்கிட்டு வந்தேன்..

    எதேச்சையா எதிர்த்தார் போலுள்ள மருந்துக் கடையில விசாரிச்சேன் ..

    கால்சியம் மாத்திரை முப்பது பைசாவாம் !

    பதிலளிநீக்கு
  6. இன்றைய பொருளாதார நிலையில் மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும். தேவையில்லாமல் விளம்பரங்களைப் பார்த்து மயங்கி பணத்தை வீணாக்க வேண்டாம்.

    பயனுள்ள பகிர்வுகள்..பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  7. கேள்வி கேட்டவரை முதலில் பாராட்ட வேண்டும். பயனுள்ள கேள்வியும் பயனுள்ள பதிலுமாக ஒரு நல்ல பதிவு படிக்கக் கிடைத்தது.

    கொள்ளையர்களிடமிருந்து நாம் நம்மை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
    படிப்பவர்கள் சற்று சிந்தித்தால் நன்றாக இருக்கும்.

    நல்ல பதிவு, ஐயா

    பதிலளிநீக்கு

  8. அண்மையில் ஒரு செய்தி படித்தேன். உடலுக்கு ஊக்கமளிப்பதாகக் கூறப்படும் பானங்கள் உண்மையில் ஊறு விளைவிப்பதே என்று. ஆனால் அவற்றின் விளம்பரங்கள் கொடி கட்டிப் பறக்கின்றன. ஒரு சந்தேகம் முதலில் சந்தேகம் கேட்டவர் சரவணனா இல்லை பெயரில்லாவா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரவணன் என்பவர்தான் "பெயரில்லா" என்று பின்னூட்டமிடுகிறார்.

      நீக்கு
  9. \\ஆம்வே நியூட்ரிலைட் பானம் 1 கிலோ ஆயிரம் ரூபாய்க்குமேல். \\
    நெட்ஒர்க் மார்கெட்டிங்கில் வருவது அத்தனையும் தரம் சற்றே மேம்பட்டதாக இருப்பினும் விலை பத்து மடங்கு போட்டு விற்கிறார்கள். அதை நம் நண்பர்கள், சொந்த பந்தங்களை வைத்தே நம் தலையில் கட்ட வைக்கிறார்கள். நெட்ஒர்க் மார்கெட்டிங் மூலம் யார் எதை கொடுத்தாலும் வாங்காமல் எஸ்கேப் ஆவது நலம்.

    \\ வளரும் குழந்தைகளுக்கு வேர்க்கடலை அல்லது பொட்டுக்கடலை, வெல்லம், பால் இவை மூன்றுமே அவர்களுடைய புரதத் தேவையை பூர்த்தி செய்து, அவர்கள் நன்கு வளரப் போதுமானவை. கடைகளில் விற்கும் கண்ட கண்ட பானங்களையோ, பொருட்களையோ வாங்கிக் கொடுப்பதினால் ஒன்றும் பலனில்லை.\\ தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. பத்து ரூபாய் பெறும் ஒரு சத்தை இவர்கள் விளம்பரத்தின் மூலம் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார்கள். "ஆம்வே" கம்பெனி இந்தக் கொள்ளையில் முதலிடம் வகிக்கிறது

    நிஜம் தான் ஐயா. அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.

    நன்றி ஐயா திரு பழனி.கந்தசாமி.

    பதிலளிநீக்கு
  11. குழந்தை பெற தாமதமாகும் தம்பதிகளிடதிலும் இவர்கள் buisness செய்ய ஒரு வழி கண்டு பிடித்துள்ளார்கள்.
    இதை சாப்பிட்ட உடன் ஏழு வருஷம் குழந்தை இல்லாதவர்கள் உடனே ஒரே மாதத்தில் உண்டாகி விட்டார்கள் என்ற வலை வீச படுகிறது.எதை தின்றால் பித்தம் தெளியும் என்று இருக்கும் தம்பதிகளும் உடனே வாங்கி விடுகிறார்கள்.
    தினமும் இரண்டு தேக்கரண்டி பாசிபயறை ஊற வைத்து முளைகட்டி சாப்பிட்டு வந்தாலே கருமுட்டை வளர்ச்சி நன்றாக இருக்குமாம்.யார் கேட்கிறார்கள்.?

    பதிலளிநீக்கு
  12. நீங்கள் கூறியதுபோல இயற்கையாக கிடைக்கும் உணவுகளே நலனுக்குப் போதுமானவை.

    விளம்பரங்கனைக் காட்டி ஏமாற்றுகிறார்கள்.. மக்கள் புரிந்துகொண்டால் சரி.

    பதிலளிநீக்கு
  13. அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்.
    நன்றி

    பதிலளிநீக்கு