வியாழன், 5 மார்ச், 2015

உ.வடை சாப்பிடுவது எப்படி?


                                            Image result for உளுந்து வடை

வடையைப் பற்றி எழுதச்சொல்லி ஒரு அன்பர் கேட்டிருந்தார். வடை என்றால் முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது, வடை என்றால் அது உளுந்து வடைதான். மற்றதெல்லாம் வடை அல்ல. உளுந்து வடை செய்ய உளுந்து வேண்டும். இதுதான் தெரியுமே என்று சொல்லக் கூடாது. ரேஷன் கடை உளுந்தைப் போட்டு வடை செய்து விட்டு வடை நல்லா இல்லைன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.

நல்ல புது உளுந்து வாங்கி தண்ணீரில் ஒரு அரை மணி நேரம் ஊற வைக்கவேண்டும். ஒரு டம்ளர் உளுந்துக்கு கால் டம்ளர் அரிசி வீதம் சேர்த்து ஊறவைக்கவேண்டும். அரை மணி நேரம் ஊறினால் போதும். கல்லுரலில் போட்டு ஆட்டி நைசாக ஆவதற்கு கொஞ்சம் முன்பாகவே எடுத்து விடவேண்டும்.

மாவு ஆட்டின பிறகு உடனே வடை சுட்டு விடவேண்டும். நேரம் ஆக ஆக வடை எண்ணையை அதிகம் குடிக்க ஆரம்பித்து விடும். அப்புறம் வடையைப் பிழிந்தால் எண்ணை சொட்டும். ஆனால் ஒன்று ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். எண்ணை கொஞ்சமாவது இருந்தால்தான் வடை ருசியாக இருக்கும். சுத்தமான மரச்செக்கில் ஆட்டின கடலை எண்ணைதான் வடை சுடத் தகுந்தது. எந்த வித சுத்திகரிப்பு செய்த எண்ணைகளையும் உபயோகப்படுத்தவேண்டாம்.

வடைக்கு ஆட்டும் முன்பே இரண்டு வேலைகள் செய்து விடுங்கள். அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார் தயார் பண்ணி வைத்துக் கொள்ளுங்கள்.அது ஒரு வாயகன்ற பாத்திரத்தில் இருக்கட்டும். இன்னொரு வாயமன்ற பாத்திரத்தில் நல்ல புளிக்காத கெட்டித்தயிர் எடுத்து அளவாகத் தண்ணீர் விட்டுக் கலக்கி, கடுகு உ,பருப்பு, ப.மிளகாய், கருவேப்பிலை தாளித்துக் கொட்டி, அளவாக உப்புப் போட்டுக் கலக்கி தயாராக வைத்துக் கொள்ளவும்.

கேஸ் ஸ்டவ்வில்தான் வடை சுடுவீர்கள் என்று நம்புகிறேன். அதில் இருக்கும் இன்னொரு அடுப்பில் ஒரு வாயகன்ற பாத்திரத்தில் முக்கால் பங்கு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும். வடை சுட்டு எறக்கும்போது இந்த கொதி நீர் தயாராக இருக்கவேண்டும். அதை கீழே இறக்கி வைத்துக்கொள்ளுங்கள். வடை, முதல் அடைசல் எடுத்தவுடன் அவைகளை அப்படியே இந்த கொதி நீரில் போடவும், ஒரு நிமிடம் கழித்து அந்த வடைகளை எடுத்து தண்ணீர் நன்றாக வடிந்தவுடன் சாம்பார் வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும்.

அடுத்த அடைசல் வடை எடுத்தவுடன் இதே மாதிரி கொதி நீரில் போட்டு எடுத்து, தாளித்து வைத்திருக்கும் தயிர் பாத்திரத்திற்குள் போடவும். இப்படியே ஒரு மூன்று அடைசல் வடைகளை ஒவ்வொரு பாத்திரத்திற்குள்ளும் போட்டு விடுங்கள். அடுப்பு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு, சாம்பார் வடைகள் இருக்கும் பாத்திரத்தை மட்டும் இன்னொரு பெரிய பாத்திரத்தில் வெந்நீர் வைத்து அதனுள் வைத்துக் கொஞ்ச நேரம் கழித்து எடுத்து விடுங்கள். அப்போதுதான் சாம்பார் சூடாக இருக்கும்.

தயிர் வடை இருக்கும் பாத்திரத்தை அவ்வாறு சூடுபடுத்தி விடாதீர்கள். அப்புறம் தயிர் பிருத்துப் போகும்.

இப்போது எல்லாம் ரெடி. ஒரு தட்டு எடுத்துக்கொண்டு அதில் இரண்டு சாம்பார் வடை வைத்துக் கொள்ளுங்கள். அது மூழ்கும் வரை சாம்பார் ஊற்றிக்கொள்ளவும். ஒரு ஸ்பூனால் வடையைப் பிய்த்து சாம்பாருடன் சேர்த்துச் சாப்பிடவும்.
                                              Image result for சாம்பார் வடை

ஒரு முறை சாம்பார் வடை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து இரண்டு தயிர் வடை இதே மாதிரி சாப்பிடவும். இப்படியே மாற்றி மாற்றி சாம்பார் வடை-தயிர் வடை என்று சாப்பிடவும். சொஞ்ச நேரத்தில் வடைகள் தீர்ந்து விடும். அப்போது சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.
                                                   Image result for தயிர் வடை

ஒரு அரை மணி நேரம் கழித்து நான்கு "யூனிஎன்ஜைம்" மாத்திரைகள் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கவும்.
                                            Image result for unienzyme tablet
இதுதாங்க வடை சாப்பிடும் முறை. இதில் ஏதாவது சந்தேகம் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.

"கந்தா, காரவடை, காசுக்கு ரெண்டு வடை"  என்று யாராவது பின்னூட்டம் போட்டால் எனக்குக் கோபம் வந்து சாபம் கொடுத்து விடுவேன். ஜாக்கிரதை.

45 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. நீங்கள் சுட்ட சாம்பார் வடை, தயிர் வடை காசுக்கு நாலு வடை , பார்சலுக்கு பத்து வடை வேண்டும் அய்யா!


  "கந்தா, காரவடை, காசுக்கு ரெண்டு வடை" என்று யாராவது பின்னூட்டம் போட்டால் எனக்குக் கோபம் வந்து சாபம் கொடுத்து விடுவேன். ஜாக்கிரதை.

  ஒருமுறை தர்மர், கிருஷ்ணா, நான் செய்த பாவங்கள் முழுவதையும் உனக்கே தானம் செய்கிறேன்! என்று சொன்னாராம்.
  உடனே பக்கத்தில் இருந்த பீமன் " அண்ணா அப்படி
  செய்யாதே! கிருஷ்ணனிடம் எது கொடுத்தாலும் அது பல மடங்காகத் திரும்பி வரும் எச்சரிக்கை என்று சொன்னராம்.

  இப்போது இந்த" குழலின்னிசை" கண்ண்னுக்கு,
  அய்யா சாபம் கொடுப்பதாய் இருந்தால்
  கொடுங்கள் அய்யா! ஏற்கின்றேன் .
  ஏற்றதை இரட்டிப்பாக்கித் தருகிறேன்.
  நன்றி

  நட்புடன்,
  புதுவை வேலு
  www.kuzhalinnisai.blogspot.com

  பதிலளிநீக்கு
 3. எல்லாம் சரி, வடையை எடுத்து எதற்கு கொதி நீரில் போடவேண்டும்? அந்த ஸ்டெப்தான் புரியவில்லை! :))))))

  அப்புறம் இன்னொரு விஷயம். வடை சாப்பிடப் போகிறோம் என்று தெரியும். ஏன், சாப்பிட்டபின் 4 யூனிஎன்சைம்? சாப்பிடுவதர்குமுன் ஒன்று போட்டால் போதாதோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடைகளை வெந்நீரில் போட்டு எடுத்தால்தான் அவை சாம்பாரிலோ அல்லது தயிரிலோ நன்கு ஊறி மெதுவாக இருக்கும். நேரடியாகப் போட்டால் சரியாக ஊறாமல் கெட்டிப்பட்டுப்போகும். அனுபவத்தில் கற்ற பாடம்.

   கடப்பாரையை முழுங்கிட்டு சுக்குக் கஷாயம் சாப்பிட்டால் ஜீரணமாகுமா? இத்தனை வடைகளைச் சாப்பிட்டு விட்டு ஒரு யூனிஎன்ஜைம் சாப்பிட்டால் எப்படிப் போதும்?

   நீக்கு
  2. ஐயா நாங்கள் நேரடியாகத் தயிரிலோ, சாம்பாரிலோதான் போடுவதுண்டு, மிக மிக நன்றாக ஊறி, ம்ருதுவாக, (சில சமயம் உடையும் அளவிற்குஹஹஹ்) வருகின்றதே.

   நீக்கு
 4. கொதி நீரில் போடும் "டெக்னிக்" புதிது...

  யூனிஎன்ஜைம் வாங்கி வைக்கணும்... ஹா... ஹா...

  பதிலளிநீக்கு
 5. மாம்பழம் ரஷ்யாவிற்கு நம் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்த புதிதில், மாம்பழத்தை சாப்பிடும்போது மாம்பழ சாறு கையில் வழிந்து முழங்கை வரை வராமல் சாப்பிடுவது எப்படி என்பதைப்பற்றி, அந்த நாட்டில் ஒரு கையேடே வெளியிட்டதாக படித்திருக்கிறேன். அது போன்று இக்கால இளைஞர்களுக்கு (ஏன் முன்னாள் இளைஞர்களுக்கும்) உளுந்துவடையை சாப்பிடுவது எப்படி என்று விளக்கியமைக்கு நன்றி! பொங்கல் வடை போன்றவைகள் பற்றி எழுதிவிட்டீர்கள். இனி விதம் விதமான இட்லி பற்றிய பதிவை எதிர்பார்க்கலாமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வரிசையாக சமையல் பற்றியே பதிவுகள் வந்து கொண்டிருப்பதால் எல்லோரையும் முந்திக்கொண்டு நான் உங்களுக்கு "கலி கால நளா" என்ற பட்டத்தை சூட்டுகிறேன் .

   எங்கள் பதிவுலக கலி கால நளா வாழ்க
   எங்கள் பதிவுலக கலி கால நளா வாழ்க

   அய்யா அவர்களே கோஷம் கேட்கிறதா

   சேலம் குரு

   நீக்கு
 6. ஏனுங்க வடைமாவில் உப்பு வெங்காயம் பச்சைமிளகாய் கரூவேப்பிலை கொத்தமல்லி சேர்க்க கூடாதுங்களா?

  --
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வடை மாவில் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் குறிப்பு விட்டுப் போய்விட்டது. காரணம் உளுந்து வடை சுட்டு வெகு காலம் ஆகிவிட்டதினால் மறந்து விட்டேன்.
   ஆட்டின மாவில் கொஞ்சம் குறுமிளகு சேர்த்துக்கொள்ளவும்.
   வெங்காயம், பச்சை மிளகாய் சேர்ப்பது வழக்கம் இல்லை. விரும்பினால் சேர்த்துக் கொள்ளலாம். தவறு இல்லை.

   நீக்கு
  2. வடை போடுமுன்புதான் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். மாவாட்டும்போது உப்பு சேர்க்கக்கூடாது. அப்படி சேர்த்தால் மாவி நீர்த்துப்போய்விடும். பிறகு எண்ணெய் அதிகம் குடிக்க ஆரம்பித்து விடும்.

   சேலம் காயத்ரி

   நீக்கு
  3. //காரணம் உளுந்து வடை சுட்டு வெகு காலம் ஆகிவிட்டதினால் மறந்து விட்டேன்.//

   உண்மையாக சொல்லுங்கள். வடை சுட்டது நீங்களா அல்லது உங்கள் ஆம்படையாளா?
   யாராக இருந்தால் என்ன வடை சுவையாக இருந்தால் சரி என்கிறீர்களா? அதவும் சரிதான்.

   சேலம் குரு

   நீக்கு
  4. பூஜைக்கு செய்வதாக இருந்தால்தான் பத்தியமாக செய்ய வேண்டும். எனவே வெங்காயம் சேர்க்க மாட்டார்கள். இல்லையென்றால் பொடியாக அறிந்த வெங்காயத்தை மாவோடு கலந்து வடை சுட்டுப்பாருங்கள். அதன் சுவை எங்கேயோ தூக்கிக்கொண்டு போய்விடும்.
   மற்றபடி மிலகாயைப்பொருத்தவரை அரைக்கும் போதே வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இல்லை பொடிப்பொடியாக அறிந்து அரைத்த மாவோடும் சேர்த்துக்கொள்ளலாம்.

   துளசி மைந்தன்

   நீக்கு
 7. - ஒரு முறை சாம்பார் வடை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து இரண்டு தயிர் வடை இதே மாதிரி சாப்பிடவும்.

  நடுவிலே நரி வந்து பாட்டுப் பாட சொன்னால் வாயை திறக்காதீங்க.
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம். FM போட்டு விடுங்க. நரி ஏமாந்து போய்விடும்.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
  2. இப்போதெல்லாம் நரி காதில் ஹெட்போனுடன்தான் சுற்றி கொண்டிருக்கிறது. எனவே பயப்பட வேண்டாம்.

   திருச்சி தாரு

   நீக்கு
 8. வடையைப் பற்றிய ஆரம்பம், அறிமுகம் அனைத்தையும் தாண்டி கடைசியில் தந்துள்ள ஒரு அரை மணி நேரம் கழித்து நான்கு "யூனிஎன்ஜைம்" மாத்திரைகள் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கவும் என்ற வரிகள் அனைவரும் மனதில்கொள்ளவேண்டியது. நன்றி.

  பதிலளிநீக்கு
 9. // என்றால் அது உளுந்து வடைதான்//

  எங்களுடைய முழு ஆமோதிப்பு இதற்கு உண்டு.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 10. // ஒரு டம்ளர் உளுந்துக்கு கால் டம்ளர் அரிசி வீதம் சேர்த்து ஊறவைக்கவேண்டும்//
  அரிசி எதற்கு என்று கூறினால் நன்றாக இருக்கும். இது வரை அரிசி சேர்க்காமல்தான் உளுந்து வடை செய்திருக்கிறேன். சில சமயம் நன்றாக வரும் சில சமயங்களில் சுட்ட வடையை எடுத்து வைத்து விட்டு ஓட்டலில் சென்று சாப்பிட்டு விடுவோம். இந்த அரிசி உளுந்து வடை மாவில் சேர்க்கும் ரகசியம் என்னெவென்று கூறினால் நன்றாக இருக்கும்

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
 11. //கல்லுரலில் ஆட்டி நைசாக ஆவதற்கு கொஞ்சம் முன்பாகவே எடுத்து விடவேண்டும்.//

  இந்த காலத்தில் கல்லுரல் எந்த வீடுகளில் அய்யா இருக்கிறது. தயவு செய்து மிக்சியில் அறைத்து விட வேண்டாம். அந்த சூட்டிற்கு வடை சுட்டவுடன் உப்பி வராது. இட்லி மாவு அரைக்கும் கிரைண்டர் உபயோகப்படுத்தலாம். தொந்திரவு இல்லை,

  திருச்சி தாரு

  பதிலளிநீக்கு
 12. //கல்லுரலில் போட்டு ஆட்டி நைசாக ஆவதற்கு கொஞ்சம் முன்பாகவே எடுத்து விடவேண்டும்.//

  முற்றிலும் சரி. கிரைண்டர், மிக்சி என்று போகாமல் கல்லுரலில் ஆட்டினால் ஒரு exercise ஆயிற்று. இடுப்பு சதை குறைய வேண்டும் என்று ஜிம் செல்ல வேண்டாம். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். செலவும் மிச்சம் சுவையான உளுந்து வடையும் ஆச்சு. ஆனால் சுவையாக இருக்கிறதென்று நாலு வடை சேர்த்து சாப்பிட்டு விட்டு மாவு ஆட்டியதால் குறைந்த இடுப்பு சதையை மீண்டும் ஏற்றி கொள்ள வேண்டாம்.

  காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
 13. //ரேஷன் கடை உளுந்தைப் போட்டு வடை செய்து விட்டு வடை நல்லா இல்லைன்னு சொன்னா அதுக்கு நான் பொறுப்பு இல்லை.//

  கடைகளில் போடுவதெல்லாம் ரேஷன் கடை உளுந்துதானே.
  சுவை அள்ளிக்கொண்டு போகிறதே. வேறு என்ன சேர்த்திருப்பான் என்று தெரிந்தால் நன்றாக இருக்கும். நாமும் உளுந்துக்கு அதிகமாக செலவு செய்ய வேண்டியதில்லை.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 14. //எண்ணை கொஞ்சமாவது இருந்தால்தான் வடை ருசியாக இருக்கும். //

  நான் கடையில் சென்று வடை சாப்பிட வேண்டும் என்றால் tissue பேப்பருடன் சென்று விடுவேன். வடை வாங்கியவுடன் இந்த டிஷ்யு பேபரில் வைத்து லேசாக ஒரு அமுக்கு அமுக்கினால் முக்காவாசி எண்ணெய் அதில் ஒட்டிக்கொண்டுவிடும். ஆனால் ஜாக்கிரதை உங்கள் பூஜை பலத்தை அதில் காட்டினால் வடை அப்புறம் தட்டையாகி விடும். பிறகு என்னை திட்டக்கூடாது.

  குருப்ரியா

  பதிலளிநீக்கு
 15. //சுத்தமான மரச்செக்கில் ஆட்டின கடலை எண்ணைதான் வடை சுடத் தகுந்தது. எந்த வித சுத்திகரிப்பு செய்த எண்ணைகளையும் உபயோகப்படுத்தவேண்டாம்.//

  நீங்கள் சுலபமாக சொல்லிவிட்டீர்கள். கடந்த இரண்டு மாத காலமாக நானும் மாற செக்கில் ஆட்டிய எண்ணைக்காக அலைந்து கொண்டிருக்கிறேன். கிடைத்த பாடில்லை. ஏன் இப்படி அலைகிறீர்கள். பேசாமல் சுத்திகரித்த எண்ணையில் சாப்பிட்டு விட்டு போவீர்களா அதை விட்டுவிட்டு வெடியாக அலைந்து கொண்டிருக்கிறீர்களே என்று சக தர்மிணியிடம் திட்டு வாங்கியதுதான் மிச்சம்.

  சேலம் குரு

  பதிலளிநீக்கு
 16. //வடை, முதல் அடைசல் எடுத்தவுடன் அவைகளை அப்படியே இந்த கொதி நீரில் போடவும், ஒரு நிமிடம் கழித்து அந்த வடைகளை எடுத்து தண்ணீர் நன்றாக வடிந்தவுடன் சாம்பார் வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு மூடி வைக்கவும் //

  இதுதான் அனுபவத்தில் வருவது. இத்தகைய முறைகளில்தான் வடையின் உன்னத சுவையே அடங்கியிருக்கிறது. வடை முழுவதும் சாம்பார் உள்ளே இறங்கும் சூட்சுமத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 17. //தயிர் வடை இருக்கும் பாத்திரத்தை அவ்வாறு சூடுபடுத்தி விடாதீர்கள்.//

  "குதிரைக்கு குர்ரம் என்றால் ஆனைக்கு அர்ரம்" என்று நாங்கள் செய்து விசுவோம் என்று நினைத்தீர்களா?
  சாம்பார் வடை பாத்திரத்தை மட்டும்தான் சுடுதண்ணீர் பாத்திரத்தில் வைப்போம். தயிர் வடை பாத்திரத்தை அப்படியே dining tableக்கு எடுத்துக்கொண்டு போய்விடுவோம்.

  திருச்சி அஞ்சு

  பதிலளிநீக்கு
 18. //தயிர் வடை இருக்கும் பாத்திரத்தை அவ்வாறு சூடுபடுத்தி விடாதீர்கள்.//

  சாம்பார் வடை பாத்திரத்தை சுடுதண்ணீர் பாத்திரத்தில் வைத்தால் தயிர் வடை பாத்திரத்தை குளிர்ந்த நீர் பாத்திரத்தில் வைக்க வேண்டுமா இல்லையா என்று சொல்லவே இல்லையே

  திருச்சி தாரு

  பதிலளிநீக்கு
 19. //கொஞ்ச நேரத்தில் வடைகள் தீர்ந்து விடும். அப்போது சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.//

  கொஞ்ச நேரத்தில் வடை தீர்ந்து விடும். பிறகு மீண்டும் முதலில் இருந்து வடை சுட ஆரம்பிக்கலாம் என்று நினைத்திருந்தேன். நீங்கள் என்னடாவென்றால் சாப்பிடுவதை நிறுத்தி விடலாம் என்கிறீர்களே. இவ்வளவு சுவையாக வடை செய்து சாப்பிட்ட பிறகு நிறுத்த முடியுமா?

  காயத்ரி மணாளன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிச்சயமா முடியாது. திரும்பவும் மொதல்லே இருந்து ஆரம்பிக்கவும். முக்கியமான குறிப்பு. மொதல்ல வடை சுட்ட எண்ணையை திரும்பவும் உபயோகிக்காதீங்க. வேற புதுசா எண்ணை ஊற்றி வடை சுடவும்.

   நீக்கு
  2. மிக்க சரியாக சொன்னீர்கள் அய்யா.
   Hot Chips என்று ஒரு chain of stores தமிழ் நாட்டில் இருக்கிறது. அங்கு சற்றே விலை அதிகம். ஒரு தடவை அதை பற்றி "கொஞ்சம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இப்படி கொள்ளை அடிக்கிறார்களே" என்று கடை அருகிலயே நின்று சொல்லிவிட்டேன். மறு கணம் என் தோளில் ஒரு கை விழுந்தது. அந்த காலத்தில் ஓட்டலில் சாப்பிட்டு விட்டு பில்லுக்கு பணம் இல்லையென்றால் கிடா மீசை வைத்த நான்கு புஜபல பலவான்கள் வந்து இழுத்துக்கொண்டு போவார்களே - அதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வந்தது. வெளியே தெரியாத மாதிரி நான் என்ன திமிறியும் விட வில்லை. அப்போதுதான் தெரிந்தது. சிப்ஸ் சாப்பிட மட்டும் வாயை திறந்திருந்தால் பரவாயில்லை. இப்படி பேச, அதுவும் கடை அருகிலயே பேச, வாயை திறந்திருக்கக்கூடாது என்று. காலம் கடந்த ஞானோதயம். ஒன்றும் செய்யமுடியாமல் கூடவே ஓட்டலுக்குள் நுழைந்தேன். அங்கே ஒரு அறையில் இருந்த ஒருவரின் முன் நிறுத்தினார்கள். அவர் அமைதியாக "என்ன சார் விலை அதிகம் என்று சொன்னீர்களாமே?" என்றார். நான் அசடு வழிந்து கொண்டு "அப்படியெல்லாம் இல்லை.." என்று இழுத்தேன். "நீங்கள் கேட்டது சரிதான் சார். நான்தான் இந்த கடையின் ஓனர்" என்றார்.
   எனக்கு அங்கேயே பேதி பிடிங்கிகொண்டது. "நாம் தீர்ந்தோம்" என்று நினைத்துக்கொண்டு குல தெய்வத்துக்கு பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டேன். அவர் என் கையை பிடித்து இழுத்துக்கொண்டு சமையல் அறைக்கு சென்றார். அங்கே வெள்ளை உடை உடுத்திக்கொண்டு பலர் பலதரப்பட்ட snacks செய்து கொண்டிருந்தார்கள். எனக்கோ அவர்கள் யம கிங்கரர்கள் போல தெரிந்தார்கள். இன்று நமக்கு அந்நியன் படம் மாதிரி கரமுக்தி என்ற பெயரில் கையை கொதிக்கும் எண்ணெய்யில் முக்கி எடுக்கப்போகிறார் என்று நினைத்துக்கொண்டு நடுங்கிக்கொண்டேதான் சென்றேன். "இங்கே பாருங்கள் சார், நாங்கள் ஒரு தடவை உபயோகித்த எண்ணெயை இன்னொரு தரம் உபயோகிக்க மாட்டோம். அதிகமாகவும் heat செய்ய மாட்டோம். சமையல்காரர்களுக்கும் சீருடைதான். மூக்கையும் மூடிகொண்டிருக்கிரார்கள், கைக்கும் கையுறை அணிந்திருக்கிறார்கள் பாருங்கள். உங்கள் உடல் நலத்திற்காகத்தான் இவ்வளவும். பிறகு நாங்கள் குறைந்த லாபம்தான் வைத்திருக்கிறோம். அதிகமாக விற்பதால் எங்களுக்கு வேண்டிய பணம் வந்து விடுகிறது." என்றார். பிறகு வெளியே அழைத்து வந்து அவர் அறையில் அமர வைத்து "ஏன் சார் உங்களுக்காக உங்கள் உடல் நலனுக்காக வியாபாரிகளாகிய நாங்களே இவ்வளவு செய்யும் போது நீங்கள் உங்களுக்காக கொஞ்சம் அதிகம் செலவு செய்யக்கூடாதா? அதுவும் நல்ல தரத்துடன் செய்யப்படும் பொருட்களுக்கு?" என்று கேட்ட போது என்னால் அங்கே அமர்ந்திருக்கவே முடியவில்லை. அதோடு விட்டாரா? "எங்கள் பொருட்களை பற்றி உங்களுக்கு விவரிக்க ஒரு சந்தர்ப்பம் கொடுத்ததிற்கு நன்றி" என்று சொன்னவர், நான் "வேண்டாம் வேண்டாம்" என்று சொல்லச்சொல்ல 2-3 கிலோ ஸ்னாக்ஸ் கொடுத்து அனுப்பினார். அன்று முதல் இன்று வரை நான் ஸ்னாக்ஸ் வாங்குவதென்றால் ஹாட் சிப்ஸ்தான். அப்போதுதான் தெரிந்து கொண்டேன். ஒரு முறை உபயோகித்த எண்ணெய்யை இன்னொரு தடவை உபயோகிக்க கூடாது என்று தெரிந்து கொண்டேன். இன்று நீங்களும் சொல்லியிருக்கிறீர்கள்.
   நன்றி அய்யா

   சேலம் குரு

   நீக்கு
  3. அப்பாடா, என் சிறு குறிப்பிற்கு ஒரு பெரிய கதையே சொல்லி விட்டீர்கள். நன்றி.

   நீக்கு
 20. //ஒரு அரை மணி நேரம் கழித்து நான்கு "யூனிஎன்ஜைம்" மாத்திரைகள் இரண்டு டம்ளர் தண்ணீருடன் சாப்பிட்டு விட்டு ஓய்வு எடுக்கவும்//.

  அப்படி "யூனிஎன்ஜைம்" மாத்திரைகள் கிடைக்கவில்லையென்றாலும் நீங்கள் ஓய்வெடுக்கலாம். என்ன ஓய்வெடுக்கும் இடம் டாக்டரின் கிளினிக்கில் இருக்கும். கூடவே வயிறு உப்புசமாகி அம்மா அப்பா என்ற முனகலுடன் நீங்கள் இருப்பீர்கள். எனவே அய்யா அவர்கள் சொல்வது போல முதலில் உளுந்து வாங்குகிறீர்களோ இல்லையோ
  யூனிஎன்ஜைம் மாத்திரைகள் வங்கி விடுங்கள். அப்புறம் வடை சுச ஆரம்பிக்கலாம்.

  துளசி மைந்தன்

  பதிலளிநீக்கு
 21. ஒரு முறை டெல்லியில் ஒரு தென் இந்திய உணவகத்தில் சாம்பார் வடை கேட்டோம். அப்பொழுது அந்த ஓட்டல் உரிமையாளர் சத்தமாக ( வந்தவர்களுக்குத் தமிழ் தெரியாதென்று நினைத்து ) பையா முன் தினம் செய்து மிச்சமாகிப்போன பழைய வடைகளை சாம்பாரில் ஊறவைத்துக் கொடு என்றாரே பார்க்கலாம். அதன் பின் ஓட்டல்களில் சாம்பார் வடை சாப்பிடுவதே இல்லை எனலாம். ஓட்டல்களில் பெங்களூருவில் சுவையான கரகவென்றிருக்கும் மெது வடை நன்றாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 22. வடையைப்பற்றி இவ்வளவா ? அடையப்பா ?
  தமிழ் மணம் 5

  பதிலளிநீக்கு
 23. வீட்டுல வடை சுடுறதை பார்த்திருக்கிறேன் கடையில வடை சுடுறதை பார்த்திருக்கிறேன் ஆனா பதிவுல அழகாக வடை சுடுறதை அதுவும் நகைச்"சுவையோடு" சுடுவதை இப்பத்தான் பார்த்து இருக்கிறேன். அருமை

  பதிலளிநீக்கு
 24. பாவம் தமிழ் நாட்டுக்காரங்க வடை சுட இவ்வளவு கஷ்டப்படுறாங்க என்று பார்க்கும் போது கண்ணுல தண்ணிரே வருது..

  இங்க வடை சுடுவது மிக எளிது... இங்க நாங்க ப்ரிஜ்ஜ தொறந்து ப்ரிஷரில் உள்ள வடையை எடுத்து மைக்ரோவேவில் ஒரு நிமிடம் சுட வைத்து அதை வெந்நிரில் போட்டு சாம்பார் வடையோ அல்லது தயிர்வடையோ அல்லது சட்னி வைத்தோ சாப்பிடுவோம்

  பதிலளிநீக்கு
 25. சாம்பார் வடை & தயிர் வடை....பிரமாதம் ஐயா.
  தம 6

  பதிலளிநீக்கு
 26. சுட்ட வடை நன்றாகயிருந்தது..

  'பெயரில்லா'தவர் நிறைய கருத்துகள் தந்திருக்கிறாரே!

  பதிலளிநீக்கு
 27. ஐயா

  அடுத்து கோவை ஸ்பெஷல்
  1. செப்புப்பானை சிறுவாணி தண்ணீர்
  2. அங்கண்ணன் கடை பிரியாணி
  3. அன்னபூர்ணா பாமிலி ரோஸ்ட்
  4. கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மைசூர் பா
  5. முனிசிபல் ஸ்கூல் வாசல் இலந்த வடை, கமர்கட்டு கொடுக்காப்புளி,

  இவை எல்லாம் பற்றி ஒரு தொடர் பதிவு எழுதுங்களேன்.

  --
  Jayakumar

  பி.கு.

  நான் கோயம்புத்தூர் காரன் அல்ல.

  பதிலளிநீக்கு
 28. சாம்பார் வடை தயிர் வடை சாம்பார் வடை என மாற்றி மாற்றி சாப்பிட ஐடியா!

  வாவ்.... சாப்பிடடுடுவோம்!

  பதிலளிநீக்கு
 29. அருமை ஐயா
  யூனிஎன்ஜைம் வாங்கி வைக்கணும்...
  இனி வடை என்றால் யூனிஎன்ஜைம்தான் நினைவில் வரும்
  நன்றி ஐயா
  தம +1

  பதிலளிநீக்கு
 30. ஒரு முறை சாம்பார் வடை சாப்பிட்டு முடித்தவுடன் அடுத்து இரண்டு தயிர் வடை இதே மாதிரி சாப்பிடவும். இப்படியே மாற்றி மாற்றி சாம்பார் வடை-தயிர் வடை என்று சாப்பிடவும். சொஞ்ச நேரத்தில் வடைகள் தீர்ந்து விடும். அப்போது சாப்பிடுவதை நிறுத்தி விடலாம்.// அஹஹஹஹஹ்ஹ் ஐயா! சுவையான வடை சுடுவதைக் கூட இப்படி நகைச்"சுவை"யோடு சொல்கின்றீர்களே! ரொமப்வே சுவைத்தோம் ஐயா! இனி வடை சுடும்போது, இட்லி செய்யும் போது உங்கள் நினைவுதான் வரும் ஐயா.....

  பதிலளிநீக்கு