திங்கள், 8 ஜூலை, 2013

மனித இயல்பும் அன்றாட நிகழ்வுகளும்


லண்டனில் ஒரு நிகழ்வு. ஒரு பொழுதுபோக்கு கிளப்பில் ஒரு நாள் ஒருவர் கீழே விழுந்துவிட்டார். அந்தக் கிளப் பெரிய பெரிய கனவான்கள் உறுப்பினராக உள்ள ஒரு கிளப். கீழே விழுந்தவர் அப்போதுதான் அந்தக் கிளப்பில் சேர்ந்திருக்கிறார். யாரையும் அறிமுகமில்லை. மற்ற கிளப் மெம்பர்கள் எல்லோரும் அவர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த பிறகும் உதவிக்குச் செல்லவில்லை. பின்னால் ஏன் நீங்கள் அவருக்கு உதவவில்லை என்று கேட்டதற்கு அவர்கள் கூறிய பதில் ஆங்கிலேயர்களின் வாழ்க்கை முறையை துல்லியமாக காட்டுகிறது.

"அவரை இதுவரை யாரும் எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லையே, நாங்கள் எப்படி அறிமுகமில்லாத அவருக்கு உதவமுடியும்? "

இந்தியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். வந்தாரை வாழவைப்பவர்கள். இப்படியெல்லாம் பெயர் பெற்றவர்கள். அதிலும் தமிழர்களைப்போல் சிறந்தவர்கள் யாரும் இல்லை என்று பெருமையும் பேசிக்கொள்கிறோம். ஆனால் அடுத்தவருக்கு உதவி செய்தல் என்று வரும்போது, பலரும் பின்வாங்குவதை அன்றாடம் நடைமுறையில் பார்த்துக்கொண்டு இருக்கிறோம்.

இதை ரோடுகளில் விபத்து நடக்கும்போது கண்கூடாகப் பார்க்கலாம். ஒருவர் கீழே விழுந்து கிடக்கிறார். இரத்தக் காயம் ஒன்றுமில்லை. பக்கத்தில் ஒரு இருசக்கர வாகனம் கிடக்கிறது. இதைப் பார்க்கும் எத்தனை பேர் நின்று அவருக்கு உதவுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? நூற்றுக்கு ஒருவர் தேறக்கூடும். காரணம் என்னவென்று சிந்தித்தால், அப்படி உதவச் செல்லும்போது ஏதாவது வம்பு, வழக்கு வந்து விடுமோ என்ற பயம்தான் காரணம்.

சாதாரண விபத்துக்கே இப்படி என்றால், பலமான காயங்கள் ஏற்பட்டிருந்தால், என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள். இந்த இடத்தில் மனித நேயம் அடிபட்டுப் போகிறது. ஆனால் இந்த மனோபாவம் சரிதானா? நாம் ஒரு உதவியை மனித நேய அடிப்படையில் செய்யத் தயங்கினால் நம் மனச்சாட்சி உறுத்தாதா?

முடிந்தவரையில் விபத்துகளின்போது ஒருவருக்கு உதவுவது சிறந்தது. ஆனால் இன்றுள்ள அவசர கதி வாழ்க்கையில் ஒருவர் இதற்காக தன் நேரத்தை ஒதுக்க முடியுமா என்பது ஒரு பதில் சொல்ல முடியாத கேள்வியாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாம் என்ன செய்யலாம் என்பதைப் பற்றி கருத்து கூறுங்கள்.

17 கருத்துகள்:

  1. பழஞ் சமூகங்களில் ஒரே குழுக்குள் கேள்வியின்றி உதவும் மனப்பாங்கு இருந்தது. ஆனால் அதே வேறுக் குழுவைச் சார்ந்தோருக்கு உதவுவதில் அச்சமிருந்தது. ஒன்று பாதுகாப்பு குறித்த பயம், அடுத்து தயக்கம். விவிலியக் கதையில் காயம் பட்ட யூதனுக்கு சமார்த்திய இனத்தவன் உதவும் கதையின் மூலம் அறிமுகமில்லாதவருக்கு உதவும் குணத்தை புதிய சமூகங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக கூறப்பட்டது. ஒன்று நேரிடையாக உதவு, அல்லது தக்க முறையில் உதவிகள் கிடைக்க வழி செய்து உதவு. இரண்டில் ஒன்றை செய்ய வேண்டும். இரண்டும் இல்லாமல் போனால் குற்ற உணர்வு நம்மைக் கொன்று விடும்.

    பதிலளிநீக்கு
  2. விபத்துகளின்போது ஒருவருக்கு உதவ தயங்குவதன் காரணம் தான் நேரத்தை ஒதுக்க முடியாது என்பதால் அல்ல. ஒருவேளை வழக்கு பதிவு செய்யப்பட்டால், நம் காவல் துறை தரும் உதவி செய்தவரை படுத்தும் பாட்டால், பல நாட்கள் காவல் நிலையத்திற்கும் நீதி மன்றத்திற்கும் அலையவேண்டி இருக்குமே என்பதை நினைத்துதான். நம் காவல் துறையின் அணுகுமுறையை மாற்றினாலே எல்லோரும் உதவி செய்ய முன் வருவர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை.
      விபத்து இடத்தில் போலீஸ் நடந்து கொள்ளும் விதம் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். தினம் தினம் அவர்கள் இதையே பார்ப்பதனால் இருக்குமோ என்னவோ தெரியவில்லை. ஆனால் விபத்து நடந்தவர்களுக்கு பெரும்பாலும் முதல்முறைதானே. எனவே போலீஸ் இன்னும் கொஞ்சம் அனுசரணையோடு நடந்துகொண்டால் பெரிய உதவியாக இருக்கும்.
      சட்டங்கள் இயற்றப்பட்டது மக்களுக்கு உதவுவதற்காக என்ற எண்ணம் வந்துவிட்டாலே போதும். ஏன் அந்த சட்டம் இயற்றப்பட்டது அதன் அடிப்படை என்ன என்று புரிந்து கொண்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அதை விடுத்து letter and spirit அமுல் படுத்தினால் வேறு வினையே வேண்டாம். ஆனால் அதுதான் நடந்து கொண்டிருக்கிறது என்பதே வேதனையான உண்மை.

      திருச்சி அஞ்சு

      நீக்கு
  3. நமது அன்றாட வேலைகளுக்கு
    முக்கியம் கொடுப்பதை விடுத்து இதுபோன்ற
    அசாதாரண நிகழ்வுக்கு முக்கியம் அளிக்கலாம்
    சமூக இயக்கங்களில் இணைந்துள்ளவர்களுக்கு
    இயல்பாகவே அந்த குணம் வந்துவிடும்
    சொல்லித் தர வேண்டியதில்லை
    அந்த சதவீதம் கூடினால் நல்லது
    மற்றவர்கள் உதவி செய்யவில்லையாயினும்
    உபத்திரவம் செய்யாமல் இருந்தால் கூட
    அதுவே பெரிய உதவிதான் எனப்படுகிறது எனக்கு

    பதிலளிநீக்கு
  4. மனச்சாட்சி (உள்ளவர்கள்) உறுத்துபவர்கள் கண்டிப்பாக உதவி செய்வார்கள்...

    "நமக்கு இந்நிலை என்றால்...?" என்று நினைத்துப் பார்த்தால், மனச்சாட்சி வேலை செய்ய ஆரம்பித்து விடும்... இது விபத்திற்கு மட்டுமல்ல...

    பதிலளிநீக்கு
  5. நிரஞ்சன் தம்பியின் கருத்துதான் என் கருத்தும்.

    பதிலளிநீக்கு
  6. விபத்தில் பாதித்த நபருக்கு உதவ யோசிப்பதுதான் காரணமே தவிர... நேரத்தை ஒதுக்குவது என்பது சாதாரண விஷயம்தான்...

    பதிலளிநீக்கு
  7. பெரிய அளவில் நடக்கும் விபத்துகளில் உதவி புரிய நடமாடும் ஆம்புலன்சுகள் உள்ளன. என்ன பணம் கொஞ்சம் அதிகம் செலவாகும். திருச்சியில் உள்ள பெரிய மருத்துவ மனைகளுக்கு என்று சில ஆம்புலன்சுகள் உள்ளன. அவற்றின் வேலையே விபத்துகள் நடக்கும்போது சென்று அடிபட்டவர்களை - மாடு பிடிப்பது போன்று பிடித்து வந்து -மருத்துவமனைகளுக்கு கொண்டு வந்து சேர்ப்பதுதான். அதன் பிறகு பில்லுக்கு பணம் கட்டும் போதுதான் தெரியும், இதன் உண்மையான சொரூபம்.
    ஆனால் இந்த உதவி செய்யக்கூட இன்று ஆட்கள் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
    முதலில் இத்தகைய ஆள் பிடிக்கும் ஆம்புலன்சுகள் / மருத்துவ மனைகள் மேல் கோபம்தான் வந்தது - இப்படி சந்தர்ப்ப வாதிகளாக இருக்கிறார்களே என்று. ஆனால் நிதானமாக யோசித்து பார்த்தால், இந்த உதவியும் இல்லாவிட்டால் பல உயிர்கள் பறி போயிருக்குமே என்று நினைக்கும்போது காசு பிடுங்கினாலும் சரியான சமயத்தில் உதவி புரிவதால் அவர்கள் செயலை பாராட்டத்தான் தோன்றுகிறது.

    சேலம் குரு

    பதிலளிநீக்கு
  8. மனம் இருந்தால் மார்க்கமுண்டு! தமிழர்களின் மனம் இப்போது சிறுத்துவிட்டது என்றே தோன்றுகிறது!

    பதிலளிநீக்கு
  9. நம்முடைய வேலைகள் முதல் போலீஸ் வழக்குத் தொந்தரவு வரை எல்லாமே காரணம்தான். DD சொல்லியிருப்பது போல எண்ணம் வந்தால் ஒருவேளை மனம் மாறலாம்!

    பதிலளிநீக்கு
  10. போலீசுக்கு பயந்துதான் பார்த்தும் பார்க்காததுபோலப் போகிறார்கள். உதவி செய்துவிட்டு போலீஸ் நிலையத்திற்கு நடையாய் நடக்க வேண்டுமென்றால்?

    பதிலளிநீக்கு
  11. பொதுவான கருத்து - ஆபத்தில் உதவுகின்றவர்களுக்கு காவல் துறை மிகவும் உபத்திரவம் கொடுக்கிறது என்பதுதான். இது மிகவும் வருந்தத்தக்க நிலை. காவல் துறைக்கு எந்த ஒரு புகார் கொண்டு போனாலும், முதலில் அவர்களைத்தான் குற்றவாளிகளாகக் கருதுகிறார்கள். இதற்கு பயந்தே அநேகர் காவல்துறையிடம் எந்த தொடர்பும் வைத்துக்கொள்வதில்லை.

    அதற்கடுத்து நீதி மன்றங்கள். - நீங்கள் ஒரு விபத்தில் உதவி செய்யப் போய் உங்கள் பெயர் காவல் துறையிடம் மாட்டிவிட்டால் கட்டாயம் உங்களை சாட்சியாகப் போட்டு விடுவார்கள். கோர்ட்டுக்குப் போய் வாழ்க்கையே வெறுத்துவிடும். வாய்தா போட்டே உங்களை குற்றுயிராக்கி விடுவார்கள். எதிர்க் கட்சி வக்கீல் நீங்கள்தான் அந்த விபத்திற்குப் பொறுப்பு என்று வாதாடுவார். ஒரு முறை இந்த மாதிரி வழக்குகளில் சிக்குபவர் ஆயுளுக்கும் அந்தப் பக்கமே போகாத அளவிற்கு நொந்து போய்விடுவார்.

    பதிலளிநீக்கு
  12. அய்யா ஆபத்தில் இருப்பவருக்கு உதவப் போய், நாம் சிக்கலில் மாற்றிக் கொள்ளக் கூடாதே என்ற எண்ணம்தான் காரணமாக இருக்க வேண்டும். சாட்சியாக அழைத்து அலைக் கழிப்பார்களோ என்ன எண்ணம்தான் காரணம்.
    நடைமுறைகள் மாறவேண்டும் அய்யா

    பதிலளிநீக்கு
  13. நடனசபாபதி ஐயா சொன்னதே உண்மையான காரணம். நம்மை அலைக்கழிச்சுருவாங்க காவல்துறையினர்:(

    இங்கே நியூஸியில் காவல்துறை உண்மையாகவே நம்ம நண்பன் என்பதால் விபத்து ஏற்பட்டால் அங்கிருக்கும் மக்களோ இல்லை அந்த இடத்தைக் கடந்துபோகும் பயணிகளோ உடனே ஓடிப் போய் உதவுவோம்.

    பதிலளிநீக்கு
  14. "அப்படி உதவச் செல்லும்போது ஏதாவது வம்பு, வழக்கு வந்து விடுமோ என்ற பயம்தான் காரணம்."- வலிய சென்று உதவுவோற்கு, அவர்கள் சாட்சி கோர்ட் ஆகிய பொறுப்புகளை ஏற்க இயலவில்லை/விரும்பவில்லை என்றால், அவ்விருப்பத்திற்கு மாறாக சட்டம் அவர்களை வற்புறுத்துகிறதா என்பதை வக்கீல் நண்பர்கள்/சட்டம் தெரிந்தவர்கள் தெளிவாக்கினால் நன்றாக இருக்கும்.
    நீங்கள் சொல்லுவது போல் "யதார்த்தம்" தான் அத்தகு மனப்போக்கிற்கு காரணம்.

    பதிலளிநீக்கு
  15. இங்கு அமெரிக்காவில் நான் கேட்டபோது சொல்கிறார்கள். அது மாதிரி ஒரு நபர் கீழே விழுந்து இருந்தால் உடனே 911 என்ற எண்ணுக்கு போன் செய்வார்கள். அவர்கள் செய்தி கிடைத்த 3 நிமிடங்களில் அங்கு இருப்பர்கள்.


    நமது நாட்டில் ஏட்டில் இருக்கும் அனைத்துமே இங்கு செயல் படுத்தப்படுகிறது.


    மனித நேயம் வீட்டுக்குள் இருப்பதாகத் தெரியவில்லை.

    வெளியிலே தெரிகிறது.


    சுப்பு தாத்தா.

    பதிலளிநீக்கு