திங்கள், 17 ஜூன், 2013

வருமானவரி - மேலும் சில விவரங்கள்.

பதிவுகளைப் படிக்கும் பெரும்பான்மையானவர்கள் என்னைப்போல் சட்டங்களுக்கு பயப்படும் நடுத்தர வர்க்க மக்கள் என்று நம்பி இந்தப் பதிவை எழுதுகின்றேன். அப்படி இல்லாதவர்கள் இந்தப் பதிவைப் படித்து உங்கள் பொன்னான நேரத்தை பாழ்படுத்திக்கொள்ளாமல், இன்னும் இரண்டு காசு பார்க்கும் வேலையைச் செய்யவும்.

வருமான வரி என்றால் என்ன என்று கேட்கும் பல கோடீஸ்வரர்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாதா என்ற கேள்வி கேட்பவர்களுக்கு விடை இதுதான். நாயை கண்டு பயந்து ஓடுபவனைத்தான் நாய் துரத்தும். தைரியமாக எதிர் நிற்பவனைப் பார்த்து வாலை சுருட்டிக்கொண்டு ஓடும்.

சட்டமும் இப்படித்தான். என்ன,  நாயை கல்லால் அடிக்கவேண்டும். சட்டக் காவலர்களை பணத்தால் அடிக்கவேண்டும். அவ்வளவுதான். நாம் எல்லோரும் நாயைக்கண்டு பயந்து ஓடும் ஜாதி.

வருடத்திற்கு இரண்டு லட்சத்திற்கு மேல் உங்களுக்கு வருமானம் இருந்தால் நீங்கள் வருமான வரி கட்டவேண்டும் என்று பார்த்தோம். மாமனார் வீட்டிலிருந்து வரும் வருமானத்தை இதில் காட்டவேண்டியதில்லை. மாமனார் என்பதற்கு அர்த்தம் எல்லோருக்கும் தெரியும் என்று நம்புகிறேன். (நமக்கு வருமானம் தரும் ஒவ்வொருவரும் மாமனாரே.)

இப்படி கணக்குப்போட்டு வரும் வருமான வரி 10000 ரூபாய்க்கு மேல் இருந்தால் அந்த வரியில் 30 சதத்திற்கு குறையாமல் செப்டம்பர் 30 ம் தேதிக்குள் கட்டவேண்டும். 60 சதத்திற்கு குறையாமல் டிசம்பர் 31 க்குள் கட்டவேண்டும். மீதி வரியை துல்லியமாக கணக்குப் போட்டு மார்ச் 15ம் தேதிக்குள் கட்டவேண்டும். இதுதான் சட்டம்.

ஆனால் இப்படி ஒரு சட்டம் இருக்கிறதென்றே பலருக்குத் தெரியாது. மார்ச் 31 க்குள் வரி கட்டினால் போதும் என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். நடைமுறையிலும் அதையே கடைப்பிடிக்கிறார்கள்.

நானும் என் நண்பர்களும் இப்படித்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். போனவருடம் கொடுத்த வருமான வரிப் படிவத்தில், என் நண்பர் தவறுதலாக ஒரு ஆயிரம் ரூபாயைக் குறைத்துக் கட்டிவிட்டார். இந்த ரிடர்ன் எப்படியோ ஒரு வருமானவரி அதிகாரியின் பார்வையில் சிக்கியிருக்கிறது. அதற்கு அவர் என் நண்பருக்கு ஒரு "ஓலை" அனுப்பி விட்டார்.

அந்த ஓலையில் எழுதியிருந்ததாவது. நீங்கள் உங்கள் வருமானவரியில் 1000 ரூபாய் குறைவாகக் கட்டியிருக்கிறீர்கள், அதற்கு 750 ரூபாய் வட்டி சேர்த்து உடனடியாக பேங்கில் கட்டி, கட்டின ரசீதை இந்த ஆபீசுக்கு அனுப்பவும்.

இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே என்று வருமான வரி அலுவலகத்தில் போய் விசாரித்தோம். அதற்கு அவர்கள் சொன்னது. நீங்கள் உங்கள் வரி முழுவதையும் மார்ச் மாதம்தான் கட்டியிருக்கிறீர்கள், எங்கள் விதிகளின்படி மூன்றில் ஒரு பாகத்தை செப்டம்பர் மாதத்திலும், இன்னொரு மூன்றில் ஒரு பாகத்தை டிசம்பர் மாத த்திலும் கட்டியிருக்கவேண்டும். இந்த தாமதத்திற்குத்தான் இவ்வளவு வட்டி என்றார்கள்.

ஐயா, இந்த சமாசாரம் எங்களுக்குத் தெரியாதே என்றோம். நீங்கள் இந்தியக் குடிமகன்தானே என்று கேட்டார்கள். ஆம் என்றோம். அப்படியானால் உங்கள் நாட்டுச் சட்டங்களையே நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையே, அது உங்கள் குற்றமல்லவா? என்றார்கள். நாங்கள் ஒரு பதிலும் பேசமுடியவில்லை.

பேசாமல் அவர்கள் சொன்ன பணத்தைக் கட்டிவிட்டு வந்தோம்.

அப்புறம் எங்களுக்குத் தெரிந்த வக்கீல் ஒரு பொன்மொழி சொன்னார்.

Ignorance of rules is no excuse for not following.

13 கருத்துகள்:

  1. இது என்ன, மீட்டர் வட்டி மாதிரி இருக்கிறதே ..!

    ப்யனுள்ள தகவல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. Ignorance is bliss என்ற சொல்லாடல் Ignorance of law is no excuse முன்னால் காணாமல் போய்விடுகிறதே!

    பதிலளிநீக்கு
  3. ப்யனுள்ள தகவல் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள், ஐயா

    பதிலளிநீக்கு
  4. தற்போது அரசு/தனியார் அலுவலகங்களில் வருமானவரி பிடித்தம் போகத்தானே சம்பளமே கொடுக்கிறார்கள்?

    பதிலளிநீக்கு
  5. அந்த காலத்தில் குலேபகாவலி என்று ஒரு படம். எம்ஜிஆர் கதாநாயகனாக நடித்தது. அதில் ஒரு பாட்டு வரும்.
    "இங்கு குனிஞ்சி நிமிர்ந்தா வரி
    நடந்தா வரி நின்னா வரி உட்கார்ந்தா வரி
    பேசினா வரி ஊமைன்னாலும் வரி" என்கிற பாணியில் பாட்டு போகும் (சரியான வரிகள் நினைவில்லை).
    நல்ல வேலை நம் சிதம்பரம் அந்த படத்தை பார்த்தால் நம் வரி கட்டுவதற்காக இன்னொரு வேலை பார்க்க வேண்டியிருந்திருக்கும்.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  6. கவுண்டருக்கு என்ன ஆச்சுன்னு நாங்க பதறிட்டிருக்கோம்.
    நீங்க என்னடான்னா 3 பதிவுகள் மட்டுமே போட்டிருக்கிறீர்கள்.
    மார்ச்சில் 20, ஏப்ரலில் 16, மே மாசத்தில் 13. இப்போது ஜூன் பாதிக்கு மேல் ஓடி விட்டது. வெறும் 3 தான்.
    உடம்புக்கு ஒன்றுமில்லையே
    நல்ல உடம்பை பார்த்துகோங்க சாமி

    திருச்சி தாரு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவுண்டர் நல்லாத்தான் இருக்காரு. ஆனா இந்தப் பதிவுலகத்தைப் பத்தி மறுபரிசீலனை நடத்தீட்டிருக்காரு. இந்தப் பதிவுலகினால் என்ன பயன் என்று இன்னும் விளங்கவில்லை. பொழுதுபோக்கு என்பதைத் தவிர வேறு ஒரு பலனும் எனக்கு இல்லை.

      ஆகவே பதிவுலகில் என்னுடைய ஈடுபாட்டைக் குறைத்துக்கொண்டுள்ளேன். இனி வாரம் ஒரு பதிவு போட்டால் போதும் என்ற முடிவில் பதிவுகள் குறைந்து விட்டன.

      நீக்கு
    2. நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்வது உண்மை
      ஆனால் நீங்கள் ஒருவர் விலகுவதற்குள் 10 பேர் புதிதாக பதிவு போட ஆரம்பித்திருப்பார்கள். அவர்கள் விலகுவதற்குள் இன்னொரு 100 பேர் ஆரம்பிப்பார்கள்.
      விண்டவர் கண்டிலர் கண்டவர் விண்டிலர் என்பது போலத்தான்.
      காலையில் செய்தித்தாள் படிக்காவிட்டால் மண்டையே வெடித்து விடும் போல் இருக்கும். ஆனால் படித்து என்ன செய்தோம் என்றால் ஒன்றும் இல்லை. தினமும் லஞ்ச லாவண்யங்கள் அட்டூழியங்கள் இயற்கை சீற்றங்கள் இதைத்தானே பார்க்கிறோம். இன்று மோடி- அத்வானி என்றால் நாளைக்கு இன்னொன்று. நமது தினசரி வாழ்க்கைக்கு ஒரு பிரயோசனமுமில்லை
      பதிவுகளும் அப்படித்தான். இதனால் ஒரு social movement கொண்டு வர முடிந்தால் நன்றாக இருக்கும். ஆனால் இது நமது ஆதங்கத்தை கொட்டும் ஒரு வடிகாலாக இருப்பதால் நமது கோபமும் தணிந்து விடுகிறது. உருப்படியாக ஒன்றும் நடக்கவில்லை

      எனவே அய்யா அவர்கள் எடுத்த முடிவு சரியானதுதான்

      சேலம் குரு

      நீக்கு
  7. இந்த வருமானவரி குறித்து ஏராளமான கேள்விகள் என்னுள் உண்டு. பொதுவாக பெரிய நிறுவனங்கள், பதிவு பெற்ற நிறுவனங்கள் என்ற இந்த பட்டியலில் வருகின்றது. ஆனால் எனக்குத் தெரிந்து வீட்டு வாடகை மூலம் லட்சகணக்காக சம்பாரிப்பவர்கள் ஒவ்வொரு பெரிய நகரங்களிலும்அதிகம்.

    நண்பர் அடிக்கடிச் சொல்வார். திருப்பூரில் மட்டும் மாதம் தோறும் தங்கள் கட்டி வைத்துள்ள வீடுகள் மூலம் 5 லட்சம் வீட்டு வாடகை வாங்குபவர் மட்டும் ஏறக்குறைய 10 000 பேர்கள் வருவார்கள். இதே போல மாதம் 50 லட்சம் என்று வீட்டு வாடகை (பெரிய நிறுவனங்களை கட்டிக் கொடுத்து இருப்பவர்கள்) 50 லட்சம் வாங்குபவர்கள் கூட 100 பேர்கள் தேறுவார்கள்.

    நண்பர் வேறு விதமாக சொல்லி சிரித்தார்.

    பெங்களூரில் பத்து கோடி அளவுக்கு வசூலிப்பவர்கள் லட்சக்கணக்கான பேர்கள் இருக்கின்றார்கள் என்றார்.

    பலர் அறக்கட்டளை என்ற பெயரில் இதை மாற்றம் செய்து தப்பிப்பது போன்ற செயல் மூலம் தப்பித்தாலும் மொத்தமாக இந்தியா முழுக்க உருப்படியாக அதிரடியாக கவனித்து வரி வசூல் செய்தால் நம் நாட்டில் ஒரு ஐந்தாண்டுதிட்டம் போட பணம் எளிதாக கிடைக்கும் என்பது என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதைப்போல் இன்னும் பல சீர்கேடுகள் இருக்கின்றன. நீதித்துறையிலேயே பணம் இல்லாவிட்டால் நீதி கிடைப்பதில்லை.

      நீக்கு
  8. அற்புதமான சட்டங்கள் இருந்தாலும் அதை முறையாக பயன் படுத்த இங்கு மக்களுக்கு மனமில்லை. அதற்கு காரணம் மூட நம்பிக்கை, ஜாதி மத தடைகள் . இவை ஒழிந்தால் சட்டம் மீது மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வரி எயிப்பு ஒழியும். நல திட்டம் மக்களை அடையும் . மக்கள் வறுமை ஒழிந்து எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்கும். இது நடக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களுக்கு வேண்டும் முதலில்.

    பதிலளிநீக்கு